அண்ணாதுரை ,திராவிடநாடு, 3–10–1965 & 10–10–1965

பற்று வெறி ஆகிவிடக் கூடாது
நாட்டுக்குப் பூபாகம் உண்டு; மதத்துக்குப் பூபாகம் இல்லை! மதச் சார்பற்ற நாடுகளும் மதச் சார்புள்ள நாடுகளும் பற்றே பற்றை அழித்திடப் பயன்படுத்துதல் கூடாது. பற்றுகளின் வகை பெருகப் பெருகப் பற்றாளரின் தொகை குறையும்!
தான் வாழ, சமூகம் வாழப் பற்றுக் கொள்க!
பகுதி 1
தம்பி,
நாட்டுப்பற்று, தத்தமது நாட்டினை வளமானதாக்கிட, உரிமையுடன் திகழ்ந்திடத் தேவைப்படும் அறிவாற்றலையும், வழிமுறைகளையும் பெற்றிடப் பயன்படுத்தப்படுகிற வரையில் தூய்மை நிரம்பியதாக இருக்கிறது. ஆனால், எவரும் மறுக்கொணாததும், எவருக்கும் இயல்பாக எழுவதுமான "நாட்டுப்பற்று' உணர்ச்சியினைத் தூண்டிவிட்டு, "வலிவு' திரட்டி, வேற்று நாட்டினைத் தாக்கிடப் பயன்படுத்தினாலோ, நாட்டுக் குள்ளாகவே கொடுங்கோலாட்சியைப் புகுத்தினாலோ, நாட்டுப்பற்று எனும் உணர்ச்சி நாசகாரியத்துக்கு, அறமழித்திடும் செயலுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்று பொருள், கண்டிக்கத்தக்கதாக, வெறுக்க தக்கதாகி விடுகிறது, இந்தப் போக்கு.
நாட்டுப்பற்று மிக்கவர்களாக ரோம் நாட்டவர் எழுச்சியுடன் இருந்தனர். அதன் பயனாகக் கிடைத்த வீரத்தைப் பயன்படுத்தி ரோம் நாட்டு அதிபர்கள் வேறு பல நாடுகளைத் தாக்கி அடிமைப்படுத்தி, சுரண்டி, தமது ரோம் நாட்டிலே வெற்றி வளைவுகளையும், வீரக்கோட்டங்களையும், மணி மாடங்களையும் அமைத்து, எழில் மிகுந்திடச் செய்தனர்.
ரோம் நாட்டவர் காட்டிய நாட்டுப்பற்று, பிற நாடுகளிலே இருந்துவந்த நாட்டுப்பற்றினை அழித்திடவே பயன்படுத்தப் பட்டது. அந்தக் கட்டம் பிறந்திடும்போதுதான் நாட்டுப்பற்று எனும் தூய்மையான உணர்ச்சி, தவறான வழியிலே பயன் படுத்தப்படுகிறது என்று பொருள்படுகிறது. இந்தப் போக்கினைப் பேரறிவாளர் கண்டித்தனர்; ஆனால், அவர்களை அடக்கிட இதே நாட்டுப்பற்று உணர்ச்சியைத்தான் ஆதிக்க வெறியர்கள் பயன்படுத்தினர்!
நமது நாட்டிடம் நமக்குப் பற்று இருப்பதுபோலத்தானே மற்ற நாட்டவர்க்கு அவரவர் நாட்டின்மீது பற்று இருக்கும், நம்முடைய நாட்டுப்பற்றுக் காரணமாக நாம் எப்படி நம்முடைய நாடு அடிமைப்படக் கூடாது என்று எண்ணுகிறோமோ, அதுபோலத்தானே ஒவ்வொரு நாடும் அதனதன் நிலைகெடச் சம்மதிக்காது என்றெல்லாம் நாடு பல பிடித்திடும் போக்கினரான அதிபர்கள் எண்ணிடவேயில்லை.
போர் பல மூண்டதன் காரணம், நாட்டுப்பற்று எனும் உணர்ச்சியை ஆதிக்க வெறியர்கள் தவறான முறையிலே பயன்படுத்தியதுதான்.
நாட்டுப்பற்று காரணமாக, தமது நாட்டினைச் செல்வம் கொழித்திடும் திருநாடு ஆக்கவேண்டும் என்று எண்ணியவர்கள், அந்த நாட்டு மக்களுடைய நல்லாத ரவைப் பெறுகிறார்கள் எளிதாகவும், முழு அளவிலும்.
ஆனால், நாட்டினைச் செம்மைப்படுத்த, அங்குக் கிடைக்கும் இயற்கை வளத்தை, உழைப்பின் நேர்த்தியால், தொழில் திறமையால் பன்மடங்கு அதிகமாக்கிடும் முறையைப் பின்பற்றாமல், பிறநாடுகளைத் தாக்கிக் கொள்ளையடித்துப் பொருளைத் தமது நாட்டிலே கொண்டு வந்து குவிப்பதும், பிற நாட்டவர்களைத் தோற்கடித்து அடிமைகளாக்கிக் கொள்வதுமான கொடுமையில் ஈடுபட்டனர், ஆதிக்க வெறி கொண்ட அதிபர்கள்.
பிற நாடுகளிலே காணப்பட்ட பளிங்கு மண்டபங்களை இடித்து நொறுக்கி, அந்தப் பளிங்குக் கற்களைக் கொண்டு வந்து தமது நாட்டிலே மாளிகைகள் அமைத்தனர்! காணீர் எமது நாட்டின் எழிலை என்று.
பிற நாடுகளிலே மக்கள் அலறித் துடித்திடவும், ஓலமிடவும் செய்துவிட்டு, கொள்ளைப் பொருளைக் கொண்டு தனது நாட்டிலே கோலாகல வாழ்வு அமைத்து, இசை விருந்து அளித்தனர்.
பிற நாடுகளைச் சுடுகாடுகளாக்கி விட்டுத் தமது நாட்டினைத் திருநாடு ஆக்கி மகிழ்ந்தனர்.
இதனால் ஏற்பட்ட அழிவினைக் கண்ட பிறகே, நாட்டுப் பற்று மட்டுமே மேலானது என்று எண்ணிட வேண்டாம்.
உலக முழுவதும் வாழ்ந்திட வேண்டும்.
மனித குலம் தழைத்திட வேண்டும்.
என்ற புது உணர்ச்சியினை ஊட்டிடத் தலைப்பட்டார்கள்.
ஆனால், இந்த உணர்ச்சி காரணமாக, நாட்டு எல்லைக் கோடுகள் கலைக்கப்பட்டு, ஒரு நாட்டுக்கு ஒரு அரசு என்றிருக்கும் முறை நீக்கப்பட்டு, ஒவ்வொரு நாட்டுக்கு ஒவ்வோர் விதமான கொடி, பண் என்று உள்ள முறை கைவிடப்பட்டு, உலகம் ஒரே அரசின் கீழ், ஒரே கொடியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதா என்றால், இல்லை.
உலக நாடுகள் பலவும் உலகிலே நாட்டுக்கு நாடு மோதுதல் ஏற்படாது தடுத்திடும் நோக்குடன் அமைத்துள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மணிமாடத்திலே இன்று 117 நாட்டுக் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கின்றன, மன்றத் தலைவராக இத்தாலி நாட்டவர், பான்பானி என்பார் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டவுடன், இத்தாலியர்கள் ஓர் பெருமிதம் கொண்டிடத்தான் செய்கின்றனர்.
உலக நாடுகள் மன்ற அமைப்போ, சர்வதேச ஒருமைப்பாட்டு உணர்ச்சியோ, நாட்டுப் "பற்று' எனும் உணர்ச்சியினைத் தேவையற்றது ஆக்கி விடவில்லை.
"பற்று' வெறியாகி விடாமல் பார்த்துக் கொண்டால் போதும், அதுவே மாபெரும் வெற்றி என்று கொள்ளலாம் என்று கூறத்தக்க நிலை மட்டுமே மலர்ந்திருக்கிறது.
"நாட்டுப்பற்று'க் கொண்டோர், தமது நாட்டின் ஏற்றம், எழில், பலரும் கண்டு வியந்து பாராட்டிடத்தக்கதாகிட வேண்டும் என்ற தூய எண்ணத்துடன், அறிவாற்றலைப் பயன்படுத்திப் பணியாற்றிடும்போது, அந்த நாட்டுக்கு மட்டுமல்ல, அந்த நாடு மூலம் உலகுக்கு நலன் பல கிடைக்கிறது.
இந்தப் புது முறையைக் கண்டுபிடித்த நாடு எனது நாடு என்று பெருமிதத்துடன் கூறிக்கொண்ட போதிலும், கண்டு பிடிப்பினால் ஏற்படும் நலன், அந்த நாட்டுக்கு மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றினுக்கும் கிடைத்திடுகிறது; உலகு செழிக்கிறது.
எனது நாட்டுத் தத்துவம், மொழி, இலக்கியம், கலை, தொழில் நுட்பம் என்று கூறிப் பெருமைப்படுவது முதல் கட்டம்; ஆனால், அது படிப்படியாக வளர்ந்து உலகிலே பல்வேறு நாட்டவரால் பாராட்டப்படும் கட்டம் பிறந்திடக் காண்கிறோம்.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு - என்றன்றோ பாரதியார் கூறினார்.
உலகினையும் மறந்தாரில்லை!
தமிழ்நாட்டையும் மறந்தாரில்லை!!
"நாட்டுப்பற்று' இன்று ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் கிட்டத் தட்ட "இயல்பு' ஆகிவிட்டது. வளமும் எழிலும், வரலாற்றுச் சிறப்பும் இருந்தால் மட்டுமே, "பற்று' அந்த நாட்டினிடம் ஏற்படும் என்பது அல்ல நிலை.
பாலைவனம் மிகுந்ததெனினும், பனிக்காடு நிறைந்த தெனினும், பசி போக்கிடும் வளம் அற்றதெனினும், எந்தன் நாடு இது! இதிலே பிறந்தேன், வாழ்கிறேன், மடிந்துபட இருக்கிறேன். இந்த என் நாடு எனக்குப் பொன்னாடு, ஏனெனில், இது என் தாய்நாடு என்று கூறிடுவர் எவரும்.
வளமும் வல்லமையும், எழிலும் ஏற்றமும் எந்த நாட்டில் உளதோ அதனை எனது நாடு என்று கொள்வேன் என்று கூறிடுவார் எவரும் இல்லை. வளம் தேடியோ, வாழ்வின்பம் தேடியோ, வேறோர் நாட்டிலே சென்று இறுதி வரையில் இருப்போரும்கூட, இடமளித்த நாட்டினை, எழில்மிக்க நாடு, ஏற்றம் மிக்க நாடு என்று பாராட்டுவரேயன்றி, எனது நாடு! தாய் நாடு! என்று பற்றுடன் கூறார்; இயற்கையான எண்ணம் இதற்கு இடம் கொடுப்பதில்லை.
இருந்திடத்தக்கதென்று ஒரு நாட்டைச் சென்றடைந் தவர்கள், அந்த நாட்டு நடை உடையினை, மொழி நயத்தினைப் பாராட்டி மேற்கொண்டிடக் கூடும்; ஆயினும், இது என் தாய்நாடு என்று கூறிடுவதில்லை.
தமக்கு மகிழ்வுமிக்க வாழ்வளித்த நாட்டினையும், தமது தாய்நாடு என்று கொள்ளாதது மட்டுமல்ல, அங்குக் காணப்படும் எழிலும் ஏற்றமும், வளமும் வல்லமையும் தன் தாய்நாட்டிலே இல்லையே என்ற ஏக்கம் கொள்வர்; எப்படியேனும் இந்த நாடு பெற்றுள்ள சிறப்பினை என் தாயகம் பெற வேண்டும் என்ற ஆர்வம் கொள்ளுவர்; தாயகம் சீர்பெற முயல்வர். இத்தனைச் சிறப்புள்ள இந்த நாட்டையே இனி நான் என் தாயகமாகக் கொள்வேன் என்று கூறிடுவதில்லை.
மடி நிறையப் பால் ததும்பிடும் நிலையிலுள்ள பசுவே என் தாய் என்று கன்று கூடக் கருதுவதில்லையே - கிடைக்கிறதோ இல்லையோ, நாவுலருகிறது என்றாலும் தாய்ப்பசுவிடமல்லவா துள்ளி விளையாடுகிறது!
தாயகத்திடம் "பற்று' மிகக் கொண்டவர்கள், ஏதாவதோர் செய-ன் மூலம், இந்தத் தரணி புகழ்ந்திடும் நிலையினைத் தாயகம் பெற்றிட வேண்டும், அந்த நோக்கத்துடன் நாம் நமது அறிவாற்றலைப் பயன்படுத்துதல் வேண்டும் என்று முனைந்திடுவர்.
குறுக்கு வழி தேடிடும் இயல்பினர், பிறநாடுகளைத் தாக்கித் தாழ்த்திப் பொருள்திரட்டி, தன் தாயகத்தின் நிலையினை ஒளியுள்ளதாக்கிட முயல்வர்.
எதற்காகவும் பாடுபடும் இயல்பு அற்றோர், உள்ளது போதும் என்றெண்ணி உறங்கிடச் செய்வர்; நமக்குள்ள தாயகம் இந்நிலையிலுளது, நாம் என்ன செய்வது என்று இருந்துவிடுவர்,
இதுபோல உள்ள பல்வேறு நினைப்பினரும் நிலையினரும், தத்தமது தாயகத்திடம் "பற்று' அற்றவர்களாகிவிடுவதில்லை. புகழ்பாட மறப்பதில்லை.
நாட்டுப்பற்றுக் காரணமாக எழுதப்பட்டுள்ள ஏடுகளைப் பார்க்கும்போது, தாய்நாட்டுச் சிறப்பினை விளக்கிடுவது மட்டுமல்ல, பிற நாடுகளைத் தாழ்த்திடும் மனப்போக்கும் மிகுதியாக எழுதப்பட்டிருப்பதனைக் காணலாம்.
தமது நாடு தவிர மற்ற நாடுகளை, மிலேச்சர்கள் நாடு என்றும், இருண்ட கண்டம் என்றும், அநாகரிக நாடு என்றும் எழுதிடுவதனை முறை எனக் கூடக் கொண்டிருந்தனர், வரலாற்று ஏடு தீட்டிடும் திறன் படைத்தோர் கூட.
டாக்டர் ஜான்சன் என்பார் ஆங்கில நாட்டவர், அறிவு மிக்கவர்! அவர் அகராதி தயாரித்தபோது அதிலே "ஓட்' எனும் தானியத்தைப் பற்றிப் பொருள் தரும்போது தமது நாட்டுப் பற்றினை மட்டுமல்ல, பிற நாட்டினைத் தாழ்த்திடும் போக்கினையும் வெளிப்படுத்திக் கொண்டார்.
ஓட் - ஒருவகைத் தானியம்; இது இங்கிலாந்து நாட்டில் குதிரைகளுக்குத் தீனி; ஸ்காத்லாந்து நாட்டு மக்களுக்கு இது உணவு.
என்று பொருள் தந்திருந்தார் ஜான்சன். சங்கீதமா அது!' காது குடைகிறது என்றும், உணவா அது, குமட்டல் எடுக்கிறது என்றும், நடனமா அது, பேயாட்டமாக இருக்கிறது என்றும், பேச்சா அது, கூச்சலாக இருக்கிறது என்றும், மற்ற நாடு குறித்துக் கூறுவர்; வீண் வம்பு செய்திடுவோர் அல்ல, விவரம் தெரிந்தவர்கள் கூட!
கையாலே தொட்டுப் சாப்பிடுகிறார்கள்!! என்று மேனாட்டினர், நமது சாப்பிடும் முறை பற்றிக் குறிப்பிடுகிறார்கள் அல்லவா?
அதிலே கேலி மட்டுமல்ல. பச்சாதாபம் கூடக் கலந்திருக்கிறது தமது நாட்டிலுள்ள உணவு உட்கொள்வதற்கான பழக்கந்தான் சிறந்தது, மேலானது, நாகரிக மக்களுக்கு உரியது, எவரும் பின்பற்ற வேண்டிய விதத்தது என்ற அழுத்தமான நம்பிக்கை அவர்களை அவ்விதம் பேசச் சொல்கிறது.
ஆணும் பெண்ணும் கட்டிப் பிடித்துக் கொண்டு நடனமாடுகிறார்கள்; கண்றாவி! சகிக்கவில்லை!! என்று, மேனாட்டு நடனம் குறித்து நாம் பேசும்போது, என்ன எண்ணிக் கொள்கிறோம்; அதுபோலத்தான் அவர்கள் நம்முடைய முறைபற்றி எண்ணுகிறார்கள்.
சர்வதேச உணர்ச்சி, நாட்டுப்பற்று என்பதைத் தேவையற்றது ஆக்கிவிடத்தக்க வல்லமை பெற்றிடவில்லை என்றாலும், ஒரு நாட்டவர் மற்ற நாட்டவரின் பழக்க வழக்கங்களைக் கேலி செய்து, கண்டித்து, கேவலப்படுத்தும் போக்கை வெகுவாகக் கட்டுப்படுத்திவிட்டிருக்கிறது.
இப்போது நம்முடைய விருந்தினராக வருகிற மேனாட்டர், கையால் எடுத்துச் சாப்பிடுவதும் நாம் கரண்டி கொண்டு சாப்பிடுவதுமான நிலை!
நாட்டுப்பற்று கேவலப்படுத்தப்பட்டால், கேலி செய்யப்பட்டால், சீற்றம் பீறிட்டுக் கொண்டு கிளம்பும். மனத்திலே வேதனைப் புயல் வீசும், பகை மூளும் என்பதனை உணர்ந்து கொண்டுள் ளனர். இது நாட்டுப்பற்று இன்றும் எத்தனை அழுத்தமான இடம்பெற்றிருக்கிறது என்பதனை நன்றாக விளக்குகிறது.
"நாட்டுப்பற்று'க் கொள்வதிலே கெடுதல் ஏதுமில்லை; அந்தப் பற்று; தக்கவிதமாகப் பக்குவப்படுத்தப்பட்டால், நற்பலனே கிடைத்திடுகிறது.
வருகிற தொல்லையெல்லாம், அவரவர் தத்தமது நாட்டிடம் "பற்று' கொண்டிருப்பதிலே ஏற்படுவதில்லை, ஒரு நாட்டுப் பற்றுக்கும் மற்றோர் நாட்டுப்பற்றுக்கும் போட்டி - பகை - ஏற்படும்போதும், நாட்டுப் பற்றுக்கும், மற்ற வகையினதான இனப்பற்று, மொழிப்பற்று, மதப்பற்று போன்றவைகளுக்கும் மோதுதல் ஏற்படும்போதுதான், தொல்லை மட்டுமல்ல, ஆபத்தே மூண்டுவிடுகிறது.
இந்த நாட்டு மகன்தானே நீ?
ஆமய்யா! ஆம்! இந்த நாட்டவனே!
பிறந்த நாட்டை இகழ்பவன் பேயன்? ஒப்புக் கொள்கிறாய்!
ஆம்! பிறந்த பொன் நாட்டை எவனே இகழ்வான்?
இந்த நாடு ஏற்றம் பெறவேண்டும்.
ஆம்! ஏற்றம் பெறத்தான் வேண்டும்.
அதற்காகப் பாடுபடத் தயார்தானே?
நிச்சயமாகத் தயார்!
எந்த இன்னலையும் ஏற்றுக் கொள்ளத் தயார்?
என்ன இன்னலையும் பொருட்படுத்த மாட்டேன்.
நாடு வாழ்ந்திட, எதனையும் இழந்திடச் சம்மதம். உயிரையும்!
இதிலென்ன ஐயப்பாடு! உயிரையும் தரச் சம்மதிக்கிறேன்.
உயிரையும்! நிச்சயமாகத்தானே! அப்படியானால். . .
என்ன செய்திட வேண்டும் செப்பிடு!
இந்த நாடு ஏற்றம் பெற, வாழ்ந்திட, நாட்டு மக்கள் சிலர், இது என் மதம் என்றும், சிலர் அது என் மதம் என்றும் கூறும் மடமை தொலைய வேண்டும். ஒரே மதமாக வேண்டும்! நாட்டுக்கு ஒரு பொது மதம்! தனித்தனியாக உள்ள பல்வேறு மதங்கள் உள்ளனவே, அது கூடாது. ஒரு நாடு - ஒரு கொடி! இல்லையா! அதுபோல ஒரு நாடு - அதற்கு ஒரு மதம்! இந்த இலட்சியத்துடன், நீ உன் மதம் என்று எதையோ கூறிக் கொள்கிறாயே, அந்த மதத்தை விட்டுவிட வேண்டும்; நாட்டுக்கு என நல்லோர் பார்த்து எந்த மதத்தைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதனை உன் மதமாகக் கொண்டிட வேண்டும்; நாடு வாழ்ந்திட, ஏற்றம் பெற! என்ன சொல்லுகிறாய்?
தம்பி! எத்தனை பெரிய சிக்கல் புரிகிறதா! நாட்டுப்பற்று - மதப்பற்று - இருவேறு "பற்று' - இவை இரண்டிலே, ஒன்றின் ஆணைக்கு ஏற்ப மற்றொன்று அடங்கி நின்றிட வேண்டும் - இப்படி ஒரு சிக்கல் எழுந்திடின், என்ன ஆகும்! நினைப்பதற்கே நடுக்கமெடுக்கிறதல்லவா?
ஒரு நாட்டிலுள்ளோர் அனைவரும் ஒரே மதத்தினராக இருந்தாக வேண்டும்; அப்போதுதான் "நாட்டுப்பற்று' ஏற்படும் என்று கூறுவதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.
ஒரு நாட்டுக்குள்ளாகவே பல மதங்கள் உள்ளன; ஒரே மதம் பல நாடுகளிலே உள்ளது!
ஒரு நாட்டுக்கு ஒரு மதம் என்பது, நாட்டுக்கான இலக்கணங்களிலே ஒன்று அல்ல.
நாடு - ஒரு எல்லைக்கோட்டுக்குள் நெடுங்காலமாக அமைந்துள்ள ஒரு பூபாகம்; நீண்ட நெடுங்காலமாக அங்கு வாழ்ந்து வரும் மக்கள், அந்தப் பூபாகத்தில், தலைமுறை தலைமுறையாகப் பாடுபட்டுப் பாடுபட்டு வளம் ஊட்டி வந்திருக்கிறார்கள், எழில் கூட்டி இருந்திருக்கிறார்கள் அந்தப் பூபாகத்தையோ, அதிலுள்ள பொருள்களையோ, வேறொரு பூபாகத்தவர் தாக்கிட, கெடுத்திட, பறித்திட முயன்றபோது கடும் போரிட்டுத் தடுத்திருக்கிறார்கள். விரட்டி அடித்திருக்கிறார்கள். அந்தப் பூபாகத்துத் தட்ப வெப்ப நிலைமைக்கேற்ற வாழ்க்கை முறை அமையப்பெற்று, அதன் காரணமாகச் சில பல தனி இயல்புகள், திறமைகள் பெற்றிருக்கிறார்கள், உழைப்பின் காரணமாக. உறைவிடமாக்கிக் கொண்டதன் காரணமாகவும், பாதுகாத்திட்ட காரணத்தாலும், அந்த நாடு அவர்களுக்குச் சொந்தமாகிறது; அதனிடம் ஓர் பந்தம் உண்டாகிவிடுகிறது; அந்த மக்களின் வாழ்வு அந்த நாட்டு இயல்போடு பின்னிப் பிணைந்துவிடுகிறது; அதனால் ஒரு பற்று.
இந்தப் "பற்று' கெடும்விதமாக வேறு ஏதேனும் உணர்ச்சி - அல்லது பற்று - அவர்களுக்கு எழுந்திடுமானால், அத்தகைய உணர்ச்சியை - பற்றினை - விட்டாக வேண்டும். நாட்டுப்பற்று நாசமாகாதிருக்குமானால், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள், நெடுங்காலமாக, கூட்டாக வாழ்ந்து வரும் பூபாகம், நாடு என்பது போல, மதம் என்பதற்கு, ஒரு பூபாகம் கிடையாது; இன்ன எல்லையிலிருந்து இன்ன எல்லைவரை உள்ள இடம், இன்ன மதம் இருந்திடும் இடம் என்றோர் விதி இல்லை.
ஒரே நாட்டுக்குள் பல மதம், பல நாட்டுக்குள் ஒரு மதம் என்ற நிலை இருக்கும்போது, மதத்தையும் நாட்டையும் பிணைத்துப் பேசுவது பேதைமை - பிணைத்துப் பேசி நாட்டுப் பற்றுக்காக உன் மதப் பற்றினை நீக்கிக்கொள் என்று கட்டளையிடுவது கொடுமை; அத்தகைய கட்டளையிட்ட எந்த அரசும் நிலைத்து நின்றதில்லை. மதம், மனத்திலே இடம்பெறும், ஓர் தூய்மை - நாட்டு எல்லைக்குக் கட்டுப்பட்டுக் குறுகுவதுமல்ல, பெருகுவதுமல்ல. மதம் பரவிட வேண்டும் என்பதற்காகவும், பல நாடுகளிலே நாம் நம்பிடும் மதம், அரச மதம் ஆகிட வேண்டும் என்பதற்காகவும் நடத்தப்பட்ட புனிதப் போர்களே, இரத்தம் பெருகிட வழி செய்ததேயன்றி, மதத்துக்கும் நாட்டுக்கும் பிணைப்பு ஏற்படுத்த முடியவில்லை. எனவே நாட்டுப்பற்றுக்காக மதப்பற்று நீக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்பவர், நாட்டுப்பற்று மதப்பற்று எனும் இரு உணர்ச்சிகளின் தன்மையையுமே அறியாதவர்கள். அவர்களின் கட்டளையை ஏற்க மறுப்பதும் எதிர்த்து நிற்பதும் நாட்டுப் பற்றுக்கு ஊறு செய்வதாகாது; கொடுங்கோலை எதிர்த்திடும் கடமையாகிவிடும்.
பிறர் கட்டளையிடுவது கொடுமை, அதுபோன்றே தனி மனிதர்களுக்கே, தமக்குள்ளாகவே, நாட்டுப்பற்று முக்கியமா, மதப்பற்று முக்கியமா, என்பது போன்ற குழப்பம் ஏற்படுவது அறியாமை அல்லது அகந்தையின் விளைவு.
கிருத்தவமார்க்கம் பரவியபோது, அரசின் ஆணையை ஏற்பதா, அருளாளர் ஆணையின்படி நடப்பதா என்ற சிக்கல் எழத்தான் செய்தது. ரோம் சாம்ராஜ்யாதிபதி கிருத்தவ மதத்தையே தடுத்திடலானான். அரச ஆணையைக் குலைத்து, நாட்டுப்பற்றை நாசமாக்கி, மக்களைக் கெடுத்திடுவது அம்மதம்! - என்று முழக்கமெழுப்பினான்.
நமது மதத்தை மதிக்க மறுத்து, அழித்திடத் துடித்திடும் இந்த அரசுக்கு நாம் அடங்கிக் கிடப்பதா, வரி செலுத்துவதா என்று கிருத்தவ மார்க்கத்தினரில் சிலர் கொதித்தெழுந்து கேட்ட போது ஏசு,
அரசனுக்கு அளிக்க வேண்டியதை அரசனுக்கு அளித்திடுக!
ஆண்டவனுக்குத் தரவேண்டியதை ஆண்டவனுக்குச் செலுத்திடுக!
என்று கூறினார். கிருத்தவ மதத்தை அழித்திடத் துடித்த அரசு என்ற போதிலும், அந்த அரசின் கீழ் உள்ள குடிமக்கள் என்ற முறையில், வரி கட்டத்தான் வேண்டுமென்றார், நமது மதத்திற்கென ஏன் ஒரு "ராஜ்யம்' அமைத்திடக் கூடாது என்று கேட்டவர்களுக்கு ஏசு,
என் ராஜ்யம் இந்த லோகத்தில் இல்லை என்று கூறினார்.
மதம், மனிதனுடைய மனத்தை ஆட்சி செய்வது - ஒரு மண்டலத்தை அல்ல.
எந்த மண்டலத்திலே உள்ளவரெனினும், அவர்கள் தமது மனத்தில் எந்த மதத்திற்கு இடமளிக்கின்றனரோ, அந்த மதத்தினராகின்றனர்.
நாட்டு எல்லை, மத உணர்ச்சிக்குத் தடுப்புச் சுவர் எழுப்புவதில்லை. எனவே நாட்டுப்பற்றா, மதப்பற்றா, எது தேவை என்ற கேள்வியே கோணல். அதற்கான ஆணை பிறப்பித்தல் கொடுமை.
இன்று பல மதங்கள் இடம் பெற்றுள்ள நாடுகளிலும், பொதுவாக அறிவுத் தெளிவுள்ள நாடுகளிலும், மதத்திற்கும் அரசுக்கும் தொடர்பு ஏற்படுத்தாமல், அரசு, மதச்சார்பற்றதாக அமைக்கப்படுகிறது. இந்தியா அதுபோல, ஆனால், பாகிஸ்தான், மதத்தைப் பிணைத்துள்ள அரசு - இஸ்லாமியக் குடியரசு என்றே முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டிலே, மிகப் பெரும்பாலான மக்கள் ஒரு மதத்தையும் குறைந்த எண்ணிக்கையுள்ளோர் வேறோர் மதத்தையும் கொண்டிருக்கலாம்; ஆனால், நாட்டுப்பற்று என்பதில் மதவேறுபாடு குறுக்கிட்டுக் குலைப்பதில்லை, மத வேறுபாடு இருப்பதைக் காட்டி நாட்டுப்பற்று இன்னாருக்கு இருக்க முடியாது என்று வாதாடுவதுமில்லை.
ஒரு நாட்டுக்குள், பல மதத்தினர் இருப்பினும் அனைவருக்கும் அந்த நாட்டிடம் பற்று இருந்திடும்; அதிலே ஐயப்பாடு கொள்வது தவறு என்பது போலவே, ஒரே மதம் பல நாடுகளிலே இருப்பதாலே அந்த நாடுகள் யாவும், நேச நாடுகளாக வாழ்ந்து வரும் என்றும் சொல்வதற்கில்லை. வரலாற்று நிகழ்ச்சிகள் பல உள.
இப்போது மலேஷியாவை அழித்தொழித்தாக வேண்டும் என்று உருட்டி மிரட்டிக் கொண்டுள்ள இந்தோனேஷியா, இஸ்லாம் மதத்தினர் நிரம்பிய நாடு, மலேஷியா போலவே. ஒரு இஸ்லாமிய நாடு மற்றோர் இஸ்லாமிய நாட்டை அழித்திடத் துடிக்கிறது. மதம், அந்த இரண்டு நாடுகளுக்குள் நேசத் தொடர்பை ஏற்படுத்த வில்லை; பகை கக்கப்படுகிறது. பகை மூண்டிருப்பதற்குக் காரணம் வேறு.
அதுபோலவே, வட வியட்நாம் தென் வியட்நாம் இரு பகுதிகளும் புத்தமதத்தார் பெருமளவு உள்ள இடங்கள்; ஒன்றோடொன்று மோதிக் கொள்கின்றன. காரணம் வேறு. "நாட்டுப்பற்று' அந்த நாட்டிலே உள்ள அனைவரும் ஒரே மதத்தினராக இருந்தால் மட்டுமே ஏற்படும் என்பது மடமை.
அதுபோலவே, மதப்பற்று காரணமாக, தனது நாட்டிடம் பற்றுக் கொள்ளாது, அதே மதத்தைக் கொண்டுள்ள வேறு நாட்டுக்குத் துணை நிற்பதும் மடமை, ஆனால், மிகப் பெரும்பாலான மக்களுக்கு இத்தகைய கெடுமதி பிறப்பதில்லை.
ஒரு நாட்டிடம், அங்குப் பிறந்த காரணத்தால் அங்கு முன்னோர்கள் வாழ்ந்திருந்த காரணத்தால் ஏற்பட்டுவிடும் தொடர்பு, அங்கு உழைத்துப் பயன்பெற்று வாழ்ந்து வருவதனால் பலப்பட்டுப் பலப்பட்டு, "பற்று' ஆகிறது. இந்தப் பற்று வேறு எந்தப் பற்றுக் காரணமாகவும் கெடுவதில்லை, வழி மாறுவதில்லை.
நாட்டுப்பற்று ஏற்பட வேண்டுமானால் நாட்டிலுள்ளோர் அனைவரும் ஒரே மதத்தினர் ஆதல் வேண்டும் என்பது எத்துணை கொடுமை நிரம்பியதோ அதுபோன்றதேதான், நாட்டுப்பற்று ஏற்பட, அல்லது கெடாதிருக்க, நாட்டினி லுள்ளோர் அனைவரும் ஒரே மொழியினராக இருந்திட வேண்டும். ஒரே மொழியின் ஆட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவது.
பகுதி 2
சிற்சில நாடுகளிலே மட்டுமே, ஒரு நாட்டுக்கு ஒரு மொழி என்ற நிலை இருக்கிறது; சிக்கல் இல்லை.
பற்பல நாடுகளில், பல மொழியினர் கொண்டதாகவே சமூகம் அமைந்திருக்கிறது. ஆனால், வேறு வேறு மொழி பேசிடுவோராக இருப்பினும், அந்த நாட்டிலே, இரத்தமும் வியர்வையும் கொட்டி வளப்படுத்தியவர்கள், வாழ வைத்தவர்கள் அந்த மக்கள்; அதன் காரணமாக அவர்களுக்கு ஏற்பட்டுள்ள "பற்று' ஒருபோதும் குன்றாது, குறையாது, "மாத்துக்' குறைவானதுமாகாது.
ஒரு மத ஆதிக்கம், ஒரு மொழி ஆதிக்கம், ஒரு இன ஆதிக்கம் புகுத்த வேண்டும் என்ற கெடுமதி கொண்டவர்கள், தங்கள் திட்டத்துக்கு ஆதரவாக, ஒரு மதம், ஒரு மொழி, என்பதனை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களை, எதிர்த்து நிற்பவர்களை இவர்கள் நாட்டுப்பற்று அற்றவர்கள் என்று கூறிப் பழி சுமத்தி ஒழித்துக்கட்ட எண்ணிடுவர்; வெற்றி கிட்டாது எனினும் முயற்சியிலே முனைந்து நிற்பர்.
எந்த ஒரு "பற்று'ம் மக்களைக் கொடுமைக்கு ஆளாக்கிடப் பயன்படுத்தப்படுமானால், அந்தப் பற்றுக்கு இயற்கையாக உள்ள தூய்மை கெட்டொழிந்து போகும்.
"பற்று' பாதுகாப்புக்கு, வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட வேண்டுமேயன்றி, பிற "பற்று'க்களை அழித்திடப் பயன்படுத்தப் படக்கூடாது, அதுபோலப் பயன்படுத்தியவர்கள் அழிந்தொழிந்து போயினர்.
நாட்டுப்பற்று எனும் தூய்மைமிக்க உணர்ச்சி இட்லரால் எவ்விதமான நாச வேலைக்குப் பயன்படுத்தப் பட்டது என்பதனையும், அதன் காரணமாக, உலகுக்கு வந்துற்ற கேட்டினையும், அந்தக் கேட்டினை மூட்டிவிட்ட இட்லர் என்ன கதியானான் என்பதனையும் நமது வாழ்நாளிலேயே கண்டு விட்டோமே!
கேடு செய்திட, கொடுமை செய்திட, ஒரு பற்று பயன் படுத்தப் படுமானால் அந்தப் "பற்று' தூய்மை இழந்து, வலிவிழந்து, உயிரிழந்து போய்விடும். இதனை விளக்கிடும் சான்றுகள் வரலாற்றிலேயே நிரம்ப உள்ளன.
"பற்றுக் கொண்டிருப்பவர்களால் வரக் கூடியதைக் காட்டிலும், அந்தப் "பற்று'ப் பற்றித் தூண்டிவிடும் கெடுமதி யாளர்களால் வந்திடும் கேடே அதிகம், நாட்டுப்பற்றுக் கொண்டவர்கள், மற்ற எல்லாவற்றிலும் ஒன்றுபட்ட கருத்தினராகவே இருந்திடுவர் என்று எண்ணுவதும், இருந்திட வேண்டும் என்று கூறுவதும் தவறு.
மதம், மொழி, இனம் என்பன போன்ற அடிப்படைகளிலே மட்டும் அல்ல, மிகச் சாதாரணமான வேறு எத்தனையோ விஷயங்களில், வெவ்வேறு விதமான உணர்ச்சிகள் - பற்று - இருக்கலாம்; இருந்திடக் காண்கிறோம். உணவு, உடை, கல்வி முறை, தொழில் நிலை, கலை உணர்வு, செல்வநிலை - எத்தனையோ இவை போல ஒரே நாட்டினரிடையே வெவ்வெறு விதமான உணர்ச்சியினை - "பற்றை' ஊட்டிட.
குற்றவாளிக் கூண்டில் நிற்பவனும், நீதிபதியும் ஒரே மதம்! அதனால்? இருவரும் ஒரே மொழி பேசுவோர்! அதனால்? இருவரும், ஒரே நாட்டினர்! அதனால்!
நீதி அதற்கு ஏற்றபடி நெளியுமா? இல்லை, நிமிர்ந்து நின்றிடும்.
ஆனால், வேண்டுமென்றே சிலரும், விவரமறியாது சிலரும், தமக்குச் சாதகமாக இந்தப் "பற்று'களைச் சுட்டிக்காட்டிப் பயன்பெறப் பார்ப்பர், விழிப்பாக இருந்திடல் வேண்டும்.
"அட! நம்ம ஊர்க்காரர்!'' என்று கூறுவதால் அவன் சொன்ன விலையை அப்படியே கொடுத்து விடுகிறோமா? பளிச்சென்று அந்த உணர்ச்சியை நமக்குச் சாதகமாக்கிக் கொள்ள எண்ணி, "அட! நம்ம ஊர்க்காரராக இருந்துமா இந்த அநியாய விலை சொல்லுகிறாய்'' என்று கேட்கிறோம்.
ஒருவரை ஒருவர் வீழ்த்த, தாழ்த்த, ஏய்த்திட, "பற்று' பற்றிப் பேசித் தூண்டிவிடுவது, தந்திரமுறைகளிலே ஒன்று; வெள்ளை உள்ளத்தினர் ஏமாந்து போய்விடுவர்.
ஒரே நாட்டுக்காரர் - நாட்டுப்பற்று உள்ளவர் என்பதாலே, அந்த நாட்டுக்காரர்களிலே ஒரு சாரார், கள்ள வாணிபம் செய்தால் பொறுத்துக் கொள்ள முடிகிறதா! "நாட்டைக் கெடுத்திடும் இவன் போன்றாரை விட்டு வைக்கக் கூடாது, எத்தனை அக்கிரமம் செய்கிறான்! இத்தனைக்கும் அவன் அன்னியன் அல்ல! நம்மவன்!! நம்ம நாட்டுக்காரன்!'' என்று கூறுகிறோம் கொதிப்புடன்.
நம்ம நாட்டுக்காரன்தான் களவாடுபவன் ஒவ்வொருவனும். அவன் களவாடும் பொருளும் வேற்று நாட்டுக்குப் போய் விடவில்லை, நம் நாட்டிலேயேதான் இருக்கிறது. அப்படி யானால் பரவாயில்லை என்ற நிம்மதியா பெறுகிறோம்!
தம்பி! எதற்குக் கூறுகிறேன் தெரிகிறதா, நாட்டுப்பற்று எனும் உணர்ச்சி நாட்டவரை ஆட்கொண்டிருக்கிறது என்ற காரணத்தால், அந்த உணர்ச்சியைத் தட்டிவிட்டு, கொடுமை செய்திட, ஏய்த்திட, அடிமைப்படுத்திடப் பலர் முனைந்திடக் கூடும். விழிப்பாக இருந்திட வேண்டும்; "பற்று' என்பது எத்தகையது, என்ன பயன் தருவது என்பதனைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டுப்பற்று அல்லது வேறு ஏதேனும் ஓர் பற்று நமக்கு இருப்பது என்பது ஒன்று. வேறொருவர் அந்தப் பற்று நமக்கு இருப்பதனைக் கண்டறிந்து நமது மனத்திலே வெறி அல்லது வெறுப்பு மூட்டிவிட்டுத் தவறான வழியில் அழைத்துச் செல்வது என்பது முற்றிலும் வேறானது.
நாட்டுப்பற்று அல்லது வேறு எந்தப் பற்றுக் காரணமாக நாம் எவ்விதமான செயலில் ஈடுபடுவது, போக்கினை மேற்கொள்வது என்பதுபற்றி நாம் நமது அறிவுத் தெளிவினைக் கொண்டு கண்டறிந்து முடிவெடுக்க வேண்டுமேயன்றி, பிறருடைய கருவியாகி விடக்கூடாது.
மற்றொன்றையும் மறந்து விடக்கூடாது; மற்ற எந்த வகையான பற்றுடன் நாம் வாழ்ந்திட வேண்டுமென்றாலும், நாம் இருந்திட ஒரு நாடு, அந்த நாட்டுக்கு ஒரு நிலையான வாழ்வு, அடிமைப்படுத்தப்படாத நிலை இருந்தாக வேண்டும். ஒரு நாட்டுக் குடிமகனாக இருந்து கொண்டுதான், மொழிப்பற்று, மதப்பற்று போன்ற எந்தப் பற்றினையும் நாம் பெற்றுப் போற்றி வாழ்ந்து வரமுடியும்; நாடோடி நிலையோ, அல்லது வலுத்தவனுடைய தாக்குதலுக்கு அடிபணிந்திடும் போக்கோ இருந்திடுமானால், வேறு எந்தப் "பற்றும்' கொண்டிட வழியே கிடைக்காது. சுவர் இருந்தாலன்றோ சித்திரம்!!
ஆகவேதான், மற்றப் பல்வேறு பற்றுகளையும்விட நாட்டுப்பற்று முக்கியமானதாகிறது.
அதனால்தான், நாட்டுக்கே பகைவர்களால் ஆபத்து என்ற நிலை பிறந்திடும்போது மற்ற எந்த "பற்று'க் காரணமாகவும், நாட்டு மக்கள் பிளவுபட்டு, பேதப்பட்டு நின்றிடுவது கூடாது; அது எந்தப் பற்றுக்கும் நாம் உரியவர்களல்ல என்ற நிலையை மூட்டிவிடும்.
நாட்டின் நிலை பகைவர்களால் கெடுக்கப்பட முடியாத வலிவுடன் இருந்திடச் செய்வதும், அந்த வலிவினை அழித்திடப் பகைவர் வந்திடின், அவர்களை முறியடிப்பதுமான நோக்கமொன்றே நமது நோக்கம் என்று பணியாற்றுவதும் தேவை.
இந்தக் காரணத்தால்தான், நாட்டுக்கு ஆபத்து என்ற நிலை மூண்டிடும்போது, நாட்டுப் பற்று உணர்ச்சிக்கே முதலிடமும் முழு இடமும் தருகிறார்கள்; மற்றப் பல "பற்று'கள் பற்றிய பேச்சு, விவாதம், சச்சரவு ஒதுக்கி வைக்கப்படுகிறது.
இசையிலே நாட்டம் இருக்கலாம் ஒருவருக்கு, அதனால் பகைவனின் குழலோசையில் மயங்கி, அவன் நமது நாட்டினைத் தாக்கிடும்போது, இராகம், தாளம் பற்றிய நினைப்பிலா மூழ்கி இருப்பது! அறிவுள்ளோர் அதனைச் செய்யார்.
நாட்டுக்குப் பேராபத்து வந்திடும்போது, முரசுதான் இசை!
இத்தகைய ஏற்றம் நாட்டுப்பற்று எனும் உணர்ச்சிக்கு உண்டு, எவரும் ஒப்புக் கொள்வர்; என்றாலும் வேறு எந்த விதமான "பற்றும்' மக்கள் கொண்டிடவே மாட்டார்கள், கொண்டிடக் கூடாது என்பதல்ல பொருள். "பற்று' பலவற்றிலே இருக்கலாம்; ஒரே நாட்டவருக்குள்ளேயே ஒவ்வொருவருக்கு ஒவ்வோர் விதமான "பற்று' இருக்கலாம்; அதன் காரணமாக அவர்களுக்குள் வேறுபாடுகள் இருக்கலாம், விவாதம் நடத்தலாம். ஆனால், பகைவர் பாய்ந்திடும்போது மற்ற எத்தனையோ துறைகளில் மாறுபாடான கருத்துக் கொண்டவர்களும், வெவ்வேறு பற்றுக் கொண்டவர்களும், நாம் அனைவரும் ஒரே நாட்டினர்! நாட்டுப்பற்று என்பதில் நாம் அனைவரும் ஒன்று! எனவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று பகைவர்களை வீழ்த்திட வேண்டும் என்று உறுதி பெறுவர்.
இதனை விளக்கிடும் நிகழ்ச்சிகள் பலப்பல உள, வரலாற்று ஏடுகளில்; நாமே இன்று இந்த நிலை நமது நாட்டிலே மலர்ந்திடக் கண்டிருக்கிறோம்.
இனி மற்றோர் விதத்திலும் மற்றப் பற்றுக்களைக் காட்டிலும் நாட்டுப்பற்று ஆழமானது, அழுத்தமானது, விரிந்து பரந்து நிற்பது என்பதனை உணரலாம்.
மதம், இனம், மொழி என்பனவற்றிலே உள்ள "பற்று' பற்றிப் பார்த்திடும்போது, ஒரு நாட்டு மக்களில் ஒவ்வொரு பிரிவினர் ஒவ்வோர் மதத்தில், இனத்தில், மொழியில் "பற்று'க் கொண்டவர்களாக இருப்பர். நாட்டு மக்கள் முழுவதும் ஒரே விதமான பற்றுக் கொண்டவர்களாக இருந்திடார். ஆனால், நாட்டுப்பற்று எனும் உணர்ச்சியோ, அந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் இருப்பது.
ஒரு கோடி பேர் கொண்ட நாட்டு மக்களை இன அடிப்படையில் பிரித்துக் கணக்குப் பார்க்கும்போது, 15 இலட்சம் மக்கள் இன்ன இனம், 25 இலட்சம் மக்கள் இன்னோர் இனம், 20 இலட்சம் மக்கள் வேறோர் இனம் என்று இருக்கக் கூடும். மொழியிலும் அதுபோல, மதத்திலும் அப்படியே, பிரிவுகள் இருக்கும்.
ஆனால், அந்த நாட்டு மக்கள் என்ற நிலையில் கணக்கெடுக்கும்போது ஒரு கோடி!
கத்தோலிக்கர், பிராடெஸ்டெண்டு, பௌத்தர், முஸ்லீம், இந்து என்று மதத்தின் அடிப்படையில் பிரித்துக் கணக்குப் பார்க்கும்போது, ஒரு நாட்டு மக்கள் அவ்வளவு பேரும் ஒரே பட்டியலில் இருப்பதற்கில்லை.
நாட்டு மக்களே! வாரீர்!
என்ற அழைப்பு கிடைத்திடும் போது அந்த நாட்டு மக்கள் தொகை அவ்வளவும் திரள்கிறது. கத்தோ-க்கர்களே! வருக! பௌத்தர்களே வருக! என்று அழைத்திடும்போது, அந்த நாட்டு மக்கள் அவ்வளவு பேர்களும் அல்ல, அவர்களிலே ஒரு பிரிவினர் மட்டுமே வர முடியும்!
மக்கள், பல்வேறு பிரிவினர்களாக இருந்து வருகின்றனர். ஆனால், இந்தப் பிரிவுகளில், மிகப் பெரிய அளவுள்ள மக்களை ஒரே முகாமில் கொண்டு வந்து நிறுத்துவது, நம் நாடு எனும் உணர்ச்சிதான். நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி எனும் பணியாற்றிடும்போது, மற்ற எந்தத் தனித்தனி உணர்ச்சிகளையும் விட, நாட்டுப் பற்று எனும் உணர்ச்சியே மேலோங்கி நிற்கும்; நிற்கிறது.
உலகிலே பல நாடுகள்! பல நாடுகளின் பிரதிநிதிகள் கொண்ட ஓர் மன்றத்துக்கு, ஒவ்வொரு நாடும் குடிமகனா என்பதுதான் இலக்கணமாகக் கொள்ளப்படுகிறது. மொழி, இனம், மதம், வேறுவிதமான பற்று, இது அல்ல.
ஐக்கிய நாடுகள் மன்றத்துக்கு இந்தியாவின் உறுப்பினராகச் சென்றவர். சக்ளா! அவர் பாகிஸ்தானின் அடாத செயலைக் கண்டித்துப் பேசினார்; "இந்தியர்' என்ற முறையில்; அவருடைய நியாயவாதத்தை முரட்டுத்தனத்தால் முறியடிக்கத் துடித்தார், பாகிஸ்தான் உறுப்பினர் புட்டோ!
புட்டோவும் சக்ளாவும் இஸ்லாமியர்! மார்க்கத்தால் ஒன்றுபட்டவர்கள்.
உலகிலே ஏதேனும் ஓரிடத்தில், இஸ்லாமிய மாநாடு நடைபெற்றாலோ மார்க்க மாநாடு நடைபெற்றாலோ புட்டோவும் சக்ளாவும் இஸ்லாமியத்தின் பிரதிநிதிகள் என்ற உரிமையுடன் கலந்து கொள்ள முடியும். ஆனால், நாடு என்ற பெயரில் கூடும் போது, சக்ளா இந்தியாவுக்காக, புட்டோ பாகிஸ்தானுக்காக என்பதுதான் நடைபெறும்; நடைபெற்றது; அதுதான் நியாயம்; நாட்டுப் பற்றுக்கு அதுதான் சிறப்புமிக்க சான்று.
மக்களை நிறம் கருதிப் பிரித்திடின், கருப்பு, சிகப்பு, வெள்ளை, மாநிறம் என்று பிரித்திடின், ஒவ்வொரு வண்ணத் துக்கு ஒவ்வொரு நாட்டினர் என்று இருந்திடாது; கருப்பு வண்ணமுடையார் எந்த நாட்டிலே இருப்பவராயினும் முகாமாவார்! அதுபோன்றே ஒவ்வோர் வண்ணத்தினரும்,
படித்தவர் - படிக்காதவர்
செல்வர் - ஏழை
எனும் முறைப்படி மக்களைப் பிரித்திடின் பல்வேறு நாடுகளிலுள்ள செல்வர்கள், அமெரிக்க ராக்பெல்லரும் இந்தியாவின் டாட்டாவும், ஒரே முகாமிலும் அமெரிக்க சுரங்கத் தொழிலாளியும் கோலார் தங்கவயல் தொழிலாளியும் ஒரு முகாமிலும் சேர்ந்திட வேண்டிவரும்.
அந்த விதமாகப் பிரித்துப் பார்ப்பது, மக்களின் பொருளா தார நிலையை அடிப்படையாகக் கொண்டு; நாட்டு அடிப்படையில் அல்ல.
வைத்தியர் வரதப்பிள்ளை, மருத்துவ மாநாட்டுக்குச் செல்கிறார்! மாநாட்டுத் தலைவர் மகமத் மூசா! வரவேற்புத் தலைவர் பிரணதார்த்தி ஐயர்! செயலாளர் செபாஸ்டியன்! என்று இருந்திடக் காண்கிறார். மதத்தின் அடிப்படையில் ஒன்று சேர முடியாத மூசாவும் பிரணதார்த்தியும், செபாஸ்டியனும் அவர்களுக்கு மருத்துவத் துறையிலே உள்ள "பற்று'க் காரணமாக ஒன்றாகக் கூடுகிறார்கள் - மருத்துவத் துறையினரான நாம்! என்று பேசுகின்றனர்! நமது பிரச்சினைகள் என்று கூறுகின்றனர்.
தம்பி! அதே மருத்துவ மாநாட்டில், சித்த வைத்தியர் சிதம்பரமும் இருப்பார், யூனானி வைத்தியர் யூசுப் இருப்பார்; ஆயுர்வேத வைத்திர் ஆராவமுதும் இருப்பார்; மேனாட்டு முறை பயின்ற சர்ஜன் செபாஸ்டியனும் இருப்பார். பொதுவாக மருத்துவ மாநாடு என்று இருப்பதால், மருத்துவத்தில் உள்ள வெவ்வேறு முறையினரும், அந்த வேறுபாட்டினைக் கவனிக் காமல், மருத்துவத் துறையில் உள்ள "பற்று'க் காரணமாக ஒன்று கூடுகிறார்கள். மறந்துவிட்டேனே, லேடி டாக்டர் லலித குமாரியும் அந்த மாநாட்டில் இருப்பார்.
அடுத்து ஓர் இடத்தில் சித்த வைத்தியர்கள் மாநாடு என்றோ, யூனானி வைத்தியர் மாநாடு என்றோ, ஆயுர்வேத வைத்தியர் மாநாடு என்றோ, அலோபதி வைத்தியர் மாநாடு என்றோ கூட்டினால், பொதுவாக மருத்துவ மாநாடு என்று கூட்டப்பட்டதிலே கலந்து கொண்டவர்கள் அனைவரும் இருந்திடுவார்களா! முடியாது!
நமது யூனானி முறை கைகண்டது என்றோ
சித்த வைத்தியமே சிலாக்கியமானது என்றோ
ரிஷிகளும் தபோதனர்களும் அருளிய முறை ஆயுர்வேதம் என்றோ இப்படி எந்தெந்தத் தலைப்பிலே மாநாடு கூட்டப் படுகிறதோ, அந்தத் தலைப்பிற்குச் சொந்தம் கொள்பவர்களின் பாணியில் பேச்சு அமையும்.
இசையைத்தான் எடுத்துக் கொள்ளேன், இனிமை பொது, எந்தவிதமான இசைக்கும்; இசை என்றாலே கேட்பவர்களை இசைய வைப்பது என்பதுதானே!
பொது இசை மாநாடு கூடினால், அமெரிக்க ஜாஸ் வாத்தியக்காரரும், தமிழக நாதஸ்வர வித்துவானும் அலகாபாத் ஷெனாய் வித்துவானும், கல்கத்தா டோலக் வாத்தியக்காரரும் கூடிப் பேசிடலாம்.
கீழ்நாட்டு இசை என்று மாநாட்டை மாற்றிவிட்டால்? மேனாட்டு மெருகின் போன்ற மேதைகூட இயலாது.
மேனாட்டு இசை மாநாடு என்றால்? தேன்தமிழ் இசைத்திடும் தேசிகருக்கு இடம் கிடைக்காது.
தம்பி! "பற்று'களின் வகையை அதிகமாகப் பிரிக்கப் பிரிக்க, பற்றுக் கொண்டோரின் தொகை குறைந்து போய் விடும்.
அதனை விளக்கத்தான் இத்தனை மாநாடுகளுக்கு அழைத்துச் சென்றேன்.
புதுமை எழுத்தாளர் மாநாடு
புரட்சி எழுத்தாளர் மாநாடு
தேசிய எழுத்தாளர் மாநாடு
பகுத்தறிவு எழுத்தாளர் மாநாடு
என்று பல உண்டல்லவா? இவைகளிலே கலந்து கொள்ளும் எழுத்தாளர்கள், எந்த நாடு, எந்த மொழியினர் என்பதல்ல தகுதி - புதுமை - புரட்சி - தேசியம் - பகுத்தறிவு - எனும் "பாணி'தான் முக்கியம்.
இந்த மாநாடுகளின் பெயருடன் "தமிழ்' என்ற சொல்லை இணைத்துவிடு - ஆந்திரத்தின் தேசிய எழுத்தாளரோ, கேரளத்தின் புரட்சி எழுத்தாளரோ, அந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது. நடையின் தன்மையைக் குறிப்பிடாமல்,
தமிழ் எழுத்தாளர் மாநாடு
என்று கூட்டினால் வரக் கூடிய எழுத்தாளர்களின் எண்ணிக் கையைவிடக் குறைவாகத்தான், தமிழ்ப் புரட்சி எழுத்தாளர், தமிழ்ப்புதுமை எழுத்தாளர் என்று தனித்தனியாக அமைக்கப் படும் மாநாட்டிலே எழுத்தாளர் கலந்து கொள்வர்.
எழுத்தாளர் மாநாடு என்று பொதுவாக மாநாடு கூட்டினால் நாடு, மொழி, பாணி எனும் எந்தப் பாகுபாடுமின்றி, எழுத்தாளர் அனைவரும் கூடிடுவர். விரிவாக இருக்கும்.
துறைகளைப் பிரிக்கப் பிரிக்க, ஒரே துறையிலே நுணுக்கமான பிரிவுகளை வகுக்க வகுக்க, அப்படிப்பட்ட பிரிவுகளின் அடிப்படையில் கூடக் கூட, கூடுவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகும்.
தம்பி! இதே எழுத்தாளர் மாநாட்டை மற்றோர் விதத்திலேயும் கூட்டிப் பார்க்கலாம்; கற்பனையாகத்தானே! ஆகவே காசு செலவா? வந்துபார்!
நான் தந்த முந்தைய தலைப்புகளில் எதையாவது ஒன்றை எடுத்துக்கொள் - புதுமை எழுத்தாளர் என்று எடுத்துக் கொள்ளேன் - இந்த மாநாட்டை.
புதுமை எழுத்தாள இளைஞர் மாநாடு என்று மாற்றிவிடு.
புதுமை எழுத்தாளர் மாநாட்டுக்கு வருகிறவர்களின் தொகையைவிடக் குறைவானவர்களே கூடுவர்.
வேறோர் மாநாடு கூட்டிப் பார்ப்போமா! இதோ, தம்பி! இந்த மாநாடு எப்படி இருக்கும் பார்த்துச் சொல்லு.
புதுமை எழுத்தாள தொண்டை மண்டலத் துளுவ வேளாள இளைஞர் மாநாடு!
எப்படித் தம்பி, மாநாட்டின் பெயர்!! ஆனால், எத்தனை பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறாய்!!
எனக்கு எழுத்தாளரிடம் "பற்று' என்று கூறிக் கொள்வதற்கும், நான் பற்றுக் காட்டுவதானால், அவர்
எழுத்தாளராகவும் இருக்க வேண்டும்,
புதுமை எழுத்தாளராகவும் இருக்க வேண்டும்.
இளைஞராகவும் இருக்க வேண்டும்,
தொண்டை மண்டலத் துளுவ வேளாளராகவும் இருக்க வேண்டும்.
என்றால், அந்தப் "பற்று' விரிவானதாகவா அமையும்! மிகக் குறுகிப் போகும்; விரைவிலே கருகிப் போகும்!
ஆகவேதான், தம்பி! "பற்று' கூடுமானவரையில் குறுகிய நோக்கம் கொண்டதாக, குறிப்பிட்ட அளவுள்ள சிறு தொகையினருக்கு மட்டுமே சம்பந்தப்பட்டதாக இருத்தல் கூடாது.
"பற்று' நேர்த்தியானதாகவும், பயன்தரத் தக்கதாகவும் இருந்திட வேண்டுமானால், சமூகத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையினர், இந்தப் "பற்று' எமக்கும் தேவை என்று கூறத் தக்கனவற்றின் மீது இருந்திட வேண்டும். எண்ணிக்கை பெருகிட வேண்டும் என்பதல்ல என் நோக்கம் - மிகப் பலருக்கும் தேவைப்படு வனவற்றின் மீது "பற்று' இருந்தால்தான், அந்த மிகப் பலரின் துணை கிடைத்து அந்தப் "பற்று' வளர்ந்து, தரம் உயர்ந்து, பலன் மிகுதியாகிடும்.
"பற்று' என்பதிலே இத்தனை சிக்கல் இருக்கிறதா என்றெண்ணிச் சலித்துக் கொள்ளாதே, தம்பி! "பற்று' வேண்டும். நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்றின் மீது "பற்று' ஏற்பட்டே தீரும். ஏற்பட்டுவிடும் "பற்று' எல்லாம் பயனளித்திடும் என்று எண்ணிவிடாமல், அந்தப் "பற்று' எத்தன்மையது, என்ன பலனைத் தரவல்லது, எத்துணை மக்களை உள்ளடக்கியது, அந்தப் "பற்று' வேறு ஏதேனும் பற்றினைக் கெடுத்திடக்கூடியதா என்பன பற்றி எண்ணிப் பார்த்திட வேண்டும் என்பதற்கே இவ்வளவும் கூறினேன்.
எதிலும் "பற்று'க் கொள்ளக்கூடாது, அது நம்மைப் பிணைத்துவிடும், இன்னலுக்கு ஆளாக்கிவிடும் என்று கூறுவார் உளர்; அறிவேன்.
ஏன்! இந்த உலகத்தின் மீது, வாழ்வின் மீதே "பற்று' வைக்காதே!! என்று உபதேசம் புரிவோர்கள் இருப்பதனையும் அறிந்திருக்கிறேன்.
வாழ்க்கை ஓர் நீர்க்குமிழி - பற்று வைக்காதே.
பெண்டு பிள்ளை பெருஞ்சிறை - பற்று வைக்காதே.
என்றெல்லாம் கூறுவர்; கூறியுள்ளனர். காதொடிந்த ஊசியும் வாராதுகாண் கடை வழிக்கே என்று பட்டினத்தடிகள் சொன்னதை எனக்குச் சொன்னவர்களே, அவர் தமது தாயாருக்கான கடைசிக் கடனைச் செய்திட வந்தார் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
தாமரை இலைத் தண்ணீர்போலப் பட்டும் படாததாக, ஒட்டியும் ஒட்டாததாக இருந்திடச் சொல்பவர்களும், பக்குவம் ஏற்பட ஏற்பட, எப்படி விளாங்கனி முற்றிட முற்றிட ஓட்டுக்கும் பழத்துக்கும் உள்ள "பற்று' அற்று விடுகிறதோ அது போலிருந்திட வேண்டும் என்று சொல்பவர்களும் உண்டு. கேட்டிருக்கிறேன். அவர்கள் அது போலெல்லாம் கூறியதற்குக் காரணம், "பற்று'க் கொண்டதன் காரணமாக அலைகிறார்களே, கெடுகிறார்களே, கெடுக்கிறார்களே என்ற கவலை.
"பற்று' தனது சுகத்துக்காக, நலனுக்காக, ஆதிக்கத்துக்காக ஏற்பட்டுவிடுமானால், அல்லல், தொல்லை; உண்மை.
பிறரைக் கெடுத்தாகிலும் தான் பெற வேண்டியதைப் பெற்றாக வேண்டும் என்ற கெடுமதி பிறந்திடும், சமூகம் பாழ்படும்.
நான் குறிப்பிடும் "பற்று' அந்த விதத்தது அல்ல.
ஒரு கொள்கையில், ஒரு ஏற்பாட்டில், ஒரு அமைப்பில் "பற்று'க் கொள்ளுதல்.
அந்தப் "பற்று'தான் வாழ, தன்னலம் வளர அல்ல; சமூகம் வாழ, மக்கள் நலன் பெருகிட.
இதற்கான "பற்று' நிரம்பத் தேவை.
அந்தப் பற்றும் நம்மை ஆட்டிப்படைப்பதாக ஆகிவிடக் கூடாது; கண்மூடித்தனமான பற்று ஆகவும் இருந்திடக் கூடாது, தெளிந்து தேர்ந்தெடுக்க வேண்டும்; அந்தப் பற்று நமக்குப் புது விழிப்பு, எழுச்சி, ஆற்றல் தருவதாக அமைந்திருக்க வேண்டும். நமக்கு உள்ள அந்தப் பற்று சமூகத்தை உயர்த்துவதற்கான ஆற்றலையும் வாய்ப்பையும் நமக்கு அளிப்பதாக இருந்திட வேண்டும். தம்பி! எங்கெங்கோ சுற்றி வளைத்துக் கொண்டு போவானேன்? உனக்கு நமது கழகத்திடம் பற்று இருக்கிற தல்லவா, அது என்ன உன் நலன் பெருக்கிக் கொள்ளவா! நாடு வாழ! அத்தகைய பற்று மற்றவர்க்கும் ஏற்படத்தான் பணியாற்றி வருகிறாய்; பற்று பரவிக் கொண்டு வருகிறது; பயன் கிடைத்திடும் என்ற நம்பிக்கை பிறந்திடுகிறது; கிடைத்திடும் பயன் உனக்கும் எனக்குமா! நாட்டு மக்களுக்கு!!
அண்ணன்,
அண்ணாதுரை
10-10-65