அண்ணாதுரை, திராவிட நாடு , 5–8–1956

ஈரான் நாட்டு முன்னாள் முதலமைச்சர் முதுபெருங்கிழவர் முசாதிக் இந்த ஞாயிற்றுக்கிழமை சிறையில் இருந்து விடுதலை அடைகிறார்.
முசாதிக் அவர்களுக்கு 80 வயதாகிறதாம். 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையில் உழன்றுவிட்டு ஞாயிறு அன்று விடுதலை அடைகிறார்.
ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து வந்த அபடான் எண்ணெய்த் தொழிலை ஈரானின் தேசிய உடைமை ஆக்கிய அஞ்சா நெஞ்சர் இந்த முதியவர்.
நாசர் இன்று சூயஸ் பிரச்சனையில் காட்டும் போக்குக்கு முன்மாதிரியாக அமைந்தது இந்த சம்பவம். பிரிட்டன் போர்க்கப்பல்களை அனுப்பியது உலக வல்லரசுகள் மிரட்டின. முதியவர் கலங்கவில்லை.
ஈரான் மன்னர் ஷாவின் எதிர்ப்பே கிளம்பிற்று. சர்வதேச வழக்கு மன்றத்தில் அழைத்தனர், சாதிக் நேரில் சென்று வாதிட்டார் வெற்றி பெற்றார். ஆனால் ஏகாதிபத்தியம் அவரது செல்வாக்கை குறைத்து விட பல சூழ்ச்சிகள் செய்தது. நாட்டை விட்டு ஓடிய மன்னர் ஷா புதிய பலம் பெற்று திரும்பினார். எதிர்ப்பு தீ கிளப்பி விடப்பட்டது முசாதிக் மீது.
தூக்கிலே போடுவர் என்றனர். கடைசியில் ஷா மூன்றாண்டு சிறை தண்டனை தந்தார். விடுதலை அடைந்ததும் முசாதிக் நாடு கடத்தப்படலாம் என்றனர். கொடுமை இந்த அளவு செல்வதை உலகம் ஏற்காது. எதையும் தாங்கும் இதயம் கொண்ட முசாதிக் தன் தாயகத்திலேயே வாழ்ந்து, தன் பேரார்வத்தையும் பேரறிவினையும் தந்துதவ வாய்ப்பளிப்பதே அறமாகும்.
முது கிழவர் அவர்களின் விடுதலை கேட்டு மகிழ்கிறோம்.
-அண்ணாதுரை, திராவிட நாடு ,5–8–1956
Source : http://www.annavinpadaippugal.info/katturaigal/musadhik.htm