நீண்ட இடைவெளிக்குப் பிறகு!…..
இடையில் கடிதம் எழுதாமைக்குக் காரணம்
ஜோரேசுக்கு “வண்டி’யே “சர்க்கார் மாளிகை’ -
எனக்குக் “காஞ்சி’யே “திராவிடநாடு’
இந்தி எதிர்ப்புக்கு மக்கள் பாராட்டு
துதி பாடிக் கிடந்தவர்களின் தூற்றலைப் பொருட்படுத்தாதே!
மூட்டி விடுவோன் -
கேட்டு மருள்வோன் -
மன்றத்தான் -
தெளிவளிப்பான் -
உரையாடல்கள்
கழகம் புயலுக்குத் தப்பி வளைந்திடும் நாணல்
ஆங்கிலமே ஆட்சிமொழி ஆகவேண்டும் என்பார்
கருத்துரைகள்
இந்தி ஆதிக்கத்தைக் கண்டித்தவர்களின் கனிவுரைகள்
தம்பி!
நீண்ட பல நாட்களுக்குப் பிறகு — நாட்களா? — பல திங்களுக்குப் பிறகு மடல் மூலம் உன்னுடன் அளவளாவி மகிழும் வாய்ப்பினைப் பெறுகிறேன். என் இதயத்துக்குப் பெரிதும் வேதனை தந்த இடைவெளி. குற்றம் உன்மீது துளியும் இல்லை. என் நிலை விளைவித்ததே இந்த இடைவெளி. கிழமைதோறும் நாட்டு நடப்புகளைக் காண்பதால் என் உள்ளத்தில் எழும் எண்ணங்களை உன்னிடம் எடுத்துக்கூறி, உன் இசைவு எத்தகைய செயல் முறைக்குக் கிடைக்கும் என்பதனைக் கண்டறியும் சுவைமிக்க சீரிய முயற்சியாக “தம்பிக்குக் கடிதம்’ எனும் இப்பகுதியைத் துவக்கினேன் — வளர்ந்தது — களிப்புமிகக்கொண்டேன் — உன் மகிழ்ச்சியையும் நான் அறிவேன்.
ஆனால். . .? — ஆனால் என்ன அண்ணா! நான் இதழ் பெற மறுத்தேனா? இன்முகம் காட்டத் தவறினேனா? ஒரு கிழமை மடல் வரத் தவறினாலும், ஏன் வரவில்லை? ஏன் வரவில்லை? என்று ஆவலுடன் கேட்காதிருந்தேனா? ஆனால் என்ற ஆபத்தான வார்த்தையைப் போடுகிறாயே! என்மீதா தவறு இருக்கிறது? — என்று, தம்பி! கேட்கத் துடிக்கிறாய், உணர்கிறேன்; ஆனால், அந்தக் கேள்வியுடன் கோபத்தை அல்ல, கனிவினைத் தான் கலந்து தருகிறாய் — என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஓராயிரம் தொல்லைகள் நிரம்பிய பணியினைக் குறித்து உனக்கே தெரியுமே. கடுமையான பணியாற்றுவதற்கு இடையிலேயும், உனக்கு மடல் எழுதவும், கதை, கட்டுரை, உரையாடல் போன்ற வடிவங்களில் என் எண்ணங்களை வெளியிடவும் நான் தயங்கினதுமில்லை — அஃது எனக்குப் பளுவான வேலையாகவும் தோன்றினதில்லை — சொல்லப்போனால், மனத்திலே ஏற்பட்டு விடும் சுமையும், அதனாலேற்படும் சோர்வும், உனக்காக எழுதும்போது பெருமளவு குறைந்துபோவதுடன், புதிய தெம்பும் பிறந்திடுகிறது — ஆகவே இடையில், இதழ் நிறுத்தப்பட்டதற்குக் காரணம், எனக்கு எழுத நேரமும் நினைப்பும் கிடைக்கவில்லை என்பதுமல்ல, எழுதுவதால் களைப்பும் இளைப்பும் ஏற்பட்டு விட்டது என்பதுமல்ல. இதழ் நடத்தும் நிர்வாகப் பொறுப்பினைப் பார்த்துக்கொள்ள, முட்டுப்பாடின்றி நடத்திச் செல்ல எனக்கு நேரம் கிடைக்காததும், அதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுமே, திராவிட நாடு இதழ் நிறுத்தப்பட்டதற்குக் காரணம். எனக்கு மட்டுமே தொல்லை தந்த நிலைமைகளைப்பற்றித் தம்பி! உன்னிடம் சொல்லி, உன் மனதுக்குச் சங்கடத்தை உண்டாக்க விரும்பவில்லை; பல்வேறு காரணங்களால், “திராவிட நாடு’ நிறுத்தப்பட்டது; பல திங்களாகிவிட்டதால், “திராவிட நாடு’ என்ற பெயருடன் இதழ் நடத்தத் துரைத்தனம் அளித்திருந்த அனுமதி காலாவதி யாகிவிட்டது. மீண்டும் அதே பெயருடன் இதழ் நடத்தத் துரைத்தனத்தாரை அணுகும் முயற்சி நடைபெற்றவண்ணம் இருக்கிறது — நண்பர் செழியன் ங. ட. அதற்காவன செய்வதாகக் கூறியுள்ளார் — என்றாலும், அதற்கான “உத்தரவு’ கிடைத்திட எத்தனை காலமாகுமோ, யார் கண்டார்கள்! துரைத்தனத் தாருக்குத் தான் என்மீது அளவுகடந்த அன்பாயிற்றே!! அறிவாயே!! அதனால், நான் சிறையில் இருந்தபோது, என் இளையமகன் இளங்கோவன், “காஞ்சி’ எனும் பெயரில் கிழமை இதழ் “இலக்கிய இதழ்’ நடத்த — பெற்றிருந்த அனுமதியைப் பயன்படுத்தி, என் பணியினைத் தொடர்ந்திட முனைகின்றேன். “திராவிட நாடு’ இதழ் நடத்தத் துரைத்தன அனுமதி கிடைத்ததும், அந்தப் பெயருடன் இதழ் வெளிவரும் — “காஞ்சி’ இலக்கிய இதழாகிவிடும். இந்த நல்ல நம்பிக்கையுடன் நான் முன்பு “திராவிட நாடு’, இதழில் தந்து வந்தவைகளை இனி, “காஞ்சி’ இதழ் மூலம் தர உன் இசைவு கிடைத்திடும் என்று எதிர்பார்த்து, பணியினைத் துவக்குகிறேன்.
தம்பி! எப்போதோ படித்த ஒரு வரலாற்றுத் துணுக்கு நினைவிற்கு வருகிறது. தென் அமெரிக்க பூபாகத்தில் மெக்சிகோ நாட்டில் விடுதலைப்போர் நடாத்திய “ஜோரேஸ்’ எனும் மாவீரன், தலைநகர் இழந்து, அரசாங்க அலுவலகம் இழந்து, குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு வண்டியிலேறி, காட்டுப்பகுதிக்குச் செல்கிறான்; உடன் இருந்த தோழர்கள் கேட்கிறார்கள், “சர்க்கார் மாளிகை பறிபோய்விட்டதே, இனி சர்க்காரை எங்கிருந்து நாம் நடத்துவது?’’ என்று; ஜோரேஸ், பதிலுரைத்தான், “நாம் இருக்கும் இடம்தான் சர்க்கார் மாளிகை! முன்பு கற்களால் கட்டப்பட்ட மாளிகையிலிருந்துகொண்டு சர்க்காரை நடத்திவந்தோம்; அது மீண்டும் நம் கைவசமாகும் வரை இந்த “வண்டி’தான் சர்க்கார் மாளிகை!’’ என்று.
கோபித்துக்கொள்ளப் போகிறார்கள் தம்பி! பார்! பார்! இந்த அண்ணாத்துரை எத்தனை ஆணவத்துடன் தன்னை ஜோரேசுடன் ஒப்பிட்டுக்கொள்கிறான் என்று. நான் கூறியதிலே எனக்கும் ஜோரேசுக்கும் அல்ல; அந்த மாவீரன் சர்க்கார் மாளிகையாக, வண்டியைப் பயன்படுத்திக்கொண்டது வரையிலே மட்டுமே உவமை என்று கூறி, அவர்களின் கோபத்தைக் குறைத்துக்கொள்ளச் சொல்லிவிடு — தம்பி! ஜோரேஸ், வண்டியைச் சர்க்கார் மாளிகையாக்கிக்கொண்டதுபோல, நான், நிலைமை காரணமாக, காஞ்சி இதழை “திராவிட நாடு’ இதழாகப் பயன்படுத்திக்கொள்கிறேன்.
இரவு ஒரு மணிக்கு விழுப்புரம் கூட்டத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பினேன் — அதற்குப் பிறகும் தூக்கம் பிடிக்கவில்லை — மூன்று நாட்களாக, திருச்சி — பெரம்பலூர் — விழுப்புரம் ஆகிய இடங்களில், இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டு, சிறை சென்று திரும்பிய தோழர்களை வாழ்த்தி வரவேற்கும் விழாக்களில் கலந்து கொண்டதால் கிடைத்த உற்சாகம் என்னைத் தூங்கவிட வில்லை. எத்துணை ஆர்வத்துடன் இருக்கின்றனர் சிறை சென்று வந்துள்ள நம் தோழர்கள், மக்களின் அன்பு எத்தகைய மன நெகிழ்ச்சியைத் தருகிறது! சிற்றூர்களிலே எல்லாம் கூடக் காண்கிறேன் ஒரு புது எழுச்சி, மகிழ்ச்சி. பல மிகக்கொண்ட ஒரு ஆட்சி, பிடிவாத உணர்ச்சியுடன் இந்தி ஆதிக்கத்தைப் புகுத்தும்போது, இன்னமும் போதுமான அளவு இதழ்களின் நல்லாதரவைப் பெற முடியாத நிலையிலே உள்ள நமது கழகம், துணிந்து நின்று அந்த ஆதிக்கத்தை எதிர்ப்பது கண்டு, மக்கள் மனதாரப் பாராட்டுகிறார்கள்.
இவர்களின் எதிர்ப்பும் இல்லை என்றால். . .! என்று எண்ணிப் பெருமூச்செறிபவர்களும்,
இவர்களின் எதிர்ப்பினால் அல்லவா, இந்தி ஆதிக்கக் காரர்கள், கருப்பஞ்சாற்றிலே குழைத்துத் தருகிறார்கள் கடுவிஷத்தை என்று கூறுபவர்களும்,
இவர்களின் எதிர்ப்புக் கண்டும், சர்க்கார் தன் போக்கை மாற்றிக்கொள்ள மறுக்கிறதே என்று கூறி ஆயாசப்படுபவர்களும்,
பாவம், இளைஞர்கள்! இன்பவாழ்வில் ஈடுபடவேண்டிய வயதினர்! சிறைக்கொடுமைக்குத் தம்மைத்தாமே ஆளாக்கிக் கொண்டார்கள்; அவர்கள் சிறையிலே மேற்கொண்ட இன்னல்களை ஒரு நொடியிலே மறந்துவிடத் தக்கவிதத்தில், நமது இதயத்திலிருந்து எழுந்திடும் அன்பினைச் சொரிவோம் என்ற உணர்ச்சி கொள்பவர்களும்,
நாட்டு மொழி, பாட்டு மொழி, வீட்டு மொழி என்றெல்லாம் பிறர் பேசுகிறார்கள், விரிவுரையாற்றுகிறார்கள், போற்றுகிறார்கள், புகழாரம் சூட்டுகிறார்கள், எனினும் வேற்றுமொழி வேங்கை எனப் புகுவதுகண்டு விரட்டிட முன் வருகிறார்களில்லை. இந்த இளைஞர்களோ, எமது மொழியை அழித்திடவும், எமது வாழ்க்கை நிலையினைக் கெடுத்திடவும் வந்திடும் இந்தியினை எத்தனை இன்னல்கள் எமைத் தாக்கிடக் கிளம்பிடினும், எதிர்த்தே நிற்போம் என்று சூளுரைத்துச் செயல் படுகின்றனரே; இத்தகையார் “இரண்டாங்கட்டிலும்’ இன்பத் தமிழ் அழிப்பார் கூடத்திலும் இருந்திடும் நிலை உளதே; இந்தக் கொடுமையினை மாற்றிடும் நன்னாளே, பொன்னாள், அது எந்நாள், எந்நாள்? என்று ஆவலுடன் கேட்ட வண்ணமுள்ளனர் பல்லாயிரவர்.
தம்பி! சிறை சென்று திரும்பிடும் தோழர்களில் பலருக்கு உடல் நலிவு இருந்திடக் காண்கிறேன் — நானே அப்படித்தான் — ஆனால் உள்ளப்பாங்கோ! நாம் தூய்மையான, தேவையான, நியாயமான ஒரு அறப்போரில் ஈடுபட்டிருக்கிறோம் என்ற எழுச்சிமிகு எண்ணத்தை உள்ளம் ஏந்திக்கொண்டிருக்கக் காண்கிறேன் — பெருமிதம் கொள்கிறேன்.
சிறையிலே உடல்நலக் குறைவு ஏதேனும் ஏற்பட்டதோ? — என்று கேட்கிறேன், விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகம் அவர்களை — அவர் இளைஞர் அல்ல — அவர் கூறுகிறார், “அதெல்லாம் இல்லை இருந்தாலும் பரவாயில்லை’’ — என்று கூறும்போது முகத்திலே புதியதோர் பொலிவு மலரக் காண்கிறேன். மருத்துவமனையில் கிடத்தப்பட்டிருந்த அன்பில் தர்மலிங்கம் — இன்றும் முழு அளவு நலம் பெற்றுவிட்டார் என்று கூறுவதற்கில்லை — அவரைக் கேட்கிறேன் என்ன? என்று, “ஒன்றுமில்லை! நன்றாக இருக்கிறேன்’’ என்கிறார்; வழக்கமாக அவர் பார்வையிலே ஒரு மிரட்சி தெரியும், இப்போது ஒரு புது விதக் கனிவே பிறந்திருக்கிறது சிறைச்சாலை அறச்சாலையாகி விட்டிருக்கிறது, தம்பி! அங்குச் சென்று திரும்பியவர்கள் செந்தமிழ்க்குத் தீமை வந்த காலை நாம் நம்மாலான செயலினைச் செய்தோம் என்ற உணர்ச்சி பொங்கிடும் நிலை பெற்றுள்ளனர் அறப்போர் வெற்றி ஈட்டித் தருகிறது என்பதற்கு இதனைச் சிறந்ததோர் சான்றாக நான் கொள்கிறேன். சிறைக்கஞ்சா உள்ளமும், சிறைக் கொடுமைகளைக் கண்ட பிறகும் சலிப்புப் பெறாத மனமும் ஏற்பட்டுக்கொண்டு வருவது, கழகத்திற்குக் கிடைத்திடும் புதியதோர் கருவூலமென்பேன்.
இத்தகைய அறப்போர் வீரர்தம் மனப்போக்கு பற்றியே ஆங்கிலக் கவிஞரொருவர்,
கருங்கற் சுவரும் காவற் கூடமாகுமோ
இரும்புக் கம்பியும் பெருஞ் சிறையாகுமோ
தூய்மை மனத்தன் விடுதலை வீரன் புகும்
சிறைச்சாலை தானும் அறச்சாலை ஆகுமே.
என்று கூறினார்.
இத்தகைய மனப்பான்மையின் மாண்பினை அறிந்துகொள்ள இயலாதார் கடாவுகின்றனர், “போராட்டமா! எப்போது வெற்றிபெறும்’’ என்பதாக.
காகிதத்தால் பூ செய்து, அதற்குக் கவர்ச்சிமிகு வண்ணம் பூசி, சிறிதளவு நறுமணமும் தடவி, அங்காடிக்குக் கூடை கூடையாகக் கொண்டு செல்வது எளிது — நேரமும் அதிகம் பிடிக்காது. ஆனால் அதனை எவர் கொள்வர்? எதற்கு அது பயன்படும்? காகித மலர்க்குவியல் கடை நிரம்ப வைத்திருக் கின்றேன், காணவாரீர்! பெற்றுச் செல்வீர்! பெருமகிழ்வு கொள்வீர்! என்று கூவிக்கூவி விற்றாலும், அந்த இடத்தைப் பூக்கடை என்று எவரும் கூறிடார். எளிதாகச் செய்திடக்கூடியது காகிதமலர் — மல்லியும், முல்லையும், மருக்கொழுந்தும் பிறவும் எளிதிலே கிடைத்திடத்தக்க முறை இல்லை. பாத்தி எடுத்து, பண்படுத்தி, பதியம் வைத்து, பலநாள் பாடுபட்ட பிறகே, மலர் கிடைத்திடும். கரத்திலே முள் தைக்கும், காலிலே கல் தாக்கும், கோடையின் கொடுமை, மாரியின் மருட்டுத் தன்மை என்பவைகளைத் தாங்கிக்கொள்ள வேண்டும், மணமிகு முல்லை பெற; கிடைத்திடின் மணம் இனிமை தரும், கிடைக்கு முன்பு பொறுமையுடன் வேலை செய்தாக வேண்டும்.
நாம் மேற்கொண்டுள்ள செயல், காகிதப்பூ செய்திடுவது போன்றது அல்ல; முல்லை பூத்திடும் பூங்கா அமைப்பது போன்றதாகும். பல்வேறு வகையான வலிவினைத் தேக்கி வைத்துக்கொண்டு, துரைத்தனத்தார், இந்தி ஆதிக்கத்தைப் புகுத்துகின்றனர்; அதனை எதிர்க்கும் நம்மிடம், தூய்மையும், நேர்மையும், அஞ்சாமையும், துவளாமையும், அவசரப்படாத தன்மையும், நம்பிக்கையும் படைக்கலன்களாக உள்ளன. இந்த இரு தரப்புக்கும் இடையில் எழும் “போராட்டம்’, முள்ளு முனையிலே மூன்று குளம் வெட்டிடும் மாயத்தைத் துணைகொண்டது அல்ல; பிடி சாபம்! என்று சபித்திடும் தபோபலத்தைத் துணைக் கொண்டதும் அல்ல. தொடர்ந்து பணியாற்றுவது, துவளாமல் கிளர்ச்சி நடத்துவது, பொறுப்புடன் அறப்போர் நடாத்துவது எனும் முறையில் அமைந்திருப்பது. வெள்ளியன்று விதை தூவி செவ்வாயன்று அறுவடை செய்திடும் விதமாக ஒரு விசித்திர வெற்றியை இதிலே, ஏமாளிகளன்றிப் பிறர் எதிர்பார்க்க மாட்டார்கள். காலம் வரவேண்டும்; காலம் கனிய வேண்டும்; காலத்தைக் கனிந்திடச் செய்ய வேண்டும், வெற்றியை ஈட்டிட. தம்பி! நமது தோழர்களின் தியாக உணர்வு, காலத்தைக் கனிந்திடச் செய்யும் என்பதிலே எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது; நான் சிறைமீண்டு, கலந்துகொண்ட விழாக்கள் என் நம்பிக்கையை மேலும் வலுவுள்ளதாக்கி இருக்கிறது.
ஒரு இயக்கம், எதிர்ப்பைத் தாங்கிக்கொள்ள, சில காலத்திற்கெல்லாம் பயிற்சி பெற்றுவிடும், பக்குவம் பெற்றுவிடும். ஆனால், ஏளனத்தைத் தாங்கிக்கொள்ளும் மனப்போக்கு எளிதில் வளராது; அதிலும் எதையேனும் மென்று தின்றபடி காலத்தைக் கொன்று கிடப்பவர்கள், இடம் தமதாக ஏதேதோ செய்து பார்த்துக் கிட்டாது போகும்போது எட்டடுக்கு மாடியிலே பெட்டி தூக்கும் வேலையேனும் பெற்று, மேலிடம் சென்று விட்டேன் என்று நாநடம்புரிபவர்கள், ஏளனமொழியினை எடுத்து வீசிடும்போது, கனகமணிக் கட்டி-லே படுத்துத் துயிலும் காதற் கிழத்தியையும் அவள் ஈன்ற கனியையும் விட்டுப் பிரிந்து, காரிருளில் கானகம் சென்று, ஊர் அழிக்கப் புறப்பட்ட கடும் புலியை வேட்டையாடச் சென்றிடும் வீரன்போல, இனிக்க இனிக்கப்பேசி, இல்லமதில் இருந்திட வாய்ப்பும் வசதியும் நிரம்பப் பெற்றிருந்தும், கடுஞ்சிறை ஏகியேனும் கன்னித் தமிழ் காத்திடுவோம் என்று கடமை உணர்ச்சியுடன் பணியாற்றி வருபவரை ஏளனம் பல பேசிடும்போது, தாங்கிக்கொள்வ தென்பது மிகமிகக் கடினம் — ஆனால், தாங்கிக்கொண்டாலன்றி அந்த இயக்கம் தணலில் தங்கம்போலாவது முடியாது — ஆகவே, தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும் என்று நான் கூறியபோது கேட்டுக் கொதித்தவரும் கோபம் கொப்பளிக்கும் நிலை பெற்றவரும் உண்டு — என்றாலும், என்னிடம் அவரெலாம் கொண்டுள்ள உள்ளன்பு காரணமாக, என்ன செய்வது! சொல்கிறான் அண்ணன்! சோற்றுத் துருத்திகளின் சொல்லம்பைத் தாங்கிக்கொள்வோம்! என்று முடிவெடுத்து, தாங்கிக்கொள்ளும் உரம்பெற்றுவிட்டனர். நமது கழகம் இந்தக் கட்டம் சென்றிருப்பதனை நான் மிகமிக முக்கியமானதாகக் கொள்கிறேன்.
ஏளன மொழி எரிச்சலூட்டும் — எரிச்சல் நம்மைச் சுடுசொல் வீசிடுவோராக்கிவிடும் — சுடுசொல் வீசிடினோ, நாம், சோர்வகல மது அருந்திட முனைவோன் இறுதியில் தானே மதுக்குடமாகிடுதல்போல, சுடுசொல் விசிட முனைந்துவிட்டால், தெளிவு, கனிவு, அறம், அன்பு, நெறி, நேர்மை யாவும் பட்டுப்போய்விடும். குறிக்கோள் கெட்டுப் போய்விடும், நாடு நம்மைக் கைவிட்டுவிட்டு, இவனும் காட்டானாகத்தான் இருக்கிறான்! ஆந்தை அலறுவதை ஆயிரமுறை கேட்டிடினும் குயில் தன் குரலோசையை மாற்றிக்கொள்கிறதா! எவரெவரோ ஏளனமொழியில் பேசுகிறார், ஏசுகிறார் என்பதற்காக, இவர்கள் வெகுண்டு அதே முறையை, அதே மொழியை மேற்கொள்வதா? மேற்கொள்கிறார்கள் எனின், இவர்கள் அவர்கள் போன்றார் என்பதன்றி வேறென்ன கூறமுடியும் என்று தீர்ப்பளித்திடும். நமது தோழர்கள் இந்தத் தெளிவு பெற்றதால், தூற்றுவோர் தூற்றட்டும், அதிலும் இவர்கள் துதிபாடிக்கிடந்தவர்கள் இன்று தூற்றித் திரிகிறார்கள், இதனை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை, அவர்கள் நாப்பறை கொட்டட்டும், நாம் நமது யாழொலியைக் கெடுத்துக் கொள்ளலாகாது என்ற உறுதி பெற்றுவிட்டனர்.
எதிர்ப்பு, ஏளனம் எனும் இரு கூராயுதங்களும் முனை மழுங்கிப் போய்விட்டதனை, தம்பி! நாமே காண்கின்றோம்; களிப்பும் கொள்கின்றோம். சிலர், தமது முறை பலன் தரவில்லை என்பதனை அறிந்தும், வேறு முறை அறியாத காரணத்தால், பொய்த்துப்போன முறையையே மேற்கொண்டுள்ளனர் — இன்னமும். மக்கள் விரும்பவில்லை, கொள்ள மறுக்கின்றனர் என்பதை அறிந்த பின்பும் காஞ்சிரம், தன்னிடம் சுவை கூட்டிக் கொள்ள முடிகிறதோ!
ஆனால், எனக்குத் தம்பி! நம்பிக்கை இன்னமும் இருக்கிறது. தமது நடையும் முறையும் பலன் தாராததனை உணர்ந்து ஓர் நாள் வெட்கித் தலைகுனிந்து தமது நெஞ்சத்துக்குத் தாமே வேண்டுகோள் விடுத்துக்கொள்ளப் போகின்றனர், இன்று வாய் வலிக்க வம்பு பேசிடுவோர்.
அவர்கள் அந்நிலை பெறினும் பெறாது போயினும், ஏளனத்தையும் ஏசலையும் தாங்கிக்கொள்ளும் மனநிலை நமக்குக் கிடைத்திருப்பதை நாம் மாற்றிக்கொள்ளலாகாது — புள்ளிமான் காட்டுப்பன்றியின் உறுமலைப் பெறாது — எந்நாளும்.
எரிச்சலூட்டும் ஏளனம் பலனற்றது கண்டவர்கள், இட்டுக் கட்டுவதும், ஒட்டி உருவாக்குவதும், பலன் தருமென்று கருதி, அந்த “வித்தை’யையும் செய்து காட்டுகின்றனர் — அதிலும் அவர்கள் காண்பது தோல்வியே.
போராட்டம் வலிவிழந்துவிட்டது, பொலிவிழந்து விட்டது, போற்றுவார் இல்லை, துணை நிற்பார் இல்லை, பிசுபிசுத்துவிட்டது, மதமதத்துவிட்டது என்றெல்லாம் பேசிப் பார்க்கின்றனர்.
இந்தியை எதிர்த்து இத்தனை வீராவேசமாகப் பேசுகிறார்களே இந்த வாய்ச்சொல் வீரர்கள்! கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு களம்புகாமல், கவாத்து பழகுவதும், அணிவகுப்பு நடாத்துவதும், கருத்தறிவதும் என்ற முறையில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்களே, கவைக்குதவாதார்! கண்டீரே! காளையர்காள்! கடுங்கோபம் எழவில்லையோ உமக்கு! வழி காட்டத் தெரியாதவர்களை நம்பி நாசமாகிறீர்களே! போர்! போர்! என்று முழக்கமிடுங்கள்; புறப்படு! புறப்படு! என்று எக்காளமிடுங்கள்! புறப்படாவிட்டால், வெளியேறுங்கள்! வீரர்கள் நிரம்ப உள்ள கோட்டம் வாருங்கள்! என்றெல்லாம் வீரம் பேசினவர்களை நாடு பார்த்தது; நாம் போரிடமாட்டோம், நமக்கு இல்லை அதற்கான நாடி முறுக்கு என்று சிலராவது நம்புவார்களா என்று மோப்பம் பிடித்துக் கிடந்தவர்களையும் நாம் அறிவோம்! இன்றோ நாம் போரில் ஈடுபட்டிருக்கிறோம் இந்தி ஆதிக்கத்தால் ஏற்படும் பொல்லாங்கினை எதிர்த்து; துந்துபி முழக்கினோர், கொம்பு ஊதினோர், என்ன செய்கின்றனர்? எதற்காக இந்தப் போராட்டம் — தேவை இல்லை — பொருள் இல்லை — என்று பேசுகின்றனர்!! நாடு நகைத்திடாதிருக்க முடியுமா? நாட்டிலுள்ளோரில் சிலருக்கேனும் தோன்றாதா, “வீரப்பா! வீரப்பா! வெட்டிப் பேச்சு ஏனப்பா! இந்தி எதிர்ப்பு பொது அப்பா! சந்து நின்று நீ சொன்னதப்பா!! கொளுத்துகிறார் கழகத்தார்! இந்தி ஆதிக்கத்தைக் கொளுத்தி வீரம் நிலைநாட்டப்பா! தூற்றித் திரிவது போதுமப்பா, தொடுத்திடப்பா இந்தி எதிர்ப்புப் போர்!!’’ என்று கேட்க. ஆனால் யாரும் கேட்கவில்லை — ஏனென்கிறாயோ தம்பி — கேட்பதே நேரக்கேடு என்று கருதுகிறார்கள்! அறப்போரில் ஈடுபடுகிறார்கள் ஆர்வமிக்கோர்; நிலைமை காரணமாக அறப்போரில் ஈடுபட இயலாதவர்கள் ஆதரவு தருகின்றனர்; சிறைசென்று திரும்பிடும் செம்மல்களை வாழ்த்தி வரவேற்கிறார்கள்; கழுத்தை நெரித்துக் கொன்று போடும் துணிவு இந்த நெஞ்சத்துக்கும், வலிவு இந்தக் கரங்களுக்கும் உண்டு என்று முழக்கமிட்டவர்கள் இந்தி ஆதிக்கம் புகுத்திடுவோரின் காற்சிலம்பின் ஓசைபற்றிப் பாடுகின்றனர், ஒய்யாரம்பற்றிப் பேசுகின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகம் அமைதியான அரசியலில் ஈடுபட்டிருக்கும்போது, வீரதீரம் அற்றது இந்தக் கழகம், வெட்டிப் பேச்சுப் பேசிக்கொண்டிருக்கிறது என்று கூறுவதும், காலமறிந்து கடமை உணர்ந்து, கஷ்ட நஷ்டம் ஏற்கும் துணிவுடன் கிளர்ச்சி நடாத்திடக் கிளம்பிடும்போது, எதற்கு வீண் ஆரவாரம்! எதற்கு இந்த அமளி! போராட்டத்திற்குப் பொருள் இல்லை! என்று பேசுவதும், மயக்க மொழி கேட்டு மெய்யென நம்பிக்கொள்பவர்களிடம் சென்று கழகத்தின் கொள்கை, செயல்முறை, கிளர்ச்சி ஆகியவைபற்றி ஐயப்பாடுகளை மூட்டி விடுவதுமான காரியத்தைத் தமது “அபாரமான’ திறமையைத் துணைகொண்டு அமைச்சர்கள் செய்து பார்க்கிறார்கள்.
போர் என்கிறார்களே, எங்கே நடக்கிறது, போர்!
வெற்றி என்கிறார்களே, எங்கே தெரிகிறது அந்த வெற்றி! எல்லாம் பொய்யுரை! கற்பனை! மனப்பிராந்தி — என்று பேசிப் பார்க்கின்றனர்.
காலமறிந்து, நிலைமை புரிந்து, தன்வலி மாற்றார் வலி சீர்தூக்கிப் பார்த்து, கழகம் தன் செயல் முறைகளை வகுத்துக் கொள்கிறது. வரிசைப்படுத்திக்கொள்கிறது, நிலைத்து நின்று பணிபுரிய, எவ்வப்போது என்னென்ன விதமான முறைகளை மேற்கொள்ளவேண்டுமென்று, திட்டமிட்டுப் பணியாற்றி வருகிறது இந்த முறை காரணமாக, மாற்றார் வெட்டிடும் படுகுழியில் வீழ்ந்து அழிந்துபடாமல், சூது வலையில் சிக்கிடாமல். முன்பின், வலம், இடம், மேல் கீழ், தன்வலி, துணைவலி, காலம் நிலைமை என்பவைகளைக் கணக்கெடுத்து, எதனை எப்போது எவ்விதம் எவரெவர் செய்து முடிப்பது என்று திட்டம் வகுத்துக்கொண்டு செயலாற்றுகிறது. இதனைத் திரித்துக் கூறியும் வருகின்றனர், மக்கள் தெளிவு பெறமாட்டார்கள் என்ற தப்பு எண்ணத்தில்.
பொய்! பொய்! முழுப்பொய்! கலப்படமற்ற பொய் — என்று உரத்த குரலிலே கூவினான் — கோபம் அல்ல — கோபம் கொண்டவன்போல! “மூட்டி விடுவான்!’’
எது பொய்? என்ன பொய்? என்று சிறிது அச்சத்துடன் கேட்டான், கேட்டு மருள்வான்.
என்ன சொன்னான் உன்னுடைய மன்றத்தான்? என்று கேட்டான் மூட்டிவிடுவான்; திருக்குளத்தில் செந்தாமரை மலர்ந்து இருக்கிறது, அழகாக! என்று சொன்னானல்லவா? என்றான்.
ஆமாம்! அப்படித்தான் சொல்லக் கேட்டேன் என்றான் கேட்டு மருள்வான்;
ஏமாந்து போனாய்! ஏமாற்றிவிட்டான்! ஏமாளி யானாய்!! என்று அடுக்கினான் மூட்டிவிடுவான்.
எப்படி? எதிலே ஏமாந்து போனேன்? என்று கேட்டான், கேட்டு மருள்வான்.
திருக்குளத்துத் தாமரை இதழ் விரித்து அழகாக இருக்கிறது என்று கூறி உன்னை ஏமாற்றினானே, மன்றத்தான், அதைத்தான் கூறினேன்; கேள் அவனை, இப்போது; தாமரை மலர் இதழ் விரித்து இருக்கிறதா என்று கேள். அவனைக் கேட்பானேன், வா, என்னோடு, திருக்குளம் செல்வோம்; காட்டுகிறேன், நீயே பார்! தாமரை இதழ் விரித்து இல்லை!! வந்து பார்! என்றான் மூட்டி விடுவோன், கேட்டுமருள்வோன் கிளம்பினான், திருக்குளம் நோக்கி சிறு விளக்கொன்று தேவை — இருட்டு அல்லவா? என்று கவனப்படுத்தினான் மூட்டிவிடுவோன் — விளக்குடன் இருவரும் கிளம்பினர், திருக்குளத்தருகே சென்றதும் மூட்டிவிடுவோன், சுட்டிக்காட்டி, பார் நன்றாக! எங்கே, இதழ் விரித்த தாமரை இருப்பதாகச் சொன்னானே உன்னை ஏமாளியாக்க; எங்கே விரிந்த தாமரை? என்று இடித்துக் கேட்டான்.
விரிந்த தாமரை இல்லை — குவிந்த தாமரையே தெரிந்தது.
கேட்டுமருள்வோனுக்கு மெத்த வருத்தம் ஏற்பட்டது. ஏன், மன்றத்தான், தாமரை அழகாக விரிந்து மலர்ந்து காட்சி தருகிறது என்று நம்மிடம் கதை கதையாகச் சொல்ல வேண்டும்! சே! இது ஏன் இந்தச் சூதுப் பேச்சு — இதை நம்பி, நாம் பலரிடம், செந்தாமரை விரிந்து மலர்ந்து அழகாகத் திருக்குளத்திலே இருக்கிறது என்று கூறி வைத்தோமே, இப்போது, நாமல்லவா ஏமாளியானோம் — என்று எண்ணி மனம் வெதும்பினான்.
இனியாகிலும் உணர்ந்துகொள், மன்றத்தான் பேசுவது பொய் என்பதை! — என்று கூறிவிட்டுப் புன்னகை செய்தான் மூட்டிவிடுவோன்,
எது அப்பா, பொய்? என்று கேட்டபடி வந்தான், தெளிவளிப்பான்.
திருக்குளத்தில், செந்தாமரை இதழ்விரித்து, அழகாக மலர்ந்து இருக்கிறது என்று பொய் பேசி என்னை ஏய்த்து வந்தான் மன்றத்தான். இங்கு வந்து பார்க்கிறேன், தாமரை குவிந்து கிடக்கிறது. மலர்ந்து, இதழ் விரித்து இல்லை — என்று கோபமும் துக்கமும் கொண்ட நிலையில், பேசினான் கேட்டுமருள்வோன்.
தெளிவளிப்பான் கூறினான், கேட்டுமருள்வோனே! இது இரவுக்காலமல்லவா? இரவுக்காலத்திலே, தாமரை குவிந்துதானே இருக்கும். உதயசூரியன் ஒளிபட்ட உடன்தானே, தாமரை மலரும். தாமரை மலர்ந்திருக்கிறது என்று மன்றத்தான் சொன்னது பொய்யுரை அல்ல. காலையில், தாமரை மலரும், அதைக்கண்டு சொன்னான்! நீயோ, இரவு வந்து காண்கிறாய், மூட்டிவிடுவோன் பேச்சினைக் கேட்டுக்கொண்டு. காலையிலே வந்து பார், மலர்ந்த தாமரை காண்பாய் — தாமரை இதழ் விரித்திடக் காலைக் கதிரவன் ஒளி வேண்டும் — அஃது இல்லாதபோது, தாமரை குவிந்துதான் காணப்படும். குவிந்து காணப்படுவது, காலத்தின் தன்மைக்கு ஏற்ப, தாமரை விளங்கும் என்ற உண்மையைக் காட்டுவதாகும். இரவுக் காலத்தில் குவிந்த நிலையில் உள்ளதால், தாமரை, மலருவது இல்லை, இதழ்விரிப்பது இல்லை, என்றா முடிவு கட்டுவது!! மன்றத்தான் சொன்னது பொய்யல்ல. உதயசூரியன் ஒளிபட்டதும் தாமரை இதழ்விரிக்கும். காலம் வர வேண்டும்! காரிருளில் விரிந்த தாமரை தேடாதே, கலகப் பேச்சுக் கேட்டு மனம் மருளாதே!! — என்றான். மூட்டிவிடுவோன் சென்றுவிட்டான்.
காலை மலர்ந்தது. கமலமும் மலர்ந்தது. கேட்டு மருள்வோன் அதனைக் கண்டான் — கண்டதால் தெளிவு பெற்றான்.
கமலம் மட்டுமல்ல, கருத்தும் அப்படித்தான்.
உரிய காலம் வரும்போது மலரும். சில காலத்தில் குவிந்த தாமரைபோலிருக்கும், உணர்ந்துகொள், என்றான் தெளிவளிப்போன்.
அதுபோலத் தம்பி! கழகம் காலமறிந்து காரியமாற்றுகிறது. அத்தகைய சீரிய முறைப்படி வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருவதே, இந்தி எதிர்ப்பு அறப்போர். காலமும் முறையும் அறிந்து, மாற்றார் மூட்டிவிடுவதற்கு இரையாகாமல், கழகம் எனும் அமைப்புக்கும் ஊறுநேரிடாமல் பாதுகாத்தபடி நடத்தப்பட்டு வருகிறது இந்தி எதிர்ப்பு அறப்போர். மூட்டிவிடுவோன் காட்டிடும் வழி நடந்தால், கழகம் படுகுழியில் வீழ்ந்துபடும்; வீழ்ந்துபட்டதும், சேற்றுக் குழியில் வீழ்ந்த யானையைச் செந்நாய்க் கூட்டம் கடித்துத் தின்பதுபோல, கழகத் தோழர்களை, காட்டிக் கொடுப்போரும் மூட்டிவிடுவோரும் காரச் சரக்கினரும் ஈரமற்ற நெஞ்சினரும், சிதைத்துச் சின்னாபின்னமாக்கி இருப்பர் அல்லது தமக்குக் குற்றேவல் புரியும் சிற்றாட்களாக்கிக் கொண்டிருப்பர். இதனை அறிந்ததால்தால் கழகத்தை நடத்திச் செல்வோர், காலத்துக்கு ஏற்றபடி முறையினை மாற்றிக் கொண்டனர் — அது குறித்துக் கடாவினோர், கதைத்தோர், என்னாயினர்!! களம் நிற்கின்றனரோ? இலையே!! கதர் அணிந்து கொண்டுவிட்டனர். இவர்கள்தான் நமக்குத் தூபமிட்டவர்கள்.
“விடாதே! தொடுத்திடு போர்! உடைத்திடு தடைச் சட்டத்தை!’’ என்றெல்லாம். எதற்கு? கழகம் எனும் அமைப்பு அழிந்துபடும் என்ற நினைப்பில். கழகம் அழிந்துபடுவதால் என்ன ஆதாயம்? கழகம் பெற்று இருக்கும் எதிர்க்கட்சி எனும் ஏற்றமிகு பீடத்தில் தாம் அமர்ந்துகொள்ளலாம் என்ற நப்பாசையில். கழகம் மேற்கொண்ட வேலைத் திட்டம் இந்த ஆசையில் மண் விழச் செய்துவிடவே, மூட்டிவிடுவோர் இனி எதிர்க்கட்சி என்ற ஏற்றம் பெறமுடியாது என்று உணர்ந்து ஆளுங்கட்சியின் ஒளியைப் பெற்றுக்கொள்ளச் சென்றுவிட்டனர். முன்பு கொண்டிருந்த எண்ணங்கள், வெளியிட்ட ஆசைகள், கண்ட இன்பக்கனவுகள் யாவும் பொய்யாய், கற்பனையாய், கனவாய்ப் புகைந்தே போய்விடக் காண்கிறோம். கழகமோ, புயலுக்குத் தப்பிட வளைந்திடும் நாணல்போல, நிலைமைக்கேற்ற முறை வகுத்துக்கொண்டு, நிலைத்து நிற்கிறது.
எனவே, தம்பி! நாம் நடத்தி வரும் இந்தி எதிர்ப்பு அறப்போர் குறித்து அமைச்சர்களும் அவர்களின் அணைப்பிலே அகமகிழ்ச்சி பெறுவோரும் எதைக் கூறிக்கொண்டிருப்பினும் நாம் பொருட்படுத்தத் தேவையில்லை — நாம் மேற்கொண்டுள்ள காரியத்தில் நமக்கு அழுத்தமான, தூய்மைமிக்க நம்பிக்கை இருந்தால். அந்த நம்பிக்கை இருப்பதனால்தான், நாடு மெச்சிடும் விதமான அறப்போரினைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு வருகிறோம்.
மொழிக்காக ஒரு கிளர்ச்சியா, போராட்டமா! செச்சே! என்ன மதியீனம்! வாழவழி என்ன என்பதற்குப் போராடுவார்களா, என்மொழி உன்மொழி என்று சண்டை போட்டுக்கொள்வார்களா என்று பேசுகிறார் காமராஜர்.
மொழிப் பிரச்சினை அவருக்கு அவ்வளவு சாமான்ய மானதாக, உப்புச்சப்பு அற்றதாகத் தோன்றுமானால், நாட்டு மக்களிடையே மனக்கொதிப்பையும் கசப்பையும் மூட்டிவிடும் மொழிப் பிரச்சினைபற்றி ஏன் வீணாகப் பிடிவாதம் காட்டுகிறீர்கள் — ஆங்கிலந்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே — தமிழைத்தான் ஆட்சிமொழி ஆக்குங்களேன் என்று இந்தி ஆதிக்கத்தைப் புகுத்துவதில் முனைந்து நிற்கும் லால்பகதூர் களிடம் எடுத்துச் சொல்லுவதுதானே! சொல்லிப் பார்க்கட்டும் — அப்போது தெரியும் காமராஜர் கண்காட்டும் வழியிலே காங்கிரஸ் செல்கிறது என்ற பேச்சு எத்தகைய இனிப்புப் பூச்சுள்ளது என்பது.
காமராஜர் கருதுவதுபோல, இப்போது எல்லோரும் கூடி ஒன்றுபட்டு நின்று கவனம் செலுத்தித் தீர்த்துவைக்கவேண்டிய பிரச்சினை, சோற்றுப் பிரச்சினைதான் என்றால், லால்பகதூர் இந்தியை ஆட்சிமொழி ஆக்குவதிலே இத்தனை தீவிரமும் பிடிவாதமும் காட்டுவானேன்?
இந்தி முக்கியமான பிரச்சினை அல்ல என்று காமராஜரும்,
இந்தி இரண்டு தலைமுறை கழித்துத்தான் வரும் என்று டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரும்,
பேசுகிறார்கள் — நம்மை மயக்க — உணர்ச்சியை வேறு பக்கம் திருப்பிவிட! ஆனால், ஒவ்வொரு நாளும் ஒரு புது உத்தரவு கிளம்புகிறது டில்லியிலிருந்து, இந்தியின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவும், வேகத்தை அதிகப்படுத்தவும்.
தூங்கு, ஒரு பயமும் இல்லை. பூனை நடமாடும் சத்தம், வேறொன்றுமில்லை என்று மாளிகையின் காவலாளி கூறி, மற்றவர்கள் விழிப்புடன் இருப்பதைத் தடுத்து விடுகிறான் என்றால், சூது சூழ்ச்சி அற்ற முறையிலே காவலாளி அவ்விதம் செய்திருந்தால் அவனை ஏமாளி என்போம்; தெரிந்தே வீட்டாரை ஏய்க்க அவ்விதம் கூறியிருந்தால், திருடனுக்கு உடந்தை என்போம்.
இந்திப் பிரச்சினை ஒரு அவசர அவசியப் பிரச்சினை அல்ல என்று பேசுவோரும், இந்தி இரண்டு தலைமுறைக் காலம் வரையில் வராது என்று கூறுவோரும், இந்த இரண்டு வகையில் எந்த வகையினர் என்று கூற இயலவில்லை, தம்பி! ஆனால், எந்த வகையினராக இருப்பினும், நாட்டுக்கு அவர்களின் போக்கு ஆபத்தினையும் கேட்டினையும் மூட்டிவிடுகிறது என்பதிலே அறிவாளர் எவருக்கும் ஐயப்பாடு இருக்க முடியாது.
பொன்னிழந்து விட்டால் வேறு
பொருள் விளைக்கலாகும்; நாளும்
உண்ணும் சோறிழந்தால் வேறு
உணவு தேடலாகும்; மொழிக்
கண்ணிழந்து விட்டால், வாழ்வுக்
காட்சி காண்பதேது? பின்னர்
மண்ணின் வாழ்வெதற்கு? இதனின்
மடிதல் மேலதன்றோ?
இவ்விதம் கேட்கிறார் கவிஞரொருவர் — இலங்கைத் தீவினிலிருந்து.
கவிஞர்தானே! அப்படித்தான் கேட்பார் என்று கூறுவார்களோ ஒருவேளை, சரி, தம்பி! கற்பனைச் செல்வம் தரும் கவிஞரின் பேச்சுடன், வேறொன்றும் காட்டுவோம்.
இவர் அரசியல் தத்துவம் போதிக்கும் பேராசிரியர், பெயர் பி. கே. எஸ். ராஜா. 1963-ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் எட்டாம் நாள், கருத்தரங்கம் ஒன்றில் பேசினார். சோற்றுப் பிரச்சினையா, மொழிப் பிரச்சினையா என்று கேட்கிறாரே காமராஜர், அவர் காணட்டும், பேராசிரியரின் கருத்தினை.
இந்நாட்டில் உள்ள மக்களிடையே பேசப்படுகிற மொழிகளில், இந்தி சிறுபான்மையோர் மொழியாகும். பெரும்பான்மையான மக்கள் இந்தி பேசாத பகுதியைச் சார்ந்தவர்கள்.
ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும். இந்தியைக் கட்டாயமாகத் திணிப்பதால் இந்தி பேசும் மக்கள் நியாயமற்ற வகையில் முன்னணியில் நலம் பெறுவர்.
முதலாவதாக, தேசிய மொழியின்றி இந்தியா ஒரு நாடாக விளங்குவதை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆட்சியைப் பொறுத்தமட்டில் ஆங்கிலமே நீடிக்க வேண்டும்.
ஆங்கில மொழியின் நுழைவால்தான் இந்தியத் தேசியம் உருவெடுத்தது. இதன் பயனாகவே இந்தியத் தேசியக் காங்கிரசும் தோன்றியது.
கேட்டாயா, கேட்டாயா! ஆங்கிலம், ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டுமாமே. நாட்டுப்பற்று இருந்தால் ஒரு அன்னிய மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று இந்தப் பேராசிரியர் பேசுவாரா? ஒரு தேச பக்தனுக்கு, காங்கிரஸ்காரருக்கு இப்படிப்பட்ட கெடுமதி இருக்குமா! ஆங்கிலம் படித்து அதனால் பிழைப்பு நடத்தும் பேர்வழி இவர்; இத்தகையவர் பேச்சை மதிக்கப்போமா, கேட்கப் போமா, பேசலாமா என்றெல்லாம் வெகுண்டெழுந்து கூறுவர் — உண்மைக் காங்கிரசார் அல்ல — ஒட்டிக்கொள்பவைகள்.
போகட்டும், நமக்கேன் தகராறு — ஒரு காங்கிரசாரின் கருத்து, அதிலும் ஆங்கிலம் பற்றியுள்ள கருத்தினைத்தான் கூறுவோமே.
ஆங்கிலத்தின் இடத்தை இந்தி வகிக்க வேண்டுமாம்! இதிலே எனக்கு நம்பிக்கை இல்லை.
ஆங்கிலம் இந்த நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.
ஒரு காங்கிரசுக்காரர், மனம் துணிந்து, மரபு மறந்து, ஆங்கிலம் இந்நாட்டுத் தேசிய மொழிகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறினார். ஏ! அண்ணாத்துரை, ஏன் இப்படி ஒரு அண்டப்புளுகு பேசி எமது இதயத்தில் வேதனை மூட்டுகிறாய், நம்மை அடிமைப்படுத்திய ஆங்கில மொழியா, தேசிய மொழி! ஏகாதிபத்திய மொழியா, எமது தேசிய மொழிகளிலே ஒன்று! இப்படியும் கூற ஒரு காங்கிரசுக்காரரின் நாக்கு வளைகிறதா! ஐயகோ! என்ன நாக்கய்யா அது! என் செவியில், ஜனகணமனவும் வந்தேமாதரமும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக என்ற முழக்கமும் விழுந்து விழுந்து, புனிதத் தேனைச் சொரிந்தது — அந்தச் செவியிலா இந்தச் செந்தேள் நுழைய வேண்டும்! என்னே கொடுமை! என்ன அநீதி! ஆங்கிலம் நமது தேசிய மொழிகளிலே ஒன்றாக்கப்பட வேண்டும் என்று சொன்னவர், காங்கிரசில் உறுப்பினராக இருக்கலாம் — புதிதாகப் புகுந்தவராக — பதவிப் பசை தேடி வந்தவராக — இருக்கலாம் — ஆனால் நிச்சயமாக அவர் உண்மையான காங்கிரசுக்காரராக, ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய வீரராக இருக்கவே முடியாது. அது யாரோ ஒரு போலி! ஒரு இடந்தேடி! ஒட்டுச்சரக்கு! — என்றெல்லாம் ஆத்திரம் பொங்கிவழிய, காங்கிரஸ் நண்பர் கூறக்கூடும் அவருடைய ஐயப்பாட்டினையும் போக்கிவிடுவது நல்லதல்லவா, தம்பி! ஆங்கிலம் தேசிய மொழிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று பேசியவர், புதியவருமல்ல, புசிக்க ஏதேனும் கிடைக்கும் என்பதற்காக நேற்றுப்புகுந்தவருமல்ல — உண்மைக் காங்கிரஸ் காரர் — முன்னணியினர் — மூலவர்களிலே ஒருவர் — நாடாளும் நற்பேறுகொண்டவர், பம்பாய் மாநில முதலமைச்சர் சாவன்! ஆம், தம்பி! இப்போது மத்திய சர்க்காரில் பாதுகாப்பு அமைச்சராக உள்ள அதே சாவன்தான் — நாகபுரியில் பேசினார் மூன்றாண்டுகளுக்கு முன்பு — 19–8–61 இதழ் பார்த்தால் புரியும். அவருடைய அந்தக் கருத்தினைப் பாராட்டியும் வரவேற்றும், இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை வெளியிட்டது.
ஆங்கிலத்தை அந்நிய மொழியாகக் கருதினால் அது அவலமாக முடியும் என்பதை சாவன் வற்புறுத்தி அறுதியிட்டுக் கூறியுள்ளார். உண்மையில் ஆங்கிலம் ஓர் அனைத்துலக மொழி; அறிவு வள மொழி என்பதாக.
தம்பி! நாம் அதுபோலக்கூட ஆங்கிலத்துக்கு மேம்பாடான இடமளிக்க வேண்டும் என்று வாதாடவில்லை — அதற்காகப் போராடவில்லை; நமது தாய்மொழியாம் தமிழ் மொழியையும் ஆட்சிமொழியாகக் கொள்ளுங்கள். அந்தக் காலம் வருகிற வரையில், வேறோர் பகுதி மக்களின் தாய்மொழியான இந்தியை இந்தியாவின் ஒரே ஆட்சி மொழி என்றாக்கி எம்மை இழிவு படுத்தாதீர், இன்னல் விளைவிக்காதீர் இழிமக்களாக்காதீர் என்று கேட்டே போராட்டம் நடத்துகிறோம்.
சாவன் போன்ற உண்மையான காங்கிரஸ்காரரின் வார்த்தைக்கு மதிப்பு தரப்பட்டதா? இல்லை!
ஒரு காங்கிரஸ் தலைவருக்கே ஆங்கிலத்தை இழக்கக் கூடாது என்ற எண்ணம் இந்த அளவுக்கு இருக்கிறதே என்பது பற்றி இந்தி ஆதிக்கக்காரர்கள் துளியாவது அக்கறை காட்டினரா? இல்லை! இல்லை!!
மனத்துக்குள்ளாக — சாவன் ஒரு மராட்டியர் — காங்கிரஸ் காரராக இருந்தபோதிலும், அவருக்கு மராட்டியர் என்ற உணர்ச்சிதான் மேலோங்கி இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்திருப்பார்கள்.
இங்கே சிலர்தான் இந்தியை எதிர்க்கிறார்களே தவிர, ஆயிரக்கணக்கான தென்னாட்டவர் இந்தி படித்துக்கொண்டு வடக்கே வந்திருந்து வாழ்கிறார்கள் — அவர்களுக்கு இந்திமீது வெறுப்பு இல்லை — அவர்கள் இந்தியை எதிர்ப்பதில்லை என்று கூறி, இந்த நிலையை இந்திக்கு நிரம்ப ஆதரவு இருப்பதற்கு அடையாளம் — சான்று என்று பேசுவோர் உளர். இந்த வாதம் எத்தனை சொத்தையானது என்பதனை எடுத்துக்காட்டி உடைத்தெறிந்திருக்கிறார் ஒருவர் — அவரும் காங்கிரஸ்காரர் — மராட்டியப் பகுதியினர் சங்கர்ராவ் தேவ் என்பார்.
தெற்கே இருந்து வடக்கே மக்கள் வருகிறார்கள் — இந்தி மொழிமீது உள்ள ஆசை காரணமாகவும் அல்ல, அந்த இந்தி மொழி மூலம் பெறக்கூடிய கலாச்சாரத்திற்காகவும் அல்ல; அவர்கள் வருவது பிழைப்புத் தேடி.
சோற்றுக்காக வருகிறார்கள்! சோற்றுக்காகத்தான் மக்கள் சச்சரவிட்டுக்கொள்கிறார்கள்.
இன்று இந்தியை மக்கள் மதிக்கவேண்டி வருகிறது என்றால், அது மற்ற மொழிகளைவிட மேலானது என்பதற்காக அல்ல, இந்தி படித்தால் பிழைக்க வேலை கிடைக்கும் என்பதால்தான்.
நீங்கள் இந்தியை உங்கள் பிரதேச மொழியாகவும் கொண்டிருக்கிறீர்கள். அதேபோது மத்திய ஆட்சி மொழியாகவுமாக்கிக்கொள்கிறீர்கள். இது உங்களுக்கு ஒரு ஆதிக்க உயர்வைத் தருகிறது.
ஒன்றை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்; ஒருவன் எவ்வளவுதான் இந்தியையோ வேறு மொழியையோ கற்றுக் கொண்டாலும், அது அவனுடைய தாய்மொழியாக இருந்தாலொழிய, ஒவ்வொரு நாளிலும் இருபத்து நான்கு மணி நேரமும் அவன் பயன்படுத்தும் மொழியாக இருந்தாலொழிய, அவன் துரைத்தன அலுவலகங்களில் மேலிடம், உயரிடம் பெறமுடியாது; மற்ற வேலைத் துறைகளிலும் கூடத்தான்.
காமராஜர் மிக்க விருப்பத்துடன் கிளப்புகிறாரே சோற்றுப் பிரச்சினை, அது மொழிப் பிரச்சினையோடு எப்படிப் பிணைந்திருக்கிறது என்பதை சங்கர்ராவ் தேவ் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டினார். அவருடைய பேச்சை மதித்து ஏற்றுக்கொண்டார்களா? அவர்களா! ஆதிக்க நோக்கம் கொண்டவர்கள் அறிவுரை கேட்டு அதன்படி நடந்து கொள்வார்களா!!
இந்தியை ஆட்சிமொழியாக்குகிறார்கள் என்ற காரணம் காட்டி, நாட்டிலே ஒரு பகுதியின்மீது மற்றோர் பகுதிக்குக் கசப்பு ஏற்படும்படி செய்கிறார்கள் என்று ஒருமைப்பாட்டு உரை நிகழ்த்துவோர் குற்றம் சுமத்துகிறார்கள்.
சரியாகவோ தவறாகவோ, இந்தி புகுத்துவதற்காக நீங்கள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்பது, இந்தி பேசாத பகுதி மக்களிடையே ஒரு உணர்ச்சியை மூட்டி விட்டிருக்கிறது; அதாவது இந்தியாவின் கூட்டுக் கலாச்சாரத்துறையில், மற்ற வலிவுள்ள மொழிகள் செல்வாக்குப் பெறுவதைத் தடுக்கவே இந்திக்காக இப்படிச் சண்டைபோடுகிறீர்கள் என்ற உணர்ச்சி.
ஐயா! தெற்கே உள்ள இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி பலம் வாய்ந்ததாக இருக்கிறது.
ஒரு பகுதிக்கு மட்டுமே சொந்தமான மொழியை (இந்தியை) நீங்கள் தேசிய மொழி என்ற அளவுக்கு அந்தஸ்து தருவதுதான், இந்தி பேசும் மக்களுக்கும் இந்தி பேசாத மக்களுக்கும் இடையே கசப்பை மூட்டி விட்டிருக்கிறது.
இவ்வளவு வெளிப்படையாகப் பேசியவரும், காங்கிரஸ் கட்சியினர்தான். கொலுவிருக்கக் காங்கிரஸ் கிளம்பியபொழுது இடம் தேடிக்கொண்டவர் அல்ல — சுயராஜ்யக் கிளர்ச்சியில் ஈடுபட்டு, சண்ட மாருதம்போல் சுற்றிப் பிரசாரம் செய்து சிறைக் கோட்டமும் சென்றவர் — ஆந்திரநாட்டு மாதர் திலகம் — துர்க்காபாய் அம்மையார்.
குறுகிய மனப்பான்மை கொண்டவருமல்ல — மராட்டியத்துத் தேஷ்முக்கைக் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்.
அந்த அம்மையாரின் எச்சரிக்கையையாவது, இந்தி ஆதிக்கக்காரர்கள் பொருட்படுத்தினரா? இல்லை!
கடந்த மூன்று வாரத்து நடவடிக்கைகளாலும், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த என் நண்பர்கள் மேற்கொள்ளும் போக்கினாலும் என் உள்ளத்தில் மூண்டு வளர்ந்துள்ள பயத்தை, உள்ளது உள்ளபடி நான் எடுத்துக் கூறாவிட்டால், என் மனச்சாட்சிக்கும், ஆண்டவனுக்கும், என் மாபெருந் தலைவர் மகாத்மா காந்திக்கும் உண்மையாக நடந்து கொண்டவனாக மாட்டேன்.
இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்புவரை, அதிகார வர்க்கம் பிரிட்டிஷாரிடம் இருந்து, லண்டன் நகரத்தில், பெரிய உத்தியோகங்களுக்கான பரிட்சைகள் நடத்தப்பட்டு வந்த நிலையின்போது, எங்களுக்குச் சந்தேகமும் பயமும் மனத்திலே குடிகொண்டன. வெள்ளையனே உத்தியோக மண்டலத்தில் ஆதிக்கம் வகித்து வந்தான் இப்போது உயர் பதவிகளுக்கான பரிட்சை டில்லியில் நடத்தப்படுவதால், இந்தி பேசும் பகுதிகளான உத்தரப்பிரதேசம் மத்தியப் பிரதேசம் ஆகிய இடத்தவர் உத்தியோக மண்டலத்தில் ஆதிக்கம் பெறப்போகிறார்கள்.
ஏன் உத்தரப்பிரதேசத்து மத்தியப்பிரதேசத்துக் காரர்கள் இவ்வளவு சகிப்புத்தன்மையற்றவர்களாக இருக்கிறார்கள்?
நாங்களும் மனிதர்களே! உயர்தரமான தேசிய இலட்சியங்கள் எப்படி எங்கள் எண்ணங்களை உருவாக்கு கின்றனவோ அதுபோலவேதான் பிழைப்பு நடத்துவதும் வேலை பெறுவதும் எங்கள் உள்ளத்தைப் பாதிக்கின்றன. (இந்தியை ஆட்சிமொழியாக்கி விடுவதானால்) ஒரிசா, அசாம், வங்காளம், தென் மாநிலங்கள் ஆகிய இடங்களைக் காட்டிலும் உத்தரப்பிரதேசத்துக்கும் மத்தியப் பிரதேசத்துக்கும் கூடுதலான சலுகைகள், வாய்ப்பு வசதிகள் ஏற்பட்டுவிடுவதைத் தடுக்க என்ன திட்டம் தீட்டப் போகிறீர்கள் — சொல்லுங்கள்.
இவ்விதம் “அச்சம் தயைதாட்சணியமின்றிக்’ கேட்டவர் ஒரிசாவைச் சார்ந்த தாஸ் என்பவர் — புகழ்மிக்க காங்கிரஸ் தலைவர். அவருடைய பேச்சுக்கு ஏதேனும் பலன் கிடைத்ததா? இந்தி ஆதிக்கக்காரர்கள் தமது போக்கை மாற்றிக்கொள்ள ஒருப்பட்டனரா? இல்லை! இல்லை! அவருடைய வார்த்தையையும் துச்சமென்று தள்ளிவிட்டு, இந்திதான் ஆட்சிமொழி என்று அரசியல் சட்டத்தில் எழுதிவிட்டனர்.
தாஸ், சங்கர்ராவ், துர்க்காபாய் போலக் காரசாரமாக, ஒளிவு மறைவின்றிப் பேசினால், இந்தி ஆதிக்கக்காரர் கோபம் கொண்டு தமது போக்கை மாற்றிக்கொள்ள மறுப்பார்கள் — இதமாக — விநயமாக — கனிவாக — நேசப்பான்மையுடன் — அடக்க ஒடுக்கமாக — நல்ல வாதத் திறமையுடன் பேசினால், அவர்களின் போக்கு மாறிடக்கூடும் என்ற எண்ணம்போலும், இன்று பாராளுமன்றத் துணைத்தலைவராக உள்ள S.V. கிருஷ்ணமூர்த்தி ராவ் அவர்களுக்கு; அவர் மிகக் கனிவாகப் பேசினார்.
ஐயா! நான் இந்தியைக் கற்றுக்கொள்ள முயற்சி எடுத்துக் கொண்டேன். என் சொந்த மொழியான கன்னடத்தில், சில இந்திப் புத்தகங்களைக்கூட மொழி பெயர்த்திருக்கிறேன். ஆனால் எனக்கு இந்தி மொழி மிகக் கடினமானதாக இருக்கிறது. அதனால்தான் இந்தச் சபையில் இந்தியில் பேசும் துணிவு வரவில்லை.
இந்தி பேசும் மக்களுடைய மொழியை, அதன் இலக்கண இலக்கியக் கட்டுக்கோப்புடன் எங்களால் பிடித்துக்கொள்ள முடியவில்லை. காலம் பிடிக்கிறது. நான் ஒரு அறைகூவல் விடுக்கிறேன். இங்குள்ள கோவிந்ததாஸ் அவர்களோ, தாண்டன் அவர்களோ, தமிழர்கள் மத்தியில் போய் இருந்துகொண்டு தமிழ் பேசக் கற்றுக்கொள்ளட்டும். அதற்கு அவர்களுக்கு எவ்வளவு காலம் பிடிக்கிறதோ, அவ்வளவு காலம் தேவை, தென்னகத்தில் இந்தியைப் புகுத்துவதற்கு.
இவ்வளவு சாந்தத்துடன், சமரசநோக்குடன் பேசினாரே கன்னடக் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ராவ், இதையாவது, பாவம்! நம்முடைய கட்சிக்காரர்! இந்தி கற்றுக் கொள்வதிலே உள்ள கஷ்டத்தை அனுபவித்துக் கூறுகிறார். அவர் கூறிடும் வாதம் நியாயமாகத்தான் இருக்கிறது; நாம் இந்தியைத் தென்னகத்துக்கும் சேர்த்து ஆட்சிமொழி என்றாக்குவது அநீதியாகத்தான் இருக்கும் என்ற உணர்வும் தெளிவும் பெற்றனரா, இந்தி ஆதிக்கக்காரர்கள். அவர்களா! அவர்கள்தான், யார் எதிர்த்தாலும், எதிர்ப்புகளை முறியடித்துவிட்டு இந்தி ஏகாதிபத்தியத்தை நிலை நாட்டியாக வேண்டும் என்று துணிந்துவிட்டவர்களாயிற்றே! கேட்பார்களா கிருஷ்ணமூர்த்தி ராவ் அவர்களின் பேச்சை! கேட்கவில்லை!
தம்பி! இந்தி ஆதிக்கத்தைக் கண்டித்து அறிவுரை, தெளிவுரை, கனிவுரை, எச்சரிக்கை தந்தவர்களின் பட்டியல் மிகமிகப் பெரிது; சிலவற்றை மட்டுமே எடுத்தளித்திருக்கிறேன்.
இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையில் முனைந்தபோதே அறிவாளர் பலர் இதுபோலக் கண்டித்தனர், முயற்சியைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர், முடியவில்லை.
அதற்குப் பிறகும் தொடர்ந்து பேரறிவாளர் பலர், இந்தி ஆட்சி மொழியாக்கப்படுவதைக் கண்டித்த வண்ணம் உள்ளனர்.
நானறிந்த வரையில், எந்த ஜனநாயக நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட திட்டத்துக்கு இத்தனை பரவலான முறையிலும் தொடர்ந்தும் கண்டனமும் எதிர்ப்பும் இருந்து அத்தனையும், வேண்டுகோள், முறையீடு, வாதம், விளக்கம், கண்டனம் எனும் எந்த வடிவினதாயினும் அலட்சியப்படுத்திவிட்டு, ஒரு சர்க்கார் தன் போக்கிலே பிடிவாதமாக இதுபோல இருந்ததில்லை.
இந்தி ஆதிக்க விஷயத்திலே காங்கிரஸ் துரைத்தனம் காட்டிவரும் பிடிவாதம் ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கி வைத்திருக்கிறது.
உங்களைப் பேச அனுமதித்திருக்கிறார்களே என்பதும், வெளியே விட்டு வைத்திருக்கிறார்களே என்று கூறுவதும், சுட்டுத் தள்ளாமல் இருக்கிறார்களே என்று கூறுவதும், ஆட்சி நடத்தும் வாய்ப்பினைப் பெற்றதனால் ஏற்பட்டுள்ள ஆணவமன்றி, அறிவுடைமை என்று எவரும் கூற முற்படமாட்டார்கள். நெரித்த புருவம், உருட்டு விழி, மிரட்டும் பேச்சு, நெடுநாட்களுக்கு நிலைத்து இருப்பதில்லை.
தம்பி! பலருக்கும் புரியும்படி இதனை எடுத்துக் கூறிடக் கேட்டுக்கொள்கிறேன். இந்தி ஆதிக்கப் பிரச்சினையிலிருந்து, இன்று நமக்கு அமைந்துள்ள அரசு, அறிவாளர்களை எவ்வளவு அலட்சியப்படுத்தி வருகிறது. மக்களின் முறையீட்டினைக் கேட்டும் எத்துணை மமதையுடன் நடந்துகொள்கிறது என்பது புரிகிறதல்லவா! இவ்விதமான ஓர் ஆட்சி முறையையும், அது கடைப்பிடிக்கும் மொழி ஆதிக்கத் திட்டத்தையும் துணிவுடன் எதிர்த்து நிற்பதிலே நாம் பெருமை கொள்கிறோம். பலர் அடக்கப்பட்டுப் போய்விட்டனர். சிலர் அடைக்கலப் பொருளாகிவிட்டனர். வேறு சிலர் “அமங்கல’ நிலை பெற்று விட்டனர். நமது கழகமோ, எத்துணைக் கொடுமைகள் தாக்கிடினும், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நிற்பது என்ற உறுதி தளராமல், தொடர்ந்து அறப்போர் நடாத்தி வருகிறது.
மக்கள் விரைவில் தமது மனத்திலுள்ளதை வெளிப் படையாக எடுத்துக் கூறிடும் இயல்பினைப் பெறுவதில்லை. எத்தனையோ விதமான அச்சுறுத்தல் அவர்களுக்கு. துரைத்தனத்தைப் பகைத்துக்கொண்டால், தொழில் கெடும். வேலை போய்விடும், குடும்பம் சிதறுண்டு போய்விடும், கொடுமைக்கு ஆளாகவேண்டிவரும் என்ற அச்சம் பிடித்தாட்டும் நிலை.
இந்தியோ சிந்தியோ, விருப்பமோ கட்டாயமோ, மெள்ள மெள்ளவோ வேகவேகமாகவோ, எப்படியோ வரட்டும், எதுவோ ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கட்டும், நாம் மாடு மனைபெற்று, மனைவி மக்களுடன் நிம்மதியாக வாழ்ந்திட வழி தேடிக்கொள்வோம் என்று பலர் எண்ணுகின்றனர். காரணம், அவர்கள் காண்கின்றனர், கொடி தூக்கியும் கோல் சுழற்றியும், காங்கிரசாட்சியின் கடைக்கண் பார்வையின் பயனாக, இலட்சாதிபதியாவதை! அவன் ஏறும் மோட்டாரின் மெருகு குலையாதிருப்பதையும், இவன் “ஜாண்’ வயிற்றுக்காக உடல் கருத்திட இளைத்திட உழைத்து கிருமிக் கூடாவதையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஆளவந்தாரின் அடிவருடினால் என்னென்ன ஆதாயம் கிடைக்கிறது என்பது புரிகிறது; புரியவே, நாம் ஏன் பொல்லாப்பைத் தேடிக்கொள்ள வேண்டும் என்று ஒதுங்கிடவும், இணங்கிடவும், வணங்கிடவுமான நிலையினைப் பெறுகின்றனர்.
ஒருபுறம் அச்சம் — மற்றோர்புறம் ஆளவந்தாரின் நேசத்தால் கிடைக்கக்கூடிய சுவைபற்றிய எண்ணம் கிளப்பிவிடும் ஆசை — இந்த இரண்டிலிருந்தும் தப்பி, தட்டிக் கேட்க யார் உளர் என்று தர்பார் மொழி பேசிடும் ஆட்சியினரை (இந்தி எதிர்ப்பு அறப்போர்) எதிர்த்து நிற்கும் துணிவும், கடமை உணர்வும் இந்த அளவுக்கு இருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சி மட்டுமல்ல, மக்களாட்சி முறை மடிந்துபோகாது, மாண்புள்ளதாக்கிட முடியும். அந்த முறையை என்ற நல்ல நம்பிக்கையேகூட ஏற்படுகிறது. ஒவ்வோர் விழாவும் இந்த அரிய பாடத்தைத்தான் எனக்கு அளித்து வருகிறது; உனக்கும் அதேவிதமான நிலை என்று எண்ணுகிறேன்.
தமிழுக்கு ஒரு ஆபத்தும் இல்லை. அம்மொழி ஒருபோதும் அழியாது, அது இலக்கியத்தின் மூலம் இறவா வரம் பெற்று விட்டது என்று பேசுவதும், பேச்சினைக் கேட்பதும் இனிப்பளிக்கலாம். கவிதைகளை எடுத்துக்காட்டி, உவமை நயமதை உரைத்து, கருப்பஞ்சாற்றினிலும் இனித்திடும் இன்மொழியாம் எமது தமிழ் மொழிக்கு, எவரே இழுக்குத் தேடவல்லார்! தென்றலின் இனிமை, திங்களின் குளிர்ச்சி தேனின் சுவை, கடலின் அலையோசை, அருவியின் மழலை, குழவியின் இசை, இயற்கை எழில் — எவரேனும் இந்த இயல்பினைக் கெடுத்திட இயலுமோ!! அஃதேபோல, தமிழின் மாண்பினை மடிந்திடச் செய்திடல் எவராலும் இயலாது என்று பேசலாம் — வீரம் குழைத்து. ஆனால், தம்பி! இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்றாகிவிட்டால், இன்பத் தமிழ் பொலிவிழந்து போற்றுவாரிழந்து, வலிவிழந்து வளம் இழந்து, என்றோ தீட்டிய ஓவியமாய், எப்போதோ கேட்ட கீதமாய், கனவினில் கண்ட கனியாய்ப் போய்விடும் — வீணுரை அல்ல இது — வேண்டுமென்றே பயமூட்டக் கூறுவதுமல்ல; அரசுக் கட்டிலிலே இந்தி என்று ஆகிவிட்டால், முரசு முழங்கிய தமிழகத்தின் அள்ள அள்ளக் குறையாத சொத்தாக இருந்துவரும் செந்தமிழ், கண்ணகிபோல் கண்ணீர் உகுத்து, கடந்த காலத்தை எண்ணி ஏக்கமுற்று, கசிந்து உருகிப்போய்விடும்.
ஒன்று புரிந்துகொள்ளச் சொல்லு தம்பி! முதற் கட்டம், இந்தி மத்திய சர்க்காரின் ஆட்சி மொழியாவது; அடுத்த கட்டம்? விளக்கவா வேண்டும்! மத்தியில் ஒன்று, மாநிலத்தில் வேறொன்று என்று இருப்பதனால் ஏற்படும் இன்னல் குறித்துச் சிலபல கூறிவிட்டு, மத்திய சர்க்காருக்கு ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்ட இந்தியே மாநிலத்திலும் ஆட்சி மொழியாக இருப்பதுதான் வசதி, முறை என்று வாதிட்டு, அதுபோன்றே செய்தும் விடுவர்.
நமது அமைச்சர்கள் வாளாயிருப்பரோ? என்று கேட்பர், காங்கிரசை நம்பி உள்ளோர்! வேறு என் செய்வர்? வளைவர், நெளிவர், பணிவர், பிறகு ஆதரவாளராகிவிடுவர். பார்க்கிறோமே ஒவ்வொன்றிலும், வேளாண் பெருங்குடி மகன், வேறெவரும் பெறாத அளவு பதவி அனுபவம் பெற்ற பெரியவர் பக்தவத்சலனார். இந்தியில் பரிட்சை எழுதத் தேவையில்லை என்றார் ஓர் நாள்; காரணம் காட்டினார், மறுக்கொணாததாக; பிறகோ லால்பகதூர் அப்படியா? என்றார், இவர் ஆமென்றார், அவர் ஏன் என்று கேட்டார், இவர் காரணம் கூறினார், அவர் கனைத்தார் இவர் கலங்கினார், பரீட்சை இல்லாவிட்டால் படித்திட மனம் வராதே என்றார், அது உண்மைதான் என்றார் இவர், ஆகவே, என்று ஆரம்பித்தார் லால்பகதூர், இதோ பரிட்சை வைக்கிறேன் என்று முடித்தாரே முதலமைச்சர்.
இவர் போன்றார், இந்திதான் இங்கும் ஆட்சி மொழியாதல் முறை என்று டில்லியினர் கூறினால், தாயின் மேல் ஆணை! தாய்த் தமிழைத் தாழவிடேன்! என்றா முழக்கமெழுப்புவர், டில்லியாரின் தாக்கீதினைத் தலைமீது வைத்துக்கொண்டு, இதுவே தகுந்த முறை என்று ஒப்பம் கூறுவர்; கண் கசிந்திடும் தமிழரைப் பார்த்தோ, “ஏன் அழுகிறீர்கள்? ஆட்சி மொழியாக இந்தி இருந்தால் என்ன? தமிழ் தாழ்வடையுமோ? அகம் என்ன, புறம் என்ன, எட்டுத்தொகை என்ன, பத்துப்பாட்டென்ன, இவைகளைப் படித்திடலாகாது என்று தடுத்திட இயலுமோ! இன்பத் தமிழ், கேவலம் அரசாங்க அலுவலிலே இருக்காதே தவிர, வீட்டிலிருக்கும், அங்காடியில் இருக்கும், மன்றத்திலிருக்கும், மாதரின் நெஞ்சமிருக்கும், மழலையரின் மொழியில் இருக்கும், என் உள்ளத்திருக்கும் உன்னிடமும் இருக்கும், ஆகவே தமிழ் மகனே! கவலைகொள்ளற்க!’’ என்று கூறிடுவர், தமிழின் இனிமையினை அறிந்தவனே யானும் என்று கூறி, அதனை மெய்ப்பிக்க,
திருவே என்செல்வமே தேனே வானோர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர் நற் ஜோதிமிக்க
உருவே என்உறவே என் ஊனே
ஊனின் உள்ளமே, உள்ளத்தின் உள்ளேநின்ற
கருவே என் கற்பகமே கண்ணே
கண்ணிற் கருமணியே மணியாடுபாவாய், காவாய்
அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்
ஆவடுதண் துறையுறையும் அமர ரேறே
என்று பாடிடக்கூடும். பக்கம் நின்று சிலர், என்னே தமிழ்ப்பற்று! என்னே தமிழினிமை! என்று பேசி மகிழ்விக்கக்கூடும்.
இப்போதேகூடச் சிலர் இதுபோல், தமிழின் இனிமை, பெருமை, தொன்மை, மென்மை, வளம் வனப்புப்பற்றி கேட்போர் நெஞ்சு நெக்குருகப் பேசி, இந்தி ஆதிக்கத்தால் தமிழுக்கு ஆபத்து ஏற்படாது என்று வாதாடுகின்றனர்.
மாசறு பொன்னே!
வலம்புரி முத்தே!
காசறு விரையே!
என்றெல்லாம் கொஞ்சுமொழி பேசிய கோவலன்தான் பின்னர், கண்களில் கொப்பளிக்கும் நீரும், காலிற் சிலம்பும் கொண்ட நிலையினளாக்கினான் கண்ணகியை. . . மையல் வேறோர் மாதிடம் கொண்டதால்.
எனவே, தம்பி! இவர் போன்றாரின், புகழுரையால் மட்டும் தமிழுக்கும் தமிழர் நல்வாழ்வுக்கும் வர இருக்கும் ஆபத்தினைத் தடுத்திட முடியாது — நாம் மேற்கொள்ளும் அறப்போரின் பலனாக எழும் தியாக உணர்வே தீந்தமிழைக் காத்திடவல்லது. அத்தகைய தொண்டாற்றும் தூயமணியே! உனைக் காண்பதிலும், உன்னுடன் அளவளாவுவதிலும் நான் பெறும் மகிழ்ச்சி, என்னை அந்தத் தொண்டினைத் தொடர்ந்து நடாத்திடத் துணை செய்கிறது. வாழ்க நின் ஆர்வம்! வளர்க உன் தியாக எண்ணம்! வெல்க தமிழ்!
அண்ணன்,

26–7–1964
மூலக்கட்டுரை
http://www.annavinpadaippugal.info/kadithangal/neenda_idaivelikku_1.htm