புதுமை இன்பம்

SG
3 min readJan 13, 2022

அண்ணாதுரை, காஞ்சி, 14–1–1968

தம்பி!

வழக்கமான தழதழப்பு இல்லையே என்கிறாயா? ஒப்புக் கொள்கிறேன். ஏக்கம் கலந்திருக்கிறது. வேண்டுமென்று அல்ல, நானாக விரும்பி இழைத்ததும் அல்ல. நிலைமை அவ்விதம். அந்த நிலைமைக்கும் பொறுப்பு நானல்ல. உன்னால் உருவாக்கப்பட்ட நிலை. உணரும் பக்குவம் பெற்றவனாயிற்றே, மேலும் விளக்கம் அளிக்க வேண்டுமா?

சென்ற ஆண்டு பொங்கற் புதுநாளன்று உன் பக்கம் நின்றிடவும், பரிவினைப் பெற்று மகிழ்ந்திடவும், இல்லந்தனிலே

“புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவிப்
பொன்னள் இழையும் துகிலும் பூண்டு
கனிமொழி பேசி’

நீ களித்திருக்கும் காட்சியினைக் கண்டு மகிழ்வுபெறும் நிலையிலே இருந்தேன். அங்ஙனம் இருந்து வந்த என்னை, அதிலே பெறும் இன்பம் வேறு எதிலும் இல்லை என்ற எண்ணம் கொண்ட என்னைப் பிடித்திழுத்துக்கொண்டுபோய் ஓர் பீடத்தில் அமர்த்திவிட்டாய். பெரு வெற்றி அல்லவோ அண்ணா என முழக்கமிட்டாய். நற்காலம் பொற்காலம் என்றெல்லாம் மகிழ்கின்றாய். நானும் என்னாலான அளவுக்கு உன் நம்பிக்கைக்கு ஏற்றவனாக நடந்துகொள்வதில் முற்பட்டிருக்கிறேன். எனினும், ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பொங்கற் புதுநாளன்று உன் புன்னகை தவழ்ந்திடும் முகத்தினைக் கண்டு அந்தப் பொலிவினைப் போற்றித் தங்குதடையற்ற நிலையில் இருந்து வந்த நான், “கட்டுண்டு’ கிடக்கிறேன் என்பதனை எண்ணும்போது, ஓரளவு வருத்தமாகவே இருக்கிறது.

இந்நாளினையே நாம் நம் திருநாளாகக் கருதி வந்திருக் கிறோம்.

இந்நாள் நமக்குத் தேவையான ஏற்புடைய கருத்தளிக்கும் பொன்னாள் — ஐயமில்லை.

முன்னாள் தீவினையைப் போக்கிக்கொள்வதற்கு என்று அறிவிக்கப்பட்டுள்ள “திருநாள்’ தமிழகத்திலே பல உண்டு.

“தமிழகத்தில் பல உண்டு என்றுதான் கூறினேன்; தமிழருக்கு என்று கூறவில்லை’ கவனித்தனையா? பொருள் பொதிந்திருக்கும். உனக்கா விளக்கமளித்துப் புரியச் செய்திட வேண்டும்? மணம் கண்டே முல்லையா, மல்லியா, மனோரஞ்சிதமா, மகிழம்பூவா என்று கண்டறிபவனல்லவா? ஓ, ஓ! ஒன்று மறந்துவிட்டேன். இவை அவ்வளவும் ஒருங்கே கலந்த மணமும் ஒன்று உண்டு என்கின்றாய். தெரிகிறது தம்பி! நன்றாகத் தெரிகிறது உன் மனையிலுள்ள மணமலரைக் குறிப்பிடுகிறாய் வாழ்க உன் மனையுளாரும் நீயும்! கமழுக நறுமணம்! பொங்குக இன்பம்!

சென்ற ஆண்டு பொங்கற் புது நாளில் நீ கொண்டிருந்த எண்ணத்தை நானறியச் செய்தாய் — நாடறியச் செய்தாய். இந்நாளில் “நமது அரசு’ நடந்திடுகிறது என்ற சுவைமிக்க எண்ணத்தை அணைத்தபடி இருக்கின்றாய். இந்த ஆண்டு பொங்கற் புதுநாள் புத்தரிசி மட்டுமல்ல — புத்தாட்சி நடைபெறுகின்றது என்று பூரிப்புடன் இருக்கின்றாய்.

உணவு நெருக்கடி மிகுந்திருக்கிறது சென்ற ஆண்டு; இவ்வாண்டு போதுமான அளவு உணவுப் பொருள் கிடைத்திருக்கின்றது. அதிலும் தமிழகத்தில் சில இடங்களிலேனும் “மலிவு’ விலையில் என்பது, உண்மையிலேயே நமக்கு மகிழ்ச்சி தரத்தக்கதுதான், ஐயமில்லை. ஆனால். . .!

தேவைப்படும் அளவுக்கு என்னால் மக்களுக்கு ஆற்றிட வேண்டிய தொண்டினைச் செய்திட இயலவில்லை. கிடைத்துள்ள வாய்ப்பும் வசதியும் குறைவு மிகுதியும் கொண்டதாக அமைந்துளது திருத்த — புதுப்பிக்க முயன்றபடி இருக்கிறேன் — முயற்சி திருவினையாக்கும் என்ற முதுமொழியில் நம்பிக்கை யுடன். காலம் கனியவில்லை என்ற நம்பிக்கை இல்லாமலுமில்லை.

பொங்கற் புதுநாள் இன்று. பாலில் அரிசியிட்டுக் கொதிக்கச் செய்திட உன் பாவை ஈடுபடும்போது, இன்னமும் பொங்கவில்லையா என்று விழியால் பல முறையும், சொல்லால் சில முறையும் கேட்கின்றாய். இதற்குள்ளாகவா என்ற பதிலைப் பாவை அளித்திடக் கேட்கின்றாய். பார்வையோ, “இத்தனை அவசரமா’ என்று கேட்கிறது.

அம்முறையில் பதிலளிக்க மாதரசி உரிமை கொண்டுள்ளது இயற்கை என்பதிலும், அம்முறையில் அமைந்திடுதல் பொருந்தா தன்றோ, இனியும் நான் செய்திடவேண்டியவைகளைச் செய்து முடித்திட — ஆர்வமும் ஆற்றலும் எனக்குக் கிடைத்திட உன் துணையும் தோழமையும் பெருமளவு தேவை. தந்திடத் தயக்கம் காட்ட மாட்டாய். தந்தபடி உள்ளாய். அறிந்துமிருக்கிறேன். நன்றி கூறி மகிழ்கின்றேன்.

நமதாட்சி, அமைந்தது — நாட்டுக்கே ஒரு புதிய பொலிவு கிடைத்திடும் வாய்ப்பாகும் என்று கூறிடுவார் பலர் உளர். அவர்தம் நட்புறவு அரசுக்கு அரணாக அமைவதுடன், செயலார்வம் நான் பெற்றிட வழி தருகிறது. அவர்கட்கெல்லாம் என் வணக்கம்.

பாலோ தெளிதேனோ, பாகோ பருப்போ, பாற் பொங்கலோ ஏதோ உன் இல்லத்தரசி தந்திடும்போது சுவைத்து உட்கொள் கின்றாயா, மகிழ்ச்சி தெரிவிக்கின்றாயா என்ற பரிவு நிறை பார்வையாலே கேட்கின்றாளே கவனித்தனையா, ஒரு சொல் “மிக நன்றாக இருந்தது’ என்று நீ கூறிடின், கன்ன-ன் சுவையிலும் அது மிஞ்சுவதாகிவிடும். கொஞ்சுகின்றாள் பார் குழந்தையுடன்! எதற்கு? உனக்குத்தான் தம்பி! நன்றி கூறுகின்றாள்.

எனக்குத் தேனும் பலாச்சுளையும் தந்து இனிக்கிறதா என்று கேட்டிடும் என் அரசி தானோ தன் குழந்தையின் குரலைக் கேட்டு, அதிலேயே தேனும் பாலும் பிறவும் உளது என்கின்றாளே, என்ன விந்தை? என்று எண்ணுகின்றாய்!

“குழந்தை குதலை மொழியமிழ்து!
குன்றாய் பழந்தமிழும் பாட்டும் அமிழ்து!
திங்கள் அமிழ்து திகழ் ஆவின்பால் அமிழ்தே!’

என்றாரே பாவேந்தர். அறியாயா?

ஒன்று நாம் உணருகின்றோம் தம்பி! எத்தனை இன்னலுக்கிடையிலே தள்ளப்பட்டிருப்பினும், இந்தப் பொங்கற் புதுநாளில் மட்டும் நமக்கு ஒரு மகிழ்வு, நாட்டுக்கு ஒரு பொலிவு வந்து சேர்ந்துவிடத்தான் செய்கிறது. நலிந்தோரும்கூட இந்நாளில் புதுத்தெம்பு வரக் காண்கின்றனர். இந்நாளில் மட்டுமே உழைப்பின் பெருமையை உணர்ந்து உரையாடி மகிழ்ந்திட வாய்ப்புக் கிடைக்கின்றது. இந்நாளே அந்நாளில் தமிழர் வாழ்ந்த நேர்த்திபற்றிய நினைவு எழுகிறது. நமக்கெல்லாம் எழுச்சி தரத்தக்க முறையிலும் அளவிலும் நம்மைச் சுற்றிக் காணும் பொருள் யாவும் நிலமடந்தை தந்தனள் பரிவுடன். ஆயின், பாலூட்டும் தாயும் சேயுடன் விளையாட்டுக் காட்டி, “முடியாது — பிறகு — விடு — அடிப்பேன்’ என்று கொஞ்சுவதில்லையா, அதுபோல நில மடந்தையும் தன் மக்களுக்கு வளம் அளிக்கு முன்பு, விளையாட்டுக் காட்டுவான் வேண்டி, உழைத்துப் பெறு! உரிய நேரத்தில் பெறு! முயற்சி செய்து பெறு! என்று அன்பு ஆணையிடுகிறாள்.

நம் காலத்து நற்புலவர்கள் இந்தப் பொங்கற் புதுநாளின் மாண்பினை நலம் உணர்ந்து உவகை கொண்டாடிச் செய்துள்ளனர்.

“தமிழர் திருநாள் தை முதல் நாளாம்
அமிழ்தென இனிக்கும் பொங்கல் திருநாள்
உழைப்பின் உயர்வை உணர்த்தும் பெருநாள்
சளைப்பிலா முயற்சிதரு பயன்பெற்றுப்
புதுமை இன்பம் பூணும் நன்னாள்’

என்று முடியரசன் முழங்குகிறார்.

நாடு, “ஆம்! ஆம்!’ என்கிறது.

இத்தகு திருநாளன்று என்னால் இயன்ற அளவு “கருத்து விருந்து’ அளித்துள்ளேன், “காஞ்சி’ இதழ் மூலம், மற்றவற்றுடன் இதனையும் பெற்று மகிழ்ந்திருப்பாய் என்று.

பொங்குக இன்பம்! பொங்குக புதுமை! பொங்குக பொலிவு! வளம் பெருகிடுக! வாழ்வு சிறந்திடுக! வாழ்க தமிழ்! வாழ்க தமிழகம்!

அண்ணன்,

14–1–68

மூலக்கட்டுரை

http://www.annavinpadaippugal.info/kadithangal/puthumai_inbam.htm

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

No responses yet

Write a response