அண்ணாதுரை, சென்னை, 31–12–1958

நீதிக் கட்சியின் வரலாறு, ஓர் அரசியல் கட்சியின் வரலாறு அல்லது தமிழக அரசியல் வாழ்க்கையின் ஓர் ஆராய்ச்சியேயாகும். உப்பு பல பண்டங்களுடன் கலந்து சுவை கூட்டுவதைப் போல நீதிக்கட்சியின் பண்பாடு, இன்று பல கட்சிகளிலும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.
நீதிக் கட்சியினர் 17 ஆண்டுக்காலம் ஆட்சி நடத்தினர். அவர்கள் காலத்தில்தான் “கோயில் சொத்துக்களுக்குக் கணக்கு வைக்க வேண்டும்” என்று கூறும் அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் போன்ற சிறந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
நீதிக் கட்சியின் ஆட்சி நடைபெற்ற அந்த நாட்களில், இந்தியாவில் “இரட்டை ஆட்சிமுறை” செயலில் இருந்தது. முக்கியமான அதிகாரங்களையெல்லாம் ஆங்கிலேயர்கள் தங்கள் கையில் வைத்துக்கொண்டு , சில்லறை அதிகாரங்களை மட்டுமே மாநில ஆட்சியாளர்களிடம் தந்தனர். அந்தச் சில்லறை அதிகாரங்களை வைத்துக்கொண்டுதான், சிறந்த முறையில் ஆட்சிப் பொறுப்பை நீதிக் கட்சியினர் நடத்தினர்.
அந்த இரட்டை ஆட்சி முறை, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்துடன் முடிந்துவிடவில்லை; இன்னும் அதே நிலைதான் இருந்து வருகிறது. மத்திய அரசு பலமான அதிகாரங்கள் அனைத்தையும் தன்னிடம் வைத்துக்கொண்டு, மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிக்கும் அதிகாரத்தை மட்டும் மாநில அரசுகளிடம் விட்டு வைத்திருக்கிறது.
உணவுப் பொருள் தட்டுப்பாடு என்றால்-விலைவாசி உயர்வு என்றால்-மக்கள் என்னைத்தான் குறை சொல்வார்கள்; ஆனால் அதற்குக் காரணமாக உள்ள வரவுக்கு அதிகமாகச் செலவிடும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பது மத்திய அரசாக இருக்கிறது; அதற்காக ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துத் தள்ளும் அதிகாரத்தையும் மத்திய அரசே பெற்றிருக்கிறது; இதனால் வேதனையுறுகின்ற மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் பொறுப்போ, மாநில அரசினுடைய தாக இருக்கிறது.
இப்போதைய பத்தாண்டுக் காலத்தில் மிக முக்கியப் பணி ஒன்று உண்டென்றால், அது, மத்திய மாநில அரசுகளுக்கிடையே உள்ள அதிகாரங்களைச் சம பலம் உள்ளவர்களாக உருவாக்குவதேயாகும்; அதற்கேற்ப அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப் பட வேண்டியது அவசியமாகும்.
இதை எந்தெந்த வகையில் செய்யலாம்-இதற்கு அரசியல் சட்டம் எந்தெந்த வகையில் திருத்தப்பட வேண்டும் என்பதை நீதிக்கட்சி தனிக்குழு ஏற்படுத்தி ஆராய்ந்து இக்கட்சியின் அடுத்த மாநாட்டில் அறிக்கை கொடுத்தால், அரசியல் ரீதியாக உலகுக்கு சிறந்த பணியாற்றியவர்களாவார்கள்.
அரசியல் சட்டம் திருத்தப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்பதை தி.மு.கழகம் மட்டும் கூறவரவில்லை; மத்திய அரசிலே எதற்கு ஒரு சுகாதார இலாகா எதற்கு ஒரு சுகாதார அமைச்சர் என்றும் ‘டில்லியிலே எதற்கு ஒரு கல்வி இலாகா-அங்கே எதற்கு ஒரு கல்வி அமைச்சர்’ என்றும் ஆந்திர முதலமைச்சர் வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார்!
டெல்லி அரசினர், தாங்கள் கண்காணிக்கப் பள்ளிகளே இல்லை என்பதால்தான் “மத்தியப் பள்ளிகள்” என்று ஆங்காங்கு திறக்கிறார்கள் போலிருக்கிறது; இவை தேவைதானா? என்று ஆந்திரா முதலமைச்சர் வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார்!
ஆகவே இதுபற்றியெல்லாம் ஆராய்ந்து அடுத்த ஆண்டே அறிக்கை ஒன்றைக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கட்சி இறந்துவிட்டதா-இருக்கிறதா என்று கேட்போர் அது இருந்து செய்தது அறியத் துணை செய்வதாக அமையட்டும்.
சென்னை 31-12-1958
Source : http://www.annavinpadaippugal.info/sorpozhivugal/pongal_thirunaal.htm