வெற்றி விழா காண.

SG
4 min readJan 13, 2022

அண்ணாதுரை, காஞ்சி, 8–1–1966

விழாக்கள் நாட்டு மக்களின் வளர்ச்சி — வளம் — உளப்பாங்குகளை எடுத்துக்காட்டுவன!
கடமையுணர்ச்சியுடன் பணியாற்றிடின் புத்தாட்சி அமைத்திட இயலும்!
எழுஞாயிறு கண்டிடின் எங்கும் ஒளிமயம்!
நல்லரசு கண்டிடும் நற்பணிக்கான உறுதி பெற்றிடுவீர்!

தம்பி!

எல்லா வளங்களும் தருகிறேன், என் மக்களிடம் பரிவு மிகக் கொண்டிருப்பதனால்! இருந்தும் என் மக்களிடமே ஏழ்மை கப்பிக்கொண்டிருக்கக் காண்கின்றேன். ஏக்கம் கொள்கின்றேன்.

எல்லாச் சீரும் தந்துள்ளேன்; எனினும் என் மக்கள், இங்கும் வெளியிலும், கூலிகளாகி உழலக் காண்கின்றோம்; தங்கத் தொட்டிலில் தவழ்ந்த குழந்தை, பெரியவனான பிறகு கரத்தில் தகரக்குவளையுடன் காணப்படின், இரத்தமல்லவா வடியும் கண்களிலிருந்து.

எங்கும் காணப்படாத அளவு இலக்கியச் செல்வத்தைத் தந்துள்ளேன்; எனினும் என் மக்களிலே பெரும்பாலோர் எழுத்தறிவும் அற்றவராயுள்ளார்! கற்றோரிலும் மிகப் பலர், பகுத்தறிவற்றுக் கிடக்கின்றார். என் செய்வேன்! — என்று எண்ணி எண்ணித் தமிழன்னை குமுறுகின்றாள் என்று கூறிடின், கற்பனை என்றும், கதைநடை என்றும் கூறிட முற்படுவர்.

ஆனால் தமிழகத்துக் குடில்களில் உலவிடும் ஒவ்வொரு தாயும், இந்நிலையில் இருந்திடக் காண்கின்றோம்; அந்தத் தாயே, தமிழன்னை; தத்தளிக்கும் தமிழன்னை!!

எனினும், அந்தத் தாயும் ஒரு நாள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, மனையிலிருந்தும் மனத்திலிருந்தும் இருளை விரட்டிவிட்டு, புத்தொளி கூட்டி, புதுக்கோலம் புனைந்து பொங்கற் புதுநாள் கொண்டாடுவதனை ஒரு “மரபு’ ஆக்கிக் கொண்டிருக்கக் காண்கிறோம்.

கவலைகள் மடிந்திடவில்லை; மறைந்துள்ள ஒரு நாள்; மறைத்துவைக்கப்பட்டுள்ளன, விழா நாள் என்பதால்.

விழாக்கள், ஒரு நாட்டு மக்களிடன் வளர்ச்சியையும் வளமும், உளப்பாங்கும் எந்நிலையில் உளது என்பதை எடுத்துக் காட்டுவன.

வீடும் நாடும் விழாக்கோலம் பூண்டு, மக்கள் ஒன்றுகூடி மனம் மகிழ்ந்து, கலைநடமிட, களிப்பு ஒளிவிட உலவிடும் நாள், விழா நாள்; திருநாள்!

நிம்மதியான வாழ்வும், நிலையான அரசும் பெற்றிருந்தாலொழிய, ஒரு நாடு, விழா நடத்திடும் இயல்பினைப் பெற்றிட முடியாது.

பிற நாடுகள் அந்நிலை பெறா முன்பே, தமிழகம் சீரான நிலை பெற்றிருந்ததனாலேயே, பொங்கற் புதுநாள், தமிழர் திருநாள், அறுவடைப் பெருநாள், பொன்னாள் நன்னாள் என்று பல்வேறு சிறப்புப் பெயர்களைப் பெற்றுள்ள தனித் திருநாளைக் கொண்டாடி வந்துளது.

அந்நாள், உமது இல்லத்தில் இன்பம் வழங்குவதாக அமையட்டும் என்று வாழ்த்துகின்றேன். கவலையும் கலக்கமும் கண்ணீரும் பெருமூச்சும் அந்த ஒரு நாளாகிலும், இல்லங்களில் இருந்திடாத நிலை வேண்டும்; களிப்பும் கனிவும், பரிவும் பாசமும், மலரும் மணமும், பசுமையும் பாங்கும், பாட்டும் கூத்தும், எழிலும் மழலையும் அந்த ஒரு நாளாகிலும் இல்லந் தோறும் அரசோச்சட்டும், இன்பம் என்றால் இப்படித்தான் இருக்கும், அன்புவழி என்றால் இதுபோலத்தான் இருக்கும், வளம் என்றால் இதுதான், வண்ணம் என்றால் இதுதான் என்று உணரச் செய்திடவாகிலும் ஆண்டுக்கு ஒரு நாள் இந்த அருமைத் திருநாளைப் பெறுகின்றோம்.

முயற்சி திருவினையாக்கும்; கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்; இல்லறமே நல்லறம்; நல்ல வீடு ஓர் பல்கலைக்கழகம்; மழலைக்கீடாகாது குழலும் யாழும்; — என்பன போன்றவைகளை ஏடுகளிலே படித்திடும்போது கிடைத்திடும் மகிழ்ச்சியைவிட, வீடுகளில், காண்பதற்கு வாய்ப்புக் கிடைத்திடும்போது, மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.

இன்றுபோல் என்றென்றும் இருந்திடலாகாதா என்ற எண்ணம்கூடக் கொள்கின்றோம்; இருந்திடுவதில்லையே என்பதனை எண்ணி ஏங்குகின்றோம்.

இவ்வாண்டு பொங்கற் புதுநாள் கொண்டாடுங்காலை, ஏக்கம் துரத்திவிட்டு, ஏற்புடை ஓர் உறுதிகொண்டிட வேண்டுகின்றேன்.

பொழுது புலர்ந்தது; பொற்கோழி கூவிற்று; புதுமலர் காண்கின்றோம்; பொன்னொளி காண்கின்றோம்; விழா! எனவே இவை கண்டு மகிழ்கின்றோம்.

நாட்டுக்கே ஓர் பொற்காலம், பொழுது புலரும் நாள், கண்டிட முடியும் நல்லரசு அமைத்திடின். அந்த நல்லரசு அமைத்திடும் உரிமையாளரே, நாம் ஒவ்வொருவரும்! “இந்நாட்டு மன்னர்கள்!’’

நாட்டு மக்கள் இவ்வாண்டு பொங்கற் புது நாளன்று, நல்லாட்சி அமைத்திடும் உரிமை பெற்றுள்ளோம் என்பதனை உணர்ந்து உவகை கொண்டிடல் வேண்டும்; அதற்கேற்ற முறையில் பணியாற்றிடும் உறுதி பூண்டிட வேண்டும்.

ஓர் திங்கள்கூட அல்ல; இரு கிழமைகளே இடையில்! இருளுக்கும் ஒளிக்கும் இடையில்! இல்லாமைக்கும் “எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் நிலைக்கும் இடையில்; அன்பு வழி மறந்து அறம் பழித்து நடாத்தப்படும் அரசியலுக்கும் அன்பரசுக்கும் இடையில்!

இந்த இடையிலே உள்ள நாட்களில், மக்கள் தமது கடமை உணர்ந்து, ஆற்றல் மறவாமல், நெறி பிறழாமல் பணியாற்றிடின், புத்தாட்சி அமைத்திட இயலும், நாட்டிலே புத்தொளி பரவிடச் செய்திட முடியும்.

முடியும், முயன்றால்! முயன்றோர் வெற்றி கண்டுள்ளனர்! முயன்று பல முடித்த மரபினரே நாம்! அதனை மறவாது, எழுச்சியுடன் பணிபுரிந்திடின், வெற்றி நமதே! ஐயமில்லை! உதயசூரியன் எழுவான்! ஐயமில்லை! எழு ஞாயிறு கண்டிடின், ஏது இருள்? எங்கும் ஒளிமயம்! அகத்திலும் புறத்திலும் நாடெங்கும்! வீடெல்லாம்!

அந்த எழிலையும் ஏற்றத்தையும் பெற்றாக வேண்டும் என்ற உறுதியைச் சமைத்தெடுத்து, தானும் உண்டு, மனையுளார் அனைவர்க்கும் தந்து மகிழ்ந்திட வேண்டுகிறேன்; மாண்பு பெற வேண்டுகிறேன்.

அகமும் புறமும்கொண்டோர் நாம்; இன்று அறியாமையின் பிடியில் சிக்கியுள்ளோம்.

கரும்பு விளையும் நாடு இது; மக்கள் கசப்பு உண்டு உழல்வது காண்கின்றோம்.

செந்நெல் விளைந்திடும் வளமிகு பூமி இது; இன்று கட்டாயப் பட்டினி, அரச கட்டளையாகிடக் காண்கின்றோம்.

எல்லோரும் ஓர் நிறை என்ற கவிதை பெற்றோம்; இன்றோ இல்லாதார் தொகை வளர்ந்திடக் காண்கின்றோம்.

உலை கொதிக்கிறது, பானை இசைபாடுகிறது, கொண்டு வந்து போடு! கொண்டுவந்து போடு! என்று; அரிசி கொட்டிடின் சோறு காண்போம்; மணலைக் கொட்டிடின்?

செங்கரும்புத் துண்டொன்றைத் தூக்கிச் சென்று சிவந்த அதரம் இரத்தச் சிகப்பாகு மட்டும் கடித்துத் தின்கின்றான், கண்ணின்மணி! காண்கின்றோம், களித்திடுகின்றோம். கரும்புத் துண்டாக இன்றி, மூங்கில் துண்டாக இருந்திடின்!

முக்கனி கிடைத்திடாமல், எட்டிக்கனியைக் கொட்டி இஃது வேண்டுமோ என்று கேட்டிடின், என்ன எண்ணிக்கொள்வோம்! இன்று “பசுமையை’ வெகுபாடுபட்டு இல்லங்கள் தேடிப் பெறுகின்றன. பசுமை, தன்னாலே கிடைத்திடவில்லை; தாராளமாகவும் காணப்படவில்லை.

எங்கும், என்றும் பசுமை கொலுவிருக்கத்தக்க நிலை பெற்றிடலாம் இன்பத் திரு இடத்தில்; அதற்கானதோர் நல்லரசு அமைத்திடின்.

இன்று, ஏற்படுத்திக்கொண்டுள்ள விழாக்கோலம் இயற்கையானதாகிட, இன்று வருவித்துக்கொள்ளும் மகிழ்ச்சி உயிருள்ளதாக, இன்று மனையுள்ளார் கொண்டிடும் பொலிவு என்றும் நிலைத்திருக்க யாது செயல் வேண்டும் என்ற எண்ணத்தைப் பெற்றிட வேண்டும்.

தமிழன் எண்ணிப் பார்த்திடின், தக்க வழியினைக் கண்டறியும் திறனுடையான்.

தமிழன், செயலார்வம் கொண்டிடின் எண்ணியதைச் செய்து முடிக்கவல்லான்.

தமிழன் கத்தும் கடல் அடக்கிக் கலம்விட்டான். கடக்கொணாதது என்று மற்றையோர் எண்ணி மலைத்திருந்த நாட்களிலேயே!

கங்கைகொண்டான், கடாரம் வென்றான், இமயம் சென்றான், கொடி பொறித்தான்; ஏற்றம் எல்லாம் கண்டான்.

வரலாறு மறவாமல் இருந்திடின், இன்றும் எண்ணியதை முடித்திட இயலும்.

கழகம், அந்த வரலாற்றுச் சிறப்பினை நித்தநித்தம் எடுத்துக் கூறி வருகிறது.

நல்லாட்சி அமைத்திடுவீர் என்று வேண்டியபடி இருந்து வருகிறது.

இன்று பொங்கற் புதுநாள்! மகிழ்ச்சி பெற்றிடும் நன்னாள். இந்நாளில் என் வாழ்த்துக்களை வழங்குகிறேன்; ஒன்று கேட்கின்றேன்; நல்லரசு கண்டிடும் நற்பணிக்கான உறுதி பெற்றிடுவீர், மற்றையோர்க்கும் அளித்திடுவீர்!

இன்று விழா மட்டுமல்ல; வீரம் விளைவிக்க உறுதி கொண்டிடும் நாள்!

நாடு விழாக்கோலம் கொண்டிடச் செய்வோம் என்ற உறுதி கொண்டிடும் நாள்.

விழா தரும் மகிழ்ச்சி அந்த உறுதியினை வளர்த்திடட்டும்! ஆற்றலை வளர்க்கட்டும் வெற்றி நோக்கி நடைபோடச் செய்யட்டும்!

கல்லும் முள்ளும் மண்டிக் கிடந்த இடம், மலர்த் தோட்டமானதும், கனிதரு நிறை சோலையானதும், கதையல்ல! விழா காட்டிடும் உண்மை!

ஒரு நல்லாட்சி கண்டிடும் ஆற்றல் நமக்கு உண்டு என்பதனை, உழைப்பின் மூலம் நாட்டின் புதிய காலத்தையே மாற்றிட வல்லோர் நமது மக்கள் என்பதனை எடுத்துக் காட்டிடும் இந்நாளன்று; நல்லாட்சி அமைத்திட உறுதி கொண்டேன்; செய்து முடிப்பேன்; வெற்றி காண்பேன்! — என்ற முழக்கம் எழட்டும்; புறப்படு,தம்பி! புறப்படு!

புனிதப் போர் நடாத்திட! வெற்றி பெற்றிட! புறப்படு! ஒரு முறை — மற்றோர் முறை — விழாக்கோலம் கொண்டுள்ள மனையினைக் கண்டு களித்திடு; இல்லத்துள்ளாரின் இன்முகம் கண்டு மகிழ்ந்திடு!

புதியதோர் “தெம்பு’ பெறுகின்றாய் அன்றோ! அந்தத் “தெம்பு’ தரும் நடையுடன் புறப்படு. தமிழன்னை அழைக்கின்றாள், எல்லா வளமும் நான் தந்தேன், தக்க முறையில் பயன்படுத்தி என் மக்களை வாழவைக்கும் நல்லரசு அமைத்திட வா! மகனே வா என்று.

ஆமாம், தம்பி! அன்னை அழைக்கின்றாள் புறப்படு! — என்று நானும் அழைக்கின்றேன்! வெற்றி விழா காணலாம், வீரநடை போடலாம், புறப்படு!

அண்ணன்,

8–1–67

மூலக்கட்டுரை

http://www.annavinpadaippugal.info/kadithangal/vetrivizha_kaana.htm

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

No responses yet

Write a response