வாழ்விலொரு திருநாள்!

அண்ணாதுரை,திராவிட நாடு பொங்கல் மலர் , 1950

SG
6 min readJan 20, 2020

அதோ பொன்னிற ஆடையைப் போர்த்தியது போல, வயிலிலே கதிர் — உழவன் சிந்திய வியர்வைத் துளிகளைக் கணக்கிடுவது போல ‘நெல்’ மணிகளுடன் — சாய்ந்து சாய்ந்து அசைந்தாடுகிறது! அதைக் காணும் உழவன் உள்ளமும் தனது உழைப்பின் பயன் உருவாகி நிற்பது கண்டு விம்மி, விம்மி எழும்புகிறது மகிழ்ச்சியால்!

எழுசுவை, விழிவிருந்து ஆகியவற்றை ஏந்திக் கொண்டு, வாயிலிலே காத்துக்கிடக்கிறாள். அவள், தன் கணவனுக்காக — கணவன் களைத்துக் கால் சோர்ந்து தள்ளாடி வீடு சேர்ந்த காட்சியையும் கண்டவள் அவள். இன்று, அவன் இளங்காளையெனத் துள்ளிவருவதையும் காணுகிறாள். அவளது நிலவு முகத்திலே, மின்னல் போலப் புன்சிரிப்பு மலர்கிறது. அந்த மகிழ்ச்சியிலே, ‘கண்ணா, கண்ணா’ என்று அன்பு ததும்ப அழைக்கிறாள் தனது அருமைச் செல்வனை. அவனோ கட்டிக் கிடக்கும் கன்றுடன் ‘கதை’ பேசிக்கொண்டிருக்கிறான், அதன் கழுத்திலே கட்டப்பட்டிருக்கும் வெண் கலமணியை ஆட்டி, ‘பொங்கலோ, பொங்கல்!’ என்று தன் மழலை மொழியில் கூறுகிறான். இதைக் கண்ட கணவன் மனைவியர் இருவர் இதயங்களிலும் இன்பம் எழும்புகிறது. பூரிக்கின்றனர்; புளகாங்கித மடைகின்றனர்!
***

வாழ்விலொரு திருநாள், இன்றைய பொங்கல் நாள்! எங்கும் பூரிப்பும் புதுமகிழ்வும் பூத்துக் குலுங்குகிறது! உழவன் மனைகளிலே மட்டுமல்ல, எங்கும் இன்று இன்பமும் எக்களிப்பும் நிலவும்! ‘வயலிலே கதிர் — தனது வாழ்க்கையிலே மகிழ்ச்சி’ என்று எண்ணுகையிலே உழவன் பூரிப்பான்; அவன் மனைவி மக்கள் எல்லோரிடமும் இன்பம் நிலவும்! அதே வேளையில் விதை விதைத்த நாள் முதல், ஏர்பிடித்து, நீர்பாய்ச்சி, நிலந்திருத்தி, நடவுபோட்டு, பாதுகாத்து, ‘கதிரைக்காண அவன் பட்ட கஷ்ட கஷ்டங்கள், துன்ப நிகழ்ச்சிகள் எல்லாம் மின்னி மறையும்!

விதைக்க விதையில்லையேயென எண்ணி ஏங்கிப் ‘பெரிய பண்ணையாரிடம்’ சென்று பல்லிளித்தது. ‘ஏடா, மூடா!’ என்ற அர்ச்சனையுடன், ‘ஆறு கலமா — சரி தருகிறேன். களத்துமேட்டுக்குக் கணக்கன் வருவான். கறாரா அளந்து விட்டுடணும், பன்னிரண்டு கலம்’ என்ற உத்தரவுடன் அவர் உதவி செய்தது. வேறு வழியில்லையே என்று, ‘ஆகட்டும், ஐயா!’ என்று அவன் திகைத்து நின்ற காட்சி, பின் வரப்பு கட்டும்போது ஏற்பட்ட சண்டை, நீர் பாய்ச்சத் தான் நடத்திய போராட்டம், பக்கத்து வயல் பரமனுடன் தினசரிதான் நடத்திய ‘பலப் பரீட்சை, வளர்ந்த பயிரை மேய்ந்த மாட்டைத் தான் அடித்து விரட்டியதால் வந்த வம்பு — இத்தனையும் அவன் இதயத்தில் எழும்பும்!

எனினும், பயனைக் காணும் வேளை நெருங்கிவிட்டது, நெல் அதோ நம் வயலில், என்ற எண்ணத்தால் அவன் மனம் மகிழும்! இந்த மகிழ்ச்சியில் தான் பட்ட கஷ்டத்தைத் துடைத்துக் கொள்வான் — துயரம் இனி இல்லை என்ற எண்ணம் தொல்லைகளை மறைக்கும் இத்தகைய நாள், இன்று!

வெள்ளி முளைத்ததா என்று பார்ப்பான். எருதுகள் இரண்டையும் ஓட்டிக்கொண்டு, குளிர் நடுக்க, பனி தன்னை நனைக்க, இது பற்றிய சிந்தனை சிறிதுகூட எழும்பாது. இன்று எத்தனை ‘காணி’, உழுதுவிடலாம் என்ற ஒரே எண்ணத்துடன் சென்று, வயலில் இறங்கி, அவன் பாடுபட்டுக் கண்ட — காணப்போகும் — பயனை எண்ணி, இன்று அவனுள்ளம் உவகையால் பூரிக்கும்!
***

பொங்கல்-உழவர் விழா! வாழ்விலொரு, திருநாள் என்று போற்றிச் சிறப்பிக்கப்படும் இந்நாள், புராணப் பெருமை கொண்டதன்று. நாட்டு வாழ்வை, அலைத்துக் குலைக்கும் நச்சுக்கொள்கையும், நடைப் பிணமாக்கும் போக்கும் உடையதன்று. ‘மவராசன் பொங்கல்!’ என்று கூறுவதுண்டு கிராமப்புறங்களில்! உண்மையும் அதுதான்; வாழ்வு சிறக்கும் நிலையில், உழைப்புக்குப் பயனுண்டு என்ற உட்பொருளையும், “விதைத்தவர் அறுத்திடுவார்! விழிப்போரே நிலை காண்பார்!!” என்ற உண்மையையும், உணர்த்துவது பொங்கல் நாளாகும். பொங்கல் விழா — ஏனைய திருநாட்களைப் போன்றதன்று. வீண்விழாவன்று, வியர்வையின் பெருமையைச் சொல்வது! வெற்றி, கானல் நீராகாது — கஷ்டத்தையும் நஷ்டத்தையும் தாங்கினால் விளைவு பயன்தரும் என்பதை உணர்த்துவது! உயர்வெண்ணமும், உழைப்புச் சக்தியுமே உலகை மகிழ்விக்கும் என்று உரைப்பது! உழைப்பு பலன் தந்தால், உள்ளம் பூரிக்கும் என்ற எண்ணத்தைத் தெரிவிப்பது!

இன்பம் — உழைப்பின் அறுவடை, உழைப்பே மக்கள் செல்வம், உழைத்துப் பயன் பெறு. ஆனால், பயன் கிட்டியதும், பருந்தாகிவிடாதே. நெருங்கியவரைக் கொத்தித் துரத்தாதே. காக்கையைப் பார்! சிறு கவளத்தையும் தன் சகாக்களோடு சேர்ந்துண்ணும் சிறப்பைப் பார்! என்று நமக்குக் கூறாமல் கூறி, வாழ்வதற்கு உழை, உனது உழைப்பு உனக்காக மட்டுமன்று, உலகுக்காகவும் இருக்கட்டும் என்ற தத்துவ விளக்கம் தரும் திருநாள் இது.

வாழ்க்கை — ஒரு சுந்தரமான சொல், ஆனால், சுகந்தேடிகள் இதைப்பற்றிச் சிறிதும் சிந்திப்பதில்லை! பிறந்தோம் — பிறர் இருக்கின்றனர் உழைக்க — வந்ததை வைத்து, உடல் அலுக்காமல் வாழ்வோம், அதுதான் நாம் பிறந்ததன் பயன் என்ற ஊதாரிக் கொள்கை, அவர்கள் உள்ளங்களிலே ஊறிப்போயிருப்பதால்!

மாயப் பிரபஞ்சமிது பொல்லாது, மானிட வாழ்விது நில்லாது, காயமே இது பொய், காற்றடைத்த பை என்ற குருட்டு வேதாந்தம், இருட்டுக் கொள்கை, மக்களுடைய மனத்திலே இடம் பிடித்து, அமர்ந்து, ஆட்சி நடத்தும் காரணத்தால், பலருக்கு — வாழ்க்கை என்பது பற்றிச் சிந்திக்கும் நினைவுகூட ஏற்படுவதில்லை. வாழ்க்கை என்பது என்ன இது எப்படியேற்பட்டது, நாம் எல்லாம் யார்; மனிதர், மனிதவர்க்கம் என்றெல்லாம் கூறுகிறோமே அப்படியென்றால் என்ன என்பது பற்றி எண்ணியதுகூட இல்லை பலர்.

விரிந்து பரந்து கிடக்கும் கடல், அதைக் கிழித்துச் செல்லும் நாவாய், விண்ணை அளாவி நிற்கும் மலை, அதைத்தொட்டு முத்தமிடும் ஆகாயவிமானம், சரிந்து கிடக்கும் பள்ளத்தாக்கு, அங்குச் சலசலவெனச் சப்தம் எழுப்பி உருண்டோடும் அருவி, அதிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம்; ஒளிபரப்பி உயரத் திரியும் கதிரோன், அவன் கிரணங்களால் மக்களுக்கேற்படும் நன்மைகள், நிலவு எழுப்பி நெஞ்சைக் குதூகலிக்கும் சந்திரன், அதன் நிலவொளி பூமியின் மேல் விழுவதன் வகை எப்படியென்ற ஆராய்ச்சி, இவை பற்றி வறட்டுவேதாந்திகள் அறிய முனைந்ததில்லை. முடியாதது என்பதனால் அல்ல! ஏன், வீணாகச் சுகபோக நேரத்தைச் செலவழிக்க வேண்டும்? பணங் கேட்டால் கொடுக்க மக்கள், பணிபுரியக் காவலர்கள் காத்துக்கிடக்கையில், இந்த ‘மாயா’லோக வாழ்வைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும் என்ற சோம்பேறித்தனத்தால், சுயநலத்தால்!

வாழ்க்கை — வளர்ந்துகொண்டே போகும் ஒரு மலர்த் தோட்டம். அதை, ஆராய ஆராய விதவிதமான, அபூர்வமலர்கள் — அதிசயிக்கத்தக்க முடிவுகள் கிடைக்கும்! ஆனால், இந்த “அறிவுப் பணிக்கு முட்டுக்கட்டையிடும் திருத்தொண்டை, தேவதூதர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டோர், தெய்வத்தின் பிரதிநிதிகள் என்று சொல்லித் திரிவோர், செய்தனர் — செய்தும் வருகின்றனர். அதற்கு அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து வருபவை, புராணங்கள், பொய்க்கதைகள், விதி, எல்லாம் அவன் செயல் என்ற போலிவாதம் ஆகியவையாகும்.

இவற்றை வளர்த்து, மக்களை இருட்டுக் குழியில் வீழ்த்தும் வீண் விழாவன்று — பொங்கல் திருநாள். இது உழைப்பின் விழா! உழைப்புக்கும், வாழ்வுக்கும் உள்ள தொடர்பை, தனிச்சிறப்பை, இன்றியமையாமையை எடுத்துக் காட்டும் விழா! ஏர் பிடித்து, தானும், ஏனையோரும் வாழப் பாரின் பசிதீர்க்கும் பணியில் ஈடுபட்டிருப்போரின் விழா! கையையும், மண்வெட்டியையும், மாட்டையும் நம்பியே வாழ்க்கையை நடத்திச் செல்லும் உழவரின் விழா!

எனவே, எங்கும் களிப்பும், இன்பமும், குதூகலமும் நிலவுகிறது; எல்லோர் இதயமும் இன்று பூரிக்கிறது!
***

இயற்கையைப் பயன்படுத்தி, வயலாக்கி, வரம்பு கட்டி, விதை விதைத்து, பயிர் வளர்த்து, கதிர் காணும் போது, களிப்புடன் கொண்டாடும் இவ்விழா, உழைப்பாளிகளின் வாழ்விலொரு திருநாள்! வறுமை மறந்து, துயரத் தொல்லை நினைவில் எழும்பாது. தன் உழைப்புக்கான பயனை அனுபவிக்கப் போகிறோம் என்று இன்று ஆனந்தமடைகிறான் பாட்டாளி.

நைந்த உள்ளம், நலிந்த வாழ்வு, சிதைந்த குடிசை, சீரழிந்த மக்கள், விம்மும் வேதனை, ஆகியவற்றினூடே, இந்த நாள் அவருக்குத் திருநாளாக இருக்கிறது!

ஆண்டு முழுவதும் உழைத்துழைத்து உருக்குலையும் உழைப்பாளிகள் வாழ்விலொரு, திருநாள், இன்று! ஆனால், வாழ்க்கை முழுவதையுமே திருநாளாக் கொண்டாடிக் கோலாகலத்துடன், வாழ்பவர்கள் இருக்கிறார்கள். அதுவும் மேனிவாடாது, உண்பதைத் தவிர வேறு ‘உழைப்பு’ என்பதையே அறியாது, சீட்டாட்டத்திலும், சிங்காரிகளின் பேச்சிலும், காலத்தைப் போக்கிடும் கனவான்கள்.

உழைப்பவன், தன் வீட்டிலே ஒருநாள் பொங்கும் சர்க்கரைப் பொங்கலைக்கண்டு, தன் மனைவியின் முகத்திலே எழும்பிய புன்சிரிப்பைக் கண்டு, குழந்தையின் குதூகலத்தைக் கண்டு மகிழ்கிறான்! இரண்டு கரும்பையும், நான்கு வெல்லக்கட்டியையும் மிராசுதாரர்களின் ‘கருணை’யால் தனக்குப் பொங்கல் பரிசாக அளிக்கப்படுவதைக்கண்டு, மனமகிழும் விவசாயி கூட இருக்கிறான் நாட்டில்! இன்பம் — உழைப்பவன் இதயத்தில் இன்று எழும்புகிறது, எத்தனையோ இன்னல்கள், துயரங்கள் ஆகியவற்றையெல்லாம் தாண்டி!

பொங்கல் திருநாள் முடிந்ததும் — மறுநாளே அவனது வாழ்வு அரிவாளும் கையுமாய், களத்துமேடும் அறுவடை வயலுமாய் ஆகிவிடும். மீண்டும், உழைப்புச்சக்கரம், உருள ஆரம்பித்து விடும்!

ஆனால், பொங்கல் உண்டு, பட்டாடையுடுத்தி, நகர்ப்புறத்தில் தனது காரில், உல்லாசமாகப் பவனி வருபவர்களின் — வாழ்விலே பொங்கல் நாளில் மட்டுமன்று, வாழ்நாள் முழுமையுமே இன்பந்தான்! அவர்களுக்கும் ‘கவலை’ உண்டு. அது, உழவனின் இதயத்திலே எழும்புவது போன்ற தன்று. ஏன் கூலி அதிகம் கேட்கிறான்? இன்றைக்கு அவன் எப்போதும் போல உழவில்லையா? அது ஏன்? வண்டியோட்டும் வரதன் எருவைக் கொண்டுபோய்க் கொட்டவில்லையாமே அது ஏன் — என்பன போன்றவை.
ஏழையின் இதயத்திலே எழும்பும் வேதனைக்கும் “இவர்கள்” எண்ணத்திலே மின்னி மறையும் கவலைகளுக்கும் வித்தியாசம் உண்டு — மலைக்கும் மடுவுக்கும் உள்ளதுபோல! இந்த வித்தியாசம், என்று தொலையும், எல்லோரது வாழ்வும் எப்போதும் திருநாளாவது எப்போது என்ற கேள்விகள் விழாவைக் கண்டு, மகிழ்ந்து நிற்கும் நமது இதயத்திலே எழும்புகின்றன!

நகரத்துக்கும் — கிராமத்துக்கும் உள்ள வித்தியாசங்கள், மேடுபள்ளங்கள் விரிந்துகொண்டே போகின்றன. நகரத்தில் வாழும் மக்களிடையே, நல்வாழ்வு இருப்பதாக விவசாயி எண்ணுகிறான்-உண்மையுங்கூட! தனது சேறுபடிந்த உடல், கந்தலான துணி, எண்ணெய் காணாத தலை ஆகியவற்றுடனே இருக்கும் ‘பட்டிக்காட்டு’ப் பரமனுக்கு, காலர்ச்சட்டை, வெள்ளை மில்வேட்டி மிடுக்கான நடையுடன் வரும் ‘பட்டணத்து’ப் பரமசிவம் பிள்ளையைக் காணும்போது, நாமும் ‘ஏரை விட்டுவிட்டுப் பட்டணம் சென்றுவிட்டால்…’ என்ற எண்ணம் எழும்பாமலிருக்காது. இன்று நாட்டில் இந்த நிலையின் காரணமாகப் பயிர்த்தொழிலை வாழ்வின் கடமையெனக் கொண்டோர்களின் பயணம் வரவர, நகர்ப்புறம் நோக்கிவளர்ந்து கொண்டேயிருக்கிறது! இது, சில்லரை விஷயமன்று, சிந்தனையைக் கிளறக்கூடியது!

உழவுத் தொழில்-இந்நாட்டின் முக்கியத்தொழில், எண்ணற்றோர் இப்பணியை மேற்கொண்டிருக்கின்றனர். இந்தியா விவசாய நாடு என்று கூறும்போது, உள்ளத்திலே மகிழ்ச்சி அரும்பத்தான் செய்கிறது-ஆனால், அந்த விவசாயத்தின் நிலை என்ன?

எப்போதோ, இயற்கையைத் தன்னுடைய ஏவல் பொருளாக்கிக் கொள்ள மனிதன் கண்டுபிடித்த பொருள்கள்-ஏரும் கலப்பையும் அரிவாளும் தடியும் இன்னும் இருக்கின்றன. காலம் வளர்ந்துகொண்டேயிருக்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு திசையிலும், புதுமையிலும் புதுமுறையும் பூத்திருக்கிறது. ஆனால், அந்த மறுமலர்ச்சி, நாட்டின் முக்கியத் தொழிலெனக் கருதப்படும் பயிர்த்தொழிலோ மலரவில்லை! காளை மாட்டை யோட்டும் கந்தன், கதிரை அறுத்து அதைக் கட்டித் தூக்க, ‘வைக்கோல்புரி’யைக் கயிறாக்கும் கந்தன், களத்து மேட்டிலே ‘போராடி’ நடந்த மாடுகளை மட்டும் வைத்துப் ‘போராடும்’ பொன்னன், மண்வெட்டி தாங்கி மண்ணைக் கொத்திக் கிளறும் மன்னார்சாமி, விதையை ஓரிடத்தில் விட்டு அது நாற்று ஆனதும் பறித்து, நாற்றங்காலிலிருந்து, வயலுக்குக் கொண்டு சென்று, நடவு போடும் நல்லான் — ஆகியோரின் உழவு முறைகளிலே புதுமை உதயமாகவில்லை! ஆண்டாண்டுதோறும், பரம்பரை பரம்பரையாக இருந்து வரும் பழக்கமும் வழக்கமுமே, நீடிக்கிறது. நிலையில் மாற்றம் நிகழத்தக்க அறிகுறிகளும் இல்லை!

உழவனின் வாழ்விலே மட்டும் என்றன்று, அவனது உழைப்பு, அறுவடை எல்லாவற்றிலும் பழைமை தாண்டவமாடிய வண்ணமே உள்ளது!

பழைமை மீது, ஏழை உழவனுக்குள்ள மோகமும் ஆசையும் மூட நம்பிக்கை, மூதாதையர் வழி, என்ற பேச்சுகள் மூலம் வளர்க்கப்படுகின்றன- வஞ்சகம் நெஞ்சிலும், வாயில் ‘சிவாய நம’ என்ற சொல்லும், கூறிக்கொண்டு நிற்கும் சனாதனத்தால், வைதிகத்தால்!

இதன் விளைவாக — வாழ்க்கையின் தத்துவம் — அவன் இதயத்திலே எழுப்பிவிடப்படவில்லை. உலகத்தை உழவன், தனது ஏர்முனையிலேயிருப்பதாக எண்ணுகிறானேயொழிய, எத்தனையோவித இரகசியச் செய்திகளை அடக்கி வைத்திருக்கிறது என்று அவன் உணர வில்லை; உணர்த்தவும் வழியில்லை. அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவும் இல்லை! இதன் விளைவாக அவனது வாழ்வு பழைமைப் பாதையிலே உருள ஆரம்பிக்கிறது, முன்போலக் கொஞ்சங்கூட மாறாமல்.

பொங்கல் திருநாளில் இதுபற்றி நாம் நினைக்கும்போது, இதுபற்றிய விளக்கத்தைச் சிந்திக்கும் வேதனைதான் உருவாகிறது. பாரை வளமாக்குகிறான் ஏழை விவசாயி. ஆனால், பாரில் அவன் வாழ்வில் வறுமையும் பிணியுமே பிடித்தாட்டுகிறது!

இதுமட்டுமன்று. வளர்ந்துவரும் உலகில், மனிதக் கூட்டமும் முன்னைவிட இப்போது கோடிக்கணக்கில் அதிகமாகிக் கொண்டே போகிறது. அதன்விளைவாக, அவர்கள் வாழ்வதற்கான உணவும், இன்ன பிறவும் தேவைப்படுகின்றன. சமாளிக்க முடியாவிட்டால் பஞ்சம்! உணவைத் தவிர்க்கவோ முடியாது!! விளைவு- உணவுப் பஞ்சம், நெருக்கடி!

இன்று, இத்தகைய செய்திகள் நமக்குத் தினசரிப் பேச்சு போலாகி விட்டன. இராமநாதபுரத்திலே பஞ்சம் வரலாம். மதுரையிலே மழையில்லை; நெல்லையிலோ தொல்லை; கோவையிலே குமுறல் என்று இவை போல, ஆங்காங்கும் பயிர்த்தொழில் நிலைமை பற்றி வரும் தகவல்கள் கூறுகின்றன — இவற்றைக் காணும்போது, எதிர்காலம் பயங்கரமானதாகத் தெரிகிறது; படுகுழிபோலக் காட்சி அளிக்கிறது!

இந்த உண்மைநிலை நீடித்தால் ஏழையின் ஏர்முனை, என்ன கதியாகும்? நாடு காடாகவேண்டித்தானே ஏற்படும்! வயல் செழித்தால் வாழ்வுயரும்; வாழ்வு கொழித்தால் நாடு உயரும்; களையிருந்தால் பயிர் சாயும்; உழவன் நிலை ஒடிந்தால் வாழ்வு வீழும்! எனவே, வாழ்விலோர் திருநாளாகிய இன்று, இந்த எண்ணமும், இதன் விளைவாக ஏக்கமும் எழுகிறது. இதற்கெல்லாம் ஒரு முடிவு வேண்டாமா என்று இதயம் கேட்கிறது!

எனினும், புயலிலே சிக்கிய கடலுக்குச் சிறிது நிம்மதி கிடைத்தது போல, மழையில் நனைபவன் ஒரு நிமிடம் ஒட்டுத் திண்ணையில் உட்கார முடிந்ததுபோல, வேதனையிலே உழலும் உழவர்கள் வாழ்விலே இன்று ஒரு திருநாள்! இந்த நன்னாளில், எங்கும் இன்பம் பொங்கட்டும், அதற்கான நிலை மலரட்டும் என்று வாழ்த்தி, வளைந்த முதுகினரின் வாழ்வை நிமிர்த்த என்றும் நம்பணி உண்டு என்று உறுதிகூறி, வாழ்த்துகிறோம்! பொங்குக பொங்கல்! பொங்குக இன்பம்!!

(திராவிட நாடு பொங்கல் மலர் — 1950)

http://www.annavinpadaippugal.info/katturaigal/vaazhviloru_thirunaal.htm

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

No responses yet

Write a response