பொங்குக இன்பம்!

அண்ணாதுரை,திராவிட நாடு பொங்கல் மலர் — 1954

SG
6 min readJan 20, 2020

பொங்கற் புதுநாள், தமிழர் திருநாள்! எங்ஙனமோ, ஒரு விழாக்கோலம் அமைந்து விடுகிறது. வீடெல்லாம், நாடெங்கும், நேற்றுவரை இருந்துவந்த சங்கடம் ஓய்வெடுத்துக் கொள்கிறது. எங்கிருந்தோ ஒரு மகிழ்ச்சி, இல்லம் புகுந்து, இதயம் புகுந்து, தமிழரைப் பொலிவுள்ள பேசும் பொற்சித்திரமாக்கிவிடுகிறது.

புத்தாடை! பாற்பொங்கல்! புன்னகை! மழலை! கொஞ்சுமொழி! கனிவு! மகிழ்ச்சி! தாய்மையின் அழகொளி! குடும்ப பாசம் ! விழாக்கோலம்! — அட்டியின்றி அன்று அரும்பும் மலர்களின் பட்டியல் கூறின் விரியும்! வறுமை ஒழிந்து விடுவதில்லை! அன்று தலைகாட்ட அஞ்சுகிறது! விசாரத்திலிருந்தும் மக்கள் விடுபட்டுவிடுவதில்லை — அன்று ஓய்வெடுத்துக் கொள்கிறது. ஏக்கமும் பெருமூச்சும், இன்ப மொழிக்கும் இடமளித்து விட்டு, மூலை சென்று பதுங்கிக் கொள்கிறது. வேறு எந்த விழாவுக்கும் இல்லாத ஒரு தனித்தன்மை, மணம், தமிழர் திருநாளன்று கிடைக்கிறது. இல்லம் எல்லாம் இந்த இன்பம் பெறவேண்டும் — இன்று போல் என்றும் அந்த இன்பம் இருந்திடும் நிலையில் நாடு அமைந்திடவேண்டும் என்ற என் விருப்பத்தை வழங்குகிறேன், உங்கள் நல்லெண்ணத்தைப் பெற்றுள்ளவன் என்ற நிலையில் உள்ளவனாதலால் பொங்குக இன்பம்! தங்குக என்றும்!

திராவிட முன்னேற்றக் கழகம், வீணர் விழாக்களை வெறுத்தொதுக்குவது — அறிவீர் — காரணமும் தெரியும்.

கழகம், பெரும் பொறுப்புகளைத் தாங்கிக் கொண்ட, பாடு அறிந்து ஒழுகும் அமைப்பு — எதிர்ப்பாளர்களும், வசவாளர்களும் கழகத்தைக் கடிந்துரைப்பது இதனாலேயே! கனி மரத்தை நோக்கித்தானே கற்கள் பறக்கும்! பட்டமரத்தின் மீதா!!

விழாக் கொண்டாட நேரம் இல்லை — வீண் விழாக்களைக் கொண்டாடுவது தமிழர் நெறிக்கு உகந்தவையல்ல என்ற எண்ணம் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம், சீரும் செல்வமும் பெரும்பாலோருக்கு இல்லை. ஏழ்மையும் இயலாமையும் மக்களின் பெரும்பாலோரைக் கப்பிக் கொண்டுள்ளன. இந்நிலையில், விழாக்கள் கொண்டாட வாய்ப்பும் வசதியும் கிடைத்தல் இல்லை என்பதைக் கழகம் நன்கு அறியும். அதிலும் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொல்லையைத் தாங்கித் தாங்கி, திராவிடப் பெருங்குடி மக்கள் நொந்துகிடக்கின்றனர். நொந்த உள்ளத்திலே வேல் பாய்ச்சுவது போலத் திராவிடத்தின் மீது அரசியலால் அடக்குமுறையை வீசி, அதனால் ஏற்பட்ட புண்கண்டு புன்னகை புரிகின்றனர்.

பொங்கற் புதுநாள் கொண்டாடும் இல்லங்களில் — திராவிட இல்லங்களில் — இதே போது, சிறைக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு, திராவிடச் செம்மல்கள் — தூத்துக்குடித் தோழர்கள் — மனைவியையும் விழாக்கோலம் கொள்ளும் தாயகத்தையும் எண்ணிக் கண்ணீர் விட்ட வண்ணமிருக்கும், காட்சி தெரியத்தான் செய்யும்; கவலை துளைக்கத்தான் செய்யும்.

“மகன் இல்லையே-மனையில்! பொருள் தேடி, பிழைப்பை நாடி நெடுந்தொலைவு சென்றிருந்தாலும், திருநாளன்று இல்லம் வருவான், இன்பம் பெறுவான்! இன்றோ, இங்கே பால் பொங்கவேண்டும்; அங்கே அவன் கண்ணீர் பொங்கிக் கொண்டிருக்குமே, காவற் கூடத்திலே” என்று எண்ணித் தவிக்கும், தாய்மார்களைக் காண்கிறேன் — மனம் கரைகிறது.

“சென்ற ஆண்டு, பொங்கற் புதுநாளன்று, அவர்….” என்று எண்ணிக் காதலரைப் பிரிந்து வாடுவோரைக் காண்கிறேன் — மனம் கரைகிறது; இந்த நிலையை உண்டாக்கிவைத்த ஊராள்வோரின் போக்கு, உள்ளத்தைத் தாக்குகிறது.

அப்பா எங்கே! — என்று கேட்கும் மழலை — அதற்குப் பெருமச்சப் பதிலாக அளிக்கும் தாய் இந்த ஆண்டு பொங்கற் புதுநாளன்று, இல்லம் பலவற்றிலே. இந்தக் கலக்கமளிக்கும் நிலை அணிந்துள்ள மாலையில், புகுந்து கிடக்கும் நச்சுப் பூச்சிகள், அரிப்புத் தருவனபோல் விழாக் கொண்டாடும் வேளையில், ஆட்சியாளர் தந்துள்ள அடக்குமுறை இருக்கிறது. கவலை எழலாகாது என்று கூறிட, நான் கன்னெஞ்சக் காரனுமல்லேன். கனவுலகில் உலவுபவனுமல்லேன். எனவே, மகனைப் பிரிந்திருக்கும் தாய்க்கு, கணவனைப் பிரிந்திருக்கும் நல்லம்மைக்கு, அப்பாவைக் காணாது தவிக்கும் சிறுவர்களுக்கு, ஒன்று மட்டுமே கூறுவேன் — நீவிர் கொண்டுள்ள கவலையையும் கலக்கத்தையும் நானும், என் போன்றே கழகத்தவர் ஒவ்வொருவரும் கொண்டுள்ளனர்; ஆறுதலை நாம் ஒருவர்க்கொருவர் பரிமாறிக்கொள்ளத்தான் வேண்டும். கலக்கம் வரத்தான் செய்யும் — எனினும், கண்ணீரை, கொடுமை செய்யும் அடக்கு முறையாளர் காணவிடலாகாது — வீரர் சிறையில் உள்ளனர்; வீணர் அமல் செய்கின்றனர் — எனினும், பால்பொங்கும்; பாகு கலந்த சுவை அளிக்கும், பக்குவமாகச் சமைத்திடும் போது. அதுபோல், அடக்குமுறை அழிந்துபடும்; அறம் பொங்கி எழும்; இன்பம் வழிந்து வரும், காலமறிந்து, முறையுணர்ந்து பணியாற்றினால் என்றே பேருண்மையை எண்ணி ஆறுதல் மட்டுமன்று, மகிழ்வும் பெற வேண்டுகிறேன்.

இவ்வாண்டு பொங்கற் புது நாளன்று, ஏறத்தாழ ஐயாயிரம் இல்லங்களிலே அறப்போரில் ஈடுபட்டுச் சிறையிலே கஞ்சிக் கலயத்தை ஏந்திநின்ற தோழர்கள் உள்ளனர். சிறை சென்று வந்தவன், மீண்டும் செல்ல வேண்டியவன் என்ற முறையில் என் நன்றியையும் பாராட்டுதலையும் அவர்களுக்குக் கூறி, இன்று பொங்குவது பால் மட்டுமன்று, வீரச்செந்தேன் கலந்துபொங்குகிறது — தாயகத்துக்குத் தகுதியான பொங்கலைப் படைத்த வீரர்காள்! வாழிய நீவிர்! என்று வாழ்த்துகிறேன்.

மகிழ்வது மட்டுமன்று, மகிழ்வூட்டுவது, இவ்விழாவின் தனிச்சிறப்பு.

மகிழ்வு நாம் பெற, மகிழ்வூட்டுவது, இவ்விழாவின் தனிச்சிறப்பு.

மகிழ்வு நாம் பெற, உழைத்தோர்க்கெல்லாம் நாம் மகிழ்வளிக்க வேண்டும் — மாண்பு பிறக்க வேண்டும்.

உழவரும் பாட்டாளியும், நாடு வாழ வழி செய்து தந்தோர்.

அதோ நம் உடன் பிறந்த மங்கை நல்லாள், புதுப்பானையிலே கொட்டும் அரிசி, அவன் உழைப்பிலே உருவானது. அதனைப்பொங்கலாக்க உதவும் எரிபொருள், அவன் வெட்டித்தந்தது. தத்திநடக்கும் குழந்தையும், துள்ளிவிளையாடும் செவ்வியும், ஏறுநடை போடும் தம்பியும், இளமையை ஒருகணம் பெறும் போக்கிலே உள்ள பெரியவர்களும், அணிந்துள்ள புத்தாடை, அவன் நெய்தது! ஆமாம்! விழாக்கோலம் அவனால் வந்தது! அவன் விம்மினால் அது விழாவாகாது — களிப்பு உண்மையும் உயர்வும் உடையதாக இருத்தல் வேண்டுமானால், பாட்டாளி தந்த பரிசு, இவ்விழா என்ற பாடம் பெறவேண்டும் — பிறர்க்கும் எடுத்துரைக்க வேண்டும் — பாட்டாளியின் வாழ்விலே வளம் உண்டாகும் பாதையை அமைக்கும் பணியினைச் செய்வோம் என்று சூள் உரைத்திடவேண்டும். பார்முழுதும் ஏர்முனையிலே! — என்ற பாடல், இதயகீதமாக வேண்டும். கழகத் தோழர்கள், பொங்கற் புதுநாள் தரும் களிப்பினை, இக்கடமை யாற்றுவதற்கான ஆற்றல் பெறப் பயன்படுத்த வேண்டுகிறேன்.

தமிழர் திருநாளாம் இப்பொன்னாளில், நாம் விழாக்கொண்டாடும் இந்தத் திராவிடம், அன்று இருந்த எழில் நிலை, இன்று உள்ள தாழ்நிலை, எதிர்காலத்தில் அது அடைய வேண்டிய உயர்நிலை, இவை குறித்த எண்ணம் உள்ளமெல்லாம் பொங்கவேண்டும் — அனைவருக்கும் மகிழ்வுடன் விழா விருந்தளிக்கும் பான்மைபோலவே, இந்த எண்ணப் படையலையும் நாட்டவருக்கு அளித்திட வேண்டுகிறேன். நாம் ஈடுபட்டுள்ள அரும்பணியின் மேம்பாடு, நாடு அறிந்திடச் செய்தல் வேண்டும்.

வறுமை கொட்டினாலும், வன்கணாளர்கள் தாக்கினாலும், புன்மை இருள் நாட்டைக் கப்பிக் கொண்டிருந்தாலும், புல்லர்கள் பகையைக் கக்கினாலும், நாம் தொடக்கி நடாத்தி வரக் காண்கிறோம் — அதனைக் காண உழைத்த தோழர்களுக்கெல்லாம் எனது நன்றி. கரும்பைச் சுவைத்திடும்போது பல் இடுக்கிலே சிக்கிடும் துரும்பு துளைத்துக் குருதி கசிவது போன்றதே, அடக்குமுறைதரும் தொல்லை என்று கருதுங்கள். தாயைக் கேளுங்கள், அடுப்படி வெப்பத்தைத் தாங்குவது எப்படி என்று! பொங்கற்படையலைக் காணவேண்டும் என்ற எண்ணம் போதுமே வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள என்று கூறுவார்கள்; உமது துணைவியைக் கேட்டுப்பாருங்கள், இன்று மட்டும் கூச்சத்தைத் தழுவிக் கொள்ளாமல் பேசும்படி கேளுங்கள், அதோ வாழையை எடுத்துக் குழைத்து வாயருகே கொண்டு செல்கிறானே வீரமணி, அவனை ஈன்றபொழுது, எங்ஙனம் வலியைப் பொறுத்துக் கொண்டார்கள் என்-று! பதில் கிடைக்காது! ஓர் ஆசை முத்தம் கிடைக்கும், உங்களுக்கு அன்று — அந்தப் பயலுக்கு!!

தாயக விடுதலைக்காக நாம் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் தொல்லைகள் பலவற்றை!! தாங்கிக் கொள்ளும் பண்பு வளர்ந்துவிட்டது. இனி, பால் பொங்க, முறைப்படி தேவையான காலம் வேண்டும் — பால் பொங்கும் நிச்சயமாக! வண்ணக் கலயங்களும், தீட்டுக்கோலும் திரையும் கிடைக்காததால், ஒவியன் மனத்திரையிலே பதிந்துள்ள ஓவியத்தைத் தீட்டாதிருந்திட மாட்டான் — காலம் தேவை துணைப்பொருள்களைப் பெற. எனினும், ஓவியம் தீட்டப்படும் என்பதுமட்டும் உறுதி! ஓவியனல்லனா ஓவியம் தீட்ட விரும்புகிறான்!! இயலாது போவது எங்ஙனம்? தாயகத்தின் தளைகளை நொறுக்கி, விடுவித்து, தன்னரசைச் சாய்த்திட்ட சழக்கருக்கு நல்லறிவுச் சுடர்கொளுத்தி விரட்டிட, நாட்கள் பலவாகக் கூடும் — நமது கரங்களிலே போதுமான அளவு வலிவு ஏறக் காலம் தேவைப்படக்கூடும்! எனினும், என்ன! தாயகத்தின் விடுதலையைப் பெறாமலா இருந்துவிடுவோம்? வீரரன்றோ, உரிமை கொண்டோரன்றோ, திராவிடத்தைக்காண முனைகின்றனர்! எங்ஙனம் அது இயலாது போகும்! இடர்பல கிளம்பத்தான் செய்யும். தொடர்ந்து தொல்லைகள் துரத்தி வந்து தாக்கத்தான் செய்யும் — செய்யினும் என்! வெற்றி பெறாமலிருக்க, நாம் என்ன, அறமற்ற நோக்குடனா பணியாற்றுகிறோம்? ஆற்றலற்றவர்கள் வழிவந்தவர்களாகவா உள்ளோம்? இல்லையே! அறமும் அதனைக் காத்திடும் திறமும் பெற்றிருந்த மறக்குடி பிறந்தவர்களல்லவா நாம்? நமது பிறப்புரிமையைப் பெறப்
புறப்பட்டுவிட்டோம்; பெறுவோம்!

இன்று நம் எதிரே தெரிவனவெல்லாம், சிந்தையை நைந்திடச் செய்யும் காட்சிகள் — ஐயமில்லை — எனினும் அவைகண்டு, ஆகுமா நம்மால் என்று அயர்ந்திடத் தேவையுமில்லை.

நேற்றுப் பிறந்த வேற்று மொழி, நம்வாழ்க்கை வழியாம் தமிழ் மொழியை வீழ்த்திட! எனினும் அதுகண்டு, ஆகுமா நம்மால் என்று அயர்ந்திடத் தேவையுமில்லை.

நேற்றுப் பிறந்த வேற்று மொழி, நம்வாழ்க்கை வழியாம் தமிழ் மொழியை வீழ்த்திட இயலுமா என்று சுழற்கண்கொண்டு நோக்கிடக் காண்கிறோம் — ஆயினும், அந்த வேற்று மொழியைத் தடுத்திட உயிரை ஈந்த வீரரின் கல்லறை நமக்குக் களிப்பையும், மாற்றாருக்குக் கலக்கத்தையும் தந்திடக் காண்கிறோம். — வெற்றி நமதே என்ற நம்பிக்கை கொள்கிறோம்.

அரசு, எங்கோ உள்ள தில்லியில் அமைக்கப்பட்டு, இங்குள்ளார் அரசாளும் கோலமும் அடிபணியும் நிலையும் பெற்றுள்ள கேவலத்தைக் காண்கிறோம் — ஆயினும், இஃது இழிதன்மை, நமது மாண்புக்கும், வரலாற்றுக்கும் பழி தேடும் புன்மைச் செயல், எனவே, இதனை மாற்றியே தீரவேண்டும் என்ற மன உறுதி, நமது கோட்டத்திலே மட்டுமன்று, மாற்றாருக்கு ஆளடிமை செய்யும் நிலைக்குச் சென்றுள்ளவர்களின் கோட்டங்களிலே கூட, ஓரொரு சமயம், வெளிப்படக் காண்கிறோம் — வெற்றி நமதே என்று களிப்பெய்துகிறோம்.

வளமற்ற வயல்கள், வறண்ட ஆறுகள், வாடிய பயிரென்றுள்ள மக்கள் — நாம் காணும் காட்சிகள் — துக்கமும் வெட்கமும் துளைக்கத்தான் செய்யும் — எனினும், பொன் கொழிக்கும் நாடாக இருந்த ‘அந்த நாட்கள்’ பற்றி எண்ணம் தோன்றாமலில்லை! இடிந்த கோட்டைகள், தூர்ந்த அகழிகள், மண்மேடாகிப்போன மாளிகைகள் — கண்டதும் கவலையைத் தான் தருகின்றன. மறுகணமோ, முன்னாள் எழிலை நினைவிலே கொண்டுவந்து சேர்க்கின்றன. இந்நாள் இழிவு துடைக்கப்படும். நாளை நமது நாடு, முல்லைக் காடென மணம் கமழும், பண்படுத்த நாம் இருக்கிறோம், உழைப்போம், உழைப்போம், வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை பிறக்கத்தான் செய்கிறது.

தாயகத்தின் விடுதலைக்காக எளியோராகிய நம்மால் அமைக்கப்பட்டுள்ள கழகம், அழைப்பு விடுத்திடும் போதெல்லாம், நாடாள்வோர், காண்பது என்ன! எங்கிருந்தோ கிளம்புகிறது படை!! யாராரோ போர்க்கோலம் கொள்கிறார்கள்! கூப்பிடும் குரலும், குடிலிலிருந்து பதிலளிக்கும் வீரர்களும், மாளிகை உறைவோரல்லர்! போரின் கடுமை, தாக்குதலால் நேரிடும் விளைவு — இவைபற்றிய எண்ணம் எழக்காணோம், களத்திலே வீர முழுக்கம் கேட்கிறது, கழகம் அறிவிப்பு அனுப்பியதும்.

தாயகம் விடுதலை பெற வேண்டும் என்ற பெரு நோக்கின்றிப் பிறிதோர் துணையற்ற நிலையில் உள்ள, நமது கழகம் விடும் அன்பழைப்புக்கே இந்த வகையிலே, வீரர் பதிலளித்து, ஏறுநடை போட்டு, களம் வந்து சேருகிறார்கள் என்றால், கழகம், ஒரு விடுதலைப் பாசறை பெற வேண்டிய வசதிகளையும் துணைகளையும் பெற்றால்….! எண்ணுவதே செந்தேனைச் சுவைப்பதற்கு ஒப்பாக உளதன்றோ! அதோ களிறு உலவும் அந்தக் காட்டைக் கடந்தால், ஒரு சிற்றாறு, அதைக் கடந்திடல் எளிது, கடந்ததும் அவள்…! என்று எண்ணி வழி நடக்கும் காதலன் உள்ள நிலையன்றோ, நமது நாட்களில் நமது கழகத்துக்கு! பிறகேன் மகிழ்ச்சி பொங்காது! குன்றம் கொண்டோர்; அதனைத் திருப்பித் தந்தே தீருவர் . கேட்கும் நாம்; உரிமையாளர். குன்றம், நமது தாயகம்.

அழகிய சிறு குன்று — அரணாக அமைந்திருக்கிறது, அரசுக்கு.

அரசு, அளவிற் சிறியது, மாண்பினில் பெரிது.

வாழ்த்தாதார் இல்லை! வாரி வழங்குதலாலும், பண்புடன் ஒழுகியதாலும், பாவாணர் போற்றினர்! மக்கள் வாழ்வில் வளம் எய்தி மகிழ்ந்தனர்.

பெரிய அரசுகள், சிறுமைச் செயல்களிலே ஈடுபட்டன — இவ்வரசு அறமும் அன்பும் இணைந்ததோர் எழிலரசாகத் திகழ்ந்தது.

பாரியின் அரசு, புலவர் பெருமக்களுக்குப் போற்றத்தக்க பொன்னோவியமாகக் காட்சி அளிக்கிறது.
மகளிர் இருவர் — பாரிக்கு. கட்டழகும் கல்விச் செறிவும் கொண்ட கன்னியர்.

மண்ணாசை அற்று, மாண்புடை அரசுமுறையைக் குறிக்கோளாகக் கொண்டு, குடி தழீஇக் கோலோச்சிவந்த பாரி, பெருநிலமாண்டோரின் பகைக்கு இரையானான் — அரசு எழிலிழந்தது — உரிமை பறிபோனதால். பாரிமகளிர், புழுதிபடிந்த பொற்சித்திரங்களாயினர்.

மூதாட்டி ஔவை, இந்நிலையில் அம்மகளிரைக் கண்டார் — கண்ணீர் மல்கினார். வள்ளல் பாரியின் மகளிர், தமிழ்ப் பெருமாட்டியைக் கண்டனர், ‘அந்த நாட்களை’ — எந்தையும் எழிலரசும் இருந்த நாட்களை எண்ணிக் கொண்டனர், விம்முதற்கு அல்ல, ஔவையாரின் புலமைக்கு ஏற்றவகையில் அவரை வரவேற்று உபசரிக்க. ‘அந்த நாள்’ இல்லையே என்ற ஏக்கத்தால், பாரி மகளிரிடம், இப்பண்புதானே இருக்கும்! பகைவர், மண்ணைத்தான் அள்ளிச் சென்றிடமுடிந்தது — பண்பு எங்கே போகும்! எவர் பறித்திட இயலும்!!

அன்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்! — என்று கூறிக் கசிகின்றனர், கன்னியர்.

வெண்ணிலா! குன்றின்மீது அதன் குளிர் ஒளி! அந்த ஒளியின் தண்மையைவிடச் செம்மையான குணம் கொண்ட பாரி!!

எந்தை இருந்தார்! எமது அரசும் பிறர் கொள்ளவில்லை! அஃதன்றோ அன்னையின் வருகைக்கு ஏற்ற வகை அளிக்கும் காலம்! இல்லையே!! — என்று எண்ணியே பாரிமகளிர், எந்தையும் உடையேம்! எம்குன்றும் பிறர்கொளார்! என்று கூறி, இப்போதோ வேற்றார் எமது குன்றினைக் கைப்பற்றிக் கொண்டனர் — எங்ஙனம் முடிந்தது? -வீரம் மிக்கவர் அன்றோ, ஈரமுள்ள நெஞ்சினரான பாரி? எந்தையும் இலமே! எமது தந்தை இல்லை, இறந்துபட்டார், குன்று மாற்றாரிடம் சென்றது. அதனாலேயே என்று எடுத்துரைத்து, அன்று, ஔவை மூதாட்டியின் அகத்தை — ஏன்! இன்று படிக்கும்போது நமது மனத்தையுந்தான்! — நெகிழச் செய்தனர்.

பாரிமகளிர், அற்றைத் திங்கள், அவ்வெண்ணிலவு, குன்று, எந்தை! — என்று இழந்த இன்பத்தை எண்ணிக் கசிந்துருகிய நிலையிலே, இன்று நாம் — திராவிடர் — இருக்கிறோம்.

தண்ணொளியும் தன்னகரும் இழந்தோம் — நாடு, அடிமைக் காடாகிவிட்டது. எனினும், ஒப்புயர்வற்ற தன்னரசையும் அதனைத் தழைத்திடச் செய்யும் ஆற்றல்மிக்க எந்தையையும் இழந்தாலும், பாரிமகளிர் பண்பினை இழந்திடாதிருந்த பான்மைபோலத் தன்னரசு இழந்த நாமும், பண்பு இழந்தோமில்லை — எனவே, இழந்த இன்பத்தை மீட்டிடும் ஆற்றலை, வாய்ப்பை இழந்துவிடவில்லை! இற்றைத்திங்கள் இழிவும், பழியும், இடரும் தாக்கிடுவது உண்மை! எனினும், இழந்த குன்றம், மீண்டும் நமதாகும் என்ற நம்பிக்கை நாதம் கேட்கிறது. நரம்புக்கோர் புது முறுக்கு ஏறுகிறது — விழியிலே ஏக்கம் மடிந்து, ஆர்வப் பொறி கிளம்புகிறது — குளுரைத்துவிட்டோம், கடுசொல் அல்ல, கெடுமதியாளரின் பிடியிலே சிக்கிச் சீரழியும் நமது அரசு மீண்டும் நமதாக வேண்டும் — அதற்கான அரும்பணிக்கு, நம்மை நாம் ஒப்படைத்து விட்டோம் — முயல்வோம், வெல்வோம்!

இந்த உற்சாகமும் உறுதியும் நம்பிக்கையும் பொங்குக! என்று கூறி, என் அன்பு கலந்த நன்றியை அனுப்புகிறேன், பாகு, கரும்பு, செந்நெல், கனிவு, மழலை, களிப்பு ஆகியவற்றுடன் இதனையும் கலந்து பொங்கலிடுக! பொங்குக இன்பம்! தங்குக எங்கும்!!

(திராவிட நாடு பொங்கல் மலர் — 1954)

http://www.annavinpadaippugal.info/katturaigal/ponguga_inbam_1954.htm

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

No responses yet

Write a response