பொங்குக இன்பம்!

அறிஞர் அண்ணா, திராவிடநாடு மலர், 1948

SG
7 min readJan 20, 2020

‘பெங்கல் புதுநாள் இன்று’ தமிழர் திருநாள்! இந்நாள், நாம் நமது வாசகர்கட்கும் அவர்தம் நண்பர் குழாத்துக்கும் — பொதுவாகவே திராவிடர் அனைவருக்கும் பொங்குக இன்பம்! தங்குக எங்கும்! வாழ்வு வளமாகுக! வேளாண்மை ஓங்குக! இடர் ஒழிக! இல்லாமை ஒழிக! அனைவரும் சமமெனும் நீதி செழித்தோங்குக! இன்பம் பெருகுக! — என்ற அன்புரைகளைப் பொங்கும் மகிழ்ச்சியில் பெய்து தருகிறோம். மனைதோறும் மகிழ்ச்சி மலர வேண்டுமென்று விரும்புகிறோம். அளவரிசிக் காலந்தான். ஆள வந்தார்களுக்குக் கவலைதான். என்றாலும் ஆண்டிற்கொருநாள், இத்திருநாள் — இந்நாள், மகிழ்ச்சி மலரட்டும் — மாண்பு அல்ல இது. சூதும் சூழ்ச்சியும், வீரத்தை வாட்டி வதைத்ததை விளக்கும் பண்டிகையல்ல. இது, தமிழர் திருநாள் பாடுபட்டால் பலன் உண்டு, உழைத்தால் வாழ்வுண்டு என்ற மூலக்கொள்கைக்கு இடமளிக்கும் நாள். காட்டைத் திருத்தி நிலமாக்கி, உழைப்பால், ஓமத்தால் அல்ல — மேட்டை அகற்றிக் குணமாக்கி — நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்ததால், நெய்யை ஊற்றித் தீயை மூட்டியதால் அல்ல-காடுகளை வாய்க்கால்களாக்கி, வயல்கள் அமைத்து, வரம்பிட்டுத் தொகுத்து, உழுது, நீர் பாய்ச்சி, களை எடுத்துக் காப்பாற்றி, முற்றிய கதிரை அறுத்தெடுத்து முற்றத்தில் கொட்டி, அளந்து பார்த்து ஆனந்திக்கும் நாள். உழைப்பின் பயன் இதுவென உணர்ந்து மகிழ்ந்து பொங்கும் மகிழ்ச்சியை எடுத்துக் கூறுவதுபோல, பொங்கலோ! பொங்கல்! என்று தீந்தமிழ் புகன்று, தித்திக்கும் பண்டமுண்டு, திருநாள் கொண்டாடுகின்றனர்.

திருந்தா வயலில் உழவு இல்லை-நம் நாடு திருந்தாத வயலாகவே இன்றும் இருக்கிறது.

உழுது நீர் பாய்ச்சி, களை எடுக்கா முன்னம் பச்சைப்பயிர் பார்க்க முடியுமா? செந்நெல் தேட இயலுமா? நாம், எங்கே நம் நாட்டுக் களைகளைப் போக்கினோம்! இல்லையே! அதோ தீண்டாமைக் — கள்ளி! இதோ வைதிகக் காளான்! அங்கே சனாதனச் சேறு! அதிலே நெளிகிறது பழைமைப் புழு! மாயாவாத மடுவிலே, வேதாந்த முதலைகள்!! நாடு இந்த நிலையிலே இருக்கிற காரணத்தால், நாம் கொண்டாடும் திருநாள், முழுவிழாக் கோலத்துடன் இல்லை! புன்னகையும் பெருமூச்சும் மாறி மாறிவித் தோன்றும் நிலைதான்!

“அண்ணா வா! செங்கரும்பின் சாறு பருகு!” — என்று அழைக்கிறோம் இல்லங்களில். ஏதோ சேல்விழியாள் பால்வண்ணப்பட்டுடுத்தி, பவழநிற அதரத்தைப் பக்குவமாகத் திறந்து, பளிங்குப் பற்களைக் கொஞ்சம் காட்டி, “பால் பொங்கிற்றா!” — என்று கேட்டுவிட்டுச் செல்கிறாள்.
குழந்தைக் குமரன், அதட்டிப்பார்க்கும் அன்னையைக் கன்னல் மொழிக் குழைவால் ஏய்த்துவிட்டு, விளையாட்டு நடை நடந்துகாட்டி, கண்மூடித் திறப்பதற்குள், வாழையைக் குழைத்து வாயிலும் கையிலும் பூசிக்கொள்ள, வயலில், பலாவின் சுளையைப் பக்குவமாகப் பெயர்த்துக் கொண்டுள்ள தந்தையிடம், கொண்டுபோய் நிறுத்தி. “பாருங்கள், உமது மகனின் சேஷ்டையை” என்று கூறிக் களிக்கும் தாய்மார்கள் உலவுகிறார்கள். புத்தாடை பூண்டு, புத்துணர்வுப் பொருள் சமைத்து உண்டு, உள்ளத்தில் ஒரு நாளெனும் களிப்புக் கொள்வோம் என்று, மனைதோறும் உள்ளனர். மக்களோடு மாடு கன்றும், விழாக் கோலம் பூண்டு கொண்டன!

அம்மையை ஐயன் மணம் செய்து கொண்ட நாளல்ல, ஆவுக்கு மோட்சம் அளித்த நாளல்ல, சூரனைக் கொன்ற விழாவல்ல, தாளில் வீழ்ந்து தட்சணை தரவேண்டிய நாளல்ல — தமிழரின் தனித்திருநாள் இது — தவறிய பாதையில் புகுந்த தமிழர் வழக்கமாகக் கொண்டாடும், பல ரகப் பண்டிகைகள் போன்றதல்ல.

பொங்கற் புதுநாள், தமிழரின் தனிப் பெருந்திருநாள் — அன்று தமிழர், விழாக் கொண்டாடுவது மட்டுமல்ல, விருதுண்டு மகிழ்வது மட்டுமல்ல, தமிழகத்தின் நிலைமை பற்றியும், கூடிப்பேசி, மகிழ்ச்சியும் எழுச்சியும் கொள்ளவேண்டிய நாள், என்பதைச் சில பல ஆண்டுகளாகத் தமிழர்கள் உணர்ந்து, அதற்காவன செய்து வருகிறார்கள். சென்னை நகரில், பொங்கற் புதுநாளைத் தமிழர் திருநாளாகத் திருத்தி அமைத்த பெருமை காலஞ் சென்ற தமிழவேள் கா.நமசிவாய முதலியாரைச் சாரும். தமிழ்ப்பெரும்புலவர் தொடக்கிய அந்தப்பணி, அரும்பென இருந்தபோது, தமிழ்நாட்டிலே தோன்றிற்று. எந்தச் சுயமரியாதைக்காரர்கள், கலை அறியாதார் — மொழி அறியாதார் — என்று ஏளனம் செய்யப்பட்டனரோ, அவர்தம் பெருமுயற்சியாலே, தமிழகத்திலே, தமிழ்த்திருநாள் உயர்ந்த இடம் பெற்றது — மதுரை கயற்கண்ணியார் கோயிலிலே, நிதியின் காவலர்கூடி, ஆரியம் வருமுன்னர்ச் சீரிய திராவிடம் வீறுடன் விளங்கிற்று என்று பேசும் தமிழ்த்திருநாள் நடைபெறும் அளவுக்கு வளர்ச்சி ஏற்படக்கண்டோம் — களித்தோம்.

விழாவில் மகிழ்ந்து, பின்னர் அயர்ந்து போவதை நாம் விரும்பவில்லை. விழாவே, சிந்தனைக்கு ஒரு விருந்தாக அமையவேண்டும் என்று எண்ணுகிறோம். அந்த முறை
யிலேயே, தமிழர் இல்லந்தோறும், பொங்கற் புதுநாள் விளங்கவேண்டும் என்பதற்காகக் கரும்பும் வேம்பும், கதலியும் மலரும், செந்நெலும் பிறவும் தருவதற்குப்பதில், சிந்தனைக்குரிய சிலபல கூறுவதையே பொங்கல் விழாவுக்கு நாம் தரும் பொருள் என்று கூறுகிறோம்.

விழாவுக்கு உதவியவர் உழவர்; அவர்தம் நிலையை மறத்தலாகாது. உழவர் உள்ளம் எந்நிலையோ, அந்நிலையே ஊர்நிலை இருக்கும் — ஊராள்வோரின் நிலையுமிருக்கும். உழவுத் தொழிலுக்கு, நாட்டு மக்கள் நன்மதிப்புத் தருவதே இந்தத் திருநாளின் முக்கியமான நோக்கமாக அமைதல் வேண்டும். வேலி இரண்டாயிரம் கொண்ட நில வேந்தர்கள் ஒரு புறமும், ஒட்டிய வயிறுடன் கட்டிய கந்தையைக் கசக்கிப் போட்டுவிட்டுக் கையால் மெய்யைப் போர்த்திக் கொண்டுள்ள உழவர் மற்றொரு புறமும் இருப்பது, நாட்டுக்கு நல்லதல்ல. இந்தக் காட்டுமுறை போகவேண்டும் — போய்த்தீரும் — போகும் என்ற நம்பிக்கை ஏற்படும் வகையிலே, ஜமீன், இனாம் ஒழிப்புத் திட்டங்கள் உருவாகின்றன. ஆனால், அது மட்டும் போதாது; காட்டுராஜாக்களோட, மேட்டுக் குடியினரின் மேலாதிக்கமும். உரிமைகளை ஊராள்வோர் பாதுகாத்துத் தரவேண்டும். உழவனின் வாழ்க்கையே வளைக்குமளவு இன்றுள்ள உழைப்புக் குறையும்படியும், அதுபோது, விளைவு அதிகரிக்கும்படியும், விஞ்ஞான வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும். எலும்பொடியப் பாடுபட்டுச் சாதிக்கவேண்டிய காரியங்களை, ‘இரும்புச்சேவகன்’ இன்று செய்து தருகிறான் மேனாடுகளில். அந்நிலை, இங்கும் வரவேண்டும். வெள்ளி முளைத்ததும், கோழி, அரைத்தூக்கத்துடன் கூவத் தொடங்கியதும், காகம், கம்மியகுரலில் கரையத் தொடங்கியதும், கலப்பையை எடுத்துக்கொண்டு காளையை ஓட்டிக்கொண்டு சென்று, கடும்வெயிலில், கஞ்சிக் கலயத்தைச் சுமந்து கொண்டு, மனைவி வரும்வரையில் நிலத்தை உழுது. பிறகு, செவ்வானம் கண்டு வீடு திரும்புகிறான் உழவன். ஆனால் அவன்வாழ்வு செம்மைப்படக் காணோம். உழுது, விதை தூவி, நீர்பாய்ச்சி, மடைகட்டி, களை எடுத்து, அறுத்து, அடித்துக் குவிக்கிறான்; ஆனால், அவனுடைய குடும்பம் களிப்படைவதில்லை. விவசாயத்தையே செய்து நம்பிவாழ்கிறது நம் நாடு. ஏரெழுபது பாடினர் கவிகள். இன்றும் கவிகள், கிராமாந்திரத்தில் உள்ள சோலைகள், சாலைகள், வாவிகள், வர்ணனைகளைப் பற்றிக் கூறுகின்றனர். ஆனால், கவியின் கண்களுக்குத் தென்படும் சித்திரத்துக்கும், நம் கண்களில் தெரியும் சித்திரத்துக்கும் பெருத்த மாறுபாடு இருக்கிறது. நாம் காண்பது வறண்ட நிலம், வற்றிய குளம், நீரில்லா ஆறு, முடை நாற்றமடிக்க முண்டும் இன்றி ஆடும் பாலர்கள், எலும்புக்கூடான எருதுகள், இளைத்த உழவன், இருமல்நோயால் வாடும் அவன் மனைவி, தடியூன்றித் தவிக்கும் தாய், தாங்கொணா வறுமை, பஞ்சம், பிணி, பட்டினி, பரிதவிப்பு, சோகம்!

இந்த நிலை மாறியாக வேண்டும் — நீதி செழிக்க வேண்டுமானால், நிம்மதி ஏற்பட வேண்டுமானால், மனிதத் தன்மை மலரவேண்டுமானால், உழவன் வாழும் கிராமத்
துக்கும் உல்லாச வாழ்வினர் வசிக்கும் நகரத்துக்கும் இடையே இன்று காணப்படும் பேதம் — வசதிக்குறைவு — நீக்கப்பட வேண்டும். ஏரடிக்கும் சிறுகோலின் மகிமையைப் பாடிக்காட்டி விட்டு, “சேரிக்குப் போடா! நாளைக்கு வாடா!” என்று பாடிக் காலந்தள்ளலாகாது — முடியாது. நாட்டின் பொதுச்செல்வம் வளர, பொதுத்தரம் உயர, பொது நன்மை ஓங்க, உழவனின் தொழில்முறையிலே, அவர் வாழும் கிராம வாழ்க்கை முறையிலே, மிகமிக முற்போக்கான மாறுதல் ஏற்பட்டாக வேண்டும். புரட்சிக்குப் பிறகு, சோவியத் நாட்டிலே, தலைவர்கள் இனி நாம் ஒரு துணை தேடியாக வேண்டும் -புரட்சி பயன் தருவதற்குப் புதுமுறை நிலைப்பதற்கு என்று கூறினார்-யாது இந்தத் துணை என்று கேட்டதற்கு, ஒரே வார்த்தையின் பதில் கூறினர். மின்சாரம்! — என்று. விளக்கு மட்டுமன்று; மனிதனின் உழைப்பைக் குறைக்கும் சகல சாதனமும், வசதியும் இதன்மூலம் பெறவேண்டும்.

உழவரின் நிலையைக்குறித்து விழாநாளன்று எண்ணுவதுபோலவே, ஊர்நிலை பற்றியும், நமது உள்ளத்தின் நிலை பற்றியும் எண்ணுவதும், அந்த எண்ணத்தை நமக்களித்த தலைவர் பெரியாரின் பெருந்தொண்டினைப் போற்றுவதும், விழாநாள் நிகழ்ச்சிகளாக வேண்டும்.

நாடு, தன்னாட்சி பெற்று விளங்கவேண்டும். புத்துலகப் போக்குக் கொள்ளவேண்டும் என்பது, நமது குறிக்கோள். திராவிடம் தனி அரசு செலுத்துவதற்கு ஏற்றதிறம், வசதி, வாய்ப்புப் பெற்றிருக்கிறது என்பது நமது நம்பிக்கை. நம்பிக்கை, ஆதாரங்களின் அடிப்படை மீது எழுப்பப்பட்டது — மனக் கோட்டையன்று, மாசுபடிந்த மணி, நம்நாடு என்பதற்கு மறுக்கமுடியா ஆதாரங்கள் உள்ளன. மக்களின் ஒன்றுபட்ட உள்ளம் ஒன்றுதவிரப் பிறவளங்கள் யாவும் பெற்றுள்ள நாடு — திராவிட நாடு.

“வளமார் எமது திராவிடநாடு
வாழ்க! வாழ்கவே!!”
என்ற பண், விழாக்கொண்டாடும் மனைதோறும், கேட்கப்பட வேண்டும்.

திராவிடத்தின் விடுதலைப்போரை நடத்தும் பெரும் பொறுப்பு நமது நாட்களில் ஏற்பட்டிருக்கிறது. அதன் அவசியத்தை மக்கள் உணரச் செய்யும் பெரும்பணியில், பகுதியளவும் இன்னும் நடைபெறவில்லை. அந்தப் பணி, தொடர்ந்து நடைபெற உதவும் நோக்கத்தை விழாவன்று கொள்ள வேண்டுகிறோம்.

தன்னாட்சியைத் திராவிடம் இழந்ததோடு மட்டுமில்லை.

அதோ ஓர் அருவி! இதோபார் அகிற்கட்டைகள்! இதோபார் சந்தன மரக்கட்டை! இதோ மூங்கில்! இவற்றை எல்லாம் அந்த மலையருவி உருட்டிக் கொண்டு வருகிறது பாராய் — என்று ஒரு காலத்தில் பேசிக்களித்த மக்கள் வாழ்ந்த நாட்டிலே, குன்றின் எழிலையும், கோலமயிலாடும் காட்சியினையும், வென்று வாகை சூடிய வீரரையும், அவரை வேழம் துரத்திடுக! என்றழைத்துப் புன்னகை விருந்திட்ட பூவையரையும், முத்துக் குவியலையும் கண்டு பெருமை அடைந்தவர்கள் வாழ்ந்த நாட்டிலே, இன்று அணையில்லா ஆறுகள், வகையில்லா விவசாயம், பாதையற்ற கிராமங்கள், பயன்தராப் படிப்புமுறை, பக்குவமற்ற ஆட்சித் திட்டங்கள் உள்ளன. இவற்றோடு மச்ச கூர்ம முகங்கொண்டோர், மார்கழியில் வெண்பொங்கல் தின்றோர், மார்பில் மங்கை கொண்டோர், மவீரர் பலரைக் கொன்றோர் பூசுரர் வேண்டிட அருளை விண்டோர் என்று இவ்விதமாகவெல்லாம் ஆண்டவனைப் பற்றி அர்த்தமற்ற கதைகளை நம்பிக்கொண்டு, அவல வாழ்வு நடத்தும் மக்கள், உடலை நடமாடவைக்க உயிரும், உயிர் தங்கி இருக்க உடலும் கொண்ட உருவங்களாக உள்ள நிலையைக் காண்கிறோம்.

இந்த நிலையின் காரணத்தையும் கண்டறிய மறந்திருந்தோம் — நெடுநாள் வரை கண்டறிந்ததுமோ, கவலைக்குள்ளானோம், இழந்த அந்த இன்பத்தை மீண்டும் பெறுவது எப்படி என்று எவ்வளவோ கவலை, கலக்கம், பயம், தோல்வி, சஞ்சலம், இவற்றைக் கடந்துதான். அதோ மனையில் உள்ள விளைபொருள்கள், ஆடை, அணி கிடைத்தன-பாட்டாளிகளின் தயவால்.

இழந்த இன்பத்தை மீண்டும் பெறமுடியாது என்று எண்ணுபவர், தமது ஏமாளித்தனத்தை ஏதோ ஒரு பெயரிட்டழைத்துத் திருப்திப்படட்டும். நாம், அங்ஙனம் கருதத் தேவையில்லை. எங்கும் விடுதலை விழா நடந்தேறும் நாட்களிலே வாழ்கிறோம். ஏகாதிபத்தியம் கடனாளியானதைக் காண்கிறோம். விடுபட்ட பர்மா, சீர்பட்ட சிலோன், இரவல் கௌரவத்தைப் பெற மறுக்கும் இந்தோனேஷியா என்று, எத்திக்கு நோக்கினும், தளைகள் அறுபடக் காண்கிறோம்! வீழ்ச்சியுற்ற தமிழகமும் எழுச்சி பெற்றே தீரும் என்ற உறுதி ஏற்படத்தான் செய்யும். ஏன் இயலாது? புதிய பொலிவு பெற்றே தீருவோம், என்று புத்தாண்டு விழா நாளன்று, குடும்பத்திலே குதூகலம் மிகுந்து விளங்கும் இந்நாள், சூளுரைத்துப் பணிபுரிந்தால், தேய்ந்து கிடக்கும் திராவிடத்திலே, மீண்டும் வெற்றி ஒளி எழுந்திடும். அதோ உள்ள நெல்-மண்ணிலிருந்து கிடைத்தது! கருமையும் செம்மையும் கலந்த மண்ணிலே இருந்து மனிதனின் உழைப்பும் உறுதியும், பொன்னிற மணிகளைப் பெறச் செய்தது! உழைப்பின் வெற்றி! உறுதியுடன் பணிபுரிய ஓர் இனம் துணிந்துவிடுமானால், பார்வையால் உருட்டி, பேச்சால் மிரட்டி, நடவடிக்கைகள் மூலம் ஜனநாயகத்தையே மாய்க்கும் போக்குக் கொண்ட படேல்களும், பணிந்தே தீருவர். இப்போதும் என்ன? அகதிகளைக் காட்டி, ஐயோ! படுகொலை! என்று ஓலத்தைக் கிளப்பி, காஷ்மீரில் சண்டை, பாகிஸ்தானுடன் பலவிதத் தகராறு, நிஜாமின் கெடுபிடி என்ற மிரட்டும் குண்டுகளை வீசியே, படேலிசம் வாழமுடிகிறது. பயமூட்டிவிட்ட நிலையிலே மட்டுமே படேலிசம் வளர முடியும்.

கடந்த போரின்போது, ஜெர்மானியர் ஒரு புதுரக வெடிகுண்டு வீசினர் — அது ஆளைக் கொல்லாது, இடத்தை அழிக்காது. ஆனால், மக்களின் மனத்தை மருட்டும் ஓர் அகோரக் கூச்சலைக் கிளப்பி, கதறல் குண்டு என்று பொருள்படக்கூடியது, குஇகீஉஅஇஏஐNஎ ஆOMஆ என்று பெயர். இன்று, படேலிசம், இதே முறையில், அறிக்கைகளை, சொற்பொழிவுகளைப் பயன்படுத்தி, மக்கள் மனத்திலே மருட்சியை ஊட்டி, அவர்களைச் சிந்தனையற்றவர்களாக்க முயலுகிறது. இது, நிரந்தர வெற்றிதரும் முறையன்று! இந்தக் குழப்பமூட்டும் சூழ்நிலை மாறிவிடும் — மாறியதும், திராவிடத்திலே, தெளிவு ஏற்படத்தான் செய்யும். அமைச்சர்கள், அடிக்கடி தாம் வடக்கே அனுப்பி, உதாசீனப்படுத்தப்பட்ட அறிக்கைக் கட்டுகளின் மீது கண்ணீர் சொரிவர்! வரிபோடும் முறையும் வற்றிவிட்டது. மத்தியசர்க்காரிடமிருந்தோ, போதுமான உதவி கிடைக்கவில்லை என்று. நிதி மந்திரி, நாட்டின் கதிபற்றிக் கவலையுடன் பேசுவார். கள்ள மார்க்கட்டும் ஒழிந்தது, கட்டிய மனக்கோட்டையும் இடிந்தது, வடநாட்டவருக்குக் கமிஷன் ஏஜண்டுகளாக இருக்கும் நிலை தவிர, வேறுகாணோமே என்று, இந்நாட்டுத் தொழில் துறையினர், வணிகத் துறையினர் துயருறுவர். எதற்கெடுத்தாலும் டில்லிதானா! என்று மன எரிச்சலுடன் கேட்பர், நிர்வாகத்திலிருப்போர். “ஏமண்டோய்! மன அந்தமைன ஆந்திர தேசமுகூட, வாள்லகே சொந்தமைனதோ- ஈ, குஜராத்தி வாள்லு, சாலா தொந்தரவு சேஸ்தாரண்டி’ — என்று ஆந்திரத் தலைவர்கள் பேசுவர். வெற்றிக்கொடியை வேங்கடத்தின் மீது நாட்டிவிட்டோம், வேறுவேலை வேண்டுமே என்பர் தமிழரசார்! இங்ஙனம், அனைவரும் கூடி ஒவ்வொரு துறையிலேயும் கிளம்பும் அல்லல் பற்றியும் பேசுவர் — பேசிக்கொண்டே, அவர்களையும் அறியாமல், திராவிட நாடு திராவிடருக்கே என்று சிந்துபாடத் தொடங்குவர். முன்கூட்டி நாம் கூறும் போது மட்டும், முகத்தைச் சுளித்துக்கொள்வர்; முட்டாள்தனம் என்பர். அவர்களின் அகராதி பெரிது! ஆனால், நமது நம்பிக்கைக்குக் காரணம் என்ன?

1. எலிவளை எலிகளுக்கே என்று பேசியவர்கள், தமிழ்நாடு தமிழருக்கே என்று பாடுவது காண்கிறோம்.

2. இந்தியைக் கட்டாயப் பாடாமாக்குவதே சரி என்றவர்கள், என்ன பாடுபட்டாலும், இந்தி பொது மொழியாவது சிரமம் என்று சோக ரசத்துடன் பேசிடக் கேட்கிறோம்.

3. மத்தியசர்க்கார் தேவைதான் என்றாலும், மாகாணங்களை இப்படிப் பட்டினி போடும் முறையிலே, சகல அதிகாரமும், டில்லியில் குவிவது கூடாது என்று பேசிடக் கேட்கிறோம்.
இவை மங்கலநிறமான குறிகள்! ஆனால், மறைந்துவிடக் கூடிய குறிகளல்ல — வளரக் கூடியவை.

அசாமியரே! வங்காளிகளை வெறுக்காதீர்.
வங்காளிகளே! குஜராத்தியரைக் குறை கூறாதீர்.
பீகாரிகளே! வங்காளிகளை விரட்டாதீர்.
ஆதிவாசிகளே! பீகாரிகளுக்குத் தொல்லை தராதீர்.
குஜராத்திகளே! மராட்டியரை மரியாதைக் குறைவாகப் பேசாதீர்.
மராட்டியரே! குஜராத்திகள் மீது கோபம் கொள்ளாதீர்.
மார்வாரிகளே! பணமூட்டை கட்டும் தொழிலைக் குறையுங்கள்.
இவை, காந்தியாரின் பிரார்த்தனைப் பகுதிகள்!

என்ன பொருள்? அவர் சமரசவாதி, ஞானப்பிரகாசர், தன்னுயிர் போல் மன்னுயிரை நேசிப்பவர் என்றெல்லாம் கூறத் தோன்றும் காந்தியர்களுக்கு. இந்த அர்ச்சனையிலே நாம் குறுக்கிடவில்லை. ஆனால், இது மட்டுமா பொருள்? இந்த உபதேசம் தேவைப்படுகிற அளவுக்கு, மாகாணத்துக்கு மாகாணம், மனமாச்சரியம் முற்றுகிறது. இந்து-முஸ்லிம் கலவரம் என்ற ஒரே ஒரு பாசக்கயிறுதான், இவற்றைக்கட்டி வைத்திருக்கிறது-வேறு இயற்கைப் பாசம் இல்லை.

இந்நிலையில், இழந்த இன்பத்தை நாம் பெறுவதா முடியாத காரியம்!

கொல்லி, நேரி, பொதியம் எனும் மும்மலைகளைப் படைத்து, காவிரி, பொருதை, தென்பெண்ணை, பாலாறு, வைகை முதலிய ஆறுகளை அணிகலன்களாகக் கொண்டு, விற்கொடி, புலிக்கொடி, மீனக்கொடி ஆகிய மூன்று கொடிகளைத் தாங்கி, மங்கல முரசு, வெற்றி முரசு, கொடை முரசு எனும் மூன்று முரசுகளைக் கொட்டி, இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழை வளர்த்து, முடியுடை மூவேந்தர்கள் ஆண்ட திராவிடம், இன்றுள்ள நிலையையும், அன்றிருந்த எழிலையும் ஒப்பிட்டுப் பார்க்க, ஆயிரமாயிரம் இளைஞர்கள் தயாராகி விட்டனர். பொன் பூத்த நாட்டிலே புண்ணிருக்கக் காரணம் என்ன? வளப்பமிகுந்த நாட்டிலே வறுமை குடி புகுந்த காரணம் என்ன? வீரம் செறிந்த நாட்டிலே வீணர் உரைக்கும் ஏற்றம் எப்படிக் கிடைத்தது? கடாரம் கொண்டவன், கங்கை கொண்டவன், யவனம் சென்றவன், இமயம் சென்றவன், என்றெல்லாம் புகழப்பட்ட நாட்டவர், சிங்களச் சீமையில் சீரழிவு, மலாயாவில் தொல்லை என்று கூறத்தக்க, ‘கூலி நிலை’ பெற்ற காரணம் என்ன? பூமிக்கடியிலே இருந்து, ஏன் உலோகங்களைத் தோண்டி எடுக்கவில்லை? கடலுக்குள்ளே குளித்து முத்து எடுத்தவர்கள், கப்பல் தொழிலில் ஈடுபடாதது ஏன்? புராணக் கதையிலே மற்றவர் மூழ்கி இருந்தபோதே, பொறிகள் அமைக்கத் தெரிந்திருந்தவர் வழிவந்தவர் வீட்டிலே, பழைய பஞ்சாங்கக் கட்டுகள் எப்படி வந்து சேர்ந்தன? எலியின் மயிரைக் கொண்டும் ஆடை நெய்தவர் என்ற ஏற்றம் எங்குச் சென்றது? ஆமதாபாத் ஆடைமலை எப்படிக் குவிந்தது? இரும்புக்கும், கரும்புக்கும், விமானத்துக்கும், காகிதத்துக்கும், கருவிகளுக்கும் வடக்கு நோக்கித் தவங்கிடக்கும் நிலைவரக் காரணம் என்ன? கங்காரு மிருகத்தின் வயிற்றுப்பையிலே அமரும் குட்டிபோல டில்லி சர்க்காரிடம் இருக்கிறோமே, இதுவா யவனம் சென்றவர்க்கு ஏற்ற நிலை! குருடரல்லர்; ஆனால், காண முடியாது! என்பது போல் இருக்கும் இந்த நிலைக்குக் காரணம் என்ன என்று அந்த வாலிபர்கள் கேட்கிறார்கள்!

போன வருஷப் பொங்கலன்றாவது, வாலிபர்களுக்கு ஒரு காரணம் காட்ட முடிந்தது-வெள்ளையர் தந்தனர் வேதனை — என்று கூறினோம்.

இந்த ஆண்டு! அவர்களை அனுப்பி விட்ட நிலை! இனி அந்தக் காரணம் ஆகாது!

வாலிபர்கள் கேட்கிறார்கள், நாட்டுக்கு நல்வாழ்வு வேண்டும் என்று. பாட்டு மொழியிலே பதிலுரைத்துப் பயனில்லை-ஏட்டினைக் காட்டி ஏய்த்திடவும் அவர்கள் இடந்தரார்! ஏதும்பதில் கூறாவிடில், கேள்வியை மறப்பாரோ? அதுவுமில்லை! அந்தக்கேள்வி, வருகிறது! வாலிபர்களின், பர்வையே கேள்விக்குறியாகி விட்டது! சென்னை போன்ற பெரிய நகரங்களிலே, நாலடுக்கு மாடியிலே, பார்வை செல்லும்போது, பெரிய பாங்கிகளைப் பார்க்கும்போது, தொழிற்சாலைகளைக் காணும்போது, மார்க்கட்டுகளில் காணப்படும் சரக்குகளைப் பார்க்கும்போது, தங்களைத் தாங்களே காண உதவும் கண்ணாடியைப் பார்க்கும் போது, ஏறிச்செல்லும் ரயிலைப் பார்க்கும்போது, வீட்டிலுள்ள ஆணிமுதல் விண்ணில் வட்டமிடும் விமானம் வரையிலே, அவர்கள் பார்க்கும்போது, ஆளவந்தார்கள் அறிகிறார்களோ இல்லையோ, அந்தப் பார்வை, ஒரு கேள்விக் குறியாகவே இருக்கிறது. அந்தக் கேள்விக்குறி அலட்சியப் படுத்திவிடக் கூடியதன்று! கூண்டிலடைபட்ட புலியிடம் இருக்கக் கூடும் அதுபோன்ற பார்வை!! இவற்றை இந்நாள் மனத்திலிருத்துங்கள்.

பாகுமொழி கேட்டுப் பரவசமடைந்து, பாலும் சோறும் பழமும் உண்டு, பட்டாடை பூண்டு, பலவளமும் பெற்று, வாழ்வில் மகிழ்ச்சியும் புதுமையும், தன்னாட்சியும் தன்மானமும், தமிழெனப் பொங்கி, இன்பம் பெறவேண்டும் என்று அனைவருக்கும், எமது இந்த விருப்பத்தையே, விழாப்பொருளாகத் தருகிறோம். பொங்குக இன்பம்! பூத்திடுக தன்னாட்சி! பொலிவு பெறுக திராவிடநாடு!

(திராவிடநாடு மலர் — 1948)

http://www.annavinpadaippugal.info/katturaigal/ponguga_inbam_1948.htm

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

No responses yet

Write a response