வெற்றியல்ல!

SG
3 min readAug 14, 2019

அண்ணாதுரை, திராவிட நாடு, 16-8-1953

காஷ்மீர் பிரதமர் ஷேக் அப்துல்லா தனிநாடு போராட்டங்களை மறைமுகமாக ஆதரிப்பதாகவும், அரசுக்கு எதிராக சதி செய்வதாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் இருப்பதாக, 1953 ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் ஜனாதிபதியால் கைது செய்யப்படுகிறார். உடனடியாக அதைக் கண்டித்து அறிஞர் அண்ணா ஆகஸ்ட் 16ம் தேதி திராவிட நாடு இதழில் எழுதுகிறார்.

“அப்துல்லா! என்னுடைய அருமைச் சகோதரர்“ – நூற்றுக்கணக்கான பொதுக் கூட்டங்களில், இவ்வண்ணம், பண்டித நேரு முழக்கமிட்டதை அறிவோம், நாம் வெட்டிய மீசையுடன், காஷ்மீர் குல்லாய் அணி செய்யப் புன்சிரிப்போடு, அவர் இவரையும் இவர் அவரையும் கட்டித் தழுவிய படங்களை, அடிக்கடி கண்டிருக்கிறோம்.

அப்துல்லா, டில்லிக்கு வந்தால், வழங்கப்பட்ட ராணுவ மரியாதை – ராஜோபசாரம் – கொஞ்சநஞ்சமல்ல..

இந்தியத் தலைவர் குலாவுவார் – பண்டிதர் மாளிகையில் விருந்துபசாரம் நடக்கும் – பல இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுவார் – அதனைப் படம் எடுத்து, இந்தியப் பிரச்சார இலாகா, சினிமாக் காட்சிகளாகக் காட்டும்.

அந்த அப்துல்லா, இன்று சிறையில்! காஷ்மீரச் சிங்கம் – விடுதலை வீரன் – தியாகச் செம்மல் – காங்கிரஸ் தலைவர் – ஷேக் அப்துல்லா, தான் விடுதலை பெற்றுத் தந்த காஷ்மீர மண்ணில் சுதந்திரமாக உலவ முடியாது. சிறைக்குள்ளே பூட்டப்பட்டிருக்கிறார்.

வாழ்க ஷேக் அப்துல்லா! - இங்ஙனம் அவரை வாழ்த்திய, மந்திரிமார்கள், அவரைச் சிறையிலே பூட்டிவிட்டனர். அவரது உருவம் கண்டால் தலைவணங்கித் தெண்டனிட்ட போலீஸ் அதிகாரிகள் – அவரை அழைத்துச் சென்று, சிறைக்குள்ளே பூட்டிவிட்டனர்.

சிறைக்குள்ளே அந்தச் சிங்கம்! வெளியிலே, அவரால், உணர்ச்சி பெற்ற மக்கள்!

திடீர் நிகழ்ச்சிகள், மத்திய கிழக்குப் பிரதேசத்துக்கு மட்டுமே, சொந்தமென எண்ணியிருந்தோம். ஆனால், சின்னஞ்சிறு பூமி, சிங்கார காஷ்மீரில் செய்து காட்டப்பட்டிருக்கிறது.

திடீரென காஷ்மீரரின் ஜனாதிபதி எனும் பட்டத்தோடு வீற்றிருக்கும் முன்னாள் மன்னர் – உத்திரவு பிறப்பித்தார். அப்துல்லா கைது செய்யப்பட்டார், சிறைக்குள்ளே அவர்!

அப்துல்லா இதுபோல, இதே காஷ்மீர மன்னரால், முன்னர் எத்தனையோ முறை சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார் – சுதந்திரப்போரின் போது. அப்போதெல்லாம், அப்துல்லாவின் முகத்தில் புன்சிரிப்பு இருக்கும் – அவருடைய தோழர்களாம் பண்டித நேரு முதலியோரிடம், ஆத்திரம் இருக்கும். ‘ஐயோ! அப்துல்லாவை, காஷ்மீர ராஜா, வதைக்கிறார் – வாட்டுகிறார்‘ என்று காங்கிரஸ் தலைவர்கள் கர்ஜனை எழுப்புவர்.

இன்றும் அதே மன்னர்தான்! - ஆனால், மக்கள் தலைவர் எனும் போர்வையில்!!

இப்போதும் அவர்தான் அப்துல்லாவைக் கைது செய்ய உத்தரவிட்டார்! ஆனால், பண்டித நேரு முதலியோரின் சம்மதத்தோடு!

காஷ்மீரத்தின் பிரதமர், காராக்கிரகத்தில் கிடக்கிறார் – அவர்மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த விசித்திர நிகழ்ச்சி கேட்டு, உலகம் வியப்படைகிறது. டில்லியைப் பார்க்கிறது ‘என் சகோதரன்‘ என்று அணைத்து, வாழ்த்தி, கோடிக்கணக்காக வாரித் தந்து, குலவினாரே, பண்டிதர் – அவரைப் பார்க்கிறவர் கண்ணீர் வடிப்பார் – இது, உலகம், எதிர்பார்ப்பது. கர்ஜித்து கிளம்புவார் – பண்டிதருக்கும் அப்துல்லாவுக்கும் இருந்த தொடர்பை அறிந்தோர், எதிர் பார்க்கின்றனர், இவ்விதம் அவரோ, புன்சிரிப்புத் தருகிறார்! அப்துல்லாவைக் கைது செய்து விட்டார்களா? – அது. அவர்கள் இஷ்டம் – புது மந்திரி சபை ஏற்பட்டிருக்கிறதா – அது அவர்கள் இஷ்டம் – துப்பாக்கியால் சுடுகிறார்களா – அது அவர்கள் இஷ்டம் என்று ஏதுமறியாதவர்போல், விளக்கங்கள் தந்து கொண்டிருக்கிறார்.

தோழன்! இன்றல்ல சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்து.

அவன், சிறையில்! - ஆனால் பெருமிதத்தோடு, பேசுகிறார், பிரதமர் பண்டிதர்.

பிரிந்து செல்வோம் – காஷ்மீர், ஓர் தனியரசு – இதில் அந்நியர் எவருக்கும் இடமில்லை. இவ்வணம், உரிமை முழக்கம் செய்து வந்தார், அப்துல்லா.

இந்த முழக்கம், காஷ்மீரைத் தமது பிடியில் கிடக்கச் செய்ய வேண்டுமென்பதற்காகப் பொன்னையும், பொருளையும் தன் மதிப்பையும் கௌரவத்தையும் தத்தம் செய்து, தடுத்தோரை மிரட்டி, தகாது எனப் செப்பியோரிடம் சண்டையிட்டு, சாகசம் ஒன்றாலேயே அத்தளிர்பூமியில் செல்வாக்கு செலுத்தலாம் என்று கனவுகண்டு வந்தார், பண்டிதர் நேரு.

கனவு பலிக்கவில்லை! அப்துல்லா அடிமையாகக் கிடக்க விரும்பவில்லை!

விருந்துபசாரத்துக்கு நன்றி தெரிவித்தார் – அன்புக்கு அன்பு செலுத்தினார் – மரியாதைக்கு மரியாதை காட்டினார் – ஆனால், தன் மதிப்பை இழக்கத் தயாராக இல்லை! தன்னுடைய பூமிக்கு, விடுதலை பெற விரும்பினார்.

அவருடைய விடுதலை வேட்கை – விரக்தியைத் தந்தது, பண்டிதருக்கு.

காஷ்மீர் தனிநாடு! - என்றார், அப்துல்லா, உலகம், உண்மைதானே, என்றது. பண்டிதரோ சினந்தார்!

பலன், இன்று, அப்துல்லா சிறையில். இவர்கள் வெளியில்! ஆனால், பாராளுமன்றத்தில் பேசும்போது, ‘அப்துல்லாவைச் சிறையிலிட்டது, அவர்கள் இஷ்டம்‘ எனத் தெரிவிக்கிறார்.

அவர்கள், இஷ்டமாம்! - தெரிவிக்கிறார், பண்டிதர், காஷ்மீரம், எகிப்து அல்ல. இந்தியாவுடன் ஒட்டிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுவது. அங்கேயுள்ள மன்னர், இந்து! மக்கள் முஸ்லீம்கள்! இந்து மன்னர், இந்திய அரசின்துணையால், இன்னும் வாழ்பவர் அவர். அப்துல்லாவைக் கைது செய்தாரென்றால் அது இந்தியா வழங்கிய தைரியத்தின் விளைவே ஒழிய – அப்துல்லாமீது அடக்குமுறையை வீசக்கூடிய அளவு தைரியம் பெற்றவரல்ல அவர்.

இதனை உலகு உணரும் – ஆனால், பண்டிதர் பசப்புகிறார்.

இந்தியாவின் தூண்டுதல்! - இவ்வண்ணம் பிரிட்டிஷ் ஏடுகள் கூறுகின்றன.

தன்னைத் தட்டிப் பேசிய அப்துல்லாவைப் பழி வாங்கிவிட்டார், பண்டிதர் – இவ்விதம் பாகிஸ்தான் மக்கள் கூறுகிறார்கள்.

ஆனால், இந்திய ஏடுகளோ, நேற்றுவரையில் அப்துல்லாவைப் புகழ்ந்ததை மறந்து – துரோகத்தின் பலன் துரோகிக்குக் கிடைத்த பரிசு, என்றெல்லாம் தீட்டுகின்றன.

அப்துல்லா – சுதந்திர காஷ்மீரத்தை அடைய விரும்பினார் – அதனால், துரோகியாகிவிட்டார்! எவ்வளவு விசித்திரமான ஏடுகள் இவை – எத்தகைய வேடிக்கையான சுயராஜ்யத் தலைவர்கள், டில்லியில்.

அப்துல்லா டிஸ்மிஸ் – புதுமந்திரி சபை – இந்த நிகழ்ச்சிகளுக்குள் அடங்கிகிடக்கும் சதிகள், மிகப்பல.

இந்தச் சதிகளிலே, இந்திய சர்க்காருக்கிருக்கும், பங்கு – இலேசானதல்ல.

இதனை உலகம், அறியும் – பண்டிதரின் மௌனமே, இதனைப் பறைசாற்றுகிறது.

தன்னுடைய பேச்சைத் தட்டிப்பேசிய அப்துல்லாவைப் பழி வாங்கிவிட்டது டில்லி.

இதன்மூலம், தனக்கிருக்கும், செல்வாக்கை, அகில உலக அரசியல் அரங்கில், காட்டிக் கொண்டுவிட்டார், பண்டிதர்.

உண்மையில், அவருக்கு இது ஓர், ‘கித்தாப்பு‘க்கான காரியம்தான்! ஆனால், மனித உரிமைக்கு. அரசியல் கண்ணியத்துக்கு மிகமிக அருவருப்புக்குரிய செயல் அதன் விளைவு இப்போது தெரியாது! சூது மதியினர் எப்போதுமே துந்துபி முழக்குவது சகஜம். ஆனால், நீதியும் உண்மையும் தான், என்றும் வெல்லும் இன்று.

அப்துல்லா சிறையில்! - ஆனால், அவரைத் தம்முடைய இதயச் சிறையில் மூடியிருக்கும் மக்கள் வெளியில்! அவர்கள் அனைவரும் முஸ்லீம்கள். இதனை, ஆதிக்கபீடமாம், டில்லி, மறந்துவிட்டது இதன் விளைவுகளை, எதிர்காலம் போதிக்கும்! காஷ்மீரில் நடைபெற்ற சம்பவம், மிகப்பெரிய துரதிர்ஷ்டமாக முடியப் போகிறது டில்லி வெறியர்களுக்கு.

இங்ஙனம்

அண்ணாதுரை

திராவிட நாடு, 16-8-1953

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

No responses yet

Write a response