விழாக் கோலம்

SG
7 min readJan 13, 2022

அண்ணாதுரை, திராவிடநாடு,14–1–1956

உழவர் திருநாள்
எல்லைப் பிரச்சினை
இயற்கையின் கோரத்தாண்டவம்
அன்பு மலர்

தம்பி!

தெரிகிறது, தெரிகிறது, உன் முகத்திலே அழகு பொங்கி நிற்கும் காரணம் — புத்தாடை அணிந்துள்ள உன் நடை, காட்டுப் பாதையில் செல்லும் வேழம், வேங்கையின்மீது உராய்ந்து செல்லும்போது ஏற்படுவதுபோன்ற ஓசையை அல்லவா எழுப்புகிறது? கிளியும் புறாவும், நாகண வாயும் சிட்டும், குயிலும் மயிலும், காட்சிக்கினிய பொருளத்தனையும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கலந்துறவாடுவது போலன்றோ, இல்லம் விளங்கிடவேண்டுமென விழைகிறாய்!

என்ன அவசரம்? ஏன் அவ்வளவு அவசரம்? சென்று சென்று பார்க்கிறாயே, பால் பொங்கிற்றா என்று! அன்னை அறிவார்களே, எத்துணை நேரம் தழலிடை இருந்தால் பொங்கிப் பதமாகும், புத்தரிசி என்பதனை! உனக்கேன் அந்தத் தொல்லை; ஓராயிரம் தடவை சென்று கேட்கிறாயே — ஓஹோ! உன்னை உற்றாரும் நண்பர்களும் கேட்கிறார்களா — பால் பொங்கிற்றா என்று! “ஆம்’ எனப் பதிலும் கூறவேண்டுமா — அகத்தினழகுதான் முகத்தில் தெரிகிறதே!

தம்பி! மகிழ்ச்சி பொங்கும் நிலையில் நீ இருப்பதற்கு இந்நாள் வந்தது, எனக்குப் பெருமகிழ்வு தருகின்றது. எப்போதும் உன்னை — பிரச்சினை, பணி, கடமை என்பவைகளைத் தந்து சுவைத்திடச் சொல்கிறேனல்லவா — அவை யாவும், மெத்தச் சிரமப்பட்டு உண்டால் மட்டும் உவகை தருவன! இன்று, உனக்காக, கரும்பு காத்துக்கொண்டிருக்கிறது; பாற்பொங்கல் படைப்பார்கள்; உண்டு மகிழப் போகிறாய் — உன்னை அந்தக் கோலத்தில் காணவும் விழைகிறேன்.

அறப்போர் வீரனாக, அஞ்சா நெஞ்சனாக, அடக்கு முறையை எதிர்த்து நிற்போனாக, மடமையிலாழ்ந்துவிட்ட மக்களிடை அறிவு கொளுத்துவோனாக, ஆதிக்கவெறி பிடித்தலையும் வடவராட்சியை எதிர்த்து ஆற்றலுடன் பணிபுரிவோனாக — இவ்விதமெல்லாம் உன்னைக் கண்டு, உளம் பூரிக்கிறேன். இன்று, உன்னை விழாக் கோலத்தில் காண மகிழ்கிறேன். — இல்லத்தில் ஒளியளித்து களிப்புடன் விருந்துண்டு உலவும் நிலையில் உன்னை இங்கிருந்து காண்கிறேன். காட்சி, கவர்ச்சி தருகிறது — பார்த்ததும்; ஒரு கணம் பிறகோ. . . .!

இன்று திருநாள்! இல்லந்தோறும் இளைஞரும் முதியோரும், இருபாலரும், “பொங்கலோ பொங்க’லென்று மகிழ்ச்சியுடன் குரலெழுப்பி, தாமும், தம்மைச் சூழ இருப்பவை யாவுமே புதியதோர் பொலிவு பெற்றிருப்பது கண்டு, “நலிவெலாம் ஒழிந்தன; நல்லன யாவையும் இனிக் கிடைத்திடும்’ என்று நம்பி, அந்த மகிழ்ச்சிப் பெருக்குடன் மற்றையோரும், மனைதோறும் மனைதோறும் இருத்தல் கண்டு, நாடே விழாக் கோலம் பூண்டுள்ளது என்று பெருமிதம் கொள்வதற்கே அமைந்த விழா நாள்! “பால் பொங்கிற்றா?’ — என்று, அன்பு பொங்கக் கேட்டு, அகமகிழச் செய்யும் நன்னாள்! இன்பம் பொங்கும்! எங்கும் தங்கும்! மகிழ்ச்சி பொங்கும்! மனையெல்லாம் வழியும்! புத்தம் புதுக்கோலம்பெற்று, இல்லமெல்லாம் எழிலோவியமாகும்; அன்பு மணம் எங்கும் கமழும்; பூங்கா சென்ற புள்ளினமும், மலரிடை உலவும் வண்டினமும் “கானம்’ கிளப்பிடுவது போன்றதோர் களிப்பொலி எங்கும் எழும்! பனி தொலைந்தது; பரிதி அப்பகையினை விரட்டினாள்! நிலமடந்தைக்குப் புதிய எழிலூட்டினாள் — நடுக்கும் குளிர் இனி இல்லை; வாழ்வை நொறுக்கும் கேடுகட்கு இனி ஆதிக்கம் இல்லை!

விளைந்தது குவிந்திடக் கண்டோம்; வினையின் பயனைக் கொண்டோம்; செயலின் செழுமை விளங்கிற்று; செய் தொழிலின் மேன்மை துலங்கிற்று; உழவன் பெருமையை உலகே புகழ்கிறது; உலகுக்கே அத்தொழில் அச்சாணி என்று உளமகிழ்ந்து உரைக்கின்றனர், அறிஞர் பெருமக்கள்!

அவன் காலில் படிந்த “சேறும் சகதியும்’ வாழ்வுக்குச் சந்தனமாகி மணம் அளிக்கிறது. அவன் பூட்டிய ஏர் அளித்த வளம், பெருந்தேரோடும் நிலையை அரசர்க்கே அளிக்கிறது எனில், மற்றையோர் ஏற்றம் பெறாதிருப்பரோ! அவன் “கஞ்சி’ தான் குடித்தான்; கலயமோ மண்ணாலானது; கழனிப் பக்கம் அமர்ந்து கடும் உழைப்புக்குப் பிறகு, உச்சிப்போதிலே அவன் “இச்சைக்கினியாள்’ தந்தது!

இதோ, அவன் இஞ்சியும், மஞ்சளும், வாழையும், பலாவும், மாவும் பிறவும் அளித்து, தன் திறமையையும், வள்ளற்றன்மையும் எடுத்துக் காட்டுகிறான். கல்லிலும், முள்ளிலும் நடந்தான் — காரிருள் கலையும் நேரமறிந்து எழுந்தான் — பகலெலாம் பாடு பட்டான் — முளைவிட்டதும் மகிழ்ந்தான் — களை கண்டு கவலை கொண்டான்; உழைத்தான், உழைத்தான் — கழனி பச்சை நிறம் பெற்றது; மீண்டும் பாடுபட்டான்; இதோ, பொன்னாடை போர்த்துக்கொண்டு புவிப் பெண்ணாள், செந்நெல் மணி மாலைகள் அணிந்து தென்றலாளுடன் தேனொழுகப் பேசி, தெவிட்டாது பாடி, கோலம் காட்டி நிற்கிறாள்!

ஓவியன், நீல நிற வானிலே பல்வேறு உருவமாக உலவிடும் கார் கண்டு, தீட்டுகோல் எடுப்பான்; ஏரடிக்கும் சிறு கோலுடைய உழவுப் பெருமகனோ, அண்ணாந்து பார்க்கிறான்; அகமகிழ்கிறான். எதன் பொருட்டு? தன் வாழ்வு சிறக்கும் வகை கண்டோம் என்பதுபற்றி எண்ணி அல்ல; நாட்டின் நல்லறிவாளர் படித்து இன்புறும் ஏடுகள் குறித்து அல்ல; அவனைப் பற்றித் தமிழ்ப் பேரரறிவாளர்கள் — மூதறிஞர்கள் கூறிச் சென்ற பொன்னுரைகள், அகத்திலும் புறத்திலும், தொகையிலும் கலம்பகத்திலும் ஏராளம், ஏராளம்; அவன், அவைபற்றி ஏதும் அறியான்! அவனுக்காக வாதாடிய புலவர் களை அவன் கண்டானில்லை; கருத்தூட்டமளிக்கும் கவிவாணர் பலர், அவன் செய்தொழிலின் சிறப்புக் குறித்துச் செப்பியுள்ள ஒப்பில் புலமை நிறை மணிகளை அவன் கண்டானில்லை; சேரன் அவையின் சிறப்பு, பாண்டியன் பாசறை அமைத்த பெருமை, சோழ நன்னாட்டான் பாடியும் மாடியும் கண்ட அருமை இவைபற்றி அவன் அறியான்; “கருக்கலிலே போகவேண்டும் — பசுந்தழை பத்து வண்டி வேண்டும் — பன்ணையாரிடம் இன்னது கூறவேண்டும் — வேலியை இவ்விதம் சரி செய்யவேண்டும்’ — என்ற இவைபற்றித்தான் பேசுகிறான். “பயிர் எவ்வளவு காணும்’ என்பதை உரைக்கிறான் — “மணி’ அவனுக்கல்ல என்பது தெரிந்தும் மகிழ்ச்சியுடன். அவன் அளித்திடும் “அம்பாரம்’ பண்ணையாரைப் பொன்னார் மேனியனாக்குகிறது — புது யாளும் வாய்ப்பினைத் தருகிறது! அவன், தன் கண்ணாரப் பயிர் ஏறுவது கண்டு களிப்பெய்துகிறான் — தன் உழைப்பு நற்பலனைத் தந்தது என்பதறிந்து!

“உழவர் திருநாள், இப்பொங்கற் புதுநாள்’ — என்பதை, அனைவரும் இன்று அறிந்து போற்றுகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை “சங்கராந்திப் பண்டிகை’ யாகவும், “சூரிய நமஸ்காரப்’ பண்டிகையாகவும் இருந்து வந்த நிலைமாறி, இதுபோது, “அறுவடை விழா’ என்றும், “உழவர் திருநாள்’ என்றும், “தமிழர் விழா’ — “திராவிடர் திருநாள்’ என்றெல்லாம் ஏற்றம்பெற்று விளங்கிடக் காண்கிறோம்.

மற்றையோர், கிழமைதோறும், விழா நடத்துபவர்; விழா நடத்துபவர் என்பதைவிட, விழாவினால் நடத்திச்செல்லப் படுபவர் என்பதே பொருந்தும். பெம்மான் பிள்ளைக்கறி கேட்ட நாள்; பேயாண்டியாகிக் கூத்தாடிய நாள்; வெண்ணெய் திருடிய கண்ணன் வேல் விழியாரிடம் மத்தடிபட்ட நாள்; அடிமுடி காண அயனும் அரியும் முயன்ற நாள்; அறுமுகன் சூரனை வதைத்த நாள்; அரிமுகங்கொண்டு அரிபரந்தாமன் அரக்கனை அழித்த நாள்; அன்னை ஜானகியை ஐயன் மணந்த நாள்; — என்று, அடுக்கடுக்காக விழா கொண்டாடுகின்றனர்; புரோகிதரின் பாதம் பணிகின்றனர்; பகுத்தறிவையும் தன்மானத்தையும் ஒரு சேர இழக்கின்றனர்.

பண்படுத்திப் பரம்படித்து, எருவிட்டு, ஏர் பிடித்து, விதை தூவி, நாற்று நட்டு, களை எடுத்து, கதிர் முற்றிடக் கண்டு அறுத்தெடுத்துப் புடைத்துக் குவித்து உணவுப் பொருளை உலகோர்க்கு உழவர் அளிக்கும் இவ்விழாதான், நாம் மகிழ்ச்சி யுடனும் பெருமையுடனும் கொண்டாடும் ஒரே விழா!

ஒருநாள் — ஊரெல்லாம் விழா! ஒரு திங்களும் போதுமான தாக இல்லை — நமக்கு, நாட்டவரிடம் இவ்விழாவின் மாண்பினைக் குறித்து, வியந்து விரித்துரைத்திட!

ஆண்டுக்காண்டு, இவ்விழாவின் “கோலம்’, வண்ணம் கொள்கிறது; வஞ்சகரின் பிடியில் சிக்கிக் கிடப்போரும்கூட, பிற விழாக்கள்போலன்றி, இஃது பெருமை அளிப்பதாய் அமைந்திருத்தல் கண்டு இன்புறத் தொடங்கியுள்ளனர். நமது இயக்கத் தோழர்கள், உள்ளமெலாம் உவகை பொங்க, இந்நாளில் காட்சி கண்டு களிப்புக்கொண்டு, மன்றங்கள் சென்று தமிழரின் தொன்மைச் சிறப்பினை மக்களுக்கு நினைவுபடுத்தி, பொங்கற் புதுநாள் விழாவினைக் கொண்டாடுவது, நாட்டில் ஓர் புத்தார்வத்தை எழுப்பியிருக்கிறது.

ஊர், விழாக்கோலம் கொள்ளவேண்டும்; இசையும் கூத்தும், உடற்பயிற்சி விளையாட்டுகளும் இன்ன பிறவும் நடைபெறவேண்டும்! தமிழரின் தொன்மை பற்றியும், மூதாதையர் காலத்தில் இருந்த பொலிவு பற்றியும், அஃதே பிறகு நலிவாக மாறிவிடும்படி செய்த நயவஞ்சகர் போக்குப் பற்றியும் முத்தமிழ் மூலம் ஆர்வமூட்டி வருதல்வேண்டும்.

பிற எந்த விழாவும், வீட்டோடு அமையும்; அல்லது, கோயிற் பெருவெளியில் நிகழும். மக்கள் மன்றம் கூடி, மகிழ்ச்சிப் பெருக்குடன் கலந்து களிப்பதற்கான விழாவாக இப்பொங்கற் புதுநாளே அமைந்திருக்கிறது.

இந்த ஆண்டும், நாம் விழாக் கொண்டாடியும், மன்றமதில் நின்று மறத்தமிழன் மாண்பினைக் கூறியும், இன்று வந்துற்ற இழிநிலையைப் போக்குவது குறித்தும் எடுத்தியம்பத்தான் போகிறோம்.

ஆரிய மன்னராம் கனகவிசயன் மீது கல்லேற்றிய சேரன் செங்குட்டுவனைக் காட்டுவோம்; ராஜராஜ சோழன், குலோத்துங்கன், வேளிர்கள் ஆகிய அனைவரின் திறம், தீரம் ஆகியவைபற்றி மக்களிடம் பெருமிதத்துடன் பேசி நிற்போம்; தமிழகத்து நிலவளம், நீர்வளம், மலைவளம், காட்டுவளம் அனைத்தையும் காட்டுவோம்; பிற நாட்டவருக்குக் கிடைத் திலாத அரும்பொருள்கள் — கடலிடை முததும், கானிடைக் களிறும், மலையிடைச் சந்தனமும், தென்றலும் நமக்கு உண்டு என்பதனை எடுத்தியம்பி இறும்பூதெய்தி நிற்போம்.

எனினும், இந்த ஆண்டு, ஓர் பெரிய மனக்குமுறலுக்கு இடையிலேயே இந்த விழா கொண்டாடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

நமக்கு வந்துற்ற இடரும் இன்னலும் எத்தகைய நெஞ்சுறுதி கொண்டோரையும் நிலைகுலையச் செய்வதாக இருக்கிறது.

தம்பி! வடவருக்கு நாம் அடிமைப்பட்டு, வாழ்விழந்து தன்மானம் அழிக்கப்பட்டுத் தத்தளித்துக் கிடக்கிறோம் — மனம் எதுபோல் உள்ளது என்பதை அதோ, மத்திடைத் தயிர் காட்டும்!

எந்த மொழிக்காரனும், “சிந்தைக்குச் செந்தேனாக அமைந்துள்ள இத்துணை இலக்கியத்தை ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே பெற்றிருந்தீரே! என்னே, உம் நாட்டு மனவளம்! எத்துணை நல்லிசைப் புலவர்கள் வீற்றிருந்தனர்! அரசு, அத்தகைய மொழிவளம் மலர்ந்திடச் செய்ததே! கோனாட்சி யிலே இந்த நல்லறம் பூத்ததே! இஃதன்றோ பெருமைக்குரிய செய்தி’ — என்றெல்லாம் கூறி வியப்புறுவான்; எனினும், நாம், இந்திக்குத் தலைவணங்கவேண்டுமென இறுமாந்து கூறும் போக்கினரிடமன்றோ சிக்கிக் கிடக்கிறோம்.

விழா நாளன்று விசாரம் ஆகாது எனினும், எண்ணிடும் போது நெஞ்சு பதைத்திடாது இருக்குமோ! எண்ணாது விடத்தான் இயலுமோ!

வடவரின் பிடியுடன் தொல்லை விட்டதோ! இல்லை! எல்லையைக் களவாடி, ஏனையோரும், நமது திராவிட இனத்தினராம் தெலுங்கரும் மலையாளிகளும், இனத்தையும் மறந்த நிலைகொண்டு மொழிவழி அரசு எனும் உரிமையையும் இகழ்ந்து, தமிழருக்கு உரிய பகுதிகளைக் கவர்ந்துகொண்டு, வட்டாட்டமாடுகின்றனர்; இதனைக் கண்டு நீதி வழங்கும் நேர்மையற்று, பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறது வடவராட்சி. தேவிகுளம், பீர்மேடு தமிழரின் குருதி படிந்த களிறு உலவும் காடுசூழ் இடங்கள்; அங்குச் செழித்து வளரும் தேயிலைத் தோட்டத்தில், ஓய்வின்றி உழைத்து மாய்ந்த தமிழர் ஓராயிரமல்ல, பல்லாயிரவர்! இன்று, “அம்மலைநாட்டினை உமக்களித்திட ஒருப்படேன்’ என்று கூறி நிற்கிறது மலையாள நாடு! டில்லி மோதவிட்டு வேடிக்கை பார்த்து மகிழும் போக்கிலே இருக்கிறது.

வடவேங்கடம் — தென்குமரி — என்ற உரை, அரசியல் கிளர்ச்சிக்காரர் இட்டுக் கட்டிய தொன்றல்ல; இலக்கியம், வரலாறு சமைத்தளிக்கும் உண்மை. அதனை மதிக்க மறுத்திடும் ஆந்திரருடன் உடந்தையாக நிற்கிறது, டில்லி — என்று எண்ணத்துக்கும் போக்கிலே, ஆட்சி நடந்துகொள்கிறது.

விழாவின்போது இவைபற்றி எண்ணாமலும், மக்களிடம் எடுத்து இயம்பாமலும் இருத்தல் இயலுமா? எண்ணிடும் போதோ, விழாக் கோலமே கலைகிறது; வேதனை பொங்கி வழிகிறது; “எந்தமிழர் நாட்டிலே ஏன் இந்த அவல நிலை’ — என்றெண்ணி வாட நேரிடுகிறது. இம்மட்டோ! அந்தோ! தமிழகம் பெற்றுள்ள வடு, இயற்கையின் கோரத் தாண்டவத்தால் ஏற்பட்டுவிட்ட புண் — எண்ணும்போதே, கண்ணீர் கன்னத்தில் புரள்கிறது; கையறைந்து, முகத்தில் மோதிக்கொண்டு கதறும் நிலைக்குச் செல்லவேண்டிய வருகிறது, எனினும், என் செய்வது! விழா, திங்கள்தோறும் வருவதன்று — ஆண்டுக்கோர் விழா; எனவே, கண்ணீரைத் துடைத்துக்கொண்டேனும் இதனைக் கொண்டாடுகிறோம்!

“நேரிட்டுவிட்ட பேரிடியினால் நெஞ்சு ஒடிந்து கிடக்கும் நிலையினை ஓரளவுக்கு மாற்றிக்கொள்வதற்கேனும், விழா பயன்படாதா’ — என்ற ஆசை வேறு, உந்துகிறது.

ஏற்பட்ட அழிவை எண்ணிடும்போதோ, உள்ளம் வெந்தழலிடையிட்ட மெழுகாகிறது! பொங்கிய புயலின் கொடுமை, ஐயகோ! எத்தனை நாசத்தை விளைவித்துவிட்டது! அன்பு பொங்கிட அமைந்த இத்திருநாளில், எத்தனை எத்தனை குடும்பங்களிலே, சென்ற ஆண்டு ஓடி விளையாடிய சேயை இழந்து தவிக்கும் தாய்மார்களின் கண்ணீர் பொங்கி வழிகிறதோ; எத்துணைக் குடும்பம் சிதறுண்டு, சிதைத்து, சீர்குலைந்துபோனதனால் வேதனை பொங்கிக் கொப்புளித்துக் கொண்டிருக்கிறதோ; குடியிழந்த மக்கள். “கொட்டும் குளிர் போயிற்று — குதூகலப் பொங்கல் பிறந்தது — பாலும் பழமும். சோறும் சுவையும் கூட்டிக் குழைத்து உண்டு மகிழும் விழா வந்துற்றது’ — என்று பிறர் பேசக் கேட்டு, “எமக்கும் ஓர் இல்லம் இருந்தது — அங்கு அணியும் மணியும் இருந்ததில்லை; அன்பும் பண்பும் மிகுதியும் இருந்தன. அங்குப் பொன்னும் பொருளும் இருந்ததில்லை; பேசும் பொற்சித்திரங்கள் இருந்தன — கரியும் பரியும் கட்டி வைத்து யாங்கள் கனவான்களாக இருந்தில்லை; அன்புடன் தன் நாவினால் கன்றினைத் தடவிக் கொடுக்கும் அழகிய பசு இருந்தது — உப்பரிகையும் ஊஞ்சலும் இருந்த தில்லை; கொடியும் செடியும், பயனும் மணமும் அளித்து வந்தன — எல்லாம் போய், ஏதுமற்றவரானோம்; எங்கெங்கோ பொங்கல்! பொங்கல்! பொங்கலோ பொங்கல்!! — என்று கூவுகிறார்கள்; எம்மைக் கண்டால், ஈரமனம் படைத்த அவர் கண்கள் புனல் நிறையும்; எனவே, அவர் காணாது இருத்தலே சிறந்தது; கண்டிட நேரிடினும், அவர்தம் மகிழ்ச்சியை, நந்தம் துயரத்தைக் காட்டிக் கெடுத்திடாதிருக்கும் திறனாவது நமக்கு வருதல்வேண்டும்’ — என்றெல்லாம் எண்ணிக்கொண்டுள்ளனர்.

அவதிக்காளாகியுள்ளோருக்கு, “புயலின் கொடுமை எத்துணை வேகமாக அடித்தால் என்ன; அன்பும் பண்பும், எம்மவர்க்குக் கடலினும் பெருமளவு உண்டு; அது எம்மை, எதையும் மறந்திடச் செய்யும் அளவிலும் வகையிலும் வந்து சேர்ந்து, வாட்டத்தை ஓட்டுகிறது,’ — என்று கூறத்தகும் வகையிலே, விழா கொண்டாடுவோர், விரைந்து உதவியை அனுப்புதல் வேண்டும்.

நமது கழகம், இத்துறையில் நல்லோர் கண்டு மகிழத்தக்க வகையிலும், நாடாள்வோர் கண்டு மனம் புழுங்கும் நிலையிலும் ஈடுபட்டிருக்கிறது, என்பதை எண்ணியே, வேதனையைக் குறைத்துக்கொள்ள முடிகிறது — ஓரளவுக்கேனும்!

விழாவினன்று, நமது நாடு இன்று எத்துணைத் துயருற்று இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் சோகச் சித்திரமாக, புயல் எனும் சிறுகதை இருக்கக் காண்பீர்கள்; கருத்தில் பதியும் விதத்தது, “நாயகம்’ என்பார் தருவது.

திருவிடத்தின் நிலை ஏன் சீர் கெட்டுக் கிடக்கிறது என்பதைக் குடை ராட்டினம் எனும் கட்டுரை மூலம், அறிவழகன் — அன்பழகனின் இளவல் அறிவுறுத்தியிருக்கிறார்.

வேதனைக் காட்சிகளைக் கண்டதால், உள்ளத்தில் எழும்பிய புயலை, சித்தார்த்தர் புத்தராகி உலகுக்குப் பொன்னொளி அளிப்பதற்குப் பயன்படுத்திய பாங்கினை, “வெள்ளி முளைத்தது’ எனும் வரலாற்று ஓவியம் காட்டுவதாக இருக்கிறது.

ரஷ்ய நாட்டு மேதை டால்ஸ்டாய், பேராசைக்காரன் மெருமளவு நிலத்துக்கு ஆசைப்பட்டு ஆறடி நிலம் பெற்றதைக் கூறியிருக்கிறார் — இதனையும் “வெள்ளி முளைத்தது’ தந்த அரங்கண்ணல் தந்திருக்கிறார்.

ஒய்யாரியை ஓவியம் தீட்டித் தரச் சொன்ன மகா அலெக்சாண்டரிடம், துணிந்து, உயிரோவியத்தைத் தருமாறு கேட்டது குறித்துத் தேனொழுகும் பாவினைத் தருகிறார் “சுரதா’.

நம் நாட்டிலே உள்ள நலிவு போன்றும், அதற்கு மேலும் இருந்த நலிவுகள் அத்தனையும் போக்கிடச் சீன நாட்டிலே பாய்ந்தோடிய “அன்பின்அருவி’க்கு அழைத்துச் செல்கிறார் — நீவிர், அடிக்கடி சந்திக்கும் வாணன்.

கனவிலே சொர்க்கலோகச் சுந்தரிகள் தோன்றி, தத்தமது சுகானுபவத்தை அல்ல — சொர்க்கத்தில் நரகம் இருப்பதை எடுத்துக் கூறும் கற்பனை ஓவியம் “சொர்க்கத்தில் நரகம்’ — “யார் கண்டது, சொர்க்கத்தை’ — என்று கேட்டுவிடவேண்டாம் — நானாகக் கற்பனை செய்துகொண்டதன் விளைவு, இக்கட்டுரை.

பூலோகத்திலே ஒரு புரட்டன், மந்த மதியினருக்குச் சந்தான சப்ரமஞ்சம் அமைத்துத் தந்தான்! அவன் போன்றோர் நடாத்திய மாயம், மந்திரம் எனும் புரட்டுகளினின்றும் மக்கள் சமுதாயம் ஆராய்ச்சித் துறையிலே அடி எடுத்துவைக்கப்பட்ட கஷ்டங்களைக் காட்டும் வரலாற்றினைப் படித்தறியும் ஆர்வம் எழவேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை தந்திருக்கிறேன்.

பாவையின் பயணம் — ஒரு நாடகத் தொடர்; மண வினைக்குப் பக்குவம்பெற்றுள்ளோருக்குத் தேவையான நற்கருத்தளிக்கும் நோக்குடையது.

புதிய பொலிவு — கிராமியக் காதை; இருவேறு உலகிடை உள்ளோருக்குள் ஏற்படும் கூட்டுறவும், அமைந்துவிடும் சூழ்நிலையும், விளக்கமாக உதவும்.

மேலதிகாரி — இன்றைய சூழ்நிலையில் நம்மவர்கள் “அவாளிடம்’ சிக்கிப் படும்பாட்டினை எடுத்துக்காட்டுவதாகும்.

மற்றுமுள்ளவைகள், நான் இம்முறை தரவேண்டும் என்று எண்ணி எழுதியதில் ஒரு பகுதிதான்!

தம்பி! சம்பத், “கல்கத்தா பாதை’யில் சென்று வந்திருக் கிறான் — என்னைக் காஞ்சியில் கைகடுக்க எழுதிக்கொண்டிருக்கச் செய்துவிட்டு; இருக்கட்டும்; பாடம் கற்பிக்காமலா போவேன்!

நண்பர்கள் பலர் அனுப்பி உதவிய, “விருந்து’, மலர் சிறிய அளவானதால், வைத்து அளிக்க முடியாமல் போய்விட்டது — இப்போதைக்கு!

செங்கரும்பு, பலா, மா, வாழை, செந்நெல், ஆவின்பால், புத்தாடை — ஏதேதோ தரலாம், தம்பி, உனக்கு! ஆனால் என்ன செய்வது? இவைகளை எல்லாம்விட, என் “அன்பு’ இம்மலர் மூலம் உனக்குக் கிடைத்திடச் செய்தலே முறை என்று எண்ணினேன். உன்னிடம் கூறவேண்டுமென்று எண்ணிய கருத்துக்கள் பல; பலப்பல; ஒரு சிலவற்றைத்தான் கதை, கட்டுரை வடிவாக்கி அளித்திட முடிந்தது. இவற்றினைப் பார்க்கும்போது, உன் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் வேறு பல நற்கருத்துகளை ஒழுங்குபடுத்தி, வரிசைப்படுத்தி, நற்செயலுக்கு உறைவிடமாக்கி, நமது நாட்டினுக்கு நல்கி, பொங்கலன்று காணும் மகிழ்ச்சி நாட்டின் பொதுமகிழ்ச்சி ஆவதற்கான நற்பணியாற்றிட வரவேண்டும் என்று அழைக்கிறேன் — உரிமையுடன் — நம்பிக்கையுடன்.

“இன்று கூடவா, அண்ணா!’ என்றா கேட்கிறாய்?

சரி, சரி, போ! போ! அதோ பொங்கும் இன்பத்தைப் பெறு; பொலிவு கண்டு அகமகிழ்ந்திரு; உள்ளம் நிறைந்திடும் உவகை யுடன் உரையாடிக் களிப்புற்று இரு; நின் இல்லம் இன்பப் பூங்காவாகத் திகழட்டும்; அங்கு அறிவு மனம் கமழட்டும்; அன்பு பொங்கட்டும்; அறம் தழைத்திடத்தக்க அரும்பணியாற்றிடும் ஆற்றல் எழட்டும்.

பொங்கற் புதுநாளன்று என் அன்பு நிறைந்த வாழ்த்துதலை வழங்கி மகிழ்கிறேன்.

அதோ, பெற்றோர் அழைக்கிறார்கள் போலும் சென்று, செங்கரும்பின் சாறன்ன அன்புரை பெற்று இன்புற்றிரு!

அண்ணன்,

அண்ணாதுரை,

14–1–1956

மூலக்கட்டுரை

http://www.annavinpadaippugal.info/kadithangal/vizhakoalam.htm

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

No responses yet

Write a response