புதிய ஏகாதிபத்யம்!

SG
7 min readNov 26, 2021

கட்டுரை, திராவிட நாடு, 14–11–1948

நெற்றியிலே திருநீறு! கழுத்திலே உருத்திராட்ச மாலை! கட்கத்தில் எதையோ பட்டுத் துணியால் போர்த்து, வைத்திருக்கிறார்! சிவக்கோலத்துடன் விளங்கும் அவரை மன்னர், பக்தியுடனும் வரவேற்கிறார் கட்கத்தில், ஏதோ சிவாகம ஏடு இருக்கிறது, அடியார், நமக்கு அதனைக் காட்டி, நாதனின் நற்பாதத்துக்கு வழி காட்டப் போகிறார். நமக்கு இஃதோர் நன்னாள்! நல்லாசன், நம்மைத் தேடி வந்துள்ளார் என்று எண்ணிய மன்னன், வருக! வருக! சிவக்கோலப் பெரியீரே வருக! என்னை வாழ்விக்க வந்துள்ள பெம்மானே வருக! என்று கூறி வரவேற்கிறார்-வந்தவர் குறுநகை புரிகிறார்- வணங்கியவர், அது அவருடைய அருள் நெறியின் விளக்கம், என்று எண்ணுகிறார், வந்தவர், கட்கத்திலிருந்த, மூட்டையை அவிழ்க்கிறார்- கூரியவாள், மின்னுகிறது- மன்னனின் மார்பில் பாய்கிறது- அவர் சாய்கிறார்- சதிகாரன் களிக்கிறான்- வேடம் பலித்தது- வெற்றி கிடைத்தது- வீரவேந்தனைக் களத்திலே வீழ்த்துவது முடியாத காரியமாக இருந்தது- இதோ முடித்துவிட்டேன் காரியத்தை, மன்னனின் கருத்தை மயக்க ஒரு சிறு கபட நாடகமாடிக் காரியத்தைச் சாதித்துவிட்டேன் என்று களிக்கிறான்.

இரு மன்னர்கள், போரிட்டனர்- அதிலொருவர், போரில் புலி- மற்றவன் குணத்தால் நரி! புலி எனப் போரிடும் மன்னன், சிவனடியார்களைக் கண்டால் போதும், அவர்களின் சென்னியைச் சிரமீது கொள்ளவும் தயங்காக் குணமுடையவன். இது தெரிந்த முத்தநாதன் என்ற நரிக் குணத்தான், நன்றாகக் குழைத்து நீறுபூசிக் கொண்டான், உருத்திராட்சத் தாவடங்கள் அணிந்து கொண்டான், கூரிய கட்கத்தைப் பட்டுத் துண்டு கொண்டு மறைத்தெடுத்துக் கொண்டான், வீர வேந்தனைத் தனியாகக் கண்டு சில பேச அனுமதி கோரினான். வேடத்தைக் கண்ட வேந்தன் ஏமாந்தான்- மெய்ப்பொருள் உணர்த்த வந்தேன் என்றான் வேடதாரி- தனியனானேன் என்றான் சூதறியா மன்னன்- உயிரை இழந்தான்.

மெய்ப்பொருள் நாயனார் கதை, என்று கூறுவர், இதனைப் பெரிய புராணத்தில்- வேடத்தைக் கண்டு ஏமாறலாகாது என்ற அறிவுரைக்குப் பயன்படுத்துவதுமில்லை. இதனை- சிவ பக்தியின் மேன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவே, பயன்படுத்துகின்றனர். கதைகளைப் பக்தர்கள், எங்ஙனம் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கூற அல்ல, இதனை நாம் இங்கு தீட்டுவது, சைவத்தின் மீது அளவு கடந்த பற்றுக் கொண்டவரை ‘சிவ வேடம்’ பூண்டு ஏய்த்து, மாய்த்த, அந்தப் பெரிய புராணத்தின் மறுபதிப்பென, இப்போது, நமது நாட்களிலே, அரசியல் துறையிலே நடைபெறும் உரிமைப் படுகொலைகளைப் பற்றிக் குறிப்பிடவே இதனைக் கூறினோம்.

நெற்றியிலே நீறு, எனவே நேர்மையிலே நாட்டமிருக்க வேண்டும்- கழுத்திலே சிவச் சின்னம், ஆகவே அதை அணிந்திருப்பவரின் உள்ளம் தூய்மையானதாக இருந்தே தீர வேண்டும்- கட்கத்திலே ஏதோ இருக்கிறது. சிவக் கோலத்தவரிடம், சிவாகம ஏடுதான் இருக்கும்- என்ற முடிவுக்கு பக்தியின் காரணமாக வந்து உயிரை இழந்த மன்னன் போல, வேடத்தைக் கண்டு ஏமாந்து உரிமையை இழந்துவிடும், பரிதாபத்துக்குரிய மக்கள் அரசியல் துறையிலே, அனேகர் உள்ளனர்.

மெய்ப்பொருள் உரைக்க வந்துள்ளார் என்று எண்ணி வேந்தன் உயிரிழந்தது போலவே அரசியலில், வேடத்தைக் கண்டு மயங்கி, அந்த வேடதாரிகள், நற்பொருள் தர வந்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கைக் கொண்டு பிறகு தமது உரிமையை நாசம் செய்து கொள்ளும் மக்கள், இதுபோது ஏராளமாக உள்ளனர்.

யாருக்கும், ஏதேனும் ஓர் பொருளின் மீதோ, பற்று மிகுதியாக இருப்பின், அவர்களை, எத்தர்கள் ஏய்க்க எண்ணும்போது, எதன் மீது அவர்களுக்குப் பிரியம் அதிகமோ, அதே கோலம் பூண்டு வந்தே, ஏய்ப்பர்- ஏய்த்திருக் கின்றனர்- ஏய்த்து வருகின்றனர- ஏமாளிகள் உள்ள வரையில் இத்தகைய எத்தர்கள் இருக்கத் தான் செய்வர். பற்று இருக்கத்தான் செய்வர். பற்று இருக்கத்தான் வேண்டும். ஏதேனும் ஓர் கொள்கையினிடம் மரக்கட்டைகளாக இருத்த லல்ல மாந்தர்க்கழகு- ஆயினும், பற்று நமக்குப் பகுத்தறிவையும் பாழாக்கும் மூடுபனியாகும் படியாக மாறிவிட அனுமதிக்கலாகாது.

மெய்ப்பொருள் நாயனார் காதையிலே, மதப்பற்று அடிப்படையாக அமைந்திருக்கிறது நாட்டுப்பற்று. மதப்பற்றுக்கு அடுத்த இடம் பெறுகிறது- மக்களில் பலப்பலர். இந்தத் துறையிலே, மெய்ப்பொருள் நாயனார்களாகியுள் ளனர்- உரிமையை இழந்துள்ளனர்- இழந்து வருகின்றனர்.

நமது மக்களுக்குள்ள நாட்டுப் பற்று, எவ்வளவு ஆழ்ந்தது என்பதைக் கண்டு கொண்ட சில பலர், தமது சிறுமைச் செயலை மறைக்க, சதிச் செயலை மறைக்க, சுயநலத்தை மறைக்க, நாட்டுப் பற்றுடையோர் வேடமிட்டுக் கொள்கின் றனர்- வெள்ளை உள்ளத்தினரை வீழ்த்த இதில் வெற்றியும் பெற்று வருகின்றனர். சிவ வேடம் கண்டு, சித்தத்தை முதலிலும் உயிரைப் பிறகும் பறிகொடுத்த மன்னன் போல, மக்கள் நாட்டுப் பற்று வேடமிட்டு வரும் நயவஞ்சகர்களை, நல்லவர்களென்று நம்பி, தமது உயிரினும் மேலான உரிமையை இழந்து விடுகின்றனர் வேடதாரிகள் வெற்றிப் புன்னகை புரிகின்றனர்.

நாட்டை மீட்டிடப் போரிட்டவர்களை நாம், நமது மாவீரர்களாக தலைவர்களாக, வழி காட்டிகளாகக் கொள்ளவேண்டும். அவர்களைப் போற்ற வேண்டும். அவர் காட்டும் வழி சென்று, அவரிடம் ஆணையை நிறைவேற்றி, அவருக்குப் பணிபுரிந்து, இன்புற வேண்டும் என்று மக்கள், எண்ணுகின்றனர் - அது அவர்களின் பண்புக்கு நல்லதோர் எடுத்துக் காட்டு.

நாட்டுப்பற்றுக் காரணமாக இந்த நிலை கொண்ட மக்களை எத்தனை வேடமிட்டு, வீழ்த்துவது காணும்போது உண்மையிலேயே வேதனையாகத்தான் இருக்கிறது. பாமர மக்கள் எவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள்- அந்த நம்பிக்கையை, நாசகாலர் கள் எவ்வளவு தீய செயலுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைக்காணும் போது, மிக மிக அதிகமான வேதனையாகத்தான் இருக்கிறது.

அதோ, டில்லியிலே கூடி, நாட்டுக்குப் புதிய ஆட்சி முறைத் திட்டத்தை வகுக்கிறார் கள்- மெய்ப்பொருளைக் காட்டுகிறார்கள். எவ்வளவு மக்கள், அங்கு கூடிடும் முன்னணி யினரின் வேடத்தைக் கண்டு ஏமாந்து, தமது, உரிமையை இழந்து கொண்டிருக்கிறார்கள்! அங்கு நடைபெறுவதன், சூட்சுமத்தை ஓரளவுக் கேனும் தெரிந்துக்கொள்ளக்கூடிய நிலையில் உள்ளவர்களே மிகச் சிறு தொகையினர்தான்! அவ்வளவு `சமர்த்தாக'க் காரியம் நடைபெறுகிறது.

அதிகார வெறியர்கள்- ஏகாதிபத்யப் பிரி யர்கள்- முதலாளிமார்கள்- முப்பிரியாளர்கள்- என்பன போன்றார்களெல்லாம் அங்கு, ``தேசிய வேடம்’' புனைந்து கொண்டுள்ளனர்! அந்தக் கோலத்தைக் கண்டு, நாட்டுப்பற்றுக் கொண்டுள்ள நமது மக்கள், “தேசீயத் தலைவர்களை தீட்டிடும் திட்டம் தேச மகாஜனங்களுக்கு நன்மை தரும் திட்டமாக இருந்தே தீரும்’' என்று எண்ணுகின்றனர்- நம்புகின்றனர்- வேடத்தைக் கண்டு ஏமாறுகின்றனர். அவர்களோ, அங்கு, ஒரு புதிய ஏகாதிபத்தியத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்! கட்கத்திலே கூரிய வாள் மறைத்து வைக்கப் பட்டிருக்கிறதென்ற உண்மையை அறியாத ஊராள்வோன், மெய்ப்பொருள் தெரியவன்றோ ஆவல் கொண்டான்! அதுபோலவே, அங்கு பாசீசத்துக்கான பாதை அமைக்கப்படுகிறது என்பதைக் கண்டறிய முடியாத மக்கள் ஜனநாயக சாசனம் எண்ணி ஏமாறுகின்றனர்.

பல நாடுகளின் “கதம்பம்” ஒரு கண்டம், இந்தியாவை, எவரும் ஒரு துணைக் கண்டம் சிறு அளவினதான கண்டம் என்றே கூறினர்- கூறுவர். அதன் நிலப்பரப்பைக் கவனித்து மட்டுமல்ல, மக்களின் நிலை, வரலாற்று நிலை, ஆகியவற்றினையும் கவனித்து, அப்படிப்பட்ட துணைக் கண்டத்துக்கு இப்போது, தயாரிக்கப் படும் ஆட்சி முறைத் திட்டம், என்ன? ஒரு புதிய ஏகாதிபத்தியத் திட்டம் தயாரிக்கப்படுகிறது!

கூட்டாட்சி என்று பெயர் நாட்டின் பல பகுதிகள் ஒன்றோடொன்று கூட்டாகி, அந்தக் கூட்டு விவகாரத்தைக் கவனிக்க, கூட்டுப் பொறுப்பை ஏற்க ஒரு நாடு அலுவலகத்தை, மத்ய சர்க்காரை அமைத்துக் கொள்ளும், பெடரல் முறை, அங்கு, இது தீட்டப்படுவதாகக் கூறுகிறார்கள். ஆனால் திட்டத்தை அலசிப் பார்த்தால், இந்தத் துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாகாணங்களிலும் பலமற்ற, பயன் தரும் காரியமாற்றும் ஆற்றலும் வசதியுமற்ற ஆட்சி முறையும், இந்த மாகாணங்களை ஆட்டி வைக்கும் சூத்திரக் கயிறு, மத்ய சர்க்காரிடத்தில் தரப்பட்டிருப்பதும் விளங்கும்.

வெள்ளையர் மீது குறை கூறியபோது, மிக முக்கியமாக வலியுறுத்தப்பட்ட விஷயம், மாகாணங்களுக்கு, போதுமான மக்களாட்சிக்குத் தேவையான அளவுள்ள, பலமும், அதிகாரமும் தரப்படவில்லை என்பது. மாகாண சுயாட்சி வேண்டும் என்ற மூல முழக்கத்தை மக்கள் மறந்து விட்டிருக்கமாட்டார்கள் என்று நம்பு கிறோம். இப்போது, தயாரிக்கப்படும் ஆட்சித் திட்டத்தின்படி, இந்த மூல முழக்கம், அடிப்படைக் கோரிக்கை, மாகாண சுயாட்சி, வெறும் கேலிக் கூத்தாக்கப்படுகிறது- மாகாணங்களுக்குத் தரப்படும் அதிகாரத்தின் தன்மை, அளவு, நிதியின் அளவு, வகை, ஆகியவற்றைக் கவனிக்கும்போது, ஒரு பெரிய ஜில்லா போர்டு போன்ற நிலையே, மாகாணங்களுக்குத் தரப்பட்டிருப்பது விளங்கும்.

வெளிநாட்டுடன் தொடர்பு, உலகப் போக்குவரத்து, உலகில் மற்ற நாடுகளுடன் வியாபாரத் தொடர்பு போன்ற பெரிய இந்தத் துணைக் கண்டத்தின் பாதுகாப்புக்கான, காரியங் களைக் கவனித்துக்கொள்ள மட்டுமே. ஒரு பலம் பொருந்திய அமைப்பு வேண்டும். அவ்வளவு பொறுப்பான காரியத்தை எந்த ஒருதனிப்பட்ட மாகாணம் தானாகவே செய்து கொள்ள முடியாது. எனவே, இதற்கோர் மத்திதிய சர்க்கார் வேண்டும் என்றுதான் பலரும் இதுநாள் வரை வாதாடி வந்தனர். இந்தத்துணைக் கண்டத்தை, ஒரே பேரரசுக்கு உட்படுத்த வேண்டும் என்றோ, இங்கு தனிப் பண்புகளுடன் உள்ள, பல்வேறு பகுதி களையும், உருக்கி ஒரே அச்சில் வார்த்து எடுக்க வேண்டுமென்றோ எவரும் சொன்னதில்லை! இப்போதோ, இந்த இலட்சியத்துக்கு நேர்மாறான காரியம் நடைபெறுகிறது- மக்களோ, இந்தக் காரியத்தை முன்னின்று நடத்துபவர்கள். `நாட்டுப் பற்று'க் கோலம் பூண்டிருப்பதால், மயங்கிப் போயுள்ளனர் நமது உரிமை பறிபோவதை உணராமலுமிருக்கின்றனர்.

மெய்ப்பொருள் நாயனார் கதை, அரசி யலில் நடைபெறுகிறது! சிவவேடம் அன்று, `இன்று தேசியக் கோலம்!'

மொழி, கலை, எனும் உயிர்ப்பிரச்னைகள், முதற்கொண்டு வரி, அதிகாரம், எனும் பிரச்னை கள் வரையிலே, `மத்ய சர்க்கார்' ஆதிக்கம் செலுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு விட்டது!

``இது என்ன அக்ரமம்! இந்தி மொழி ஏகாதிபத்யமா? எப்படி இதனை ஏற்பது?’' என்று வெகுண்டு ஒருவர் கேட்கும்போதும் சரி, ``சகல அதிகாரங்களையும் டில்லியிலே கொண்டு போய்க் குவிக்கிறீர்களே, எங்கள் மாகாணத்திலே நாங்கள் என்ன வேலைதான் செய்வது- எதைச் செய்யத்தான் அதிகாரமிருக்கிறது’' என்று ஒருவர் கேட்டாலும், ‘பணப்பெட்டியை டில்லியில் வைத்துக்கொண்டு, எங்களைப் பஞ்சைகளாக விட்டு வைத்தால், நாங்கள் பட்டம் சூட்டிக் கொண்டு, பலன் என்ன?” என்று சிலர் பதறிக் கேட்டாலும், “பழத்தைப் பறித்துக் கொடுக்கச் சொல்லி எடுத்துக்கொண்டு, எம்மைச் சருகு கொண்டு வாழுங்கள் என்று கூறுவது போல, வருமான வரி போன்ற பெரிய புள்ளியை நீங்கள் எடுத்துக்கொண்டு, வளராத வரிகளை எமக்கு என்று கூறுகிறீர்களே, எங்கள் மாகாணத்து நலனைக் கவனிக்க முடியாதே. நாங்கள் என்ன செய்ய’' என்று எவரேனும் அழுகுரலுடன் கேட்டாலும், எல்லாவற்றுக்கும் ஒரே பதிலாக, பலமான மத்ய சர்க்கார் வேண்டும்- நாட்டுப் பற்றுடையவரின் திட்டம் இது- என்று கூறிவிட்டு, ``இதோ எம்மைப் பாரீர்! எமது கோலத்தைக் காணீர்! கதர் ஆடை! காந்திக் குல்லாய்!’' என்று பேசி, மக்களை மிரட்டி விடுகிறார்கள்- மக்களும் வேடத்தைக் கண்டு, மயங்குவதும், மிரள்வதுமாக உள்ளனர். இந்தத் துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகள்- தனிப் பண்பும், தனி வரலாற்றுச் சூழ்நிலையும் கொண்ட பகுதிகள் யாவும், சுயாட்சியை இழந்து, அதன் பலனாக முழு வாழ்வும், முழு வளர்ச்சியும் பெற முடியாமல் உருக் குலையப் போகின்றன.

“சர்தார் படேல், பம்பாயிலிருந்து விமான மூலம் டில்லிக்குப் பயணமானார்! விமான நிலையத்தில் அவரை வழி அனுப்ப கர்நாடகக் காங்கிரஸ் தலைவர்கள் வந்திருந்தனர்! திருவாங்கூர் சமஸ்தானக் காலாட் படையினர் மரியாதை செய்தனர்- விமானம் மைசூர் சமஸ் தானத்துடையது- விமானி, வங்காள நாட்டவர்!’' என்று, எழுதி, படிக்க அழகாக இருக்கிறது என்பதற்காகவும், இத்தகைய “தர்பார்” நடத்துவதற்குப் படேலுக்கு ஆசை இருக்கிறது என்பதற்குமா, ஒரு துணைக் கண்டத்தின் பல்வேறு நாடுகள், தத்தமது தனிப் பண்பை, தனி வாழ்வை, தன்னாட்சியை இழப்பது? நியாயமா? அரசியலின்படி கூட, இது அறமா? மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்!

மாகாணங்களின் நல்வாழ்வுக்குத் தேவையான, சகல காரியத்தையும் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, உட்பாதுகாப்பு, வளத்தை ஏற்படுத்துவது போன்ற சகல காரியமும் மாகாண சர்க்காரின் பொறுப்புகள் இவைகள் சரிவரச் செய்யப்பட்டால்தான், அன்னியராட்சி ஒழிந்து, நமது ஆட்சி ஏற்பட்டது, அதன் பயனாகப் புது வாழ்வுப் பெற்றோம் என்று மக்கள் பூரிப்புடன் கூற முடியும். இந்த வெற்றி கிடைக்க வேண்டு மானால், மாகாண சர்க்காருக்குப் பணம் ஏராளமாக வேண்டும்- வளரக்கூடிய வரிவகை வேண்டும்.

புதிய திட்டம், முதலில் இதற்கு வழி அமைக்கவில்லை- மாகாணங்களுக்கென ஒதுக்கி வைக்கப்படும் வரி, மாகாணங்களின் பெரிய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குப் போதுமானது அல்ல. இதைக் கூறுவது, காங்கிர சாரை நிந்திப்பதாகக் கூறப்படும் நாமல்ல- காங்கிரஸ் மந்திரி, கோபால்ரெட்டியாரே, இது பற்றி அடிக்கடி குறைப்படுகிறார்- குமுறுகிறார்.

அதிகாரங்களைப் பற்றியோ, கூற வேண்டியதில்லை- மத்திய சர்க்காரின் ‘எடுபிடி’ களாக மட்டுமே, மாகாண சர்க்கார்கள் இருக்க முடியும், எதற்கும் “டில்லி தேவதை”களின், உத்தரவு, தேவை! நாட்டுக்கு ஏதேனும் “நெருக்கடி” என்று தோன்றினால், மத்திய சர்க்கார, இந்த ‘அல்ப சொல்ப’ அதிகாரத்தையும் கூட ரத்து செய்துவிடலாம்!

“நெருக்கடி” என்பதற்கு வியாக்யானம் கூறும் பொறுப்பும் மத்திய சர்க்காருடையது.

‘இந்து’ இதழ் எழுதுகிறது. “யாரோ ஒரு சிலர் எப்படியோ மாகாண அரசியலை, தேர்தலிலே கைப்பற்றி விட்டால், அவர்களின் நிர்வாகம் நாட்டைக் கெடுக்கும் என்று மத்ய சர்க்கார் கருதினால் உடனே, மாகாண சர்க்காரை நீக்கி விட வழி ஏற்படுகிறது இதனால்”என்று எழுதுகிறது. இதற்குப் பெயர் பாசீசம் என்றால், கோபம் வரும் இந்துவுக்கு, மக்களிடம் கூறினாலோ அவர்கள் மெய்ப்பொருள் தேடு கிறார்கள். வேஷத்தைக் கண்டு ஏமாறுகிறார்கள்.

ஒரு சிலர், இந்தத் திட்டத்திலே, உள்ள குறைபாடுகளைச் சற்றுத் தைரியமாகவே கண்டித் தனர்- என்றாலும், அவர்களின் வாதங்கள் கேலி செய்யப்பட்டுவிட்டன, எச்சரிக்கைகளைத் துச்சமென்று தள்ளிவிட்டனர் முன்னணியிலுள்ளவர்கள்.

பேராசிரியர் ரங்கா மத்ய சர்க்காரிடம் அளவுக்கு மீறிய அதிகாரத்தைச் சுமத்துவது நல்ல அரசியல் திட்டமல்ல என்று எச்சரித்தார்.

திருவிதாங்கூரிலிருந்து சென்றுள்ள ஒரு உறுப்பினர், சமஸ்தானத்தின் வரிப் பணத்திலே பெரும் பகுதியை, மத்ய சர்க்கார் பெற்றுக் கொள்ளத் திட்டம் வகுத்திருக்கிறீர்களே, பெருந் தொகையை டில்லிக்குக் கொடுத்துவிட்டு எங்கள் நாட்டு நல்வாழ்வுக்கான திட்டங்களை நிறை வேற்ற என்ன செய்வது? என்று கேட்டார்.

அசாம் மாகாணத்திலிருந்து வந்த அன்பர் அழுகுரலிலேயே பேசிப் பார்த்தார்!

எதற்கும், அங்கு இடம் தருவார் இல்லை- எல்லோருக்கும் ஒரே விதமான பதில் தான் தரப்பட்டது. “எம்மைப் பாரீர்! எமது கோலத்தைக் காணீர்!” என்ற பதில்தான்.

இந்திய துணைக்கண்டத்துக்கு ஒரு அரசு என்ற திட்டம் வகுக்கப்பட்டால், இப்படித்தான் மாகாணங்களைப் பட்டினி போடும் திட்டமாக இருக்குமென்பதை அறிந்துதான் நாம், திராவிட நாடு, தனியாட்சி பெற வேண்டும் என்று கூறி வந்தோம்- கூறி வருகிறோம்.
அந்தத் திட்டம் மக்களின் கருத்துக்குப் புரியாதபடி செய்ய “தேசியக் கோலத்தைத்தான் ஒரு சிலர் மிக மிகச் சாமர்த்தியமாகப் பயன் படுத்துகின்றனர்.

ஆனால், ஒன்று கூறுவோம், உண்மையை ஒரு சிலரேனும் உணரத் தொடங்கி விட்டனர். அதனால்தான் அரசியல் நிர்ணய சபையிலே பலர், “மத்ய சர்க்கார் அளவு கடந்த அதிகாரம்- பெறுகிறது. இது ஆபத்தானது என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார். அவர்கள் வெற்றி பெறாமற் போகக் கூடும். ஆனால், அவர்களின் எச்சரிக்கை மட்டும் வீண்போகப் போவதில்லை.

அரசியல் திட்டம் அமுலுக்கு வந்தால், அவர்களின் எச்சரிக்கை மக்களுக்கு, இன்று தெரிவதை விடத் தெளிவாகப் புரியும்- அப்போது நாம் கூறிவரும் ‘இலட்சியத்தின்’ சார்பாக மக்கள் அணியணியாகத் திரள்வர் என்பது உறுதி.

இந்திய துணைக் கண்டத்தை ஒரு குடைக் கீழ் ஆள முயற்சித்தவர்களின், “கதி” பற்றி வரலாறு, நன்கு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

மகா அலெக்சாண்டர் கால முதற் கொண்டு சர்தார் படேலின் காலம் வரையில், ஒரு நாலைந்து முறை, இதுபோன்ற முயற்சி, எடுத்துக் கொள்ளப்பட்டதுண்டு- ஒவ்வொன்றும் முறிந்ததாகவே தான் சரிதம் கூறுகிறது; அன்பை அடிப்படை யாகக் கொண்ட அசோகர், அக்பர் ஆட்சி யானாலும் சரி, ஆத்திரத்தை அடிப்படையாகக் கொண்ண்ட அவுரங்கசீப்பின ஆட்சியானாலும் சரி, பண்டைய நாட்களின் சிறப்பைச் சித்திர மாக்கவே எழுந்த சாம்ராஜ்யங்களெனப்படும், ஹர்ஷர், சமுத்ரகுப்தர், கனிஷ்கர், என்போரின் ஆட்சியானாலும் சரி, குப்த பரம்பரை, மராட்டிய மரபு, மொகல் வம்சம் என்ற எந்தப் பெயருடன் கிளம்பிய ஆட்சியானாலும் சரி, அவை எதுவும், நிலைத்து நின்றதாக வரலாறு கிடையாது. காரணம் என்ன? உரிமை வேட்கை கொண்ட மக்கள், கூண்டுக்கிளிகளாகி விட மாட்டார்கள்! ஒரு துணைக் கண்டத்தை விரல் விட்டு எண்ணி விடக் கூடிய ஒரு சிலரின் எண்ணத்தின்படி, கடைசி வரை ஆட்டிப் படைப்பதென்பது, முடியாத காரியம்.

“ஐயோ! இந்தப் பாழாய்ப் போன டில்லியையா, தலைநகராகக் கொள்ள வேண்டும்! இது, பல சாம்ராஜ்யங்களின் சவக்காடு அல்லவா?” என்று கிருபளானி கதறினார் - அதே விதமாக வேறோர் தோழரும், அரசியல் நிர்ணய சபையிலே பேசியிருக்கிறார். இடமல்ல, இதிலே முக்கியம் இயல்பு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும்!

டில்லிக்கும், தூத்துக்குடிக்கும்- இமயத்துக் கும் குமரிக்கும்- கதர் நூலினால், ஒரு ‘முடி’ போட்டுக் காட்டுகிறார்கள்! சரியா? அவசியந்தானா? என்பதை புது திட்டம் பற்றிய பிரச்சனைகள் பேசப்படும் இந்த நேரத்திலேனும், காங்கிரஸ் நண்பர்கள், யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். யோசிக்கும்போது, “தேசியக் கோலத்தை”யே நம்பி, தவறான முடிவுக்கு வராமலிருக்க வேண்டும் என்பதற்காகவே, துவக்கத்தில் மெய்ப் பொருள் நாயனார் புராணத்தைக் கவனப்படுத்தினோம்.

வெளிநாட்டு வெறியர்கள் இந்தத் துணைக் கண்டத்தின் மீது மோத நினைத்தால், நாம் ஒன்று படவும்- கூட்டாகப் பணிபுரியவும்- ஒரு அமைப்பு இருக்கட்டும்- அந்தப் பலத்தைத் தேடித்தர, “மாகாணங்கள்” தத்தமது வசதிக்கு எற்றபடி முன்வர வேண்டுமென்பதற்கான ஓர் திட்டம் தீட்டுவோம் - வேண்டாம் என்பாரில்லை.

ஆனால், ஒவ்வொரு பகுதியும் அதிலும் சிறப்பாக, தனியாட்சி செலுத்தி வந்த, செலுத்து வதற்குத் தகுதியும் திறமையும் வாய்ந்த, தனிப் பண்பு கொண்ட மக்கள் வாழ்கின்ற பகுதிகளை, ஒரே பட்டியில் போட்டு அடைத்து அதிகாரமற்ற, பொருள் பலமற்ற இடங்களாக்கி, அவ்வளவு அதிகாரங்களையும், பொருள் பலமற்ற இடங்களாக்கி, அவ்வளவு அதிகாரங்களையும் மத்ய சர்க்கார் எனும் ஒரே இடத்தில், குவித்து விடுவது நல்லதல்ல- நடைமுறைக்கு ஏற்றதல்ல- ஜனநாயகமல்ல- பாசீசத்துக்குத்தான் வழி கோலும்.

பேராசிரியர் லாஸ்கி கூறுவது போல, “மத்தியில் திமிர்வாத நோயும் கோடிகளில் சோகை நோயும்” கொண்ட அமைப்பு கூடாது. இப்போது தேசியத் திருக்கோலத்தவர் தீட்டிடும் திட்டம், தாங்க முடியாத அதிகாரத்தை மத்தியிலே குவிப்பதும், அதிகாரப் பசி நோயை மாகாணங்களில் புகுத்துவதுமாக இருக்கிறது. திட்டம் தீட்டுபவர்களின், “தேசியத் திருக் கோலத்தை”க் கண்டு, ஏமாந்து, இந்தத் திட்டத்தின் தீங்குகளை உணராமல் இருந்துவிட வேண்டாம் என்று, காங்கிரஸ் நண்பர்களையே முக்கியமாகக் கேட்டுக்கொள்கிறோம்.

(திராவிட நாடு - 14.11.1948)

மூலக்கட்டுரை http://www.annavinpadaippugal.info/katturaigal/puthiya_aekathipathiyam.htm

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

No responses yet

Write a response