போர்! போர்!!

அண்ணாதுரை, திராவிட நாடு, 24–7–1955

SG
6 min readJan 25, 2020

பெரியாரின் கொடி எரிப்புப் போராட்டமும் தி.மு.க.வும்.

தம்பி!

போர்! போர்! போர்! — இப்போது உலகிலே ஒரு பயங்கரமான போர் மூண்டு, மனிதகுலமே அழிக்கப்பட்டுப் போய் விடுமோ என்று அறிவாளர்களெல்லாம் அச்சப்பட்டுக் கொண்டிருந்தார்களே, அத்தகைய போர் எழாது, என்று தைரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் கூறிக்கொள்ளக்கூடிய சூழ்நிலை மலர்ந்திருக்கிறது — துள்ளித் திரியும் குழந்தைகள், மொட்டுகள், பிஞ்சுகள். சமர்ச் சூறாவளியால் பாழாகா என்ற தைரியம் பிறந்திருக்கிறது.

இது, உலக நிலையைப் பொறுத்துக் காணப்படும், களிப்பூட்டும் செய்தி.

ஆனால் இங்கே, நமது மாநிலத்தில், போர்! போர்! போர்! என்ற முழக்கம், பல்வேறு முனைகளிலிருந்து கிளம்பி விட்டது. ஜல்லடம் கட்டி, சங்கம் ஊதி, கட்கமேந்தி, களம்குதித் தோட, கட்டளையை எதிர்ப்பார்த்துக் கொண்டு கணக் கற்றவர்கள் (போர் முடிவு பெற்ற பிறகுதானே கணக்குத் தெரிய முடியும்) உள்ளனர்.

போர்! போர்! எல்லையைக் காத்திடும் ஏற்புடையதோர் போராட்டம் வருகுது! தொல்லைகளைத் துடைத்திடுவோம், துடை தட்டிக்கொண்டு வாரீர், துந்துபி கேளீர், துரிதமாக வாரீர். . . என்றோர் புறமிருந்து முழக்கம் கேட்கிறது.

கோவா அட்டூழியத்தைக் காணீரோ! அந்த அக்ரமத்தை ஒழித்திட அனைவரும் ஒன்று சேரீரோ! என்று மற்றொருபுரம், முழக்கம் கிளம்புகிறது!

ஆலயங்களிலே அர்ச்சனை நம் அருந்தமிழ் மொழியிலன் றோ இருத்தல் வேண்டும், அத்திக அன்பர்காள்! அஞ்சாது போரிடவாரீர், அரன்மீது பாரத்தைப் போட்டுவிட்டு வெஞ்சமரில் ஈடுபட வாரீர், என்று வேறோர் போர் முழக்கம் கேட்கிறது.

பாட்டாளிகளின் துயர் துடைக்கும் போரன்றோ போர்! மற்றவை பேரளவு போர் என்ற பெயர் பெறுதலும் ஆகுமோ! ஆண்மையாளர்களே! அணிவகுத்து நில்லுங்கள்! அழைப்பைச் செவியில் கொள்ளுங்கள்! போர்! போர்! புத்துலகம் காணப் பெரும் போர்! புனிதப் போர் ஒரே போர்! ஒப்பற்ற போர்! — என்று கம்யூனிஸ்டுக் குரல் கணகணவென ஒலிக்கிறது.

பெரியாரின் ஆகஸ்ட்டுப் போர் பற்றிய அறிவிப்பும் வந்து விட்டது.

ஆகஸ்ட்டு முதல் நாளன்று தேசியக் கொடிகளைத் கொளுத்தி. அதன்மூலம் வடநாட்டுச் சர்க்காரை, திராவிடத்தின் மனநிலையை அறியும்படி செய்வது என்பது, போர்த் திட்டம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காமராஜர் ஆட்சியை ஆதரித்துக் கொண்டிருக்கும் போக்கிலேயே பெரியார் சென்று கொண்டிருப்பார். திராவிட நாட்டுக்கான பிரச்சினைகளைக் காலாவதி ஆகும்படி செய்து விடுவார் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் திடுக்கிட்டுப் போயிருப்பர், இந்தப் போர்த் திட்டம் கேட்டு. இந்தத் தீனா மூனா கானாக்களுக்கு அரசியல் நாகரீகமே தெரிய வில்லை-பெரியார், கம்யூனிஸ்டுகளை ஒழித்தாக வேண்டும் என்ற புனிதமான (!) கோட்பாட்டுக்காக, இடைத் தேர்தல்களில் காங்கிரசை ஆதரித்து வருகிறார் இது அல்லவா யூகம் அரசியல் கண்ணியம் — ஜனநாயகம் — என்றெல்லாம் பேரிகை கொட்டினர், காங்கிரசின் சின்னசாமிகள் அவர்கள் கண்டார்களா பெரியாரின் மனதிலே உருவாகிக் கொண்டுள்ள போர்த்திட்டம் பற்றி. இப்போது ஆகஸ்ட்டுப் போர்பற்றி அவர் அறிவித்ததும், அந்த வட்டாரம், திகைத்துப்போய்க் கிடக்கிறது.

தம்பி, நமது வட்டாரத்திலே என்ன கருத்து நிலவுகிறது என்பதைக் கேட்க ஆவலாக இருப்பாய்; கேள்.

(1) ஆகஸ்ட் கிளர்ச்சியில் ஈடுபடும்படி எல்லாக் கட்சிகளையும் அழைக்கிறேன் என்று பெரியார் கூறுவதன் பொருள் என்ன?

ஓஹோ! எல்லாக் கட்சிகளும் என்றதும், உனக்குச் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது: சகஜந்தான்! எல்லாக் கட்சிகளும் என்றால், நாட்டிலே உள்ள கட்சிகள் எல்லாம் என்று பொருள் கொள்ளலாமா! பொருத்தமாக இராது! காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பிரஜா, இந்து மகாசபை, தமிழரசு ஆகிய கட்சிகள் யாவும், இந்தி விஷயமாகக் கொண்டுள்ள எண்ணம், இந்தி கூடாது என்பதல்ல; கட்டாயப்படுத்த வேண்டாம்; அவசரப் படுத்தவேண்டாம் என்பதுதான். பெரியார், இந்தி கூடாது, ஏனெனில் இந்தியாவின் ஆட்சிக்குள் திராவிடம் இருத்தல் கூடாது என்று கொள்கை வகுத்துக் கொண்டவர். எனவே இந்தியை எதிர்த்து பெரியார் நடத்தும் கிளர்ச்சியில் அந்தக் கட்சிகள் எதுவும் பெரியார் நடத்தும் கிளர்ச்சியில் அந்தக் கட்சிகள் எதுவும் ஈடுபடாது; அக்கரை காட்டாது.

(2) அப்படியானால், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபடக் கூடிய நிலையில் உள்ள கட்சி. திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தானே! ஏன், பெரியார், தி.மு.க.வுக்கு அழைப்பு என்று பேசவில்லை.

என்னைக் கேட்கிறாயே!

(3) கட்சிகள் பல ஒன்று கூடி, ஒரு கிளர்ச்சியில் ஈடுபடுவது உண்டா?

ஏன் இல்லை! உண்டு!! இலட்சியம் ஒரேவிதமாக இருந்தால், ஒன்று கூடுவது சாத்தியமே

(4) அதற்கு ஏதேனும் முறை இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது! அந்தக் கட்சிகள் ஒன்றாகக் கூடிக் கலந்துபேசித் திட்டம் வகுத்துக்கொண்டு பிறகு செயலில் ஈடுபடுவது.

முன்பு ஒரு முறை நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு இயக்கத்துக்கான திட்டமும் முறையும் வகுத்துக்கொள் வதற்காக, இந்தி எதிர்ப்பு சம்பந்தமாக ஒத்த கருத்தை வெளியிட்டு வந்த ம.பொ. சிவஞானம் அவர்களை அழைத்து, மாநாடுகளிலும், கமிட்டிக் கூட்டங்களிலும் கலந்துபேசி, திராவிடர் கழகம் (அப்போது நாம் அங்கே தான்) பணியாற்றி — ஜனநாயகப் பண்பை எடுத்துக் காட்டி இருக்கிறது. ம.பொ.சி. அப்போதும் தமிழரசுக் கழகம் தான் நடத்திக் கொண்டிருந்தார்.

(5) பெரியார் அப்படி ஏதும் செய்யக் காணோமே?

தேவையில்லை என்று அவர் கருதியிருக்கலாம். தி.மு.க. பொதுச் செயலாளரை அழைத்துப் பேசி, திட்டம் வகுத்தால், ஒன்று கூடிக் கிளர்ச்சி நடத்தும் ஆர்வம் ஏற்படும் என்று கூட வேண்டுகோள் விடப்பட்டது.

(6) ஏன் அந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. ஏழை பேச்சு அம்பலம் ஏறுமா?

(7) இப்போது, எல்லாக் கட்சிகளையும் அழைப்பதன் பொருள்?

நல்ல திட்டம் என்று நம்பி, வருவதானால் வரட்டும் என்பதுதான்.

(8) வராவிட்டால்?

வராவிட்டாலா! அழைத்தும் வரவில்லை, அற்பர்கள் என்று எப்போதும் ஏசுவோர் ஏசுவர்!

(9) வருவதானால்? வந்தார்கள் — என் திட்டத்தின்படி கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்! வேறு வழி, இதுகளுக்கு? என்று குத்தல் பேச்சு கிளம்பும். அவ்விதமாக இந்தி எழுத்து அழிப்புப் போரில் ஈடுபட்டபோது ஏசினர் என்று நமது துணைச் செயலாளர் துயரத்துடன் கூறுகிறார்.

(10) அப்படியானால் என்ன செய்யலாம்? அதென்ன என்னைக் கேட்கிறாயே! உனக்கென்று ஒரு கட்சி இருக்கிறது-அது அழைக்கப்படவில்லை — ஒரு பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுத்திருக்கிறாய் அவரை அழைக்கக் காணோம் — வேறொர் கட்சி, தன் நிர்வாகக் கமிட்டியில், தனக்கு சரியென்று பட்ட ஒரு திட்டத்தை நிறைவேற்றி கிளர்ச்சி துவக்குகிறது — நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறாயே — நீதான் சொல்லேன்-!

(11) அப்படியானால். . . . . . .

போர் நடைபெறப் போகிறது-இதிலே நாங்கள் காட்டப்போகும் அபாரமான ஆற்றலையும், அடையப் போகும் வெற்றியையும் அறிவிலிகாள்! ஆற்றலற்றதுகாள்; காண்மின், காண்மின்! — என்று கூறிவிட்டுக் களம் செல்லும் கர்ம வீரர்களைக் காண நேரிட்டால், நான் கைகூப்பித் தொழுவேன்!

போர் நடைபெறப் போகிறது — அதன் நோக்கம் இது — முறை இவ்விதம் இருக்கும் — இதிலே கலந்து பணியாற்ற வருவாயா, உனக்கு இந்த நோக்கமும் முறையும் புரிகிறதா, பிடிக்கிறதா என்று கேட்டால் கைகூப்பித் தொழுவது மட்டுமல்ல. காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, இது தான் கண்ணியமான முறை, காரிய சித்திக்கு ஏற்ற வழி, பகைவர் கண்டு திடுக்கிடத்தக்க வகையான திட்டம், போர் முறை பற்றிக் கலந்து பேசுவோம், என்று கூறி, ஆர்வத்துடன் பணிமனையில் நுழைவேன்.

இருவிதமுமின்றி, போர் போர்! போரிடும் ஆற்றலுள்ளவர் களெல்லாம், வரலாம்! வருவோர் சேர்த்துக் கொள்ளப்படுவர் — விளக்கம் கேட்போர், கலந்துரையாட வேண்டுமென்று கூறிடும் துணிவு கொண்டோர் தேவைப்பட்டார். கலந்து கொள்ளாத வர்கள், ஈனப்பிறவிகள், நாட்டுத் துரோகிகள் — அவர்கள் அழிக, அழிக அடியோடு அழிந்துபடுக! என்று சபித்துக் கொட்டினால், நான் என்ன செய்ய முடியும். நீயும்தான் என்ன செய்ய முடியும்.

(12) நெருக்கடியான சமயம் — இறுதியான போர் — தீவிரமான கிளர்ச்சி — இதிலே நாம் ஈடுபடாமலிருக்கலாமா?

நாமும் ஒரு கட்சிக்குப் பொறுப்பானவர்கள்! நாமும் பிறர் பார்த்து மெச்சத்தக்க கிளர்ச்சிகளை நடத்தி, கஷ்ட நஷ்டங்களுக்கு உள்ளாகியிருக்கிறோம். அப்போது உதவிதர, உபசாரம் கூற, ஒரு சிறு புன்னகை காட்ட யாரும் வரவில்லை! மாறாக, அற்பமான கிளர்ச்சி — பயனற்ற வேலை என்று கேலியும் கண்டனமும் பிறந்தது. மேலும், ஆகஸ்ட்டு கிளர்ச்சியோடு எல்லாப் பிரச்னைகளும் முடிந்து விடுகின்றன என்றா பொருள்! எவ்வளவோ கிளர்ச்சிகள் கருவில்! ஒரே நோக்கம் கொண்ட இருவேறு அமைப்புகள் கலந்து பேசி ஒரு திட்டம் தீட்டி, தக்க விதமான கிளர்ச்சி நடத்தும் காலம் ஒன்று வரத்தான் போகிறது என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டியதுதான். அது வரையில் அந்தந்த அமைப்பும், அதனதன் சக்திக்கும் சுபாவத்துக்கும் ஏற்றவகையான கிளர்ச்சியில் ஈடுபடுவது தவிர்க்க முடியாதது. நாம் துவக்கிய மும்முனைப் போராட்டத்தின் போது “விடுதலை’யில் கிளர்ச்சிகள் என்ற அருமையான கட்டுரையில், இந்தக் கருத்துப்பட பெரியார் எழுதியுமிருக்கிறார்.

(13) போர்முறை பற்றி என்ன கருதுகிறீர்?

கொடி கொளுத்தும் போர் முறைபற்றித் தானே! அதுபற்றி நமது கருத்து என்ன, நமக்கு அது உடன் பாடானதா அல்லவா என்று எங்கே கேட்டார்கள் — எப்போது கேட்டார்கள்? பொதுச் செயலாளரை அழைத்துப் பேசியிருந்தால், அவர், திராவிட முன்னேற்றக் கழகம் இதுபற்றி என்ன கருதுகிறது என்று தெரிவித் திருக்கக்கூடும். பொதுவாக, இந்தி எதிர்ப்பு சம்பந்தமாக நடத்தப்பட்ட கிளர்ச்சிகளை எல்லாம் வடநாட்டுச் சர்க்கார் அலட்சியப்படுத்திவிட்டதால், இப்போது வடநாட்டு சர்க்கார் பரபரப்படையக்வடிய வகையில், கொடியைக் கொளுத்தப் போகிறோம் என்று அவர்கள் காரணம் காட்டுகிறார்கள்; இந்தி எதிர்ப்புக்கான கிளர்ச்சியை வடநாட்டுச் சர்க்கார் அலட்சியப் படுத்துவதை நாமும் கண்டிருக்கிறோம்; வடநாட்டுச் சர்க்காருடைய கவனத்தைக் கவரும்படி இருக்க வேண்டுமென்றுதான் நாம் இரயில் நிறுத்தக் கிளர்ச்சி நடத்தினோம்,. நாம் கலந்து பேச அழைக்கப்பட்டிருந்தால், கிளர்ச்சி எப்படி இருக்க வேண்டுமென்றால், இந்தி எதிர்ப்பு விஷயத்தில் அனுதாபம் கொண்ட காங்கிரஸ் காரர்களையும் நமது பக்கம் சேர்க்கும்படியானதாக இருக்க வேண்டும்; கொடி கொளுத்துவது போன்ற முறைமூலம், காங்கிரஸ்காரர்களுக்கும் திராவிட இயக்கத்துக்கும் நேசம் ஏற்படவே முடியாத ஓர் மோசமான சூழ்நிலை ஏற்பட்டுவிடும்; எனவே வேறு முறையைக் கொள்வோம் என்று எடுத்துச் சொல்லி இருப்போம். இன்று நமது கருத்தினை ஏற்றுக் கொள்ளாமலிருக்கும் காங்கிரஸ் காரர்களே, நமது கோரிக்கையை உணர்ந்து, மனம் மாறி நமது இயக்கத்துக்கு ஆக்கம் தேடுவதற்கான உதவி அளிக்க முன்வரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவதாக நமது கிளர்ச்சி இருக்க வேண்டும். அவர்கள் கேட்டாலே வெறுப்பும் வேதனையும் அடையதக்க முறை சரியாகாது, அவர்களை நம்மோடு அழைத்துச் செல்லும் வழியு மாகாது, இந்தக் கொடி கொளுத்துவது என்பதை எடுத்துச் சொல்லி இருந்திருப்போம். நாம் இப்படிச் சொல்லக்கூடும் என்பதை அறிந்துதானோ என்னமோ கொடி கொளுத்தும் திட்டம் தீட்டும் கமிட்டிக்கு நமது பொதுச்செயலாளரை அழைக்க வில்லை. பிள்ளையார் உடைப்பின் போதே, நாம், நம்மோடு நாளாவட்டத்தில் வந்து சேர வேண்டியவர் களை, வீணாக வெறுப்படையச் செய்துவிடும் என்றதனால் தான், ஒதுங்கி இருந்தோம்.

(14) ஒதுங்கி இருந்தால் ஒழிந்து விடுவார்கள் என்று பேசுகிறார்களாமே!

திராவிட முன்னேற்றக் கழகம், போராட்டங்களை நடத்தி இருக்கிறது- தனித்து நின்று.

திராவிட முன்னேற்றக் கழகம், பிறர் துவக்கிய போராட்டம், தாங்கள் தீட்டிய திட்டத்துக்கு ஒத்ததாக இருந்த நேரத்தில், துணையாக இருந்திருக்கிறது.

வடநாட்டு மந்திரிகளுக்குக் கருப்புக்கொடி காட்டி, தடியடி, சிறை இவைகளைத் திராவிட முன்னேற்றக் கழகம் தாங்கிக் கொண்டது. துணை யாரும் கிடையாது! அழைக்கவும் இல்லை.

திராவிட முன்னேற்றக் கழகம், பிறர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொள்ளாமல், ஒதுங்கியும் இருந்திருக்கிறது.

144 தடையை மீறி, தடியடி சிறைமட்டுமல்ல, துப்பாக்கிக் குண்டுகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறது, திராவிட முன்னேற்றக் கழகம் — தனியாகக் களத்தில் இறங்கி. இரயில் நிறுத்தம், ஆச்சாரியார் வீட்டின்முன் மறியல்-என்பவைகள், மாற்றுக் கட்சிக்காரரெல்லாம்கூட மறக்கமுடியாத சம்பவங்கள் — தனியாகத்தான் நடத்தி னோம் — சர்க்காரின் குண்டுகள் மட்டுமல்ல, ஏசலையும் தாங்கிக் கொண்டோம்; இரத்தம் பீறிட்டது; பிணமும் வீழ்ந்தது.

எனக்குத் தெரிந்த அளவில் நமது சுயமரியாதை இயக்கக் காலத்திலிருந்து கவனத்தில் வைத்துச் சொல்கிறேன், நாம் நடத்திய கிளர்ச்சியை ஒடுக்க சர்க்கார் துப்பாக்கியின் போதும், குன்றத்தூரில் தடை உத்தரவை மீறிய நேரத்திலும் தான்!

மதுரை கருப்புச் சட்டைப் படை மாநாட்டிலே துப்பாக்கிச் சத்தம் கேட்டது — அது நம்மை நோக்கி அல்ல, அக்ரமமாக நமது மகாநாட்டிலே தீ வைத்த காங்கிரஸ்காரரை நோக்கி.

எனவே, திராவிட முன்னேற்றக் கழகமாக நாம் வடிவம் கொண்ட பிறகு, நாம் ஒரே குடும்பமாக இருந்தபோது கண்டதைவிட, கடுமையும் கொடுமையும் மிகுந்த அடக்கு முறையைச் சந்தித்திருக்கிறோம்.

அதுபோலவே, அவர்கள் நடத்திய, இந்தி எழுத்து அழிப்புப் போரில் நாமும் ஈடுபட்டோம் — அதற்கான திட்டம் தீர்மான உருவில் நம்மிடம் ஏற்கனவே இருந்ததால்.

அதுபோலவே, அவர்கள் வடநாட்டுத் துணிக்கடை மறியல் செய்தனர்!

அதிலே அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினர்!

கலந்து கொள்ளாதவர்கள் கல்லாவர், மண்ணாவர், கால்தூசு ஆவர், என்று சாபம் கொடுத்தனர்.

இனி, இதுகள் இருக்குமிடம் தெரியாது ஒழிந்து போகும் என்று எச்சரித்தனர்.

எனினும், நாம் அந்தக் கிளர்ச்சியில் கலந்து கொள்ளவில்லை-மடிந்துபடவில்லை!!

அதுபோலவே, பிள்ளையார் உடைப்பு! நாம் அதிலே ஈடுபட்டோமில்லை! இனி இதுகள் செல்லாக் காசுகள் என்று அவர்கள் ஆருடம் சொல்லாமலில்லை! எனினும், திராவிட முன்னேற்றக் கழகம், இந்தப் போக்கினால், வளர்ச்சி குன்றிப்போனதாக, அவர்களே கூறமுடியாது.

(15) இவர்கள் கொடி கொளுத்தும் கிளர்ச்சியில் ஈடுபடாவிட்டால் என்ன, நாங்கள் அதிலே வெற்றி காண்போம் கண்டு வெட்கப்படட்டும் என்ற பேசுகிறார்களாமே!

பேசட்டுமே, அதனால் என்ன; நம்மைக்கலந்து வகுக்கப்பட்ட திட்டமல்ல அது; அதை நடத்தும் முழுப் பொறுப்பும் அவர்களைச் சார்ந்தது; அதிலே வெற்றி கிடைத்து, கீர்த்தி கிடைத்தால், நமக்கு நிச்சயமாகப் பங்கு வேண்டாம்; அவர்களே அதற்கு உரியவர்கள் என்று நாமே கூறிவிடுவோம் — அவர்கள் களத்திலே, எல்லாத்திசைகளிலும் பாய்ந்து முன்னேறி வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் பெறும்பெற்றி எத்தகையது என்றால் இனிவேறு யாருக்கும் எந்தவகையான வேலையும் இல்லை என்று சொல்லத்தக்க வகையான முழுவெற்றி என்றே வைத்துக் கொள்வோம் அதனால் என்ன, நஷ்டம்; நமக்கென்ன கஷ்டம்? நந்தவனத்துக்கு நாள் பூராவும் நீர் பாய்ச்ச வேண்டும் என்று எண்ணிக்கொண்டு, கிணற்றடி போகிறான் — பெருமழை பெய்தால், என்ன கஷ்டகாலம்! நாம் நீர் பாய்ச்ச முடியாமல் போய்விட்டதே என்றா ஆயாசப்படுவான்? நமக்கு வேலை இல்லை, மழை வந்தது நல்லதாயிற்று, மழையே வாழி! என்று வாழ்த்துவான்; வெறென்ன!!

தம்பி! இவைகள் தானே நீ கேட்க விரும்புவாய்-நீ கேட்பதாக வைத்துக்கொண்டு நானே பதிலும் எழுதிவிட்டேன்.

இது போதாது! நமது கழகப் பொதுச் செயலாளரின் கருத்து என்ன என்று கேட்பாய். பொதுச் செயலாளரும் துணைச்செயலாளரும் இதே கருத்தினைத்தான் என்னிடம் கூறினார்கள்; நான் உன்னிடம் கூறிவிட்டேன்; நீ, தம்பி! மற்றவர்களுக்குச் சொல்லிவிடு!!

அன்பன்,

24–7–1955

மூலக்கட்டுரை
http://www.annavinpadaippugal.info/kadithangal/poar_poar.htm

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

No responses yet

Write a response