பொங்கலோ பொங்கல்!

அண்ணாதுரை,திராவிட நாடு பொங்கல் மலர் — 1955

SG
4 min readJan 20, 2020

கூவடா தம்பி, கூவு — கரும்பைக் கடித்துக் குதப்பும் ‘இளங்கன்றை’ நோக்கிக் கூறுகிறாள், அந்தக் குலவிளக்கு. கொழுநனோ, ‘உடைத்தெடுத்த தேங்காயின் வெண்மை எப்படி ஒட்டிற்று, என் பைங்கிளியின் பல் வரிசையில்!’, என்றெண்ணியபடி, நிற்கிறான். அவளருகில் இஞ்சியும், மஞ்சளும், செந்நெலும், கன்னலும், அவர்கள் அருகே — மலைபோல் அல்ல; ஓரளவுக்கு மழலை சிரிக்க — மாதுளை உதடுகள் திறக்க — வீரத் தோள்கள் குனியப் புது அடுப்பிலே, அவர்களது ஆனந்தத்துக்குத் ‘தாளம்’ போடும், பொங்கல் பானையைப் பார்க்கின்றனர்.

மண் தந்த பானை! அதில், அதே மண் வழங்கிய அரிசி!! ஆவின் பாலும், அதிமதுரப் பொருள்களும் கலக்கப் பொங்கி விழிகிறது!

வழிகிற பொங்கல், தனக்கு மட்டுமன்று, எல்லோருக்கும் இருக்கவேண்டுமாம். அதனால் ஒவ்வொரு குடும்பமும், இன்று உரத்துக் கூவும், கூவி, அழைக்கும், அந்த அழைப்பில் மிதந்து வரும் அன்போசை, எங்கே உண்டு, இவ்வுலகில்! அயலாரையும் உற்றாரையும் உழைக்கும் பெருமிதநினைவு, காண முடியுமா பிறரிடம்!

வழிகிறதாம், பொங்கற்பானை! அதுபோல, ஆனந்தமும் பொங்கி வழிய வேண்டுமாம்! யாருக்கு? அவனுக்கு மட்டுமன்று? அன்று! அன்று!! எல்லோருக்கும் — இருப்பது குச்சி வீடு, ஏரும் கலப்பையுமே பரம்பரைச் சொத்து, நண்டும்தேளும் நெளியும் குப்பம், நாயினும் கேவலமான வாழ்வு — ஆயினும், அந்த நல்லவன், நாவாரக் கூவுகிறான், இன்று, பொங்கலோ பொங்கல்! எல்லோருக்கும் பொங்கல்!! என்பதாக.

இந்த மனவளத்தைத் தமிழ்மாநிலம் தவிர, வேறெங்குக் காட்ட முடியும்! அந்தளவுக்கு விரிந்து பரந்தது தாயகத்தான் மனம்! தான் வாழ்ந்திட்டால் மட்டும் போதாது. செழுங் கிளையும் வாழ்தல் வேண்டும், செல்வமும் வளமும், இல்லந்தோறும் இடம் பெறுதல் வேண்டும் — அந்த இன்பம், இதோ வழிகிறதே பொங்கல், இது போல, எல்லோருடைய மனத்திலும் பொங்கிப் பொங்கி வழியவேண்டும் எனும் மங்காத மனவளத்தின் சின்னமாகத் தவழ்வது, இன்றைய பெருநாள்.

இந்தச் சின்னம், அரிதாயிருக்கக் கூடும். நாகரிகம் வளர வளர, நல்மனம் தேய்பிறையாகும் நகரங்களில் வாழும் நாச மதியினரிடையில்! ஆனால், நாட்டின் உயிரோட்டமாக இருக்கும் சிற்றூர்களில், அங்கே சிதைந்த கோட்டை போல உலவும் உழவரிடையில், பொங்கல் விழா, ஒரு பூரிப்புத் திருநாள்! போனதை மறந்து, புது உறவைத் தேடும் இன்பத் திருநாள்.

எத்தனையோ பூசல்கள், வாய்க்கால் சண்டைகள், வம்பு தும்புகள் இருந்தாலும், ஆலமரத்துக்கு மாடு விடும் சந்தையிலோ, கூடிப்பேசிக் குலவி உலவி, வெற்றிலையும் சந்தனமும், விரும்பிப் பரிமாறிக் கொள்வர்.

அந்தப் பெருந்தன்மையால்தான், உண்பது நாழி உடுப்பது நான்கு முழமானாலும், ஏழை உழவன் மனையில், அண்ணா பொங்கல்! அம்மா பொங்கல்! அய்யா பொங்கல்! பொங்கலோ பொங்கல்!! — எனும் ஆனந்த முழக்கம் கேட்பது.

புதுப்பானையிலிருந்து பொங்கி வழிவதைப் போலப் பூக்க வேண்டுமாம் இன்பம்! எல்லோருக்கும்!! — இந்த அரியதோர் சிறப்பை, அன்று தொடர்ந்து இன்று வரை, விடாது வைத்திருக்கும், விழாநாள் இது.

அதனால்தான், வீண் விழாக்களை வெறுக்கும் அறிவியக்கம் மார்கழித் திங்களின் முடிவில் முகிழ்க்கும் இந்த அறுவடை விழாவினை, ஒப்பற்ற விழாவென எண்ணி, உள்ளம் குதூகலிக்க ஒவ்வோராண்டும் கொண்டாடுகிறது.

உழவர் விழா! அறுவடைத் திருநாள்! விளைச்சல் விழா! வியர்வைத் திருவிழா! திராவிடர்தம் பெருநாள்! — என்று செப்பிச் செப்பி உவகை கொள்ளுகிறோம். பழையன கழித்துப் புதியன கொள்ளும் கருத்தின் காரணமாக மட்டுமன்று — உயிரூட்டும் பூமியன்னையின் படைப்பைக் கையேந்தி வாழ்த்தும் பெருந் தன்மையின் காரணமாக மட்டுமன்று — நாட்டின் நரம்புகள், உழவர்கள்; அவர்களது சொந்தத் திருநாள் இது என்பதற்காக மட்டுமன்று — இந்த விழா, உழைப்பின் உயர்வை உலகத்துக்கு அறிவிக்கிறது எனும் ஒரே காரணத்துக்காக மட்டுமன்று, இதில் பொதிந்து கிடக்கும் ‘எல்லோரும் இன்புற்று வாழவேண்டும்’ எனும் அரியதோர் கொள்கைக் காகவே, இதனையோர் உவகைக் கூத்தென உள்ளம் வியக்கக் கொண்டாட விரும்புகிறோம்.

இந்த உள மகிழ்ச்சியினை, உறுத்தும் வேலாகக் கருதியோர் உண்டு. ஒருகாலத்தில், தீபாவளி பிடிக்காதாம் — சங்கராந்தி எனச் சொல்வாராம் — தமிழன் விழாவாம் — தறுதலைகள் அடிக்கும் கூத்து, என்று வருணித்தோர் உண்டு. ஏதோ, தமிழ்ப்புலவர்கள் பிரசங்கம் செய்யுந் தினம் இது என்று கூட நாட்டினை நடாத்திடும் நிலை பெற்றோர் கருதியதுண்டு. ஆனால் இன்று அனைவரும் பொங்கல் திருநாளின் பெருமையைப் போற்றுகின்றனர். அதிசயிக்கக் கூடிய ஆச்சரியம்! சென்னை அரசு கூடப் ‘பொங்கல் வாரம்’ கொண்டாடி, வதங்கும் விவசாயிகளிடம் குலுங்கும் புதுமைகளைக் காட்டப் போகிறதாம், நாடகம் சினிமாமூலம். இந்தளவுக்கு வெற்றி! விளைச்சலைக் கண்டு மகிழும் உழவரைப்போல, அறிவுக் கழனியின் உழவர் படையான நமக்கு ஆனந்தம் ஏற்படுகிறது.

ஆனந்தம் அலைமோதும் இந்தத் திருநாளிலே மனத்துக்கு ஏற்படும் தித்திப்பின் காரணமாக நாட்டிலே நிலவிவரும் கசப்பினை, யாரும் மறந்துவிட முடியாது. கரும்பைக் காட்டுகிறோம்! சுவைக்கிறோம் இன்று!! ஆனால், அந்தக் கசப்பு…? எப்படி நீங்குவது ஏழையின் வாழ்விலிருந்து. ‘இதோ திட்டம்!’ என்று என்னென்னவோ சொல்கிறார்கள், ஆளவந்தார். இந்தியாவிலே உள்ள இம்பீரியல் பாங்கைச் சர்க்காரே ஏற்று, அதன் மூலம் உழவர்களுக்குக் கடன்தரப் போகிறோம்! கூட்டுறவு இயக்கமூலம், அவர்களுக்குக் கடன்தரப் போகிறோம்! கூட்டுறவு இயக்கமூலம், அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யப்போகிறோம்! — என்றெல்லாம், சொல்லுகின்றன, செய்திகள். இவை, சர்க்கரைப் பொங்கல் செய், ஏலம் இருக்கிறது — குங்குமப்பூ தருகிறேன் — திராட்சையும் தயார் — என்று சொல்வதுபோல. இவை இருந்து, ஆக்க அரிசியும், ருசிக்கச் சர்க்கரையும் இல்லாமலிருந்தால், எப்படி? பானை இருக்கிறதே புதிதாக — அதுவும் பண்டிதர் சீனா சென்று திரும்பிய பிறகு செய்த பானை — என்கின்றனர், அண்மையில் டில்லி நிறைவேற்றியிருக்கும் ‘சோஷியலிசமே, நமது பாதை’ எனும் தீர்மானத்தைக் காட்டி. சரி! பானை நல்லதாகவே இருக்கட்டும்!! வேண்டிய அரிசி, ‘வடபாதி மங்கலங்களின்’ கையிலன்றோ, எப்போதும் போலிருக்கும் என்கின்றது, சர்க்கார் கொள்கை.

எப்படிக் கிடைக்கும், ஆனந்தம்? சந்துமுனை காதறுப்பவனும், கழுகு மூக்கனும், கத்தி தூக்கியும் சூழ்ந்திருக்கும்போதும், குழந்தை குட்டிகளைப் பெற்ற பெண், எப்படி வரமுடியும் தெருவில்? அதுவும், அவள் கழுத்திலும் காதிலும், நகைகள் குலுங்கும்போது!! அந்த இடம் தானே, ஆபத்தாயிருக்கிறது சிந்திக்க.

தென்னகத்துத் தாய், மடியிலே மணியும் பொன்னும் வைத்திருப்பவள். அவற்றைப் பெற்று வாழவேண்டிய குழந்தைகளும் ஏராளம். ஆனால், அவை யாவும், டாடாவும், பிர்லாவும், பிடுங்கிக் கொத்திக் கொண்டிருக்கக் காத்திருப்பதை, களிப்பின் காரணமாக, மறந்திடவா முடியும்? அதனைக் குதூகலப் பண்பாடும் இந்த நேரத்தில் நாம் எண்ணாமலில்லை! ஏரும் கலப்பையுமேந்தி, எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என நினைத்து, நம்மைப்போல் பாடுபட்டும் பயன் காணாமல், தேய்ந்து போன — நாடுகள், ஏராளம் உலகில்! அதுபோலத் தென்னகத்தையும் ஆக்குவதே டில்லியின் திட்டம். வளம் பல இருந்தும், வம்புக்காரரின் ஆபத்து நீங்காதிருந்து என்ன பயன்? எல்லோரும் வாழவேண்டும். பெரிய மனத்துடன், கூறுகிறோம், நாம்- பழைய இரத்தம், இன்னும் வற்றாததால்! ஆனால், வடவருக்கு. அந்தப் பெருந்தன்மை இல்லையே- இரும்பாலை ஒன்றமைக்க, இலாயக்கில்லையாமே சேலம்! இந்த இலட்சணத்தில், இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் வேறாம். முதல் ‘ஐந்தாண்டு’ தந்த அறுவடைகள், எதுவும் தெரியவில்லை! அன்றுள்ள நிலைதான். இன்றும் — கிராம மக்களின் வாழ்க்கையில் கிஞ்சித்தும் புதுமை இல்லை — மாண்டிடாத தமிழக்குணம் ஒருபக்கமும், மற்றொரு பக்கம் திருவாளர்கள் மூட்டிய மூடநம்பிக்கைத் தீயும், போட்டியிட்டவாறே கிடக்கின்றன! கலனாகிப் போன அவர்தம் குடிசைகளில், இன்பம் இன்று காணப்படலாம் — ஆனால், என்றும் இருப்பது, கதிரவனின் வெயிலும்! வறுமையெனும் தீயும்தான்!
இந்த வாட்டம் போக்க, வழி செய்ய வேண்டாமா? பிறர் வாழத் தானும் வாழ நினைக்கும், அந்தப் பெருந்தகையாளரின் இல்லத்துக்கு விளக்கு, அதோ, அழைக்கிறாள் — மகனை, “வாடா, கண்ணே, வா! வந்து, கூவு, வா!” என்று. அவளுக்குப் பக்கத்திலே, ‘இன்றுபோல் என்றும் இன்பம் பொங்க வேண்டும்.’ என்று மனமார நினைக்கிறான். தென்னகத்து வீரன், காட்சி, களிப்பைத் தருகிறது. ஆனால், நாளை — மீண்டும் கசப்புத்தானே.

இந்தக் கசப்பு நீங்கிக் களிப்புடன் உலவும் நாடுகள், கண்முன்னே தெரிகின்றனவே. அவற்றைப் போல், ஏன் நாமும் வாழக்கூடாது? அந்த வாழ்வு கிடைத்தால், வையகமே வியக்க எப்படி வாழும் நமது இனம். வறுமை இருந்தாலும், மன வளம் குன்றாத, பழையவாடை இருக்கிறதே, இன்னும் — பாருக்குப் புத்தி புகட்டுவது போல! தொல்லை பல இருந்தாலும், அதோ, சுடர் முகம் தூக்கி, எல்லோருக்கும் இன்பம் என்று மனமாரக் கூவுகின்றனரே நமது மக்கள் — வறுமையும் களையப்பட்டு, தளைகளும் அறுக்கப்பட்டு விட்டால். நாட்டின் வளமும், நமது மனவளமும் சிறக்க, எப்படி வாழலாம்? நாம் இதனை, எண்ணிடும்படி, தாயகத் தோழர்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம். உற்றாரும் மற்றாரும் உயர்வுடன் வாழ நினைக்கும் ஒரு தனிச் சிறப்புடைத் திருநாளில்.
எல்லோரும் இன்புற்றிருக்க, விரைவில் பெறுவோம், புதுமைத் திருஅகம் — எனும் பொங்கல் சூளுரையை எல்லோரும் எடுத்துக் கொள்வோம், எனத் தெரிவித்து, தாயகத்து மக்கள் யாவருக்கும் நமது அன்புப் பொங்கலை — காணிக்கையாக்கு
கிறோம். வளர்க மனவளம்! வாழ்க தாயகம்!

(திராவிட நாடு பொங்கல் மலர் — 1955)

http://www.annavinpadaippugal.info/katturaigal/thirumugam.htm

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

No responses yet

Write a response