மனு ஸ்மிருதி - மனு தரும சாஸ்திரம் - மனு நீதி - மனு சட்டம் - இந்து மதச் சட்டம்
சில ஸ்லோகங்கள் அதன் பொருளும்
புஷ்யமித்திரன் ஆட்சியில் அரசின் சட்டமாக அறிவிக்கப்பட்டதுதான் ‘மனு சாஸ்திரம்’.
வேதத்தை பார்ப்பனியத்தை எதிர்த்து வந்த புத்தமதத்தவர்களை “வேத நிந்தனையாளர்கள்” என்று மனு சாஸ்திரம் கூறியதோடு அவர்கள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள். ஆபத்தானவர்கள், திருடர்கள் என்று வசை பாடுகிறது. வேத எதிர்ப்பாளர்களை அரசன் தனது எல்லையிலிருந்து வெளியேற்ற வேண்டும். (அத்.9: சுலோகம் 225)
வேத எதிர்ப்பாளர்கள் அன்றாடக் கடமைகளை செய்யாதவர்கள்; இவர்களின் பிறப்பே வீண்; திருட்டுத்தனமாக சாதி மாறிப் பிறந்தவர்கள்; வேதத்தை கேள்வி கேட்டு நிந்தனை செய்யும் துறவிகளுக்கும் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கும் அவர்களின் ‘ஆத்மா’க்களுக்காக ‘தர்ப்பணம்’ (செத்தப் பிறகு ஆத்மா சாந்தியடைவதற்கான புரோகிதச் சடங்கு) செய்யக் கூடாது. (அத்.5; சுலோகம் 89)
தர்மங்களுக்கு ஆதாரமாக இருப்பவை வேதமும், ஸ்மிருதிகளும் தொன்று தொட்டு வந்த ஒழுக்க மரபும் கவலையற்ற மன நிறைவுமாகும். (2 : 6)
மனுவினால் கட்டளையிடப்பட்ட நீதிகள் அனைத்தும் வேதத்தில் விதிக்கப்பட்டவையே. ஏனெனில் அவர் வேதசாரமுணர்ந்த பிரம்ம ஞானி. (2 : 7)
வேத சத்யத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்தவையென்று தனது ஞானத்தால் உணர்ந்து அவ்வறத்தாறு ஒழுகுவோனே உண்மையான கல்விமான். (2 : 8)
சுருதி, ஸ்மிருதிகளில் சொல்லப்படா நின்ற அறங்களை மேற்கொண்டு ஒழுகுவோன் யாரோ, அவனே இம்மையில் புகழையும் மறுமையில் சுத்தமான சுகத்தையும் பெறுவான். (2 : 9)
வேதமே சுருதியென்றும் அறத்துணிபுகளே ஸ்மிருதியென்றும் உணர்க.. (2 : 10)
மனு தர்ம சாஸ்திரம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது என்ற செய்தியும் பிரம்மன் மற்றும் பிருகு முனிவர் ஆகியோரால் இது கூறப்பட்டது என்ற செய்தியும் மனுதர்ம சாஸ்திரம் புனிதமானது, உயர்வானது, ஆய்வுக்கு அப்பாற்பட்டது என்ற கருத்தை நிலை நாட்ட உதவுகிறது. இனி மனு தர்ம சாஸ்திரத்தின் சுலோகங்கள் சிலவற்றைக் காணலாம்.
பிராமணர் உயர்வு '’மனிதராசி பல்கும் பொருட்டாகவே, பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நால் வருணத்தையும் வேதஞானம், புவிபுரத்தல், செல்வமீட்டல், ஏவல் புரிதல் என்ற கடப்பாடுகளின் வழியே வகுத்து வைத்தார். இவர்கள் இறைவனுடைய முகம், தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்றும் தோற்றமுற்றனர் (மனு 1 : 31).
இந்தச் சூத்திரத்தின் அடிப்படையில் இறைவனுடைய முகத்தில் பிராமணர் தோன்றியுள்ளனர். இதன் காரணமாகப் பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்பதைப் பின்வரும் சுலோகங்களில் வலியுறுத்துகிறார்.
புருஷ தேகம் சுத்தமானது. இடைக்கு மேல் மிகவும் தூய்மையாகும். எனவே பிரம்மாவின் முகம் பெரிதும் தூயது (1 : 92).
மிக்க தூயதான முகத்திலிருந்து வெளிப்பட்டமையினாலும், வேதங்களைப் பெற்றிருப்பதனாலும், முதலில் தோன்றியமையாலும், படைக்கப்பட்ட யாவற்றினும் அந்தணன் சிறந்து விளங்குகின்றான். (1 : 93)
சுயம்புவான பிரம்மா, தேவர்களுக்கு அவி சொரிந்து மகிழ்விக்கவும், பிதுரர்களுக்குச் சிரார்த்தம் செய்யவும் தக்கவனாகப் பிராமணனைத் தமது முகத்தினின்றும் முன்னம் படைத்தார் (1 : 94).
மாந்தரின் சமூக ஒழுக்கங்களை நன்கு புரிந்து, நிலை நிறுத்தும் பொருட்டாகவே ஜீவராசிகள் அனைத்திலும் மேலானதொரு தலைமையை அவன் பெற்றிருக்கிறான் (1 : 99).
பிறவி மேன்மையினாலும், முகத்திலிருந்து உதித்த தகுதியினாலும், படைப்புலகில் காணப்படும் சகலத்தையும் தனது செல்வமாகக் கொள்ளத்தக்கவனாக அவன் விளங்குகின்றான் (1 : 100).
எனவே அவன் பிறரிடமிருந்து பெறுகின்ற உணவு, உடை, பொருள் யாவும், அவனுடைமையை அவன் பெறுவதாகவும் ஏனையோர் அவனுடைமையைப் பெற்றுய்யவராயுமிருக்கிறார்கள் (1 : 101).
இவ்வாறு பிராமணர்களின் சமூக மேலாண்மையை வலியுறுத்தும் மனு அதை நிலைநாட்டும் வகையில் பல்வேறு கருத்துக்களைக் குறிப்பிடுகின்றார். மங்களம் மற்றும் மேன்மையைக் குறிக்கும் வகையில் பிராமணனது பெயர் அமைய வேண்டும் (2:31, 32)
என்றும் பிராமணர் உணவு அருந்தும்போது மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்றும் (2 : 176-178) வலியுறுத்துகிறார்.
தவறு செய்யும் பிராமணர்களுக்கு விதிக்க வேண்டிய தண்டனைகள் குறித்து மனு கூறும் செய்திகள் வருமாறு.
பிராமணனுக்குத் தலையை முண்டனம் செய்தல் உயிர்த்தண்டனையாகும். ஏனையோருக்கு உயிர்த்தண்டனையே உண்டு (8 : 378).
எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379).
பிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (8 : 379).
அந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281).
அந்தணர் ஏவலுக்கென்றேயுள்ள நாலாம் வருணத்தானிடம், கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ அந்தணன் வேலை வாங்கலாம் (8 : 412).
சத்திரியர் - வைசியர் - சூத்திரர் நிலை இவ்வாறு பிராமணர்களின் சமூக மேலாண்மையை வலியுறுத்தும் மனு, சத்திரியர், வைசியர், சூத்திரர்களின் பணி மற்றும் சமூகநிலை குறித்துப் பின்வருமாறு வரையறை செய்துள்ளார். '’பிரஜா பரிபாலனம் செய்வது, ஈகை, வேள்விகள் புரிவது வேத பாராயணம் செய்விப்பது, விடிய சுகங்களில் மனதை அலைய விடாமல் உறுதியாக நிற்பது மன்னர் கடமையாகும். (1 : 89)
வாணிபர்க்கு ஆநிரைகளைக் காத்தல், தானம் கொடுத்தல், கடலாரம், மலையாரம், கனிப்பொருள், விளைபொருள், தானியங்கள் இவற்றை வியாபாரம் செய்தல், வட்டிக்கு விடுதல், பயிர்த்தொழில் செய்தல் ஆகியவற்றை விதித்தார். (1 : 90)
ஏவலான மக்கள் மேலே சொன்ன மூவர்க்கும் பொறாமையின்றிப் பணிபுரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக் கடவரென்றும், ஈதல் முதலிய சத்கருமங்களும் அவர்களுக்கு உண்டென்றும் பணித்தார் (1 : 91).
நான்கு வருணத்தாரின் கடைசி வருணமான சூத்திர வருணத்தவர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்ற கருத்தை மனு உறுதிபடக் கூறுகிறார். '’நாலாம் வருணத்தோன் அரசனாகயிருக்கும் நாட்டிலும் அறம் அறியாதோரும், தீயழுக்கமுடையோரும் வசிக்கும் கிராமத்திலும், பாவிகள் அருகுறையும் ஊரிலும் வசிக்கக் கூடாது. (4 : 61).
மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் நான்காம் வருணத்தானால் நடைபெறுகின்றதோ, அந்நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப் போல், கண் முன்னே துன்பமுறுகின்றது. (8 : 21)
நாலாம் வருணத்தாரும் நாத்திகருமே மிகுந்து, இரு பிறப்பாளர் இல்லாமற் போகின்ற நாடு வறுமை வாய்ப்பட்டு விரைவில் அழிந்து போகும் (8 : 22).
அனுஷ்டானங்களில்லாத அந்தணன் மன்னன் சார்பாகத் தீர்மானங்களைச் செய்யவும் கூடும். நாலாம் வருணத்தவன் செய்யக்கூடாது. வைசியனையும், நாலாம் வருணத்தானையும் தன் தன் தொழிலைச் செய்யுமாறு மன்னன் கட்டளையிடுக. இல்லையெனில், வேலையற்ற இவர்கள் உலகையே அழித்து விடுவார்கள். (8 : 417)
இழி பிறப்பாளர் பெருகி வரும் நாடு விரைவில் குடிமக்களுடன் அழியும் (10 : 61).
பிராமணனின்றி சத்திரியனுடைய சதகருமங்களும் சத்திரியனின்றி அந்தணனின் ஜீவனமும் நடைபெறாதாகையால், ஒருவரை ஒருவர் சார்ந்து நின்றால் இம்மை மறுமைகளின் இன்பங்களை அடையக் கடவர் (9 : 322).
வருணமற்றவர் நான்கு வருணத்திற்கும் அப்பால், சண்டாளர் என்ற சாதியை மனு குறிப்பிடுகின்றார். தேர்ப்பாகர், இரண வைத்தியர், மீன் பிடிப்பவர், எலி, உடும்பு பிடிப்பவர், தச்சு வேலை செய்பவர் ஆகியோர் நால் வருணத்திற்கு வெளியில் உள்ளவர்களாவர். (10 : 47 - 49)
இவர்கள் வாழும் இடமாக '’இவர்களனைவரும் நகரத்திற்கும், ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, இடுகாட்டின் அருகில், மலை, மலர்ச்சோலை ஆகிய இடங்களில் தங்கள் தொழிலைப் பலரறிய இயற்றி வாழ்ந்திருக்கவும்’' (10 : 50) என்று குறிப்பிடுகின்றார்.
சண்டாளர்களின் இருப்பிடம், மற்றும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய தொழில், வாழ்க்கைமுறை தொடர்பாக மிகவும் இழிவான கட்டுப்பாடுகளை மனு விதித்துள்ளார். ஊருக்கு வெளியில் சண்டாளனும், ஸ்வபாகனும் குடியிருக்கவும், இவர்கள் உலோகத்தாலான பாத்திரங்கள் உபயோகிக்கக் கூடாது. இவர்கள் தீண்டிய பாத்திரங்கள் துலக்கினாலும் தூய்மையாகா. நாய், கழுதை இவற்றை இவர்கள் வளர்க்கலாம். மாடு முதலியவை வைத்துப் பிழைக்கக் கூடாது. (10 : 52)
இவர்கள் பிணத்தின் ஆடையை அணிய வேண்டும். உடைந்த சட்டியில் சோறுண்ண வேண்டும். இரும்பு பித்தளை நகைகளை அணிய வேண்டும். எப்போதும் தொழிலுக்காகச் சஞ்சரிக்க வேண்டும் (10 : 52).
நற்கருமங்கள் நடைபெறுகையில், இவர்களைக் காண்பதோ, பேசுவதோ கூடாது. இவர்கள் தங்கள் வகுப்பிலேயே பெண் எடுக்கவும் கொடுக்கவும், கடன் கோடலும் வேண்டும் (10 : 53).
இவர்களுக்கு நேரே உணவு பரிமாறல், ஏவலாளரைக் கொண்டு, உடைந்த சட்டியில், அன்னமிட்டு வைக்க வேண்டும். இவர்கள் ஊரிலும், நகரிலும் இரவில் திரியக்கூடாது.(10 : 54).
அரசன் கொடுத்த அடையாளத்துடன், தங்களிடமுள்ள பொருளை விற்கவும், ஒன்றை வாங்கவும், பகலில் ஊர்த்தெருக்களில் திரியலாம். அனாதைப் பிணத்தை அகற்றுதலும் இவர்கள் கடன்.(10 : 55).
மரண தண்டனை பெற்றவரைக் கொல்லுதலும் இவர்கள் தொழில். தண்டனை நிறைவேற்றப் பட்டவரின் உடை, அணி, படுக்கைகளை இவர்கள் தங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம்.(10 : 56).
இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு, இவர்கள் சொர்க்கம் போவதற்கான வழியையும் மிக எளிதாகக் காட்டுகிறார். '’அந்தணன், ஆ, பசு, பெண், பாலர் இவர்களைக் காக்கும் பொருட்டுக் கூலி பெறாமல் உயிரைத் தியாகம் செய்வதே தீண்டத்தகாத பிறப்பினர் சுவர்க்கம் புகும் நல்லாறு’' (10 : 62).
அடுத்து பெண்கள் குறித்த மனுவின் கருத்துக்களைக் காண்போம்.
எந்தப் பருவத்தினவளாயினும், தனது இல்லத்திலே கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச் செயலும் இயற்றலாகாது.(10 : 147)
இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் மக்கள் இவர்கள் காவலிலன்றிப் பெண்கள் தன்னிச்சையாக இயங்கலாகாது (10 : 148).
இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும், கற்பினளான பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக. (10 : 154).
அன்றாட வேள்விகள் ஐந்தும், உண்ணாமை, நோன்பு முதலியனவும் மாதர்க்குத் தனிப்பட யாதுமிலது. கணவனைப் பேணுதலே அவர்க்கு மறுமையின்பிற்குரிய நல்லாறு.(9 : 14).
நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண்பின்மையும், மாதர் தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும்போதும், அவர்கள் கணவரின் காவலை விரும்புவதில்லை.(9 : 15).
இவ்வித இயல்புகள் மாதர்க்குப் பிறப்புடன் வருவதாகையால் மாதர் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது (9 : 17).
படுக்கை, ஆசனம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மனு படைத்தார்' (9 : 17).
மாதர்க்குப் பிறவியைத் தூய்மையாக்கும் சமஸ்காரங்கள் மந்திரப்பூர்வமாகச் செய்வித்தல் யாதுமின்று. இவர்களுக்கு வெள்ளையுள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது. எனவே பொய்யைப் போல் மாசு வடிவினராக மாதர் இயன்றிருக்கின்றனர் (9 : 18).
தாக்கங்கள்.
மனு தர்ம சாத்திரத்தின் தாக்கம் இந்தியா முழுவதும் காணக்கிடைக்கிறது. வருண மற்றும் சாதிப் பாகுப்பாடுகளின் மூல கருத்தாவாக மனுதர்மம் கருதப்படுகிறது.
தந்தைபெரியார் - “குடி அரசு” கட்டுரை 10.03.1935 இல் பின்வருமாறு மநு தர்ம சாஸ்திரத்தை விளக்குகிறார்....
1. "பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது" அத்தியாயம் 8. சுலோகம் 20.
2. "சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை யுடையதாயிருக்கும்" அ.8. சு.22.
3. "சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி" அ.8.சு. 22.
4. "ஸ்தீரிகள் புணர்ச்சி விஷயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை" அ.8. சு.112.
5. "நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்ய வேண்டிய பிராமணனை சத்தியமாகச் சொல்லுகிறேன் என்று சொல்ல செய்ய வேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனை பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணர வேண்டும்" அ. 8. சு. 113115.
6. "சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்" அ.8. சு. 270.
7. "சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்" அ.8. சு.271.
8. "பிராமணனைப் பார்த்து, "நீ இதைச் செய்ய வேண்டும், என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்" அ.8. சு.272.
9. "சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்" அ.8. சு.281.
10. "பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவமில்லை" அ.8. சு.349.
11. "சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர்ப் போகும் வரையும் தண்டிக்க வேண்டும்."
"பிராமணன் கொலைக் குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிடவேண்டும்." அ.8. சு.380.
12. "அரசன் சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த சாதிக்கு பணி விடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும்." அ. 8. சு.410.
13. "பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப் பட்டிருக்கிறான்" அ. 8. சு.413.
14. "பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான்" அ. 8. சு.417.
15. "சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது" அ. 9. சு.416.
16. "பிராமணனால் சூத்திர ஸ்திரீக்கு பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு தந்தை சொத்தில் பங்கில்லை" அ. 8. சு.155.
17. "பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்தரவதை செய்து கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம்." அ.9. சு.248.
18. "பிராமணன் மூடனானாலும் அவனே மேலானதெய்வம்" அ. 9. சு. 317.
19. "பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவர்கள் ஆவர்கள்." அ. 9. சு.319.
20. "பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்கு துன்பஞ் செய்தால் அவனை சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும்." அ.9 சு. 320.
21. "சூத்திரனுக்கு பிராமணப் பணி விடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாதவிடத்தில் க்ஷத்திரியனுக்கும், க்ஷத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டுக் கொடுக்காவிட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு." அ.11. சு.12.
22. "சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்." அ.11. சு.13.
23. "யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைக் தண்டிக்கக் கூடாது." அ.11. சு.20.
24. "பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும்." அ.11. சு.66.
25. "ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்." அ.11. சு.131.
25(அ). "அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது." அ.11. சு.132.
26. "க்ஷத்திரியன் இந் நூலில் (மநுதர்ம சாஸ்திரத்தில்) சொல்லப்பட்டபடி ராஜ்யபாரம் பண்ணுவதே தவமாகும். சூத்திரன் பிராமண பணி விடை செய்வதே தவமாகும்." அ.11 சு.285.
27. "சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனே யாவன். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமணனேயாவன். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார்." அ.10. சு.75.
28. "பிராமணரல்லாதவன் உயர்குலத்தோருடைய தொழிலைச் செய்தால் அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்." அ.10. சு.96.
29. "சூத்திரன் இம்மைக்கும், மோட்சத்திற்கும் பிராமணனையே தொழ வேண்டும்." அ.10. சு.96.
30. "பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த ஆடையும், கெட்டுப் போன தானியமும், சூத்திரனுடைய ஜீவனத்துக்கு கொடுக்கப்படும்." அ.10. சு.125.
31. "சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனாகயிருந்தாலும் கண்டிப்பாய் பொருள் சேர்க்கக் கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது பிராமணனுக்கு துன்பமாய் முடியும்." அ.10. சு.129.
32. "மனுவால் எந்த வருணத்தாருக்கு இந்த மனுதர்ம சாஸ்திரத்தால் என்ன தர்மம் விதிக்கப்பட்டதோ, அதுவே வேத சம்மதமாகும். ஏனென்றால், அவர் வேதங்களை நன்றாய் உணர்ந்தவர்." அ.2. சு.7.
மேல்வருணத்தார் மூவரின் (அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன்) மனைவியையும் ஒருவன் (சூத்திரன்) தனது வலிமையாற் கூடினால் உயிர்போகும் வரை அவனை தண்டிக்கவும். அத்தியாயம் 8. செய்யுள் 358
கற்பினளான பிராமணப் பெண்ணைக் கூடும் வைசியனக்கு ஒரு வருட காவலும் ஆஸ்திப் பறிமுதலும் தண்டனைகள். இவ்விதம் குற்றமிழைத்தவன் சத்திரியனாயிருப்பின் ஆயிரம் பணம் தண்டம் விதித்து கழுதை மூத்திரத்தை விட்டு அவன் தலையை மொட்டை இடுக! —மனுதரும சாத்திரம், அத்தியாயம் 8. செய்யுள் 374
இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர்
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 3
எந்தப் பருவத்தினளாயினும் தனது இல்லத்தில் கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 147
பெண்களை ஒழுக்கக் கேடானவர்களாகவும் மயக்கும் குணம் கொண்டவர்களாகவும் மனுதர்மம் சித்தரிக்கிறது. பாலியல் ரீதியில் ஒழுக்கக் கேடுகள் எவையாவது நடந்தால் அதில் ஆணுக்கு பொறுப்பு எதுவுமில்லை என்பது போலவும் அவனை ஒரு அப்பாவியைப் போலவும் கருதி பெண்களை மனுதர்மம் இழிவுபடுத்துகிறது.
தங்கள் அலங்காரத்தால் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக் குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள்.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 2 செய்யுள் 213
புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 2 செய்யுள் 214
பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் குறப்படுவனவற்றையும் கேட்பீராக.
—மனுதரும சாத்திரம் 9, அத்தியாயம் செய்யுள் 19
இவ்வாறு பெண்களை இழிவுப்படுத்தும் மனுதர்மம் மாதரைக் காப்பாற்றுவதற்கான காரணத்தையும் விளக்குகிறது .
வீட்டிற்கு வேண்டிய பாத்திரம் முதலியவற்றை தேடிப் பெறுவதற்காக பொருளை அவளிடம் கொடுத்தும் அதனைக் காப்பாற்றி வைத்து வேண்டிய போது செலவிடும்படி செய்தும் தட்டு முட்டுச் சாமான்களை சுத்தமாக வைத்துக் கொள்ளச் செய்தும் வீட்டை துப்புரவாக்கி வைத்தல், தேவ பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்தல், அடுக்களைப் பொறுப்பு, பாத்திரம் படுக்கை முதலியவற்றைச் சரியாக கவனித்துக் கொள்ளல் போன்ற இன்றியமையாத இல்லத்துக் காரியங்களை மனைவிக்குக் கற்பித்து அவற்றை அவளைக் கொண்டு செய்வித்தல் போன்றவற்றாலும் அவளது மனம் வேறிடம் செல்லாமற் காக்க!
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 11
கணவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் பெண் அவனுக்கு அடங்கி நடக்க வேண்டுமென்று விதிக்கிறது மனுதர்மம்.
கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும்.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 78
இழிநடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும் கற்பினாளான பெண் தன் கணவனை தெய்வமாகப் பேணுக.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 154
மறுமையின் பத்தில் நாட்டமுள்ள பெண்மணி தன் கணவன் இருப்பினும் இறப்பினும் அவன் கருத்துக்கு மாறுபாடாக நடக்கக் கூடாது.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 156
இன்னும் இதைப் போன்று ஆயிரக்கணக்கான அநீதியானதும், ஒரு சாராருக்கு நன்மையும், மறுசாரருக்குக் கொடுமையும் செய்வதுமான விதிகள் மனுதர்மத்தில் நிறைந்திருக்கின்றன. சுருங்கச் சொல்லுங்கால் "பிராமணன்" என்ற வகுப்பாரைத் தவிர, வேறு எந்த வகுப்பாருக்கும் அதில் யாதொரு நன்மையும் இல்லை என்றே கூறலாம். ஆகையால் தோழர்களே! இந்நூலை "மனுதர்மம்" என்று கூறுவதா? அல்லது "மனு அதர்மம்" என்று கூறுவதா? சற்று யோஜித்து முடிவு செய்யுங்கள்.
மனு சட்டம்
http://vairamani-lakshmi.blogspot.com/2012/01/blog-post_9100.html?m=1
மனு சாஸ்திரம்’ எழுதியது யார்? ஏன் எழுதப்பட்டது?
மனு தரும சாத்திரம்
http://sathgamaya5522.blogspot.com/2016/03/blog-post_15.html?m=1