புதிய வரலாறு

SG
38 min readJan 25, 2020

தமிழக முதல்வராக அறிஞர் அண்ணா சொற்பொழிவு , அறிவுப்பண்ணை, 11.1.1969

தி.மு.கழகம் இவ்வளவு விரைவில் அரசுப் பொறுப்பை ஏற்குமென்று அரசியல்வாதிகள் எதிர்பார்க்கவில்லை; எதிர்பார்க்காதது மட்டுமல்ல; ஆளத் தகுதியில்லையென்றும் எண்ணினார்கள். அது மட்டுமல்ல; அரசியலுக்கே தகுதியற்றவர்கள் என்றும் எண்ணினார்கள்.
யாரை லாயக்கற்றவர்களென்று கருதினார்களோ-யாரை சினிமாக்காரர்கள் என்று ஏளனம் செய்தார்களோ-திராவிட முன்னேற்றக் கழகத்திலே படித்தவர்கள்தான் இருக்கிறார்கள்-பாடுபடுகின்ற கிராம மக்கள் இல்லையென்று பச்சைக் கேலி பேசினார்களோ அவர்கள்தான் இன்று அரசுப் பொறுப்பை ஏற்றுள்ளனர்.

ஆற்றிலே கருப்பு நிறமான ஒரு பொருளை வெள்ளம் அடித்துக் கொண்டு போகிறது. அநேகமாக அது கம்பளியாகத்தான் இருக்கலாமென்று சொல்ல-பக்கத்திலிருப்பவன் அதை எடுக்க ஆற்றிலே குதிக்க, அந்தக் கம்பளியோடு அவனும் ஆற்றோடு போக ஆரம்பிக்க, இதைப் பார்த்ததும் கரையிலிருப்பவன் “கம்பளி போனால் போகட்டும். நீ வந்துவிடு. நீயும் ஆற்றோடு போய் விடாதே!” என்று சொல்லிக் கரைக்கு அழைக்க, “முடியாது, முடியாது, நான் போனாலும் பரவாயில்லை. கம்பளி போகக்கூடாது!” என்று கூறினானாம் கடைசியில் அது கம்பளி அல்ல, கரடி என்று தெரிய வந்தது-கிராமப்புறத்தில் இப்படிக் கதை சொல்வார்கள். அதுபோல, தி.மு.கழகத்தைக் கம்பளியென்று நினைத்தவர்கள் 67ல் கிட்ட வந்து தொட்டவுடன் தான் கரடியென்று உணர்ந்திருக்கின்றனர்.

அதற்குக் காரணம் பொதுமக்கள் தான்!
நெசவாளர்கள் நமது பக்கம் இருக்கிறார்கள்-உழவர்கள் நமது பக்கம் இருக்கிறார்கள்-அன்றாடம் உழைத்துண்ணும் பாட்டாளிகள் நமக்காகவே இருக்கின்றார்கள், என்பதை இப்பொழுதுதான் காங்கிரசார் அறிந்துள்ளனர்.

தி.மு.கழகம் வளர்ந்துள்ள கதையைப் பார்த்தால்தான் அதன் பழைய வரலாற்றை நினைத்தால்தான்-அதன் அருமை தெரியும்.

1957 ல் சட்டமன்றத்திற்குக் கழகம் போட்டியிட்டது. அப்பொழுதெல்லாம் சமுதாயத்தைச் சீர்செய்யும் எதிர்க்கட்சியாகவே நாம் இயங்க வேண்டுமென்று நினைத்தேன். ஆதலால் 1949 முதல் 1957 வரை மக்களுக்குச் சமூகப் பணி புரிவதே எங்கள் கட்சியின் இலட்சியம் என்று நினைத்தேன்.

அப்பொழுது காங்கிரசார் சொன்னார்கள், “முடிந்தால் சட்டமன்றத்திற்குள் நுழைந்து பாருங்கள்?” என்று! சரி, நாமும் முயன்றுதான் பார்ப்போமே என்று நினைத்தேன். இந்த ஆசையைத் தூண்டிவிட்டதே காங்கிரஸ்தான்.

நான்கூட அப்பொழுது பொறுத்துக்கொண்டேன். ஆனால் தோழர்கள் கேட்கவில்லை. அதன் பலன், தேர்தலில் நின்றோம்; 15 பேர் சட்டமன்றத்திற்குள் நுழையவும் செய்தோம்.
டோல்கேட் முடவன்

அதைப் பார்த்த பிறகும் காங்கிரசார் எங்களுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை. அடுத்த தேர்தலில் 5 பேர் கூட வரமுடியாது என்றனர். இதைக் கேட்டதும் ரோஷம் வராதா எங்களுக்கு? போட்டியிட்டோம். 15 பேராக இருந்த நாங்கள் 50 பேராகக் கோட்டைக்குச் சென்றோம்; பாராளுமன்றத்தில் இரண்டு பேராக இருந்த நாங்கள் எட்டுப் பேராகக் கூடிச் சென்றோம்; சென்னை மாநகராட்சியையும் கைப்பற்றினோம்.

அதன் பிறகேனும் இது மக்கள் ஆதரவை பெற்ற கட்சி, உண்மையான ஜனநாயகக் கட்சி என்று உணராமல் மறு முறையும் 67ல் பார்ப்போம் என்றார்கள்.

பொன்னேரிப் பகுதியில் டோல்கேட் ஒன்றுள்ளது. அங்கே ஒருவன் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு போகிற வண்டிக்காரனை மிரட்டிப் பணம் பறித்துக் கொண்டிருந்தான். எட்டணாக் கொடுத்தால்தான் வண்டியை விடுவான். அதுவும் வண்டிக்காரனிறங்கி வந்து அவனிடம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் விடமாட்டேன் என்று கூறுவான். ஒருநாள் துணிந்த வண்டிக்காரன் ஒருவன் ‘வந்தால் விடமாட்டேன் வந்தால் விடமாட்டேன் என்கிறாயே, வந்து பாரேன்’ என்றான். அதனால் வர முடியவில்லை. காரணம் கால் நொண்டி! பிறகு மிரட்டாது அழ ஆரம்பித்தான்.

அதுபோல, பொன்னேரி டோல்கேட் காரனைப் போல கழகத் தோழர்களை மிரட்டி அடுத்த தடவைக்குள் பார் என்று அச்சங் காட்டினர்.

அவர்கள் அப்படி மிரட்டியதன் பலன்தான் இன்று 137 பேர் வெற்றி பெற்றிருக்கிறோம். தனியாக இந்த வெற்றி பெறவில்லை, சுதந்திரா-முஸ்லீம் லீக்-பிரஜா சோசலிஸ்டு, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டுறவால் வெற்றி பெற்றது. இதில் வலதுசாரி கம்யூனிஸ்ட் மட்டும் எல்லா இடத்திலும் ஆதரிக்காமல் இரண்டொரு இடத்தில் மட்டும் ஆதரித்தது. தமிழரசுக் கழகத்தின் ஒத்துழைப்பு, தேர்தல் காலத்திற்கு மட்டுமல்ல, தொடர்ந்தும் இந்த அரசுக்குக் கிடைத்திருக்கிறது. தமிழகமெங்கும் சேலம் இரும்பாலைக்கும்-தூத்துக்குடித் துறைமுகத்திற்கும் நடந்த எழுச்சி நாளில் எல்லாக் கட்சிகளும் சேர்ந்தன. ஆதரவாக முழக்கமிட்டன. இதில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் மட்டும் சேரவில்லை. தி.மு.க.நிறைய ஆதரவு பெற்றது என்று நினைத்தாலும் மக்களிடத்திலே தனிச் செல்வாக்கு-யாரும் பெறமுடியாத அளவுக்குப் பெற்றிருக்கிறது என்றாலும், வெளியிலே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழகத்தின் தனிப்பெருமை
இங்கு மட்டுமல்ல, காங்கிரஸ் தோற்றது; கேரளத்திலே தோற்றது; அரியானாவில் தோற்றது; மேற்கு வங்கம்-ஒரிசா ஆகிய இடங்களிலும் தோற்றது; இவ்வளவு இடத்திலும் காங்கிரஸ் தோற்றுக் கூட்டரசு அமைந்தாலும் தமிழகத்தில்தான் தி.மு.கழகம் தனியரசு அமைத்திருக்கிறது.

காங்கிரசில் உள்ளவர்கள் இன்னமும் தங்களை நல்லவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டுமானால் “எவ்வளவு இடங்கள் போய்விட்டன? அவை ஏன் போய்விட்டன?” என்பதை உணர வேண்டும்.

அதை விடுத்து கழகத்தை ஏசுவதால் தான் தங்கள் கட்சி வளர்கிறது என்று தப்புக் கணக்குப் போட்டார்களே-அதே பாணியில் இன்னும் எத்தனை காலம் இருப்பார்கள்?

இவர்கள் என்ன சாதிப்பார்கள் என்று இன்னமும் பேசிக்கொள்கிறார்கள். அதனால் தி.மு.க. தோழர்கள் நமது சாதனைகளை விளக்கி மேடைக்கு மேடை சொல்லி வருகிறார்கள். இதைக் கேட்ட காங்கிரசார் அதைக்கூட பொறுக்காமல் “இது போதுமா? இது போதுமா?” என்கின்றனர்.

இவர்கள் நாடாண்டபோது இவர்கள் ஆட்சியில் உற்பத்தி பெருகவில்லை. ரேஷன் கடையிலே கால்கடுக்க காலை 6 மணிக்கே கைக்குழந்தையுடன் தாய்மார்கள் நின்றிருக்கும் காட்சியைத்தான் உருவாக்கினார்கள். அப்படியே நின்றிருந்தாலும் வீடு திரும்பும்போது அரிசியோடு வந்திருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? கண்ணீரும் கம்பலையுமாக வாடிய முகத்தோடும் வறுமை நிறைந்த தோற்றத்தோடும் வந்தார்கள்.

நாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் 8 லட்சம் டன் கொள்முதல் செய்து குடும்பக் கார்டு உள்ள இடங்களுக்கெல்லாம் படி அரிசித் திட்டத்தைப் பரப்ப நினைத்தோம். காங்கிரஸ் கட்சியினர் இத்திட்டம் வெற்றி பெறாது என்று ஊர் தோறும் கெக்கலி கொட்டிச் சிரித்தார்கள். அதிகாரிகள் இப்படிச் செய்கிறார்கள்; பலவந்தமாக நெல்லைப் பறிமுதல் செய்கிறார்கள் என்று புகார்கூறிய வண்ணமிருந்தனர்.

ஆனால் உழவர்களின் ஒத்துழைப்பால் அரசு இரண்டே மாதத்தில் 5 இலட்சம் டன் கொள்முதல் செய்திருக்கிறது. அரிசி இல்லையென்று சொல்லாமல் ரேசன் கடைக்குச் சென்றால் அரிசி வாங்கி வரலாம் என்ற நம்பிக்கையோடு மக்கள் செல்லும் நிலையை உருவாக்கியிருக்கிறோம். ரூபாய்க்கு ஒரு படி அரிசித் திட்டத்தால் 8 கோடி நட்டமானாலும் சரியென்று நடத்திடத் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

எந்தெந்த விதத்தில் எதையெதை எப்படிச் செய்தால் உற்பத்தி பெருகும் என்று ஆராய்ந்து அந்த விதத்தில் முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இவ்வருடத்தில் மட்டும் நீர்ப் பாசன வசதிக்காகக் குளங்கள் தூர்வார-கிணறுகளைச் செப்பனிட 11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ்காரர்கள் சொன்னார்கள், “தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் பள்ளிகள் மூடப்படும்” என்று! ஆனால் நாம் கல்விக்காக அவர்கள் செலவிட்டதை விட 7 கோடி அதிகமாகச் செலவு செய்யத் திட்டம் வகுத்துள்ளோம்.

சிட்டுக் குருவிகள் ஒன்று சேர்ந்தால் வல்லூறு ஓடிவிடும்; சிட்டுக் குருவிகள் போன்ற மக்கள் ஒன்று சேர்ந்து வல்லூறு போன்ற காங்கிரசை விரட்டி தி.மு.கழகத்திற்கு மணிமகுடம் சூட்டினார்கள்.

இவை மட்டுமல்ல; சர்க்கார் உதவியின்றி வானத்தை மட்டும் நம்பி வாழும் உழவர்களுக்குப் புன்செய் நிலத்திற்கு வரியில்லை. ஏழைகளுக்குத்தான் இலவசப் புகுமுகக் கல்வி என்ற முறையை ஏற்படுத்தி இருக்கிறோம்.

இதே நேரத்தில் நிலத்தை வைத்துத் தேவைக்கு அதிகமாகச் சம்பாதித்து இலாபம் அடைபவர்களுக்கு போட்டால் தாங்ககக் கூடியவர்களுக்கு வரிப் போட்டிருக்கிறோம்.
இவை மட்டுமின்றித் தொழில் நிலையம் ஏற்படுத்தி வேலை வாய்ப்புக் கொடுக்க முயற்சி நடைபெறுகிறது.

காங்கிரஸ் பாராட்டாத காரணம்
ஏராளமாகத் தமிழகத்தில் கல்லும் முள்ளுமாக இருக்கும் காட்டுப் பகுதிகளை விவசாய அமைச்சர் கோவிந்தசாமி விளை நிலமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

மக்கள் முன்னேற்றத்திற்காகச் செய்த நமது சாதனையை இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள இதழ்களெல்லாம் பாராட்டுகின்றன. வெளிநாட்டிலிருந்து வருவோரும் போவோரும் வாயாரப் புகழ்கின்றனர். ஆனால் காங்கிரஸ் பாராட்டவில்லையே என்று நினைக்கலாம்.

அவர்கள் ஆண்டு அனுபவித்தவர்கள்-பஸ் முதலாளிகளின் கைலாகு பெற்றவர்கள்-பணக்காரர்கள் வீசிய நோட்டுகளைப் பெற்றவர்கள். அப்படிப்பட்டவர்கள்-சுகபோகத்தை அநுபவித்தவர்கள்-திடீரென்று உல்லாச வாழ்வை இழந்துவிட்டால் எரிச்சல் கண்டு ஓலமிடத்தான் செய்வார்கள். காலம் முழுவதும் தாங்களே என்று மனப்பால் குடித்தவர்கள் பதவி பறிபோனதால் எரிந்து விழுகிறார்கள்.

நல்ல நாடகம் ரசனையோடு நடந்துகொண்டிருக்கும் போது கூட்டத்திலிருப்பவன் முதுகை நெளித்தால் பக்கத்திலுள்ளவன் ‘ஏனய்யா முதுகை நெளிக்கிறாய்; நாடகம் ரசனையோடு நடக்கிறது. அதைப் பார்’ என்பான். ‘முதுகில் ஏதோ அரிக்கிறது; அதனால்தான்’ என்று முதுகை நெளிப்பவன் பதில் கூறுவான். நாடகம் ரசனையோடு நடந்தாலும் இவனுக்கு அதில் கவனமிராது.
அதுபோல நாம் என்னதான் நல்லது செய்தாலும் முதுகை நெளித்தவன் போலக் காங்கிரஸ் நண்பர்கள் நெளிகிறார்கள்.

மாலை நேரத்தில் கூட்டம் போட்டு அதில் அரைமணி நேரம் திட்டுவதற்காக ஒதுக்கி-என்னைத் திட்டுவதால்-அவர்கள் மனத்திருப்தி அடைகிறார்களென்றால் அதை நான் தடுக்கவில்லை. ‘என்னை அண்ணனாகக் கண்டு-அறிஞராகக் கண்டு-அமைச்சராகக் கண்டதால் ஆசை நிறைவேறியது’ என்றார் ஒருவர்.

ஆனால் எனது ஆசை எப்பொழுது நிறைவேறுமென்றால், உழுபவன் உண்மையான வாழ்வு வாழ்கிறான்-நெசவாளி நேர்த்தியாக வாழ்கிறான்-பாட்டாளி பட்டினியின்றி வேலை செய்கிறான் என்ற நிலை எப்பொழுது ஏற்படுகிறதோ அப்பொழுதான் என்று ஆசை நிறைவேறும்!

மாநிலத்தின் அதிகார வரம்பு
நெசவாளர்களின் போதுமான அளவுக்கு நூல் வேண்டுமென்று என்னிடம் கேட்கிறார்கள். ஆலை கொடுக்கும் நூலுக்கு விலையை நிர்ணயம் செய்வது டில்லி. நான் அதற்கு எழுதத்தான் முடியுமே தவிர வேறேதும் செய்ய முடியாது. இதை மக்கள் உணர வேண்டும். என்னிடம் நூல் டிப்போ இருப்பது போலவும், நான்தான் அதைப் பகிர்ந்து கொடுப்பது போலவும் யாரும் நினைத்து விடக்கூடாது.

பொதுவாக மக்கள்-குறிப்பாகத் தி.மு.கழகத் தோழர்கள் மாநில அரசுக்கு என்ன அதிகாரங்கள், மத்திய அரசுக்கு என்ன அதிகாரங்கள் என்பதை உணரவேண்டும்.

உங்கள் வீட்டிற்கு நான் வந்தால் நாலடி உயரத்திலுள்ள பொருளை எடுக்கச் சொன்னால் என்னால் எடுக்க முடியும். ஆனால் ஆறடி உயரத்திலுள்ள பொருளை எடுக்கச் சொன்னால் எப்படி என்னால் இயலாதோ, அதுபோல எனக்குள்ள அதிகாரத்தை வைத்துத்தான் உங்களுக்கு எதுவும் செய்ய முடியும்.

இப்பொழுது தூத்துக்குடிக்கு 25 கோடி ரூபாயும், சேலம் இரும்பாலைக்கு 120 கோடி ரூபாயும் தேவைப்படுகின்றன. ஆனால் வருட வருமானம் 200 கோடி ரூபாய்தான். இதில்தான் அரசாங்க ஊழியர்களுக்குச் சம்பளம், கல்விச் செலவு ஆகியவற்றிற்குக் கொடுக்க வேண்டும்.

ஆனால் மத்திய அரசுக்கு வருமானம் 3000 கோடி. சர்க்கரையிலிருந்து குடிக்கும் பீடிவரை உள்ள வரியெல்லாம் மத்திய அரசுக்கே போய்ச் சேருகிறது. வீடுகட்ட சிமிட்டி வாங்கினாலும் ரயில் ஏறினாலும் கார்டு, கவர் வாங்கினாலும் அதன் இலாபம் மத்திய அரசுக்கே போகிறது.

காங்கிரஸ் இருபது ஆண்டுகள் ஆட்சி புரிந்து காங்கிரசை விட்டால் இந்த நாட்டை ஆள யாரும் கிடையாது என்று ஊரை நம்பவைத்தார்கள்-உண்மையைச் சொல்லப் போனால் என்னையும் நம்ப வைத்தார்கள்.

ஏழை மக்களின் பெருமூச்சை மதிக்காமல் ஆளமுடியும், என நினைத்த காங்கிரசார் வீழ்ந்தார்கள். இந்த வீழ்ச்சியைக் கண்டபின் காங்கிரஸ் தலைவர்கள் திடுக்கிட்டுத் திகைத்துப் போனார்கள். பதைபதைத்து வாயடைத்துப் போனார்கள்.

இப்போது வாய் திறந்துள்ளார்கள். தி.மு.க.ஆட்சி எவ்வளவு நாட்கள் நீடிக்கும், என்று கேட்கிறார்கள். நான் அவர்களுக்குக் கூறிக்கொள்வேன். இங்கே என் எதிரில் திரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் விரும்பும்வரை எங்கள் ஆட்சி நீடிக்கும்; ஆக்கவும் அழிக்கவும் வல்லமை பெற்றவர்கள் மக்கள்தான்.

இந்த ஆட்சி எளிதாகக் கிடைத்ததும் அல்ல. எதிர்பாராமல் கிடைத்ததும் அல்ல. நமது தோழர்கள் இதற்காகச் சிந்தி கண்ணீர், ரத்தம் கொஞ்சமல்ல. தி.மு.க.ஆட்சி ஏழைகளின் ரத்தம், கண்ணீர், வியர்வை ஆகியவற்றின் அடித்தளத்தில் நிர்மாணிக்கப்பட்டது. அந்த உண்மையான தோழர்களுக்கு மதிப்பு இருக்கும்வரை ஆட்சி இருக்கும்.

காங்கிரஸ்காரர்களே! இப்பொழுது என்னைத் திட்டுகிறீர்கள். இவ்வளவு நாளும் திட்டியது போதாதா? அப்படி உங்களிடம் என்னதான் திட்டுவதற்குப் பாக்கி இருக்கிறது? எந்த வார்த்தை மிச்சம் இருக்கிறது?

உலகத்தில் உள்ள அசிங்கமான பொருள்களோடு என்னை ஒப்பிட்டுப் பேசாததா? என் குடும்பத்தைக் காட்டித் திட்டாததா? என் நண்பர்களை இழிவுபடுத்தித் தாக்காததா? என்ன பாக்கி இருக்கிறது? நீங்கள் இவ்வளவு பேசியபின் தானே எங்களை மக்கள் ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள்?

விக்கிரமாதித்தன் காடு ஆறு மாதம், நாடு ஆறுமாதம் என்று இருந்ததைப் போல; நீங்கள் ஆறு மாதம் பேசாமல் இப்போது வந்து ‘எவ்வளவு நாள் பதவியில் இருந்து விடுவீர்கள்’ என்று கேட்கிறீர்கள். உலகம் உங்களை எள்ளி நகையாடதா? நாங்கள் பதவியில் இல்லாமல் இருபது ஆண்டுகள் இருந்தோம். உங்களால் இருபது நாட்கள் இருக்க முடியவில்லையே?

இந்தக் காங்கிரஸ்காரர்கள் எவ்வளவு தூரம் அந்தப் பதவியை அனுபவித்தார்கள் என்பது அவர்களுக்குத் தான் தெரியும். பையில் நான்கு அணா வைத்துக்கொண்டு காப்பி குடிக்கச் செல்பவன் காசைத் தொலைத்துவிட்டால் அங்கும் இங்கும் அலைந்து தேடுவான். மற்றவர்கள் வந்து கேட்டாலும் எரிந்து விழுவான். அதேபோல் பதவியை இழந்த காங்கிரஸ்காரர்கள் எரிந்து விழுகிறார்கள்.

அவர்கள் இழந்தது என்ன? நான்கு அணா காசா? அரசாட்சி அல்லவா? எங்களைப் பார்த்து “என்ன செய்தீர்கள்” எனக் கேட்டவர்களுக்கு ஒரு சில உதாரணங்களைக் கூறுகிறேன்.

காந்தியாரின் கொள்கையான ரூ.500க்கு அதிகமாகச் சம்பளம் வாங்க்ககூடாது என“ற திட்டத்தை நாங்கள் தானே பின்பற்றுகிறோம்? இது பெரிய விஷயம் இல்லாவிட்டாலும் மக்களோடு நாங்களும் வாழ்கிறோம் என்பதைக் கூறுகிறோம்.

“தமிழக அரசு தலைமைச் செயலகம்” என்று தமிழில் பெயர்ப் பலகை போட்டு இருக்கிறோம். இது என்ன பிரமாதம் என்கிறார் பக்தவத்சலம், பிரமாதம் இல்லை. சிறிய விஷயம் தான். இந்தச் சிறிய விஷயத்தைக்கூட உங்களால் செய்யமுடியவில்லை?

தர்மபுரி மாவட்டத்தில் எட்டு லட்சத்து அறுபது ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலத்திற்கு வரி விலக்கு அளிதிருக்கிறது.

சென்னையிலும் கோவையிலும் ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடுகிறோம். இதைப் பார்த்துவிட்டு காங்கிரசார் “சென்னையில் தானே ஒரு படி அரிசி? கோவில்பட்டிக்கு எங்கே?” என்று கேட்கிறார்கள். நான் கூறுகிறேன். நீங்கள் செய்ததைவிட நாங்கள் இந்தக் காரியத்தைத் தொடர்ந்து அமல் நடத்துவோம். ஒரு ஆண்டில் கூட அல்ல, சில மாதத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடுவோம்.

இந்த ஆண்டு அறுவடை நன்றாக இருக்கும் என்று நான் கூறியதற்கு சி.சுப்பிரமணியம் “அண்ணாதுரை மந்திரம் போட்டா உற்பத்தி செய்துவிட்டார்” என்கிறார்.

எனக்கு மந்திரம் தெரிந்திருந்தால் 1967 க்குப் பிறகு தானா உபயோகித்து இருக்கவேண்டும். நாங்கள் மணி முத்தாறு அணையைக் கட்டினோம் என்கிறீர்கள். சுப்பிரமணியம் செங்கல் சுமந்தாரா? பக்தவத்சலம் சாந்து குழைத்தாரா? நீங்கள் திட்டம் போட்டுக் கொடுத்தீர்கள். தொழிலாளர்கள் சிறப்பாகக் கட்டினார்கள்.

இதே போலத்தான் நாங்களும் நல்லதாக விதை, உரம் ஆகியவற்றைக் கொடுத்தோம். விவசாயிகள் நன்றாக உற்பத்தியைப் பெருக்கி இருக்கிறார்கள். இதைப் புரிந்து கொள்ளாமல் சிறுபிள்ளைத் தனமாகப் பேசுவதா?

ஐந்து மாத காலத்தில் என்ன சாதித்தார்கள் என்று கேட்கிறார்கள். மைசூரில் காங்கிரஸ் ஆட்சி நடத்துகிறது. அவர்கள் சாதித்ததைவிட நாங்கள் அதிகமாகச் செய்திருக்கிறோம்.

ஆந்திரா, மகாராஷ்டிராவை எடுத்து நமது அரசுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் ஏன்? டெல்லியிலும் காங்கிரஸ் ஆட்சி தானே? அவர்கள் செய்ததையும் தி.மு.கழக அரசு செய்திருப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் புரிந்து கொள்ளலாமே!

முன்னால் நமக்கிருந்த நிலைமை வேறு, இப்போதுள்ள பொறுப்புகள் வேறு. இன்னின்னது ஏன் செய்யவில்லை என்று அன்றிருந்த ஆட்சியாளரைப் பார்த்துக் கேட்பதில் அப்போது நமது கடமை அடங்கியிருந்தது. இப்போது இன்னின்னது செய்யப்பட வேண்டுமென்று நாமே சிந“தித்துத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டியுள்ளது.

முற்றிய கதிரின் உணர்ச்சி
கதிர் முற்றாத நிலையில், பயிர், காற்றடித்த பக்கமெல்லாம் ஆடுவதைப் பார்க்கலாம். கதிர் முற்றிய நிலையில் நெற்பயிர் வயலில் படுத்தபடி இருக்கும். முற்றிய கதிரின் அடக்க உணர்ச்சியை நாம் பெறவேண்டும்.

கழக ஆரம்ப காலத்திலிருந்தே இதை நான் வலியுறுத்தி வந்துள்ளேன். அவ்வழி கழகத் தோழர்கள் நடந்து வந்ததால் தான் நாம் இன்றைய நிலையை எட்டினோம். “பொறுத்தவர் பூமி ஆள்வார்” என்று பெரியவர்கள் சொல்வதில்லையா? பூமியை ஆளாவிட்டாலும் தமிழ் நாட்டையாகிலும் ஆளுகிற நிலையில் இருக்கிறோம்.

ஆம்! பொறுத்தோம்! எதையெதை யெல்லாம் பொறுத்துக் கொண்டோம் என்பதை எண்ணும்போது மன வேதனை மேலிடுகிறது.

இப்போதும் ஏசுகிறார்கள். தாங்கிக் கொள்வோம், அந்த ஏசல்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை. இதையும் தாங்கிக் கொள்வோமானால் இன்று இருப்பதைவிட நேர்த்தியான நிலையை நாம் அடைவோம்.

அவர்கள் எதைச் செய்தாலும் திருப்பிச் செய்வது என்பதானால் அதற்கும் பத்துநாள் போதும். ஏன் பதினெட்டு நிமிடம் போதும் அதிகாரம் நம்மிடம் இருக்கிறது.

காங்கிரசார் இருந்ததை இழந்தவர்கள், நாம் இல்லாததைப் பெற்றவர்கள். அவர்கள் ஆத்திரப்படுவார்கள்.

காங்கிரஸ்காரர்கள் இப்படி வீணே தூற்றிக் கொண்டிருப்பதை விட்டு வேறு பயனுள்ள காரியத்தில் கவனம் செலுத்தினால் அவர்களுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது.

கிராமத்து டீக்கடைக்காரர் ஒரே ரிக்கார்டைத் திரும்பத் திரும்பப் போட்டால் வழியில் போகிறவர்கூட கேட்பார், “ஏனய்யா? வேறு பிளேட் இல்லையா? மாற்றிப் போடேன்!” என்று.

அதுபோல் இவர்கள் (காங்கிரஸ்) தங்களது பிரச்சார முறையையாவது மாற்றிக் கொள்ளட்டும்.

அரசு இன்னின்னது செய்ய வேண்டுமென்று அவர்கள் எடுத்துக் கூறட்டும். பொறுப்புள்ள கட்சிக்குரிய தகுதியை அப்போதுதான் அது பெறும்.

இவர்கள் தூற்றத் தூற்றத்தான் என்நிலை உயர்கிறது. பல லட்சக்கணக்கானவர் வீடுகளில் அண்ணன் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதை அறிந்திருந்தும் தெளிவில்லையே. இந்தக் காங்கிரசாருக்கு? இதை எண்ணினால் வருத்தமாக இருக்கிறது.

பதவி போய்விட்டால் இயற்கை அறிவுத் தெளிவையுமா இவர்கள் இழந்துவிட வேண்டும்?

பதவி போய்விட்ட ஆத்திரத்தில் பேசுகிறார்கள். நாம் அதைப்பற்றிக் கவலைப்படக்கூடாது. கேள்வி கேட்கிறார்கள் கேட்கட்டும்-இத்தனை காலம் நாம் கேட்டு அவர்கள் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது அவர்கள் நம்மைக் கேட்கிறார்கள். இந்த நிலைமை வர நாம் எத்தனை நாள் தவமிருந்தோம்?

நாம் செய்ய வேண்டியது நிறைய உண்டு. ஆங்காங்குள்ள கழகத் தோழர்கள் சிறு கொட்டகைகளில் கூடி இதுவரை செய்தது இனிச் செய்யவேண்டியது ஆகியவை பற்றி விவாதிக்க வேண்டும்.

இதுவரை நாம் செய்ததென்ன என்பதைப் பாருங்கள். சம்பளத்தை 500 ஆகக் குறைத்துக் கொண்டோம்-இது என்ன பிரமாதமா? என்கிறார்கள்.

காந்தியார் வாக்கை காங்கிரசார் காக்கத் தவறினாலும் நாமாவது காப்போம் என்றுதான் குறைத்துக் கொண்டோம்.

பஸ் கட்டணத்தைக் குறைத்தோம். ஒரு போகம் பயிரான நிலங்களில் இரு போகம் பயிராக வகை செய்கிறோம்.

நம்முடைய நாடு தமிழ்நாடு, இதற்கு இந்திய அரசியல் சட்டத்தில் இந்தப் பெயர் கிடையாது. தமிழ்நாடு என்று பெயரிட்டு, அரசியல் சட்டம் திருத்தப்படவேண்டும் என்று நான் செல்வராஜ் ஆகியோர் எல்லாம் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த காலத்தில் சொன்னோம்.

நாம் இப்போது வந்ததும் அத்தீர்மானத்தைக் கொண்டு வந்தோம். ஓசைப்படாமல் நிறைவேற்றினோம்.

தமிழில் எழுதும்போது தமிழ்நாடு என்றும், ஆங்கிலத்தில் எழுதும்போது “மதராஸ்” என்றும் வைத்துக்கொல்ளலாம் என்று அவர்களுக்கு இப்போது தலைவராக இருக்கும் கருத்திருமன் கூறினார். அத்தகைய இரண்டும் கெட்ட நிலை வேண்டாம் என்று நான் சொன்னேன். வேண்டாமென்றால் விட்டுவிடுங்கள் என்று அவர் சொல்லிவிட்டார்.

இதுவரை சட்ட சம்மதம் பெறாமல் விவாதத்துக்குரியதாக இருந்த சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டபூர்வமாக்க அதாவது யாருக்கு அத்தகைய திருமண முறையில் விருப்பமிருந்து செய்துகொள்கிறார்களோ, அவர்களது திருமணம் செல்லும் என்று சட்டம் கொண்டு வந்தோம்.

மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களைப் போட்டு இருபதாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து போதாதென்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரிபோட்டு அதையும் செலவழித்தார்கள். அதற்குப்பிறகும் அவர்களாலே விவசாயத்தைச் செழிப்பு அடையச் செய்ய முடியவில்லை.

போன வருடம் மழை இல்லை. அதற்குமுன் வருடமும் மழை இல்லை. அண்ணாதுரை வந்த உடனே மழை பெய்து விட்டது. அதனாலே விவசாயம் செழிப்பு அடைந்து விட்டது என்று மேலே கையைக் காட்டுகிறார்கள். அதற்கு ஒரு நண்பர் சொன்னார். ‘மேலே இருப்பவனுக்குக் கூட காங்கிரஸைப் பிடிக்கவில்லை. அண்ணாதுரையைப் பிடிக்கிறது. அதற்கு என்ன செ“யவது? என்று.
இருபது வருடங்களாகவா மழை பெய்யவில்லை?

இருபது வருட காலத்தில் இவர்கள் விவசாயத்தைப் பலப்படுத்தவில்லை. ஆறுமாத காலத்தில் நாங்கள் உணவு நிலைமையை ஓரளவு சீர்படுத்தி இருக்கிறோம். பத்து மூட்டை கிடைத்த இடத்தில், முப்பது மூட்டை விளையச் செய்து இருக்கிறோம். விவசாயிகள் கேட்ட அளவிற்கு உரம் கிடைக்கச் செய்து இருக்கிறோம். இந்த வருஷம் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்ததைப் போல எந்த வருஷமும் மகிழ்ச்சியாக இருந்தது இல்லை என்று விவசாயிகள் சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த ஆண்டு உணவுப் பஞ்சம் இல்லை என்ற நிலையை ஆறுமாதத்தில் நாங்கள் செய்து இருக்கிறோம்.

விவசாயம் வளர்ச்சியடையாமல் தொழில் வளம் பெற முடியாது. அப்படிச் செய்தால் அட்டையிலே வீடு கட்டி ஆடிக் காற்றிலே அடித்துச் செல்வது போலத்தான்.

அவர்கள் ஆரம்பித்த ஒவ்வொரு தொழிலும் நஷ்டத்தில் இருக்கிறதே தவிர லாபத்திலே இல்லை. ஊர் மக்கள் பணத்தை வரியாக வாங்கி இந்த நிலைமையில் கொண்டு வைத்திருக்கிறார்கள்.

பிப்ரவரி மாதத்தில் என்னென்ன காரணங்களுக்காக காங்கிரசுக்கு வாக்களிக்கக் கூடாது என்று சொன்னோமோ அவைகளிலே ஒன்றுகூட இன்று குறையவில்லை. ஒருவர் உங்களைக் கன்னத்தில் ஓங்கி அறைகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். கன்னம் வீங்கிவிடுகிறது. வீட்டுக்குப் போகிறீர்கள். வீட்டிலே கன்னத்தில் தடவ மஞ்சள் அறைக்கிறார்கள். கன்னத்தில் அறைந்தவர் அங்கே வந்து ‘எதற்காக மஞ்சள்? இன்றொரு கன்னத்தில் அறைகிறேன், அதுவும் வீங்கினால், இரண்டும் சரியாகிவிடும்?’ என்று சொல்கிறார்.

அதைப்போல காங்கிரஸ்காரர்கள் 67 பிப்ரவரி வரை ஓங்கி அறைந்தார்கள். நான் ஒரு கன்னத்துக்குத் தடவலாம் என்று மஞ்சள் அறைகிறேன். அதற்குள் காங்கிரஸ்காரர்கள் இன்னொரு கன்னத்தில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று எங்களிடம் சொல்கிறார்கள்.

படியரிசி போட்டால் ‘இது என்ன பிரமாதம்?’ கூவம் நதி நாற்றத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்றால் இது என்ன பிரமாதம்? காவிரித் தண்ணீரைச் சென்னைக்குக் கொண்டு வருகிறோம் என்றால் இது என்ன பிரமாதம்? எது பிரமாதம் என்கிறார்கள். பதவி நாற்காலியில் அவர்கள் அமர்ந்தால் தான் பிரமாதம் என்று சொல்கிறார்களா?

ஓவியன் எதிரில் திரைச்சீலை இருக்கும். கையிலே தூரிகை இருக்கும். கீழே பலவிதமான வண்ணக் குழம்புகள் இருக்கும். தூரிகையை வண்ணத்திலே துவைத்து திரைச்சீலையிலே கோடிட்டால் மான் வேண்டுமென்றால் மான்வரும். மயில் வேண்டுமென்றால் மயில் வரும், மலை வேண்டுமானால் மலை வரும். இது ஒரு பிரமாதமா என்று சொல்லிக்கொண்டு நாமும் எடுத்துத் தடவினால் நமது உடையிலேதான் வண்ணங்கள் ஒட்டும்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எத்தனை முறை தீப்பிடித்தது? ஒரு வீட்டுக்கு 40 ரூபாய் கொடுத்தார்கள். நான் ஆட்சிப் பொறுப்பு ஏற்றபிறகு அதை இரட்டிப்பாக்கி எண்பது ரூபாய் கொடுக்கச் சொல்லி உத்தரவு போட்டேன். இது ஒரு பிரமாதமா என்று கேட்கிறார்கள்.

தீப்பிடிக்காத வீடுகள் கட்ட நான் பணம் கேட்டேன். இதுவரை 31 லட்ச ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள்.

நிர்வாகத்துக்கு நாங்கள் புதியவர்கள். எத்தனையோ தொல்லைகளும் சிக்கலும் மிகுந்ததாக நிர்வாகம் இருந்தது.

என்னுடைய அமைச்சரவை நண்பர்கள் நிர்வாகத்துக்குப் புதியவர்கள் என்றாலும் அவர்களுக்குப் பாரம்பரியம் உண்டு. தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளைத் தங்களது கடின உழைப்பின் மூலம் செம்மையுற முடித்து, வெற்றி பல கண்டவர்களே அவர்கள். தமிழ் மக்களின் நல்லெண்ணம் என்ற துணையோடு ஆட்சிப் பொறுப்பினை நாங்கள் ஏற்றோம்.
அதிகாரிகளோடு எங்களுக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பு விசித்திரமாக இருந்தது. அன்பைக் காட்டிலும் அச்சமே மேலிட்டு நின்றது.

20 ஆண்டுகள் ஒரே கட்சியுடன் பழகியதால் அதிகாரிகளிடம் பதிந்துவிட்ட மனோபாவ நிலைகளிலிருந்து அவர்களை மீளச் செய்வது சாத்தியம் தானா என எண்ணினோம்-இதில் நாங்கள் வெற்றி கண்டோம். காரணம் நாங்கள் அவர்களது உள்ளங்களை வேண்டினோம்.

அளவிட முடியாத அதிமுக்கிய உதவியைப் பெற்றோம்.

நாட்டின் நிர்வாகத்தை நடத்திச் செல்லும் ஆற்றல் படைத்தவர்கள் என்பதோடு புதியவர்களுக்கு வழிகாட்டவும் வல்லவர்கள் நம் அதிகாரிகள்.

சமுதாயத்தின் ஒவ்வொரு தரப்பாருடைய நன்மையும் அவரவர்களது மகிழ்ச்சியுமே எங்கள் குறிக்கோள். இப்படி ஒவ்வொரு பகுதியினரும் மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்வதன் மூலம் சமூக முழுமையும் மகிழ்ச்சியுடன் இருக்க வழிகோல வேண்டுமென்பதே எங்கள் குறிக்கோள். இந்தக் குறிக்கோளை நோக்கிப் பணியாற்றுவதில் இதுவரை நாங்கள் வெற்றி கண்டுள்ளோம்.

எல்லாருக்கும் நண்பன்-எவருக்கும் விரோதியல்ல இப்படித“தான் நாங்கள் இருக்க விரும்புகிறோம்.

அமைச்சரவையில் இருந்தாலும் வெளியே இருந்தாலும் மக்களுக்குப் பணி செய்வோம். மக்கள் பணியென்பது எங்களது வாழ்க்கை லட்சியம்.

எனக்கெனச் சிறிது நேரம் தேடிக்கொண்டு “பார்ன்ப்ரீ” என்ற ஆங்கிலத் திரைப்படம் பார்த்தேன்.

சிங்குக்குட்டி ஒன்றைக் காட்டிலிருந்து எடுத்து வந்து வளர்க்கிறார்கள். அந்தப் பெண் சிங்கம் அதன் இயற்கைக் குணங்களை இழந்து மனிதர்களைப் போல் பழகுகிறது.

அதனை அதற்கே உரிய சூழ்நிலையில் வாழச் செய்வதற்காகக “காட்டிலே கொண்டு போய் விடுகிறார்கள். ஆண் சிங்கம் ஒன்று இதனோடு பழக மறுத்துத் தனக்கென்றுள்ள தன் பழைய துணையோடு போய்விடுகிறது. பின்னர் எப்படியோ ஒரு வழியாகச் சிங்கம் ஒன்றின் குகையை இப்பெண் சிங்கம் அடைகிறது.

அச்சிங்கத்தோடு வாழ்ந்து ஓராண்டு கழித்துத்தான் ஈன்ற மூன்று குட்டிகளோடு காட்டிலிருந்து அப்பெண் சிங்கம் தன்னை வளர்த்தவர்களது வீட்டுக்கு வந்து, தான் பெற்ற செல்வங்களைப் பெருமிதத்தோடு காண்பிக்கிறது.

புதிய சூழ்நிலைகளோடு பழகிப் போவதற்குக் காலம் பிடிக்குமென்பதைக் குறிப்பிடுவதற்கோர் அடையாளமாகவே சிங்கத்தின் கதையை இங்குக் குறிப்பிட்டேன்.

பணி புரிவதற்கே பிறவி
அந்தச் சிங்கத்தின் கதைக்கு “பார்ன் ப்ரீ” என்று பெயரிட்டார்கள். “பார்ன் சர்வ்” “பணி புரிவதற்கே பிறவி” என்பதே எங்கள் வாழ்க்கைக் கதையின் குறிக்கோளாகும். எங்களது பணியில் பலரது நல்லெண்ணம் எங்களுக்குத் துணையாக இருக்கிறது. சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியினரது நல்லாதரவும் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இதை எண்ணி மகிழ்கிறோம்.

நாங்கள் எத்தகைய நிலையில் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றோம். விவசாயம் நிலை குலைந்திருந்தது. உணவிலே நெருக்கடி, நிதி விவகாரத்திலே ரிசர்வ் வங்கியிடம் அதிகப்பற்று, இந்த நிலையில்தான் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றோம்.

முதலாவது வரவு செலவுத் திட்டத்தையே, ஏற்பட்டிருந்த இந்த நிலைமைகளைச் சமாளித்திடத் தக்கதாகத் தயாரிக்க வேண்டியதாயிற்று.

புதிய அமைச்சர்களோ துடித்தனர். அவரவர் துறைகளில் செய்யப்படவேண்டிய பணிகளுக்கு அதிகப் பணம் ஒதுக்கித் தரும்படிக் கேட்டவாறு இருந்தனர்.

ஆசை ஆர்வங்களையெல்லாம் சற்றுக் கட்டுப்படுத்தி, இருப்பதைக் கொண்டு செட்டாகச் சிக்கனமாகக் காரியமாற்ற முனைவோம் என்றுதான் அவர்களுக்குச் சொல்ல வேண்டிய தாயிற்று.
ஒன்றைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

கல்விக்காகச் சென்ற ஆண்டு செலவிட்ட ரூ.44 கோடியோடு பத்துக்கோடி கூடுதலாக 54 கோடியாக இவ்வாண்டு ஒதுக்க முடிந்துள்ளது.

சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களில் கவனம் செலுத்தினோம். செலவிடப்படுகிற ஒவ்வொரு ரூபாய்க்கும் உரிய பலன் கிடைக்கவேண்டுமென்ற நோக்கத்தோடு பணியாற்றினோம்.

சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களில் தக்க கவனம் செலுத்தாமல் இருந்ததே இதற்கு முன் போடப்பட்ட உணவு உற்பத்தித் திட்டங்களெல்லாம் தோல்வியடையக் காரணமாக இருந்தது.

இதனாலேயே சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு நிதி உதவி செய்யும்படி மத்திய அரசுடன் வாதாடினோம். அதிக அளவில் பணமேதும் அங்கிருந்து கிடைக்கவில்லையென்றாலும் அங்கிருந்து நிரம்ப நல்லெண்ணத்தைப் பெற்றேன். அதனை, பணத்தைக் காட்டிலும் பெரிதென்று நான் கருதுகிறேன்.

நாம் கேட்பதில் உள்ள நியாயத்தை-உண்மையை உணர்ந்து அவர்கள்-கொடுக்கிறோம். நீங்கள் கேட்கும் அளவு முடியாவிட்டாலும் ஓரளவு கொடுக்கிறோமென்கிறார்கள்.
தஞ்சை டெல்ட்டா எங்கும் 36 கிளை ஆறுகள் இருக்கின்றன. காலப்போக்கில் இவை வண்டல் சேர்ந்து மேடு அடைந்துவிட்டன. இவற்றையெல்லாம் பழுது பார்த்துச் செப்பனிட்டால் சிறந்த பலன் காணலாம்.

கடந்த புயலின் போது சேதமடைந்த ராமநாதபுரம் தென்னார்க்காடு ஏரி-குளங்களைச் செப்பனிட மட்டும் ரூ.2 கோடி கொடுத்துதவும்படி மத்திய அரசைக் கேட்டோம். ஏதோ கொஞ்சம் கொடுத்தார்கள். அது போதாது வீடூர் நீர்த்தேக்கத்தைச் செப்பனிட மட்டும் ரூ.5 லட்சத்துக்கு மேல் தேவைப்படும். இருப்பினும் கிடைத்ததைக் கொண்டு வேகமாக மராமத்துப் பணிகளைப் பார்த்தோம். அதன் விளைவாகவே இப்போது நல்ல பயிர் கிடைத்துள்ளது.

இன்னும் சிறிது சிரமப்படுவோமானால் தமிழ்நாட்டிலிருந்து அரிசியை வெளியில் விற்கும் அளவுக்கு முன்னேறுவோம். சன்ன ரக அரிசியை உற்பத்தி செய்வோமானால் அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.

இன்னும் கொஞ்சம் நிதி உதவி கிடைக்குமானால் உணவு உற்பத்தித் துறையில் இத்துணைக் கண்ட முழுமைக்கும் தமிழ்நாடு வழி காட்ட இயலும்.

தொழில் துறையிலும் நாங்கள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட நேரம் பொருளாதார மந்தம் ஏற்பட்டிருந்த நேரமாகும். இருப்பினும் இயன்றளவு தொழில் விரிவடையக் காரியங்களைச் செய்திருக்கிறோம். மிகப் பிரமாதமாகத் தொழில்களின் துவக்க விழாக்களை நடத்தி வைத்துவிட்டால் மட்டும் போதாது. ஏற்கெனவே உள்ளவை நிலைத்து, வலிவுடன் விளங்கத் தேவையான காரியங்கள் செய்யப்படவேண்டும். அதை நாங்கள் செய்திருக்கிறோம்.

தொழில்கள் பெருக, வாழ்க்கைத் தரம் உயர, ஆறு மாதம் போதாது, மக்களது நல்லெண்ணமும் நல்லாசியும் தொடர்ந்து இப்போது போல் எப்போதும் வர வேண்டும். பல பெரும் சாதனைகளை இத்துறையில் செய்து காட்ட இயலும். மத்திய-மாநில பிணக்குகள் பற்றிச் சிலர் சுட்டிக்காட்டினார்கள். நான் அமைதியை நேசிப்பவன். இரண்டுபேர் சண்டை போட்டுக் கொண்டாலே அதைக் காணக்கூட நான் சகிக்க மாட்டேன். எனது இயற்கை அப்படியிருக்கும்போது பிணக்குகள் ஏற்பட நான் எப்படிக் கருவியாக அமைவேன்?

இயற்கைக் காரணங்களால் பிணக்குகள் ஏற்படக்கூடும். ஆனால் நான் அவற்றிற்குக் காரணமாக இருக்க மாட்டேன். மத்திய அரசுக்கு நாம் விடுகிற முறையீடுகளும் வேண்டுகோள்களும் பிணக்குக்குரியவையாகக் கருதப்படக்கூடாது.

மொழி குறித்து எழுகின்ற சிக்கல்கள் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் மட்டுமில்லாமல் மாநிலத்திற்குள்ளேயும் உணர்ச்சித் தீயை எளிதில் மூட்டிடத் தக்கவையாகும். இதை உணர்ந்துதான் இம்மாநில முழுதும் ஓர் அணியென இந்திக்கு எதிராகத் திரண்டு நிற்கிறது.

ராஜாஜி, பெரியார் இராமசாமி, முன்னாள் தளபதி கரியப்பா போன்றவர்களும் ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பார்த்து மாநிலப் பித்துக் கொண்டவர்கள் என்றோ அரசியல் அற்பத்தனம் உடையவர்கள் என்றோ எவரும் சொல்லிட இயலாது.

ஆரம்ப காலத்திலிருந்து மொழிப் பிரச்சினையைப் பேச வேண்டியவர் பேசாது, வேறு யார் யாரோ பேசி வருகிறார்கள். மொழியியல் வல்லுநர்களும்-கல்வியாளர்களும் பேசி விவாதிடத் தக்க பிரச்சினை இது மேலும் இந்நாட்டின் வரலாற்றில் இப்போதைய கட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டிய பிரச்சினையல்ல மொழிப் பிரச்சினை.

உணவு உற்பத்தியைப் பெருக்கி-தொழில்களைப் பெருக்கி நகரங்களை அழகு நகரங்களாக ஆக்கி-கிராமங்களை வாழ்வதற்கு ஏற்றதாக ஆக்கி இருந்திருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் மொழி பற்றி விவாதித்துக் கொள்ளலாம்.

ஆங்கிலம் நம்மீது திணிக்கப்பட்ட ஒன்றல்ல. இந்தியாவில் உள்ளவர்களுக்கு ஆங்கிலக் கல்வி வளர வேண்டும் என்று இந்த நாட்டில் இயக்கமே நடத்தியிருக்கிறார்கள். அப்படி நாமாகக் கேட்டுப் பெற்றதுதான் ஆங்கிலம்.

ஆங்கில மொழியின் பயனை இன்று நாம் மட்டுமல்லாமல் உலகில் பல நாடுகளும் பெற்றுள்ளன. இதையெல்லாம் மனத்திற்கொண்டு தமிழக அரசு தன்னுடைய கொள்கையை விளக்கித் தெரிவித்துள்ளது.

பொது அறிவு தேவை
நானாக இருந்தாலும்-நாவலராக இருந்தாலும்- கருணாநிதியாக இருந்தாலும்-யாராக இருந்தாலும், மந்திரிகளால் மட்டும் ஒரு நாடு முன்னேற்றம் அடைந்து விட முடியாது. மக்களது அறிவாற்றலும் நாட்டு முன்னேற்றத்துக்குத் தேவை.

‘நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு’ என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப நாட்டை வளமுடையதாகச் செய்வது மக்களது பொது அறிவே!

வீடு கட்டுவதற்காகத் தேர்ந்தெடுத்த தரை சேறாக இருந்தால் கட்டிடம் எழுப்ப முடியாது! அது, பாலைவனமாக இருந்தால் பயிரை வளர்க்க முடியாது! பனிக்கட்டியாக இருந்தாலும் விதை தூவ முடியாது! அதைப்போல அறிவு இல்லையென்றால் பலனை அனுபவிக்க முடியாது.

மோரைக் கடைந்தால்தான் வெண்ணெய் கிடைக்கும், சுண்ணாம்பைக் கடைந்தால் வெண்ணெய் கிடைக்காது. மோருக்கும் சுண்ணாம்பு நீருக்கும் வேறுபாடு இல்லாவிட்டாலும் இரண்டு சொட்டு நாவில் விட்டுப் பார்த்தால் தெரிந்துவிடும். மோரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பது போல அறிவினை வளர்த்துக் கொண்டு பலன் பெற வேண்டும்!

அறிவு வளர்ச்சியின்றிச் சமுதாயம் வளர்ச்சிபெறும் என்றால் நாம் ஏன் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தோம்? ஏன் படிப்பகங்கள் ஆரம்பித்தோம்? நாம் ஏன் பல மன்றங்கள் ஆரம்பித்தோம்? அறிவின்றி முன்னேற்றம் காண முடியுமா?

பல்வேறு நாட்டு நிகழ்ச்சிகள் அங்கே நடைபெறும் பலவிதமான நடவடிக்கைகள் குறிப்பாகத் தமிழ்நாட்டு நிகழ்ச்சிகள் தமிழக அரசின் நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தாங்களும் புரிந்துகொண்டு பிறருக்கும் புரியவைக்க வேண்டும். அதற்கு முயற்சிகளை இந்த அறிவு வளர்ச்சி மன்றங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இப்பொழுது கடைக்குச் சென்று பண்டங்களின் விலையைக் கேட்டால் நேற்று இருந்ததைவிட இன்று அதிகம் என்பார்கள். ஏன் அதற்குள் விலையேறிவிட்டது என்றால் இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் சண்டை நடக்கிறது என்பார்கள்.

சண்டை நடக்கும் இடத்திற்கும் இந்த இடத்திற்கும் நீண்ட தூரம் இருக்கிறது. இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கத் தோன்றும். இதைக் காரணம் வைத்துக் கொண்டே விலைவாசியை ஏற்றுபவர்களையும் பொருளைப் பதுக்கி வைப்பவர்களையும் கண்டு வருத்தப்படவேண்டும்.

எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் சண்டை நடக்கிறது என்றாலும் சண்டை மூன்று நாட்களாக நடைபெறுவதால் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு உணவேற்றிவரும் கப்பல்கள்-அதிலும் குறிப்பாக அமெரிக்காவிலிருந்து இங்கு வரும் இந்தியக் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக வர இயலாமல் ஆப்பிரிக்காக் கண்டத்தின் கடைசிக் கோடியைக் கடந்து வரவேண்டியிருக்கிறது.

10 நாட்களில் வரும் கப்பல்கள் 20 நாட்களில் வருவதால் தாமதம் மட்டுமல்லாமல் சரக்குகளின் கட்டணமும் ஏறிவிடுகிறது. எங்கோ நடக்கிற சண்டை இங்கே எப்படிப் பாதிக்கிறது என்பதை உதாரணத்திற்காகச் சொன்னேன்!

இப்படிப்பட்ட விவரங்களையெல்லாம் அரசியல் கட்சிகள் கூட்டம் போட்டுச் சொல்வதைவிட அறிவு வளர்ச்சி மன்றங்கள் எடுத்துச் சொல்லவேண்டும்.

வதந்திகளின் வாழ்வு…
ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்பப் போவதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது. அதைக்கண்டு நானே அதிர்ச்சியுற்றேன். ஏனென்றால் அந்த அதிகாரம் என்னிடம் இல்லை. அப்படியிருந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். ஒருவேளை எனக்கு அந்த அதிகாரம் இருக்க வேண்டுமென்ற நினைப்பில் அவர்கள் கூறினார்களோ என்னவோ தெரியவில்லை.
இத்தகைய வதந்திகள் இப்பொழுது மட்டுமல்ல, உலகில் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. இராமாயணத்தில் கூட இந்த வதந்தி இருக்கிறது. இலங்கையை எரித்துவிட்டு வானரசேனையுடன் இராமன் சீதையை மீட்டுத் திரும்பி வரும்பொழுது கிட்கிந்தையில் இடையில் தங்கி விருந்துண்டார்.

விருந்து சாப்பிடும்போது கடைசியில் இருந்த ஒரு குட்டி வானரம் கைதூக்கிக் குதித்ததாம். அதைப்பார்த்து அருகிலிருந்த வானரம் குதிக்க-அது குதிப்பதைப் பார்த்துப் பக்கத்திலுள்ளது குதிக்க-இப்படியே வரிசையாக அநுமன் வரை சென்று சுக்ரீவனுக்குப் பக்கத்திலிருந்து இலட்சுமணன் இதைக்கண்டு வில்லையெடுக்க-இவற்றையெல்லாம் பார்த்த இராமன் வில்லிலே நாண் பூட்டிவிட்டு, ஏன் எதற்காக என்று கேட்க-இதைக் கேட்ட இலக்குவன் சுக்ரீவனைப் பார்க்க அவன் அநுமனைப் பார்க்க இப்படியே பார்த்துக் கொண்டு போய் இறுதியில் குட்டி வானரத்திடம் கேட்டார்களாம்.

அதற்கு அந்த வானரம், “எனக்கு ஊற்றிய குழம்பில் ஒரே யொரு மொச்சைக் கொட்டைதான் விழுந்தது. அதன் தோலைப் பிதுக்கி விழுங்கப் பார்த்தேன். கொட்டை மேலே போய்விட்டது. அதைப்பிடிக்கத்தான் கையை உயர்த்தி எவ்விக் குதித்தேன்” என்றதாம். இராமாயண காலத்திலேயே இப்படிப்பட்ட வதந்திகள் உலவினால் இப்பொழுது உலவுவதற்குக் கேட்கவா வேண்டும்?

இதுபோலத்தான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விஷயத்திலும் வதந்தி பரவுகிறது. பொது அறிவு இருக்குமானால் இப்படிப்பட்ட செய்திகள் வெளிவராது.

பொது அறிவு என்றால் நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை அறிந்து நல்லவற்றைக் கொண்டு அல்லாதவற்றைத் தள்ளிவிட வேண்டும்.

இதை நம“மவர்களுக்கு மட்டும் சொல்லவில்லை. நேற்று வரை ஆட்சியிலிருந்த காங்கிரஸ் நண்பர்களுக்கும் சொல்லுகிறேன். விவரம் தெரிந்து சொல்லுங்கள் “எனக்குத் தெரியாது, இவர்தான் இப்படிச் சொன்னார்-அவர்தான் அப்படிச் சொன்னார்” என்று சொல்லி அவரைக் கேட்கும் போது அவருக்கு அவர்தான் சொன்னார் என்று சொல்ல, கடைசியில் அவர் எங்கே என்றால் திண்டிவனம் போயிருக்கிறார் என்று சொல்ல திண்டிவனம் எங்கே என்று கேட்டால், அது இங்கேதான் எங்கோ இருக்கிறது என்று சொல்லுவதில் அர்த்தமில்லை.

நான் முதலிலிருந்தே சொல்லி வருகிறேன். தேர்தலில் காங்கிரஸ் தோற்றதால் தான் நம்மீது எரிச்சல் கொண்டு பேசி வருகிறது.

நம்மீதுள்ள சிரங்கை ஒரு தடவைக்கு இரண்டு தடவை சொரிந்தாலே எரிச்சல் கண்டுவிடுகிறதே. இருபது வருடங்களாக இருந்துவிட்டு இப்போது தூக்கியெறியப்பட்டால் அவர்களுக்கு எப்படி எரிச்சல் வராமல் இருக்கும்? பறிபோன அந்த உணர்ச்சியில்தான் அவர்கள் அவ்வாறு பேசுகிறார்கள். அதற்கு நானா காரணம்?

முன்பு ஒருமுறை நான் இந்தப் பகுதிக்கு வந்தபோது கன்னிகாபுரத்தின் குடிசைகள் வெள்ளத்திலே மூழ்கியிருந்ததைக் கண்டேன். இப்பொழுது கூட நான் வரும்பொழுது இது அந்தப் பள்ளமா இதுதான் அந்த இடமா என்று கேட்டுக்கொண்டே வந்தேன்.

அவர்களைப் போல் இதுதான் ஆக்ராவுக்குப் பக்கத்திலுள்ள மாளிகையா-இதுதான் அஜந்தாவுக்கு அருகிலுள்ள கட்டடமா என்று கேட்கவில்லை. நமக்குத் தெரிவதெல்லாம் பள்ளமும்-மேடும் வறுமையும் இருளும்தான்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த குடிசைகளையெல்லாம் பழுது பார்த்திருந்தால் அவர்களுக்கு இந்தத் தோல்வி ஏற்பட்டிருக்குமா? அப்படியே பார்த்தாலும் இங்கு மட்டும் தானா அவர்களுக்குத் தோல்வி? எட்டு மாநிலங்களிலும் தோல்வி அவல்களை ஆரத் தழுவியிருக்கிறதே.

இந்தியா என்றால் பாரதம்-பாரதம் என்றால் உத்திரப்பிரதேசம் என்பார்கள். அத்தகைய பெருமை வாய்ந்த இடம் சவகர்லால் நேரு பிறந்த சரித்திரச் சிறப்பு வாய்ந்த இடம் லால்பகதூர் சாஸ்திரி பிறந்த இடம் இந்திரா காந்தி அம்மையார் பிறந்த இடம்-காங்கிரசின் மூலஸ்தானம் என்றும் காங்கிரசின் இருதயம் என்றும் சொல்லப்படுகின்ற உ.பி.யிலே காங்கிரஸ் தோற்றிருக்கின்றது.
வெள்ளைக்காரன் துப்பாக்கிக்கு மார்பைக் காட்டிய பாஞ்சாலச் சிங்கம் என்று பெயர்பெற்ற லாலா லஜபதி ராய் பிறந்த பஞ்சாபிலே காங்கிரஸ் தோற்றது.

இராசேந்திர பிரசாத் பிறந்த பீகார் மாநிலத்திலே காங்கிரஸ் தோற்றது!

இராச தந்திரி என்று பெயர்பெற்ற பட்நாயக் பிறந்த தண்டகாரண்யத்திலே (ஒரிசா) காங்கிரஸ் தோற்றது!

அதைவிட்டுவிட்டு திருவல்லிக்கேணியிலும் மைலாப்பூரிலும் கூட்டம் போட்டு என்னைத் தூற்றுவதால் வெற்றி பெற்றுவிடுமா?

ஏன் இப்படிப் பேசுகிறார்கள்-அவர்கள் அப்படிப் பேசாதவாறு அறிவுத் தெளிவான கருத்துக்களை எங்களைப் போன்றவர்களைத் தவிர அறிவு வளர்ச்சி மன்றங்கள் போன்றவை அவர்களுக்கு எடுத்துரைக்காததால்!

அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து நாம் அரசுப் பொறுப்பை ஏற்றது மார்ச் 6ஆம் நாளில்தான். நீங்கள் நம்பினீர்களோ என்னவோ அப்பொழுது நான் அதாவது மார்ச் மாதம் ஆறாம் நாளுக்கு முந்திய நாள் வரை, நான் பதவி ஏற்பதாக இல்லை. அமைச்சர் சத்தியவாணிமுத்து அம்மையார் கூட ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினார்கள்.

எப்படியம்மா முடியும்? இவ்வளவு பெரிய ஓட்டைகளை வைத்துவிட்டுப் போய்விட்டார்களே! அது எனக்குக் கவலையாக இருக்கிறது. எப்படி இதையெல்லாம் நிவர்த்தி செய்ய முடியும் என்று சொல்லிவிட்டு வீடு சென்றுவிட்டேன். மார்ச் 5 ஆம் நாள் இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் வரவில்லை. விடியும் வரை கொட்டு கொட்டென்று விழித்துக் கொண்டே இருந்தேன். அப்பொழுது என் கண்களுக்கு குடிசைப் பகுதிகளே தென்பட்டன. சோற்றுக்காக அலைபவரின் முகங்களும்-ரேசன் கடையிலே கால்கடுக்க நிற்பவர்களின் முகங்களுமே என் கண்களுக்குத் தென்பட்டன. இவற்றிற்கெல்லாம் பரிகாரம் எப்படித் தேட முடியும்! என்று சிந்தித்துக் கொண்டே இருந்தேன். தூக்கம் வரவில்லை!

அதுவரை வானம்பாடியைப் போலவே சுற்றிக் கொண்டே பாடிக்கொண்டு இருந்தேன். என் இசை பிடிக்கிறதோ இல்லையோ என்று கவலைப்படாமல், நான் சுற்றிக் கொண்டே வந்தேன். 6ந் தேதிக்குப் பிறகு கூட்டுப் பறவைகளாக நாங்கள் ஆகிவிட்டோம்.

நல்லாட்சி ஏற்பட…
ஒருவரை ஒருவர் கெடுக்காமல் வாழ முடியும். ஒருவரை ஒருவர் பகைக்காமல் வளர முடியும் என்ற முறை, நிலைநாட்டப் படுவதைத்தான் விரும்புகிறேன். அந்த நல்லாட்சி ஏற்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

விவசாயம், கல்வி ஆகிய துறைகல் சீராக அமைய, கிராம நலிவுகள் நீக்கப்பட உணவு நெருக்கடி போக்கப் படவேண்டும். அதற்கான ஆக்கப்பூர்வமான யோசனைகளைக் கூறுவதோடு மக்கள் ஒத்துழைப்பையும் தரவேண்டும். அவ்வகையில் மக்கள் ஒத்துழைத்துப் பாடுபடுவார்களானால் மக்கள் முயற்சி வெற்றிபெற எங்களால் ஆன முயற்சிகளைச் செய்வோம் கோட்டையில் நானும் மற்ற அமைச்சர்களும் இருந்து விடுவதால்-அமர்ந்து விட்டதால் எல்லாம் நடந்து விடும் என நினைக்கக் கூடாது. உங்கள் அறிவு எங்களுக்குத் துணை நிற்க வேண்டும். மக்களின் அனுபவம் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும். உங்கள் தோழமை எங்கள் தோழமையோடு சேர வேண்டும். ஏர் பிடித்து உழும் உழவர்கள் அதிகாலையில் சென்று மாலை வரையில் வயலில் ஈடுபடும் உழவர் பெருங்குடி மக்கள் தந்த ஒத்துழைப்புத்தான் அதற்குக் காரணம். அதனால்தான் இன்று உணவு நெருக்கடி ஓரளவு நீக்கப்பட்டுள்ளது. ஓரளவு என்றுதான் சொன்னேன், முழு அளவு அல்ல.
நம் நாட்டு மக்களுக்காக நாம் வேறெந்த நாட்டிடமும் உணவுக்காகக் கையேந்தக் கூடாது. இன்று நம் நாடு விவசாய நாடு. இங்கு நூற்றுக்கு எண்பது பேர் விவசாயிகள். சென்னை, கோவை, மதுரை போன்ற சில பட்டணங்கள் பளபளப்பாக இருக்கின்ற போதிலும், கிராமத்தில்தான் பெரும“பாலான விவசாயிகள் உள்ளனர். அவர்கள் ஒத்துழைப்புத்தான் உழைப்புத்தான், நாட்டின் அச்சாணி! நகரங்களுக்குப் பளபளப்பு ஏற்படக் காரணம். நெற்றி வியர்வை நிலத்தில் சொட்டச் சொட்ட உழைக்கும் விவசாயிதான்!

இதைத் தமிழக அரசு உணர்ந்திருக்கிறது. இந்தச் சமயத்தில் உழவர் பெருங்குடி மக்களுக்கும் தமிழக அரசின் சார்பில் நன்றி செலுத்துகிறேன். தஞ்சைத் தரணி மட்டுமின்றி வட ஆர்க்காடு, தென்னார்க்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களிலும் அதிக ஆர்வத்தோடு விவசாயிகள் பாடுபட்டு இருக்கிறார்கள். அந்தக் காரணத்தால் உணவு நெருக்கடி இல்லை என்று சொல்லத்தக்க அளவில் இன்று உணவு நிலையை அடைந்திருக்கிறோம். இது பெருமையல்ல. தமிழகம் தன்னிறைவு அடைந்து மற்ற மாநிலங்களிடம் கையேந்தும் நிலை இல்லை என்றானால் மட்டும் போதாது. நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்து மீதமுள்ளவற்றைக் கேரளம் போன்ற அண்டை மாநிலங்களுக்குக் கொடுக்கத்தக்க அளவில் நம் களஞ்சியங்கள் நிரம்பி வழிய வேண்டும். 1957–58 ல் பண்டித நேரு, “இந்தியா உணவுத் துறையில் தன்னிறைவு பெற்று இன்னும் சில ஆண்டுகளில் மற்ற நாடுகளுக்கு உணவு அனுப்பவேண்டும்” என்று சொன்னார். அப்படிச் சொன்னது கனவு அல்ல. அதை நடைமுறைக்குக் கொண்டு வரும் திட்டமாக நினைக்க வேண்டும். கனவாகக் கருதக்கூடாது.

இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல் இருக்கிறது. மழை, வெய்யில் என்று பாராமல் இரவு பகல் பாராமல் உழவர்கள் அரும்பாடுபடுகிறார்கள். தங்கள் ஓட்டைக் குடிசையை வைத்துக் கொண்டு அவர்கள் அப்பாடு படுவதால் தான் நகரத்திலிருப்பவர்களுக்குச் சந்தனம் கிடைக்கிறது, கள்ளி, காளான் செடிகளை அவர்கள் கவனிப்பதால் நகர வாசிகளுக்குப் பூச்செண்டு கிடைக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள், ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் 5 சென்ட் நிலம் கூடப் பெறவில்லை என்றால் அந்த நாட்டை நாகரிக நாடு என்று யாரும் மதிக்க மாட்டார்கள். அந்தக் குறையும் நீங்கும் வகையில் இன்று இங்கு அரிசன நல அமைச்சர் உழவர்களுக்கு ஏழைகளுக்கு பட்டா வழங்கினார். ஏழை உழவனுக்கு உழ நிலம் வேண்டும். அதைப் பண்படுத்த கிணறு தோண்ட விவசாயம் செய்ய அவனுக்குப் பணமும் தேவை. இதை உணர்ந்து விவசாய அமைச்சர் அவர்கள் நிலங்களை உழவர்களுக்கு நீண்டகாலக் குத்தகையில் கொடுப்பதன் மூலம், கடன் வசதி செய்து கொடுப்பதன் மூலம், உற்பத்தி பெருகும். இப்படி நிலம் கொடுத்தால் நிலமும் பாதுகாப்பாக இருக்கும்.

உழவர்கட்கு வசதி கொடுக்கப் பெரும் பொருள் தேவை. பொருளுக்காக இந்நாட்டு மக்களை வரிபோட்டுத் துன்புறுத்த மனம் இல்லை. அது அறமும் அல்ல, பொருளை ஈட்ட வேண்டும். இதற்கு மத்திய சர்க்காரைக் கேட்கிறோம். பண உதவி! ஆனால் இங்குள்ள ஒரு சிலர் டெல்லி மீது பழி போடுகிறார்கள், டெல்லி மீது இவர்களுக்குக் கோபம் என்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்.

ஒலிபெருக்கி ‘ரிப்பேர்’ ஆகிவிட்டது என்றால் உடனே நான் போட்டோகிராபரைக் கூப்பிட்டு இதைச் சரிபார் என்பதா, அல்லது இங்கு கூடியுள்ள மக்களைப் பார்த்து ரிப்பேர் பார்க்கச் சொல்வதா, அப்படி நான் சொன்னால் யார் ஒலிபெருக்கிக்குச் சொந்தக்காரன் என்பதுகூட இவனுக்குத் தெரியவில்லையே என்றுதான் என்னைச் சொல்வார்கள். ஆகையால் எப்படி ஒலிபெருக்கிக்காரரைக் கூப்பிட்டு ஒலிபெருகியை ரிப்பேர் செய்யும்படிச் சொல்ல வேண்டுமோ, அதேபோல நான் கேட்க வேண்டிய டெல்லியிடம் கேட்கிறேன். டெல்லியிடம் கேட்காமல் லண்டனிடம் போயா கேட்பது? வாஷிங்டனில் போயா கேட்பது? தமிழக அரசு, இந்தியப் பேரரசு ஆட்சி நடத்தும் பல மாநிலங்களில் ஒன்று. டெல்லிப் பேரரசில் எக்கட்சி இருந்தாலும் சரி, அங்குள்ளவர்கள் எந்தச் சட்டையை அணிந்திருந்தாலும் எனக்கு கவலை இல்லை.

மாநிலத்தின் நிலை
பேரரசை அவர்கள் நடத்துவதால் அந்த அரசை நான் கேட்பது என் அரசியல் உரிமை, அரசியல் கடமை. அதை உணராதவர்கள், டெல்லி மீது பழி போடுகிறீர்கள் எனக்குற்றம் சாட்டினால் அதற்குச் சரியான பொருள் இல்லை. இங்கிருந்து வரிப்பணத்தில் பெரும் பணம் டெல்லியிடம் கொடுக்கிறோம். வருமான வரி கட்டுபவர்கள் கொடுக்கும் பணம் டெல்லிக்குப் போகும். பிறகு ‘ஐயா! அப்பா! கொஞ்சம் கொடு!’ என்று கேட்டு வாங்கி வரவேண்டிய நிலைமையில் நாம் இருக்கிறோம்.

மக்கள் வாங்கும் காப்பிக்கொட்டை, தேயிலை, தீக்குச்சி, மிளகு ஆகியவைகளுக்குப் போடப்படும் வரி எல்லாம் டெல்லிக்குப் போகிறது. எங்களுக்கு அதில் கொஞ்சம் தருகிறது. அப்படியே தருவதில்லை. குளத்திலுள்ள மீனை நாரை எடுத்துத் தின்றபோது அதன் வாயைத் திறந்து ஒரு குச்சியை விட்டு அது தின்றது போக மீதமிருப்பதை வெளியே எடுத்து பின்பு அதை குழம்பு வைக்க வேண்டுமென்றால் என்ன நடக்கும்.

சென்னையில் 14 மாடிக் கட்டிடத்திலிருக்கும் இன்ஷ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் சார் பலபேர் தங்கள் ஆயுளைப் பாதுகாக்கக் கொடுக்கும் பணத்தை வசூலிக்கிறார்கள். இதன் பொறுப்பு தமிழக அரசிடம் இல்லை. இந்தப் பொறுப்பு தமிழகத்துக்கு அளிக்கப்படுமானால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழகத்தைத் தொழில் மயமாக்க முடியும். இந்த இன்ஸ்யூரன்ஸ் நடத்தும் அதிகாரத்தைத் தமிழக அரசுக்குக் கொடுத்தால் ரூ.100 கோடி முதல் ரூ.200 கோடி வரை தமிழகத்துக்கு வந்து சேரும். அந்த அதிகாரத்தை டெல்லி தருமா?

கோயிலில் உள்ள அர்ச்சகரிடம் ஊரார் பணம் கொடுப்பர். அவர் நம்மை வெளியே நிற்கவைத்து பூஜை செய்து திருநீற்றைத் தருவார். அவர் நல்லபடியாக இருந்தால் அருகில் வந்து தருவார். இல்லையெனில் தூக்கி வீசுவார். அம்மாதிரித்தான் இதுவும் இருக்கிறது. டெல்லியின் மீது எங்களுக்கு கோபம் இல்லை. டெல்லி பதறிப் பேசுவது வெறுப்புணர்ச்சியை உண்டாக்க அல்ல. ‘புதிய அரசு பதவி பெற்று விட்டது. நம் கஷ்டங்கள் தீராதா?’ என்று ஒவ்வொருவருக்கும் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் காரர்களுக்கும் இருக்கலாம். காங்கிரஸ் தலைவர் உட்பட, அண்ணா அரசு அரிசி விலையைத்தானே குறைத்தது, பருப்பு விலையைக் குறைக்க வில்லையே என்கிறார்கள்.

அரிசி விலையைக் குறைக்கும் ஆற்றல் எனக்கு இருக்கும் போது பருப்பு விலை குறையக்கூடாது என்றா நான் சொல்லுவேன்? பருப்புக்கும் எனக்கும் என்ன கோபம்? அல்லது பருப்புக்கும் எனக்கும் ஏதாவது ரகசிய ஒப்பந்தமா? பருப்பின் விலைவாசி ஏறட்டும் என்றா சொல்லுவேன்? நெல் விளைகிறது இங்கே-ஆனால் பருப்பு விளையவில்லை. பருப்பு உற்பத்தியை அதிகப்படுத்தலாம் என்றால் அதற்கான மண்வளம் இல்லை. வடஆர்க்காட்டில் திருப்பத்தூர், ராமநாதபுரம் பகுதியில் சில இடங்களில்தான் பருப்பு விளைவிக்க முடியும். பருப்பு பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து நமக்கு வந்து கொண்டிருந்தது.

இப்போது நமக்குப் பருப்பு அளவு குறைக்கப்பட்டதால் விலை ஏறியது. பருப்பு அளவு குறைந்தது பற்றி உணவமைச்சர் தந்திமேல் தந்தி கொடுத்தார். டெல்லியில் நடந்த மாநாட்டிலும் சொன்னார். ஆனால் டெல்லி சர்க்கார் கோரிக்கையைக் கவனிக்கவில்லை. இதனால் விலை ஏறியிருக்கிறது.

சர்க்கரையை எடுத்துக்கொண்டால் செங்கற்பட்டு மாவட்டத்தில் படாளத்தில் கிடைக்கிறது. திருச்சி பேட்டை வாய்தலையில் கிடைக்கிறது. நிரம்ப உற்பத்தி செய்யப்படுகிறது. நமக்குத் தேவையானதை நாம் எடுத்துக்கொண்டு மீதமுள்ளதை டெல்லி எடுத்துக்கொண்டால் பரவாயில்லை. சொன்னால் டெல்லி கேட்கத் தயாராயில்லை. அதைவிட்டு எல்லா சர்க்கரையையும் எடுத்துக்கொண்டு இங்கு வர வேண்டிய சர்க்கரையின் அளவைக் கணக்குப் போட்டுப் பார்க்கிறார்கள்.

நாம் 1 லட்சம் டன் வேண்டுமென்றால் “ஒரு லட்சம் டன் கொடுக்கமுடியாது. 40 ஆயிரம் டன் எடுத்துக்கொள்” என்கிறார்கள்.

சரி என ஒப்புக்கொண்டு 40 ஆயிரம் டன்னாவது அனுப்புகிறார்களா என்றால் முதலில் 7 ஆயிரம் பிறகு 8 ஆயிரம்! நேரே டெல்லிக்குச் சென்றுவிட்டு வந்தால் பத்தாயிரம் டன் என்று அனுப்புகிறார்கள்! மிச்சத்தை அனுப்ப மறுக்கிறார்கள்.!

மக்களிடத்தில் சொல்கிறோம்
இதைப் பற்றியெல்லாம் நாங்கள் மக்களிடத்தில் சொல்கிறோம். மக்களிடத்தி“ல் சொல்லாமல“ மனத்தில் போட்டழுத்திக் கொள்ள வேண்டுமா? அதற்கு முன்பு ஆட்சியிலிருந்தவர்கள் செய்தார்கள். மக்கள் எங்களை அனுப்பியவர்கள் நாங்கள் மக்களிடம் வந்து பகிரங்கமாகச் சொல்கிறோம். அதைச் சொல்லாமல் மறைத்துக் கோட்டையை அலங்கரிக்க நாங்கள் செல்லவில்லை. அல்லது அமைச்சர்களாகி அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளச் சொல்லவில்லை.
இங்குள்ள வெல்லத்தை மராட்டித்திற்கு அனுப்புவதால் அங்கு அவர்கள் ஏதேதோ செய்யப் பயன்படுகிறது. இங்கு விளையும் வெல்லம் அங்கு பயன்பட்டால் நமக்கு-சர்க்கரை கிடைக்காமல் விலை ஏறாமல் என்ன செய்யும்?

ஆதலால்தான் நாங்கள் இங்கிருந்து பிற மாநிலங்களுக்கு வெல்லம் ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும். அப்படித் தடை விதித்தால் வெல்லம் தாராளமாகக் கிடைக்கும் சர்க்கரை விலை குறையும் என்றோம். இதற்காக வாதாடுகிறோம்.

எங்களுக்குப் பருப்பு வகைகளை அனுப்ப மற்ற மாநிலங்கள் தடை போடுகின்றன. அதைப்போல இங்கிருந்து செல்லும் வெல்ல ஏற்றுமதிக்கும் தடைபோட வேண்டுமெனக் கேட்டதற்கு மத்திய உணவு அமைச்சர் ஜெகஜீவன்ராம் அவர்கள் மராட்டியர் கஷ்டப்படுவரே என்கிறார்.

எனவே இன்று நானும் உணவமைச்சர் மதியழகனும் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். அதாவது இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வெல்லத்திற்குத் தடை போடலாம் என்று, இது எவ்வளவு பெரிய தப்பு என நினைப்பார்களோ தெரியாது. கேட்டுக் கேட்டுப் பார்த்தோம். ஒப்புக்கொள்ளவில்லை! நாங்கள் முடிவு எடுத்தோம். இதன் விளைவு இரண்டாக ஏற்படும். ஒன்று வெல்லத்திற்குத் தடை போடாதே! நாங்கள் பருப்பு அனுப்புகிறோம்’ என்று சொல்வார்கள். இல்லையானால் “பருப்பு அனுப்பமாட்டார்கள் வெல்லத்திற்கு வேண்டுமானால் தடை போட்டுக்கொள்!” என்பார்கள்.

அப்படித் தடைசெய்தால் பருப்புக்குழம்பு இல்லாவிட்டாலும் காரக்குழம்பு வைத்து-கடிக்கக் கொஞ்சம் வெல்லம் வைத்துக் கொள்ளலாம். சர்க்கரை விலையும் குறையும்.

ஆக, இப்படி அதிகாரம் டெல்லியிடம் குவிந்திருப்பதால் தான் நாங்கள் டெல்லியைப் பற்றிப் பேசும்படியாகிறது. அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளதைக் குறைத்து, மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டுமென்ற கூறுகிறோம். ஒருபுறம் விவசாயம் வளர வேண்டும். மறுபுறம் கல்வி செழிக்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன். ஊராட்சி ஒன்றியங்கள் இந்த நோக்கங்களுடன் செயல்பட வேண்டும்.

ஒன்று உணவு உற்பத்தியைப் பெருக்கவேண்டும். மற்றொன்று குடும்பத்தைச் சுருக்கவேண்டும். கட்டுக்கு அடங்கியதாகக் குடும்பத்தை உருவாக்கினால் மேலும் பல நன்மைகளைப் பெறலாம்.

அடக்க உணர்வு கொண்டது தி.மு.க.
தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பதால் அதற்கு அ’க்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் விழாக்களையும் மகிழ்ச்சி தெரிவிக்கும் கூட்டங்களையும் குறைத்துக் கொண்டிருக்கிறோம். அடக்கம் அமரருள் உய்க்கும் என்று நெடுங்காலத்திற்கு முன்பே தமிழர்கள் அறிந்திருந்தார்கள். தமிழர் அறிந்திருந்த சான்றோர் உரைகளைத் தி.மு.கழகம் கடைப்பிடிப்பதால்தான் மகத்தான வெற்றியை அடைந்த பிறகும் நாங்கள் அமைதியாயிருக்கிறோம் தி.மு.கழக அரசு என்ன செய்தது என்பதைப் பற்றிக் கேட்கும் நண்பர்களுக்கு தி.மு.கழகம் முதலில் என்னென்ன செய்யவில்லை என்பதை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். நாங்கள் அடைந்தது போன்ற வெற்றியை காங்கிரஸ் அடைந்திருந்தால் எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கும்? அவை எங்கள் ஆட்சியில் நடைபெறவில்லை.

நாங்கள் அடைந்தது போன்ற வெற்றியைக் காங்கிரஸ் பெற்று அமைச்சரவை அமைத்திருந்தால் அந்த அமைச்சர்கள் மக்களோடு மக்களாகவா நடமாடிக் கொண்டிருப்பார்கள்? மந்திரி வருகிறார் என்றதுமே, “ஒதுக்கு ஒதுங்கு” என்ற சத்தமும் “அந்தக் கொடியை இறக்கு, இந்தக்கொடியை இறக்கு” என்ற அதிகாரமும் அல்லவா காண்போம்?

நாங்கள் எங்கள் ஆட்சியில் எதையெதைச் செய்யவில்லை என்றால்… வெறிச் செயலில் ஈடுபடவில்லை. வெற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை. மந்திரிகளுக்குள்ள வசதிகளைக்கூடக் குறைத்துக் கொண்டோம். சம்பளத்தைக் கூடப் பாதியாகக் குறைத்துக் கொண்டோம்.

சம்பளத்தை ஏன் குறைத்துக் கொண்டீர்கள்? என்று சில காங்கிரஸ்காரர்களே கேட்கிறார்கள். காங்கிரஸ் கட்சி கராச்சியிலே மந்திரிகள் 500 ரூபாய் சம்பளம்தான் வாங்க வேண்டும் என்று தீர்மானம் போட்டது. இது பழைய காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட பழைய காங்கிரஸ்காரர்கள் இப்போது குறைவு, நம் கண்களில் அவர்கள் தட்டுப்படுவதுமில்லை.

மந்திரிகள் 500 ரூபாய் சம்பளம் வாங்கவேண்டும் என்று தீர்மானம் போட்டவர்களே ஆயிரம் ரூபாய் என்றும் இரண்டாயிரம் ரூபாய் என்றும் சம்பளம் வாங்கினாலும், காங்கிரஸ் போட்ட நல்ல தீர்மானத்திற்கு மதிப்புத் தரவேண்டும் என்பதற்காகவும், காந்தியார் காலத்தில் போட்ட தீர்மானம் ஆயிற்றே என்பதற்காகவும் நாங்கள் அதை நிறைவேற்றுகிறோம்.

நன்றி கூறவேண்டும் காங்கிரசார்
அப்படிப்பட்ட எங்களுக்கு நன்றி கூறுவதை விட்டுவிட்டு, மந்திரி ஒருவர் 500 ரூபாய் குறைத்துக் கொண்டால் எவ்வளவு மீதமாகும் என்ற வாய்ப்பாடுக் கணக்கையும் போட்டு, “இதென்ன பிரமாதமான செயல்?” என்று கேட்கிறார்கள். பிரமாதமான செயல் இல்லைதான் அதனால்தான் நாங்கள் அதைப்பற்றிச் சுவரொட்டி போடவில்லை. விளம்பரப் படுத்தவில்லை, விளக்கங்கள் கூட அதிகம் தரவில்லை.

நான் திரும்பிக் கேட்கிறேன், இதுதான் பிரமாதமான காரியம் இல்லையே, நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை? ஒருவன் வேகமாக ஓடி அதிக தூரம் தாண்டிக் குதிப்பதைப் பார்த்ததும் ஓடக் கூட முடியாதவன் ‘இதென்ன பிரமாதம்’ என்று கூறுவதைப்போல்தான் இவர்கள் கேட்கிறார்கள். உண்மையான காங்கிரஸ்காரர்கள், நாங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டதை நிச்சயம் வரவேற்பார்கள். ஆனால் பதவியை இழந்தவர்கள் “கராச்சித்தீர்மானம் எப்போதோ போட்ட தீர்மானம், விலைவாசி ஏறி இருக்கிற நிலையில் பொருட்கள் ஒன்றுக்குப் பத்தாக விலை ஏறி விற்கும் நிலையில் எப்போதோ போட்ட தீர்மானத்தையா கடைப்பிடிப்பது?” என்று கேட்கிறார்கள்.
சம்பளம் என்றதும் எப்போதோ போட்ட தீர்மானம் என்று அலட்சியம் காட்டும் காங்கிரஸ்காரர்கள் எப்போதோ போட்ட ‘இந்தி ஆட்சி மொழியாக வேண்டும்’ என்ற தீர்மானத்தை மட்டும் ஆதரிக்கிறார்கள்! இவர்களுக்கு விருப்பமானது வந்தால் அது அப்போதே… போட்ட தீர்மானம் என்பார்கள். இவர்களுக்குப் பிடித்தமில்லை என்றால் இது அப்போது… போட்ட தீர்மானம் என்று அலட்சியம் காட்டுவார்கள். இப்படி இவர்கள் சுயநலத்திற்காகத் தொனியை மாற்றினால் அது அழகல்ல; அறமல்ல, ஒழுங்கல்ல, அரசியலுமல்ல.

‘மந்திரிகள் ஆடம்பர வாழ்க்கை வாழக்கூடாது. மாளிகை வாசத்தை மறக்கவேண்டும். படகுக்கார்கள் வைத்துக் கொள்ளக்கூடாது’ என்றுகூறுவது மக்கள் தொடர்பு அறுந்து விடக்கூடாது, மந்திரிகளும் நம்மைப்போன்ற சாதாரணமானவர்கள் தான், மக்களின் வாக்கைப் பெற்றுத்தான் பதவி பெற்றிருக்கிறார்கள் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுத் தோழமை உணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக இதற்காகத் தான் ஆடம்பர வசதிகளைக் குறைத்துக் கொண்டது… நீக்கிக் கொண்டது தி.மு.கழகம்.

இந்தச் செயலைப் பற்றி நல்லவர்கள் பாராட்டுகிறார்கள், பத்திரிகைகள் போற்றுகின்றன. “தி.மு.கழகத்தின் முடிவு அடக்க உணர்ச்சியைக் காட்டுகிறது. மக்களுக்குப் பிரியமானதை மக்களுக்கு வேண்டியதைச் செய்கிறார்கள்…” என்று பலரும் பாராட்டுகிறார்கள்.

ஆனால் உள்ளூர் காங்கிரஸ்காரர்களுக்கு அதுவும் பதவி பறிபோனவர்களுக்கு இது பிடிக்கவில்லை. மாலை 5 மணி எப்போது ஆகும் என்று இரண்டு… மூன்று… நான்கு மணி… ஐந்துமணி என“று எண்ணியபடியே மணி ஐந்தானதும் வயிறு குளிர மாலை நேரத்தில் திட்டுகிறார்கள். அவர்கள் இன்னொன்றும் கேட்கிறார்கள்…” இது எத்தனை நாளைக்கு? பார்க்கலாம்!” இது உலகில் சகஜமான பேச்சு.

ஒருவன் நம் பேச்சைக் கேட்கவில்லை என்ற கோபம் ஏற்படுகிறபோது இது எத்தனை நாளைக்கு என்று கேட்கத் தோன்றும். கடன் கொடுத்த கடைக்காரனிடம் மறுபடியும் கடன் கேட்க அவன் இல்லையென்று சொன்னால், “இன்னும் எத்தனை நாளைக்கு இவன் கடை!” என்றுதான் கேட்பார்கள்!

‘இன்னும் எத்தனை நாளைக்கு இது’ என்ற பேச்சு, இருந்ததை இழந்தவர்கள் நெடுங்காலமாகப் பேசி வருகிற எரிச்சல் பேச்சுத்தான்! ஆகவே இந்தப் பேச்சைப் பெரியவர்கள் பேசுவதில் ஆச்சரியமே தவிர-அந்தப் பேச்சில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இன்னும் எத்தனை நாளைக்கு இந்தத் தி.மு.க. மந்திரி சபை’ என்று கேட்பவர்களுக்கு நானே பதில் கூறுகிறேன்.

என் ஜாகத்தை நானே கணித்துக் கொள்வேன்

இந்தப் பதவியால் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்பது எத்தனை நாளுக்கு என் மனத்தில் இருக்கிறதோ அத்தனை நாள்வரை இந்த மந்திரிசபை இருக்கும்.

மக்களுக்கு நன்மை செய்யமுடியாது என்று நான் கருதினால் அந்த நிமிடமே அந்தப் பதவியில் இருக்கமாட்டேன்.

இப்படி என் ஜாதகத்தை நானே கணித்துக் கொள்ளத் தயாராக இருக்கும்போது வியாபாரம் ஆகாத ஆலமரத்தடி அரசியல் ஜோதிடர்கள் என் ஜாதகம் கணிக்க வரவேண்டிய அவசியமில்லை.
ஆனால் அவர்கள் கவலைப்படுகிறார்கள். ‘ஐயோ! பதவியில் இல்லாமல் எத்தனை நாள் இருப்பது?’ என்று!

நாங்கள் இருந்தோமே 20 ஆண்டுகள் பதவியில்லாமல்! ஒரே ஒரு பதவி மேயர் பதவி! அந்த மேயர்களை உட்கார வைத்துக் கொண்டே பேசினோம். “இதை நாங்கள் விரும்பவில்லை. இருந்தும் வந்து சேர்ந்தது” என்று!

ஆனால் அவர்களோ-பதவியைத் தங்கள் வாழ்வோடு ஒட்டவைத்துக் கொண்டார்கள். பதவி போனதும் பதட்டமடைகிறார்கள். வாழ்வே கசந்து போனதுபோல் பேசுகிறார்கள்.

பதவியில்லாத வாழ்க்கை;

சர்க்கரையில்லாத பால்;

உப்பு இல்லாத குழம்பு;

சக்கரம் இல்லாத வண்டி;

வாசனை இல்லாத மலர்;

கண் இல்லாத மனிதன் என்று நினைத்து, “ஐயோ இதென்ன வாழ்க்கை” என்று புலம்புகிறார்கள்.
ஆனால், நாமோ பதவியால் மக்களுக்கு என்ன நன்மை செய்யமுடியும் என்று பார்க்கிறோம்! பதவி வெறியர்களைப் போல் பதவி நாற்காலியோடு நம்மை ‘ரிவிட்’ போட்டா அடித்து வைத்துக்கொண்டோம்?

இவர்கள் மந்திரிகளாயிருந்த போது என்ன நடந்தது? நமக்குத் தெரியாதா? மந்திரி ஊருக்கு வருகிறார் என்றால் போதும், வணிகக் கோமான்கள் தெருவுக்குத் தெரு வளைவு போடுவார்கள். உப்பு வியாபாரிகள் வளைவு, பருப்பு வியாபாரிகள் வளைவு, பட்டு வியாபாரிகள் வளைவு என்று போடுகிறார்கள்.

இத்தனைக்கும் மந்திரி அந்த ஊருக்கு வருகிறார். அவ்வளவு தான்! மந்திரி மோட்டாரில் போகிறபோதும் நம் வளைவைப் பார்க்க மாட்டாரா? அப்படிப் பார்த்த பிறகு கோட்டைக்குப் போய் மந்திரியைப் பார்க்க வேண்டும். ‘யார் நீங்கள்?’ என்பார் மந்திரி. நான்தான் மூணாவது வளைவு (ஆர்ச்) என்று கூறுவார். “என்ன விஷயம்?” என்பார் மந்திரி.

“ஒன்றுமில்லை. ஆர்க்காட்டிலிருந்து வாணியம்பாடி“ககு ஒரு பஸ் ரூட் வேண்டும்” என்று கேட்பார். இதையெல்லாம் பதவி இழந்தவர்கள் எண்ணிப் பார்க்கிறபோது ஆத்திரம் வரத்தான் செய்யும்! சென்ற வருடம் இதே நாள் இரவு 9 மணியளவில் அந்த மந்திரி வீடு எப்படியிருந்திருக்கும்?

வாசலில் ஒரு அதிகாரி திண்ணையில் இரண்டு அதிகாரி-தாழ்வாரத்தில் முதலாளிகளின் கூட்டம் இருக்கும். மந்திரி பேசிக்கொண்டிருப்பார். உள்ளேயிருந்து கனைப்புச் சத்தம் கேட்கும்! மந்திரி மனைவியார் சாப்பிட அழைப்பார்கள். “இரு! இரு!” என்பார்.

இவர்.

இன்று… வீடு காலியாயிருக்கும், மணி 9 ஆனவுடன் பழைய மந்திரி எட்டிப் பார்ப்பார்… “சோறு கிடைக்குமா” என்று! “9 மணிக்குள் என்ன அவசரம்!” என்று உள்ளேயிருந்து பதில் வரும். இதைக் கேட்டதும் அவருக்கு யார் மீது ஆத்திரம் வரும்! என் மீது ஆத்திரம் வரும்!

“அந்தப் பாவிப்பயல் இப்படிச் செய்துவிட்டானே! இருக்கட்டும்! இருக்கட்டும்! இன்று மாலை ஒரு பிடி பிடிக்கிறேன்” என்றுதான் எண்ணுவார். இதற்குக் காரணம் அவர்கள் தங்கள் வாழ்க்கையை இருபது ஆண்டுகாலமாகப் பதவியோடு இணைத்துப் பிணைத்துக் கொண்டார்கள்.

ஆனால் நம் வாழ்வு அப்படிப் பதவியோடு ஒட்டியதில்லை. இடையிலே வந்ததாகத்தான் கருதுகிறோம். பதவி பறிபோனதும் வாழ்க்கையே பறிபோனதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முதலில் ஆறுதல் கூற ஆசைப்படுகிறேன். எத்தனை நாளுக்குப் பதவியிலேயே இருப்பது! என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றவில்லை. “20 வருடமாகத் தோன்றாத யோசனையா-இனிமேல் நமக்குத் தோன்றி மக்களை வாழ்விக்கப் போகிறோம்?” என்றும் எண்ணுவதில்லை.

சலிப்பான மந்திரிப் பதவி

ஆனால் எனக்கு என்னவோ இந்த மந்திரிப் பதவியில் 20 நாளிலேயே சலிப்பு ஏற்பட்டுவிட்டது.

சந்தோஷ மில்லாத சிரிப்பு;

தொடர்பே இல்லாத சிநேகிதம்;

சுவையே இல்லாத உரையாடல்கள்;

இப்படிப்பட்ட மந்திரி வாழ்க்கையில் எப்படித்தான் அவர்கள் 20 வருடமாய் இருந்தார்களோ தெரியவில்லை! வயதானவர்கள் அதில் ஆசையை விலக்கி- “இதைச் செய்! இப்படிச் செய்!” என்று கூறாமல் “எத்தனை நாள் இந்த வாழ்வு!” என்றா கூறுவது? பள்ளிக்குச் செல்லும் பேரனை வாழ்த்தி அனுப்பவேண்டிய தாத்தா “பள்ளிக்கா போகிறாய், போ! போ! எத்தனை நாளைக்கு!” என்று கூறுவது போலிருக்கிறது அவர்கள் பேச்சு!

ஆனால் அந்தப் பெரியவர்களுக்குத் தூபம் போடுபவன் போட்டுக் கொண்டுதான் இருப்பான், அதை நம்பலாமா?

“நெடுஞ்செழியன் மந்திரியானார், நடையிலே முறுக்கு வந்துவிட்டது!” என்பான் அவன்.

“அப்படியா!” என்பார் இவர். “அண்ணாதுரையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்” என்பான் அவன்.

“கருணாநிதி எப்படி!” என்பார் அவர்; “கையிலே பிடிக்க முடியவில்லை” என்பான் தூபம் போடுபவன்.

இதைக் கேட்டதும் “அப்படியா, ஒரு பிடி பிடிக்கிறேன்” என்று கூறத்தான் தோன்றும்.

ஆனால், உள்ளபடியே இந்த அமைச்சர் பதவியின் மூலம் மக்களுக்கு நன்மை செய்ய அதிக அதிகாரம் இல்லையே என்பதுதான் எங்கள் வருத்தம்.

இந்தக் கணக்கைப் பார்க்காமல் வேறு கணக்கைப் பார்ப்பது என்றால் அது முடியாத காரியமா? “நாம் எதிர்க்கட்சி என்பதற்காக முன்பு நமது குப்புசாமியை அவர்கள் மூன்று நாள் சிறையில் வைத்தார்களா? சரி..! அங்கே யார் இருக்கிறார்கள், குமாரசாமியா? அவனைப் பிடித்து 6 நாள் வை!

“நமது சின்னச்சாமி மீது வழக்குப் போட்டார்களா! பெரியசாமி அங்கிருந்தால் போடு வழக்கு” என்று கூற முடியாதா?

சுலபமான காரியம்; அற்பன் தவிர வேறு யாரும் அதை அரசியல் என்று கூறமாட்டான்.

நான் பதவியேற்றதும் போலீஸ் அதிகாரிகள் என்னிடம் வந்தார்கள். “நாங்கள் தேர்தல் நேரத்தில் நியாயமாகத்தான் நடக்க முயன்றோம்…” என்று கூறினார்கள். நான் தெளிவாகச் சொல்லி விட்டேன், கடந்த காலத்தைப் பற்றிக் கவலைப்படமால் செயலாற்றுங்கள் என்று! இன்னும் சிலர் கூறினார்கள், “அப்போதைய முதலமைச்சர் ரொம்பத் தொந்தரவு செய்தார்; அதனால்தான்” என்று ஏதோ கூற ஆரம்பித்தார்கள்.

“அந்த விஷயத்தையே கூற வேண்டாம். நீங்கள் நிரந்தரமான சர்க்கார் ஊழியர்கள். நாங்கள் மக்கள் அனுமதிக்கிற வரை அமைச்சர்கள். இரண்டு பேருக்குமுள்ள தொடர்பைத் தெரிந்திருக்கிறேன். ஒரு துளியும் கவலைப்படாமல் நல்ல பணியாற்றுங்கள்” என்று கூறினேன். இதன் மூலம் எவ்வளவு பொறுப்பு உணர்ச்சியோடு பணியாற்றுகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளவே இதைக் கூறினேன்.

இந்தப் பொறுப்புணர்ச்சியை இப்போது மட்டுமல்ல 1957 ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் இருந்தபோதே வெளிக்காட்டினோம். “உங்களுக்கு வாலி பாடுவதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. ஆட்சிப் பொறுப்பு என்றாவது எங்களிடம் வரும் என்ற நினைப்போடு பேச வந்திருக்கிறோம்” என்று கூறினேன்.

அத்தைக்கு மீசை முளைத்தது
அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண் உறுப்பினர் எழுந்து, “நீங்களா ஆட்சிக்கு வரப்போகிறீர்கள்?” என்று கேட்டார்.

“ஏன் வரக்கூடாது? என்றேன்.

அதற்கு அந்த அம்மையார் “அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா” என்றார்.

என்ன செய்யலாம்? இந்த அத்தைக்கு இப்போது மீசை முளைத்துவிட்டது!

நாங்கள் பதவிக்கு வந்தால் முன்பு திராவிடநாடு கேட்டுக் கொண்டிருந்தால் மத்திய சர்க்காருடன் மோதிக்கொள்வோம் என்று எதிர்பார்த்தார்கள், அது நடக்கவில்லை!

ஆனால் சி.சுப்பிரமணியம் மட்டும் “மறைமுக திராவிட நாடு கேட்பதைப் போல் பேசுகிறார்கள்” என்று குறைகூறிக் கொண்டிருக்கிறார்.

திராவிட நாட்டை மறைமுகமாகக் கேட்பதோ, மத்திய சர்க்காருடன் மோதிக்கொள்கிற மாதிரியோ இதுவரை நடந்து கொள்ளவில்லை. அவ்விதம் செய்யப் போவதும் இல்லை, நடந்து கொள்ளத் தயாராகவுமில்லை. ஆனால் அவர்களே வம்புக்கு வந்தால் நான் என்ன செய்வது என்பதை சுப்ரமணியம் சொல்லட்டும்!

திராவிடநாடு கோரிக்கைக்கு எவ்வளவு பலம் இருக்கிறது என்பதைத் திரட்டிக் காட்டிய நான் அதை மறந்து விட்டு இந்தியாவுடன் இணைந்தே வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும்போது,

எனது நாட்டு மக்களுக்கு உணவு வழங்கும் (ரூபாய்க்கு ஒரு படி அரிசி) திட்டத்தினால் ஏற்படும் கஷ்டத்தில் ஒரு துளியைக்கூட மத்திய அரசு ஏற்க மறுக்கிறது என்பதைக் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

“பிரிவினை எண்ணம் தவறு. நாம் கஷ்டத்தில் தவிக்கும்போது டில்லி கை கொடுக்கிறது. ரூபாய்க்கு ஒரு படி அரிசித் திட்டத்தால் எட்டுக் கோடி நஷ்டமா, இந்தா 4 கோடி இனாமாக அல்ல கடனாக! பத்து வருடத்தில் திருப்பிக் கொடு!” என்று டில்லி கை கொடுத்தால்-

விட்ட குறை தொட்ட குறையாக உள்ள பிரிவினை உணர்ச்சிகூட அடியோடு நீங்கிவிடும்.

“பிரிவினை உணர்ச்சியைப் போக்கிட-தமிழக அரசு தத்தளிக்காமல் கைகொடுத்து அதை அரசியல் பந்தமாக்கி பாசமாக்கி-உறவாக்கிக் கொள்வீர்” என்று சுப்பிரமணியம் டில்லிக்கு எடுத்துச் சொன்னால் அவர் உள்ளபடியே பாரத புத்திரர். அதை விட்டுவிட்டுப் பிரிவினை உணர்ச்சி தென்படுகிறதே என்கிறார். நிச்சயமாக, பிரிவினை உணர்ச்சி எங்களுக்கு இல்லை.

ஆனால் தமிழ்நாடு கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்காது! டில்லி, காதே கொடுத்துக் கேட்காது. கைகொடுக்காது என்ற நிலை ஏற்படுமானால் நாம் தனியாகவே இருப்போம். எங்களிடமல்ல ஆனால் நாட்டில் ஆங்காங்கு எண்ணங்கள் தோன்றுவதை எப்படித் தடுக்க முடியும்?

பிரிவினை உணர்ச்சி இல்லை
எங்களைப் பொறுத்தவரை பிரிவினை உணர்ச்சி துளியும் இல்லை! அது ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்! ஆனால் தமிழகத்தின் குறைகளை நீக்க டில்லி அரசு முன“வர வேண்டும்.
இதற்குள் பதவி இழந்த பெரியவர் மிகவும் ஆத்திரப்படுகிறார். ‘ரூபாய்க்கு ஒரு படி அரிசியா? ஏன்?’ என்கிறார்.

“இவனுக்கு மட்டும் போடாயே! அவனுக்கு ஏன் இல்லை” என்று கேட்கிறார்.

“சென்னை, கோவையில் போடுவதற்கே 10 கோடி ரூபாய் நஷ்டமாகும். பயல் எல்லா இடத்திலும் போடட்டும்! 50 கோடி நஷ்டமாகும். திண்டாட்டடும். சர்க்காரே திவாலாகட்டும்” என்ற நினைப்பில், ஒரு படி அரிசி எல்லா இடத்திலும் போடு என்கிறார்கள்.

அவர்களுக்குக் கூறிக்கொள்கிறேன். உளமார ஒத்துழைப்பைத் தாருங்கள். எல்லா இடத்திலும் ஒரு படி அரிசி போடுகிறோம்.

ஆனால் ஒத்துழைப்பையா நீங்கள் தந்தீர்கள்? இடையூறுகளைத்தான் கொடுத்தீர்கள்.

ஏழை மக்களுக்காக நெல் கொள்முதலுக்குச் சென்றால் பணக்கார நிலச்சுவான்தாரர்களைத் தூண்டிவிட்டு “நெல் போடாதே, கரும்பு போடு! புகையிலே போடு” என்று கூறுகிறீர்கள்.

கொள்முதலுக்கு எவ்வளவு இடையூறு விளைவிக்க வேண்டுமோ-அவ்வளவு இடையூறு விளைவித்திருக்கிறீர்கள்.

‘கொள்முதல் அதிகாரிகள் கொடுமைப்படுத்துகிறார்கள்’ என்று காங்கிரஸ்காரர்கள் கூச்சலிடுகிறார்கள். அப்படி ஏதாவது கொடுமைப்படுத்தும் சுபாவம் இருந்தால் அந்த சுபாவம் 20 வருடமாக நீங்கள் வளர்த்த சுபாவம்தானே!

20 ஆண்டுப் பழக்கத்தை நான் 20 நாளில் போக்கிவிட முடியுமா? தமிழ்நாட்டிலேயே நெல் கொள்முதலில் எதிர்பார்த்தது கிடைக்காத மாவட்டம் செங்கல்பட்டுதான். அதற்குக் காரணம் பதவி இழந்த பெரியவரும் அவரது நண்பர்களும் கூட்டம் கூட்டிக் ‘கொள்முதலுக்கு நெல் தராதே’ என்று கூறியதுதான். இது மட்டுமா? நெல் போடாதே, கரும்பு போடு என்று கூறியதற்குப் பதிலளித்த கருணாநிதி “நெல் போடாமல் கரும்பு போட்டால் ஏரியிலிருந்து தண்ணீர் விடமாட்டோம்” என்று பேசினார். அதற்கு ஒரு பெரிய காங்கிரஸ் பேச்சாளர் “தண்ணீர் விடவில்லையென்றால் ஏரியை உடைப்போம்” என்று கூறியிருக்கிறார்.

20 நாளிலேயே காங்கிரசுக்கு எதிர்க்கட்சியாக இருக்க முடியவில்லை. உடைக்கலாமா, கிழிக்கலாமா, என்பதிலேயே புத்தி போகிறது.

20 வருடம்… நாங்கள் தாங்கினோம், 20 நாள் கூட அவர்களினால் தாங்க முடியவில்லையே!
‘நம்முடன் சுற்றிய கலெக்டரும், அதிகாரியும் அவருடன் செல்கிறார்களே’ என்றதும் சினம் பொங்கத் தான் செய்யும்.

சினம் பொங்கிய நிலையிலுள்ள பெரியவருக்குக் கூறிக்கொள்வேன். ஆறுவது சினம்! ஆம் சினமே ஆறும் தகையது. ஆகவே, உங்கள் சிந்தையை ஆற்றிக்கொண்டு நாட்டுக்கு நலம் கிடைக்க உழைக்க வேண்டும்.

தி.மு.கழகம் வசதியில்லாத கழகம்; உண்டியல் தூக்கியே கூட்டங்கள் நடத்துகின்ற கழகம். சைக்கிளில் வந்து கொள்கை பரப்பியவர்கள்-கொடியைப் பிடித்துக் கொண்டே நடந்து வந்து கருத்துக்களைச் சொன்னவர்கள் அல்லும் பகலும் கழக வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்கள் அத்தகையவர்கள் தான் வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார்கள்.

தி.மு.கழகம் கோட்டையிலே கொலுவிருக்கும் அளவுக்கு அமர்ந்துள்ளதென்றால், வஞ்சகம் அறியாமல் நேர்மையே உருக்கொண்ட கிராமப்புறத்து மக்களால் தான் இந்தப் பெரு வெற்றி கிடைத்துள்ளது.

இன்று கோட்டையிலே அமர்ந்திருக்கும் அமைச்சர்களாயினும் சரி சட்டமன்ற உறுப்பினர்களாயினும் சரி, அவர்களெல்லாம் ஏழை எளியவர்களுக்காக-அவர் தம் வாழ்வில் இன்பம் பூத்துக் குலுங்குவதற்காக அவர்தம் முகத்தில் மலர்ச்சி காண்பதற்காகத் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

துன்ப துயரங்களை அறிந்தவர்கள்
இன்று சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் அமைச்சர்கள் துன்ப துயரங்களை அறிந்தவர்கள். பசியோடு போராடி, பசிக்கொடுமையென்றால் என்னவென்று புரிந்தவர்கள். விலை வாசி ஏற்றத்தால் விளைந்த தொல்லைகளை அனுபவித்தவர்கள் இப்படிப்பட்டவர்கள்தான் இன்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். மக்கள் வாழ்விலே மறுமலர்ச்சியை உண்டாக்க!

இந்தியாவிலேயே தமிழக அரசியல் புதுமையாக விந்தையாக இருக்கிறது என்று வெளிநாட்டினரெல்லாம் வியக்கின்றனர். இதுவரை ஏழை எ‘யவர்களாக இருந்தார்களே இவர்களால் ஏழைகளுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்று அதிசயத்துடன் எதிர்பார்த்தார்கள்.
இதுவரை கூட்டங்கள் கூட்டி மேடையிலேறிப் பேசிக்கொண்டு தானே இருந்தார்கள்-கோட்டைக்குள் சென்றால் என்ன செய்வார்கள் என்று அலட்சியமாகப் பார்த்தார்கள்.

அமெரிக்க நாட்டிலிருந்து வருபவர்களும் ரஷ்யாவிலிருந்து வருபவர்களும் தமிழகத்தைத்தான் பார்க்கிறார்கள். அவர்கள் பார்க்கும் அளவுக்கு இங்குதான் நிலைமை மாறியிருக்கிறது.

கடந்த தேர்தலில் “எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்றபோது, ‘இவர்களுக்கு என்ன தெரியும் இவர்களால் என்ன முடியும்’ என்று ஏசிப் பேசி இறுமாப்புக் காட்டினர்.

ஒன்றுமே தெரியாது என்று யார் கேலி பேசினார்களோ அவர்கள் சட்டமன்றத்தில் இருக்கின்ற நிலையும் பரிதாபமாகப் பார்க்கப்பட்டவர்களாகிய நாம் பாராளுகின்ற முறையும் பார்த்து இங்கிலாந்து தேசம் வியக்கிறது. அமெரிக்காக் கண்டமே அதிசயித்திருக்கிறது. நம்முடைய ஆற்றல் கண்டு, அமெரிக்கப் பத்திரிகை நிருபர் ஒருவர் என்னிடம் கேட்டார், ‘நீங்கள் எப்படி ஜெயித்தீர்’களென்று.

கிராமப்புறங்களில் சென்று பாருங்கள்-தெரியும் என்றேன். அதற்கு, அவர் “அங்கு போகமுடியவில்லை. என் கார் போகும் அளவுக்கு அங்கு ரோடு வசதிகள் இல்லை. அப்படிச் சென்றாலும் மேடும் பள்ளமும் கல்லும் முள்ளுமாக இருக்கிறது” என்றார்.

அதனால் தான் நாங்கள் ஜெயித்தோம் என்றேன். பிறகு அவர் புரிந்து கொண்டார்.

அமெரிக்க நாட்டிலிருப்பவர்கள்-சோவியத் நாடுகளில் இருப்பவர்கள் இங்கிலாந்தில் இருப்பவர்கள் கடல் கடந்து வரும் வெளிநாட்டார்களெல்லாம் புரிந்துகொள்ளுகின்றனர். ஆனால் இங்கு இருப்பவர்களுக்குப் புரியவில்லை.

எங்களால் ஏழைகள் ஏற்றம் பெற்றிருக்கின்றனர். எளியவர்கள் முகத்தில் மலர்ச்சி நிழல் படர்ந்திருக்கின்றது. அன்றாடங் காய்ச்சிகளும் அயராது பாடுபடுபவர்களும் நல்வாழ்வு பெறுவோம் என்று நம்பியிருக்கின்றனர்.

சம்பளம் பெறுவது பற்றி…
நாங்கள் சம்பளத்தைக் குறைத்ததற்குக் காரணம் மக்கள் எப்படி எளிமையாக இருக்கிறார்களோ, அப்படியே நாங்களும் இருக்க விரும்புகிறோம்.

உங்களில் ஒருவராக உங்கள் குடும்பத்தில் ஒருவராக உங்கள் மத்தியிலே உலவ விரும்புகிறோம்.
இதனால் காங்கிரஸ் நண்பர்களுக்கு கிலி பிடித்துவிட்டது. அவர்கள் என்ன நினைத்தார்களென்றால் புதிதாக வந்தவர்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நிலையில்தான் இருப்பார்கள். அதிகாரம் புதிதாகையால் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் பசியோடிருப்பவன் அறுசுவை உணவை அள்ளி உண்பது போலப் பதவி கிடைத்ததால் வீண் ஆடம்பரங்கள் செய்வார்கள் என்று நினைத்தார்கள், தங்களைப் போல.

ஆனால் நமது அடக்க உணர்வையும்-ஆட்சி நெறியையும் அதிகார முறையையும் பார்த்து அவர்களுக்குக் கிலி பிடித்துவிட்டது. எங்கே இருபது ஆண்டுகள் இவர்களும் இருப்பார்களோ என்று!

கிராமப்புறங்களில்தான் ஏழைகள் பெரும்பாலும் ஏழைகளாகவே இருக்கிறார்கள். நம் நாட்டில் நூற்றுக்குப் பதினைந்து பேர்தான் பிற தொழில்கள் பார்க்கின்றனர். ஐந்து பேர் வேலை தேடி அலைகின்றனர். ஆனால் நூற்றுக்கு எண்பது பேர் விவசாயம் செய்கின்றனர்.

இவர்கள் காலை முதல் நடுப்பகல்வரை கூதலிலும் கொடு வெய்யிலிலும் கழனி வெளிகளிலே உழன்று-உடலிலிருந்து வேர்வை ஆறாகப் பெருகியோட இயந்திரம் போல உழைத்து, மாலையில் வீடு திரும்பும் பொழுது சாறு பிழிந்த சக்கைகளாகவே வருகின்றனர்.

அவர்கள் வாழ்வில் நிம்மதி இருக்க வேண்டாமா? அவர்கள் குடும்பம் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டாமா?

கையிலே மட்டும் நெய்யை வைத்துக்கொண்டு சோற்றிலே ஊற்றாவிட்டால் சோறு மணக்குமா?
இதுவரை காங்கிரஸ்காரர்கள் பன்னீரை அங்குமிங்கும் தெளித்துவிட்டு “எங்கும் மணக்கிறது! இந்த மணம் இந்திர லோகத்தில்கூட இருக்காது!” என்றார்கள்.

ஆனால் நாம் உடலிலுள்ள அழுக்கை நீக்கி-தூய்மை பெறச் செய்து உழைக்கவும் வழிவகை செய்யவேண்டும்.

வாழ்த்துப் பத்திரம் வாசித்துக் கொடுத்தால் மட்டும் காரியம் நடைபெறாது.

ஏற்றிவிட்ட விளக்கைக் கூடத் தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தால்தான் அது அணையாமல் இருக்கும்!

மக்களும் எங்களைப் பதவியில் அமர்த்தியதோடு விட்டுவிடாது எங்களுக்கு உறுதுணையாயிருக்க வேண்டும். ஆட்சியென்ற தீபம் மேலும் பிரகாசிக்க வேண்டுமானால் மக்களது ஒத்துழைப்பு எனும் தூண்டுதல் இருக்கவேண்டும்.

என்னிடம் வந்த மனுக்களெல்லாம் மனுக் கொடுத்தவர்கள் ஆதிதிராவிடர்களாக இருந“தால் குடிக்க நீர் வேண்டும்-இருக்க இடம் வேண்டும் என்று இருக்கிறது. சில கிராமங்களில் பள்ளிக்கூடம் கட்டித் தரவேண்டுமென்று மனுக்கள் வருகின்றன. இன்னும் சில கிராமங்களில் பாதைகள் போட்டுத் தரவேண்டும் என்று கேட்கப்பட்டிருக்கிறது.

சோறுதான் காங்கிரஸ்காரர்களால் போட முடியவில்லை யென்றால் இதைக்கூடவா செய்யக்கூடாது? கிணறுகளெல்லாம் தூர்ந்து போகவிட்டு குளங்களைப் பழுது பார்க்காது-வயலிலே பசுமையைக் கண்டு வாழ்விலும் பசுமையைக் காண நீர்ப்பாசன வசதி செய்யாது இருபது ஆண்டுகள் என்ன செய்தார்களென்றே தெரியவில்லை.

மூன்று ஐந்தாண்டுத் திட்டங்கள் போட்டு மருந்தில்லாத மருத்துவமனைகள் புத்தகமில்லாத பள்ளிக்கூடங்கள்-அரிசி இல்லாத ரேஷன் கடைகள் இவைகளைத் தானே ஆக்கி வைத்தீர்களென்றால் “நாங்கள் தொழிற்சாலை கட்டினோம், அணையைக் கட்டினோம்” என்று கூறுகிறார்கள்.

பசித்தவன் என்ன நினைப்பான்?
பசியோடு இருக்கும் ஒருவனை அழைத்துக்கொண்டு போய் வாழைத் தோட்டத்தைக் காட்டி-வாழைத் தோட்டத்திலுள்ள வாழை மரங்களை ஒவ்வொன்றாகக் காட்டி “அதோ தெரிகிறது பார்! குழந்தைப் பருவத்துக்குருத்து இலை! அதிலே விருந்துண்டால் எப்படியிருக்கும்?” என்று கேட்டால், பசித்தவன் என்ன நினைப்பான்? ‘பசியை அடக்காது மேலும் மேலும் பசியைத் தூண்டிவிடும் அளவுக்குப் பேசுகிறானே நாலு அறை கொடுப்போமா” என்று நினைப்பான்.
சோழவரம் ஏரி தூர்வாரவில்லையே என்றால், பக்ராநங்கலைப் பாருங்கள் என்கிறார் ஒரு பெரியவர்.

கிணறுகளை ஆழப் படுத்தவில்லையே என்றால், தாமோ தாரப் பள்ளத்தாக்குத் தெரியுமா என்கிறார்.

நம்நாட்டில் பதின்மூவாயிரத்து ஐநூறு குளங்கள் இருக்கின்றன. மூன்று ஐந்தாண்டுத் திட்டங்கள் போட்ட பிறகு எத்தனை குளங்கள் பழுதுபார்க்கப்பட்டிருக்கின்றன என்றால் ஆயிரத்து முந்நூறு குளங்கள்தான். மீதிக்குளங்களைப் பழுது பார்த்து முடிப்பதை நமது பேரப்பிள்ளைகள் தான் பார்க்கவேண்டும், காங்கிரஸ் இன்னும் இருந்திருந்தால், அதற்குள் கொஞ்ச நஞ்சம் இருக்கின்ற குளங்கள் கூடக் கெட்டுவிடும்.

எங்களிடம் உள்ள பணத்தில் இப்பொழுது 11 கோடி ரூபாய் நீர்ப்பாசனத்திற்காக ஒதுக்கியுள்ளோம். இந்த 11 கோடி ரூபாய் போதாது.

இன்னும் பலகோடி வேண்டும். இதற்காக மத்திய அரசிடம் 20 கோடி கேட்டிருக்கிறோம்.
இப்படி முதன் முதல் இவ்வருடத்தில் நாங்கள் செய்ய வேண்டுமென்று எண்ணியுள்ள காரியம் நீர்ப்பாசன வசதி செய்வது நல்ல விதை கொடுப்பது எங்கு பார்த்தாலும் நெல் கிடைக்கிறது, அரிசி கிடைக்கிறது என்னும் நிலையை அக்டோபர் மாதத்திற்குள் உருவாக்க வேண்டும் என்பதுதான்.

பதவியேற்பதற்கு முதல் நாள் மேட்டூர் அணைக்கட்டில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்று கணக்குப் பார்த்தேன். ராஜ்யத்தை ஒப்புக்கொள்ளப் போகும்போது தண்ணீராவது இருக்கிறதா என்று பார்த்தேன். 35 கன அடித் தண்ணீர் தான் இருந்தது. 60 கன அடித் தண்ணீர் இருந்தால் தான் மேட்டூர் அணையைத் திறக்க முடியும்.

அதைத் திறந்துதான் தஞ்சைக்கு நீர் விடவேண்டும்.

தஞ்சைக்கு நீர் சென்றால்தான் பஞ்சம் இருக்காது.

மேட்டூருக்குத் தண்ணீர் வருவதென்றால் குடகுமலையில் மழை பெய்யவேண்டும். குடகுமலையைச் சார்ந்திருக்கும் பச்சைமலை, பவளமலை எவ்வளவு வளமுடையது என்று பாட்டுக்காவியம் படித்தவர்களுக்குத் தெரியும்.

சென்னைக்கும் கோவைக்கும் படி அரிசித் திட்டம் கொண்டு வரும்போது “அது எப்படி முடியும்!” என்று காங்கிரஸ்காரர்கள் கேட்டது பிறகுதான் புரிந்தது. அரிசி விளைய நீர் வேண்டும் அந்த நீர்தான் மேட்டூரில் இல்லையே, இவள் எப்படிச் செய்வான் என்று நினைத்தார்கள்.

நேற்று 69 கன அடிவரை தண்ணீர் வந்துவிட்டது. மனிதப் பூச்சிகள் அழிந்து விடாமலிருந்தால் வயல் வெளிகளிலே பயிர் விளைந்து பசியைப் போக்கும் என்பது உறுதி.

யாருக்கு வரிபோட்டால் தாங்கும்-யாருக்குப் போட்டால் தாங்காது என்று பார்த்து, சமநீதியோடு தி.மு.கழகம் அரசாண்டு வருகிறது.

இந்த அரசு வெறும் அதிகார அரசல்ல! ஆணவ அரசல்ல! உழவர்கள் அரசு! உழைத்துப் பிழைக்கும் உழைப்பாளர் கூட்டங்களின் அரசு! மக்கள் அரசு! இந்த அரசுக்கு மக்கள் ஒத்துழைப்புத் தேவை.

சிறை எனக்குப் புதிதல்ல!
“இந்தி ஒழிப்புப் பற்றிய புதிய தீர்மானம், தமிழக அரசுக்கும் டில்லி அரசுக்கும் உள்ள தொடர்புக்கு ஊறு விளைவிக்குமா? இதற்காக எந்தச் சட்டப்படி நம்மீது நடவடிக்கை எடுக்கலாம்” என்று அங்குள்ள நிபுணர்கள் யோசிக்கக் கூடும், ஆனால், நான் ஒரு துளியும் யோசிக்கவில்லை.
“மத்திய அரசு நடவடிக்கை எடுக்க விரும்பினால் அது எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் தயாராக இருக்கிறேன். அவர்கள் என்ன செய்துவிட முடியும்-சிறையில் தள்ளக்கூடும்? சிறை எனக்குப் புதிதல்ல!

“நான் எம்.ஏ.படித்த இளைஞனாக இருந்தபோதும் சிறை சென்றிருக்கிறேன், சட்டமன்ற உறுப்பினனாக இருந்த போதும், நாடாளுமன்ற உறுப்பினனாக இருந்த போதும் சிறை சென்றிருக்கிறேன். இப்பொழுது அமைச்சனாக இருக்கும் பொழுதும் காங்கிரஸ் நண்பர்களால் சிறைசெல்லும் வாய்ப்புக் கிடைக்குமென்றால், மிக்க மகிழ்ச்சியோடு அதனை ஏற்றுக் கொள்வேன். அது என் வாழ்க்கை வரலாற்றிலேயே வசீகரமான அத்தியாயமாக இருக்கும், ஆகவே, ‘சிறை’ என்னை மிரட்டமுடியாது.

அவர்கள் இன்னொன்றும் செய்யக்கூடும்; ‘இந்தியைப் பள்ளிகளிலிருந்து நீக்கியது, அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதல்ல’ என்று சொல்லி, தமிழக அரசைக் கவிழ்க்கக் காங்கிரஸ் உறுப்பினர்கள் முயன்றால், அதற்கு நான் குறுக்கே நிற்கமாட்டேன், வேறு ‘ஆட்சி’ அமைக்க முயலலாம்-தாராளமாக முயலட்டும், நான் மட்டுமன்றி, கழகத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும், ‘மத்திய அரசு என்ன கடுமையான நடவடிக்கை எடுத்தாலும், அதை ஏற்றுக்கொள்வது’ என்று முழு உறுதியுடன்தான் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்’ என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ளட்டும்.

“தமிழக அரசு கவிழ்க்கப்பட்டு விட்டால் மத்திய அரசு 100 அல்லது 150 நாட்களில் கவிழ்ந்துவிடும் நிலைமை ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்போதே மத்திய அரசு வலுவில்லாமல் இருந்து கொண்டிருப்பது அவர்களுக்கே தெரியும். இந்த நிலையில், ‘மத்திய அரசைக் கவிழ்க்க வேண்டும்’ என்று நினைப்பவர்களுடன் நாங்களும் ஒத்துழைத்தால், நிலைமை என்னவாகும்?

“1937 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தி எதிர்ப்பு அறப்போராட்டத்தின் இறுதிக் கட்டமாகத்தான் இப்பொழுது சட்டமன்றத்தில், இருமொழித் திட்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இனி, புதிய அத்தியாயம் எழுத வேண்டியவர்கள் நாம் அல்லர். என்னால் ஆனதைச் செய்துவிட்டேன். இனி, டில்லி அரசு தன்னால் ஆனதைச் செய்யட்டும்.

“நான் ஏற்கெனவே ஒருமுறை கூறியபடி ஒவ்வொருவருக்கும் ஒரு முறைதான் உயிர் போகும்-இருமுறை போகாது. அதிலும் இந்தக் காரியத்திற்காக நம்முடைய உயிர் போவதானால், நல்ல காரியத்திற்கு நம்முடைய உயிர் போகிறது’ என்று நிச்சயம் மகிழ்ச்சியடைவோம்.

“வாழ வேண்டிய வயதில், தன் பெற்றோரின் இன்பக் கனவுகளை நிறைவேற்ற முடியாமல் இளைஞன் இராசேந்திரன், இந்தியை எதிர்த்துத் தன் இன்னுயிரை நீத்தான். அப்படியிருக்க, அறுபது வயதை எட்டிக் கொண்டிருக்கும் நிலையில், ஆசைகள் அடங்கி-பெறவேண்டியதைப் பெற்றுவிட்டவர்கள் இறப்பதால் நஷ்டம் எதுவும் ஏற்படாது. இதில் மத்திய அரசு எந்தக்காரியம் செய்தாலும் ஏற்றுக்கொள்வது என்ற உறுதியுடன் தான் நாங்கள் இருக்கிறோம்.

“இந்திய ஏகாதிபத்தியத்தை எதிர்க்க நாம் முடிந்த அளவு விலை தந்தோம். அதைவிட இன்று நாம் பெற்றுள்ள நிலை பெரிது. அந்த நிலையை நாம் பெறக் காரணமாக இருந்த இந“தியை எதிர்த்துப் போராடி மாண்டவர்கள் அனைவருக்கும் வீர வணக்கம் செலுத்துவோம்.”

1965 ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தியாகம் செய்த மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தங்களுடைய வீரவணக்கத்தைச் செலுத்துகின்ற வகையில்-இந்த நாளிலே இந்த வீர வணக்கத்தை இங்கே நான் செலுத்திக் கொண்டு இருக்கிற இந்த நேரத்தில் நம்முடைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மற்ற நண்பர்கள் அனைவரும் பல்வேறு நகரங்களில் வீர வணக்கத்தைச் செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்படி வீர வணக்கம் செலுத்துவது தமிழ்நாடு மரபிலே ஒன்றாகும். அந்த வகையிலே இன்றைய தினம் தமிழகம், தொடர்ந்து வீர வணக்கத்தை நடத்திக்கொண்டு வருகிறது.

வீர வணக்கம் செலுத்தும் அமைச்சர்கள்
வீர வணக்கம் செலுத்துவது தமிழ்நாட்டு மரபு என்றாலும், அந்த வீர வணக்கத்திலே அமைச்சர்கள் கலந்துகொள்வது இதுதான் முதல் தடவை என்பதை வடக்கே உள்ளவர்கள் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும்.

எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமென்று 1938 ல் இருந்து போராடி வந்தோமோ அந்தக் காரியத்தைச் சட்டமன்றத்திலேயே செய்து விட்டோம். ‘இந்தி இனி தமிழ் நாட்டில் இல்லை’ என்று தெரிவித்து விட்டோம்.

கட்டாய இந்தியை எதிர்த்து 20 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் போராட்டக் களம் அமைத்து ஆயிரம் பேர் சிறைசென்று, தாளமுத்து, நடராசனை இழந்தோம். அவர்களுடைய உடல்களை இடுகாட்டுக்குக் கொண்டு சென்ற ஊர்வலத்தில் சில நூறு பேர்களே கலந்து கொண்டனர்.

என்றாலும், எங்கள் உள்ளத்திலே ஓர் உறுதி இருந்தது. ‘இன்று கவனிப்பாரற்றுக் கிடக்கும் இந்தி எதிர்ப்பு இயக்கம் வேகமாக வளர்ந்து மக்கள் மனத்தை உலுக்கி மகத்தான வெற்றிபெறும்’ என்றுதான் அந்த உறுதி. அது இன்று வெற்றி தேடித் தந்தது என்பதை, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் துவக்கம் முதல் ஈடுபட்டிருந்த என்னால்தான் உணர முடியும்.

‘ஒழிக, ஒழிக’ என்றவர்கள், இந்தியை ‘ஒழித்தே விட்டார்களே’ என்று ஊரார் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், ஆனால், சுப்பிரமணியம் ஒரே ஒருவர் மட்டும்தான், ‘இது, சிறுபிள்ளைத்தனம்’ என்று சொல்கிறார்.

எதுக்கு சிறுபிள்ளைத் தனம்?
இப்படிப்பட்ட காரியம், ‘சிறுபிள்ளைத்தனம்’ என்றால் ‘இந்தக் காரியத்தைச் செய்யச் சிறு பிள்ளையால் தான் முடியும்’ என்று அவர் கருதினால் நான் சிறுபிள்ளையாகவே இருக்க விரும்புகிறேன்; இப்படிப்பட்ட காரியத்தைச் செய்வதிலே எந்தத் தவறும் இல்லை’ என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

1965 ல் மாணவர்கள் கிளர்ச்சி நடந்த நேரத்தில் சுப்பிரமணியமும் அழகேசனும் இராஜினாமாச் செய்ததை, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ‘பக்குவம் பெறாத செயல்’ என்று சொன்னார். ‘சிறு பிள்ளைத்தனம்’ என்பதைத்தான் அவர் அத்தனை பக்குவமாகச் சொன்னார். 1965ல் அவர் அந்தப் பெயரைப் பெற்றார் அதை நான், 1968ல் பெறுகிறேன்.

தொடர்ந்து நம்முடைய தமிழ்நாட்டில், இரண்டாண்டுகட்கு ஒருமுறை இப்படிப்பட்ட ‘சிறு பிள்ளைத்தனம்’ நடைபெற வேண்டுமென்று நான் கருதுகிறேன்.

என்னுடைய நண்பர் சுப்பிரமணியம் அறிக்கையில், ‘கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கவில்லை, சோஷலிஸ்டு ஆதரிக்கவில்லை. பிரஜா சோஷலிஸ்டுகள் ஆதரிக்கவில்லை, சுதந்தராவும், முஸ்லிம் லீக்கும்தான் ஆதரிக்கின்றன’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ்காரர்கள் இந்திரா காந்திக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அவர் என“னைப் பார்த்து, ‘என்ன அண்ணாதுரை, இப்படி அவசரப்பட்டுத் தீர்மானம் போட்டு வீட்டீர்களே’ என்று கேட்டால், நான் தெளிவாக அவருக்குச் சொல்வேன்- ‘நாங்கள் எது தேவை என்று கருதினோமோ-தமிழகத்து மக்கள் எதை விரும்பினார்களோ-அதைச் செய்தேன்’ என்று சொல்வேன். ஆனால் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து, ‘இந்த அக்கிரமச் சட்டத்தைக் கொண்டு வந்த நேரத்தில் ஏன் எதிர்த்து ஓட்டளிக்கவில்லை’ என்று கேட்டால் அவர்கள் என்ன பதில் அளிப்பார்கள்? அதற்காகத்தான் சுப்பிரமணியம் இப்படியெல்லாம் கூறியிருக்கிறார்.

‘சிறு பிள்ளைத்தனம்’ என்று கூறும் அவருடைய கட்சியினர், அதனை எதிர்த்தாவது ஓட்டுப் போட்டார்களா? இல்லையே! ‘இந்தி வேண்டாம் என்று நாங்கள் சொல்லுகிறோம். உங்கள் பதில் என்ன? என்று கேட்டோம்-சொன்னார்களா?

அவர்கள் ஒன்று கேட்கக்கூடும்- ‘நீ இன்னும் எத்தனை நாளைக்கு அமைச்சராக இருக்கப் போகிறாய்’ என“று, நான் அவர்களுக்குச் சொல்கிற பதில் இதுதான்- ‘நாங்கள் எத்தனை நாளைக்கு அமைச்சராக இருக்கவேண்டுமோ அத்தனை நாள் இருந்தாகி விட்டது’ என்று!

‘உத்தியோகம் வேண்டுமானால், இந்தி படி’ என்று சொல்லுகிறார்கள்.

‘இந்தி அல்லது ஆங்கிலம் இரண்டில் ஒன்று படித்தால் போதும்’ என்று சட்டம் போட்டுவிட்டு, ‘இந்தி படிக்காவிட்டால் வேலை கிடைக்காது’ என்று சொன்னால் யார் நம்புவார்கள்? இதைக் காமராசர் ஒருவர்தான் தெளிவாக உணர்ந்து பெங்களூரில், இந்தி, ஆங்கிலம் இரண்டில் ஒன்று படித்தால் வேலைக்குப் போகலாம் என்று சொன்னால், எவன் இந்தியைப் படிப்பான்?’ என்று கேட்டார்.

அவர், பல்கலைக் கழகத்திற்குச் செல்லாதவர், அதனால், சுப்பிரமணியத்துக்குத் தெரிந்தது காமராசருக்குத் தெரியாது! காமராசர், மக்களோடு பழகியவர்-மக்கள் இதயம் அவருக்குத் தெரியும், அதனால்தான், சுப்பிரமணியத்துக்குத் தெரியாததைக் காமராசர் சொன்னார். ‘இந்தி படிக்காவிட்டால் ஆங்கிலம் படிக்கலாம் என்று கூறினால், யார் இந்தி படிப்பார்கள்’ என்று அவர் கேட்டார். அதற்குப் பிறகுதான் நான்கூட உணர்ந்தேன்.

தேவை இல்லாமல் இந்தி எதற்கு? மாணவர்களை இந்தித் தேர்வு எழுதச் சொன்னால், அவர்கள், ஆசிரியரைப் பார்த்து ‘ஒன்றும் தெரியாது’ என்று சொல்வார்கள். ஆசிரியர், ‘பரீட்சையில் சும்மா உட்கார்ந்து எழுந்து விடுங்கள்-போதும்’ என்று சொல்வார், அவர்கள் என்ன தோன்றுகிறதோ அதை எழுதி வைத்துவிட்டு வருவார்கள்.

இந்தக் கேலிக்கூத்தில், இந்தியை வைத்து இருக்கிறார்கள்! ‘ஓராண்டில் 40 ஆயிரம் பேர் 80 ஆயிரம் பேர் எழுதினார்கள், எட்டு இலட்சம் பேர் இதுவரை தமிழ்நாட்டில் இந்தித் தேர்வு எழுதினார்கள்’ என்ற கணக்குக் காட்டத்தான் இந்தியை வைத்துக்கொண்டு இருந்தார்கள்.

இதைச் சட்டமன்றத்தில் மூக்கையாத் தேவர் அழகாகச் சொன்னார்- ‘நீங்கள் காட்டிய பொய்க் கணக்கை அண்ணாதுரை கிழித்தெறிகிறார், அதற்குத்தான் இந்தத் தீர்மானம்’ என்று!

என்னையேகூட லால்பகதூர் சாஸ்திரி இதுபற்றிக் கேட்டிருக்கிறார். ‘தமிழ்நாட்டில் இத்தனை ஆயிரம் பேர் இந்தி படிக்கிறார்கள்’ என்று அவர் பெருமையாகக் கூறினார். ‘இந்தித் தேர்வு எழுதுவதாக ஒப்புக்குத் தகவல் தருகிறார்கள்’ என்று அவரிடத்தில் சொன்னேன். அதை அவர் நம்பவில்லை.

இன்று நாங்கள், ‘இந்தி வேண்டாம்’ என்று முடிவு எடுத்த பிறகு, இதுவரை அவர்களுக்குத் வந்த கணக்கு, பொய்க்கணக்கு என்று உணரப் போகிறார்கள்.

என்னாலானதைச் செய்தாகிவிட்டது. இனி மத்திய சர்க்கார் தன்னாலானதைச் செய்யட்டும். நான் குறுக்கே நிற்கப் போவதில்லை. தியாகத்தைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
‘இந்தியை என்.சி.சி.யில் இருந்து எடுத்துவிட்டால், தமிழ்நாட்டுக்காரர்கள் பட்டாளத்தில் சேர முடியாதே’ என்று சி.சுப்பிரமணியம் கூறியிருக்கிறார்.

“தமிழ்நாட்டிலிருந்து இராணுவத்தில் சேருவோர் எண்ணிக்கை எவ்வளவு என்பதும், அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதும்-இராணுவ இரகசியங்கள் என்றாலும்-நாடறிந்த ஒன்று.
ஆனால், என்.சி.சி. போன்ற அமைப்பில் இந்திச் சொற்களை நீக்க மத்திய அரசு முன்ரவவில்லையென்றால், அந்தப் பெயர் இல்லாமலேயே அதே போன்ற அணிவகுப்பு அமைப்பை ஏற்படுத்தத் தமிழக அரசு தயார் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். ‘அதுவும் தவறு’ என்றால், அதைப்பற்றிக் கவலைப்படமாட்டேன்.

எங்களுக்கு, ‘நியாயம்’ என்று தோன்றியதைச் செய்வோம் அதை நீங்கள் தவறாக எடுத்துக்கொண்டால் எடுத்துக் கொள்ளுங்கள்.

உடலில் உயிர் உள்ள வரையில்…
“ஏக இந்தியா” என்ற தத்துவம் பேசி, இந்தியைத் திணித்து ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள்! ‘ஒருமைப்பாடு குலைய வேண்டும்’ என்ற எண்ணம் எனக்கு இல்லை. எப்படியாவது இந்தி ஆதிக்கத்தைப் புகுத்தவேண்டும் என்று எண்ணுவதைத் தடுத்து நிறுத்தும் வகையில்தான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகம், இந்தியையும் இந்தி ஆதிக்கத்தையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது, இந்தப் பிரச்சினையில் நாங்கள், திட்டவட்டமாக ஒன்றும் சொல்லவில்லையென்று கூறுகிறார்கள். 1937 ஆம் ஆண்டிலிருந்தே நாங்கள் இதில் திட்டவட்டமாகவே இருக்கிறோம். உடலில் உயிர் உள்ளவரையிலும் இந்தி ஏகாதிபத்தியத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். காங்கிரஸ்காரர்கள் இந்தியைத் திணிப்பதிலேயே காலத்தைச் செவிட்டிருக்கிறார்கள்-நாங்கள், எதிர்ப்பதிலேயே காலத்தைச் செலவிட்டிருக்கிறோம்.

காங்கிரஸாரே என்னைக் கவிழ்ப்பதானால், தாராளமாகக் கவிழ்க்கலாம். ஆனால் நான் மூடிவிட்ட இந்தி வகுப்புகளைத் திறந்து நடத்தும் துணிவாளர் இத்தமிழ் நாட்டில் யாருமில்லை என்பதை உறுதியாகச் சொல்லுவேன்.

ஏனெனில் தமிழ் மக்கள் இப்போது அந்த நிலையில் இருக்கிறார்கள். செய்யவேண்டிய காரியங்களைச் செய்து முடிக்கத் தேவையான இடமாகவே பதவியைக் கருதுகிறோம். நிரந்தரமந்திரி என்ற மனப்பான்மையில் நாங்கள் இல்லை. பக்தவத்சலனாரின் நிலையில் நாங்கள் இல்லை.

சட்டமன்றச் செயல்முறைக் குழுக் கூட்டத்தில் கருத்திருமன் என்னைக் கேட்டார். என்ன தீர்மானம் கொண்டுவரப் போகிறீர்கள் என்று! ‘நான் ராஜினாமா செய்யப்போவதாகத் தீர்மானம் கொண்டு வரப்போகிறேன்’ என்றேன்.

“பீ சீரியஸ்! சிரித்துக்கொண்டே சொல்லாதீர்கள்” என்றார். பதவியிலிருந்து விலகும் நேரம் வரும்போதும் இதே சிரிப்போடுதான் சொல்லுவேன். அழுதுகொண்டு அதைச் சொல்லமாட்டேன்.
நான் மந்திரியாகி என்ன புதிய அந்தஸ்தைப் பெற்றேன் என்ன புதிய லாபத்தைப் பெற்றேன். மந்திரியான பிறகு மக்களை விட்டு விலகியா விட்டேன்-கூச்சப்படுவதற்கு? கூச்சம் இருக்க வேண்டியவர்களுக்கெல்லாம் அது இல்லாத போது நான் ஏன் கூச்சப்படவேண்டும்?

தமிழ் மக்களுக்கு வயிறார உணவு அளிக்கவேண்டும்.

வேலையில்லாத திண்டாட்டத்தை நீக்கவேண்டும்.

எங்கு நோக்கினும் தொழிற்சாலைகள் என்ற நிலை!

இதைச் செய்கிறவரை விடுங்கள், இல்லையென்றால் உங்களோடு வந்து ‘கனம் சி.சுப்பிரமணியம், கனம் எம்.பக்தவத்சலம்’ என்று சொல்லச் சொல்கிறீர்கள்-சொல்லுங்கள்.

நான் வானில் பறந்து திரிய வேண்டிய வானம்பாடி இன்று கூண்டுக்குள் அடைபட்ட கூண்டுக்கிளியாக இருக்கிறேன். கூண்டுக்குள்ளிருந்து விடுபட கிளியே கவலைப்படாத போது அதைவிட அறிவுள்ள உயிரான நானா கவலைப்படப் போகிறேன்?

நாளை முதலே புதியதொரு கூக்குரலைக் கிளப்புவார்கள். இந்தி மொழி ஆசிரியர்களுக்கெல்லாம் வேலைபோகும்படிச் செய்துவிட்டார்கள் என்பார்கள். ஒருவருக்கும் வேலை போகாது. மாற்று வேலை தரப்படும். பள்ளிகளில் உள்ள நூல் நிலையங்களைக் கண்காணிப்பவர்களாக எழுத்தாளர்களாக அல்லது வேறு பாடங்கள் தெரிந்திருந்தால் அவற்றுக்கான ஆசிரியர்களாக எந்தப் பாடமும் தெரியவில்லையென்றால் திருக்குறள் தெரிந்திருந்தால் அதையாகிலும் சொல்லிக் கொடுக்கலாம். எல்லாருக்கும் வேலை உண்டு. ஆனால் இந்த (இந்தி) வேலை மட்டும் இல்லை. தமிழர்கள் விரும்பும் வேலை எதுவானாலும் செய்யலாம்.

இனி மும்மொழித் திட்டம் இல்லை என்று சட்டமன்றத்தில் நான் தீர்மானத்தைப் படித்தபோது என் உள்ளத்தில் பழைய நினைவுகளெல்லாம் பொங்கிக் கொந்தளித்தன.

அனாதைப் பிள்ளைகளாக நாங்கள் அலைந்த காட்சிகள் என் நினைவுக்கு வந்தன. எங்களால் மட்டுமே அந்த மகிழ்ச்சியை உணர முடியும்.

ஏனெனில் இது மலடி வயிற்று மகன்-குருடன் கையில் கிடைத்த புதையல்-இன்பக் கனவுகளெல்லாம் நனவாக மாறிய நிலை.

தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகாலமாக இந்தி ஆதிக்கத்துக் கெதிராகச் செய்யப்பட்ட தியாகமெல்லாம் வடிவமெடுத்து வெற்றியைத் தேடித் தந்த நிலை.

முன்பு இந்திதான் ஒரே ஒரு தேசியமொழி என்று பிரகடனப்படுத்தப்பட்டது. அந்தத் தேசிய மொழியைப் படிப்பவன் தான் தேசியவாதி என்று கருதப்பட்டது. மெல்ல மெல்ல அந்தக் கருத்தை எதிர்த்து ‘இந்தி மட்டுமே தேசிய மொழி அல்ல. மற்ற மொழிகளும் அத்தகைய அந்தஸ்து படைத்தது’ என்று போராடிய பிறகு மற்ற மொழிகளும் தேசிய மொழிகள் என்ற அந்தஸ்தைப் பெற்றன.

இப்படி இந்தி எதிர்ப்பு இயக்கம் வளர்ந்த காரணத்தால் தான் நேரு கூட முன்பு இந்தி மட்டுமே தேசிய மொழி என்று பேசி வந்தவர் பிறகு இந்தி ஆட்சி மொழி என்றார். அவர் மறைவதற்குச் சில காலத்திற்கு முன்பு, இந்தி பொதுமொழி என்று கூறி வாதிட்டார்.

தேசிய மொழியிலிருந்து இந்தி-ஆட்சி மொழிக்கு இறங்கி, பொதுமொழி என்ற நிலைக்கு இறக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் இந்தி எதிர்ப்பு இயக்கமும்-போராட்டமுமேயாகும்.

தேசிய ஒருமைப்பாடு என்ற பசப்பு வார்த்தைகளின் பெயரால் இந்தி மொழி இங்கு திணிக்கப்படுமானால் இந்தத் தமிழகத்து மாந்தர் அனைவரும் ஒன்று சேர்ந்து அதை முழு மூச்சுடன் எதிர்ப்பார்கள்.

சுயமரியாதை உணர்வும்-ஆற்றலறிவும் மிக்க தமிழக மக்கள் தங்களது அரிய மொழியையும் பாரம்பரியத்தையும் இழக்கச் சம்மதிக்கமாட்டார்கள், இன்னொரு மொழி திணிக்கப் படுவதையும் சகிக்க மாட்டார்கள்.

ஆங்கிலம்-உலகத்தின் பிற பகுதிகளுடன் தொடர்பு கொள்ளும் இன்றியமையாத இணைப்பு மொழியாய் விளங்குகிறது. அகில உலகத்திலும் ஏற்பட்டுள்ள விஞ்ஞான தொழில் நுட்ப அறிவை காத்துத்தரும் சாதனமாகவும் ஆங்கிலம் விளங்குகிறது.

மூன்றாவது மகிழ்ச்சி
ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் நான் மூன்று முறை மகிழ்ச்சி அடைந்தேன்.

தமிழ்நாடு என்று பெயரிடுவதை எல்லாக் கட்சியினரும் ஏற்கச் செய்து எல்லாருமாகச் சேர்ந்து ஒருசேர “தமிழ்நாடு வாழ்க” என்று முழக்கமிட்ட நேரத்தில் மகிழ்ச்சி அடைந்தேன். அது என்னுடைய 58 வயதில் நான் கேட்டிராத கீதம், அது பார்த்திராத காட்சி, என் செவியில் விழுந்திராத செந்தேன்.

இரண்டாவதாக நான் மகிழ்ச்சியடைந்தது சுயமரியாதைத் திருமணச்சட்டம் நிறைவேறிய போதாகும். எங்கே ஒழுக்கம் கெட்டுவிடும் என்ற பேச்செல்லாம் எழுமோ என்று அஞ்சிய நான் அந்தச் சட்டம் நிறைவேறியபோது மகிழ்ச்சி அடைந்தேன்.

மூன்றாவது நான் மகிழ்ச்சியடைந்தது இந்தி இனி இல்லை என்று சொன்னபோது அடைந்த மகிழ்ச்சியாகும்.

நான் சந்தோசமாக இருப்பதைப் பொறுக்க மாட்டாதவர்கள் சென்னையைக் காட்டி அங்குச் சாம்பலாகிக் கிடக்கும் குடிசையைக் காட்டி இப்போது அண்ணாதுரை என்ன சொல்கிறான் என்று கேட்கிறார்கள்.

பட்டணத்தில் பிழைப்பதற்காக வந்து வெய்யிலையும், மழையையும் கொஞ்சம் தாங்கக்கூடிய அளவுக்கு ஓலைக் குடிசைகளை போட்டு வாழ்பவர்களைப் பார்த்து மனம் பொறாமல் அந்த ஓலைக் குடிசைகளுக்கு நெருப்பு வைத்தார்களென்றால், அவர்களைவிட அயோக்கியர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

நல்ல உடம்பில் சிரங்கு இருப்பது போல-மாம்பழத்திலே வண்டு துளையிடுவது போல-பாலிலே உப்புக்கல் விழுந்ததுபோல, சமுதாயத்திலே தீய சக்திகளை உருவாக்குபவர்கள் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவைத்தால் நாட்டுக்கே ஆபத்து!

இதை நான் சொல்லக் காரணம், சென்ற வாரம் மழையைப் பார்த்து உணவு நெருக்கடி இனி இருக்காது என்று மகிழ்ச்சியோடிருந்தேன். ஆனால் என்னைத் திடுக்கிட வைத்தது சென்னைக் குடிசையில் பற்றியெறிந்த தீ!

மூன்று நான்கு வருடங்களுக்குள் சென்னையிலுள்ள குடிசைகளெல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு, தீ மூட்டினாலும் மூளாத அளவுக்குக் கல்நார்த் தகட்டு வீடுகள் கட்ட ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

அப்படிப்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையாகப் புன்செய் வரியை நீக்கத் தீர்மானித்துள்ளேன். அதே போல் 40 ஏக்கர், 20 ஏக்கர் வைத்து இலாபம் சம்பாதிக்கும் மிராசுதாரர்களுக்கும் மேலும் கொழுக்க நினைக்கும் மிட்டாதார்களுக்கும் வரி போட்டுள்ளோம். யாருக்கு வரி போட்டால் தாங்கும் யாருக்குப் போட்டால் தாங்கும்-யாருக்குப் போட்டால் தாங்காது என்று பார்த்துச் சமநீதியோடு தி.மு.கழகம் அரசாண்டு வருகிறது.

கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு இருக்கிறது. வடக்கே உள்ள கங்கை, பிரம்மபுத்திரா போன்ற வளமான ஆறுகள் இங்கே இல்லை. இங்கே இருப்பது எல்லாம் காவிரியாறு ஒன்றுதான். வேறு ஆறுகள் இல்லாவிட்டாலும் பூமிக்கடியில் வளமான நீரோட்டங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கிறார்கள்.

தி.மு.கழகம் பொறுப்பேற்ற பிறகு அதை வெளியே கொண்டுவரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

நான் மிகுந்த பேராசைக்காரன். உங்கள் வறுமையை, வாட்டத்தை எவ்வளவு விரைவில் ஓட்டமுடியும் என்று கனவு காணுகிறேன். இன்னும் செய்ய வேண்டியது நிரம்ப இருக்கிறது.

சேறும்-சகதியும் நிரம்பிய இடத்தில் பாட்டாளி மக்கள் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். பாரவண்டி இழுப்பவன் சம்பாதிப்பது, பாதி வயிற்றுக்குக் கூடப் போதவில்லை. இந்த அவலநிலை மாற்றப்படவேண்டும் என்பதில் நான் மிகுந்த அக்கறை கொண்டு இருக்கிறேன்.

எதைக்கொண்டு இதைச் செய்வது? இருளில் சிக்கிக் கொண்டு இருந்தால் வெளிச்சம் வேண்டும் என்று தோன்றும். முதலில் தீப்பெட்டியைத் தேடுவோம். மாடத்திலே கை வைத்தால் வண்டு கடிக்கிறது. தீப்பெட்டி இல்லை. எரவாணத்திலே கை வைத்துப் பார்த்தால் பழைய தீப்பெட்டி கிடைக்கிறது. எடுத்து ஒரு குச்சியைக் கொளுத்தி விளக்கைப் பார்ப்பதற்குள் குச்சி அணைந்து விடுகிறது. இன்னொரு குச்சியைக் கொளுத்தி விளக்கருகே போனதும் அதுவும் அணைந்து விடுகிறது. மூன்றாவது குச்சியைக் கொளுத்திக் கையை அண்டைக் கட்டி விளக்கைக் கொளுத்தினால் திரி எரியவில்லை. விளக்கை எடுத்து ஆட்டிப் பார்த்தால் அதில் எண்ணெய் இல்லை. இருக்கிற நிலைமையை மக்களிடத்தில் சொல்லவேண்டும். அதுதான் இந்த சர்க்கார் நோக்கம். விளக்கிலே எண்ணெய் இல்லாததால் மக்கள் இருளிலேயே இருக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை.

எண்ணெய்யைத் தேடலாம். கடைக்குப் போய் வாங்கலாம். திரியைச் சரிப்படுத்தலாம் என்றால் எதிரில் இருக்கிற காங்கிரஸ்காரர்கள் இப்போதே விளக்கை ஏற்று என்கிறார்கள்.

எண்ணெய் வாங்க டில்லிக்குப் போனால் ‘கொடுக்காதே’ என்று டில்லிக்கும்- ‘கேட்காதே’ என்று என்னிடத்திலும் ‘விளக்கில்லையே’ என்று மக்களிடத்திலும் மூன்று விதமாகப் பேசுகிறார்கள்.

சர்க்கார் ந‘திநிலைமை சரியில்லை என்றால் குற்றத்துக்கு யார் பொறுப்பு? யாருடைய ஆட்சியால் பற்றாக்குறை வந்தது? யாருடைய ஆட்சியில் பஞ்சம் வந்தது? இதை யோசித்தால் அடக்கமாக அரசியலை நடத்துவார்கள். இருந்ததை இழந்து விட்டதால் இருப்புக்கொள்ளவில்லை-எரிச்சல் எரிச்சலாக வருகிறது.

மக்கள் கோட்டையை-கொலு மண்டபத்தை-சுகபோகத்தை ஆட்சியைப் பறித்துக்கொண்டார்கள். இதனால் தாக்குகிறார்கள். நாம் செய்த காரியங்களைப் பார்த்து ‘உங்களைப் பாராட்டுகிறோம்’ என்று சொல்ல அவர்களுக்கு மனம் வரவில்லை.

போதுமான காலம் கொடுக்காமல் ‘இதைச் செய்தாயா-அதைச் செய்தாயா’ என்று கேட்கிறார்கள். காங்கிரஸ், பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நடந்துகொள்ளவில்லை என்று சொல்ல நான் வருத்தப்படுகிறேன்.

தி.மு.கழகத்திற்குச் சரிவர ஆட்சி செய்யத் தெரியவில்லை என்று காமராசர் பேசி இருக்கிறார்.

ஏதோ தேர்தலின்போது தி.மு.கழகம் நல்லபடியாக ஆளும் என்று நினைத்து பொது மேடையிலும் பேசி-மாலை மரியாதையிட்டு எங்களுக்காகத் தேர்தலில் ஓடியாடி வேலை செய்து, ஓட்டுகள் சேகரித்துத் தந்தவர் போலவும்-இப்போது தி.மு.க. ஆட்சி அவருக்கு ஏமாற்றம் அளித்துவிட்டது போலவும் பேசி வருகிறார்.

என்றைய தினம் அவர் நம்மை ஒப்புக்கொண்டார்?

ஒப்புக்கொள்ளாதது மட்டுமல்ல, ‘இவர்களால் எப்படி ஆளமுடியும்?’ என்று கேட்டார் காமராசர்.

இன்னும் ஒருபடி மேலே சென்று ‘ஆளப்போகிற மூஞ்சியைப் பார்-மூஞ்சியை!’ என்று கேட்டவர்தான் காமராசர். அவ்வளவு நல்லவர், அவ்வளவு நண்பர்!

ஆனால் எங்கள் ஆட்சியைப் பற்றித் தீர்ப்பு வழங்கே வேண்டியது-கணக்குப் பார்க்க வேண்டியது நல்ல வார்த்தை கூறவேண்டியது-வாக்காளர்கள்.

காமராசருக்கு எங்கள் ஆட்சி பற்றிக் கூற உரிமையில்லை, திறமையில்லை என்று கூறவில்லை!
எங்களைப் பற்றி அக்கறையற்றவர் அவர்! ஆட்சிக்கே வரமுடியாது, வரவிட மாட்டோம், வந்தாலும் ஆளவிடமாட்டோம் என்று கூறியவர்தான் அவர்.

தி.மு.கழகம் பற்றி 15 வருடமாகக் காமராசர் போட்ட எந்தக் கணக்கும்-சோதிடமும் பலிக்கவில்லை. எல்லா வலிவையும் சேர்த்து எங்களை எதிர்த்தார்கள், அவர்கள் எதிர்க்க எதிர்க்க நாங்கள் வளர்ந்தோமே அல்லாமல் வீழவில்லை.

அவர்கள் தூற்றத் தூற்ற மக்கள் எங்களைப் போற்றினார்கள். அவர்கள் பழியை மூட்ட மூட்ட மக்கள் எங்களைத் தங்கள் உறவினர்களாகக் கருதி ஆளும் பொறுப்பையே தந்தார்கள்.

ஆகவே இப்போது புதிதாகக் கிளப்பப்படும் பழியோ-தூற்றுதலோ எங்களை ஒன்றும் செய்து விடாது.

‘காமராசர் பேசியிருக்கிறார் தி.மு.க.ஆட்சி படி அரிசி போட்டாலும் மற்ற பொருள்களின் விலை குறையவில்லையே” என்று.

படி அரிசி போட்டாலும்… என்கிறாரே அந்த அரிசியை ஏன் அவர்கள் போடவில்லை?

1967 ஆம் ஆண்டுக்கு முன்பு அரிசிக்கு அலைந்ததை மக்கள் மறந்து விடுவார்களா? ஆடவர் மறந்தாலும்-பெண்கள் மறந்து விடுவார்களா?

அரிசி பற்றிய அவல நிலையை நீக்கிய ஆட்சியை மறப்பார்களா மக்கள்?

போன வருடம் அரிசி ஸ்டாக் இல்லை என்ற போர்டு எங்கும் இருந்ததே, அது மறைந்தது எப்படி?

காங்கிரஸ் கட்சி ஆளுகிற மாநிலங்கள் எல்லாம் இப்போது கையேந்தி நம்மை அரிசி கேட்கிறதே. இது ஆளத் திறமையில்லை என்பதற்கு அடையாளமா?

சில நாட்களாகக் காமராசர் என்ன பேசியிருக்கிறார் என்று மிகுந்த அக்கறையோடு பத்திரிகைகளைப் படித்தேன். பெரிய தலைவராயிற்றே-பொறுப்பு உணர்ச்சியோடு பேசியிருப்பார் என்று நினைத்தேன். வழக்கம்போல்-எந்த இழிமொழிகளைக் கூறினாரோ அவற்றைத் திருப்பித் திருப்பிப் பேசியிருக்கிறார்.

அன்று அவர்களுக்கிருந்த பலத்தையெல்லாம் திரட்டி மிரட்டிப் பார்த்தார்கள். இருந்தும் மக்கள் தீர்ப்பு எங்கள் பக்கம் வந்துள்ளது.

அன்று மக்கள் செய்தது நியாயமான முடிவா? அரசியல் பொறுப்புணர்ச்சியோடு செய்த முடிவா? அல்லது பொறுப்புணர்ச்சியில்லாமல் (பக்தவச்சலம் சொல்வது போல்) போதையில் செய்ததாகச் சொல்கிறார்களே! அப்படியா செய்தார்கள்?

நாங்கள் நினைக்கிறோம் நம் மக்கள் விவரம் தெரிந்தவர்கள் என்று. அதனால் பக்தவச்சலமோ மக்கள் அன்று போதையில் இருந்தார்கள். அதாவது குடிகாரர்களாக இருந்தார்கள் என்று சிறு துளி அச்சமில்லாமல் பேசியிருக்கிறார்.

அரிசி விலையைக் குறைத்தால் போதுமா? மற்றப் பொருள்களின் விலை குறையவில்லையே என்கிறார்கள்.

சீரகத்தின் விலை ஏறி விட்டதாகப் பட்டியல் போடுகிறார்கள். சீரகம் எதற்கு? ஜீரணிக்க முடியாத அளவுக்குச் சாப்பிட்டுவிட்டால் அப்போது பயன்படுவது சீரகம்! எந்த வீட்டுப் பெண்மணியைக் கேட்டாலும் சொல்லுவார். அந்த அளவுக்கு இந்தச் சமுதாயத்தின் நிலை ஆகட்டும், அப்போது, படி சீரகம், பத்துக் காசுக்கு விற்கச் செய்கிறேன்.

திருமணத்துக்காகக் கடன் வாங்குகிறவன் கூட முதலில் அரிசிக்காகப் பணம் ஒதுக்கி வைக்கிறான். அதற்குப் பிறகு தான் பலசரக்குக்கு, என்கிறான்.

ஏழாம் தேதி திருமணம்-அண்டா நிறையச் சந்தனம் என்று வருகின்றவர்கள் எல்லாம் மார்பில் சந்தனத்தைப் பூசிக்கொண்டு வழியோடு போங்கள்-வழியில் எந்த சத்திரமோ சாவடியோ இருந்தால் சாப்பாடு போடுவார்கள் என்றால், ‘அதற்குத் திருமணம் எதற்கு?’ என்று கேட்க மாட்டார்களா?

திராட்சை, முந்திரிப்பருப்பு என்று இவற்றின் விலையை குறைத்த பிறகா மற்றவற்றுக்குப் போவது? அரிசி, எண்ணெய், மிளகாய், பருப்பு, முந்திரி, சீரகம், பெருங்காயம் என்றல்லவா குறைத்துக் கொண்டு வரவேண்டும்? குடும்பம் நடத்தும் யாரும் இதைத்தான் சொல்லுவார்கள்.
நாங்கள் குடும்பத்தோடு இருக்கிறோம். ஏழைகளின் கஷ்டம் புரிகிறது. ஆகவே முதலில் அரிசியின் விலை குறையப் பாடுபட்டோம்.

‘இங்கே என்ன சாதிக்கிறீர்கள் என்று கேட்கிற அவர்களைப் பார்த்து, உங்கள் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறதே, ஆந்திரத்தில், மைசூரில், மகாராஷ்டிரத்தில் என்ன செய்தார்கள்?” என்று கேட்க வேண்டும்.

“அங்கே ரூபாய்க்கு 2 படி போட்டிருக்கிறோம்! உன்னால் முடிந்ததா?” என்று கேட்டால் நான் வெட்கத்தால் தலை கவிழ்வேன்.

போன வருடம் இதே நாளில் அரிசிக்காக மக்கள் அல்லற்பட்டார்கள் என்பதைக் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள்.

அந்த நிலையில் இந்தத் தமிழ்நாட்டில் மார்ச்சு மாதம் ஆட்சிக்கு வந்த தி.மு.கழகம் அடுத்த மாதத்திலேயே, அரிசி இல்லை’ என்ற நிலையை மாற்றியது. ரூபாய்க்கு படி அரிசி போட்டோமென்றதோடு எங்கு பார்த்தாலும் அரிசி கிடைக்கும்படிச் செய்தோம்.

‘எனக்கு நிர்வாகத் திறமையில்லை’ என்கிறார் காமராசர், எனக்கு நிர்வாகத்திறமை உண்டா, இல்லையா என்பதற்குக் காலம் பதில் சொல்லட்டும்.

சில காங்கிரஸ்காரர்கள் ‘நாங்கள் நினைத்தால் ஆட்சியைக் கவிழ்த்து விடுவோம்’ என்று கூறுகிறார்கள். உள்ளபடியே கவிழ்ப்பதில் கஷ்டமில்லை! நடப்பது தான் கஷ்டம். கேரளத்தில் தோற்றுப்போன பாடத்தை உணராமல் பேசுகிறார்கள்! கேரளத்தில் கவிழ்த்துப் பார்த்தார்களே என்ன நடந்தது? நம்பூதிரிபாடு ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சிகள்-மறியல்-தடியடிப் பிரயோகம் துப்பாக்கிக் குண்டு ஆகியவை நடைபெற வழி செய்யப்பட்டது.

ஆனால் பின்னர் நடைபெற்ற இடைத் தேர்தலில் என்ன நடந்தது? காங்கிரஸ்காரர்கள் வெற்றிபெற முடிந்ததா? அதற்குப் பின்னர் கவர்னர் ஆட்சியைக் கொண்டு வந்தார்கள். கவர்னர் ஆட்சியால் எதிர்க்கட்சிகள் சிதறிப்போகும் என்று கருதினார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை.

இடைத்தேர்தலில் கவிழ்க்கத்தான் முடிந்ததே தவிர-மீண்டும் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற இருந்ததா? இல்லையே! கவிழ்க்கப்பட்டவர்கள் நிமிர்ந்துவிட்டார்கள்-நிமிர்ந்து நின்றவர்கள் கவிழ்ந்து போனார்கள்.

அப்படி என்னிடம் செய்ய வந்தால், நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். கவிழ்த்து விட்டால் மறுபடியும் எழாது என்று நினைக்காதீர்கள்!

கேரளத்தில் செய்து தோற்றுப் போனவர்களே தவிர வெற்றி பெற்றவர்களல்ல காங்கிரசார்!

முஸ்லீம்லீக்கிற்கும் எங்களுக்குமுள்ள உறவு ஏதோ பதவிக்கா ஏற்பட்டதல்ல! நாங்கள் அமைச்சர்கள் என்பதற்காக எங்களிடம் அவர்கள் உறவு கொண்டாடவில்லை. எங்களுக்குள் ஏற்பட்ட உறவு, கொள்கை அடிப்படையில் ஏற்பட்ட உறவாகும்.

அந்த உறவு நெருங்கிய உறவு! நெடுங்காலமாக இருந்து வரும் உறவு; நெடுங்காலத்திற்குப் பிறகும் நிலைத்திருக்கும் உறவாகும்! இங்கொரு மருத்துவமனை கட்டுதல்-அங்கொரு பாலம் கட்டுதல் இவருக்கு ஒரு வேலை! அவருக்கு ஒரு வேலை மாற்றம்! இதுதான் ஆட்சி என்றால் எந்தச் சர்க்காரும் செய்துவிடும்.

அவர்கள் ஒவ்வொருவரும் அரும்பணியாற்றும் சிறப்பு பெற்றவர்கள்.

அதிலும் குறிப்பாக காயிதே மில்லத் அவர்கள் இஸ்லாமிய சமுதாயம் நெடுங்காலத்திற்குப் பிறகு பெற்ற பெரும் பரிசு ஆவார்.

தி.மு.கழகத்திற்கு உற்ற துணைவனாக ஜனநாயகத்திற்குக் கிடைத்த அறப்போர் வாளாக அவர் இருந்து வந்திருக்கிறார், தொடர்ந்து இருந்து வருவார் என்ற நம்பிக்கையில் நாங்கள் நல்லாட்சி நடத்தத் துணிந்திருக்கிறோம்.

ஆனால் இந்தச் சர்க்கார்- ‘நீதி நிலைக்க வேண்டும்-அனைவருக்கும் சம வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். ஒரு வகுப்பை அழுத்தி இன்னொரு வகுப்பு முன்னேறும் என்ற காட்டுமுறை அழிக்கப்பட வேண்டும்’ என்று நினைக்கிறது. எந்த அளவுக்கு இதில் வெற்றி பெறுகிறோமோ அந்த அளவுதான் அரசின் வெற்றி என்று கருதுகிறேன்.

4 ஆயிரம் மருத்துவமனைகளைக் கட்டினேன். முந்நூறு பாலங்களைக் கட்டினேன். நூறு ரேஷன் கடைகளைத் திறந்தேன் என்று கூறிக் கொள்வதில் அதிகப் பெருமையடையவில்லை.
என்றைய தினம் சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ளவன் சமநிலைக்குக் கொண்டு வரப்படுகிறானோ-அன்று தான் சமூக நீதி ஏற்படும். அந்தச் சமூகநீதி இந்த அரசாங்கத்தில் நாட்டப்படுவதைத்தான் நான் விரும்புகிறேன்.

ஒருவரை ஒருவர் கெடுக்காமல் வாழமுடியும்-ஒருவரை ஒருவர் பகைக்காமல் வளர முடியும் என்ற முறை, நிலைநாட்டப் படுவதைத்தான் விரும்புகிறேன்.

அந்த நல்லாட்சி ஏற்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

(வெளியீடு:அறிவுப்பண்ணை, 11.1.1969)

மூலக்கட்டுரை
http://www.annavinpadaippugal.info/sorpozhivugal/puthiya_varalaru_1.htm

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

No responses yet

Write a response