மாஸ்டர் தாராசிங்கும் பாஞ்சாலமும் - கழகத்தில் தோழமை

அண்ணாதுரை, புதிய உற்சாகம், திராவிட நாடு , 22–5–1955

SG
6 min readJul 18, 2020

தம்பி!

முன்பு எழுதிய கடிதம் கண்டு மகிழ்ச்சி தெரிவித்ததற்கு என் நன்றி. நமது இயக்கம் நன்றாகத் தழைத்திருப்பது கண்டு அருவருப்பு அடைபவர் பலர் உண்டல்லவா- அவர்கள், அவர்களின் பண்புக்குத் தக்கபடி பழிசுமத்துவதும், புகார் கிளப்புவதும், வதந்திகளை உலவ விடுவதும், வம்புக்கு இழுப்பதுமாகத்தான் இருப்பர், நாம் அவைகளைப்பற்றிக் கவலைப்படக் கூடாது; நாம் கவலைப்பட வேண்டும், கோபமடைய வேண்டும் என்பதற்காகத்தானே அவர்கள் அவ்விதமெல்லாம் பேசுவதும் எழுதுவதும்! அந்த வலையில் நாம் விழலாமா? நமக்கு நிரம்ப வேலை இருக்கிறதே தம்பி! நமது சக்திக்கு மீறிய காரியத்தை அல்லவா நாம் மேற் போட்டுக் கொண்டிருக்கிறோம். உன் நினைவு முழுவதும் அதிலே செல்லவேண்டும். ஆமாம், சில்லரைகளில் சிந்தனையைச் செலவிடக் கூடாது.

நாட்டு நடவடிக்கைகள் பலவற்றிலும் தொக்கிக் கிடக்கும் உண்மைகளைக் கண்டறிந்தால் நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சி எவ்வளவு தூய்மையும், வாய்மையும் கொண்டது என்பது விளக்கமாகும்.

சென்ற கிழமை வடக்கே ஒரு கிழவர் சிறைக் கோட்டம் அழைத்தேகப்பட்டார். மாஸ்டர் தாராசிங் பன் முறை சிறை சென்றவர். சீக்கிய பெருங்குடி மக்களின் ஒப்பற்ற தலைவர் காங்கிரஸ்காரர் அல்ல. அவர் காங்கிரஸ்காரராகி இருந்தால், பாபு ராஜேந்திரப் பிரசாத், அபுல்கலாம் ஆசாத் போன்றாரின் வரிசையில் இடம் பெற்றிருப்பார். ஆனால் அவருக்குக் குறிக்கோள் இருக்கிறது — கருவிலே உள்ள குழவி போன்ற தாகத்தான் இன்னமும் இருக்கிறது — முழு வளர்ச்சி அடைய வில்லை. அந்தக் கருவையே சிதைத்திடத்தான் அவர்மீது கடுமையான அடக்குமுறை வீசப்பட்டு வருகிறது.

தாராசிங், சீக்கியர்களுக்காக ஒரு தாயகம் கேட்கிறார். சீக்கிய மொழி, கலாச்சாரம், மார்க்கம் ஆகியவைகள் பாதுகாக்கப்பட்டு வளமடைய வேண்டுமானால், “பஞ்சாபி மொழி பேசும் பிராந்தியம்’ ஏற்படவேண்டும் என்று கிளர்ச்சி செய்து வருகிறார்; சில ஆண்டுகளாகவே, சீக்கியர்களிலே, காங்கிரஸ் கட்சிக்குப் பலதேவ்சிங்குகள் அடிக்கடி கிடைக்கத்தான் செய்கிறார்கள்; நேரு பண்டிதரும் அடிக்கடி அந்தப் பகுதி சென்று பவனி வரத்தான் செய்கிறார் என்றாலும், தாராசிங்கின் “தாரகம்’ பஞ்சாபில் வெற்றி பெற்று வருகிறது.

பஞ்சாப் மாகாணம், வங்காளம் போலவே, பாகிஸ்தான் அமைப்பின் போது, இரண்டாக்கப்பட்டது. உனக்குத் தெரியும், இந்திய பூபாகத்துடன் இணைந்து இருக்கும் பஞ்சாபிலே அமிர்தசரஸ் இருக்கிறது — இது சீக்கியர்களின் காசி! தங்கக் கோயில் ஒரு தடாகத்தின் நடுவே இருக்கிறது. கோயிலில் இராமன் — கிருஷ்ணன் — முருகன் — நான்முகன் இப்படிச் சிலைகள் கிடையாது — சீக்கியரின் வேத புத்தகம் வைக்கப்பட்டிருக்கிறது — சீக்கியர்கள் அங்குச் சென்று தூய மன நிலை பெறுகிறார்கள். காலைச் சூரியன் ஒளியில், தங்கக் கோயிலின் நிழலுருவம் தடாகத்தில் தெரிகிறது. காண்பதற்கு அருமையானதோர் காட்சி நான் அக்காட்சியைக் கண்டு களித்திருக்கிறேன். சீக்கியர் களிடையே உள்ள ஒற்றுமை உணர்ச்சியையும் அதுபோது காணமுடிந்தது.

மொழி வழி அரசு அமைந்தால்தான், சுயராஜ்யம் பொலிவும் வலிவும் பெறும் என்று காங்கிரஸ் தலைவர்களே பேசி வந்தனர். அந்த முறையிலே பார்க்கும்போது, தாராசிங் கேட்கும் “பாஞ்சாலம்’ அமைக்கப்பட வேண்டியதுதான் நியாயமாகும். ஆனால் காங்கிரஸ் சர்க்கார் இதை எதிர்க்கிறது பிடி ஆட்களைப் பெற்று, இந்தக் கிளர்ச்சியை ஒழித்துக் கட்டப் பார்க்கிறது. தாராசிங் பணிய மறுக்கிறார்! சிறையில் தள்ளுகிறார்கள் — தணலில் தங்கமாகிறார். சீக்கியர்களிலே சிலரைப்பிடித்து அவரை நிந்திக்க வைக்கிறார்கள்; அவர், அவர்களின் நிலைமையைக் கண்டு பரிதாபப்படுகிறார். அவர் எப்போது கிளர்ச்சி துவங்கினாலும் இளைஞர் அணிவகுப்புத் துணைக்கு நிற்கிறது. அறப்போரில் ஈடுபட ஏராளமானவர்கள் முன்வருகிறார்கள். எனினும் மாஸ்டர் தாராசிங் பற்றியும், அவர் நடத்திவரும் இயக்கத்தைப் பற்றியும், நமக்கெல்லாம் அதிகமாகத் தெரியாது — தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதில்லை. இருட்டடிப்பு! ஆமாம் இங்கே, திராவிடநாடு பிரிவினை எவ்வளவு வேகமாக வளர்ந்திருக்கிறது என்பது எப்படி மற்ற பகுதியினருக்குத் தெரியாதபடி “இருட்டடிப்பு’ இருக்கிறதோ, அதுபோல பாஞ்சாலக் கிளர்ச்சி பற்றிய முழுத்தகவலும் நமக்குத் தெரிவது இல்லை — இருட்டடிப்புத்தான்!

நாகநாடு கிளர்ச்சி பற்றி ஒவ்வோர் சமயம் துண்டு துணுக்குகளாகச் செய்திகள் வருகின்றன — தொடர்ந்து அங்கே என்ன நடைபெறுகிறது என்பது தெரிவதில்லை — காரணம் இருட்டடிப்புத்தான்!

மணிப்பூரில் தனிநாடு கிளர்ச்சி அரும்பியிருக்கிறது — சேதி தாராளமாகக் கிடைப்பதில்லை — இருட்டடிப்பு!

பர்மாவில், பல ஆண்டுகாலமாகக் கிளம்பி, படை பலத்துடன் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, கரேன்நாடு கிளர்ச்சி — இதுவும் இருட்டடிப்பின் காரணமாக, முழுவதும் நமக்குத் தெரிவதில்லை.

இந்தோனேμயாவில் தாருல் இஸ்லாம் என்றோர் கிளர்ச்சி இருக்கிறது.

பயங்கரமான நிகழ்ச்சிகள் ஏற்படும்போது மட்டுமே இவைபற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது — தொடர்ச்சியாகச் செய்திகள் தரப்படுவதில்லை.

திராவிடநாடு கிளர்ச்சி குறித்தும் இது போலத்தான் — எப்போதாவது திடுக்கிடக்கூடிய சம்பவங்கள் நேரிட்டால், இந்திய பூபாகத்தின் மற்றப் பகுதிகளில் ஒரு சிறிது தெரியும்; மற்றச் சமயத்தில் இருட்டடிப்பு! சென்ற ஆண்டு, “இரயில் நிறுத்தக் கிளர்ச்சி’ நடைபெற்றபோது, இந்தியாவின் எல்லாப் பகுதியிலும், திராவிடநாடு கிளர்ச்சி பற்றி, ஓரளவு தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. பிறகு, எப்போதும் போல மூடிவிட்டனர்.

இந்தக் குறைபாடு நீங்க, திராவிடநாடு கிளர்ச்சி பற்றி, பிற இடங்களில் அறிந்து கொள்ளத்தக்க வகையில், ஆங்கில ஏடு நடத்துவது என்ற எண்ணம் எனக்கு நீண்டகாலமாக உண்டு. இருமுறை அதற்கான முயற்சி எடுத்து முறிந்து போனதுமுண்டு இப்போதும் அந்த எண்ணம் இருந்தபடிதான் இருக்கிறது — தக்க வாய்ப்பு ஏற்படவில்லை. தம்பி! நமக்கிருக்கும் குறைபாடுகள் இவை போன்றவையேதவிர, இல்லாததும் பொல்லாததுமாக நம்மைப் பற்றி இடுப்பொடிந்ததுகளும், இஞ்சி தின்றதுகளும், பேசுவதாலும் எழுதுவதாலும் இல்லவே இல்லை என்பதை முதலில் மனதிலே நன்கு பதிய வைத்துக் கொள்ள வேண்டுகிறேன். அந்தக் கட்டத்தைத் தாண்டிவிட்டோம். வீசப்படவேண்டிய பழிச்சொல் அவ்வளவும், எவ்வளவு வேகமாகவும் திறமையுடனும் வீசப்படவேண்டுமோ அவ்விதம் வீசிப் பார்த்தாகிவிட்டது. இப்போது கிடைப்பதெல்லாம் மறுபதிப்புகள் — எளிய பதிப்புகள் — இலவச வெளியீடுகள்!! இவைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய நிலையில் நாம் இல்லை.

அங்கே வெடிப்பு, இங்கே கொந்தளிப்பு, இங்கே குழப்பம், என்றெல்லாம் எழுதுகிறார்கள். படிக்கும்போது ஆத்திரமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறாய். தம்பி! இதற்கு ஏன் ஆத்திரம், ஆயாசம்? நம்மைப்பற்றிய “செய்திகள்’ பிற கட்சிக்காரர்களும் இதழ்களும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய அளவுக்கு, நாட்டில் முக்கியத்துவம் பெற்றுவிட்டன என்பதுதானே அதன் பொருள். இதற்கு ஆயாசப்படுவதா!! பேதமும் பிளவும், வெடிப்பும் குழப்பமும் ஏற்பட்டால்தான், நமது இயக்கத்தி லிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்று கிலி கொண்டவர்கள், இப்போது கீறலைக் கண்டு வெடிப்பு என்று கூவிக் களிப்படைகிறார்கள்! இங்கிருந்து செல்பவர்களும், இங்கு இருந்துவிட்டு வந்தவர்கள் என்ற காரணத்தாலேயே வாழ்த்தும் வரவேற்பும் பெறுகிறார்கள் — இந்த உபசரிப்பும் உலாவும் சிலநாட்களுக்கு நடைபெறும். நமது மாஜி நண்பர்கள் என்ற முறையில் அவர்கள் எப்படியோ ஒன்று மகிழ்ச்சி பெறட்டும் என்பதுதான் என் எண்ணம். அவர்களை எத்தனை நாளைக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது தெரியாததா!! இவ்விதம் “பயணம்’ நடத்தியவர் பலர்; அவர்களிலே யார் இன்று உருவம் தெரியும் நிலையில் இருக்கிறார்கள். ஆயினும் எனக்கு — உண்மையில் கூறுகிறேன் — நமது இயக்கத்தைவிட்டு யாராவது பிரிந்து செல்கிறார்கள் என்றால், வருத்தந்தான். கூடுமான வரையில் கூடி வாழ்வதைத்தான் நான் விரும்புகிறவன்- சுவரிலிருந்து சிறு ஆணி பெயர்க்கப்பட்டாலும், ஆபத்து இல்லை என்றாலும், பார்க்க நன்றாக இராது என்று எண்ணுபவன். இந்த நோக்குடனேயே நான், சிலர் வெளியேற எண்ணும்போதெல்லாம், சமரசத்திற்காக முயன்றிருக்கிறேன். அவர்கள் ஏற்கனவே, வேறு இடத்தில், “அச்சாரம்’ வாங்கி விட்டார்கள் என்று தெரிகிற வரையில், சமரசம் பேசுவேன் — “கைமாறி விட்டது’ என்று தெரிந்தால் என்ன செய்வது சரி அவ்வளவுதான்! என்று எண்ணிக்கொள்வது. அவர்கள் வெளியேறி வேறிடம் சென்றதும், அங்கு கொஞ்சம் காரசாரமாகப் பேசி, கண்டித்துத்தானே “சபாஷ் பட்டம் பெறவேண்டும். எனவே பேசுகிறார்கள். ஏசுகிறார்களே என்று வருத்தப்படலாமா — இங்கே இருந்தபோது எவ்வளவு புகழ்ந்திருக்கிறார்கள்! எவ்வளவு பற்றுப் பாசம் காட்டி யிருக்கிறார்கள்! வழியே போகிறதுகள், வம்புக்கு வருபவர்கள் தொடர்பே அற்றதுகள், இப்படிப்பட்டவர்க ளெல்லாம், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நம் இயக்கத்தைப் பற்றிப் பேசித்திரியும்போது, இருந்துவிட்டுப் போனவர்கள், இயன்றதைச் செய்தவர்கள், நண்பர்களாயிருந்தவர்கள், பிரிந்த காரணத்தால் இரண்டோர் இடத்தில் கடுமையாகத் தாக்கினால், குடிமுழுகிவிடாது. அவர்கள் ஆசையும் தீர்ந்து போகட்டுமே பாவம்!

இந்தச் சம்பவங்களைப் பற்றி எல்லாம் படிக்கும்போது தம்பி! நாம் இயக்கத்தை நடத்திச் செல்வதில் இதுவரை காட்டிவரும் தோழமையைவிட, அதிக நேர்த்தியான தோழமையைக் காட்டிவரவேண்டும் என்ற பாடத்தைத்தான் பெறவேண்டும். மற்ற எந்த இயக்கத்திலும் இல்லாத அளவு தோழமை உணர்ச்சி நமது கழகத்திலே இப்போது இருக்கத்தான் செய்கிறது. அந்தப் பண்பு மேலும் வளரவேண்டும். தேர்தல் எனும் முறையே இன்றி, ஒரு இயக்கத்தின் தலைவர் பார்த்து வைத்ததுதான் சட்டம் என்றிருக்கும்போது தோழமை உணர்ச்சி அல்லது, பயம் போதும். நாமோ, சிற்றூர் கிளைக் கழகம் முதற்கொண்டு, பொதுச் செயலாளர் வரையில் தேர்தல் முறை வைத்திருக்கிறோம். தேர்தல் என்றால் போட்டி, கட்சி சேர்த்தல் என்பதுதான் உடனடிப் பொருள் எனவே தேர்தலின் காரணமாகச் சிறுசிறு சச்சரவுகள் எழத்தான் செய்யும். இந்தச் சச்சரவும் தேர்தல் ஊழல்களும் நம்முடைய கழகத்திலே மிகமிகக் குறைந்த அளவிலேதான் இருக்கிறது — வேறு அமைப்புகளுடன் ஒப்பிடும்போது சின்னாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற தேர்தலில் போது — வாய்ச் சண்டை வளர்ந்து மேஜை நாற்காலிகள் வீசிக்கொள்ளப்பட்டன என்று படித்திருப்பாய். இது, காங்கிரஸ் கமிட்டித் தேர்தலில், அதுபோலவே வடாற்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தேர்தலிலும் “ரசாபாசம் நேரிட்டதாகச் செய்தி வந்தது. இலங்கையில் தொழிலாளர் அமைப்பிலே நடைபெற்ற தேர்தலிலும், போட்டி, பூசல் அளவுக்குச் சென்று, தேர்தல் வேலையே வெற்றிகரமாகச் செய்ய முடியாமற் போய்விட்டது. இவைகளை எடுத்துக் காட்டுவதன் காரணம், நமக்குள்ளாகத் தேர்தல் தகராறு எழுவது சரிதான் என்று வாதாட அல்ல. தேர்தல் தகராறுகள் நம்மில் பிறரிடம் இருக்கும் அளவுக்கு இல்லை என்பதை நினைவுபடுத்தி, இப்போது எழும்பியுள்ள சிறு தகராறுகளும் எழாத வகையில் இனி நாம் பணியாற்ற வேண்டும் என்பதைக் கூறத்தான். ஏனெனில், நமது இயக்கத்திலே காணக்கிடக்கும் மாண்புகளை, மாற்றார்கள் போற்ற மாட்டார்கள்; ஆனால், ஒரு சிறு தகராறு தெரிந்தாலும் போதும், சுட்டிக் காட்டிச் சிரிப்பார்கள். இதற்கு இடமளிக்கும் முறையில் யாரும் நடந்துகொள்ளக்கூடாது. தேர்தல் காரணமாகச் சிறு மனத்தாங்கல் ஏற்பட்டுவிட்டி ருந்தாலும், தாங்கிக்கொள்ளும் பெரிய மனமும், மீண்டும் ஒன்றுபட்டுப் பணியாற்றும் தோழமையுள்ளமும் வேண்டும். கழகத்தின் பொதுப் பிரச்சினை பற்றிக் கவனம் செலுத்திக் காரியமாற்ற, நமது பொதுச் செயலாளருக்கு நேரமும் நினைப்பும், திறனும் வாய்ப்பும் பயன்பட இடமளிக்க வேண்டுமேயல்லாமல், இத்தகைய தேர்தல் தகராறுகள் இடம்பிடிப்பதில் ஏற்படும் இடர்பாடுகள் ஆகியவற்றையெல்லாம் கவனித்து ஆவன செய்யும் தொல்லையை, அவருக்கு நாம் தருவது முறையாகாது. இதிலே, தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்குத்தான் முழுப் பொறுப்பு இருக்கிறது. அவர்கள்தான் தத்தமது வட்டாரத்தில் காணப்படும் மனத்தாங்கைத் துடைத்திட முயற்சிக்க வேண்டும். கழகத்துக்குள் அடிப்படை பிரச்சினைமீது அல்ல, தவறான எண்ணம், மனச் சங்கடம் ஆகியவற்றின் காரணமாக எழும் சிக்கலைத் தீர்க்கும் திறம் இல்லாமற் போய்விட்டால் பிறகு எங்ஙனம், பொதுமக்களை அணுகி, அவர்களின் சந்தேகங்களைப் போக்கி, அவர்களை இயக்கத்தில் கொண்டுவந்து சேர்ப்பது? எனவே, வெற்றி பெற்ற தோழர்கள், தத்தமது வட்டாரத்தில் ஒற்றுமையும் தோழமையும் மலருவதற்குப் பாடுபட்டு, அதிலே வெற்றி காணவேண்டும் தேர்தலில் பெற்ற வெற்றியை விட இந்த வெற்றியையே பெரிதென்று எண்ணவேண்டும்.

வடநாடு தென்னாட்டைச் சுரண்டிக் கொண்டுதான் வருகிறது; ஐந்தாண்டுத் திட்டத்திலே ஓரவஞ்சனையாகத்தான் நடந்து கொண்டது என்ற கருத்தும்,

இந்தியைத் திணிப்பது, எதேச்சாதிகார முறை, மொழிவெறி, ஏக பாஷைப் பித்தம், இதைக் கண்டித்தே தீர வேண்டும், இந்த முயற்சியை எதிர்த்தேயாக வேண்டும் என்ற கருத்தும்,

இப்போது காங்கிரஸ் வட்டாரத்திலேயே வெகுவாகப் பரவிவிட்டது — வெளிப்படையாகவே பேசப்படுகிறது.

இந்த நல்ல சூழ்நிலையைக் கழகத் தோழர்கள் தக்கவிதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

திராவிட நாடு கேட்பதற்கான காரணங்களை, முன்பு, காதால் கேட்பதும் “பாபம்’, தேசியத்துக்கு விரோதமான காரியம் என்று எண்ணிக்கொண்டிருந்த காங்கிரஸ்காரர்களலேயே ஒரு பகுதியினர், இப்போது திராவிட நாடு பிரச்சினையைத் தெரிந்துகொள்ள ஆவல் காட்டுகிறார்கள். அவர்கள் உணரும் படியும் ஒப்பும்படியும் எடுத்துக் காட்ட நம்மிடம் ஏராளமான காரணங்கள், புள்ளி விபரங்கள் உள்ளன. அவர்களின் மனதைப் பக்குவப்படுத்தும் முறையில், நாம் அவைகளை எடுத்துக் கூறவேண்டும். இந்தப் பெரிய பொறுப்பை ஏற்றக் கொள்ளும் நாம், அதற்கேற்றபடி பெரிய மனம் படைத்தவர்களாகித் தீர வேண்டும்.

இருட்டடிப்புப் பற்றிக் குறிப்பிட்டேன்.

அது, வெளியே நமது கருத்தும் வளர்ச்சியும் தெரியவிடாமல் செய்வது பற்றி மட்டுமல்ல, இங்கேயே உள்ள இருட்டடிப்பு பற்றியுந்தான்.

இங்குள்ள “பத்திரிகைகள்’ நமது மூலாதாரக் கொள்கையை மறுப்பன. எனவே, அந்தக் கொள்கையை இருட்டடிப்பு மூலம் சாகடிக்கலாம் என்று எண்ணுகின்றனர். இதிலிருந்து நாம் தப்ப வேண்டுமானால், ஒவ்வொரு கிளைக் கழகமம் தனிப்பட்டவர் களும் கூட, இயக்க கருத்துக்களையும் அக்கருத்துக்களுக்கு ஆக்கம் தரும் நிகழ்ச்சி பற்றியும், அவ்வப்போது துண்டு அறிக்கை வெளியிட்டு வீடு தோறும் வழங்க வேண்டும். நமது இயக்கக் கருத்துக்கள் பொதிந்த பாடல்களையும், நாடகங்களையும் மேலும் வளமும் வண்ணமும் உள்ளதாக்க வேண்டும் புள்ளி விவரங்களைத் தயாரித்து. முச்சந்திகளில் பொறித்து வைக்க வேண்டும் கழகத் தோழர் ஒவ்வொருவரும் இம்முறையில் ஏதேனும் ஒரு பணியாற்றி, இயக்கத்துக்குத் தொண்டாற்ற வேண்டும். ஒரு திங்கள் இம்முறையில் பணியாற்றிப் பாருங்கள். உங்கள் மனதுக்கே புதியதோர் உற்சாகம் பிறக்கும். நோக்கம் இவ்வகையில் திரும்பினால், பிறகு, சிறு சச்சரவுகள் பற்றிய சிந்தனையும் அற்றுப்போகும், சீரழிவானவர் வீசும் சிறு சொல்லும் நம்மைச் சுடாது.

அன்புள்ள

அண்ணாதுரை

(புதிய உற்சாகம், திராவிட நாடு , 22–5–1955)

மூலக்கட்டுரை:http://arignaranna.net/annaworks/kadithangal/puthiya_urchagam.htm

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

No responses yet

Write a response