வந்தார்! தந்தார்!.

SG
2 min readSep 24, 2019

அண்ணாதுரை, திராவிடநாடு , 1944

ஆம்! வந்தார், தந்தார்! சாதுக்களும் சங்கராச்சாரிகளும், பண்டாரங்களும், பண்டாக்களும், வந்தால், சீரும் நகண்டும் தருவர். ஆசிகூறுவர், எதற்கு? காசுபறிக்க, கூரன் வந்தால் என்ன தருவான்? வீணருக்குச் சூராதி வீரருக்குப் புன்னகை!! டாக்டர் அம்பேத்கர், சென்னை வந்தார், கசையடி தந்தார் காரியக் கூத்தாடும் ஆரியருக்கு. புன்னகை தந்தார் பகுத்தறிவு இயக்கத்துக்கு. சென்னை ஆரியப் பத்திரிகைகள் அலறுகின்றன. அகராதியைப் புரட்டிப் புரட்டித் தேடுகின்றன. கடுமொழிகளுக்காக! டாக்டர் அம்பேத்கார், வந்தால், தந்தால், சிரித்தால். இந்த அந்திய காலத்திலே வாழும் ஆரிய முறையின் குரலைக் கேட்டு, வசை தந்தாரா என்றோம். ஆதாரமின்றியா எனில், இல்லை. வரலாற்று ஆதாரத்துடன் வகையுடன்!

பண்டை நாள்தொட்டு இன்றுவரை வேதகால முதற்கொண்டு வெள்ளையன் காலம்வரை நவநந்தர்கள் நாள்தொட்டு, நமது காலம் வரையிலே, இந்நாட்டிலே. பார்ப்பன குலம், ஆளும் வர்க்கமாக இருந்து மற்றவரை ஆட்டிப்படைத்து வரும் அநீதியை, டாக்டர் அம்பேத்கார் அழுகுற எடுத்துரைத்தார்.

ஆனால் கூட்டமே! ஆரியக்கூட்டமே! ஆளும் ஆண்மை அறிவுக்கு ஒவ்வாத சிந்தனையின் பாற்படாத செயலும் கொண்ட, உங்கள் செய்தியை டாக்டர் அம்பேத்கர் சென்னை வந்தார். நாட்டவருக்கு எடுத்துத் தந்தார். கேட்டீர் அம்மொழியை, வட்டிலே கூடிக்கொண்டு கூவுகிறீர், நாட்டு நிலை அறியாமல்! ஏட்டுச்சுரை இன்னமும் கறிக்காகும் என்று எண்ணுகிறீர். மாறுவீர் இனி, என்று கூறுகிறோம். சீறிப் பயன் இல்லை! இந்த டாக்டர் இப்படி எல்லாம் பேசுவதா என்று எழுதிப் பயனில்லை! கண்டனத் தலையங்கத்தைத் தீட்டிப் பயனில்லை. அவர் வந்தார், யாருக்கு எதைத் தரவேண்டுமோ தந்தார், சென்றார்!!

அவர் மட்டுமா, அறிவும் அதற்கு அரணாக ஆண்மையும் கொண்டவர் எவரும் உள்ளொன்று வைத்துப புறமொன்று பேசார்! ஆரியத்தால் விளைந்த கேடுகளை எடுத்துக் கூறக் கூசார்.

இன்றளவும் ஒருவனை ஒருவன் தொட்டால் தீட்டு என்று கூறுகிறாயே, தோழா, இது நல்லறிவா, நற்பண்பா, நாடாளும் தகுதி இதுவாகுமா, உன்னை நம்பி வாழப்போமா, நாட்டு ஆட்சியை இத்தகைய பேர்வழிகளிடம் தரமுடியுமா, அவர்களுக்கு ஏது ஆளும் தகுதி, ஊரைப் பிரித்து வைத்து சரீரத்தை வளர்க்கும் மார்க்கத்தைத் தேடும், உலுத்தர்களுக்கா ஊராளும் உரிமை, என்று கேட்டாலே டாக்டர் அம்பேத்கார். ஆரிய சிரேஷ்டர்களே! இட்சுவாகு பரம்பரையினரே! மனு மாந்தாதா காலத்து மமதையை மறக்காதிருககும் மகானுபாவர்களே! சீறுவது பலன் தராது சிந்தனைக்கு வேலை கொடுத்துப் பாருங்கள்! அவர் சொல்லியதிலே, எதை மறுக்கமுடியும் உங்களால் என்று கேட்கிறோம். டாக்டரைக் கண்டிக்கும் எழுத்தாளர்களை. கண்டனக் கணைகளுக்கு நெடுநாள்களுக்கு முன்பே தப்பிக்கொண்ட டாக்டர் அம்பேத்கர் மீது இன்று அந்தப் பழைய பாணத்தை ஏவிப்பயன் என்ன. எண்ணிப் பாருங்கள், உங்கள் இயல்பை அவர் படம் பிடித்துக் காட்டியது தவறாகுமா என்று.

பார்ப்பனியத்து வைரியாகப், புரட்சி இயக்கமாக, புத்த மார்க்கம் தோன்றியதையும், அந்தப் புது இயக்கம் நசிந்துவிட்டதால், பழையபடி பார்ப்பனியம், தலைதூக்கி ஆடியதையும், டாக்டர் தெளிவாகக் கூறினால் வரலாறு அறிந்தோர் இதனை நன்கு அறிவர். இதனைத் தைரியமாகச் சென்னைப் பத்திரிக்கை உலகின் நிலை தெரிந்தும் அதுபற்றித் துளியும் கவலைப்படாமல் எடுத்துக் காட்டிய டாக்டர் அம்பேத்கரின் ஆண்மையை நாம் பாராட்டுகிறோம். பகுத்தறிவாளன், பயங்கொள்ளியல்லர்! புகழ் மாலையும் இகழ்ச்சி ஓலையும் இரண்டாலும் அவரை இயக்கவோ, வெளியிட அவன் அஞ்சான் இந்த இயல்பிலே தேறிய டாக்டர் அம்பேத்கரிடம், ஆரியப் பத்திரிகைகள் சீறினால் என்ன, சிரித்தால் என்ன. அவர் வந்தார் வேண்டியதைத் தந்தார். அடிபட்ட மந்தி ஆஊ எனக் கூவிக் கிளைக்குக்கிளை தாவி ஆலின் விழுதப் பாம்பென எண்ணிக் கூவி, பாம்புப் பழுதையென்று கருதிப் பிடித்துக் கடிபட்டு ஓடுவது போலக் கட்டு உடைபடுகிறதே என்ற கலக்கத்தால் கூவும் பத்திரிக்கைகளை நாம் பொருட்படுத்தவில்லை. நமது டாக்டர் அம்பேத்கார், சட்டை செய்பவரல்லர். அந்தப் பத்திரிகைகள், டாக்டர் அம்பேத்காரிடம், அன்பு காட்டுமென்றோ நேர்மையிலே மனம் செலுத்துமென்றோ நாம் என்றும் எதிர்பார்த்ததில்லை. பேச்சுரையை நாம் இன்புடைத்து என்று கருதோம். பேதைமை கொண்டவனிடம் பெருங்குணத்தைக் காண முடியும் என்று எண்ணோம். ஆரியப் பத்திரிக்கைகளிடமிருந்து, புரட்சி வீரர்கள் ஆசியையோ ஆதரவையோ எதிர்பார்க்க மாட்டார்கள். எனவே, டாக்டர் அம்பேத்கார், இந்த ஏடுகளைப் பற்றிக்கவலையின்றி, வந்தார், தந்தார்! தழும்பைத் தடவிக் கொண்டிருக்கும் அந்த வர்க்கமும் அது இன்றுவரை கொண்டுள்ள முறைக்கு முடிவு காலம் விரைந்து வருவது கண்டு முகாரி பாடுகிறது. பாடட்டும்! பக்க மேளமும் தேடட்டும்! நாம் கவலை கொள்ளவில்லை, நாம் களிப்படைகிறோம், நமது பகுத்தறிவுச் சிங்கம், டாக்டர் அம்பேத்கார், வந்தார், வஞ்சனைக்காரருக்கு வட்டியும் முதலுமாகத் திருப்பித் தந்தார் என்பதை எண்ணி!

-அண்ணாதுரை, திராவிடநாடு, 1944

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

Responses (1)