அண்ணாதுரை, திராவிடநாடு, 21–10–1956

வீரத் தியாகி
சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் -
தமிழர் சமுதாயச் சீர்கேடு -
தமிழ்நாடு - பெயர் வைத்தல்.
தம்பி!
நடுநிசி! தூக்கம் வரவில்லை; துக்கம் துளைக்கிறது! வெட்கமும் வேலாகக் குத்துகிறது; கொழுந்து விட்டெரியும் பெருநெருப்பும், அதிலே கிடத்தப்பட்டுள்ள தியாகத் திருமேனியும், தெரிகிறது; தீ என்னைத் தீண்டாது, தீயோரின் பிடியிலிருந்து நான் விடுதலை பெற்றுவிட்டேன், தீரமற்றோரே! தெளிவற்றோரே! இனி தீ உங்களைத்தான் தாக்கும்! வெந்து வேதனைப்படுங்கள்! உணர்ச்சியற்ற உருவாரங்களே! உண்ண, உடுக்க, இருக்க, வழி கிடைத்தால் போதும் என்று எண்ணி, அவைதமைப் பெற "எடுபிடியாகவும், இழி நிலையைச் சகித்துக்கொள்ளவும் சம்மதித்துக் கிடக்கும் சத்தற்ற ஜென்மங்களாகிவிட்டீர், சடங்களே! கருகிப் பொடியாகட்டும், எனக்கென்ன! இதோ நான் கண்மூடி விட்டேன்! இனி உங்களைத் திரும்பிப்பாரேன்! செல்கிறேன், சிந்திக்கவும் செயலாற்றவும் திறனற்றுப்போன உம்மைக் காணக் கூசினேன், இந்த நிலை பெற்றீரே என்றெண்ணிக் குமுறினேன், இனி இவர்தம் கூட்டுறவு வேண்டாம் என்று துணிந்தேன், சாவை வரவேற்றேன்! நான் மறைகிறேன், நீங்கள் உலாவுங்கள்!! நான் இறந்து படுகிறேன், நீங்கள் இளித்துக் கிடவுங்கள்! எனக்கு மானம் பெரிது, உயிர் அல்ல; உயிரை இழக்கிறேன்! உலுத்தருக்கு உயிர்தான் வெல்லம், அதைச் சுமந்துகொண்டு திரியுங்கள்! சவத்துக்கும் உயிர் உள்ள சடத்துக்கும் என்ன மாறுபாடு? உணர்ச்சிதானே, இரண்டினையும் வேறுபடுத்திக் காட்டுவது! உணர்ச்சியற்றுக் கிடக்கும் உம்மை, மாந்தர் என்றும் மறத் தமிழர் என்றும் கூற என் நா, கூசுகிறது! இதோ இனி நான் பேசப்போவதில்லை! போகிறேன், பொல்லாங்கும் பழியும், புல்லர் வாழ்வும் பூசலும் நிரம்பிய இந்த இடத்தைவிட்டே அகன்று செல்கிறேன்! சாக்கடையில் நீங்கள் உழலுங்கள், சாக்காடு எனக்குச் சாந்தி அளிக்கட்டும்! பதைக்கிறீர்கள், துடிக்கிறீர்கள்! ஆஹா! என்கிறீர்கள், ஆகட்டும் என்று ஆர்ப்பரிக்கிறீர்கள்; யார் தெரியுமா என்று உருட்டுகிறீர்கள், என்ன செய்வேன் தெரியுமா என்று மிரட்டுகிறீர்கள்; எல்லாம், எதற்கு? ஒரு சிறு பொருள் உன் கரத்தை விட்டுப் போவதானால்! ஒரு சிறு சொல் உம்மீது எவனேனும் வீசுகிறானென்றால்! சுயநலத்துக்குக் குந்தகம் விளைகிறது என்றால், சூரத்தனமாகக் கிளம்புகிறீர்கள். போராடுகிறீர்கள்! தாயகம் அழிக்கப்படுகிறது, தாயகம் இழிநிலை பெறுகிறது. ஏன் என்று கேட்கும் துணிவு இல்லை உங்கட்கு! தாயகம் தருக்கரின்காலடியில் சிக்கிச் சீரழிகிறது; தடுத்திடும் ஆற்றல் இல்லை, உங்களுக்கு! மொழி அழிக்கப்படுகிறது, உமது விழியிலே நீர் சேரக்கூடக் காணோம். தன்மானம் அழிக்கப்படுகிறது, தடுத்திடக் கிளம்புகிறீர்களா? இல்லை! தாளேந்திக்கிடக்கிறீர்கள்! நத்திப் பிழைத்திடவும், நமக்கென்ன என்று ஒதுங்கிக் கிடக்கவும், நம்மால் ஆகுமா என்று பெருமூச்செறியவும் கற்றீரேயன்றிக் கடமை உணர்ச்சியை எங்கே கொண்டீர்! வீரர் வழி வந்தோரே! வெற்றி முரசு கொட்டினோரே! தமிழர்காள்! தரணி புகழப் பரணி பாடிய பரம்பரையினரே! கடலில் கலம் செலுத்தி, கரிப்படைகொண்டு கருங்கற்கோட்டைகளைத் தூளாக்கி, வேற்படைகொண்டு மாற்றாரை விரட்டி, வாகை சூடிய வெற்றி வீரர் வழிவந்தோரே! என்றெல்லாம், ஏடு உம்மைக்குறித்து குறிப்பிடுகிறது; நாடு நலியக் கண்டும், வலியோர் சிலர் எளியோர்தமை வாட்டிடக்கண்டும் வாய்திறந்து கேட்கவும் வக்கற்றுக் கிடக்கிறீர்! உம்மோடு, நான் இருக்கச் சம்மதியேன்! உம்மில் ஒருவனாக இருக்க என் மனம் இடம்தரவில்லை! நான் பிணமாகிறேன், பேசும் பிணங்களே! குடும்பம் அழைக்கிறது, சென்று குதூகலமாகக் காலங் கடத்துங்கள், குட்டவருவான் கொடியோன்! குனிந்து கிடவுங்கள். குறை கூறாதீர்கள், குண்டாந்தடியுடன் வருவான், கோலோச்சுவோரின் ஏவலன், இழிவாகப் பேசுவான், இனிமை, இனிமை! என்று கூறுங்கள் - இல்லையெனில் இருட்டறையில் தள்ளிப்பூட்டிவிடுவான்! வாழவேண்டுமே என்பீர், வாழுங்கள், வாழுங்கள், மானம் இழந்து, உரிமை இழந்து, உணர்ச்சி இழந்து; உயிரைச் சுமந்துகொண்டு உலவுங்கள்! என்னால் முடியாது! இதோ, நான் மரணத்தைத் தழுவிக்கொண்டேன்! மலர் தூவிய மஞ்சம் உமக்குக் கிடைக்கக்கூடும், மானத்தை இழந்த பலருக்குக் கிடைக்கும். எனக்கு இந்த நெருப்புப் படுக்கைபோதும்! பிடிசாம்பலாகிறேன்! பேதையாய், தலையாட்டிப் பதுமையாய், அடிமையாய் கிடந்து உழல்வதைக் காட்டிலும் பெருநெருப்புக்கு என்னை ஒப்படைத்துவிடுவது சாலச்சிறந்தது! எனவே, நான் செல்கிறேன், நீங்கள், பூச்சி புழுக்களும், சீச்சீ என்று இகழ்ந்திடும் விதத்தில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு கிடவுங்கள்! - என்று நம்மை நோக்கி பெருநெருப்பில் கிடத்தப்பட்டுள்ள பெரியவர் பேசுவது போன்றதோர் பிரமை ஏற்படுகிறது! அவர் இதுபோலெல்லாம் நம்மை ஏசி இருக்கக்கூடாதா - ஏசியிருந்தாலாவது, ஒரு வகையில், நன்றாக இருந்திருக்கும் அந்தப் பெருங்குணவான், ஒருதுளி ஏசினாரில்லை, நமது இழிநிலை கண்டு இரக்கப்பட்டு இறந்து பட்டேனும், நமக்கு உய்யும் வழி கிடைத்திடச் செய்வோம் என்று எண்ணினாரேயன்றி, ஏடா! மூடர்காள்! என்று சினந்துகொண்டாரில்லை! இறந்துபட்டார் - நமக்காக இறந்து பட்டார் - நாட்டுக்காக உயிர் துறந்தார் - நாமெல்லாம் நடைப்பிணமாகிவிட்டோம் என்பதறிந்து வேதனையுற்றார் - உயிர் துறந்தார்! உயிர் போகிறது - போய்க்கொண்டே இருக்கிறது என்று அறிந்தார் - விநாடிக்கு விநாடி. மரணவாயிலை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார் - சாவை வரவேற்றார்! நாம் வாழ்கிறோம்! வெட்கமின்றி, வாழ்ந்துகொண்டு கிடக்கிறோம் - வெந்து சாம்பலாகிவிட்டார் அந்த வீரத்தியாகி! எண்ணும்போது. இதயத்தை யாரோ சம்மட்டி கொண்டு தாக்குவது போலாகிவிடுகிறது. இந்த நடுநிசியில், என் நெஞ்சம் நடுக்குறுகிறது, எண்ணம் ஈட்டியாகிவிடுகிறது - எரிதழல், தெரிகிறது - தியாகியின் உடல் அதிலே கிடப்பது தெரிகிறது; ஓர் கேலிச் சிரிப்பொலிகூடக் கேட்கிறது - ஓஹோ! நீ விடுதலைப்படை வரிசையில் உள்ளவனல்லவா? உரிமை முழக்கமிட்டுக்கொண்டு ஊரூரும் அலைபவனல்லவா? தமிழர், தமிழர் என்று மார்தட்டித்தட்டிப் பேசுபவனல்லவா? அகம் என்பாய், புறம் என்பாய், ஆற்றல் என்று கூறுவாய், என் ஆன்றோர், சான்றோர் என்று புகழ்பாடுவாய், அல்லவா? என்று கேட்டுவிட்டுக் கேலிச் சிரிப்பொலி கிளப்பி என்னை வாட்டி வதைக்கிறது, நான் மனக்கண்ணால் காணும் அந்தக் காட்சி இந்த நடுநிசியில், என்போல் இதுபற்றி எண்ணி எண்ணி நெஞ்சு புண்ணாகிக்கிடப்போர் எண்ணற்றவர்கள் என்பதும் தெரிகிறது. ஆனால் எனக்குத் துக்கம் மட்டுமல்ல; வெட்கம் என்றேன்! உண்மையிலேயே நான் வெட்கப்படுகிறேன்! - ஏனெனில் இத்தகைய வீரத்தியாக உள்ளம் கொள்ளமுடியுமா உன்னால் என்று எவரேனும் என்னைக் கேட்டுவிட்டால், நானென்ன பதில் அளிக்க முடியும்! தலையைக் கவிழ்த்துக் கொள்ளத்தான் வேண்டும் - பலகோடி மாந்தரில் ஒருவருக்கு மட்டுமே கிட்டக்கூடியது அந்த வீரத் தியாக உள்ளம், விருதுநகர் சங்கரலிங்கனார், அதனைப் பெற்றிருந்தார். பேதை நான், அதனை உணர்ந்துகொள்ளும் ஆற்றலும் பெற்றேனில்லை! அவர் இறந்துபடுவார் என்று எனக்கு எண்ணவே இயலாதுபோயிற்று. அவரை நான் கண்டேன்; எனினும், அவர் இறந்துபட நேரிடும் என்று எண்ணவில்லை - காரணம். நானோர் ஏமாளி. நாடு அவரை அந்தநிலை செல்லவிடாது, நாடாள்வோர் அவரைக் கைவிடமாட்டார்கள், அந்த அளவு கேவலத் தன்மை நாட்டைப் பிடித்துக்கொண்டில்லை, அவர் கடைசிக் கட்டம் செல்லும் வரையில் கூடக் கன்னெஞ்சம், கொண்டிருப்பர், பிறகோ, பழிபாவத்துக்கு அஞ்சியேனும், பிற்காலத்துக்குப் பயந்தேனும் அறிவுலகம் ஏசுமே என்று எண்ணியேனும், அவர் சாவதைத் தவிர்த்து விடுவதற்கான தக்க முறையினை மேற்கொள்வர், என்று என் பேதை நெஞ்சு எண்ணிற்று! பெரு நெருப்புக் கிளம்பிற்று, அந்தோ! அந்த வீரத்தியாகியை அணைத்துக் கொண்டது - சங்கரலிங்கனார் நம்மைவிட்டுப் பிரிந்தார்.
எனக்கு அவரை, இதற்குமுன் தெரியாது - நாடு அவர்புகழ் பாடிட, அவர், "நடுநாயகமாக' இருந்திடவில்லை - எனினும் இன்று நடுநாயகங்களாகிவிட்ட பலருக்கு அவர் போன்றாரின் ஆற்றல்மிக்க தேசத்தொண்டு பயன்பட்டு வந்திருக்கிறது. நீண்டகாலமாகக் காங்கிரசில் பணியாற்றியவர், காமராஜர் கதர் அணியக் கிளம்புமுன்பே, கைராட்டையில் நூல் நூற்றவர்; காந்தியார் மகாத்மா ஆகிக்கொண்டிருக்கும்போது, உடனிருந்து அந்த உயர்வு உருவாவது கண்டு உளமகிழ்ந்தவர்; வந்தேமாதரம், தேர்தல் தந்திரமான பிறகு அல்ல, அஃது தேசிய மாமந்திரமாக இருந்த காலத்திலேயே, அந்தக் குறளைக் கற்றுக்களித்தவர், "சிறைசென்று நலிந்தவர்' வணிகத்துறையிலும் அவருக்கு வெற்றிதான்; சங்கரலிங்கனார், பழம் பெரும் தேசபக்தர் வரிசையைச் சேர்ந்தவர்.
இன்றைய நிதி மந்திரிகளுக்கும், சோப்புச் சீமான்களுக்கும், அவரைத் தெரிந்திருக்க முடியாது.
மாணிக்கவேலர்கள், அவர் பற்றிக் கேள்விப்பட்டிருக்க முடியாது.
நிச்சயமாக, சேதுபதிகளின் பார்வையில் அவர் பட்டிருந்திருக்க முடியாது.
இவர்களெல்லாம், நாடு குறித்துக் கவலைகொள்ளும் பக்குவம் பெறுவதற்குப் பன்னெடு நாட்களுக்கு முன்பே சங்கரலிங்கனார் "சத்யாக்கிரகி' ஆகிவிட்டார்! ஆனால், அவர் சபை நடுவே இடம் பிடித்திடும் "சத்காரியத்தில்' ஈடுபடவில்லை! கமிட்டிகளைக் கைவசப்படுத்தும் வித்தையில் ஈடுபட்டாரில்லை! தலைவர்' ஆக மறுத்துவிட்டார்; தன்னலமறுத்து தாய்நாட்டுக் காகப்பணியாற்றி, விடுதலை விழாக்கண்டு வெற்றிக் களிப்பு பெற்று, பெறவேண்டிய பேறு இதனினும் வேறு உண்டோ என்றெண்ணிப் பெருமிதம் கொண்டு இருந்த ஒரு பெரியவர்.
தாயின் மணிக்கொடி பாரீர்
அதைத் தாழ்ந்து புகழ்ந்து பணிந்திட வாரீர்!
என்ற தேசிய கீதம் கேட்டு மகிழ்ந்தவர்.
ஏழை என்றும் அடிமை என்றும்
எவனும் இல்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனிதர் என்போர்
இந்தியாவில் இல்லையே!
என்ற சிந்துகேட்டு, செந்தேன் செந்தேன்! இதுநாள் வரை நான் கேட்டறியாத கீதம் என்று கூறிக்களித்தவர்!
தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில்
இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்.
என்ற வீரக்கவிதை கேட்டு, நெஞ்சம் விம்மிடும் நிலையில் ஆம்! ஆம்! அழிந்துபட்டது ஆங்கில அரசு! செவி குளிரக்கேட்கிறது சுதந்திர முரசு! இனி, பசியும் பட்டினியும் கொட்டுமோ! பஞ்சையும் பராரியும் இருப்பரோ! - என்று எண்ணிக் களிநடம் புரிந்தவர்.
உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்
வீணில் உண்டு கொழுத்திருப் போரை
நிந்தனை செய்வோம்.
என்ற கீதம், ஊரூரும் பாடிடத் தேச பக்தர்கள் கிளம்பிடக் கண்டு, இனி என் நாட்டுக்குப் புதுவாழ்வு நிச்சயமாகிவிட்டது பொழுது புலர்ந்தது, புதுவாழ்வு மலர்ந்தது, என்று பூரித்துக் கூறியவர்.
காங்கிரஸ் அரசாள்கிறது, என்ற நிலைகண்டு, இனி ஜெயமுண்டு! பயமில்லை! மனமே! என்று சிந்துபாடிச்சிந்தை மகிழ்ந்திருந்தார்.
காமராஜர், ஆட்சிப்பீடம் ஏறி அமரக் கண்டதும், பட்டம் பெற்றறியார், பல்கலைக் கழகம் பார்த்தறியார், பாரதமாதாவின் சேவையன்றிப் பிறிதோர் பயிற்சியும் பெற்றார் இல்லை, எனினும், இவர் நாடாள வாய்ப்புக் கிடைத்துவிட்டது, பாமர மக்கள் பாராளும் காலம் இது - என்ற கவிதா வாக்கியம், உண்மையாகி விட்டது; இஃதன்றோ காணக்கிடைக்காத காட்சி என்றெல்லாம் எண்ணி எண்ணி இறும்பூதெய்தி இருப்பார். ஏன் எனில், காமராஜரும், விருதுநகர் - தொண்டர் குழாத்தில் இருந்த தூயமணி!
இவ்வளவு இன்ப நினைவுகளும், பொடிப் பொடியாகும் படியான பேரிடி அவர் நெஞ்சிலே விழுமென்று யார் கண்டார்கள் -
இந்தப் படுபாவிகள் இவ்வளவு மோசமாகிப் போவார்கள் என்று நாங்கள் எண்ணவில்லையே! எவ்வளவோ பாடுபட்டு, இவர்கள் ஆட்சிக்கு வர உழைத்தோம்... எல்லாம் வீணாயிற்றே...
என்று என்னிடம் அவர் கூறியபோது, தம்பி, உள்ளபடி, அவருடைய கண்களில் நீர் துளிர்த்துக் கொண்டிருக்கக் கண்டேன். அப்போதுகூட, நான் அவர் இறந்துபடுவார் என்று எண்ணிடவில்லை - காரணம், அவர் அவ்வளவு தெளிவாக, உணர்ச்சி வயப்பட்டவராக என்னிடம் பேசிக்கொண்டிருந்தார் - அறுபது நாட்களுக்கு மேலாகிவிட்டது உண்ணாவிரதம் துவக்கி - எனினும் என்னிடம் அரைமணி அளவுக்கு அவர் பேசுகிறார் என்றால், நான் என்ன எண்ணிக்கொள்வது. இப்போதல்லவா எனக்குப் புரிகிறது, உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் வேளையிலும் அந்த உத்தமருடைய உள்ளத்தில் அத்துணை உரம் இருந்திருக்கிறது என்ற உண்மை.
இன்றுபோல் அன்றும் நடுநிசி - நானும், நண்பர்கள் நடராசன், மதுரை முத்து ஆகியோரும், அவரைக் காணச் சென்றபோது, விருதுநகரில், காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கம் என்பார் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்தே, எனக்கு அவரைக் காணச் செல்லவேண்டும் என்று அவா. அன்றுதான் முடிந்தது.
அந்தத்திடலில், நான் பலமுறை பேசியிருக்கிறேன் - கடைவீதியை ஒட்டி உள்ள மாரியம்மன் கோயில் திடல். வீரம், தியாகம், வாழ்க்கையை அர்ப்பணிப்பது, எதற்கும் அஞ்சாமல் கடமையைச் செய்வது, இன்னல் எதுநேரிடினும் கலங்காம லிருப்பது என்பனபற்றி, பலர் ஆற்றலுடன் முழக்கமிடுவதற்காக அமைந்துள்ள திடல், நானும் அங்கு நின்று பேசியிருக் கிறேன் அந்தத் திடலில் வீரமும் தியாகமும் ஓருருவாகி, சங்கரலிங்கனாராகிக் காட்சி தரும் என்று, யார் எண்ணியிருந்திருக்க முடியும். அந்தத் திடலில், ஒரு சிறு ஓலைக்கொத்துக் குடில் அமைத்துக்கொண்டு, ஒரு கயிற்றுக் கட்டிலின்மீது அவர் படுத்துக்கொண்டிருக்கக் கண்டேன். அந்தக் குடிலின் மீது, காங்கிரஸ் கொடி பறந்துகொண்டிருந்தது.
காங்கிரசால் உயர்ந்தவர்கள் ராஜபவனத்தில் சயனித்துக் கொண்டிருக்கக் காண்கிறோம்; கோட்டைகளில் கொலுவிருக்கக் காண்கிறோம்; உல்லாச தோட்டக்கச்சேரிகளிலும், நளினிகளின் நாட்டியக் கச்சேரிகளிலும், உலவிக் களித்திடப் பார்க்கிறோம்; மாளிகைகளிலே பலர் குடி ஏறிடக் காண்கிறோம், காங்கிரசின் துணையினால்; இதோ குடிசையில் படுத்துக்கிடக்கிறார், உணவு உட்கொள்ள மறுத்துத் திங்கள் இரண்டு ஆகிறது. உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் நிலையில் கிடக்கிறார், காங்கிரசை வலிவும் பொலிவும் கொள்ளச்செய்யும் தொண்டாற்றிய வீரர் - முதியவர்
காங்கிரஸ் கொடி, அந்தக் குடிலின்மீது பறந்துகொண் டிருக்கக் கண்டதும், தம்பி, எனக்குச் சொல்லொணாத வேதனைதான்! உள்ளே உயிர் போகட்டும், கவலையில்லை, உணவு உட்கொள்ளப்போவதில்லை - என்று கூறிக்கொண்டு ஒரு முதியவர் சாகும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறார் - அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டதே, காங்கிரஸ் ஆட்சி, அலங்கோலங்களைப் போக்கிக்கொண்டு, அறவழி நிற்க வேண்டும் என்பதற்காக; அந்தக் குடிலின்மீது, அவர் உயிரைக் குடித்துக்கொண்டிருக்கும் கொடுமையை விளக்கவா காங்கிரஸ் கொடி பறந்துகொண்டிருக்கவேண்டும்!
நடுநிசி - எனவே அங்கு நான்கைந்து பேர் மட்டுமே இருந்தனர் - ஒரு திரை போடப்பட்டிருந்தது, குடில் வாயிலில் அதை நீக்கியபடி உள்ளே சென்று பார்த்தேன் - கயிற்றுக் கட்டிலின்மீது சுருண்டுபடுத்திருந்த உருவம் தெரிந்தது - மங்கலான விளக்கொளியில், எனக்கு அவருடைய முகம் தெளிவாகத் தெரியவில்லை! சில விநாடி உற்றுப்பார்த்த பிறகே தெரியமுடிந்தது.
அமைதி குடிகொண்டிருந்த இடம்; நாங்கள், சத்தம் ஏதும் எழலாகாது, அவருக்குச் சங்கடம் ஏற்படும் என்று எண்ணிக்கொண்டபடி உடன் வந்த தோழரை, எழுப்பாதீர் ஐயா! என்று ஜாடை காட்டிச் சொன்னோம். அவரோ, தியாகத் திருவைத் தொட்டுத் தட்டினார். சங்கரலிங்கனார் கண் திறந்தார் - தூக்கமல்ல, சோர்வினால் செயலற்றுப்போன நிலை.
"ஐயா! அண்ணாத்துரை...'' என்றார் அந்த நண்பர், ஒருவிநாடி அவர் என்னைப் பார்த்தார் - அந்தப் பார்வையின் முழுப்பொருளை "பாவி' நான், அன்று சரியாக உணர்ந்து கொள்ளமுடியவில்லை! செத்துக்கொண்டு இருக்கிறேனடா, செயலறியாதவனே! என்பதல்லவா அந்தப் பார்வையின், பொருள்.
மிகப் பெருங்குணம் வாய்ந்தவர் அந்தப் பெரியவர்.
"அண்ணாத்துரை...'' என்று அந்த நண்பர் சொன்னதும், என் இரு கரங்களையும் பற்றிக்கொண்டார் - அவருடைய முகத்தருகே என் கரங்கள் - கண்ணீர் கரத்தில் தட்டுப்பட்டது, என் கண்கள் இருண்டுவிடுவது போன்றதோர் நிலை ஏற்பட்டது.
"தலைமாட்டிலே' நான் உட்கார அவர், இடம் செய்துதர சிறிது, நகர்ந்தார் - நான் அமர்ந்தேன் - அவருடைய போர்வை கலைந்தது. எலும்புக்கூடாகத் தெரிந்தார். பழுத்த பழம்! பேரப்பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டு காலந்தள்ளிக் களித்திடவேண்டிய வயது - உண்ணாவிரதம் மேற்கொண்டு அறுபது நாட்களுக்கு மேலாகிவிட்டன. பச்சைத் தமிழர்தான் பரிபாலனம் செய்கிறார், பாதி உயிர்போய்விட்டது என்று கூறாமற் கூறிக்கொண்டு குமுறிக்கிடக்கிறார், காங்கிரஸ் ஆட்சியைக் காணவேண்டும் என்பதற்காக, கடமை உணர்ச்சியுடன் தொண்டாற்றித் தொண்டு கிழமான அந்தத் தூயவர்.
அவர், உண்ணாவிரதம் மேற்கொள்வதற்கான காரணங் களை விளக்க வெளியிட்ட அறிக்கையையும். அவர் வெளியிட்ட கோரிக்கைகளையும் நான் பார்த்திருக்கிறேன் அதிலே ஒன்றுகூட சொந்த நலன்பற்றியது என்று சுட்டிக்காட்ட, சூட்சித்திறன் மிக்கோரால்கூட, முடியாது. நாடே கேட்கும் கோரிக்கைகள். நல்லோர் எவரும் மறுக்கமுடியாத கோரிக்கைகள் நாடாள்வோரின் கவனத்துக்கு நாள்தவறாமல் பல கட்சிகளும் வைத்த வண்ணம் இருக்கும் கோரிக்கைகள் இவைகளை நிறைவேற்றி வைப்பதாலே, காங்கிரஸ் ஆட்சி அழியாது இந்திய ஐக்கியம் பாழ்படாது. எந்த வகுப்பாருக்கும் கேடுவராது, பெரும்பணச் செலவு ஏற்படாது, சட்டச் சிக்கல் எழாது.
மாற்றுக் கட்சிகளுக்கு மணிமகுடம் கிடைத்து விடாது.
பச்சைத் தமிழரின் பரிபாலனத்துக்குக் கூடக் குந்தகம் ஏதும் நேரிட்டுவிடாது. அவர் கோரிக்கை மொத்தம் 12 - அதிலே 10, மத்திய சர்க்காரைப் பொறுத்தது, இரண்டே இரண்டுதான் மாகாண சர்க்கார் சம்பந்தப்பட்டது என்று திருப்பூரில் முதலமைச்சர் என்ற முறையில் காமராஜர், விளக்கம் அளித்திருக்கிறார்.
முதலமைச்சர் பேசினார், காங்கிரஸ்காரர் பேசவில்லை!
மந்திரிப் பதவி பேசிற்று, மனிதாபிமானம் பேசவில்லை.
விளக்கம்தரப்பட்டது, இதயம் திறக்கப்படவில்லை.
கேட்டது 12 அதில் 10 மத்திய சர்க்கார் சம்பந்தப்பட்டது என்று சட்ட நுணுக்கம் காட்டும் முதலமைச்சர் செய்தது என்ன? சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை டில்லிக்கு அறிவித்தாரா? அறிவித்து ஆவன செய்வதாக, அந்தப் பெரியவருக்குத் தெரிவித்தாரா? தெரிவித்துவிட்டு, என்னால் ஆனதைச் செய்வேன் என்று வாக்களித்தாரா?
இல்லை! இல்லை! இப்போது விளக்கம் அளிக்கிறார்!
நாம் எதைச் சொன்னாலும் கேட்டுத் தீரவேண்டிய பக்குவத்தில் நாடு இருக்கிறது, நமக்கென்ன என்று பேசினாரேயன்றி, இதயத்திலிருந்தா எண்ணம் வெளிவந்தது.
மத்திய சர்க்கார் சம்பந்தப்பட்ட பத்து இருக்கட்டும் - இவர் சம்பந்தப்பட்ட இரண்டு இருக்கிறதே, அதற்கென்ன பதில் அளித்தார்! இப்போது விளக்கம் அளிக்கிறார். இவருடைய விளக்கம் அந்த வீரத்திருவிளக்கு அணைந்தபிறகு வெளிவந் திருக்கிறது. எத்துணை அன்பு ததும்பும் நெஞ்சம், தம்பி, நமது முதலமைச்சருக்கு. எனக்குப் பழக்கமில்லை, உனக்குத் தெரிந்திருக்காது, சங்கரலிங்கனாரை, காமராஜருக்குத் தெரியாதா? இப்போது காமராஜர், காரில் போவார், நடந்து செல்லும் நண்பர்களைக் கண்டு உறவாட இயலாது; முதலமைச்சர் என்ற முறையில் அது முடியாததாகிவிட் டிருக்கக்கூடும்; முன்பெல்லாம், கடைவீதியில் கண்டிருப்பாரே அந்தக் கடமையாற்றிய வீரரை, திடலில் பார்த்திருக்கக் கூடுமே அந்தத் தியாகியை! விருதுநகர்தானே அவர் இருப்பிடம்! ஏன், சங்கரலிங்கனாரின் மாண்பை மறந்திடத் துணிந்தார்? யார் கேட்கமுடியும்? ஆச்சாரியாராக இருந்தால் கேட்கலாம் - கேட்கலாமா - கடாவலாம், சாடலாம், கிளர்ச்சி செய்யலாம், கவிழ்த்தேவிடக் கிளம்பலாம் - காமராஜர் பச்சைத் தமிழராயிற்றே! சங்கரலிங்கனார் உயிர்த்தியாகம் செய்து கொண்டாரே, என்பாய். ஆமாம் - என்ன செய்வது - பரிதாபமாகத்தான் இருக்கிறது - இருந்தாலும்...' தம்பி! இப்படிப் பேசிட முடிகிறதே, இன்று. இப்படிப்பட்ட தமிழகத்தில், எப்படி இருப்பார், சங்கரலிங்கனார். மரணம்! மேல் என்றார்.
"ஐயா! இன்றைய ஆட்சி கருணைக்குக் கட்டுப்படுவதாகக் காணோமே. ஆட்சியை நடத்தும் கட்சி, இது பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லையே. எத்துணை பயங்கரமான பலி கொடுத்தாலும். திருந்தும் என்று தோன்றவில்லையே. இந்த ஆட்சியிலே, உண்ணாவிரதம் இத்துணை உறுதியுடன் இருக்கிறீரே... பலன் இராதே...''
என்று நான் கூறினேன் - தட்டுத் தடுமாறிக்கொண்டுதான். அவரோ அனுவபமிக்கவர், நான் பள்ளிச்சிறுவனாக இருந்த நாட்களிலேயே பரங்கி ஆட்சியை எதிர்த்திடும் பணியில் ஈடுபட்டவர் - அவருக்கு நான், யோசனை கூறுவது என்றால், சரியான முறையாகுமா என்ற அச்சம் என்னைப் பிய்த்தது. இவ்வளவு இன்னலை, இந்தத் தள்ளாத வயதிலே அனுபவிக்கத்தான் வேண்டுமா என்று நான் பதறியதால் கேட்டேன், தம்பி! அவர் சொன்ன பதில், என்னைத் திடுக்கிடவைத்தது அப்போது; இப்போது கண்களைக் கலங்கச் செய்கிறது; இல்லை... நான் செத்துவிடுகிறேன்... பிறகாவது பார்ப்போம்... சண்டாளர்கள்... எவ்வளவோ கண்டித்துக் காட்டுகிறீர்கள்... திருந்துகிறார்களா... என்று அவர் சொன்னார், நெஞ்சு உலர்ந்ததை அறிந்து, பக்கத்தில் ஒரு நாற்காலிப் பலகைமீது இருந்த தண்ணீர்க் குடத்தைப் பார்த்தார். மண்பாண்டம் தம்பி குளிர்ந்த தண்ணீர்! பக்கத்தில் ஒரு முழுங்கு தண்ணீர் மட்டுமே கொள்ளத்தக்க சிறு மண் குடுவை அதிலே தண்ணீர் நிரப்பி, அவர் வாயருகேகொண்டு சென்றேன் - நாகரீக உணர்ச்சியை அந்த நேரத்திலும் காட்டியதைக் கேள் தம்பி - அந்தக் குடுவையை அவர்தம் கரத்தால் வாங்கி, இரண்டு கரண்டி அளவு தண்ணீர் பருகினார்.
பிறகு, அவர், மெள்ளப் பேசலானர் - எனக்கு, அவருக்குக் களைப்பு மேலிட்டுவிடுமே என்று பயமாக இருந்தது; அவரோ, தமக்கு "முடிவு' விரைவிலே இருக்கிறது என்ற எண்ணத்தினாலோ என்னவோ, என்னிடம் பேசவேண்டியதைப் பேசிவிட வேண்டியதுதான் என்று எண்ணிக்கொண்டவர் போலப் பேசினார்.
எல்லையை வாங்க முடியாதா?
இதில் என்ன கஷ்டம்?
இதய சுத்தியோடு இரண்டு மணி நேரம் ஆந்திர சர்க்காருடன் பேசினால், காரியம் நடக்காதா...?
என்று கேட்டார்... பதில் நானா கூறவேண்டும்... நாடு அல்லவா அந்த நல்லவரின் கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும்.
கவர்னருக்கு ஏன் இலட்ச இலட்சமாகச் சம்பளம்? ஒரு வடநாட்டான்... நீங்கள் கண்டித்தீர்கள்... நியாயம்... ஏன், வீண் செலவு... என்ன பிரமாதமான வேலையாம், கவர்னருக்கு... காலணா செலவில்லாமல், கச்சிதமாக எங்கள் வி.வி. சண்முக நாடார் பார்ப்பாரே, இந்தக் கவர்னர் வேலையை...
என்று, அவர் கூறியபோது, நான் உருகிப்போனேன்.
சங்கரலிங்கனார், காங்கிரஸ்காரர் - என்றாலும், காரிய மாற்றும் ஆற்றல் கொண்டவர் வி.வி. சண்முகம், எனவே அவர் காங்கிரஸ்காரராக இல்லாதுபோயினும் பரவாயில்லை என்று எண்ணிய அரசியல் கண்ணியம் என்னை உருகச் செய்தது.
எனக்கு அவர், பேசப்பேச, நாம் அவருக்கு மெத்தச் சங்கடம் தருகிறோமே, என்ற பயமே மேலிடத் தொடங்கிற்று. அவரோ பேசுவதையும் நிறுத்திக்கொள்ளவில்லை, என் கரங்களையும் விடவில்லை.
இந்த அளவுக்கு அவர் பேசினதாலேதான், நான், அவர் உயிருக்கு ஆபத்து இராது, என்றுகூட எண்ணிக் கொள்ள நேரிட்டது.
காமராஜர் வரப்போகிறார், இரண்டோர் நாட்களில் என்று நான் கேள்விப்பட்டதால், ஒரு தைரியம் கொண் டிருந்தேன் - காமராஜர், கனிவு காட்டுவார், கோரிக்கைகளிலே சிலவற்றையாவது நிறைவேற்றிவைத்து, அந்தக் குணவானுடைய உயிரைக் காப்பாற்றிவிடுவார் என்று எண்ணிக்கொண்டேன்.
நான் கண்டேனா, நாடாள வந்தவர்கள், மனதை இரும்பாக்கிக் கொள்ளவேண்டும் என்பதை, காமராஜா, அதுபோலவே மலைகுலைந்தாலும் மனம் குலையாத தமிழனல்லவா! அதனால், பிணமானாலும் பரவாயில்லை, கோரிக்கைகளுக்கு இணங்குவதாகக் கூறமாட்டேன், கூறினால் "கௌரவம்' என்ன ஆவது, என்று கருதுபவர் போலத் தம் போக்கால் காட்டிக்கொண்டார்; சங்கரலிங்கனார், எழுபது நாட்களுக்கு மேல் உண்ணாவிரதமிருந்து, மூர்ச்சையாகிவிட்ட பிறகு, மதுரை மருத்துவ விடுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மறைந்து போனார், அவருடைய உயிர்தான் போயிற்றே தவிர, முதலமைச்சர் பதவிக்கு உள்ள "கௌரவம்' இருக்கிறதே, அது போகவில்லை! போகவிடவில்லை காமராஜர்! சங்கரலிங்கனார்கள் சாகலாம், பிழைக்கலாம், காமராஜர், முதலமைச்சர் பதவிக்கு உள்ள கௌரவத்தைக் குலைத்துக் கொள்வாரா! உறுதியாக இருந்துவிட்டார்.
உண்மையிலேயே மோசமாகிவிட்டது.
உயிர் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.
பேச்சு நின்றுவிட்டது; ஊமை மூச்சுதான் இருக்கிறது.
எந்த விநாடியும் உயிர் போய்விடக்கூடும். மேல் மூச்சு வாங்குகிறது; கண் மூடிவிட்டது; கால் வீக்கம் கண்டுவிட்டது.
தம்பி! ஒற்றர் படையினரும்' உற்ற நண்பர்களும், பதவிக்குப் பிறகு பெற்ற தோழர்களும், நிலைமையைக் காமராஜருக்கு, இதுபோலெல்லாம் எடுத்துச்சொல்லாமலா இருந்திருப்பார்கள். என்ன சொன்னாரோ முதலமைச்சர்!
அப்படியா...
ஆமாம்...
அட, பாவமே...
நிஜமாவா...
போய்விடும்னே சொல்றாங்களா...
பெரிய தொல்லையாப் போச்சே...
என்ற விதமாகத்தான் அவர் கூறியிருப்பார்; வேறு விதமான பேச்சு இருந்திருந்தால்தான், சங்கரலிங்கனாரை நாடு இழந்திருக்காதே!
துணிவுடன், நடப்பது நடக்கட்டும் என்று இருந்து விட்டிருக்கிறார்.
ஏழை அழுத கண்ணீருக்கே பயப்படவேண்டும். நேர்மையான ஆட்சியாளர் என்கிறார்கள். சுடலையின் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. காமராஜர் ஒரு சொட்டுக் கண்ணீர் விடவும் மறுக்கிறார் - வேறு வேலை நிரம்ப!
நான் சாவதனாலாவது...
என்று அந்த உத்தமர் என்னிடம் சொன்னார் - தமிழர் சமுதாயம் இன்று அடைந்துள்ள சீர்கெட்ட நிலைமை உணராது இதுபோலப் பேசுகிறாரே என்று நான் எண்ணி வருந்தினேன்.
பொட்டி சீராமுலு உண்ணாவிரதம் இருந்தார் - ஆந்திரம் அலறித் துடித்தது - சங்கரலிங்கனார் சாகக்கிடக்கிறார் என்று தெரிந்து, தமிழகம் என்ன கோலம் கொண்டிருந்தது - ஒவ்வொரு காங்கிரஸ்காரரையும் உரைத்தும் நிறுத்தும் பார்த்து, எந்தக் "கோஷ்டி' என்று கண்டறியும் காரியத்தில் ஈடுபட்டிருந்தது!
எப்போதும்போல, மாணவ மணிகள்தான், தமிழ் இனம் இன்னமும் தலைதூக்கவே முடியாத நிலைக்குத் தாழ்ந்து அழுந்திவிடவில்லை என்பதைக் காட்டும்விதத்தில், மௌன ஊர்வலம் நடத்தியும், அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றியும், தன் கடமையைச் செய்தது.
மதுரையிலும் வேறு இரண்டோர் இடங்களிலும், தமது கழகம் அனுதாபக் கூட்டம் நடத்திற்று.
மற்றப்படி பார்க்கும்போது, தமிழகம், காமராஜ் கோலத்தில்தான் இருக்கிறது.!
இந்தத் திங்கள் 21-ம் நாள், தமிழகம் தன் கடமையைச் செய்யும் - நாடெங்கும் அனுதாபக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருவகையில் ஆறுதல்தான். ஆனால், தம்பி, அந்த உத்தமர் தம் இன்னுயிரை ஈந்தாரே, நாம் என்ன செய்யப் போகிறோம்.
தமிழ்நாடு என்ற பெயர் பெறுவதற்காவது நாம் முனைந்து நிற்க வேண்டாமா?
ஒப்பற்ற ஒரு உத்தமரின் தியாகம், இதற்குக்கூடவா வழி ஏற்படுத்தாது.
சங்கரலிங்கனாரைத்தான் சாகடித்து விட்டீர்கள், உங்கள் அலட்சியப்போக்கினால். அவருடைய உள்ளத்தில் ததும்பிக்கொண்டிருந்த ஆசையில், ஒன்றே ஒன்றையாவது. தமிழ்நாடு என்ற பெயர் தரும் காரியத்தையாவது செய்யக்கூடாதா என்று காங்கிரஸ் ஆட்சியைக் கேட்கும் அளவுக்காவது தமிழகம் செயல் படலாகாதா?
அந்தோ! அருமைத் தியாகியே! தமிழகத்திலே யன்றோ, உன் அரும்பெரும் தியாகம் கண்டனர்.
தாசர் புத்தி தலைக்கேறிவிட்ட தமிழகமாயிற்றே!
தருக்கரிடம் சிக்கிச் சீரழிந்து கிடக்கும் தமிழக மாயிற்றே!
உண்மைத் தியாகத்தின் உயர்வு அறியாத உலுத்தர்கள் உயர் இடம் பிடித்துக்கொண்டு, அன்பு, அறம், ஆகியவற்றை அழித்தொழிக்கும் நிலைக்கு வந்துற்ற தமிழகமாயிற்றே!
இங்கே அறம் ஏது? வீரம் எங்ஙனம் எழும்? நீதிக்கு வழி ஏது? நிமிர்ந்து நின்று உரிமை பேசுவோர் யார்? என்றெல்லாம் அழுதபடி கேட்கத் தோன்றுகிறது.
அண்ணா! அப்படி ஒரே அடியாகத் தமிழகத்தைத் தாழ்த்திவிடாதே - தமிழகம் தயக்கமடந்திருக்கிறது, உண்மை; ஆனால் உத்தமரின் உயிர்த்தியாகம், தமிழகத்தின் கண்களிலே குருதி பீறீட்டுவரச் செய்திருக்கிறது; கட்சி பேதமின்றி, இந்தக் கட்டத்தில், சங்கரலிங்கனாரின் தியாகத்தை நினைவிற்கொண்டு, தமிழ்நாடு என்ற பெயர் கிடைக்கச் செய்வதற்கான கிளர்ச்சி யினைத் துவக்க ஆற்றல் உள்ளவர்கள் அனைவரும் ஒரு அணிவகுப்பாகுவர், அனுதாபக் கூட்டமே, அதற்கான நாளாகும்.
அந்தச் சூள் உரைத்திடும் நாளாக அமையும் - என்று கூறிடும் எண்ணற்ற தம்பிகளைக் காண்கிறேன். அவர்களிடம் எனக்கு நிரம்ப நம்பிக்கையும் உண்டு.
வீரத்தியாகி சங்கரலிங்கனாருக்கு நாம் அனைவரும், நமது நெஞ்சு நெக்குருக வணக்கம் கூறுகிறோம்.
அவர் காட்டிய தியாகப் பாதையில் செல்வதென்பது அனைவருக்கும் சாத்தியமானதல்ல; ஆனால் அவருடைய தியாகத்தை மதிக்க மறுப்பவர், மறந்து திரிபவர், தமிழராகார், மனிதராகார்!
தமிழகம் விடுதலைபெறுவதற்கே இந்த வீரத்தியாகம் பயன்படப் போகிறது.
பிறபிற இடங்களில், இத்தகைய சம்பவம், கலகத்துக்கு பலாத்காரத்துக்கு வழிகோலும் - காண்கிறோம்.
தமிழகத்தின் முறை தனித்தன்மை வாய்ந்தது; அறவழியின்படி உள்ளது.
அறம் வெல்லும், நிச்சயமாக வெல்லும்; அறம் ஆர்ப்பரிக்காது, அத்துமீறிய காரியத்துக்கு மக்களைச் செலுத்தாது அதன் பயணம் துரிதமானதாக இராது - ஆனால் தூய்மையானதாக இருக்கும்.
அறம் நிச்சயமாக வெல்லும் - ஆனால் அது கடுமையான காணிக்கைகளைக் கேட்கும்.
மிகக் கடுமையான காணிக்கை தரப்பட்டாகிவிட்டது; வீரத்தியாகி உயிரை அர்ப்பணித்தார்.
தமிழக விடுதலைக்காக, நாமும் காணிக்கைதரத் தயாராகவேண்டும்; அந்தப் பக்குவம் நமக்கு ஏற்படவேண்டும்; வீரத்தியாகியின் நினைவு, நமக்கு உள்ளத் தூய்மையை, உறுதியை தியாக சுபாவத்தை தருவதாக அமைதல்வேண்டும். தியாகிக்குத் தலைவணங்குவோம்! தாயகத்துக்குப் பணிபுரிவோம்.
அன்பன்,
அண்ணாதுரை
21-10-56
Source : http://www.annavinpadaippugal.info/kadithangal/veera_thiyagi_2.htm