விடுதலை வீரன் ரூஸோ! (Jean-Jacques Rousseau)

SG
4 min readJun 6, 2019

அண்ணாதுரை, திராவிட நாடு , 9-5-1943

(மேதினி எங்கும் கொண்டாடப்படும், மேதின விழா வாரத்தில், குறிப்பாக பிரான்சுக்கும், பொதுவாக ஐரோப்பாவுக்கும், விடுதலை உணர்ச்சியை ஊட்டிய விடுதலை வீரன் ஜீன் ஜாகஸ் ரூசோவின் வரலாறு, பயன்தரும் விருந்தாகுமென்று அதனைத் தந்திருக்கிறோம்.)
* * *

பேனா, வாளைக்காட்டிலும் அதிக வல்லமை வாய்ந்தது என்றார் ஒரு மேனாட்டு மேதாவி. எத்தனையோ அறிஞர்கள் தங்களுடைய எழுத்து வன்மையால் அரசாங்கங்களை கவிழ்த்திருக்
கிறார்கள்; பொது மக்களுடைய எண்ணங்களை அசைத்து ஆட்டி இருக்கிறார்கள்; சிறியார்களைப் பெரியார்களாக்கி இருக்கிறார்கள். பெரியார்களைச் சிறியார்களாக்கியிருக்கிறார்கள். அமெரிக்காவில் எழுதப்பட்ட ‘அங்கிள் டாம்ஸ் காபின்’ என்னும் நாவல், நீக்ரோ அடிமைகளை விடுதலை செய்வதற்காகப் பெரிய உள் நாட்டுக் குழப்பத்தை உண்டு பண்ணியது. ‘மார்க்ஸ்’ எழுதிய நூல் இன்றைய ருஷ்யாவின் நிலைமைக்கும், ருஷ்யப் புரட்சிக்கும் காரணமாகும். ‘வால்டேர், ரூஸோ’ என்பவர்களால் இயற்றப்பட்ட புத்தகங்கள் பிரஞ்சுப் புரட்சியைத் தோற்றுவித்தன. எண்ணங்கள் அபாரசக்தி வாய்ந்தவை. அவைகளால் ஜனங்களுடைய நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. இத்தகைய வல்லமை வாய்ந்த எண்ணங்கள் வெளியிட்டுப் பிரஞ்சு தேசத்துப் புரட்சியை உண்டாக்கியவர்களில் ரூஸோவாக ஒருவர். அவர் பெரிய இராஜீய ஞானி. அவருடைய புத்தகங்களைப் பிரான்சு தேசத்து மக்கள் ஆரஞ்சிப் பழங்களை வாங்குவதைப்போல் வாங்கினார்கள். ‘சன்யாட்சென்’ என்னும் வீரரால் சைனா சுதந்திரமடைந்ததைப் போலும், ஜக்லுல் பாட்சாவால் எகிப்து இன்பமடைந்ததைப் போலும், திவாலராவால் அயர்லாந்து சுயேச்சை பெற்றதுபோலும், வாஷிங்டனால் அமெரிக்கா பூரண விடுதலை அடைத்ததைப் போலும், பிராஞ்சு நெப்போலியனால் கொடிய அரசர்களின் உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் சுபிட்சம் அடைந்தது. நெப்போலியனுக்குப் பக்கத் துணையாயிருந்தவைகளில் ரூஸோவின் நூல்களும் சிலவாகும்.

ரூஸோ பிறப்பதற்கு முன் ஐரோப்பாக் கண்டத்திலுள்ள நாடுகளில் கிறிஸ்து மதப் பித்தம் அதிகரித்திருந்தது. மதத்தின் பெயரால் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் செய்த அக்கிரமங்கள் கணக்கிலடங்காதவை. மத குருவாகிய போப்பும், இதர குட்டிப் பாதிரிகளும் இட்டதுதான் கட்டளை. இது போதாதென்று அரசர்களும், பணக்காரர்களும் ஏழைகளை இம்சித்து வந்தனர். மக்கள் எல்லாச் சுதந்திரங்களையும் இழந்து, மூடநம்பிக்கைகளில் ஆழ்ந்து அடிமைகளுக்கும் கேவலமாய், விலங்கினத்துக்கும் தாழ்ந்தவர்களாய் காலத்தைக் கடத்தி வந்தனர்.

இத்தகைய நிலையில், ரூஸோ 1712-வது வருஷத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ‘ஜினிவா’ நகரத்தில் காலத்தை அளக்கும் கருவிகள் தயார் செய்பவர். சிறுவயதில் ரூஸோ கல்வி கற்காது, எத்தொழிலிலும் பழகாது நன்னெறியற்றவர்களோடு சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். இதனால் அவர் ஆரோக்கியம் குன்றி மனோவியாகூலத்தில் மூழ்கியிருந்தார். இத்தனை கஷ்டங்களைப் பெற்றிருந்த போதிலும் யாரையும் அலட்சியம் செய்யாது வாழ்ந்து வந்தார்.

அவர் நூல்கள் இயற்றத்தொடங்கியவுடன், அவருடைய தீவிர எண்ணங்களைக்கண்டு அரசர்களும் முதலாளிகளும், மத குருக்களும் நடுநடுங்கினர். பொது ஜனங்களோ அத்தியந்த அன்போடு அவரை ஆதரித்தனர்.

அவர் நூல்களில் அரசர்கள் ஆகாயத்தைப் பொத்துக்கொண்டு ‘பொத்’தென்று பூமியில் குதித்து விடவில்லையென்றும், மனிதர் யாவரும் சரிசமமானவர்களே யென்றும், ஒருவருக்கிருக்கும் சுதந்திரங்கள் எல்லோருக்கும் இருக்க வேண்டுமென்றும் எழுதினார். கிறிஸ்து மதத்திலுள்ள அக்கிரமங்களைத் தீவிரமாகக் கண்டித்தார். ஆயிரக்கணக்கான நூல்கள் சில மணிநேரத்தில் வியாபாரமாயின.

‘நியூஹெலாயிலா’ என்ற நாவலே அவருடைய நூல்களில் முதலாவதாகும். பிராஞ்சு தேசத்தில் மாத்திரமின்றி, ஜெர்மனியிலும் அவருடைய கீர்த்தி பரவிற்று.

பெண்கள் அவருடைய கைப்பட்ட காகிதத்தை முத்தமிடவும், அவர் நீர் அருந்திய பாத்திரத்தில் நீர் அருந்தவும் ஆசைப்பட்டனர். அவருடைய எழுத்துக்கள் மக்களுடைய நெஞ்சில் எழுச்சியையும், வீரத்தையும் மூட்டிவிட்டன. 1762வது வருஷத்தில் அவர் ‘சோஷியல் கான்ட்ராக்ட்’ என்ற நூலை எழுதினார். அதுதான் அவருடைய நூல்களில் முதன்மையானதாகும். ஜனங்களுடைய சித்தமே சட்டமாகும். எவ்வரசாங்கத்தில் மக்கள் விருப்பம் குறைகிறதோ, அப்போது அவ்வரசாங்கத்தை அழித்துத் தங்கள் இஷ்டம்போல் வேறு அரசாங்கத்தை அமைக்கலாம்; பிரஜைகளுக்காக அரசாங்கமேயொழிய அரசாங்கத்துக்காகப் பிரஜைகள் இல்லை என்பது அவருடைய ராஜீய தத்துவம் ஒரு கிறிஸ்தவனுக்குக் குழந்தையாய்ப் பிறந்ததினால் அதுவும் கிறிஸ்து மதத்திலேயே இருக்க வேண்டும் என்னும் நிர்ப்பந்தம் கூடாது என்று முழங்கினார்.

இத்தகைய தலைகீழ்ப் புரட்சியை உண்டாக்கும் அவர் நூல்களைப் பறிமுதல் செய்யவும் அவரைக் கைது செய்யவும் அரசாங்க ஆணை ஏற்பட்டது. ரூஸோ உடனே பிரான்சு நாட்டை விட்டு வெளியேறினார். அவர் எந்த எந்த தேசத்துக்குப் போனாரோ, அந்த அந்த தேசத்து அரசர்களும், பாதிரிகளும் அவரைக் கைது செய்யும்படி உத்தரவு போட்டனர். ஆகவே அவர் ஓர் இடத்தில் நிலைத்திராமல் எட்டு வருஷங்கள் நாடோடியாகத் திரிந்தார். பிறகு தன் நாட்டில் வசிக்கலாமென ‘பிரஷ்யா’ அரசன் அனுமதித்தான். ‘பிரடரிக் - தி - கிரேட், என்னும் அவ்வரசன் பரந்த நோக்குடையவன், ரூஸோவுக்கு வேண்டிய உதவிகள் செய்வதாகவும் வாக்களித்தான். ஆனால் ரூஸோ அவ்வரசனுக்கு எழுதிய கடிதத்தில் ‘நான் அரசர்களுக்கு விரோதமானவன்’ அவர்களைக் கண்டித்து எழுதியுள்ளேன். இன்னும் எழுத உத்தேசித்திருக்கிறேன். ஆகையால் உங்களுடைய உதவி எனக்குத் தேவையில்லை. அரசர்களிட மிருந்து ஒரு சல்லியும் கை நீட்டிப் பெறமாட்டேன். எனக்குச் சம்பாதித்துக் கொள்ளத் தெரியும் என்று குறிப்பிட்டார். கடைசியாக ‘மோடியா’ என்ற கிராமத்தில் ஒரு சிறிய குடிசையைக் கட்டிக்கொண்டு தன்னுடைய வாழ்க்கைத் துணைவியோடு வசிக்கலானார். அவருடைய புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுபவர் மாதம் ரூ. 16 அனுப்பிக் கொண்டிருந்தார், அத்துடன் அவரும் அவருடைய வாழ்க்கைத் துணைவியாரும் ஜரிகை தயார் செய்து விற்று மாதம் 5 அல்லது 6 ரூபா சம்பாதித்து வந்தனர்.

அந்தச் சிறிய குடிசையிலும் எளிய வாழ்க்கை நடத்தவிடாது கிறிஸ்துவ மத குருக்கள் துரத்தியடித்தனர். ரூஸோவுக்கு நாஸ்திக னென்னும் பட்டஞ்சூட்டிப் பாமர ஜனங்களிடையே அவருக்கு விரோதமாக ஆவேசத்தைக் கிளம்பி அவரை வெளிக்கிளம்பும்படி செய்தனர். ரூஸோ அதைவிட்டு ஒரு தீவில் வசிக்கச் சென்றார். அத்தீவிலுள்ள அரசாங்கத்தாரும் பதினைந்து நாட்களில் வெளியேற வேண்டுமென அவருக்கு உத்தரவிட்டார்கள். ரூஸோ அதையும் விடுத்து எங்கேயோ புறப்பட்டுப் போகும் வழியில் பாரிஸ் நகரில் தங்கினார். பொது ஜனங்கள் இடித்துத் தள்ளிக்கொண்டு அவரைப் பார்க்க வந்தார்கள். அரசர், ரூஸோவுக்கு விரோதமாயிருந்தாலும் மந்திரிகள் அவரை இரகசியமாக வந்து கண்டு தரிசித்தனர்.

இருபது நாட்களுக்குப் பின் ரூஸோ இங்கிலாந்து சென்றார். அங்கே வித்வான்களும், பொது மக்களும் குதூகலத்துடன் வரவேற்று கௌரவமளித்தனர். அங்கும் பல பேரோடு சச்சரவேற்படவே மீண்டும் பிரான்சுக்குத் திரும்பினார்.

அப்போது பிரான்சு தேசத்தில் ரூஸோவுக்கு அளவு கடந்த மதிப்பு ஏற்பட்டுப் போயிருந்தது. தலைவர்களும், பொது ஜனங்களும் ரூஸோவின்பால் கொண்டுள்ள அத்தியந்த அன்பைக் கண்டு அரசர் அவர் விவகாரத்தில் தலையிடுவதை மறந்தார். ரூஸோவும் பிரான்சிலேயே தங்கினார். கடைசியாக ஆரோக்கியங்குன்றி அவர் 1778-ம் ஆண்டு ஜுலை மாதம் 2-ந் தேதி ‘எர்மினன் வில்லி’ என்னும் கிராமத்தில் காலமானார். அவர் சவத்தைப் புதைக்க கிறிஸ்தவக் கோவில்களில் ஒரு மத குருவும் இடந்தரவில்லை. சவத்தைப் புதைக்கவும் ஒரு மதாச்சாரியும் வரவில்லை. ரூஸோவின் சிநேகிதர்களாகக் கூடி ஒரு தீவில் அவரை அடக்கஞ் செய்தனர்.

ரூஸோவைத் நெருப்புக் கொழுந்து விட்டு எரிந்து ஜனங்களுடைய உள்ளத்தில் கொதிப்பை உண்டாக்கி அதன் பயனாய்ப் பெரும் புரட்சியொன்று பிரான்சில் தோன்றியது. அவர் இறந்த 16 வருடங்களுக்குப் பின் அரசர் அழிந்து, அவர் கொள்கைகளை அனுசரித்த ஆட்சி தோன்றியபோது, பொது ஜனங்கள் விருப்பத்தின் படி பீரங்கிகளின் முழக்கத்துடனும், வாத்திய கோஷங்களுடனும், ஜெய கீதங்களுடனும் அவர் எலும்புகளைத் தீவினின்றும் எடுத்து வந்து பாரிஸ் நகரத்தில் பெரிய மகான்கள் அடக்கம் செய்யப் பட்டிருக்கும் இடத்தில் அரசாங்கத்தார் புதைத்தனர்.

ரூஸோவின் உடல் அழிந்துபோய் விட்டாலும், அவருடைய எண்ணங்கள் இன்னும் உயிரோடிருக்கின்றன. அவைகள் என்றென்றும், மனிதர் ஹிருதயங்களில் உயிரள்ளவையாக விளங்கும். இன்று ரூஸோ உயிருடனிருந்தால் தன்னுடைய கொள்கை உலக முழுதும் பரவி விளங்குவதைக் கண்டு ஆனந்த மடைவார், அவர் எழுதிச் சென்ற ஒவ்வொரு வார்த்தையும் பெரும் மந்திரங்களாகத் தற்போது விளங்குகின்றன பழைய மந்திரங்களுக்குப் பதிலாக உலகமெங்கும் இப்போது இவைகள்தான் ஜபிக்கப் படுகின்றன.

9.5.1943

Source : http://www.annavinpadaippugal.info/katturaigal/viduthalai_veeran_rooso.htm

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

No responses yet

Write a response