தேனில் தோய்த்த பழம்

SG
23 min readJan 13, 2022

அண்ணாதுரை,திராவிடநாடு,14–1–1962

கதிரவன் விழா
சொல் போன தோழர்கள் பல் போன கிழவர்கள் ஈட்டிய செல்வம் எங்குளது?
இரு திட்ட வெற்றியினால் கண்ட பலன் என்ன?
படபடத்த பேச்சு நம் வளர்ச்சியைப் பாழ்படுத்தும் நா வாணிக நிலை
நமக்குத் தேவை அறிவு — துணிவு — பொறை உடைமைகள்

தம்பி!

செவியில் விழவே இல்லையா நான் கூப்பிடும் குரல்? எப்படியப்பா விழப்போகிறது? இன்ப ஒலி கேட்டுக் கேட்டுச் சொக்கிப் போயல்லவா இருக்கிறாய்! அண்ணன் இந்த நேரத்தில் அழைப்பது காதிலே விழும் என்றுதான் எப்படி எதிர்பார்க்க முடியும்? பொங்கலோ! பொங்கல்! என்ற குரலொலி இசையாகி இன்ப ஒலியாகி உன்னை ஈர்த்து வைத்திருக்கும் வேளை — நான் உன்னை அழைத்து வேறு வேலைகளிலே எங்கே ஈடுபடுத்தி விடப்போகிறேனோ என்ற ஐயப்பாட்டின் காரணமாக ஒரு சமயம், குரலொலி காதில் விழாததுபோலக் காட்டிக்கொள் கிறாயோ என்னவோ, எனக்கென்ன புரிகிறது. ஆனால், நான் உன்னை அழைப்பது, உன் விழாக்கோலத்தைக் கலைத்துவிட்டு வேறு வேலைகளைச் செய்திட உடனே கிளம்பு என்று கூறிட அல்ல. ஒவ்வொரு நாளும் நீ உன் இல்லத்துள்ளாருடன் இன்று போல் மகிழ்ச்சி பொங்கி வழிந்திடும் நிலையிலே இருக்கவேண்டும், பால் பொங்கும் இந்நாள் திருநாள் — எனினும், என்றென்றும் உன் வாழ்வு தேனோடு பால் கலந்த பான்மைபோல இருந்திடவேண்டும் என்று விரும்பி, உனக்கும் இல்லத்தவருக்கும் என் இதயங்கனிந்த நல் வாழ்த்துக்களைத் தந்திடவே அழைத்தேன்.

மகனே! என்று தாய் அழைக்க, எங்கே அவன்? என்று தந்தை கூப்பிட அண்ணனிடம் கூறுகிறேன் என்று உடன் பிறந்தாள் பேசிட, என்னங்க! என்ற இசையைத் துணைவி எழுப்பிட, எங்கப்பா! இல்லே! எங்கப்பா! என்று நீ பெற்றெடுத்த செல்வங்கள் ஒருவரோடொருவர் விளையாடி, அதன் காரண மாக வம்பு விளைந்து, அப்பா! என்று அழுகுரலைக் கிளப்புவேன் என்று எச்சரிக்கை விடுத்திடும் குரலெழுப்ப, இத்தகு ஒலிகளுக் கிடையிலே உள்ள உனக்கு, என் அழைப்பொலி கேட்கிறதோ இல்லையோ என்று நான் ஐயப்படுவதில் தவறில்லையே!

தம்பி! விழாக்கோலம் கொண்டுள்ள இல்லத்தில் எழிலோவியங்களாகத் திகழும் உன் பெற்றோரும் மக்களும் வளம்பல பெற்று, வாழ்வின் இன்பம் கண்டு, பல்லாண்டுகள் வாழ்ந்து நாட்டினை வாழவைப்பார்களாக. நினது இல்லத்தில், தமிழ் தழைக்கட்டும்! நின் ஆற்றல் தமிழைக் காத்திடப் பயன் படட்டும்! நின் வீரம் வளரட்டும்! அவ்வீரம் தாயகத்தின் மாண்பு காத்திடப் பயன்படுத்தப்படவேண்டும்! மரவு மறவாதோனே! மாண்பு மிகுந்திடவேண்டுமென்பதிலே நாட்டம் மிகக்கொண்ட நல்லோய்! வெல்க உன் முயற்சிகள்! பெற்றிடும் வெற்றிகள் மற்றையோர்க்கும் வழங்கத்தக்க பேறுகளை உனக்கு அளிக்கட்டும்! ஏறுநடையுடையோனே! வீரர் வழி வந்தவனே! மாற்றார்க்கஞ்சா மறக்குடிப் பிறந்தோனே! நினது இல்லம் இன்று புதுக் கோலம் கொண்டு பொலிவுடன் உளது! கை சிவக்க இல்லத்துப் பெண்டிர், இட்டடி நோக எடுத்தடி கொப்புளிக்கப் பாடுபட்டு, குப்பை நீக்கிக் கரைகள் போக்கி, வண்ணச் சுண்ணம் அடித்து வகையாய்க் கோலமிட்டு, பசுமை அழகாலே இருப்பிடம் பாங்குபெறத் தோரணம் கட்டி அலங்காரம் கூட்டி யுளார்! அத்தனையும் கண்டதனால் அகமகிழ்வாய் நீ என்று ஆரணங்கு எண்ணிடாமல் இருந்திடுவதுதான் உண்டோ? ஆனால், முத்தழகி முந்தானைதனைக் கொண்டு முகத்தைத் துடைத்திடுவாள், உன் முகமோ எள் வெடிக்கும்! உழைப்பதிக மானாலே உருக்குலைந்து போகுமென உள்ளம்தனில் எண்ணி, ஊரெல்லாம் கூட்டுவயோ! உண்டோ இன்னும் கோலம்? பாரெல்லாம் கூடி நின்று “பதக்கம்’ அளிப்பாரென்று இப்பாடு படுகின்றாயோ! என்றெல்லாம் கேலி மொழிதான் பேசிப் பார்க்கின்றாய். ஆரணங்கு அறியாளா ஆடவர் முறைதன்னை, ஓரப் பார்வையுந்தான் வேறென்ன கூறிடுமோ! உள்ளுக்குள் சிரிக்கின்றாள். உன் போக்குத்தான் கண்டு!! ஊரெல்லாம் விழாக்கோலம் கொண்டிடும் இத்திருநாளில், மனையெல்லாம் மாளிகையாய் மாறிடவே வேண்டாமோ! யார் அதனைச் செயவல்ல “மாயாவி’ அவளல்லால்!! அறியாமல் அருகிருந்து ஆயிரம் பேசுகின்றாய்! அகன்றிடுவாய், அவள் இங்கு அழகளிக்கும் காரியத்தில் ஆர்வம் மிகக் கொண்டுவிட்டாள்! அடுத்த வீட்டு அழகியுடன் போட்டி இட்டாள், அந்தி சாயும் வேளையிலே அல்லிபூத்த ஓடை அருகினிலே!! மான் துள்ளும் என் மனையில், மயிலாடும், பார்த்திடுவாய்! தேன் சிந்தும் செடி கொடிகள் காட்டிடுவேன், கை வண்ணம் கலந்து வெண்பொற் சுண்ணப் பொடியதனால் என்று வேல்விழி விளம்பிவிட்டாள்; துடியிடையாள் தோற்பாளோ! நாம் இருவரும் உலவிடும் இந்நல்லோடை தன்னையும், தவமிருக்கும் குருகினையும், தாய் முகத்தை நோக்கிடும் சேய் விழிபோல் விழியுடைய அணிலும் அது தின்னும் பழக்கொத்தும்; பார்த்திடுவாய், நீரிருக்கும், ஆங்கு நீலம் பூத்திருக்கும், கன்று களைத்து வந்து நீர் பருகும் கண்டிடலாம்! எல்லாம் இக்கரத்தால் எழுதிடுவேன் என் முற்றம், வண்ணம் பல கொண்ட சுண்ணப் பொடிகொண்டு! கண்டு வியந்திடுவாய் காலை மலர்ந்ததுமே என்று கூறித் துவக்கி விட்டாள் எழில்காட்டும் போட்டியினை. அதை எண்ணி ஆரணங்கு, இடை துவளும் என்றறிந்தும், சரிந்த கூந்தலினைச் சரிப்படுத்த மனமுமின்றிச் சிந்து பாடிடும் புலவோன் தனியோர் உலகதனில்தான் உலாவி இருத்தல்போலத் தையல் இருக்கின்றாள் — நீயோ கை காட்டி அழைக்கவில்லை கண் காட்டிப் பார்க் கின்றாய், கனிவுள்ள சொல்கூட்டி அழைக்கின்றாய்! போ! போ! தோற்றாய்! இன்று விழாக்கோலம் வீடெல்லாம் காட்டிடவே அவள் நினைப்பு, நேரம் எல்லாம்! — என்று நான் கூறிடலாம்; நீ கேட்கவா போகின்றாய்! போ! அண்ணா! பொல்லாத கோலமது போட்டிட இவள் முனைவாள், பின்னர் தாள் வலியும் தலை வலியும் தன்னாலே வந்து சேரும், யார் பிறகு அதற்கெல்லாம் அல்லற்படவேண்டிவரும். நான் அண்ணா! அதனால்தான், நாளெல்லாம் கோலமதை நாட்டிலுள்ளார் கேட்டுக்கொண்டது போல் போட்டபடி இருக்க வேண்டாம், வா உள்ளே! என்றழைத்தேன். வம்பு அல்ல, நிச்சயமாய்! — என்று பதிலுரைப்பாய். ஏ! அப்பா! உனக்கென்ன, பதிலளித்து வெற்றி பெற வல்லமைக்கா பஞ்சம்!!

ஒன்றினை இன்றெண்ணிப் பார்த்திடுவாய்! வெறும் இலைகளே இருந்த கொடி அரும்பதனைக் காட்டிப் பின் அதுவே மலராகி, மணம் பரப்பிக் காட்டுவதும், தூவியது உட்சென்று, உயிர்பெற்று நிலம் பிளந்து, தாவி அணைத்திடத் தன் தாய் நோக்கிச் சென்றிடும் சேய்போல, மண் பிடிப்பினி லிருந்து விண்தொட்டு விளையாட எண்ணுதல்போல், பயிர் வளர்ந்து கதிர் குலுங்குவதும், தாளாலே நீர் உண்டு சுவை கூட்டித் தலையாலே தந்திடும் தாரணியுள்ளார்க்கு அன்னை போல் விளங்குகின்ற தென்னை ஓங்கி வளருவதும் ஏற்றுக்கு? எவர் பொருட்டு?

நாம் வளர்ந்து வருவது வீட்டுக்கு, நாட்டுக்கு; தொண்டாற்ற, துயர் நீக்க; தோழமை பூண்டொழுக, தொல்லுலகம் வளம் பெறவே மிகும் உழைப்பை நல்கிட உரைக்கின்றார், உணர்கின்றோம்; உணராமலேயே கூடப் பலர் உரையாடி இருக்கின்றார். ஏடு பல தன்னில் நாடறிய எழுதி யுள்ளார். எனவே, பொருள் விளக்கம் பெறுகின்றோம். ஆனால், வானத்துக் கருமேகம் மழை முத்தாய் மாறுவதேன்? எவர் பொருட்டு? யார் அழைப்பு? யாது பயன் கருதி? கொடியாடக் கனியாட, செடியாட மலராட, ஆடை விலகியாட வீசிடும் காற்றதுவும், என்ன பயன் கண்டு இவ்வேலை செய்கிறது? கதிர் தந்துகொண்டிருக்கும் பயிர்வளர்ந்து, யாரிடம் பயன் கண்டு மகிழ்கிறது!! பழம் தந்த மரமதுவும் பரிசு என்ன பெறுகிறது! ஒன்றும் காணோம்! சேறாக்கி வைக்கின்றோம். நீர் பெய்து, செடி கொடியும் பயிர் வகையும் இருக்கும் இடம் தன்னில்! ஏனய்யா எனக்கிந்தச் சகதியிடம் எனக் கேட்கும் போக்கினைக் கொள்ளாமல், சேறு தந்த நமக்குச் செந்நெல் மணியதனைப் பயிர் தரக் கண்டோம்; செந்தேன் சுவைகொண்ட பழம் தந்து மரமதுவும் நமைக் கண்டு கூறிடுது, இன்று இது போதும், நாளை வா! மேலும் பெற! என்று. நாமோ? என்செய்கின்றோம்? கொடுத்தது என்ன, கொண்டது என்ன எனும் கணக்கினை மறக்கின்றோம் முற்றும். நமக்குள் ஒருவருக்கொருவர் கொடுப்பது, கொள்வது எனும் முறையில், இந்நிலையா கொள்கின்றோம்! அடேயப்பா! எத்தனை எத்தனை கணக்குகள், காபந்து, வழக்குகள், வல்லடிகள்! ஏமாளியோ நான் ஏழு கொடுத்து ஆறு பெற! என்றெல்லாம் கேட்கின்றோம். தூவிய விதையினுக்கு நாம் என்ன தந்தோம், தம்பி! மண்ணுக்குள் போட்டு மூடிவிட்டோம், மரித்தவரைச் செய்வதுபோல், பின்னர் நீர் தெளித்து வருகின்றோம். விதையோ நமக்குத் தாயன்புக்கு அடுத்தபடி எனத்தக்க உள்ளன்பு தருகிறது! பெறுகிறோம் நாம், ஒரு கணக்கும் பார்க்காமல்!

வள்ளல்களிடம்கூடக் கணக்கு வரைவார் உண்டென்னலாம்! அஃதன்றி, கவிதை வாரி வழங்கினர் காண் பொருள் பெற்ற பெரும் புலவர்! இயற்கையோ எந்த ஓர் வள்ளலும் எதிர்த்து நிற்க ஒண்ணாத இயல்பினதாய் இருந்திடுதல் இன்றளவும் காண்கிறோம்.

பயன் துளியும் கருதாது பாருக்கு இனிமைதனைப் பயக்கும் இயற்கைக்கு, நாம் நன்றி கூறிடவே வந்தது இந்தத் திருநாள். கடன் மெத்தப்பட்டுவிட்ட மாந்தர், ஓர்நாள் கூடி, கதிரவன் தரும் ஒளிக்கும் கதிர்தரும் பயனுக்கும், மண் தந்த மாட்டுக்கும், வந்தனைகள் செய்து, வாழ்த்துப் பல பாடி, உம்முடைய உதவி யினால் உயிர் வாழ்ந்து வருகின்றோம்; உலகு தழைத்திடவே உழைத்திடும் உத்தமர்காள்! வாழி! நீர் வாழி! எமை வாழ்விக்கும் வள்ளல் வாழி! எனப் போற்றுகின்றோம். ஞாயிறு போற்றுதும் என்று நம் இளங்கோ, பாடியது, இயற்கையின் பெருநிதியை நாம் பெற்று வாழ்வதை எடுத்தியம்பத்தான், கதிரவன் ஒளியதால், உயிர் வளருவதால், ஞாயிறு போற்றதும் எனும் மொழிவழிப்படி, பொங்கற் புதுநாள் எனும் திருநாள் கொண்டாடி மகிழ்கிறோம்.

தம்பி! கதிரவன் ஒளியில் உயிர்ப்புச்சக்தி இருப்பது இன்று பள்ளிப்படிப்பு அதிகம் இல்லாதவரும் அறிந்துள்ள ஒன்றாகும். ஆனால், அதிலே உள்ள விந்தையினைக் கூர்ந்து கவனித்திருக் கிறாயா? கதிரவன் ஒளி, காரிருளை விரட்டுகிறது, “காலை மலர்கிறது’ என்று கூறுவது கவிதா நடைக்காக மட்டுமல்ல, அரும்பு கூம்பிக் கிடத்தல்போலத்தான் இரவுக் காலத்தில் உலகு இருக்கிறது; பகலவன் எழுந்தால் பகல் காண்கிறோம்; அரும்பு இதழ் விரித்திடுதல்போல, உறக்கம் கலைந்து உலகு எழுகிறது, மலர்கிறது.

தட்டி எழுப்புதல் மட்டுமின்றி, உயிர்ப்புத் தந்து, காத்து நிற்பது ஞாயிறு. ஆயினும், இதனை அறிவாயே எந்தச் சக்தி உயிர்ப்புத் தருகிறதோ, அதுவே அளவு அதிகமாகப் போயின், கடும் வெயிலாகித் தவிக்கிறது தணலென்றாகிறது, பொரித்துத் தள்ளுகிறது, எரித்துவிடுகிறது, கருக்கிவிடுகிறது, சாம்பலாக்கி விடுகிறது.

எனவே, ஆக்கும் சக்தியும் அழிக்கும் சக்தியும் ஒரே இடத்தில் இருக்கிறது; அடைத்து வைக்கப்பட்டுள்ள அந்த “வலிவு’ ஆக்கும் பணியினைச் செம்மையாகச் செய்திட வேண்டு மெனின், அது பயன்படுத்தப்படும் “அளவு’தான் முக்கியம். அளவு அதிகமாயின் அழிவுதான்!

இந்த அளவும், எல்லாம் பொருள்கட்கும், எல்லாக் காலத்துக்கும், எல்லா இடங்கட்கும், எல்லா நிலைமைகட்கும் ஒரே விதமாக இருந்திடும் என்றும் எண்ணற்க. இருத்தலும் கூடாது.

எனவே, இந்த “அளவு’க்கு அளவுகோல், எது என்று அறுதியிட்டுக் கூறிட முடியாது. அது மட்டுமல்ல. நமது தேவை களுக்கு ஏற்ற வகையில் அந்த அளவினை நாம் கூட்டக்குறைக்க, முறைப்படுத்த வகைப்படுத்தவும் முடியும் என்று பொதுவாகக் கூறிவிட முடியாது. கதிரவன் ஒளிதரும் விளக்கு அல்ல, தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற வகையிலே, மட்டுப்படுத்த அல்லது அதிகப்படுத்த அல்லது இல்லாது செய்திட. கதிரவன் ஒரு ஒளிப் பிழம்பு! இருக்குமிடம் நீண்ட நெடுந்தூரம்! எத்தனை கல் தொலைவு என்று கணக்கினைக் கூறுவது விஞ்ஞானம். நாம் உணருவது இது; ஞாயிறு எவ்வளவு தொலைவிலே உளது என்றால் நாம் அதனுடைய துணைகொண்டு உயிர்ப்புச்சக்தி பெறும் விதமான அளவு தொலைவில் உளது. இல்லையேல் ஒன்று, ஒளியும் வெப்பமும் கிடைக்கப்பெறும் உயிர்ப்பொருள் யாவும் உறைந்து போய்விடும்; அல்லது தீய்ந்து தீர்ந்து போகும். இயற்கை நியதி இரண்டும் ஏற்படாதபடி அமைந்துள்ளது. உறைந்துபோகச்செய்திடவும், கொளுத்திக் கருக்கிவிடவும் முடியும் என்பதனை நாம் உணரக்கூடிய “குறிகள்’ ஒவ்வோர் அளவு அவ்வப்போது நமக்குத் தென்படத்தானே செய்கின்றன. கொளுத்தும் வெயில்! என்கிறோம், கொட்டும் குளிர் என்கிறோம். அவை குறிகள்! எச்சரிக்கைகள்! இயற்கை மூலம் நாம் பெறும் வலிவின் அளவு முறை தவறிப்போனால், என்ன நேரிடும் என்பதனை நாம் அறிந்துகொள்ள, இந்தக் “குறிகள்’ போதுமானவை.

“தம்பி! காய்கதிரோன் உள்ளடக்கிக்கொண்டுள்ள வலிவு மட்டுமல்ல, பொதுவாக இயற்கையின் ஆற்றலே இத்திறத்தது தான். தேவைக்கேற்ற, நிலைமைக்குத்தக்க அளவு இருந்தால் மட்டுமே பலன்; அளவு முறை கெட்டால் எல்லாம் பாழ் வெளியே, படுசூரணமே! கண்ணைக் கவர்ந்திடும் வண்ணப் பூக்கள் உதிருவதுபோலக் காட்சிதரும் வாணம், ஒன்று; வீழ்ந்ததும் அதிர்ச்சிகளை வெடிப்புகளை இடிபாட்டைப் பெருந்தீயை மூட்டிவிடும் வெடிகுண்டு மற்றொன்று. முறை கெட்டால், அளவு அதிகமானால் என்ன ஆகும் என்பதனை, இதனின்றும் அறிந்துகொள்ளலாம்.

இயற்கைக்கு இத்தகைய ஆற்றல் இருப்பினும், அதன் இயல்பு பெரும் அளவு, உயிர் இனத்துக்கு வாழ்வளிக்கும் செம்மைக்குப் பயன்பட்டு வருகிறதேயன்றி, அழிவுக்குப் பயன்பட வில்லை, எவ்வகையாலோ எத்துறையிலோ ஆற்றல் பெற்ற மாந்தர்கூடத் தமக்குள்ள “அழிக்கும் சக்தியை’ இயற்கைபோலப் பொறுப்புடன் அளவுபடுத்தி உபயோகிக்கின்றனரா எனில், இல்லை என்னலாம்.

உடல்வலிவோ பொருள்வலிவோ சிறிதளவு மிகுதியாக உள்ளதென்றால், அதனைக் காட்டி ஆதிக்கம் பெறவும், பிறரை அழித்திடவும் காட்டும் உணர்ச்சி தடித்துவிடுகிறது; சில வேளை களிலே அது வெறியாகியும் விடுகிறது.

செங்கிஸ்கான், தைமூர் என்றழைக்கப்படுவோர், தமக்கு இருந்த தாக்கும் ஆற்றலை அழிவுக்குப் பயன்படுத்தி, வெறி யாட்டமாடித் தரணியை நிலைகுலையச் செய்தனர் என்பர். நம் நாள்களிலே இட்லர் தமக்குக் கிடைத்த ஆற்றலை, வலிவை, ஆதிக்கம் பெற அழிவினை மூட்டிடவே பெரிதும் பயன்படுத்தியதனைக்

கண்டோம். பாயாத புலி, பதுங்காத நரி, சீறாத பாம்பு, உறுமாத மிருகம், கொத்தாத கழுகு இல்லை என்பதுபோல வலிவு ஏற்றப் பெற்றவர்கள் வெறிச் செயலில் ஈடுபடாதிருப்பது, நூற்றுக்கு எண்பதுக்கு மேற்பட்ட அளவு இல்லை என்றே கூறலாம். இயற்கையை, மாந்தர் இயல்புடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எத்துணையோ பாராட்டத் தோன்றுகிறது. அழிக்கும் சக்தியைக் காற்றும் கதிரோனும், மழையும் பெருநதியும், கடலும் நில நடுக்கமும் எரிமலையும் எரிநட்சத்திரமும், மிருகம்போலவோ, மாந்தரில் வெறிகொண்டலைவோர்போலவோ, அவிழ்த்து விட்டிருந்தால், அவனி ஏது? காலம் ஏது? கருப்பொருள் ஏது? எல்லாம் பாழ்வெளியாகிப் போயிருக்கும்.

இயற்கை, மிகப்பெரும் அளவுக்கு, உயிர்க்கு ஊட்டம் தரவே பயனளித்து வருகிறது; அழிக்கும் தீச்செயலில் ஈடுபட்டுவிடவில்லை.

கதிரோனுக்கு விழாக் கொண்டாடும் இந்நாளில் இக்கருத்தினை எண்ணிக்கொள்வது பொருத்தமுடைத்து என்பதனால் இதனைக் கூறினேன். ஆனால், தம்பி! மனிதன் தன் அறிவுத் திறனைக்கொண்டு கூடுமான மட்டும், அழிவு தன்னை அண்டாதபடி தடுத்துக்கொள்ளக் கற்றுக்கொண்டான்; பழகிக் கொண்டான். விஞ்ஞானம் இதற்கான முறைகளை, வாய்ப்பு களைப் புதிது புதிதாகத் தந்தவண்ணம் இருக்கிறது.

இத்துடன் மனிதன் தன் வசதிக்கு ஏற்றபடி வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டான்; சுற்றுச் சார்பினைச் சமைத்துக்கொள்கிறான். சுற்றுச்சார்புக்கு ஏற்றபடி இயல்பு, தொழில், தொடர்பு ஆகியவை அமைகின்றன. இன்று திருநாள். இது ஓர் புதிய, இனிய, சுற்றுச்சார்பை இல்லங்களிலே ஏற்படுத்தி வைக்கிறது. புத்தாடை, சுவை உணவு, கலகலப்பு, தோழமை, குதூகலம், நமது இல்லங்களைப் புதுக்கோலம் கொள்ளச் செய்வது காண்கிறோம். நேற்று உண்டு மகிழ்ந்தோம், நாளையும் உண்போம், எனினும், இன்று — விழா நாளன்று — உண்பதும் உரையாடுவதும் தனியானதோர் “சுற்றுச்சார்பு’ காரணமாகத் தனிச்சுவை பெறுகிறது.

ஊரெங்கும், அல்லது மிகப் பெரும்பாலான இடங்களிலே விழாக்கோலம் இருப்பது, அவரவர் இல்லத்தில் அமைந்துள்ள விழாக்கோலத்தை அதிகப்படுத்தியும் புதுவிதமாக்கியும் காட்டுகிறது.

பல சமயங்களில், சிலருடைய இல்லங்களிலே புத்தாடை, அணிகலன் பெறுவதும், சுவைமிகு பண்டங்கள் உண்பதும், பேசி மகிழ்வதும், இசை கேட்டு இன்புறுவதும் நடைபெற்றிருக்கக் கூடும். ஆனால், சிலருடைய இல்லங்களில் மட்டுமே, சீர் தெரியும், மற்றைய இல்லங்களில் அது அப்போது இராது. எனவே, அவர்கட்கு, மகிழ்ச்சி இருக்கக் காரணம் இல்லை, விழா நாளெனில் அதுபோலன்று. ஊரெல்லாம் கொண்டாடுவர். தத்தமது இல்லத்தில் உள்ளதுபோன்றே மற்றையோர் இல்லங்களிலும், விழாக்கோலம், அளவும் வகையும் மாறுபடும் எனினும், மகிழ்ச்சிக்கான “சூழ்நிலை’ ஓரளவுக்கேனும் இருந்திடும். “ஊரெல்லாம் வாழ்ந்திடக் கேடொன்றும் இல்லை’, “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பனபோன்ற முதுமொழிகளின் வழி நிகழ்ச்சிகள் அமைந்திருப்பதுபோலத் தோற்றம் அளிக்கிறது விழா நாளின்போது,

எனவே, பொது இன்பத்தில் நமது இன்பம் ஒரு பகுதி, எல்லோரும் இன்பம் பெறுகின்றனர், நாம் மட்டும் அல்ல என்று உணர்வு தரும் உவகை விழா நாளுக்கென அமையும் தனிச் சிறப்பாகும்; தேனில் தோய்த்த பழம் புதுத் தித்திப்பு பெறுதல் போல, ஊரெல்லாம் மகிழ்ந்திருக்கும் வேளையிலே நாமும் மகிழ்ந்திருக்கும் வாய்ப்புப் பெற்றோம் எனும் எண்ணம், பொங்கற் புதுநாளில் கிடைக்கப் பெறுகிறோம்.

தளதளவென்று செடிகொடிகள் இருந்திடுவதே கண்ணுக்கு விருந்தளிக்கத்தான் செய்கிறது. பசுமைக் காட்சி பாங்குடன் தெரியும்போது பார்த்துக்கொண்டிருந்தாலே பட்ட பாடுகூட மறந்து போகுமளவு மனத்துக்கு ஓர் “தெம்பு’ ஏற்படத்தான் செய்கிறது. நீலநிற வானத்தைக் காணும்போது ஓர்வித மகிழ்ச்சி பிறப்பதில்லையா! அதுபோல.

பசுமைப் பாங்கு காட்டும் செடிகொடியில் வண்ண மலர்கள் பூத்திடும் காட்சி தெரியுங்காலை, வனப்பு மிகுதியாகிப் புது மகிழ்ச்சி பெறுகிறோம்.

மலர்க்குவியல் காணக் காட்சிதான் எனினும், செடி கொடியில் அவை பூத்திருக்கும் — தனிக்கவர்ச்சி தெரிகிறது. விழாநாள் மகிழ்ச்சி, செடிகொடியில் அன்றலர்ந்து மணம் பரப்பும் மலர்போன்றது. எனவேதான், அந்த மகிழ்ச்சியிலே தனியானதோர் சுவை பெறுகிறோம்.

தம்பி! எல்லா இல்லங்களிலும் என்ற சொற்றொடரை நான் மெத்தவும் பயன்படுத்தியுள்ளேன், பொருளை விளக்க, பாடம் காட்ட; எனினும், இன்று நாடுள்ள நிலையில், விழாவும் மகிழ்ச்சியும் எல்லா இல்லங்களிலும் உளது என்று கூறுவது இயலாது; நெஞ்சறிந்து பொய்யுரைக்க எவருமே துணிந்திடார். வறுமை கப்பிக்கொண்டுள்ள நிலை இன்று, வாட்டி வதைக்கிறது. வரிக் கொடுமை ஓர்புறமும், அகவிலை மற்றோர் புறமும், மக்களை இடுக்கித் தாக்குதலுக்காளாக்கி இருக்கிறது. இந்நிலையில் விழாக் கொண்டாட, மகிழ்வெய்தி இருந்திட வாய்ப்புள்ள இல்லங்கள் மிக அதிகம் எனக் கூற இயலாது.

ஏதோ சில இடத்தில் இருந்திடும் இன்பச் சூழ்நிலை எல்லா இடங்களிலும் பரவிடத் தக்கதோர் நன்முயற்சியில் ஈடுபடுவது சான்றோர் கடன்.

இருப்பது இருக்கும், நடப்பன நடக்கும் என்று எண்ணி இருந்து விடுதல் நன்றன்று.

எனவேதான், தம்பி! நாம் நமது சக்திக்கு ஏற்ற அளவு என்று மட்டுமல்ல, அதனினும் மீறிய அளவுக்கு எல்லோர்க்கும் எல்லாம் இருந்திடவேண்டுமென்ற குறிக்கோளுக்காகப் பாடுபட்டு வருகிறோம். திராவிடநாடு திராவிடருக்கே என்ற நமது திட்டத்தின் அடிப்படையாக இஃதே அமைந்திருக்கிறது.

எல்லார்க்கும் எல்லாம் இருந்திடும் இன்பநிலையைக் காண நாம் மேற்கொள்ளவேண்டிய பணிகள் ஏராளம் என்பதையும், பல்வேறு வகையின என்பதனையும் எண்ணி பார்த்தால் உணருவர்.

அந்த உணர்வு வருவது, அப்பப்பா! இத்துணை அளவுளதா? இத்தனை வகைகளுளவா? என்று மலைத்துப்போக, மருண்டுபோக, சலிப்படைந்துபோக அல்ல. மேற்கொள்ள வேண்டிய பணி ஏராளம், பலவகையின. எனவே, நாம் நமது நேரத்தை நினைப்பை, அறிவை, ஆற்றலை மிகுதியாக இக் காரியத்தில் ஈடுபடுத்தியாகவேண்டும் என்பதிலே நாட்டம் பெறுவதற்கும், அதிலே விருப்பம் பெறுவதற்கும், அந்தப் பணியுடன் நாம் ஒன்றிப்போய் விடுவதற்காகவும் இதனைக் கூறினேன். என் ஊன்கலந்து உயிர்கலந்து உரைக்கின்றாய் என்று கூறத்தக்க விதமான, நாம் நம்மை இலட்சியத்துக்கு ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். களம்புகு வீரன், எட்டு நாட்கள் வீரம் காட்டினேன், பத்து எதிரிகள்மீது பாய்ந்தேன், இருபது வடுக்கள் ஏற்றேன், இது போதும் என வீடு திரும்பிவிட்டேன் என்று கூறிடான். அவன் சென்றது மாற்றானை வீழ்த்த. அவன் ஆற்றிட வேண்டிய கடமை அது. அக்கடமை, குறிக்கோள் ஆகிவிடுகிறது. அந்தக் குறிக்கோள் ஈடேறும் வரையிலே, அவன் மேற்கொண்ட பணி முடிந்ததாகப் பொருளில்லை.

பணியாற்றுவதிலே ஏற்பட்டுவிடும் கடுமை, எதிர்ப்படும் ஆபத்துகள் ஆகியவற்றினால் களைத்தோ, கலங்கியோ போன நிலையில், தொடர்ந்து பணியாற்றும் நிலை குலைந்து போவதுண்டு; தம்மால் இயலவில்லை என்பதைக் கூறிடுவது தகுதிக்குக் குறைவல்ல, உண்மை நிலைமையை மறைப்பது தீது, ஆகாது என்ற உணர்வு உடையவர்கள், தம்மால் பணியாற்ற முடியாது போயிற்று என்பதைக் கூறிடுவர். இவ்வகையினர் மிகச் சிலரே! மிகப்பலருக்கு இத்தகைய இயல்பு ஏற்படாது. தொடர்ந்து பணியாற்றித் தொல்லைகளை ஏற்றுக்கொள்ள இயலாத தமது நிலையை, தோல்வியை எவரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதிலே கருத்து வைத்து, வலிவிழந்ததாலோ கோழைத்தனம் மிகுந்ததாலோ, சபலத்தாலே, தன்னலச் சுவையாலோ பணிபுரிவதை நிறுத்திக்கொள்ள முடிவு செய்து கொண்டு, தம்மை அதற்காக எவரும் இழித்தும் பழித்தும் பேசிட இடம் ஏற்படக்கூடாது என்பதற்காகக் குறிக்கோளையே குறை கூறவும், இழித்துப் பேசவும் கொள்கை வழி தொடர்ந்து நடப்போரை நையாண்டி செய்தும், அவர்மீது வசை உமிழ்ந்தும், தமது தோல்வியைக் கோழைத்தனத்தை மறைத்துக்கொள்ள முனைவர். இக்குணம் கொண்டவர், சிறுநரிக்கு ஒப்பானவர் என்ற கருத்துடன், சிறுகதை எழுதியோர், சிச்சீ! இந்தப் பழம் புளிக்கும்!! — என்று எழுதிக் காட்டினர்; அறிவீர்.

அஃதேபோல, நம்மிடையேயும், அத்தகையோர் அவ்வப் போது கிளம்பத்தான் செய்கின்றனர். வீரம் கொப்புளிக்கப் பேசிய வாயினால் வீணுரைகளைக் கொட்டுவர்! கொள்கைக் காகவே வாழ்கிறோம், சாவு எமை மிரட்டினும் அஞ்சோம்! என்று பேசி, நாட்டவர் கேட்டு கை தட்டி ஆரவாரம் செய்து, இஃதன்றோ வீரம்! இதுவன்றோ கொள்கைப்பிடிப்பு! என்றெல்லாம் புகழ்பாடக் கேட்டுத் தமது மார்பை நிமிர்த்தி நாநடம் காட்டி மகிழ்ந்தவர்களே, பிறிதோர் நாள், நான் யோசித்துப் பார்த்தேன்! அமைதியாக வீற்றிருந்து யோசித்துப் பார்த்தேன். அறிவுத் தெளிவுடன் யோசித்துப் பார்த்தேன்! என்னென்பேன், தோழர்காள்! கொள்கை உப்புச் சப்பற்றது, உருப்பட முடியாதது என்பதனை உணர்ந்தேன்! கொள்கைக்காக நடப்பதாக எண்ணிக்கொண்டு கோணல்வழி நடந்தேன், மடமையில் உழன்றேன், மாசு நீக்கப்பட்ட மணியானேன் இன்று, என்று பேசி, தொடர்ந்து கொள்கை வழி நிற்போரைத் தாக்கிடவும் முனைவர்.

அவர்தம் போக்கு, அவரை வந்து பீடித்துக்கொண்ட தன்னலம், பலக்குறைவு, அதனால் ஏற்பட்டது. அவர்தம் பேச்சு, நோய்கொண்ட நிலையில் கிளம்பும் முக்கல் முனகல், விக்கல் விம்மல், படபடப்பு ஆகியவைகளே. இவை நமக்கு அவர்பால் அனுதாபம் ஏற்படுத்தவேண்டுமேயன்றி, ஆத்திரம் மூட்டுதல் அறவே ஆகாது. பல்போன கிழவர் கரும்பினைச் சாறாகத் தந்தாலன்றி, பரிவுடன் ஏற்றுக்கொள்கிறாரா! இல்லையே!! சொல்போன தோழர்கள் அதே நிலையினரே! கொள்கை இழந்தோர் குணமிழந்தோரே! எனினும், அதனைக் காட்டிக் கொள்ள, வெட்கம் குறுக்கிடாதோ! குறுக்கிடவே, எமது வீரம் வற்றிப்போய்விடவில்லை, அறிவாற்றல் அழிந்து படவில்லை, மாறாகப் பன்மடங்கு வளர்ந்துவிட்டது; எமக்குக் கொள்கை பிடிக்கவில்லை, முன்னம் இனித்ததெல்லாம் இன்று கசக்கிறது, முன்பு சுவைத்தன இன்று குமட்டல் தருகின்றன, முன்பு எது வீரம் என்று எண்ணிக்கொண்டிருந்தோமோ, அது இன்று வீம்பு அல்லது வெறி உணர்வு என்று தோன்றுகிறது, என்று கூறித் தமக்கு வந்துற்ற நோயினைப் பிறர் காணாவண்ணம் மறைத்திட முயல்கின்றனர்.

வேறென்ன! இந்நிலை, தன் நிலை மறைந்திடும்போது ஏற்படுதல், தவிர்த்திட முடியாததாகிவிடுகிறது.

மூங்கில், கரும்பைவிடத் தழைத்து ஓங்கி வளரத்தான் செய்கிறது; சுவை தாராது! அதுபோல், கொள்கையற்ற நிலையின் துணைகொண்டு, தமது இடத்தை “உயரமானதாக’ ஆக்கிக்கொண்டு கொள்கையாளர்களைக் காட்டிலும் நாங்கள் உயர்வு பெற்றுவிட்டோம் என்று நினைத்துக்கொள்வதும், கதைத்துக்கொள்வதும், ஓங்கி வளரும் மூங்கில், கரும்பினைப் பழித்திடுதல் போன்றதாகும். தம்பி! பொங்கற் புதுநாளிலே காண்கிறாயே பூசுணையும் இஞ்சியும்! இஞ்சியும் அளவு என்ன? பூசுணையின் அளவு யாது? எதற்கு எது மணம் அளிக்கிறது? விளக்கவா வேண்டும்?

கொள்கையுடன் தம்மைப் பிணைத்துக்கொண்டவர்கள், எதிர்ப்பு கண்டு அஞ்சார். ஏமாற்றம் ஏற்படும்போதுகூட மனம் உடைந்து போகார்.

குத்திப் புடைத்தெடுத்துப் புதுப்பாணை தன்னிலிட்டு, பால் பெய்து சமைக்கிறாரே, பொங்கல், அதற்கான அரிசி, கிடைத்தது, எப்படி? அரிசியாகவேவா? இல்லையே! விதை முளையாகி, முளை வளர்ந்து பயிராகி, பயிருடன் களை முளைத்து, களை பறித்த பின்னனர்த் தழைத்து, பூச்சிகட்கு ஈடுகொடுத்து, பிறகு, கதிர்விட்டு, முற்றி, செந்நெல்லாகிப் பிறகு அரிசி காண்கிறோம். இந்நிலைக்கு இடையில், உழவன் என்னென்ன தொல்லைகளை, ஏமாற்றங்களை, எரிச்சலூட்டும் நிகழ்ச்சிகளைச் சந்தித்தான், சமாளித்தான், அறிவோமே! பயிருடன் களை கண்டகாலை, நிலத்தையும் உழைப்பையுமா நொந்துகொள்கின்றனர்? இல்லையே! மேலும் உழைத்து தம் உழைப்பினை உருக்குலைக்க முளைத்திட்ட களையினை அகற்றுவோம் என்று பாடுபல படுகின்றனர்.

உழவன், செந்நெல் மணியினை, அடித்தெடுத்துக் களஞ்சியம் தனில் சேர்த்திடும் வரையிலே, தான் மேற்கொண்ட பணியி னின்றும் வழுவிடான்! உழவன் குறிக்கோள், அறுவடை! அந்த அறுவடை காணும்மட்டும் உழைத்தாக வேண்டும்; உழைத்தே தீருகிறான்.

பயிர் தரமாக இல்லை, ஊட்டம் போதுமான அளவு இல்லை, கதிர் செம்மையாக இல்லை, பதர் மிகுதி, மணி குறைவு, என்று ஏதேனும் கூறிவிட்டு, உழவன், தன் பணியினை விட்டு விடுகின்றானோ? விட்டிருப்பின், இன்று இல்லத்தில் இஞ்சியும் மஞ்சளும், மாபலா வாழையும், மற்றைப் பொருள்களும் எப்படிக் கிடைத்திருக்க முடியும்?

எனவே, உழவர் திருநாள் இடையிலே இன்னல் ஏற்படினும், தொடர்ந்து பணியாற்றி, அறுவடை கண்டே தீருவது என்ற உறுதியை உழவர் காட்டினர் என்பதை அறிந்து பாராட்ட வழங்கிட, ஏற்ற நாளாகும்.

விதை தூவும்போதே அறுவடை காணவேண்டும் எனும் குறிக்கோளினை உழவன் கொண்டான்; இடையில் எது வரினும் அந்தக் குறிக்கோளை அவன் மறந்தானில்லை, அதனினின்றும் வழுவிடவும் இல்லை. அதன் காரணமாகத்தான், பலவித உணவு வகை, பருகுவன, சூடுவன, பூசுவன யாவும் உலகு பெற்றுள்ளது. களை கண்டு கலக்கம் கொண்டு கழனிவிட்டுக் கழனி மாறி விட்டிருந்தால், என்ன கிடைத்திருக்கும்? தோல்வி!!

இந்த அரிய கருத்து நிரம்பக் கிடைக்கும் நல்ல நாள், தமிழர் திருநாள்.

ஏர்கட்டி உழும்போது எட்டு ஊரார் கேட்டு மகிழத்தக்க பாட்டெழுப்பிய உழவன், களை கண்டு கதி கலங்கி, இந்த வயலினிலே இறங்கியதே என் தவறு! என் உழைப்பதனை இதற்கீந்தது பெருந்தவறு! இனி என் உழைப்பு இதற்கு நான் அளித்திடவே போவதில்லை. அம்மட்டோ! இந்த வயலினையே அழித்தொழிப்போன், இது உறுதி என்று இயம்பிடக் கேட்டதுண்டா? இல்லை! ஆனால், தமது தகுதியும் திறமையும் அறியாததாலேயே, தாரணியில் பலப்பலரும் தலைவர்களானார்கள், இனி அவர்க்குக் கிடைத்திட்ட அந்த இடம் நாம் பெறுவோம், நமக்கு அது கிட்டாது என்பது விளங்கிவிட்டால், இடத்தையே அழித்தொழிப்போம் என்று கூறிடுவோர் கண்டு வியப்பு அடைதல் வேண்டாம்; இத்தகைய இயல்பு கொண்டோர், இத்தனை நாள் எந்த விதமாகத்தான் இங்கிருந்தார், கொள்கை முழக்கி வந்தார், குறிக்கோளின் தத்துவத்தை விளக்கி நின்றார் என்று எண்ணித்தான் எவரும் வியப்படைதல்வேண்டும்

உனைச்சுற்றி இன்றுள்ள பொருள் பலவும், காடென்றும் மேடென்றும் கட்டாந்தரையென்றும் முன்னம் மாந்தர் ஒதுக்கி விட்டிருந்த நிலம் தந்தவையன்றோ!

இன்றோ இன்பம் நாம் துய்ப்பது, இயற்கையை வெல்ல, அதன் ஆற்றல் துணைகொள்ள, எண்ணற்ற மக்கள் எத்தனையோ காலமாக எடுத்துக்கொண்ட முயற்சிகளின் வெற்றியைக் காட்டுகிறது. எனவே, உழைப்பின் மேன்மையை, உலகு கொண்டாட அமைந்தது பொங்கற் புதுநாள்.

நிலந்தனிலே உழுதிடுவோர், சேறாக்க மிதித்திடுவார், செய் தொழிலுக்கேற்றவண்ணம், வெட்டியும் குத்திக் குடைந்தும், பிளந்தும், குழி பறித்தும், எத்தனையோ செய்திருப்பது, காண் கின்றாய், அல்லவா? எதன் பொருட்டு? பலன் காண! எவர் துய்க்க அந்தப் பலன்? நிலம் அல்ல!

பலன் காண மக்கள் உழைத்திடுதல் காண்போர் உழைப்போரை வாழ்த்துகின்றார், உழைப்பின் ஏற்றம் செப்பு கின்றார்; உண்மை; தேவை.

ஆயின், வேறொன்று உணர்தல்வேண்டும். பலன் காண உழைக்கின்றான் மனிதன், அவன் காணும் பலன் வழங்கும் நிலமோ பலன் காணாதது மட்டுமல்ல, தன் வலிவு தானிழந்த, பொருளிழந்து போவதுடன், வெட்டுவார் நிற்பதையும் வெறுத் திடாமல், அவர்க்கும் இடம் அளித்திடும் பொறை உண்டே, அம்மம்ம! மிகப் பெரிது!!

என் சோறு உண்டவனா என் சொல்லை மீறுவது? நான் அளிக்கும் ஊதியத்தால் உயிர்பிழைக்கும் போக்கின்னா, நாக்கை நீட்டி நின்றான், நானவனுக்கு உயிர் கொடுத்தோன் என்பதனையும் மறந்து? என் வீடு ஏறி நின்று என்னையே ஏசிட, என்னதான் துணிவு உனக்கு? இறங்கு என் இடம் விட்டு என்றெல்லாம் ஊரார் உரையாடல் கேட்கின்றோம். “பொன்னுடன் மணியும், பொன்னுடையானேனும் இஃது இல்லாதானாயின், என்னுடையான்’ என்று எவரும் கூறிடத்தக்க, உண்ணும் பொருள் பலவும், சுவைதரும் கனியதுவும், மணம்தரும் மலர்தானும், தந்துதவும் நிலமதுதான், ஒரு பலனும் காணாதது மட்டுமல்ல, கருவி கரம்கொண்டு தன்னை இம்சிப்போனின் தாள் தங்கி இருப்பதற்கும் இடம் கொடுக்கும், இயல்பு என்னே! சின்னஞ்சிறு பூச்சி, நமதுடலில் ஓரிடத்தில் ஊர்ந்து நமக்குத் தொல்லை தந்திடும்போதினிலே, எவ்விதம் துடிக்கின்றோம். எவ்விதம் தேடுகின்றோம், கண்டெடுத்துப் பூச்சியினைக் கொன்றழிக்கத் துடிதுடித்து, எத்தனைவிதமாகத் தாக்குகிறார், நிலமதனை. எத்துணை பொறுமையுடன் எல்லாம் தாங்கிக் கொண்டு பலன் தந்துதவுகிறது நிலம் என்னும் நேர்மை. உழுதால் உணவளித்து, குடைந்தால் நீரளித்து, ஆழக் குடைந்திட்டால், அரும் பொருள்கள் பல அளித்து, ஏனென்று கேளாமல், எப்பலனும் பெற்றிடாமல் ஈந்திட நான் உள்ளேன் பெற்றிடுவாய்! பிழைத்திடுவாய்! எத்தனை விதமான இன்னலும் இழிவும், நீ என்மீது சுமத்திடினும், எல்லாம் மறந்திடுவேன், பல்பொருளைத் தரமறப்பேன் அல்லேன்! குத்தியவன் குடைந்தவன், வெட்டியவன் இவனன்றோ, இவன் நிற்க இடம் கொடுக்க ஏன் நாம் ஒப்புதல் வேண்டும். பழி தீர்த்துக்கொள்வோம், இவன் நம்மைப் படுத்திய பாடுகளுக்கெல்லாம், என்ற சிறுமதி துளியுமின்றிச் செல்வம் ஈந்திடுவது காண்கின்றோம்.

அகழ்வாரைத் தாங்கும்
நிலம்போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை.

என்றார் வள்ளுவர். பொறையுடைமையில் இஃது தலையாயது என்று கூறுகிறார்.

நிலம்தரும் பலன்கண்டு மகிழ்ந்து, நன்றி கூறும் இந்நாள், பொறையுடைமையைப் போற்றிடவும்வேண்டும்.

தம்பி! உன் எதிரே காணப்படும் விளைபொருள் யாவும், விதையாக ஒருபோது இருந்தவை. நிலம் தன்னிடம் ஒப்படைக்கப் பட்டிருந்ததனை, எத்துணை பாங்காக வளரச் செய்து நமக்கு அளித்துளது கவனித்தனையா! தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட “விதை’ கவரப்படாமலும், அழிக்கப்பட்டுவிடாமலும் பாதுகாப்பு அளித்து, பிறகு முளைவிட்டபோது, வெளியே சென்றிட இடமளித்து, தான்பெற்ற குழந்தையை உலவ இடம் கொடுத்து, அதேபோது பாதுகாப்புக்காகத் தன் ஆடையால், குழவியை ஒரு குறிப்பிட்ட அளவு இடம் வரையில் மட்டுமே உலவிடத்தக்க விதமாகப் பிணைத்து வைக்கும் தாய்போல, செடியும், கொடியும் பயிரும் தன்னுள் இருந்து வெளிக்கிளம்பிட இடமளித்து, அதேபோது, வேர்களை இறுக்கிப் பிடித்துக்கொள்வதன்மூலம், நெடுவழியும் கெடுவழியும் போய்விடாதபடியும் தடுத்து வைத்திருக்கிறது.

இத்தனை பரிவு வழங்கும் நிலத்தைத்தான், பல்வேறு பொருள்களைப் பெற்றுப் பயன் துய்க்கும் மாந்தர், பெயர்க் கிறார்கள், பிளக்கிறார்கள், குடைகிறார்கள். அகழ்வாரை நிலம் தாங்கிக்கொள்கிறது.

என்னென்ன உதவிகள் செய்தேன் தெரியுமா இன்னாருக்கு என்று கூறிடத் தோன்றும்போதெல்லாம், தம்பி! நிலம் மாந்தர்க்கு வழங்கிடும் உதவியின் தன்மையை எண்ணி, அடக்க உணர்ச்சி பெறவேண்டும். நிலம் மாந்தர்க்கு வழங்கும் திறத்துடன் மாந்தர் ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்ளும் உதவிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நமக்கே, வெட்கமாக இருக்கும்.

என்னிடம் உதவி பெற்றுக்கொண்டு என்னையே இகழ் கிறான் — நான் எப்படி அதனைத் தாங்கிக்கொள்வேன் என்ற எண்ணம் எழும்போதெல்லாம், தம்பி! அகழ்வாரைத் தாங்கிக் கொள்ளும் நிலத்தை எண்ணிப் பொறையுடைமையைப் பூண்டிடல்வேண்டும்.

இத்தகு நற்கருத்துக்கள் பெற்றிடத்தக்க நாள், இத்தமிழர் திருநாள்.

நற்கருத்துகள் பலவும் நாம் பெற்றிடலாம் இந்நாளில் — அதுவும் அதற்காக ஏடெடுத்துப் படித்த பிறகு என்றுகூட இல்லை. நம்மைச் சுற்றியுள்ள நிலைமைகளை, நினைப்புகளை, பொருட்குவியலைக் கண்டாலே போதும், நான் சுட்டிக் காட்டிய கருத்துக்கள் உன் நெஞ்சிலே சுரக்கும்.

அது சரி, அண்ணா! பொங்கற் புதுநாளில் மகிழ்ச்சி பெறலாம், மாண்பு பெறலாம், என்கிறாய், ஒப்புக்கொள்கிறேன் — பொங்கற் புதுநாள், நாடு முழுதுக்கும் மகிழ்ச்சி தரத்தக்க நிலையினில் இன்று இல்லையே, அதனை மாற்றி அமைத்து மனைதொறும் மனைதொறும், மகிழ்ச்சி பொங்கிடத்தக்கதோர் சூழ்நிலையைக் காணவேண்டாமா — அதற்கு யாது செயல் வேண்டும் என்று கேட்கிறாய், புரிகிறது. என் பதிலும் உனக்குத் தெரியும்; நமது அரசு அமைதல்வேண்டும்; அதற்கும் அடிப்படை யாக நமது நாடு நமது ஆகவேண்டும். அந்தக் குறிக்கோளின் அரவணைப்பிலே நாம் இருக்கிறோம். தம்பி! உனக்கும் எனக்கும் இடையே ஏற்பட்டுள்ள “பாசப் பிணைப்பு’க்குக் காரணம் என்ன? நாம் ஏற்றுக்கொண்டு போற்றிவரும் குறிக்கோள் திராவிடநாடு திராவிடர்க்கே எனும் இலட்சியம்.

எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டுமென்பதற்கே, திராவிட நாடு திராவிடர்க்கே எனும் குறிக்கோள் கொண்டுள்ளோம் என்று கூறுகின்றீர், நோக்கம் சாலச் சிறந்தது, வழி தவறு; எல்லோரும் இன்புற்றிருக்க நாடு தனியாதல்வேண்டும் என்பதில்லை, திட்டமிட்டுப் பணியாற்றி, உற்பத்தியைப் பெருக்கினால், ஊர் தழைக்கும், உற்ற குறைகள் யாவும் நீக்கப் பெற்று எல்லோரும் வாழ்வர் என்ன கூறுகின்றீர் என்று கேட்கின்றனர் காங்கிரசார். தம்பி! அவர்கள் பேச்சினை நாகரிக முள்ளதாக்கி நான் இதுபோல் எடுத்துரைத்தேன்.

எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடவே, எமது கட்சியினர் திட்டம் தீட்டுகின்றார் — இரண்டு முடிந்தது, மூன்றாவது இன்று நடை பயிலக் காண்கின்றீர். இந்தத் திட்டங்கள், நாட்டு வாட்டம் போக்கிடவும், கேட்டினை நீக்கிடவும், வீட்டினிலே வாழ்வின் ஒளி வந்து பரவிடவும் ஏற்ற வழி காட்டிடவும் காண் என்று பேசுகின்றனர்.

திட்டமிட்ட சீரமைப்பு என்பதனைத் தி. மு. கழகம் தேவை யற்றது என்று கூறவில்லை. ஆயின், அது காட்டி, உரிமை வாழ்வு மறுத்திடுவது அறமாகாது என்று கூறுகிறது. சோளக் கொல்லைப் பொம்மை காக்கை கடுவனை விரண்டோடச் செய்திடக்கூடும். எனினும், வயலுக்குடையான் வரப்பருகே நின்று காத்து வளம் பெறுதற்கு அது ஈடாகாது. கார் கண்டதும் ஏர்மீது கண்பாயும் உழவனுக்கு. மாரி பெய்திடட்டும் என்னிருந்திட மாட்டான், பொய்த்திடின் என்னாகும் என்றெண்ணி, மார்பு உடையப் பாடுபட்டேனும், காலத்தில் நீர் பாய்ச்சிக் கடமை யாற்றுகிறான். இவை யாவும் தனக்கென உள்ள வயலில்!

திட்டங்கள், திருவிடம் அமைந்தால் தீய்ந்துபோய்விடுமோ! இல்லை! திட்டமிட்ட சீரமைப்பு அப்போதும் இருந்திடத்தான் வேண்டும் — எனவே, திட்டம்தனைக் காட்டித் திருவிட விடுதலை வேண்டுவதில்லை என உரைப்போர், பருகிடப் பால் கொடுத்து விட்டப் பசுவினைப் பறிப்போர் போன்றாராவர்.

திட்டம் இரண்டு முடித்தோம் என்று, வழி நடந்த களைப்பாலே வியர்வையை வழித்தெடுத்துக் கீழே வீசிவிட்டுப் பேசுவார்போல் உரைக்கின்றார் ஆட்சியாளர் — திட்டமிட்டதன் பலன், தேனாகி இனிக்கிறதா அல்லது பலனைத் தேடிக் கண்டறிய ஓர் முயற்சி நடக்கிறதா என்பதனை எண்ணிப் பார்த்தால் போதும், இவர் கூற்று எத்தகையது என்பதனை அறிந்திடலாம்.

திட்டம் இரண்டு முடித்ததனால் செல்வம் வளர்ந்தது; எனினும், அச்செல்வம் எங்குப்போய் ஒளிந்தது என எவர்க்கும் புரியவில்லை. எனவே, சென்று உசாவுங்கள், செல்வம் எங்கு உளது என்று.

இக்கருத்துடன் உரையாற்றி நேரு பெருமகனார், திட்டத்தால் கிடைத்திட்ட செல்வம் சமுதாயமெங்கும் பரவிக் கிடக்கிறதா, அல்லது சிலருடைய கரம் சிக்கிச் சீரழிந்து போகிறதா என்பதனை ஆராய்ந்து அறிந்து கூறத் தனிக்குழுவை அமைத் துள்ளார். இஃது அவர் பொறுப்புணர்வுக்குப் பொன்னான எடுத்துக்காட்டு எனப் புகழ்ந்துரைப்பர், காங்கிரசார். கூறட்டும்; தவறில்லை. அதுபோன்றே, திட்டமிட்டு ஈட்டிய செல்வம் எங்குச் சென்று ஒளிந்துளது என்று தேடிக் கண்டறிய வேண்டிய நிலையாது பாடம் தருகிறது? திட்டமிட்டது, செல்வம் வளரப் பயன்பட்டதுவே அல்லாமல், சீரான வளர்ச்சியை, எல்லோரும் பலன் காணும் முறையினைத் தரவில்லை.

கரும்பு கரம் எடுத்து, கேட்போருக்குத் தரமறுத்து, தனியே ஓரிடத்தில் ஒளித்து வைத்துவிட்டவர்கள், தாமும் அஃதுண்ண நேரம் கிடைக்காமல் வேறுவேறு அலுவலிலே ஈடுபட்டுக் காலம் கடந்தபின்னர், கரும்பதனைத் தேடும்பால், கட்டெறும்புக் கூட்டம் அதனை மொய்த்துக் கிடப்பதனைக் காண்பர்.

இன்று கரும்பு எங்கே? கட்டெறும்புக் கூட்டத்திடம் சிக்கிற்றோ, கண்டறிவீர் என்று பண்டிதர் குழு அமைத்தார்; திட்டத்தின் பலன், மக்கட்கு வந்து சேரவில்லை என்பதற்குச் சான்று இதுபோதும், பலதேடி அலைவானேன்?

ஆங்கில அரசு இங்கிருந்து அகன்றபோது, இருப்பாகப் பல வகையில் விட்டுச் சென்ற தொகை 1,179,74,00,000 ரூபாய்கள் என்கின்றார். இவ்வளவும் வீணாகிப்போனதென விம்முகிறார் நிலை அறிந்தோர், நேர்மையாளர்.

வாழை, உண்பதற்கு, வழித்தெடுத்துக் கூழாக்கி வண்ணத்தாள் ஒட்டுதற்கா?

கரும்பு சாறுபெற, அடுப்பிலிட்டு எரிப்பதற்கா?

சந்தனம் மார்புக்கு; சாணம்போல் வீடு மெழுகுதற்கா?

எதெதனை எம்முறையில் பயன்படுத்திக்கொள்கிறோமோ அதைப் பொறுத்து, அப்பொருளினால் நாம் அடைகின்றோம் முழுப்பலனும்; கூரைக்குக் கழியாக வேய்ந்திடவா, கரும்பு! வேய்ந்திடின் கரும்பினால் காணத்தக்க பலனை நாம் இழந்து, கவைக்குதவாக் காரியத்துக்கு அதனைப் பயன்படுத்திக்கொண்ட தனால் பாழாக்கிவிட்டோம் என்பதன்றோ பொருள்.

அம்முறையில் வெள்ளையர் விட்டுச் சென்ற கிட்டத்தட்ட 1200 கோடி ரூபாயும், பசையாகிப் பாழ்ப்பட்ட வாழையென, கழியாகிப் பயன் இழந்த கரும்பென, ஆகா வழிகளுக்குச் செலவாகிப் பாழாகிப் போயிற்று. இஃதொன்று போதும் கணக்கறிந்து வாக்களிக்கும் நிலைபெற்ற நாடுகளில், இன்றுள்ள ஆட்சியினை ஏற்கோம் என்று கூறி விரட்டுதற்கு.

இரும்பு இதுபோல இல்லாது போயிற்று. இது மட்டுமன்று. நாளுக்கு நாள் வரிகள் ஏறி, தொகை வளர்ந்து கேட்டிடும்போதே “மலைப்பு’ மூட்டிடும் நிலை உளது. சென்ற ஆண்டு டில்லிப்பேரரசு பெற்ற வருவாய் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்; தமிழ்நாடு அரசு, கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய்.

இதில், பெரும்பகுதி, ஏழை எளியோர்கள், நடுத்தரத்தினர் கொட்டிக் கொடுத்திட்ட, மறைமுக வரியாகும்.

கலால் வரி, சுங்க வரி என்பவைகள் வளர்ந்துள்ள வகை அறிந்தால், வாய் வீச்சில் வல்லவராம் காங்கிரஸ் பேச்சாளர் கூட, சிந்தை நொந்திடும் நிலை பெறுவார், வெளியே காட்ட மாட்டார்.

கலால் வரி
1946–47–43.03 கோடி ரூபாய்
1948–49–50.65 கோடி ரூபாய்
1950–51–67.54 கோடி ரூபாய்
1952–53–83.03 கோடி ரூபாய்
1954–55–103.65 கோடி ரூபாய்
1955–56–132.27 கோடி ரூபாய்

இவ்விதம் ஏறிக்கொண்டே போகிறது. கணக்கு முழுதும் காட்டிக் கலங்கிடச் செய்வானேன்! பண்டங்கள் செய்கையிலே, கைம்மாறி வருகையிலே, இன்னபிற வழிமூலம் பெறுகின்றார் பெருந்தொகையாய், கலால் வரி.

சுங்க வரி
1946–47–89.22 கோடி
1948–49–126.16 கோடி
1950–51–157.15 கோடி
1951–53–231.69 கோடி

இப்படி இந்தத் துறை வரியும் ஏறுமுகம் காண்கின்றோம். பெரும் பொருள் வரிமூலம் பெற்றிடுதல், அரசு நடாத்தத் தேவைப் படுகிறது, வரியின்றி அரசாளல் ஆகாது என்று ஆட்சியாளர் அறைகின்றார்! வரியின்றி அரசாள இயலாது; உண்மை; மறுப்பார் இல்லை; ஆயின், வசதி பெருக்கிட வரியன்றி வேறோர் வகை இல்லை என்பரோ? கூறுவர், வன்னெஞ்சக்காரர். ஆனால், ஏழை முகம் காணும் இரக்க மனமுள்ளோர் இதுபோல் கூறார். வரிக்காகவே வரிந்துகட்டி நின்றிடவும், வல்லடிக்கு வரவும் வலிவு பெற்றுக் காட்டும் பேரரசு, வருவாய்த்துறை அனைத்தும் “பெரும்புள்ளிகள்’ இடம் விட்டுவிட்டு, இருக்கின்றார்; அப்போக்கினை மாற்றி, வருவாய் தரத்தக்க தொழிலெல்லாம் நடத்தி, பொருள் ஈட்டி மக்கள் முதுகெலும்புதனை முரிக்கும் வரிச்சுமையைக் குறைத்திடுதலே அறநெறியாகுமென்பர். மறுத்திடுவார், உண்டா? பெரும் தொகையை வரியாகப் பெற்று, மக்களை வறுமையிலே உழலவிட்டு, வரித்தொகையைச் செலவு செய்யும் வகையேனும், வாட்டம் போக்குவதாய், வளம் காண உதவுவதாய் உளதா? இல்லை என உரைக்கும், இவராட்சிக் காலத்தில் ஏறியபடி உள்ள படைச்செலவுக் கணக்கெடுத்தால்.

பாதுகாப்பு (இராணுவ)ச் செலவு
1957–58–279.65 கோடி
1958–59–278.81 கோடி
1959–60–280.18 கோடி
1960–61–310.00 கோடி

இந்த நிலையினிலே, பெரும் பொருள் செலவாகி வருகிறது; தொகை வளர்ந்தபடி உளது. தம்பி! பாதுகாப்புத் துறைக்கு இத்துணைப் பெரும் பொருள் செலவிடுவது காந்திய போதனைக்கும், பஞ்சசீல உபதேசத்துக்கும் பொருந்துவதாக இல்லை என்பது ஒருபுறமிருக்க, இந்தத் துறைக்குச் செலவாகும் இத்துணை பெரும்பொருளும், போட்ட முதல் மூலம், வருவாய் பெருகிடுவதாக அமையாது. கோழிக்குத் தீனியிடல், முட்டை பெற உதவும், காக்கைக்குத் தீனியிட்டுக் காணும் பலன் உண்டோ? விளைநிலத்துக்கு நீர் பாய்ச்சிடுதல், வேண்டும் பொருள் பெற உதவும், கற்பாறை மீதினிலே நாளெல்லாம் நீர் பாய்ச்சிக் கண்டெடுக்கப்போவதென்ன?

இருப்பு இலாதுபோய், மக்கள் இடுப்பு முரிய வரி போட்டுத் திரட்டியதில் பெரும்பகுதி பட்டாளச் செலவுக்காக்கி, வருவாய் பெறும் தொழில் நடாத்தும் வழி அடைத்து விடுவதுடன், தீட்டியுள்ள திட்டங்கள் நடைபெற்றுத் தீர வேண்டும் என்பதற்காக, வெளிநாடுகளிலே பெற்றுள்ள கடன் தொகை (ஈராண்டுக்கு முன்புவரை)

4971 கோடி என்று கணக்களிக்கின்றார், அறிந்தோர். கைபிசைந்தவண்ணம் கூறுகின்றார் 1960–61ஆம் ஆண்டுமட்டும், வாங்கியுள்ள கடனுக்குச் செலுத்தவேண்டிய வட்டித்தொகை, 143 கோடி என்பதாக!

இருப்புக் கரைந்தது, வரி வளர்ந்தது! கடன்சுமை ஏறிற்று — இவையாவும் கூடப் பொறுத்துக்கொள்ளலாம் — சுடுமணல் வழி கடந்தால், சோலைபோய்ச் சேர்ந்திடலாம் எனும் உறுதி உண்மை எனில். அஃது உண்டா? இரு பெரும் திட்டங்கள் முடிந்தான பிறகும், சோலை ஏழைக்கில்லை, சுடுமணலே அவனுக்காக என்ற நிலையே நீடித்து இருக்கிறது, நிலைத்து விட்டிருக்கிறது.

ஐந்தே அணா நாள்கூலி பெற்று அல்லற்படுவோர் 6 கோடி. நாலணா பெற்று நலிவுற்றுக் கிடப்போர் நாலு கோடி, இரண்டனா பெற்று ஏங்கிக் கிடப்போர் இரண்டு கோடி.

என்று இவ்விதமாக, ஆட்சிப் பொறுப்பினரும், ஆராய்ச்சி நிபுணர்களும் அளித்து வரும் கணக்கேடு காட்டுகிறது.

என்ன பலன் கண்டோம், இருதிட்ட வெற்றியினால்? எரிச்சல் கொள்ளாது, ஏழையை இகழாது, எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் போக்குக் காட்டாது, எண்ணிப்பார்த்து இதற்கு ஏற்ற விடை அளித்திடும் அன்பர் உண்டோ, தேடிடுவீர்!

திட்டம் தெளிவற்று, அக்கறையற்று துளியுமற்று, அடி பணியும் செல்வர்தமை ஆனமட்டும் தூக்கிவிட்டு, ஆட்சி நடத்துகிறார் ஆங்கிலர் என்றுரைத்தோம். அவர் ஆட்சி அகற்றி விட்டோம், ஆளத் தொடங்கி ஆண்டு பதினைந்தாகிறது. இன்று, முதலாளிகள் முகாமில், கேட்பதென்ன குரல்? இன்று அவர் கோட்டை இடித்திட்டோம் எனக் காட்ட முன்வருவாரா? எங்ஙனம் இது இயலும்? கணக்குக் கேளீர்.

வெள்ளையராட்சி இங்கு இருந்தபோது இலாபம் பெற்றிட முதலாளிகள் தொழில் நடத்த, மூலதனம் போட்டிருந்தார்; தொகை அன்று 700 கோடி எனக் கணக்குண்டு.

இன்று முதலாளிகளின் முகாம், அழித்துயாம் ஏழையரை ஏற்றம் பெறச் செய்ய வந்தோம் என முழக்க மெழுப்பி அரசாள்கின்றார், காங்கிரசார். வெள்ளையர் நாட்களிலே முதலாளி மூலதனம் 700 கோடி எனில், இந்தப் பதினைந்து ஆண்டுகளில், இது எந்த அளவு குறைந்துளது? கணக்குக் காட்டுவரா காங்கிரசார்! காட்ட மாட்டார். அவர் காட்டும் கணக்கெல்லாம் உரக்கூடை, பொலிகாளை!

இன்று இவர் ஆட்சியிலே முதலாளிமார்கள் தொழில் நடத்தப் போட்டுள்ள மூலதனம் 1900 கோடி ரூபாயாகும்.

வெள்ளையர் ஆட்சிக் காலத்தைவிட இன்று முதலாளித்துவ முறை ஏறக்குறைய மும்முடங்கு வளர்ந்துளது; கொழுத்துளது. இதற்கோ திட்டம்? ஏழைகளைக் காப்பதற்கே எமது திட்டம் என்றனரே! நிறைவேற்றிக் காட்டினரா? இன்னமும் கேள், தம்பி! இலாபம் தன்னைக் காண முதலாளிகள் நடாத்தும் தொழில்களுக்குச் சலுகைகள், கடன் தொகைகள், சன்மானம் என்பவைகள் இவர்கள் கொடுத்துள்ளார் — கஞ்சிக்குத் தாய் கதற, கைப்பொருளை அதற்குத் தந்திடாமல், ஆவின்பால் வாங்கி அரவுக்கு ஊற்றுவான்போல், வீடில்லை மாடில்லை என்று ஏழை கதறுகையில், இலாபக் கோட்டை கட்டும் முதலாளிகள் மகிழ, காங்கிரஸ் ஆட்சியினர் தந்த தொகை 590 கோடி ரூபாய்! அறம் இதுவா?

இலாபம் தரும் தொழிலெல்லாம் ஏன் நடத்தக்கூடாது என்று நாம் அரசு நடத்துவோரைக் கேட்கும்போது என்ன பதில் கூறுகின்றார்? இதற்கெல்லாம் “முதல்’ போடப் பணத்தைச் செலவிட்டுவிட்டால், மற்றப் பல செயல்கள் நடவாதே என்கின்றார்.

இலாபம் தரும் தொழில் நடத்தப் பணம் இல்லை என்று கூறும் இவர், சுரண்டல் நடாத்தும் அந்தச் சுகபோகிக் கூட்டமாம் முதலாளிமார்களுக்கு அள்ளிக் கொடுத்த தொகை கிட்டத்தட்ட அறுநூறு கோடி ரூபாய்! அந்தப் பெருந்தொகையை முதலாளிகட்கு அளித் திடாமல், இவரே தொழில் நடத்தப் போட்டிருந்தால், இன்று செல்வர்களைக் கொழுத்திடவைக்கும் இலாபம் மக்களுக்கன்றோ கிடைத்திருக்கும்? நடத்துவது மக்களாட்சி என நவில்கின்றார் நேர்த்தியாக! சமதர்மம் மேற்கொண்டோம் என்று சமர்த்தாகப் பேசுகின்றார். சமதர்மம் காணும் முறையா அறுநூறு கோடி ரூபாயை அள்ளி முதலாளிக்கு அளித்திடுவது? அறிவற்றோம் துணிவற்றோம் என்றா நமை எண்ணுகின்றார்; அப்பட்டமான பொய்யை அவிழ்த்துக் கொட்டுகின்றார்.

ஒரு சேதி கேள் தம்பி! இந்தியத் துணைக்கண்டமதில் இரு குடும்பங்கள் மட்டும், தொழிலுலகில் பெற்றுள்ள ஆதிக்கத்தின் அளவு கூறுகின்றேன். இரு குடும்பங்களிடம் மட்டும் பெருந் தொழில்கள் 400 சிக்கிக் கிடக்கின்றன.

இத்தனை தொழில்கள் இரு குடும்பத்திடம் இருந்தால், இவை தம்மில் கிடைத்திடும் இலாபம் அவ்வளவும் இரு குடும்பத்துக்கன்றோ சென்று அடைபட்டுவிடும்? இரு குடும்பம் மட்டும் இத்தனை தொழில் நடத்தி இலாபம் ஈட்டிக் கொண்டால், செல்வம் பரவுவது ஏது? செழுமையை மக்கள் காண்பது எங்ஙனம்?

அதனால்தான் ஐந்தணாவும் நாலணாவும், இரண்டே அணாக்களும் நாளெல்லாம் பாடுபட்டுப் பெறுவோர்கள் பலகோடி உளர்!

இத்தனை கோடி மக்கள் இடர்ப்பாட்டில் இருக்கையிலே, மொத்தமாய் வளர்ச்சி பெற்றோம் திட்டம் நிறைவேற்றி என்று செப்புவது சரியாமோ? சிந்திக்கச் சொல், தம்பி! சீற்றம் விட்டொழித்து.

இரு குடும்பம் தம்மிடம் இறுக்கிப் பிடித்துள்ள பெருந் தொழில்கள் நடாத்தப் போட்டுள்ள மூலதனம், எவ்வளவு தொகை என்பதனைக் கேட்டிடுவாய் — 500 கோடி ரூபாய்! ஆங்கில ஆட்சியது அக்கிரம ஆட்சியாகும்; கொள்ளை அடிப்போரைக் கொழுக்க வைக்கும் கொடிய ஆட்சியாகும் என இடி முழக்கம் எழுப்பினரே! இவராளத் தொடங்கியபின், இந்நிலையில் முதலாளி, கோட்டை அமைத்துக்கொண்டு, கொடிகட்டி ஆள்கின்றான்!! கேட்பார் உண்டா? கேட்பது, நீயும் நானும்! நாட்டவர்க்கும் இது தெரியவேண்டாமோ? தெரிவிப்பாய், தெளிவளிப்பாய்.

தனிப்பட்டோர் கொழுத்து வாழத் தொழில் நடத்த விட்டுவிடல், ஏன் என்று கேட்டுப்பார் — பதிலா வரும் — செச்சே! பதறிடுவர், பகைத்திடுவர், பழித்திடுவர், பதிலளித்திட முன் வாரார்!!

தொழில் நடத்தி இலாபம் குவித்திட, முதலாளிகளுக்கு இடம் கொடுத்திட்டால், அவர் சுரண்டும் தொகையினிலே, காங்கிரஸ் பெருந்தொகை தேர்தல் நிதியாகப் பெற்றிட வழி உளது; அரிமாவின் பின் நடந்தால் சிறுதுண்டு கிடைக்கிறதே, சிறு நரிக்கு, அஃதேபோல்! பிர்லா எனும் பெரிய முதலாளியிடம் உள்ள பல தொழிலிலே ஒன்று, மோட்டார் தொழிலாகும்; இந்துஸ்தான் மோட்டார் என்பது அதன் பெயராகும். இந்த அமைப்பு மட்டும் காங்கிரஸ் தேர்தல் நிதிக்காகக் கொடுத்த தொகை எவ்வளவு? மூர்ச்சையாகிப் போகாதே, தம்பி! பிர்லா தொழிலமைப்புத் தந்த தொகை இருபது இலட்சம்!!

இருபது இலட்சம் ரூபாய் நன்கொடையை எளிதாகக் கொடுத்திட, பிர்லாவின் மனம் இடங்கொடுத்தது எதனாலே? காங்கிரஸ் கட்சியது நாடாள்வதாலேதான், தொழில் நடத்திப் பொருள் திரட்டப் பிர்லாவும் பிறரும் வாய்ப்புப் பெறுகின்றார். சுரண்டிக்கொள்ள உரிமை, காங்கிரஸ் அரசு தந்திடும்போது, ஈடுசெய்யவேண்டாமோ? செய்கின்றார்! ஒரு தொழில் அமைப்பு மூலம் மட்டும் இருபது இலட்ச ரூபாய். பெருந்தொகை என்பாய் தம்பி! நமக்கு அது, எண்ணிப் பார்த்திடக்கூட இயலாத தொகை யாகும்; ஆனால், அவர் தந்த தொகையினைப் பிர்லா பெற்ற இலாபத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால்தான், உண்மைநிலை புரியும்.

பிர்லாவின் மோட்டார் தொழிலில், 1960-ஆம் ஆண்டு கிடைத்துள்ள இலாபம்.

2,85,71,127 ஆகும்.

இத்தனை பெரிய இலாபம் கிடைத்தது எவராலே? எவர் இவர்க்கு இந்தத் தொழிலை நடத்துதற்குத் துணை நிற்கின்றாரோ, அவராலே! அவர் காங்கிரஸ் அரசு நடாத்துபவர்! எனவே, அடித்த கொள்ளையில் ஒரு பகுதியைக் காங்கிரசுக்கு அளிக்கின்றார், செல்வம் பெற்றோர்.

கூட்டுச்சதி என்பதன்றி வேறென்ன இதற்குப் பெயர்?

“ஏழையைக் காட்டிக் கொடுப்பது’ என்பதன்றி, இதற்கென்ன வேறு பெயரிடுவீர்?

எத்துணை துணிவிருந்தால் இச்செயலில் ஈடுபட்டு, எமதாட்சிக்கு உள்ள குறிக்கோள், சமதர்மம் என்றும் கூறுவர்!

வழிப்பறி நடத்துபவன், “கனம் குறைத்தேன்’ என்பதுபோல், பேசுகின்றார்; கேட்டு மக்கள் திகைக்கின்றார்.

தேபர் என்பார் உனக்குத் தெரிந்திருக்கும் — ஊரார் மறந்திருப்பார் — ஓராண்டு காங்கிரசுக் கட்சிக்குத் தலைவராய் இவர் இருந்தார். இவர் கணக்கும், நான் கூறும் கருத்தினையே வலியுறுத்திக் காட்டுகிறது.

மொத்தமாய்க் கணக்கெடுத்தால், நாட்டில் ஒருவருக்குச் சராசரி வருவாய், 306-ரூபாய்! எனினும், கிராமத்தார் வருமானம் இந்தக் கணக்கு முறைப்படியே பார்த்திடினும், 95-ரூபாய்தான்! ஏன் இந்த அவலநிலை? இன்னும் கிராமத்தில் உள்ளோரே, பெரும்பாலோர். அவரெல்லாம், மிகக் குறைந்த வருவாய்தான் பெறுகின்றார். திட்டமிட்டு என்ன கண்டோம்.

இந்நிலையில் இருக்கிறது இவர் போடும் திட்டம்! இதைக் காட்டி, “இன்பத் திராவிடத்தை’ ஏன் கேட்டு அலைகின்றீர், நாடு பூங்காவாக நாங்களாக்கிக் காட்டுகின்றோம் என்று நீட்டி முழக்குகின்றார் — அவர் பேச்சை நெட்டுருப்போட்டவர்கள், நாட்டைக் கலக்குகின்றார் நாராச நடை கலந்து.

தூற்றிடுவோர் தொகையும் வாகையும் வளர்ந்திடினும், தூய நம் கருத்துத் துவண்டுவிடப்போவதில்லை; ஆர்வம் கொழுந்துவிட்டெரிகிறது. எவர் என்ன ஏசினாலும், எதிர்ப்புப் பல மூட்டிடினும் எடுத்த செயலதனை முடித்திடும் முயற்சிக்கே மூச்சு இருக்கிறதென்ற, உறுதி கொண்டோர் தொகையும் நாளுக்கு நாள் வளர்ந்தபடி உள்ளது காண்!

ஆனால், தம்பி! நமது உறுதி உரத்த குரலால், தடித்த சொற்களால், எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பேச்சால், வெளிப் படுத்த நினைப்பது தவறு, தீது; நெடுநாள் நிலைக்காது. “வேகம்’ வேகமாக வளரும்; ஒரு சிறு ஐயப்பாடு, அல்லது அச்சம் அல்லது சலிப்பு அல்லது சபலம் ஏற்பட்டால் போதும், மிக வேகமாக வீழ்ந்துவிடும், அல்லது வேறு திக்குத் தாவும்! எனவே, உறுதிக் கழகு உறுமுதல் என்றோ, வீரத்துக்கழகு காரமாய்ப் பேசுதல் என்றோ, தவறான தத்துவம் கொள்ளக்கூடாது. அவ்விதம் வேகம் — காரம் — சூடு — மிக அதிகம் கலந்து, திராவிட நாடு குறித்துப் பேசியோர், பிறகோர் நாள், நிலைகுலைந்து, நினைப்பு அழிந்து, அடியற்ற நெடும்பனையாகிப் போயினர், கண்டோம்.

குறிக்கோள் மறுத்திடுவோர் கடுமொழியால் நம்மைத் தாக்கிடினும், தாங்கிக்கொள், தம்பி என நான் கூறிவரும் இயல்புடையோன் — கூறுவதுமட்டுமன்று, நான் தாங்கிகொள் கின்றேன். அந்தோ, இப்போக்கு, நம்மைக் கோழைகளாக்கிவிடும். ஏன் இந்த அண்ணன் இதுபோல் பயம்கொண்டு பேசுகிறான்? தூற்றுவோர்தமைத் துதிபாடி அடக்குவதோ? வெட்டுக்கு வெட்டு என்னும் வீரம் கொள்ளவேண்டாவோ? இன்று மாலை வாரீர், என் முழக்கம் கேட்டிடலாம், நான் சாடும் வேகம் கண்டு, சரியுது பார் எதிர்ப்பெல்லாம், அமைச்சர்களைத் துச்சமென்று அடித்துப் பேசினால்தான், அடங்குவர் மாற்றார்கள்; எழுச்சி கொள்வார் நம் தோழர். இந்த முறைதான் நாம் இனி மேற்கொள்ளவேண்டுமென்று சங்கநாதம் செய்த சிங்கங்கள் இன்று எங்கே? நம்மோடு இல்லை! வேகம், விறுவிறுப்பு போன விதம்தானென்ன? அறிவு மேம்பாட்டால் அமைதி அரசோச்சுது என்றும், நாகரிகம் முற்றியதால் நாவடக்கம் பெற்றோம் என்றும் இன்று அவர் பேசுகின்றார். பணிவும் குழைவுமன்றோ பண்பாகும் என்கின்றார்.

படபடத்த பேச்சு நம் பாங்கான வளர்ச்சியினைப் பாழாக்கும் என்று “பாடம்’ புகட்டுகின்றார்.

இந்த மாறுதல், இத்துணை விரைவாக இவர்க்கு வரக் காரணம் என்ன? உள்நோக்கம் நான் அறியேன், எனினும், ஒன்று புரிகிறது, வேகமாகப் பேசினரே, அப்போதே உறுதி இருந்த தில்லை. உரத்த குரல் மட்டுந்தான் அவர் உடைமை! என்று தெரிகிறது. நான் சொன்னேன் அன்றே, அடக்கம் அழுத்தத்தின் விளைவு, ஆர்ப்பரிப்பு அஃதன்று என்று. என் சொல்லை நம்பாமல். எதிரியைத் திக்குமுக்காடச் செய்யும் தீப்பொறிப் பேச்சினைரைத் தீரமிகக்கொண்டவர்கள், மாற்றாரைத் தீர்த்துக் கட்டிவிடுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்திருந்தார் ஏமாற்றம் தான் கண்டார்.

“அரசியலில் ஒதிய மரம்போல் இருக்கும் காமராசரின் தைரியத்தை நாம் அறிவோம். இப்படிப்பட்டவர் களிடத்தில்தான் நாங்கள் பயப்படவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். கோழிக்குஞ்சு மனம் படைத்தவ ரிடத்தில் நாம் அடங்கி நடக்கவேண்டுமென்று எதிர்பார்க் கிறார்கள்.’’

காமராசர் ஒதியமரம்! அவருக்கு இருப்பது கோழிக்குஞ்சு மனம்!!

இத்துணைக் கேவலமாய்ப் பேசியவர், இன்று என்ன கோலம் கொண்டுவிட்டார்? நாடறியும்!

இவ்வளவு கேவலமாகப் பேசியவர்கள் வேறு பாதை சென்றனர்; அதே வேகம் அங்கேயும்! ஆக அவர்கட்கு உள்ள குணமும் தெரிந்த வித்தையும், வேகம்! மிக வேகம்! மிகமிக வேகம்! — இவ்வளவே என்பது புரிகிறதல்லவா?

ஆகவே, தம்பி! காரணமற்ற வேகம்வேண்டாம் — அன்னையைக் கேள், பக்குவமாகப் பண்டம் வெந்துவிட்டது என்றால், கொதிக்கும் சத்தம் குறைந்துவிடும். அதுபோன்றே கொள்கைப்பிடித்தம் நல்ல முறையிலே ஏற்பட்டுவிட்டால், வீணான வேகம் எழாது. சிறிதளவு அழுகிய பழத்தைக் கண்டிருக் கிறாயா — மேலே கசியும். சுவையில் புளிப்பேறிவிட்டது. பக்குவம் கெட்டுவிட்டது என்பது பொருள். கரும்பு, அப்படித் தெரிய வில்லை, பார்த்தனையா, தம்பி! அடக்கமாக இருக்கிறது, எவ்வளவோ சுவையைத் தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டு.

கொள்கையில் நமக்குப் பிடிப்பு இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்வதற்காக, “கனல் கக்குவது, எக்காரணம் கொண்டோ? அக்கொள்கையிலே ஐயப்பாடு ஏற்பட்டுவிட்டால், உடனே காறி உமிழ்வது, இரண்டுமே, மனம் பக்குவப்படாத நிலையைத்தான் காட்டுகிறது. அது கூடாது, தம்பி! நம் நாவிலிருந்து எது வந்தாலும் நாடு ஏற்றுக்கொள்ளும், அல்லது அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய சிலரை நாட்டிலே தேடிப் பிடித்துக்கொள்ளலாம்’, என்ற நினைப்பு எழலாகாது.

அது எந்த விதமான “புத்தி’ என்று என்னைக் கேட்காதே, தம்பி! எனக்கு வேறோர் வகையான புத்திபற்றிய குறிப்புத் தெரியும், அதை வேண்டுமானால் கூறுகிறேன்.

திராவிட நாடு திராவிடருக்கே எனும் நமது குறிக்கோளில் நம்பிக்கை இருப்பதை நாடறியச் செய்யவேண்டும் என்பதுடன், அந்தக் கருத்தை மறுப்போரை நையப் புடைக்கவேண்டும் நாவினால் என்ற நினைப்பு, ஆதிக்கம் செலுத்தி வந்த நேரத்தில், காங்கிரஸ் அமைச்சர்கள், நமது கொள்கையை இழித்தும் பழித்தும் பேசிவரக் கேட்டு நான் வருத்தப்பட்டுக்கொண்டேன். அமைச்சர்கள் ஒப்புக்கொள்ளக்கூடிய விதமாகக் கொள்கையை விளக்க நமக்குப் போதுமான திறமை இன்னும் வளரவில்லை போலும் ஒன்று எண்ணிக்கொண்டிருந்திருப்பேனே தவிர, அமைச்சர்களை ஒதியமரம் என்று தடித்த வார்த்தைகொண்டு ஏச மனம் வந்ததில்லை. அப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசி என் நாவினையும் அசிங்கப்படுத்திக்கொண்டதில்லை, கேட்ப வர்கள் காதிலே நாராசம் பாயும்படியும் நடந்துகொண்டதில்லை.

எனவே, நமது கொள்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த அமைச்சர்களுக்கு இருக்கும் புத்தி எந்த விதமான புத்தி என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கடுமொழியால் தாக்கினதில்லை.

வள்ளுவப் பெருந்தகை கூறினார் அல்லவா, “கனியிருக்கக் காய் கவர்தல் கூடாது’ என்று; அம்மொழிவழி நான் நின்று வந்திருக்கிறேன். ஆனால், இன்று, “திராவிட நாடு’ கொள்கை தீது, ஆகாது என்ற கருத்தினைக் கொண்டுவிட்டவர்கள், “திராவிட நாடு’ ஆதரவாளர்களாக இருந்தகாலை, திராவிட நாடு கூடாது என்று கூறிய அமைச்சர்களின் “புத்தி’ எப்படிப்பட்டது என்பதை வீரதீரம் — காரம் — கலந்து பேசுவதாக எண்ணிக் கொண்டு எடுத்துரைத்தனர். என்ன விதமான புத்தி இருக்கிறது அமைச்சர்களுக்குத் தெரியுமா, தம்பி! தம்பியாக இருந்து கொண்டு பேசிவிட்டுச் சென்றவர்கள், இன்று மறந்துவிட்டிருப் பார்கள்; நான் எப்படி மறக்க முடியும்? அதனால் அதைக் கூறுகிறேன். அமைச்சர்களுக்கு இருப்பது,

“திருவோட்டுப் புத்தி’’

விளக்கம் கேட்கிறாயா? அவர்களே தந்தனர். அதனைத் தருகிறேன்:

திராவிடம் பிரிந்தால் பொருளாதாரத்துக்கு என்ன செய்வீர்கள் என்று அவர்கள் கேட்டு நம்மைத் திகைக்க வைக்க நினைக்கிறார்கள். பொறுப்பான பதவியில் இருப்பவர்களுக்குப் பொருளாதாரத்தின் அடிப்படை கூடத் தெரியவில்லையே. ஐயகோ! அவர்களின் கதி என்ன கதியோ என்று வருத்தப்படுவதைத் தவிர, அவர்களுக்குப் பதில் சொல்லத் தயாராக இல்லை.

இங்குள்ள ஆந்திர — கேரள — கருநாடக — தமிழ் மாநிலங்களிலிருந்து வரிப்பணம் டெல்லிக்குப் போகிறது. இது அவர்களுக்குத் தெரியும். டெல்லியிலிருந்து எவ்வளவு பணம் இங்குத் திரும்புகிறது என்பதும் அவர்களுக்குத் தெரியும். எப்போதாவது சுயமரியாதை உணர்ச்சி பீறிட்டு வரும்போது, அவர்களே டெல்லியைப் பார்த்துக் கேட்கிறார்கள் — பணம் ஒதுக்கிறது குறைவு என்று. அடுத்த கணமே டெல்லிக்குத் தாசராகிவிடுகின்றனர்.

வாங்கி வாங்கிச் செலவிட்டுப் பழக்கப்பட்டவர்கள், பெருந்தனம் கிடைத்தால் மேலும் வாங்கத்தான் எண்ணு வார்கள். பிச்சை எடுத்துப் பழக்கப்பட்டவன் வாழ்நாள் முழுவதும் பிச்சை எடுக்கும் எண்ணத்தை விடமாட்டான். பிச்சைக்காரன் ஒருவனுக்குத் திடீரென்று ஆயிரம் ரூபாய் புதையல் கிடைத்ததாம்; அதைக்கொண்டு அவன் தங்கத்தாலான திருவோடு வாங்கினானாம். ஆயிரம் ரூபாய் கிடைத்தாலும் அவனுடைய திருவோட்டுப் புத்தி அவனைவிட்டுப் போகவில்லை. அதுபோல இங்குள்ள காங்கிரஸ் அமைச்சர்களுக்குத் திருவோட்டுப் புத்திதான் இன்னமும் இருக்கிறது. (31–10–59)

இவ்வளவு வேகமாகப் பேசியவர்கள் பிறகு என்ன ஆனார்கள்? திராவிட நாடாவது மண்ணாங்கட்டியாவது அதைக் கேட்பவர் களை ஒழித்துக்கட்டாமல் விடமாட்டேன் என்கிறார்கள்; அதைக் கேட்கும் காங்கிரஸ்காரர்கள், தமக்கு, முன்பு கிடைத்த

ஒதியமரம்
திருவோட்டுப்புத்தி

போன்ற அர்ச்சனைகளை மறந்துவிட்டு, அந்த அடியைத் துடைத்துக்கொண்டு, திராவிடநாடு கேட்பவர்களை ஒழித்துக் கட்டுவதாக முழக்கமிடுவோரைக் கட்டித்தழுவி, அப்படிச் சொல்லடா என் சிங்கக்குட்டி! என்று பாராட்டுகிறார்கள்.

இந்தப் புத்தி என்ன வகையோ, எனக்கென்ன புரிகிறது.

தம்பி! வண்டி ஒன்று நாம் வாடகைக்குவிட வைத்திருந் தால், அதிலே, அவ்வப்போது கிடைக்கும் சரக்குகளை ஏற்றிக் கொண்டு போகமாட்டோமா? ஒரு சமயம் அந்த வண்டியிலே கற்பூரம் இருக்கும், பிறிதோர் சமயம் கருவாடு இருக்கும்! கற்பூரம் இருந்த இடத்திலா, கருவாடு என்று யோசித்தால், வண்டிக்கு வாடகை கிடைக்குமா! நா வாணிபம் நடாத்துவோர், இதே போக்கினரே! வேகமாகப் பேசுவேன், தீரமாகத் தாக்கு வேன், எதைப் பேசினாலும் சரி! என்று கூறுகின்றனர்.

நாம் “திராவிட நாடு’ குறித்துப் பேசுவது, நமது ஆழ்ந்த நம்பிக்கையைக் காட்டுவதாக இருக்கவேண்டுமேயன்றி, நமது நாவினால் எப்படியெல்லாம் சுடமுடியும் என்பதைக் காட்ட அல்ல!

எனவே, தம்பி! உனக்குக் கொள்கைப் பிடிப்பும், நம்பிக்கையும், ஆர்வமும் இருக்கட்டும், அதேபோது அதைக் காட்டக் கடுமொழியும் பேசவேண்டும் என்று எண்ணற்க!

அதுபோலவே, முன்பு திராவிடநாடு குறிக்கோளை ஆதரித்தவர்கள், இன்று அக்கொள்கையையும் குறிக்கோளைக் கொண்ட கழகத்தை நடத்திச் செல்ல அனுமதிக்கப்பட்டிருப்ப வனாக உள்ள என்னையும், முன்பு அமைச்சர்கள்மீது உமிழ்ந்த இழிசொற்களை வீசித் தாக்கினால், கவலை கொள்ளவேண்டாம். கற்பூரம் எடுத்துச் சென்ற வண்டியிலே இப்போது கருவாடு என்று எண்ணிக்கொள்! அது தேவை என்று எண்ணுபவர்கள் அதைத் தாராளமாக வாங்கிக்கொள்ளட்டும், நீங்கள் அதற்குக் குறுக்கே நிற்கவேண்டாம்; கற்பூரம் இருந்ததே, அதை எண்ணிக் கொள்ளுங்கள்.

கழகத்தையும், அதிலே ஈடுபாடு கொண்டவன் என்பதால் என்னையும், வரைமுறையற்ற போக்கிலே, காங்கிரசார் கடித்துரைத்தபோது, வரிந்து கட்டிக்கொண்டு என் பக்கம் வந்து நின்று, வருபவனெல்லாம் வரட்டும் ஒரு கை பார்த்துவிடுகிறேன் என்று முழக்கமிட்டவர்களிலே சிலர்தானே இன்று, என்னை ஏசுகிறார்கள்; அதனால் என்ன நட்டம்?

அன்று ஏசியவர்களுக்கு இன்று ஏசுபவர்கள் தந்த பதில் இருக்கிறதே, அதை ஒரு முறை படித்துப் பார்! உன் கோபம் பஞ்சு பஞ்சாகப் பறந்தே போகும்; அவர்களிடம் இரக்கமே எழும் — இவர்களுக்கென்ன, தமக்குள்ள வேகத்தை, தாக்கும் திறத்தை, எவர் பேரிலாகிலும் வீசிக்கொண்டே இருக்கவேண்டும் எனும் இயல்பா! அன்று அப்படிப் பேசினார்கள்; இன்று இப்படிப் பேசுகிறார்களே! இது என்ன நாக்கு! இது என்ன போக்கு? என்று கேட்கத் தோன்றும்.

என்னை எவரோ ஏசிவிட்டார்கள்; இன்று என்னை ஏசும் ஒருவருக்குக் கொதிப்பும் கோபமும் பீறிட்டுக்கொண்டு அப்போது வந்தது, எடுத்தார் பேனா, தொடுத்தார் பாடல்! கேட்கிறாயா அந்தப் பாடலை!

எட்டுத் திசையிலும் நாம் வளர்ந்தோம் — நமை
எத்திப் பிழைப்பவர் சீறுகின்றார் — அண்ணன்
சுட்டு விரற்கடை தூக்கிவிட்டால் — அவர்
தூளுக்கும் தூளெனக் கூவிடடா!
பட்ட வடுக்களைக் காட்டிடடா! — அதிற்
பாடும் துணிவினைக் கூறிடடா! — இனித்
துட்டர்கள் பின்புறம் தாக்கவந்தால் — அவர்
தோளெங்கள் தாளுக்கென் றோதிடடா!
வானில் பறப்பது நம்கொடிதான் — மொழி
வண்ண மடைந்ததும் நம்வழிதான் — அந்தப்
பூனைக ளும்கொஞ்சம் புத்தி யடைந்திடப்
போதனை செய்ததும் நம்மவர்தான்!
ஆனை நிகர்த்தநம் சேனைபலம் — தனை
ஆறறி வுள்ளவர் ஒப்புகின்றார் — உடல்
கூனிய காங்கிரஸ் கோமக னார்மட்டும்
குக்கல் மதியினைக் காட்டுகின்றார்.
தாயைப் பிரிந்தவர் சிங்களத்தில் — அண்ணன்
தன்னைப் பிரிந்தவர் புட்பகத்தில் — இளஞ்
சேயை மனைவியை வீட்டைப் பிரிந்தவர்
தேம்பி அழுவது சாவகத்தில்!
தூய இவர்கள் பிறந்ததெல்லாம் — வெறும்
சோற்றுக்கடா! வெறும் சோற்றுக்கடா! — தெரு
நாயி லிழிந்தவர் வாடுகையில் — வட
நாட்டவர் எங்கணும் வாழுகிறார்.
அன்னைத் திராவிடப் பொன்னாடே! — உன்
ஆணை! தமிழ்மொழி மீதாணை!
மண்ணைப் பிரிந்தவர் மீண்டுமிங்கே — வரும்
மார்க்கத்தைக் காண முயன்றிடுவோம்!
அன்னையுன் நாட்டைப் பிரித்திடுவோம் — இல்லை
ஆவி யழிந்திடக் கண்டிடுவாய்!
கண்ணையும் காலையும் வெட்டியபின் — இந்தக்
காய மிருந்தென்ன போயிமென்ன?

எப்படித் தம்பி! சுவைமிக்கதாக இல்லையா!! ஆம்! என்பாய், நம்மால் இதுபோலப் பாடவரவில்லையே என்றுகூட ஆயாசப் படுவாய். ஆனால், தம்பி! உனக்கு இதுபோலப் பாடத் தெரியா விட்டால் பரவாயில்லை, இப்படியும் பாடிவிட்டு, பிறிதோர்நாள் என்னை இழித்துப் பாடவும் தூய தமிழை, கவிதைத் திறனைப் பயன்படுத்தாது இருந்தால் போதும். எனக்காகக் சொல்ல வில்லை — தமிழுக்காக — கவிதைத்திறனுக்காக — மரபின் மாண்புக்காக!

பொங்கற் புதுநாளன்று பொன்னான கருத்துகளை மனத்திலே பதிய வைத்துக்கொண்டு, தென்னகம் பொன்னகம் ஆகவேண்டும், அதனைச் செய்து முடித்திடப் பயன்படாமல், இந்தத் தேசம் இருந்ததொரு இலாபமில்லை, என்ற உறுதியைக் கொண்டிடு! உத்தமனே! உன் உழைப்பால்! ஏற்றம்பெற்ற கழகம் இன்று எத்துணையோ இன்னலையும் இழிமொழியையும் தாங்கிக்கொள்ளவேண்டி இருக்கிறது. எனினும், பாதை வழுவாமல், உறுதி தளராமல் பணி புரிகிறது.

பாற்பொங்கல் சமைத்திட உன் பரிவுக்கு உரியாள், பார்த்தனையா, தீய்த்திடும் தீயினைக் கண்டு அஞ்சாமல், வெப்பம் தாங்கிக்கொண்டு, புகை கிளப்பிக் கண்களைக் கெடுத்திட் டாலும் ஈடுகொடுத்துக்கொண்டு, அளவறிந்து, முறையறிந்து, பண்டங்களைச் சமைத்திடும் செயலில் ஈடுபட்டிருக்கிறார். இன்னலை ஏற்றுக்கொண்டு, ஏற்றி இறக்கிய பிறகல்லவா, நீ கூவி மகிழ்கிறாய்; பொங்கலோ! பொங்கல்! என்று.

நாடு மீட்டிடும் நற்காரியம் வெற்றிபெற நாமும் தம்பி! அறிவுடைமை, துணிவுடைமை, பொறையுடைமை எனும் பண்பு களைப் பேணி வளர்த்துக்கொள்ளவேண்டும்.

திருநாளில் திருவிடத்துக்கு விடுதலை பெற்றளிக்கும் ஆர்வம் உன் உள்ளத்தில் பொங்கட்டும்!

திருவிட விடுதலைக்கு நாடு பக்குவப்பட்டு இருக்கிறது என்பதனை உலகறியச் செய்யும் முறைகளிலே மிக முக்கியமான ஒன்று, மக்களின் ஆதரவு நமக்கு உண்டு என்பதனை எடுத்துக் காட்டும் வாய்ப்பான பொதுத் தேர்தலில், நாம் நல்ல வெற்றி ஈட்டிக் காட்டுவது.

இவ்வாண்டு, பொங்கற் புதுநாள், இந்த எண்ணத்தை உறுதியை அளித்திடல்வேண்டும்.

நாடு நமது ஆகி, நல்லாட்சி அமைத்து, மக்களுக்கு நல்வாழ்வு பெற்றளிக்க முனைவோமாக! அந்நிலைதான், தேனில் தோய்த்த பழம்போல இனிக்கும்.

தேன்! பழம்! என்று நான் கூறுகிறேன், நீயோ, தம்பி! உன் பாசம் நிறை பார்வையை, எங்கோ செலுத்துகிறாய்! உம்! விருந்துக்கான அழைப்பைப் பெற்றுவிட்டாய்! விட்ட கணை யைத் தடுத்திடவா இயலும், போ! போ. பொன்னான நாள் இது! பொற்கதிர் பரப்பும் கதிரவனைப் போற்றிடும் திருநாள்! இல்லம் இன்பப் பூங்காவாகும் நன்னாள்! இந்நாளில், எந்நாளும் நாம் இன்புற்றிருக்கும் நிலைகாண அடிகோலும், பொதுத் தேர்தல் வெற்றிக்குக் கழகம் உன்னைத்தான் நம்பி இருக்கிறது. உருட்டல் மிரட்டலையும் காட்டிப் பணம் கொட்டி நமை மாற்றார் மிரட்டும்போதும் மருளாமல் கழகம் தேர்தலில் ஈடுபட்டிருப்பது உன் ஆற்றலைப் பெரிதும் நம்பித்தான், என்பதை மறவாதே!

அண்ணன்,

14–1–1962

மூலக்கட்டுரை,

http://www.annavinpadaippugal.info/kadithangal/thaenil_thoytha_1.htm

--

--

SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite