பொற்காலம் காண!. . .

SG
19 min readJan 13, 2022

அண்ணாதுரை, காஞ்சி, 14–1–1965

தெற்கு முனையிலே ஏற்பட்ட பெருவிபத்து
எடுத்துரைக்கும் எதனையும் மதித்திட மறுக்கும்போக்கு
என் தம்பி மணம் பரப்பிடும் மலர்
இந்தியா முதலாளிகளின் முகாம்
கண்டு கருத்தறிதல் கடினம்; எனினும் தேவை
குப்பை கூளம் பற்றிய ஜான் மேஸ்பீல்டின் கவிதை

தம்பி!

தமிழக மக்கள் தனிச் சிறப்பளித்துக் கொண்டாடி மகிழ்வுபெறும் திருநாள், பொங்கற் புதுநாள். எங்கிருந்தோ ஓர் புத்தெழில், இந்த விழாவன்று அரசோச்ச வந்திடும் விந்தை, சிந்தைக்கு இனிப்பளிக்கக் காண்கின்றோம். இன்னல் மிகுந்த வாழ்வில் பின்னிக்கிடந்திடும் நிலையினிலுள்ள மக்களையும், இன்றோர் நாள், கன்னல் கண்டு பேசிட, செந்நெல் குவிந்திருக்க, செவ்வாழை அருகிருக்க, உழைப்பின் பயனாக உருவான பண்டமெலாம் நிறைந்திருக்க, மாடு கன்றுகளும் மேனி மினுக்குடனே, பொங்கிடுவது நாங்கள் தந்திடும் பாலன்றோ எனக் கேட்பதுபோல் உலவிவர, இந்நாள் இதயம் பாடிடும் நாள்! இஞ்சியும் மஞ்சளும் இயற்கை தந்த அணிகலன் என்பதனை உணரும் நன்னாள் என்றெண்ணி மகிழ்வுதனைப் பெறுத் திகழ்தல் இயற்கை; பொருத்தமும்கூட.

நிறைவாழ்வு, கனிச்சுவை போன்றுளது; அதனை நித்த நித்தம் பெற்றிடும் வாய்ப்புக் கிடைக்கப் பெறாதோரும், இன்றோர் நாள், எழில் மாளிகைதனை எட்டிப் பார்த்துக் களிப்படையும் “இல்லாதான்’ போல, இன்ன விதமெல்லாம் இருந்திட்டால், வாழ்வு சிறந்திடும், பயன் மிகுந்திடும், நாடு பொலிவு பெறும், வையகம் கண்டு பெருமைப்படும் என்று எவரும் எண்ணி மகிழத்தக்க இன்ப நாள்.

இந்நாளில், தமிழ் மரபறிந்த எவரும், அறிதுயிலிலிருந்தபடி அண்டந்தனைக் காக்கும் அரி தங்கும் வைகுந்தமும், ஆடுவதில் வல்லவர் யார்! அறிந்திடுவோம் வந்திடு! என்று உமைதனை அழைத்து, மானாட மழுவாட முக்திக்கு வழிதேடும் பக்தர்கள் மனமாட ஆடிடும் சிவனாரின் கைலையும், இவளழகா அவளழகா? எவள் இன்று எம்முனிவன் தவம் கலைக்க? என்று தேவர் பேசிப் பொழுதோட்டும் இந்திரபுரியும் பிறவும்பற்றிப் பேசிடுவதுமில்லை, எண்ணமும் கொள்வதில்லை.

தாள் ஒலி அல்ல, தையலரின் சிலம்பு இசைக்கும் ஒ தன்னே ôடு போட்டியிட்டு, கட்டழகி பெற்றெடுத்த இன்ப வடிவத்தை எடுத்தணைத்து, முத்தமிடும் இளைஞன் எழுப்பி விடும் இச்சொலிக்கும் போட்டி எழ, கண்டு கருத்தறிந்து, பண்டு நடந்ததனை எண்ணி எண்ணிப் பாட்டன் சிரித்திட, இடையே விக்கல் இருமல் கிளப்பிவிடும் ஒலியும், இன்னோரன்ன ஒலியே, இசையாகிடக் காண்கின்றோம் இத்திருநாளில்.

இந்த யுகந்தனிலே, இந்தத் தேசந்தன்னில், இன்ன குலத்தினிலே அவதரித்த மன்னவனும், அவனைக் கெடுக்க வந்த அசுரனும் போரிட்டபோது, மன்னவன் முற்பிறப்பில் மாதவம் செய்தான் எனவே அன்னவனை ரட்சித்து அசுரனைக் கொன்றிடுதல் முறை என்று, திருமாலும் “சக்கரத்தை’ அனுப்பி வைக்க, வந்தேன்! வந்தேன்! என்று துந்துபி என முழக்கி, வந்தது காண் திகிரி, அழிந்தான் அசுரன்; அந்த நாள், இந்நாள்; பண்டிகை நாள்! இந்நாளில், பாகும் பருப்பும் பாலினிற் பெய்து பக்குவமாய்ச் சமைத்து, சக்கர வடிவமாக்கி, உண்டு உருசிபெறுவதுடன் உத்தமர்க்குத் “தானமாக’த் தருவோர்கள் அடுத்த பிறவியிலே அரசபோகம் பெறுவார்கள். அத்திரி அருளியது அதிகிரந்த மொன்று, அதிலிருந்து பிரித்தெழுதி அளித்திட்டார் மாமுனிவர், அவர் வழியில் வந்தவரே இன்று புராணம் படிப்பவரும், என்றெல்லாம் கதைத்திடும் நாள் அல்ல. வலிந்து சிலர் இதற்கும் கதை கூற முனைந்தாலும், எவர்க்கும் அஃது இனிப்பதில்லை; நெஞ்சில் புகுவதில்லை; இஃது பொங்கற் புதுநாள்! தமிழர் திருநாள்! அறுவடை விழா! உழைப்பின் பெருமையை உணர்ந்து நடாத்தப்படும் நன்றி அறிவிப்பு விழா! என்ற இந்த எண்ணமே மேலோங்கி நிற்கிறது; பெருமிதம் தருகிறது; மகிழ்ச்சி பொங்கி வழிகிறது; அகமும் முகமும் மலருகின்றன; வாழ்வின் பொலிவு துலங்கித் தெரிகிறது.

இந்த உலகத்தின் எழில் யாவும் பொய்யல்ல, மெய்! மெய்! எனும் உணர்வும், அந்த எழிலினையும் பயன்தனையும் நுகர்ந்திடவும் வளர்த்திடவும் முனைதல் மாந்தர் கடன் என்ற மெய்யறிவும், அந்தக் கடமையினைச் செம்மையாய்ச் செய்து முடிக்க ஆற்றல் மிக வேண்டும், அவ்வாற்றல் கூட்டு முயற்சியினால் மிகுந்து சிறப்பெய்தும் என்றதோர் நல்லறிவும், இருள் நீங்கி ஒளி காண்போர் இதயம் மலராகி இன்புற்றிருப்பது போல், நல்வாழ்வுதனைக் குலைக்கும் நச்சரவு போன்ற நினைப்புகளும், நிலைமைகளும், நிகண்டுகளும் அமைப்புகளும் நீடித்திருக்கவிடல் நன்றல்ல, நலம் மாய்க்கும் என்பதறிந்து, அறிவுக் கதிரினையே எங்கெங்கும் பரவச்செய்து எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடலே இயற்கை நீதி எனக் கொண்டு பணிபுரியும் ஆர்வமும், பெற்றிடப் பயன்படும் இந்தப் பொங்கற் புதுநாள்.

இயற்கைச் செல்வங்கள் என்னென்ன இங்குண்டு, அவை தம்மைப் புத்துலக நுண்ணறிவால் மேலும் பயன் அளிக்கும் விதமாக, திருத்தி அமைத்திட என்னென்ன முறை உண்டு என்பதெல்லாம் எண்ணி எண்ணி மகிழ்ந்திடலாம், இந்நாள் நமக்களிக்கும் நற்கருத்தைப் புரிந்துகொண்டால். புனலாடி, பொன்னார் இழை அணிந்து, பொட்டிட்டுப் பூமுடித்து, பாற்பொங்கல் சமைத்து அதில் பாகு கலந்து, பாளைச் சிரிப்புடனே பரிவுமிக்காள் தந்திட, சுவைத்திட இதழிருக்க வேறு தரும் விந்தைதான் எதுக்கோ என்று கேட்டிட இயலாமல் குறும்புப் பார்வையினால் அவன்கூற, பெற்றோர் அதுகண்டு பேருவகைதான் கொள்ள, இல்லமுள்ளார் எல்லோரும் இன்புற்று இருந்திடுதல் பொங்கற் புதுநாளின் பாங்கு; மறுக்கவில்லை. ஆனால், முழுப்பாங்கு என்றதனை மொழிந்திட மாட்டேன் நான்; தித்திக்கும் சுவையுடனே, சிந்திக்கவும் வைக்கும் எண்ணங்கள் பற்பலவும் பொங்கி வருவதுதுôன் இந்நாளின் தனிச்சிறப்பு, முழுப்பாங்கு. மலரின் எழில் கண்டு மகிழ்வது மட்டும் போதாது, மணம் பெறவேண்டுமன்றோ! அதுபோன்றே பொங்கற் புதுநாளன்று மனைதொறும் மனைதொறும் காணப்படும் கவர்ச்சிமிகு கோலம் — புறத்தோற்றம் — கண்ணுக்கு விருந்தாகிறது. ஆனால், அது மட்டும் போதாது; கருத்துக்கும் விருந்து வேண்டுமன்றோ! உளது உணர்பவர்களுக்கு உணர்பவர்களே, பொங்கற் புதுநாளின் முழுப்பயனையும் பெற்றவராவர். உடன்பிறந்தோரே! நீவிர், அந்நன்னோக்கத்துடன் இத்திருநாளின் தன்மையினை உணர்ந்து பயன் பெற வேண்டுமெனப் பெரிதும் விழைகின்றேன்.

திருநாளின் தன்மையை மட்டுமல்ல, காணும் ஒவ்வோர் பொருளிலும், தெரிந்திடும் புறத்தழகு மட்டும் கண்டு போதுமென்றிருத்தல் ஆகாது; அப்பொருளின் உட்பொருளை, மெய்ப்பொருளை அறிந்திடுதல் வேண்டும். அந்த நுண்ணறிவே, நாம் காணும் பொருள்களின் முழுத்தன்மையையும் துருவிக் கண்டிடவும், காண்பதனால், பயன் பெறவும் வழி காட்டுகிறது. பொருளின் புறத்தோற்றத்தை மட்டுமல்ல, அவைகளின் தன்மையினையும் பயனையும் நுண்ணறிவுடன் கண்டவர் தமிழர்! இன்று தமிழ் பேசிடுவோர் என்று பொதுவாக எண்ணிவிடாதே தம்பி! நான் குறிப்பிடுவது, தமிழராக வாழ்ந்த தமிழர்களை.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்று வள்ளுவர் கூறிச் சென்றார்.

காலைக் கதிரவன், மாலை மதியம், ஆடிடும் பூங்கொடி, பாடிடும் அருவி, கொஞ்சிடுங் கிள்ளை, துள்ளிடும் வெள்ளி மீன், மருண்டவிழி மான், ஒளிவிடும் விண்மீன், சிரித்திடும் முல்லை, பேசிடும் புறாக்கள், பழமுதிர் சோலை, வளமிகு வயல்கள், எதுதான், தம்பி! அழகாக இல்லை! எதுதான் தம்பி! இன்பம் தராதிருக்கிறது? வா! வா! என்று வாயால் அல்ல, சிறு கரத்தால் அழைத்திடும் குழவி காண்போன் களித்திடுவது போலத்தான், முற்றிய கதிர் நிரம்பிய வயலின் ஓரத்தில் சென்றிடும் உழவனுக்குக் காற்றால் அசைந்தாடும் பயிர் மகிழ்ச்சி அளிக்கிறது. அந்தி நேரத்துச் செவ்வானத்தைக் கண்டதுண்டா? கண்டிருப்பாயே! எப்படி அந்த அழகு? உன்னைப்போய்க் கேட்கிறேனே! உன்னை முதன்முதலாகக் கண்டபோது உனக்கு வாய்த்தவளின் முகம் வெட்கத்தால் சிவந்திருக்குமே, நீ அதை அல்லவோ எண்ணிக்கொண்டிருக்கிறாய்!! இருப்பினும் இதனைக் கேட்டிடு தம்பி! எழிலோவியம் நிரம்ப உளது நம்மைச் சுற்றி! ஒவ்வொன்றிலும் ஒவ்வோர் வகையான அழகு ததும்புகிறது. ஆனால் அந்தப் புறத்தழகு மட்டுந்தான், அவை நமக்களித்திடுகின்றன என்றால், அவை பெருமைக்குரியனவாகா. புறத்தழகு காட்டி நமை மகிழ்விப்பதுடன், அவை, தமது தன்மையின் காரணமாக நமக்கு மிகுந்த பயனையும் வழங்கு கின்றன! நம் வாழ்வு சிறப்படைய அவை துணைசெய்கின்றன! சிறப்படையவா!! வாழ்வே, அவை நமக்கு வழங்கிடுகின்றன.

வானத்திலே தோன்றிடும் வண்ணக் குழம்பு, காணற் கரியதோர் ஓவியம்; ஆமாம்; ஆனால், கண்ணுக்காக மட்டுமோ அஃது உளது? இல்லை, தம்பி! கருத்துக்காக! என் அழகைக் கண்டிடு, இதயம் மலர்ந்திடும்! என்று மட்டும் கூறி, மையல் ஊட்டிடும் “சாகசக்காரி’ அல்ல, இயற்கையாள்! என்னைக் கண்டிடு, அறிந்திடு, முழுவதும் உணர்ந்திடு, என் தன்மையினை ஆய்ந்து பார்த்திடு, பயன் பெறு!! — என்று கூறிடும் வள்ளல் அந்த வனிதை!

இயற்கையாள் நமக்களித்த எண்ணற்ற பொருள்கள் பெற்றோம்; இன்றவை மனையில் மங்கலம் தந்திடக் காண்கின்றோம். ஆயின், இப்பொருள் தம்மைப் பெற்றோர் எத்தனைபேர் என்ற கணக்கினை மறக்கலாமோ, அதற்கான காரணம் அறியாதிருக்கப்போமோ! மண்மகள் தந்தாள் இந்த மஞ்சளும் மா, பலாவும், வாழையும் வழங்கினாளே, செந்நெலும் பிறவும் அந்தச் செல்வியின் கரத்தால் பெற்றோம்; பெற்றதால் பெற்றோம் இன்பம்; பெறுகின்றனரோ அதனை மற்றோர் என்று எண்ணிடத் தவறல் தீது; ஏனெனில், இயற்கை அன்னை, இங்கு இவைதம்மைத் தந்தது. எவரும் இன்புற்றிருக்க; சிலருக்குப் பலவும், பலருக்குத் துளியுமற்ற பாழ்நிலைக்காக அல்ல, இத்தனை தந்த பின்னும், இத்தரைமீதில், எத்தனை எத்தனையோ மாந்தர் என் செய்வோம் என்றழுதும், இல்லையே என்று கூறி இடும்பையின் பிடியில் சிக்கித் தத்தளித்திடுதல் கண்டு, தாங்கிக் கொள்வதுதான் உண்டோ! மெத்தவும் கோபம் கொண்டு, சிற்சில நேரந் தன்னில், அடித்துக் கேட்கின்றாள் போலும், அட மடமகனே! உன்னை நம்பி நான் தந்தேன் எல்லாம்! நலிகின்றாரே பல்லோர்! இது உன்றன் கயமையாலே!! ஆகவே, உன்னை உன்றன் கொடுஞ் செயலுக்காக வேண்டி தாக்குவேன், பார்! என் ஆற்றல்! என்று பெருமழை, பேய்க்காற்று, கடற் கொந்தளிப்பு, நிலநடுக்கம் எனும் கணைகளை ஏவுகின்றாள் போலும். இந்நிலையில், விழாவென்று சொல்லிடவோ இயலவில்லை, விழியில் நீர்த்துளிகள் — உனக்கும் எனக்கும், உள்ளம் படைத்தோர் அனைவருக்கும்.

விண்ணிருந்து மண்ணுக்கு வளமூட்ட வந்த மாமழையைப் போற்றுகிறோம்; போற்றினார் இளங்கோ அன்றே! மண்மீது உள்ளனவும், அவை நம்பி வாழ்ந்திடும் மாந்தரும் அழிந்துபட, மலையென அது கிளம்பி, பெருங்காற்றை உடன்கொண்டு பேரிழப்பை மூட்டினதே, பேச்சற்றுத் திகைத்துக் கிடக்கின்றோம் மூச்சற்றுப் போயினர் பல்லோர் என்றறிந்து.

கடல் சீறி எழுவானேன், கடுங்கோபம் எதனாலே அந்தோ! ஒரு தீதும் செய்திடாத மாந்தர்களை கொல்வானேன்!

எத்தனையோ பிணங்கள் மிதந்தனவாம்; நோயாளி தாக்குண்டு, மருந்து தேடித்தானுண்டும், பிழைத்தெழ முடியாமல், பிணமாவர்; தவிர்த்திட முடிவதில்லை. அது போன்றதோ இஃது? இல்லை! இல்லை! ஒரு துளியும் இதுபோல நடந்திடக் கூடுமென்று, எண்ணம் எழாநிலையில் இருந்தவர்கள், துயின்றவர்கள், பிணமானார்; அழிவுதனை ஆழ்கடலும் ஏவியதால்,

முறிபடு தருக்களும், இடிபடு மனைகளும், உடைபடும் அமைப்பும், ஓலமிடும் மக்களும், புரண்டோடி வந்திடு புனலும், இழுத்து அழித்திடு சுழலும், அம்மவோ! கேட்டிடுவோர் நெஞ்சு நடுக்குறு விதத்தன என் செய்வர் அந்த மக்கள்; மூழ்கினர்; மூச்சற்றுப் போயினர். சேதி கேட்டிடும் அனைவருக்கும் நெஞ்சில் பெருநெருப்பு, விழியில் நீர்க்கொப்பளிப்பு. எத்தனையோ இன்னல்களைக் கண்டு கண்டு, அவை தம்மால் தாக்குண்டு, எதிர்த்து நின்று வடுப்பெற்று வாட்டம் ஓட்டிடுவோம் வாழ்வின்பம் பெற்றிடுவோம் என்று உழல்கின்றார், ஏழை எளியோர்கள். அறம் மறந்த நிலையினிலே சமூக அமைப்புள்ள காரணத்தால், ஆயிரத்தெட்டுத் தொல்லை, அவர்கட்கு. பிழைக்க வழியில்லாதார், உழைத்து உருக்குலைந்தார், நம்பிக்கை தேயத் தேய நலிவுற்றார். இத்தகையோர் மெத்த உண்டு பெரு மூச்செறிந்தபடி; உயிரோடிருக்கின்றார் ஓர் நாள் வாழ்வு கிடைக்கும் என்று வறுமையின் தாக்குதலும் அகவிலையின் போக்கதனால் ஏற்படும் அலைக்கழிப்பும் நீதி கிடைக்காமல் அவர்கள் பாதி உயிரினராய் உள்ளதுவும் அறிவோம் நாம்; அறியும் அரசு. எனினும், பொழுது புலருமென்று பொறுத்திருந்து வருகின்றார்; அவர் போன்றோர்க்கு, “வாழ்வு கிடைக்குமென வாடிக்கிடப்பதுமேன்! வற்றிய குளத்தினிலே வண்ணத்தாமரை காண்பதுவும் இயலுமோதான்! உழலுகின்றாய் உயிர்காக்க; உலவுகின்றாய் வாழ்வு கிடைக்குமென்று; உண்மையை நான் உரைக்கின்றேன், கேள்! உனக்கு வாழ்வளிக்கும் வழி காண, இன்றுள்ள உலகுக்கு நேரமில்லை, நினைப்புமில்லை; எதிர்பார்த்து ஏமாந்து இதயம் நொந்து செத்திடுவாய்; சாகுமுன்னம், அணு அணுவாய் உன் எண்ணந்தன்னைப் பிய்த்திடும் ஏமாற்றம் மூட்டிவிடும் வாட்டம்; அதனால் உழல்வானேன் வீணுக்கு; உருண்டோடி வந்துன்னை அணைத்துக் கொள்கின்றேன்; ஆவியைத் தந்துவிடு; அமைதி பெறு!’’ என்று கூறியதோ, கொக்கரித்துப் பாய்ந்து வந்த கொடுமைமிகு அலையும்! வாழ வைத்திடுதல் எளிதல்ல; வல்லமை மிகவும் வேண்டும்; சாகடித்திடவோ எளிதிலே இயலும், வா! வா! என்று கூறி மேல் கிளம்பிக் கொதித்துவந்த அலைகள், மாந்தர் உயிர் குடிக்கும் நச்சரவுகளாயின அந்தோ!! பிணமாகி மிதந்த அந்த மாந்தர் உள்ளந்தன்னில் என்னென்ன எண்ணங்கள் உலவி இருந்தனவோ, எவரறிவார்! மணவாளனாவதற்கு ஏற்றவர்தான் அவர்! பெற்றோர் மகன் மனத்தைக் கண்டறிந்தே செய்கின்றார் இந்த ஏற்பாட்டினை, பெறுவேன் நான் மன நிறைவு என்றெண்ணி மகிழ்ந்திருக்கும் மங்கையரும் இருப்பரன்றோ, கத்தும் கடல் அனுப்பப் பாய்ந்து வந்து அலை கொத்திக்கொண்டு சென்ற பல்லோரில்! பூவும் மஞ்சளுடன் போனவர்களும் உண்டே! காய் இது, கனியும் விரைவினிலே என்று கூறத்தக்க பருவமுடன் அழகு தவழ் உருவினரும், அலைக்கு இரையாகிப் போயிருப்பர்! அரும்புகள் பலப் பலவும் அழிந்திருக்குமே. தள்ளாடும் நடையெனினும், தாத்தா! என்றழைத்திடும் மழலை மொழிக் குழவியுடன் மாதரசியும் மகனும் இருக்கின்றான் என்ற எண்ணம் களிப்பளிக்க இருந்து வந்த பெரியவர்கள் பற்பலரும் மடிந்திருப்பர், உயிர் குடியாமுன் மடிந்திடேன் என உரைத்து எழும்பி வந்த அலைகளாலே! என்னென்ன நடந்திருக்கும், எத்தகு ஓலம் எழும்பியிருந்திருக்கும், உயிர்தப்ப ஏதேது முயற்சிகளைச் செய்திருப்பார், எல்லாம் பயனற்றுப் போயின என்றுணர்ந்து, இறுதியாய், இதயத்திலிருந்து அலறல் எவ்விதத்தில் பீறிட்டுக் கிளம்பி வந்திருக்கும் என்பதனை எண்ணிடும்போதே, உள்ளம் நைந்துவிடுவதுபோலாகிறது, என் செய்வோம்; பேரிழப்பை எண்ணி, பொங்கிடும் கண்ணீரல்லால், தந்திட வேறென்ன உண்டு; பொறுத்துக்கொள்க என்று, இழந்தனனே என் மகனை! இழுத்துச் சென்றதுவே என் அரசை! வாழ்வளிக்க வந்தவனை வாரிக் கொடுத்துவிட்டுப் பாழ் மரமானேனே, பாவி நான்! என்றெல்லாம், பதறிக் கதறிடுவோர்க்கு அவர் ஓலம் கேட்டு, காலம் மூட்டிவிட்ட கொடுமையிது எனக்கூறி, கண்ணீர் சொரிவதன்றி, பிறந்தவர் இறந்தே போவர், இறப்பும் ஓர் புது வாழ்க்கையின் பிறப்பாம் என்றெல்லாம் “தத்துவம்’ பேசிடவா இயலும்? நாமென்ன, முற்றுந் துறந்து விட்டோம் என மொழியும் முனிவர்களோ! இல்லையன்றோ! இருந்தான் பலகாலும், பெற்றான் பல நலனும் நோய் வந்துற்று மறைந்தான், மறையுமுன் மாடு மனையுடனே மகிழ்ந்திருக்கும் விதமாகப் பெரியதோர் குடும்பத்தை அமைத்தான் சீராக என்று கூறிடத்தக்க நிலையினிலே இறந்துபடுவோர்க்காகக்கூட இதயமுள்ளோர் கண்ணிர் சிந்திடுவர், கவலைகொண்டிடுவர். தெற்கு முனையிலே நேரிட்ட பேரிழப்புக் கண்டோம், மரணம் இயற்கை என்று கூறி எங்ஙனம் ஆறுதல் பெற இயலும்! இது, எந்தமிழ் நாட்டினிலே, என்றும் நடந்திராத, சிந்தையை வெந்திடச் செய்யும் பெருவிபத்து, பேரிழப்பு! ஆறுதல் கூறுவதோ, பெறுவதுவோ எளிதல்ல.

கொடும் அலைக்குப் பலியானோர் விட்டுச் சென்ற குடும்பத்து மற்றவர்கள் தம்மை நம் உற்றார் உறவினர் என்று கொண்டு, அழித்தது அலை, அரசு அணைத்தது என்றவர் எண்ணும் வண்ணம், உயிர் குடித்தது அலை வடிவிலே வந்த கொடுமை, வாழ்வளித்தனர் அன்னையாகி இவ்வரசு எமக்கு என்று கூறத்தக்க விதத்தில் அரசு திட்டமிட்டுத் தக்கனவற்றை விரைந்து செய்தளிக்க வேண்டும். நாட்டினர் அனைவருமே, ஒருமித்துக் கேட்டிடுகின்றனர் அரசை, வீடிழந்து, தொழிலிழந்து, பெற்றோர் உற்றார் இழந்து, பெற்றெடுத்த செல்வந்தனை இழந்து அழுது கிடக்கின்ற மக்களுக்கு, புதுவாழ்வு, முழுவாழ்வு நல்வாழ்வு அளித்திட, பொருள் அளவு அதிகமாமே என்றெண்ணி மருளாமல், பரிவுடன் அவர் நிலையைப் பார்த்து, நலன்தேட முனைந்திடுதல் வேண்டும் என்று. அழிவு ஒரு நாள், அழுகுரல் ஆறு நாள், வேண்டுகோள் ஒரு நாள், ஆகட்டும் பார்க்கலாம் என்று சில நாள், பிறகு “அதது அததன்’ வழிப்படி சென்றிடும் என்ற முறையிலே எண்ணத்தை ஓட விட்டுவிடாமல், தமிழக மக்கள் மனம் குளிர, பிறநாட்டவரும் கேட்டு மகிழத்தக்க விதத்தில், அரசு செயலாற்ற வேண்டுகிறோம். செய்வர் என்று எண்ணி, அந்த நம்பிக்கை தன்னையே ஒளியாக்கிக்கொண்டு, இருண்ட கண்களில் அதனை ஏற்றி, விழாவினுக்குரிய இந்நாளில், தமிழகத்தோர்க்கு என் கனிவுமிகு வாழ்த்துக்களைச் செலுத்துகின்றேன்.

அணைத்த கரம் அடிக்கிறது, ஆனால், அடித்தது போதுமென்றெண்ணி மீண்டும் அணைத்துக்கொள்கிறது போலும். தம்பி! இயற்கையாள் தந்திடுவனவற்றைப் பெற்று, வாழ்வில் ஏற்றம் பெற்று, சிலர் மட்டும் வாழ்ந்திருத்தல் நன்றன்று. நாம் எவை எவை பெற்று இன்புற்றிருக்கின்றோமோ, அவைதமை அனைவரும் பெற்று மகிழ்ந்திடுவதே முறை, அதற்கே உளது இயற்கைச் செல்வம். பொங்கற் புதுநாளன்று இக் கருத்து நம் நெஞ்சில் ஏற்கவேண்டும், ஊறவேண்டும். கனியெலாம் சிலருக்கு, காய்சருகு பலருக்கு; ஒளியில் சிலர், பாழ் இருளில் பலர்; வாழ்வார் சிலர், வதைபடுவார் பலர்; எனும் நிலைகாண அல்ல; இத்தனைக் கோலம் காட்டி எண்ணற்றனவற்றை ஈந்து, என்றும் இளமையுடன் இயற்கையாள் கொலுவீற்றிருப்பது. அதிலும் தம்பி! இன்பத் தமிழகத்தினிலே, இயற்கையாள் தீட்டி வைத்துள்ள கோலம், எண்ண எண்ண இனிப்பளிப்பதாக உளது. நாமணக்கப் பாடிய நற்றமிழ்ப் புலவோரின் பாக்களில் காண்கின்றோம், பற்பல படப்பிடிப்பு.

இயற்கைப் பொருள் ஒவ்வொன்று பற்றியும் மிகுந்த நுண்ணறிவுத் திறனுடன் புலவர்கள் கூறியுள்ளனர்; மலை, மரம், மடுவு, அலை, அடவி, கலகம், புலம், அருவி, வாவி, குளம் எனும் எவை பற்றியும் அந்நாளில் தாம் கண்டனவற்றைச் சுவைபட எடுத்துக் கூறியுள்ளனர் புலவர் பெருமக்கள். இயற்கையின் எழில், அந்த எழிலைக் காட்டும் பலவடிவங்கள், வகைகள் இவை மட்டும் காணக் கிடைக்கும் பட்டியலல்ல அந்தப் பாக்கள். விளக்கின் ஒளிகொண்டு வேறு பொருளைக் காட்டிடும் பான்மைபோல, இயற்கைப் பொருள்களைக்கொண்டு, இன்னுரை, நல்லுரை, வாழ்வு முறை என்பனவற்றை எடுத்துக்காட்டியுள்ளனர். இவை யாவும், தம்பி! அன்றோர் நாள்!! இன்று அந்த “அந்தநாள் சிறப்பினை’ மீண்டும் கண்டிட ஓர் சீரிய முயற்சியினில் ஈடுபட்டுள்ளனர் இந்நாளில். விழிப்புற்ற, கற்ற தமிழ் மறவாத மரபழிக்கும் மாபாதகம் வெறுத்திடும் தமிழ்ப் புலவோர். இடையிலேயோ! உயர உயரச் சென்றுவிட்டோம்! கொண்டு சென்றுவிட்டனர் தமிழர்களை! முல்லை பறித்திடச் சென்ற மங்கையை, வேழம் விரட்ட விருது பெற்ற வீரன் கண்டனன் என்ற கதை கூறினரன்றோ அந்த நாள் புலவோர்! ஓ! ஓ! இது மட்டுந்தானோ கூற இயலும் இவர்களால், நாம் கூறுகின்றோம் கேளீர் “மேல் உலக’க்காதை என்று அழைத்தனர் இடையில் வந்தோர்; பாரிஜாதம் காட்டினர், பாற்கடல் காட்டினர், பாசுபதம் காட்டினர், பற்பல விந்தைகளைக் காட்டினர், தமது காதைகளில்! உள்ளதை மறந்தனர் தமிழர்! உருவாக்கப் பட்டனவற்றைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டனர். அதன் காரணமாகவே, பல்வேறு விழாக்கள் — பண்டிகைகள் — தமிழகத்திலே மேற்கொள்ளப்பட்டன. பொங்கற் புதுநாள் அதுபோன்றதல்ல, இது நமது விழா; நம்மை நாம் உணர உதவும் விழா; இடையிலே படர்ந்தனவற்றை நீக்கி, தமிழரின் உள்ளத்தை மாசறு பொன்னாக்கி, ஒளிவிடு முத்து ஆக்கிடத்தக்க நன்னாள். பொங்கிற்று! பொங்கிற்று! பொங்கலோ பொங்கல்! என ஒஎழுப் பிவிடுவதனால் மட்டும் அல்ல! நான் முன்னம் கூறியுள்ளபடி, பொருள் உணர்ந்து பாடம் பெறுவதனால்!!

பெறவேண்டுவனவற்றைப் பெற்றிடும் முயற்சியில் ஈடுபடுவதிலே ஏற்படக்கூடியது ஆர்வம்; இருந்ததை, இடையில் இழந்ததை மீண்டும் பெற்றிட எடுத்துக்கொள்ளப்படும் முயற்சி இணையற்ற எழுச்சியை ஊட்டிவிடுமன்றோ? அந்த எழுச்சி பெற்ற நிலையில், பொங்கற் புதுநாளை, புதுமையினைச் சமைத்திடும் பேரார்வம் பொங்கிடும் நாளாகக் கொண்டுள்ளனர். எனவேதான் தம்பி! நாட்டு வளம்பற்றி, மக்கள் நிலை குறித்து, அரசு முறைபற்றி, அறநெறி குறித்து, தாழாத் தமிழகம் என்ன கருத்துக் கொண்டிருந்தது என்பதனைக் கண்டறியும் ஆர்வம் மிகுந்துளது. இந்த ஆர்வத்தை மேலும் பெற்றிடச் செய்திட வேண்டும், பொங்கற் புதுநாள். இயற்கைச் செல்வம் இத்துணை பெற்றிருந்த இன்பத் தமிழகத்தில் இன்னல் கப்பிக்கொண்டிருக்கக் காரணம் என்ன என்று கண்டறிய வேண்டாமோ? கண்டறிய, உலகின் பல்வேறு இடங்களிலே இயற்கையாள் அளித்துள்ளன யாவை? ஆங்கு உள்ளோர் அவற்றினை எம்முறையில் பயன்படுத்தி ஏற்றம் கண்டுள்ளனர்? அம்முறையில், நாம் பெறத்தக்க அளவு யாது? பெற்றிடும் வழி என்ன? என்பனவற்றை அறிந்திடவேண்டுமன்றோ? வேண்டுமாயின், உலக நாடுகளின் வரலாற்றினை ஓரளவாகிலும் நாம் அறிந்திடவேண்டுமே? அறிகின்றோமா? மாலை நேரத்தில் மாபெரும் நகரங்களில் கூடி மக்கள் கூட்டம் இதுபோது பல்வேறு நாடுகளின் வரலாறு பற்றிய விரிவுரையையா கேட்டுப் பயன் பெற்று வருகிறது! இல்லையே! போகப்போகும் இடம்பற்றிய கதைகளை அல்லவா, இருக்கும் இடத்திலே இடரும் இழிவும் நீக்கிடும் முயற்சியை மேற்கொள்ளாத மக்கள் கேட்டு இன்புறுகின்றனர். இந்நிலையில் நாட்டவர் இருந்திடின், உலகின் நிலையினை உணர வழி ஏது, உணர்ந்து நம் நாட்டை நமக்கேற்ற நிலையினதாக்கிடும் முயற்சியில் ஈடுபடுவது ஏது?

இங்கு வயலின் அளவு மிகுதி, விளைச்சலின் அளவு குறைவு என்கிறார்கள்.

பொருள்கள் இங்கு மிகுதியும் பெற்றிடலாம். ஆனால் பெற்றோமில்லை என்கிறார்கள்.

பெருகிடும் பொருளைக்கூட. சீராகப் பகிர்ந்தளித்தால் சமூக நலன் மிகும்; செய்யக் காணோம் என்கின்றார்கள்.

முப்புரம் கடலிருக்கிறது. ஆனால், கப்பல் வாணிபம் தேவைப்படும் அளவு இல்லை; மிகமிகக் குறைவு என்கின்றனர்.

இரும்பு கிடக்கிறது புதைந்து; ஆனால், எஃகு ஆலைதான் அமைக்கப்படவில்லை என்கின்றார்கள்.

கத்தும் கடல்சூழ்ந்த இடம் இது; எனினும், மீன்பிடி தொழிலும் வளரக் காணோம் என்கின்றார்கள்,

பொது அறிவு வளம் மிக்கவர் இவர் என்கிறார்கள், எனினும், புத்தறிவு பெற்றிடவில்லை என்று கூறுகிறார்கள்.

விழி உண்டு பார்வை இல்லை; வாயுண்டு பேசும் திறனில்லை; வளமுண்டு, வாழ்வு இல்லை; இதுபோல, நம் நாடு பற்றிப் பேசிடக் கேட்கின்றோம்.

ஏன் இந்த நிலை? எதனால் இம் முரண்பாடு? எவர் செய்த செயலால் இந்தச் சீரழிவு? என்பதனைக் கண்டறிய வேண்டாமோ? வளரவேண்டிய முறையிலும் அளவிலும் பயிர் வளரவில்லை என்றதும் உழவன், தம்பி! என்னென்ன எண்ணுகிறான்? என்னென்ன கேட்கின்றனர் அவனை, பூமிநாதர்கள்!!

நாடு முழுவதிலும் இன்று உள்ளதோர் நலிவுநிலை குறித்து, காரணம் கண்டறிய, கேடு களைந்திட, நலம் விளைவித்திட நன்முயற்சியில் ஈடுபடவேண்டாமோ? இல்லையே, அந்த நன்முயற்சியும், ஒருவரிருவர், சிறு குழுவினர் மேற்கொண்டால் பலன் மிகுந்திராது, கிடைப்பதும் அவர்க்கு மட்டுமன்றோ போய்ச் சேரும்? நாடு வளம் பெற, பெற்றவளம் அனைவருக்கும் பயன்பட, பயன்படும் முறையை எவரும் பாழாக்காதிருந்திட, தனித் தனியாக முயற்சி செய்யப்படுவது, வளர்ந்துவிட்டுள்ள சமுதாயத்திலே முடியாததாகும். இதற்கான முயற்சியினை மேற்கொள்ளவேண்டுவது, அரசு.

அரசு, தம்பி! அமைந்துவிடுவது அல்ல, நாம் அமைப்பது. அரசு நடாத்துவோரும், இதற்கென்று எங்கிருந்தோ எல்லாவிதமான ஆற்றலையும் பெற்றுக்கொண்டு இங்கு வந்தவர்கள் அல்லர்; நம்மில் சிலர், நமக்காக, நம்மாலே நமை ஆள அமர்த்தப்பட்டவர். பொருள் என்ன? விதைக்கேற்ற விளைவு! அரசு அமைத்திடும் திறம் நமக்கு எவ்விதம் உளதோ அதற்கு ஏற்பவே அரசு! எனவே, நாட்டு வளம் காண அரசு முயற்சியில் ஈடுபடல் வேண்டும் என்று கூறிவிட்டு, நாம் கைகட்டி வாய்பொத்திக் கிடந்திடின் பயன் இல்லை; நல்லரசு அமைத்திடும் முயற்சியினைத் திறம்பட மேற்கொண்டு அதிலே நாம் வெற்றி பெற்றிடல் வேண்டும். உழவன் பெற்ற வெற்றிகளன்றோ உன்னைச் சுற்றி இன்று! செந்நெலும், காயும் கனிவகையும், உண்பனவும் உடுப்பனவும், பூசுவனவும், பூண்பனவும்!! அவன் பெற்ற வெற்றிக்காக எத்துணை உழைப்பினை நல்கினான், நாடு முழுவதும் வளம்பெற, ஓர் நல்லரசு அமைத்திட வேண்டுமே, அந்தப் பணிக்காக நாம் எத்தனை அளவு உழைத்துள்ளோம்? அதுகுறித்து நம் மக்கள் எந்த அளவு தமது சிந்தனையைச் செலவிடுகின்றனர்? சிந்தனையில் எந்த அளவு தெளிவு பெற்றுள்ளனர்? தெளிவு பெற்றிடத்தக்க நிலையில், எத்தனை பேர்களுக்கு வாழ்க்கை அமைந்திருக்கிறது? எண்ணிப் பார்த்திடும்போது தம்பி! ஏக்கம் மேலிடும். ஆனால், ஏக்கம் மேலிட்டு ஏதும் செய்ய இயலா நிலையினராகிவிடின் நாடு காடாகும்; மக்கள் பேசிடும் மாக்களாவர். எனவே, அந்த ஏக்கம், நம்மைச் செயல்புரிய வைத்திடும் வலிவாக மாறிட வேண்டும்; மாற்றிட வேண்டும். உலகிலே பல்வேறு நாடுகளில், இடர்ப்பட்ட மக்கள், இழிவு நிலையினில் தள்ளப்பட்ட மக்கள், துக்கத்தால் துளைக்கப்பட்டு, ஏக்கத்தால் தாக்கப்பட்டு, இதயம் வெந்து, இடுப்பொடிந்து ஏதும் செய்ய இயலாத நிலையினராகி விட்டவர்போக, சிலர் — மிகச்சிலர் — துணிந்து எழுந்தனர், எதிர்த்து நின்றனர், வெற்றி கண்டனர். பெருமூச்சிலிருந்து புன்னகை பிறந்தது! சிறைக் கோட்டங்களிலிருந்து மக்களாட்சி மன்றங்கள் அமைந்தன. வெட்டுண்ட தலைகளிலிருந்து கொட்டிய இரத்தத் துளிகள், கொடுமையை வெட்டி வீழ்த்தும் கூர்வாளாயின!

இதுபோல் ஆகும் என்பதனை அன்றே உணர்ந்து உரைத்தார் பொய்யா மொழியார்.

ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்

என்பதாக. கொடுமைக்கு ஆளான மக்கள் கொட்டிய கண்ணீர், ஆதிக்கக் கோட்டைகளைத் தூளாக்கிடும் வெடிகுண்டுகளாயின. வரலாறு காட்டுகிறது, வல்லூறை விரட்டிய சிட்டுக்குருவிகளின் காதையை! நமது மக்களுக்கு இதனை எடுத்துக் கூறுவார் யாருளர்! கூறாதது மட்டுமோ! கருங்குருவி மோட்சம் பெற்ற காதையும், கரிவலம் வந்த சேதியுமன்றோ அவர்கட்கு இசை நயத்துடன் கூறப்பட்டு வருகிறது.

தம்பி! ஊர்ந்து செல்லும் ஆமையைக்கூட, பாய்ந்து செல்லும் புரவிகள் பூட்டிய வண்டியில் வைத்தால், போய்ச் சேரவேண்டிய இடத்திற்கு விரைவாகவும் எளிதாகவும் போய்ச் சேரும். இங்கு நாம் ஆமைகள் பூட்டிய அலங்கார வண்டியில் பாய்ந்தோடவல்ல குதிரையை ஏற்றி வைத்து, ஒரு விந்தைப் பயணம் நடத்திப் பார்க்கிறோம். கனி பறித்துச் சாறு எடுத்துப் பருகிடுவார் உண்டு; முறை; தேவை. இங்கு நாமோ, கனி எடுத்துச் சாறுபிழிந்து, அந்தச் சாற்றினைக் காய்கள் மேல் பெய்து தின்று பார்க்கின்றோம்.

இந்த நாட்டிலேதான் தம்பி! இந்த இருபதாம் நூற்றாண்டில், இத்தனை திரித்துக் கூறுவதும் இருட்டடிப்பிலே தள்ளுவதும், இட்டுக் கட்டுவதும், இழிமொழி பேசுவதும் தாராளமாக நடத்திச் செல்ல முடிகிறது, ஆதிக்கக்காரர்களால். இங்கு நாம் மனிதத் தன்மைக்காகவும், பகுத்தறிவுக்காகவும் வாதாடினால், நாத்திகப் பட்டத்தைச் சுமத்திவிடுவதும்,

ஒற்றுமைப்பட வேண்டும், பேதம் கூடாது, அதனை மூட்டிடும் ஜாதிகள் கூடாது என்று பேசினால், சமுதாயக் கட்டினை உடைக்கிறோம் என்று பழி சுமத்துவதும்,

பெண்ணை இழிவுபடுத்தாதீர் என்று பேசினால், ஒழுக்கத்தைக் கெடுக்கிறோம் என்று ஓலமிடுவதும்,

ஏழையின் கண்ணீரைத் துடைத்திடுக! என்று கூறினால், வர்க்கபேதமூட்டிப் புரட்சி நடத்தப் பார்க்கிறான் என்று பேசிப் பகை மூட்டியும்,

ஆட்டிப் படைக்கும் அளவுக்கு அதிகாரத்தை ஓரிடத்தில் குவித்து வைத்துக்கொள்வது நல்லதல்ல; அதிகாரத்தைப் பரவலாக்கிடுக! என்று கூறினால், அரசு அமைப்பை உடைக்கப் பார்க்கிறான் என்று கொதித்தெழுந்து கூறியும், நாம் மேற்கொள்ளும் முயற்சிக்கு மக்களின் நல்லாதரவு கிடைத்திடுவதைத் தடுத்திடும் நோக்குடன் செய்து வருகின்றனர்.

தம்பி! தம்பி!! தூய தமிழுக்காகப் பேசிப்பார்! ஓ! இவனுக்கு “மொழி வெறி’ என்று கூறிக் கிளம்புவர் கோலோச்சும் குணாளர்கள்.

சங்கத் தமிழ் மணக்கும் தமிழகத்தவர்க்கும் சேர்ந்தா இந்தியெனும் ஆட்சிமொழி என்று கேட்கின்றோம்; தேச பக்தி அற்றவர்கள் என்றன்றோ தூற்றப்படுகின்றோம்?

கண்ணீர் வடித்திடுகின்றனரே பல லட்சம் தமிழர் கடல் கடந்து சென்றுள்ள நாடுகளிலே, கொடுமையாளர்களால் என்று பேசும்போது, இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் பகை மூட்டுகிறான்; பாதுகாப்புச் சட்டத்தின்படி இவனைப் பிடித்தடைக்க வேண்டும் என மிரட்டுகின்றனர்.

தொழில்கள் மிகுதியாக நாட்டின் ஓர் பகுதியில் குவிந்திடல், பொருளாதார ஏற்றத்தாழ்வை உண்டாக்கிடும்; எனவே, புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கும் தென்னகத்தில் புதுப் புதுத் தொழிலைத் துலங்கிடுக! என்று கூறிடுவோரை “பாரதப் பண்பு’ அற்ற மாபாவிகள் என்று ஏசுகின்றனர்.

தொழிலில், பெருத்த வருவாய் தரத்தக்கனவற்றை எல்லாம் முதலாளிகளிடம் விட்டுவிடுகின்றீர்களே, இதுவோ சமதர்மம் என்று கேட்டிடின், இவன் தொழில் வளர்ச்சியைக் கெடுக்க முயலுகிறான் என்று கூறுகின்றனர்.

சர்க்கார் துவக்கி நடத்தும் தொழில்களில், தக்க வருவாய் பெறவில்லையே! இது முறையல்லவே! என்று பேசிடின், இவன் சர்க்கார் துறையை வெறுப்பவன், சுதந்திரக் கட்சியினனாகிறான் என்று கலகப் பேச்சை மூட்டிவிடுகின்றனர்.

கண்மண் தெரியாமல் கடன் வாங்கிக்கொண்டு போகிறீர்களே, இது பெருஞ்சுமையாகிவிடுமே, எதிர்காலச் சந்ததி இடர்ப்படுமே! என்று கூறிடின், நாடு வளம் பெற வழி தேடினால் இவன் குறுக்கே நிற்கிறான் என்று குறைகூறுகின்றனர்.

விலைகள் ஏறியபடி உள்ளனவே என்றால், இதைக் கூறி, அரசியல் இலாபம் தேடப் பார்க்கிறான் என்கிறார்கள்.

ஊழல் மலிந்திருக்கிறதே, ஊடுருவிக் கிடக்கிறதே என்றால், எத்தனையோ நாடுகளில் இதுபோல என்று சமாதானம் கூறுகின்றனர்.

தம்பி! எடுத்துரைக்கும் எதனையும் மதித்திட மறுக்கின்றனர்; திரித்துக்கூற முற்பட்டுவிடுகின்றனர். ஏடுகளிலே மிகப்பல இதற்குத் துணை செய்கின்றன. இந்நிலையில், இவ்வளவு பேர்களாகிலும், துணிந்து பேசுகின்றனரே என்பது உள்ளபடி பாராட்டி வரவேற்கப்படவேண்டியதே.

நாடே போர்க்கோலம் பூண்டுவிடும் நேரத்தில், நானும் அதில் கலந்திருந்தேன் என்று கூறிக்கொள்வதிலே கிடைத்திடும் பெருமை அதிகமில்லை; இன்று நம்முடன் நாட்டவரில் பலர் இல்லை, நல்லறிவு கொளுத்தி நல்லாட்சி காணப் பாடுபடும் கடமையுடன் பணியாற்றவேண்டிய இதழ்களில் பல இல்லை என்ற நிலையில், எவர் வரினும் வாராதுபோயினும், இன்னலுடன் இழிவு சேர்ந்து வந்து தாக்கினும், இவன் நமக்காகப் பாடு படுகிறான் என்பதனைக் கூறிடவும் பலருக்கு நினைப்பு எழாது போயினும், எத்தனை சிறிய அளவினதாக இப்படை இருப்பினும், இதிலே நான் இருந்து பணி புரிவேன்; என் இதயம் இடும் கட்டளையின்படி நடந்திடுவேன்; என் நாட்டைக் கெடுக்க வரும் எதனையும், எவரின் துணைகொண்டு வந்திடுவதாயினும், எதிர்த்து நிற்பேன், சிறைக்கஞ்சேன், சிறுமதியாளர்களின் கொடுமைக்கஞ்சேன், செயலில் வீரம், நெஞ்சில் நேர்மை, உறுதி கொண்டிட்டேன், செல்வேன் செருமுனை நோக்கி என்று சென்று அணிவகுப்பில் சேர்ந்துளரே அவர்க்கே பெருமை அளவிலும் தரத்திலும் மிகுதி! மிகுதி!

அத்தகைய அணிவகுப்பில் தம்பி நீ உள்ளாய்; அகமகிழ்ச்சி எனக்கு அதனால்; உன் ஆற்றல் நானறிவேன், “நானிலம்’ அறியும் நாளும் வந்தே தீரும். பூத்த மலரிலெல்லாம் வாசம் உண்டு; நுகர்வோர் குறைவு என்றால், மலர்மீது அல்ல குற்றம். இதோ இந்தப் பொங்கற் புதுநாளன்று, எத்தனையோ இல்லமதில், என் அப்பா சிறை சென்றார்! என் அண்ணன் சிறை சென்றான்! என் மகன் சிறை சென்றான்! செந்தமிழைக் காத்திடவே, சிறை சென்றான் என் செம்மல்! என்று பேசிப் பெருமிதம் அடையத் தான் செய்வர். பலப் பல இல்லங்களில், பாற்பொங்கல் இன்றிங்கு, பண்பற்ற ஆட்சியாளர் என் மகனை இங்கிருக்க விட்டாரில்லை; இருட்சிறையில் அடைத்திட்டார்; இருப்பினென்ன! கண் கசிய மாட்டேன் நான், கடமை வீரனவன்! காட்டாட்சி போக்குதற்குப் போரிட்டான்; மகிழ்கின்றேன் என்று கூறிடுவர், தமிழ் மரபு அறிந்ததனால்.

பொங்கற் புதுநாளில் எத்தனையோ இல்லமதில், இணைந்து நம்மோடு இல்லாது போயிடினும், நம்மைப்பற்றி எண்ணாதார், இலலை என்று கூறிடலாம். மக்களைத் தாக்கிடும் கேடு எதுவானாலும், கேட்டிட முன்வருவோர் கழகத்தார்! ஆமாம்! அவர்கள் கேட்ட உடன், பாய்கின்றார் அரசாள்வோர், எனினும் பயமும் கொள்கின்றார்; பாவிமகன் கழகத்தான் பற்பலவும் கூறித்தான், அம்பலப்படுத்தி நம் ஆட்சிக்கு ஆட்டம் கொடுத்தபடி இருக்கின்றான் என்றஞ்சிக் கிடக்கின்றார் ஆளவந்தார் எனப்பேசிச் சிரித்திடுவர். புள்ளினம் கூவினதும், பூக்கள் மலர்ந்ததும், புறப்பட்டான் கதிரவனும், புறப்படுவோம் துயில்நீங்கி என்று எல்லா மாந்தருமா கிளம்புகின்றார்? கிளம்பாதுள்ளோர் கண்டு கதிரவன் கவலை கொள்ளான். பாடிடவோ மறவாது புள்ளினந்தான், மலர்ந்து வரவேற்கும் பூக்களுமே! தம்பி! கதிரவனாய், கானம் பாடிடும் வானம்பாடியாய், மணம் பரப்பிடும் மலராக நீ இருக்கின்றாய். மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு, மாசற்றது உன் தொண்டு என்பதனால், நாம் ஈடுபட்டுள்ள பணி எதனையும் எடுத்தாய்ந்து பார்த்திட்டால், தூயது அப்பணி, அறிவாளர் வழிநின்று ஆற்றுகின்றோம் அப்பணியினை என்பதனை அறிந்திடலாம். வந்து புகுந்து கொள்ளும் இந்தியினை எதிர்க்கின்றோம்; இடரில் தள்ளுகிறார் இந்திக்குத் துணைநிற்போர்; இழித்துப் பேசிவிட்டு எனக்கென்ன சுவைப்பண்டம் என்று கேட்டு நிற்கின்றார் மாற்றார் தொழுவத்தில், மரபழித்தார்; ஆயினுமென்! நம் கடமைதனை நாம் செய்தோம் என்ற மனநிறைவு நமக்கு இன்று; நாளை வரலாற்றில் அதனைப் பொறித்திடுவர். எதிர்த்தாய் என்ன பயன்? இந்தி ஏறும் அரியாசனம் என்பது உறுதியன்றோ! என்று கேட்பாரும் உளர்; கெடுமதியால் நடமிடுவோர் கேட்டிடட்டும். கேலியாம் அம்மொழியும் நம் விலாவை வேலாகக் குத்தட்டும்; ஈட்டியாய் அப்பேச்சு நம் இதயத்தில் பாயட்டும்; இருக்கும் வீரம் பன்மடங்கு கொப்பளித்து எழட்டும்; தூற்றுவோர் தூற்றட்டும், தொடரட்டும் நமது பணி என்போம் நாம். மலக்குழி கண்டேன் நான், ஒதுங்கி நடக்கின்றேன். மலமே உனக்கு மணமளிக்குதே அந்தோ! என்றுகூட நாம் அன்னவரைக் கேட்டிடல் வீண் வேலை. எதிர்த்து வந்த சிறுத்தையினை எதிர்த்து நின்றேன் வீரமாய் நான்; என் உடலில் அதன் கீறல். பற்கள் படிந்துள்ள நிலைதான்; குருதி கசிகிறது உண்மை; சொல்ல நான் துடிதுடித்தேன், எனைத்தாக்கி ஓடிப்பதுங்கி, உறுமிக்கிடக்கிறது அச்சிறுத்தை? கூடி அதனைத் தாக்கிக் கொன்றுபோட வாராத கோழையே! என்னை நீ கேலிவேறு செய்வதுவோ! சிறுத்தையின் வாயினிலே கசியும் செந்நீரைப் பானமாய்ப் பருகும் ஈ, எறும்பு, பூச்சி, நீ! என்று கூறிடலாம் ஏசித்திரிவோரை! வீண் வேலை! நேரம் இல்லை! நம்மாலானவற்றை நாம் செய்தாக வேண்டும்; நாமிருந்தும் இந்திக்கு எதிர்ப்பு இல்லை என்ற பேச்சு எழவிடோம், இது உறுதி.

மொழித் துறையினிலே புகுத்தப்படும் அக்கிரமம் நிறைந்த ஆதிக்கம், அத்துடன் நில்லாது. காலிலோ கரத்திலோ எந்த இடத்திலே கருநாகம் தீண்டிடினும், உடலெங்குமன்றோ விஷம் பரவி உயிர் குடிக்கும். அஃதேபோல, மொழித் துறையினிலே ஆதிக்க நச்சரவு பதித்திடும் பல்லினின்றும் கக்கிடப்படும் நஞ்சு, தமிழரின் உடல் முழுவதிலும் பரவும்; வாழ்வு அழியும்.

மொழி ஆதிக்கம், நிர்வாக ஆதிக்கத்துக்கு இடமேற் படுத்தும், அஃது பொருளாதார ஆதிக்கத்திற்கு வழிகோலும், பிறகோ தமிழர் அரசியலில் அடிமைகளாகி, அல்லற்படுவர். இதனை அறிந்தோர் கூறி வருகின்றனர்; ஆலவட்டம் சுற்றிடுவோர் மறுத்துப் பேசி, ஆளவந்தார்களை மகிழ வைக்கின்றனர்.

எமக்கேன் விடுதலை!! விடுதலை பெற்றால் நம்மைக் காத்திடும் பொறுப்பினை எவர் ஏற்றுக்கொள்வர்? வேலைக்கு வழி ஏது? சோற்றுக்கு வழி ஏது? செத்துவிடத்தான் இது வழி. ஆகவே, விடுதலை வேண்டாம்!! வெள்ளை எஜமானர்களின் பாதமே நமக்குப் பாதுகாப்பு என்று நீக்ரோக்களில் சிலரைப் பேசவைத்தனர் வெள்ளை வெறியர்கள். . ., விடுதலைக் கிளர்ச்சியைத் துவக்கிய நாட்களில்.

இங்கு நம்மிடையே உள்ளோரில் சிலர் இந்தி ஆட்சி மொழியானால் என்ன என்று கேட்கும்போது, தம்பி! எனக்கு அந்தப் பழைய நிகழ்ச்சிதான் நினைவிற்கு வருகிறது. உடலிலேயே தான் நோய் தங்கி இருந்து, உடன் இருந்தே கொல்லுகிறது; பாசி, குளத்திலேயேதான் உண்டாகிறது; களை, வயலிலேயேதான் முளைக்கிறது, காட்டிக் கொடுப்போரும் அதுபோன்றே நமது சமுதாயத்திலேயே உள்ளனர், மினுமினுப்புடன், மிடுக்குடன், துரைத்தனத்தாரின் மேய்ப்புத் தேய்ப்புப்பெற்று!! காட்டுக் குதிரைக்கு ஏது, தங்கமுலாம் பூசப்பட்ட கடிவாளம்? இல்லையல்லவா! நாட்டிலே, பூட்டுவார்கள் விலையுயர்ந்த கடிவாளம் குதிரைக்கு. எதற்கு? நாம் ஏறிச் செல்லும் வண்டியை அக்குதிரை இழுத்துச் செல்ல வேண்டுமே! காண்போர் எப்படிப் பட்ட விலை உயர்ந்த குதிரை என்று கண்டு அதனை உடையவரைப் பாராட்ட வேண்டுமே. . . அதற்காக! அதுபோல, தமிழரில் சிலர் உளர்.

தம்பி! மொழிப் பிரச்சினைபற்றி நான் குறிப்பிட்டதற்குக் காரணம் இந்த ஆட்சி, எப்படியெப்படி ஆதிக்கத்தைப் புகுத்துகிறது என்பதனை எடுத்துக் காட்டிட மட்டுமல்ல; வித்தகர்களின் பேச்சுக்கும் மக்களின் மனக் குமுறலுக்கும் ஒரு துளியும் மதிப்பளிக்காத மமதை கொண்டதாக இருக்கிறதே இந்த அரசு, இவர்களிடமிருந்து எவர்தான் எந்த நியாயத்தைத்தான் எதிர்பார்த்திட முடியும்!. . . என்பது குறித்து எண்ணிடும்போது ஏற்படக்கூடிய திகைப்பையும் எடுத்துக் காட்டத்தான்.

தம்பி! அதோ காண்கிறாயே, கொதி வந்ததும், சோற்றைப் பார்க்கிறார்கள்; அரிசி, சோறாகி இருக்கிறது. அரிசிதானே! அதனுடன் கலந்த கல்லுமா? இல்லையே! கல் கல்லாகவேதான் இருக்கிறது, எத்தனை தீ அதனைத் தாக்கிடினும். வேகக் கூடியதைத்தான் வெந்திடச் செய்யலாம். அடுக்களை எடுத்துக் காட்டும் இந்தப் பாடம் அரசியலுக்கும் பொருந்தக்கூடியதே. இந்த பானை, வேகும் பண்டம் கொண்டதல்ல, இது வெந்து சுவை தரும் பண்டமாகும் என்று எத்தனை நேரம் நெருப்பை எரியவிட்டாலும் வீணாகித்தான் போகும், என்பது. எனவே இந்த வேகாச் சரக்கை எடுத்து வீசிவிட்டு வேறு கொள்ளவேண்டும். இன்றுள்ள போக்குடனும் இயல்புடனும் இவ்வரசு இருந்து வருமானால் நாம் இருக்க விட்டுவைத்திருப்போமானால் — எந்த ஒரு பிரச்சினைக்கும், சிக்கு நீக்கப்பட்டு மக்கள் மகிழத்தக்க “பரிகாரம்’ கிடைத்திடாது.

உணவுப் பிரச்சினை, விலை ஏற்றப் பிரச்சினை, தொழில் வளம் சீராக அமையும் பிரச்சினை, வறுமையை ஓட்டும் பிரச்சினை, உரிமைப் பிரச்சினை எனும் எதுவாக இருப்பினும், ஒரு ஆணவம், ஒரு அலட்சியப்போக்கு, எல்லாம் எமக்குத் தெரியும் என்ற முடுக்கு, எவர் எம்மை என்ன செய்துவிட முடியும் என்ற இறுமாப்பு, இவைதான் தலைவிரித்தாடுகின்றன. இதனை ஒவ்வொன்றிலும் பார்க்கிறோம் தம்பி! இலங்கைவாழ் மக்களைக் காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தமும், பர்மாவாழ் மக்களைப் பதைக்கப் பதைக்க அந்த அரசு இங்கு ஓட்டிவிட்டதனைப் பார்த்துக்கொண்டு சிறுவிரலையும் அசைக்காது இருக்கும் போக்கும் எதனைக் காட்டுகின்றன? இந்த அரசு மக்களின் நலன்களை, உரிமையினை, வாழ்வை, துச்சமென்று கருதித் துவைத்திடும் இருப்புக்கால் கொண்டது என்பதைத் தானே!!

இந்நிலையிலுள்ள ஓர் அரசு, நான் குறிப்பிட்டுள்ள முறைப்படி இயற்கைப் பொருளை நுண்ணறிவுடன் விஞ்ஞான முறைப்படி பயன்படுத்திச் செல்வம் பெருகிடச் செய்து, பெருகிடும் செல்வத்தை அனைவரும் சீராகப் பெற்று, இல்லாமை, போதாமை எனும் கேடு களையப்பெற்று, எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடத் தக்க புது முறையை, பொற்காலத்தை அமைத்திடவா முனையும்! வீண், அந்த எண்ணம். அதற்கு ஏற்றது இந்த அரசு அல்ல! சாறு, கரும்பில் கிடைக்கும்! மூங்கிற் கழியில் கிடைத்திடுமோ!

இதனை இன்று உணர்ந்து, சமுதாயத்தின் அழுக்குகளும் இழுக்குகளும் நீக்கப்படத்தக்கதான முறை கண்டு நடாத்தும் ஓர் அரசு அமைத்திடும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

ஓடப்பர் உயரப்பர் எனச் சமுதாயம் பிளவுபட்டிருக்கும் நிலையை மாற்றிட வேண்டும், எல்லோரும் ஒப்பப்பர் ஆகிட வேண்டும் என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

“அதைத்தானே நாங்கள் செய்து வருகிறோம், சமதர்மத் திட்டமிட்டு’’ என்கிறார்கள் ஆளவந்தார்கள்.

இவர்கள் மேற்கொள்ளும் சமதர்மத்தைக் கண்டு நாம் கவலைப்படத் தேவையில்லை, இவர்களின் சமதர்மம் நமது உரிமைகளையும் நமக்குள்ள சலுகைகளையும் பாதுகாத்திடும் சமதர்மம்! ஆகவே, முதலாளிகளே! சமதர்மம் என்ற சொல் கேட்டு மிரண்டிடாமல் இந்தியாவில் எத்தனை எத்தனை ஆயிரம் கோடி முதலையும், அச்சமின்றிப் போட்டுத் தொழில் நடத்திடுவீர்!. . . என்று அமெரிக்க நாட்டு முதலாளிகளுக்கு, அந்நாட்டு அரசியற் பெருந்தலைவர்கள் கனிவாகக் கூறுகிறார்கள்; அமெரிக்கக் கோடீஸ்வரர்கள், இந்தியா போன்ற “சந்தை’ வேறு இல்லை என்று கூறிப் பேரானந்தம் கொள்கின்றனர்.

அமெரிக்க “முதல்’ வேறு எங்கும் ஈட்டிக் கொடுத்திடாத அளவு “வருவாய்’ இந்தியாவிலே அவர்களால் பெறமுடிகிறது. பெயர் சமதர்மம்!!

நாற்பதனாயிரம் தொழில் வணிகக் கோட்டங்கள் இணைந்த பிரிட்டிஷ் தொழில் அமைப்பு, இதுபோன்றே, “நாம் இந்தியா மேற்கொண்டுள்ள சமதர்மத் திட்டம் பற்றிக் கவலையோ அச்சமோ கொள்ளத் தேவையில்லை. சமதர்மம் என்று அவர்கள் சொல்லுவதாலே நாம் தொழிலிலே போட்டிருக்கும் முதலுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்பட்டு விடாது’’ என்று கருத்தறிவித்திருக்கிறது.

பொருள் விளங்குகிறதல்லவா தம்பி! நோஞ்சான். பயில்வான் என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கிறான், அவ்வளவுதான்! முதலாளிகளின் முகாம் இந்தியா. . . அதற்குப் பெயர், சமதர்மம்!!

உண்மை நிலை இதுபோல இருப்பதனால்தான் இவர்கள் நடத்திக்கொண்டுவரும் திட்டம், பணக்காரர்களுக்கே பெரிதும் பயன்பட்டுவிட்டிருக்கிறது. மகனா லோபீஸ் குழு (துரைத்தனமே அமைத்தது) இதனை எடுத்துக்காட்டியும் விட்டது. ஆகவே, ஏழையை வாழ வைத்து, எல்லோரும் பொங்கற் புதுநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிடத்தக்கதோர் நிலையைக் காண வேண்டுமானால், இன்றுள்ள அரசை நம்பிக்கொண்டிருந்தால், ஏமாற்றமடைவோம். கவனித்துப் பார், தம்பி! இஞ்சி போட வேண்டிய இடத்தில் மஞ்சளைப் போடுகிறார்களா என்று! அந்தப் பக்குவத்தைக் கவனி! ஒரு வேளைச் சோற்றுக்கு இவ்வளவு பக்குவம், முறை, தெளிவு, முயற்சி வேண்டும். முந்தானை கொண்டு அந்த வியர்வை முத்துக்களைத் துடைத்துக்கொள்ளக் கூட நேரமின்றி உன் குயிலாள் வேலை செய்த பிறகுதான் தம்பி! உனக்குப் பொங்கல், பால், பழம். உழைப்பு! முறையான உழைப்பு! பக்குவமான முறை! இடமறிதல்! நேரமறிதல்! அளவறிதல்,. . . இத்தனையும் வெறும் சொற்கள் அல்ல!! இவைகளின் வடிவங்களே, மனையிலே காண்கின்றாய்! புதிய சமுதாயம் படைத்திட, இவைகளைக் கண்டு கருத்தறிதல் வேண்டும்.

கண்டு கருத்தறிதலோ கடினம்; ஆனால் தேவை; மிக மிகத் தேவை. அறிந்ததை மற்றவர்கட்கு எடுத்துரைத்தல் அதனினும் கடினம்; மிகமிகத் தேவை.

நாடு வாழ்ந்திட, மக்கள் ஏற்றம்பெற, நம் ஆன்றோர்கள் சான்றோர்கள் கூறியன யாவை என்பதனை ஆய்ந்தறிய இவ்விழா நாளில் முயன்றிட வேண்டும்.

இன்றுள்ள புத்தறிவினர் கூறியுள்ளனவற்றினை அன்றிருந்த நம் ஆன்றோர்கள் கூறியுள்ளனர் என்பது, கண்டு, கண்சிமிட்டி மகிழ்ந்திருப்பது மட்டும் பயன் தராது. அன்று முதற்கொண்டு சொல்லியும் இன்றுவரை அம்மொழி வழி நாம் நடந்தோ மில்லையே என்றெண்ணி வெட்கித் தலைகுனிதல் வேண்டும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே நமக்கு வள்ளுவர் கூறியுள்ளார். கூறி? ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று இந்நாளில் பாரதியார் கூறிக் காட்டவேண்டியதாயிற்று அதற்குப் பிறகும், ஜாதிப் பிடிப்பும் பித்தமும் நீங்கியபாடில்லையே! பேழையில் பொருளை அடைத்து, பேதையொருவன் அதன்மீதே, பட்டினி கிடந்த நிலையில் சாய்ந்திருந்தான் என்றால் — அப்படி ஒரு கதை சொன்னால் — வியப்படைகின்றோம், அறிவுப் பேழை இங்கு. . . ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே!! எனினும் எத்தனை பேதம், பிளவு, மதியற்ற போக்கு, குருட்டுப் பிடிவாதம், முரட்டுவாதம் சே!!

தம்பி! இதனை எண்ணிடும்போது உள்ளபடி வெட்கம் விலாவினைக் குத்திடுகிறது.

ஆகவே, அன்றிருந்தோர் கூறிச் சென்ற அரிய கருத்துக் களையும், இன்றுள்ள நூலோர் தந்திடும் நற்கருத்துக்களையும் அறிந்து. மற்றவர்க்கும் அறிவித்து அதற்கேற்ப, நமது முறைகளை, ஏற்பாடுகளைத் திருத்தி அமைத்துக்கொள்ள வேண்டும். மாக்கோலம் போடக் காண்கிறாயே, உன் மனத்தை வென்றாள்! வெண்குழம்பினைக் கலயத்திட்டு, தரைதனைக் கூட்டித் துப்புரவாக்கி, என்ன வரைவது எனத் தேர்ந்தெடுத்துத் திட்டமிட்டு, கோலம் போட்டிடக் காண்கிறாய் — வெண் குழம்பைக் கீழே கொட்டிவிட்டு நடப்போர் கால்பட்டுப் பட்டு ஏதேனும் ஓர் கோலம் உண்டாகட்டும் என்றா இருந்து விடுகின்றாள் உன் ஏந்திழை! இல்லையே? சமுதாயம் புதுக்கோலம் கொள்ள, நீயும் நானும் இன்னமும் என்ன வண்ணக் குழம்பு தேவை? எத்தகைய வட்டிலில் இடுதல் வேண்டும்? என்பது குறித்தேகூட, ஒரு திட்டவட்டமான எண்ணம் கொண்டிடத் தயக்கப்படுகிறோமே! புத்துலகு சமைத்திட எங்ஙனம் இயலும்?

நமக்கு நெடுங்காலத்துக்குப் பிறகு, அடவி நிலையினின்றும் விடுபட்டு, நாடு கண்ட இனத்தவரெல்லாம் இன்று தத்தமது நாட்டினைப் புதுமைப் பூங்காவாக்கிப் பொலிவுடன் திகழ்கின்றனர். நாமோ, வித்திடும் செயலைத் தானும் முறையாக மேற்கொண்டோமில்லை. சமூக அமைப்பிலும் செயலிலும் நெளியும் கேடுகளைக் கண்டித்திடும் துணிவுடன் நம் பேச்சும் எழுத்தும் உள்ளனவா? இல்லை! ஒரு சிலர் துணிவு பெற்றிடினும், பாய்கின்றனர் அவர்மீது; பாவி! பழிகாரன்! பழைமையை அழிக்கின்றான்! பாபக் கருத்தைப் புகுத்துகின்றான்! நாத்திகம் பேசுகிறான்! வகுப்பு வெறி ஊட்டுகிறான்! என்றெல்லாம் கதைக்கின்றனர். ஜாதிப் பிடிப்புகளையும் அவைகளுக்கான மூடக் கோட்பாடுகளையும், “புதிய நாடுகள்’ என்று நாம் வெகு எளிதாகக் கூறிவிடுகின்ற இடங்களில், எத்தனை காலத்துக்கு முன்பே, எத்துணைத் துணிவுடன் தாக்கினர், தகர்த்தனர் என்பதனை அறியும்போது வியப்படைகிறோம்.

ஏழையர்க்காக வாதாடினவர்கள், செல்வபுரிக் கோட்டைகள் மீது தாக்குதல் நடாத்தியவர்கள்; மூட நம்பிக்கைகளை முறியடித்தவர்கள் அங்கெல்லாம் இருநூறு ஆண்டுகட்கு முன்பே வீரஞ்செறிந்த பாக்களை இயற்றினர்; புரட்சிக் கருத்தினை அளித்தனர்.

இங்கோ, அந்த முனையில் பணியாற்றத் துணிபவனை, பாரதப் பண்பாட்டை அழிப்பவன், பக்தி நெறியைப் பழிப்பவன் என்றெல்லாம் ஏசிப் பேசிடக் கிளம்புகின்றனர்.

1873-ம் ஆண்டு பிறந்தவர் ஆங்கிலக் கவிஞர் ஜான்மேஸ்பீல்டு என்பார். சங்கத்தில் பயின்று, சீமான்களின் அரவணைப்புப் பெற்றுக் கவி பாடி அரங்கேற்றினவர் அல்ல! கப்பலில் கூலி வேலை செய்துவந்தவர். மற்றும் பல கடினமான உழைப்புகளைச் செய்து பிழைத்து வந்தவர் — அவர். “நான் கவி பாடுவேன்; யாருக்காக? ஏழைக்காக!’’ என்ற கருத்துப்பட ஒரு கவிதை இயற்றினார். அன்று இருந்த அறிவாளர்களிடையேயே அக்கவிதை புரட்சியை மூட்டிவிட்டது என்கிறார்கள்.

எவரைப்பற்றிப் பாடப்போவதில்லை என்பதனை முதலிலேயே தெரிவித்துவிடுகிறார் மேஸ்பீல்டு:

வாழ்வின் சுவைதன்னை
வகையாய்ப் பல்லாண்டு
உண்டு உடல் பெருத்து
ஊழியர் புடைசூழத்
தண்டு தளவாடமுடன்
தார் அணிந்து தேரேறும்
அரசகுமாரர், அருளதிபர்
தமைக் குறித்து அல்ல!

புலவர் கவி பாடுகிறார் என்றால், அது, மன்னனை அல்லது அருளாளனைப் புகழ, போற்றத்தானே இருக்க முடியும் என்ற எண்ணம் அழுத்தமாக இருந்திருக்கிறது. 1873-ம் ஆண்டல்லவா! அதை அறிந்து, மேஸ்பீல்டு நான் உங்களுக்குப் பழக்கமான கவிஞன் அல்ல, நான் புதுமைக் கவிஞன் — நான் மன்னனைப் பற்றியுமல்ல, தேவாலயத்து அதிபனைப்பற்றியும் அல்ல பாடப்போவது!! — என்று தெரிவிக்கிறார்.

“அரசகுமாரர்
அருளாலய அதிபர்
தமைக்குறித்து அல்ல!’’

என்ற துவக்கமே, துணிவு நிரம்பியது. கவிவாணர்கள் நெடுங்காலமாகப் பாடிக்கொண்டு வந்த முறையை நீக்கிவிட்டு, நீ புது முறையில் பாடப்போகிறாயோ? எவரைப்பற்றி? என்று கேட்பார்கள் அல்லவா! கூறுகிறார்!!

இன்னல்தரு ஈட்டிவளையத்துள்
ஆண்டுபல இருந்தோர்
ஏனோதானோக்கள்
எச்சிற் கலையங்கள்
சாவுவரும் வரையில்
சளைக்காது போரிட்ட
கந்தலுடைக்காரர்
களம் கிளப்பும்
தூசி ஓசையுடன்
ஓலம் உளம்மருட்ட
மண்டை உடைபட்டோர்
கண் புண்ணானோர்

இவர்களைப்பற்றித்தான் நான் பாடப்போகிறேன் என்கிறார். இவர்கள் இன்னலைக் கண்டவர்கள், இழிநிலையில் தள்ளப் பட்டுள்ளவர்கள், இவர்களை மற்றவர்கள் கவனியாமல், பூபதிகளைப் பாடிக்கொண்டிருந்து வந்தனர்; நான் இந்த

ஏனோதானோக்கள்
எச்சிற்கலையங்கள்

என்று ஒதுக்கிவிட்டிருக்கிறீர்களே, அவர்களைப்பற்றித்தான் பாடப் போகிறேன் என்று தெரிவித்துவிட்டு, மேலும் எந்த விதமான ஐயப்பாடும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்துடன்

மார்பகம் தன்னில்
விருதுகள் மின்னிட
பரிஏறிப் படைகாணப்
பவனி வரும்
படைத் தலைவனாம்
மன்னனின் செல்லப்பிள்ளை

இருக்கிறானே, அவனைப்பற்றிப் பாடப்போவதில்லை என்று கூறுகிறார்; மன்னன் தனக்கு விருப்பமான ஒருவனைப் படைத்தலைவனா ஆக்கிவிடுவான்; வீரன் என்பதற்காக அல்ல! அவன் மன்னனின் செல்லப்பிள்ளை என்பதால்! அந்தப் படைத் தலைவன், விருதுகள் பதித்த ஆடம்பர உடை அணிந்துகொண்டு, கெம்பீரமாகக் குதிரை மீதமர்ந்து வருவான், படைவரிசையைப் பார்வையிட! வழக்கமாகக் கவிஞர்கள், இவர்களைப் பாராட்டுவர், புகழ் பாடுவர்.

இவர்கள் அல்ல உள்ளபடி பாராட்டுப்பெற வேண்டியவர்கள். போரிட்டு மடிந்தவர்கள் வேறு வேறு! இந்தத் தலைவன் காட்சிப்பொருள்! இவனையா நான் பாடுவேன்! இவனை எனக்குத் தெரியாதா! வீரனா இவன்? இவன் மன்னனின் செல்லப் பிள்ளை! என்று கேலி மொழியால் துளைக்கிறார் மேஸ்பீல்டு — துளைத்துவிட்டுக் கூறுகிறார், நான் பாடப்போவது எவரைப்பற்றித் தெரியுமா?

எவர், அவர்? என்று
எவரும் அறியா நிலையினர்!
ஏறு நடைபோட்டு
வெற்றி கண்டார்!
இளைஞர்!

இவர்களைப்பற்றி என் கவிதை! என்கிறார். ஏன்? ஒரு போரிலே மும்முரமாக ஈடுபட்டு, குருதிகொட்டி, வெற்றி ஈட்டியவர்கள் இந்த இளைஞர்கள் — ஆடம்பர உடையுடனுள்ள படைத் தலைவன் அல்ல! நான் அந்தப் “போலி’யைப் புகழ மாட்டேன் என்கிறார்.

கொலு இருக்கும்
கோவை அல்ல!

என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிடுகிறார். போர் குறித்த புகழ்ப் பாட்டு என்றால், கொலு இருக்கும் மன்னனைப் பற்றித்தான் மற்றவர்கள் பாடியிருக்கிறார்கள் — இது நாள்வரை. நான் அப்படி அல்ல!

குடிமகனாய் உள்ளோன்
ஊர் சுற்றும் உழைப்பாளி
தோள்குத்தும் முட்கள் நிறை
மூட்டைதனைச் சுமப்போன்,
தாங்கொணாப் பாரந்தனைத்
தூக்கித் தத்தளிப்போன்
களத்தில் பணிபுரிவோன்
உலைக்கூடத்து உழல்வோன்
ஏதோ இசை எழுப்பி அதனால்
இனிமைபெற எண்ணுபவன்
ஏரடிப்போன்!
தூக்கம் தொட்டிழுக்கும்
துயர் கக்கும்
கண்கொண்டான்.

இவர்களைப்பற்றி நான் பாடுவேன் என்கிறார். இனிமேலா பாட வேண்டும்; இதோ பாடியேவிட்டாரே,

தூக்கம் தொட்டிழுக்கும்
துயர் கக்கும்
கண்கொண்டான்

என்ற வரிகள் அந்த ஏழையின் நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டிவிடுகிறதே! மேஸ்பீல்டுடைய இதயந்தன்னில் எவரெவர் இடம்பெற்றுள்ளார் என்பது விளக்கமாகிறதே. இந்தக் கனிவு, மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டுப்போன, ஏழை, எளியோர்க்காக, உழைத்து உருக்குலைந்தோருக்காக! ஏழையிடம் இந்தக் கனிவு காட்டாத கவிவாணர்களை அலட்சியமாகக் கருதுகிறார்; ஒதுக்கித் தள்ளுகிறார்;

மற்றவர் பாடட்டும்
மகிழ்ச்சி தரும்
மாடு மது குறித்து!

என்று இடித்துரைக்கிறார். செல்வவானைப்பற்றி அவனுடைய சிங்கார வாழ்வு பற்றி, அவன் மந்தகாசம் பற்றி, அவன் மாளிகையிலுள்ள மதுவகை பற்றிப் பாடுகிறார்களே, அவர்களைக் குறித்து மேஸ்பீல்டுவுக்கு அத்துணை எரிச்சல். அவர்கள் பாடட்டும் அவை பற்றி என்று ஒதுக்கித் தள்ளி விடுகிறார்

என் பாடல்
குப்பை கூளம் பற்றி
குப்பன் சுப்பன் குறித்து

என்று அறிவிக்கிறார். இவர்களைப் பற்றிய கவிதையிலே கவர்ச்சி இருக்காதே, மெருகு இருக்காதே என்று கேட்பவர் உளர் என்பது தெரியுமல்லவா இந்தப் புதுமைக் கவிஞனுக்கு

அவர்கள் இசையினிலே
வண்ணம் புகழுடன்
பொன் மின்னும்,

என்று கூறுகிறார். பளபளப்பு, மெருகு, இவை தேவையா! அவர்கள் இசையிலே கிடைக்கும், போய்ப் பெற்றுக்கொள், அவைதான் பெறத்தக்கன என்று கருதினால் — என்ற கருத்துப் படக் கூறுகிறார்; கூறிவிட்டு,

பிடி சாம்பல்
வாய்க்கரிசி
இவைபற்றி என் பாடல்!
குளிர்கொட்ட
மழை வாட்ட
குமுறிக்கிடப்போர்
விழி இழந்தோர்
முடமானோர்
இவர்பற்றி என் கவிதை!
இஃதே என் காவியம் காண்!

என்று தெரிவிக்கிறார்.

தம்பி! 1873-ம் ஆண்டு பிறந்த ஆங்கிலக் கவிஞர் இந்த அளவுக்கு ஏழைக்காகப் பரிந்து பேசிட முனைந்திருக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டில் இருக்கின்றோம்; இந்தக் காலத்திலாவது நாம் இடர்ப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு இல்லாமையால் தாக்கப்பட்டுக் கிடக்கும் எளியோர்க்கு நல்வாழ்வு கிடைப்பதற்கான முறையில் ஓர் அரசு முறை அமைத்திடும் முயற்சியில், ஈடுபடவேண்டாமா!

செந்நெல் மணியினைக் காணும்போது தம்பி சேற்றிலே இறங்கி உழுது அதனை விளைவித்த உழவனை நினைவிற் கொள்ள வேண்டும். பாலையும் பாகையும் பழத்தையும் சுவைத்திடும்போது, இவற்றைப் பெற முடியா நிலையிலுள்ள எளியோர்களை வாழ வைத்திட வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட வேண்டும். உழைப்பின் உயர்வுபற்றிப் பேசிவிடுதல் மட்டும் போதாது. உழைப்பவன் உருக்குலைய அவன் தந்த செல்வத்தில் சிலர் புரண்டு கிடந்திடும் சீர்கெட்ட நிலையை மாற்றிட வழிகாண வேண்டும். இயற்கை வழங்கிடும் பொருளின் அளவும், தரமும், வகையும் மிகப்பெரிது, அரசு முறை நேர்மையானதாக்கப்பட்டால், எல்லோரும் இன்புற்றிருக்கும் பொற்காலம் கண்டிடலாம், இந்தத் திருநாளன்று, அந்தக் குறிக்கோளைக் கொண்டிட வேண்டுகிறேன்.

இன்னல் பல பின்னிக் கிடந்திடும்; எனினும் இன்றோர் நாளாகிலும் அவைதமை மறந்து, இன்புற்று வீறுடன் நடாத்தி மகிழ்ச்சி பெற்றிட வேண்டுகிறேன். உனக்கும் உன் மனை யுளாருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை வழங்கி மகிழ்கிறேன். வாழ்க வளமெலாம் பெற்று! வாழ்க தமிழகம் உன் வல்லமைத் தொண்டினாலே!!

அண்ணன்

14–1–1965

மூலக்கட்டுரை

http://www.annavinpadaippugal.info/kadithangal/porkalam_kaana_1.htm

--

--

SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite