திருக்குறள் - ஓர் திருப்பணி

அண்ணாதுரை, திராவிட நாடு - 14.1.1949

SG
3 min readJan 16, 2020

வள்ளுவர் தந்த திருக்குறள், தமிழர்க்கு மட்டுமல்லாமல், பண்புடன் வாழ விரும்பும் அனைவருக்கும், ஓர் வழிகாட்டியாக, அமைந்திருக்கிறது.

திருக்குறள், பூஜாமாடத்துக்கு மட்டும் தயாரிக்கப்பட்டதல்ல, புனைந்துரைகள் நெளியும் புராணமல்ல - வாழ்விலே, தூய்மையை, அவரவரும், தத்தமது திறனைச் சரியாகப் பயன்படுத்தி, மற்றவரின் வாழ்வின் மேம்பாட்டினையும் மதித்து ஒழுகுவதன் மூலம், பெறக்கூடியது என்ற பெரு நெறியைக் காட்டும், நூலாகும்.

திருவிழாக்களையும், தீர்த்த மகிமை களையும், திருப்பல்லாண்டுகளையும் திருஅவதாரங் களையும், இவைகளின் பிறபதிப்புகளான, வெண் பொங்கல், இனிப்புச் சாதம் எனும் இன்ன பிறவற்றினையும், மக்களுக்கு வழங்கும், அழுக்குக் கருத்துரைகள் கொண்ட ஏடுகளையே, தமிழ் நாடு கொண்டாடி வருகிறது. காரணம் பலப்பல, விளைவோ, வாழ்வில் வேதனை, சமூகத்தில் சச்சரவு, நாட்டிலே நலிவு.

நாம் இதுகாறும், அத்தகு ஏடுகளின் பிடியிலிருந்து நாடு விடுபட வேண்டுமென்பதற்கான பணிபுரிந்து வந்தோம் - அப்பணி தொடர்ந்தும் நடந்து வருகிறது.

அப்பணியுடனும் இதுபோது நாம் வள்ளுவர் தந்த திருக்குறளை ஒவ்வொரு இல்லத்திலும் குடிஏறச் செய்தாக வேண்டும், ஒவ்வொருவர் மனதிலும், அவருடைய அறஊரைகள் பதியச் செய்யவேண்டும் என்ற சீரிய பணியினையும் மேற்கொண்டுள்ளோம்.

நாம், நாவலரும் பாவலரும் கூடிடும் நல்மணிமாடத்திலே அல்ல, உலவுவது, உரையாடுவது. நாதனைக் கண்டோம், எம் நாவில் அவர் சூலம்படி இம்மெய்யறிவு கொண்டோம் என்று இயம்பிடும் அருள் விற்பனையாளர்களின் அணிமாடங்களை நாம் அணுகுவதில்லை.

மக்கள் மன்றத்திலே உலவுகிறோம், ஐரடிக்கும் எல்லனையும், காடு திருத்தும் கந்தனையும் காண்கிறோம். ஏழையின் கண்ணீரையும், எத்தனின் கபடத்தையும் காண்கிறோம். கட்டுக் கதைகளை நம்பிக் கருத்தைக் குழப்பிக் கொள்ளும், பாமரரிடம் சென்று பகுத்தறிவு பேசுகிறோம்.
இனி, இத்தகையவர்களிடம், நாம், மறைந்து கிடக்கும் இம்மாணிக்கத்தை - குறளைக்காட்டும் - மகத்தான பணியினை மேற்கொண்டுள்ளோம்.

நமது பணி வெற்றி பெற்றால்தான், மக்களின் உடைமையாகும், இந்தத் தமிழ் அறிவுக் களஞ்சியம்.

நமது பெரும்பணி மூலமே, மக்களுக்கு, வாழ்க்கையிலே கிளம்பும், எத்தகைய சிக்கலையும் சந்தேகத்தையும் நீக்கவும் போக்கவும், நேர்மையை நினைநாட்டவும் உதவும் இப்பெரு நூலின் உண்மைப் பொருள், தெரிய முடியும்.

குறள் ஏந்திச் செல்வோம், நாடு நகரமெங்கும் - பட்டிதொட்டிகளிலெல்லாம்.

பண்பாடு - எது என்பதை மக்கள் அறியச் செய்வோம்.

அறம், பொருள், இன்பம் எனும் அரிய முப்பொருளை மக்கள் உணர மட்டுமல்ல, நுகரவும், பணியாற்ற வேண்டும். புதிய பணி - ஆனால் நமது பழைய பணியின், தொடர்ச்சிதான் முற்றிலும் புதிதல்ல.

அப்பணிக்கு, நாம் நம்மைத் தயாரித்துக் கொள்வதற்கு, குறளின் அருமை பெருமை பற்றி அறிஞர் கூறியுள்ள கருத்துரைகளை எண்ணிப் பார்ப்பது, முக்கியமான முதல் வேலையாகும்.

பேராசிரியர் சுந்தரனார், பெரும் புலவர் - அவர், வள்ளுவரின் திருக்குறளைப்பற்றிய அருமை பெருமையினை அறிவிக்கப் பல கூறவேண்டாம - முக்கியமானதைச் சுட்டிக் காட்டினால் போதும் என்று எண்ணி,
“வள்ளுவர் செய் திருக்குறளை
மறவற நன்குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி
ஒரு குலத்துக் கொருநீதி”
என்று பாடியுள்ளார்.

இந்த “ஒரு குலத்துக் கொருநீதி” எனும் முறையினை காலம் கூடத் தகர்க்காதபடி, அவ்வப்போது உரம் எட்டி வருவனவே, புராண இதிகாசாதிகள், அவைகளை நம்பியதாலேயே நாடு நலிவுற்றது.

நாட்டின் நலிவு நீங்கி, மக்கள் நல்வாழ்வு பெறுவதற்காக, வள்ளுவர் குறளை, மறுவற நனகு உணர்ந்தோராதல் வேண்டும் மக்கள்.

வள்ளுவர், சகல பிரச்னைகளையும், ஆராய்ந், அரிய உண்மைகளை வெளியிட்டிருக் கிறார். கடவுட் கொள்கை, நாடு, அரசு, இல்வாழ்க்கை எனும் பல பகுதிகளாக உள்ள, குறனின், முழு நோக்கம், மக்கள் அறநெறியில் நிற்கவேண்டும் என்பதேயாகும் - ஏனெனில், அவர் கூறியபடி, அறத்தால் வருவதே இன்பம் - இந்த அறநெறியைப் பரப்பும் பணியினை மேற்கொள்ளும் நமக்கு உறுதுணையாக, அறிஞரின் கருத்துரைகள் உதவுகின்றன.

“வள்ளுவர் வரையறுத்துரைத்த கடவுள் நிலை, ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் எனும் முதுமொழிக்கிணங்கியதாகும்”.

அவர் பத்துக்குறட்பாக்களினும், இதிபகவன் - வாலறிவன் - மலர்மிசை ஏகினான் - வேண்டுதல் வேண்டாமையிலான் - இறைவன் - பொறி வாயில் ஐந்தவித்தான் - தனக்குவமையில்லாதான் - அறவாழி அந்தணன், எண்குணத்தான் - என முறையே அமைத்துள்ளார்” என்பதை எடுத்துக் காட்டியுள்ளார் புலவர் வரதராசனார்.

“திருக்குறள் என்னும் இவ்வரிய அறநூல் உலகியலுக்குரிய பெருநூலாகும். உலகியலில் கூறுதற்குரிய பெரிய பொருள்கள் பலவற்றினும், அறம், பொருள், இன்பம் என்ற மூன்றினும் பெருமையுடைய பொருள் பிறிது கிடையாது. வீடுபேறும் இம்மூன்றன் எதுவாகப் பெறப்படுவதேயன்றி வேறன்மையின், அதனை செய்து விக்கும் பெருமையும் இம்மூன்றற்குமேயாகும். ஆகவே, எவ்வகையினும் பெருமையென்பது இம்மூன்றற்குமே உரியதாகலின், இம் மூன்றனையும் விளக்கும் நூற்பெருமைக்கு ஏனை எந்நூலாலும் இணையாகாமையின், இதுவே எல்லாப் பெருமைக்கும் உரியதாய்ப் பெருநூல் எனப்படவதாயிற்று.”
என்று, அதன் அருமையினை அழகுற எடுத்துக் கூறியுள்ளார் ஓளவைதுரைசாமி எனும் அருந்தமிழ்ப் புலவர், இத்தகு பெருநூல் இயற்றுதற்கேற்ற, சூழ்நிலை, தமிழகத்தே இரந்தது எனும் சிறப்பினை மற்றோர் அறிஞர்.

“தமிழ் மக்கள் எண்ணிறந்த நூற்றாண்டுகளிற் பழகிய வாழ்க்கையின் பயனாக ஒப்புயர்வற்ற நாகரிகத்தைப் பெற்றனர். அதனால் அவர் தம்முன் பல பேரறிஞர் தோன்றி அருந்தமிழ் நூல்கள் இயற்றுவாராயினர். அவ்வறிஞருள் முதன்மையாக வைத்து எண்ணத்தகுந்த மேன்மையாளர் வள்ளுவர் என்பார். அவர் இயற்றியருளிய திருநூல் திருக்குறள்.

திருக்குறள் ஒழுக்கமுறை கூறும் நூல். ஆதிற் கூறப்பெறும் ஒழுக்கச் சட்டங்கள் தமிழ்நாட்டினர் பண்பட்ட ஒழுக்கச் சட்டங்களே, என்றாலும் அவை உலகத்தார் அனைவராலும் சாதி, சமய, நிற வேறுபாடுகளை ஒழித்துக் கைகொள்ளத்தக்காங்கு சீர்பெற அமைந்திருக்கின்றன. அதனால் திருக்குறளை உலகினர் அனைவரும் தம் தமக்கு ஏற்ற “பொதுமறை” எனத் தழுவிக் கொண்டு தம் தம் மொழிகளில் பெயர்தெழுதிப் போற்றுவான் தொடங்கினர். ஆங்கிலம், செர்மன் முதலிய எல்லா மொழிகளிலும் இன்று திருக்குறள் மொழி பெயர்க்கப்பெற்றுப் போற்றிப் படிக்கப் பெற்று வருகின்றது” என்று கூறிக் குறித்திடுகிறார்.

புலவர் ஏறு நமது திருவள்ளுவர் என்பது பொருந்தாப் புகழுரை அல்ல, பொருளுடைய உண்மை ஊரை, என்பதைப் பெரியசாமிப் புலவர், கூறுகிறார்.

“வள்ளுவர் இயற்றிய குறள் நூல் உலகிற் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பெற்று, ஆங்காங்கு வழங்கி வருதலை உணர்ந்த தமிழ் அன்பரகள், வள்ளுவர் குறள் உலகப்பொதுநூல் எனவும், வள்ளுவ் உலகப் பொது அரசரெனவும் உளம் கொண்டு போற்றுகின்றனர். வள்ளுவர் குறளின் வாடை தமிழ் நூல்களிலெல்லாம் வீசுதலால் வள்ளுவரைத் தமிழ்ப் பன்னூற்கும் அரசரெனயாம் போற்றுகின்றோம்”.

நாட்டுப்பற்றுக்கு நமது வள்ளுவர் எவ்வளவு அரும்பெரும் துணை ஆவனது பகுத்தறிவைக் கொண்டாடுகின்றார்களா? கொண்டாடுவார்களாயின், கைவேல் களிற்றோடு போக்கி வருபவன் - மெய்வேல் பறியா நகும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை அறிவுடையார் எல்லா முடையார் என்பவைகளைப் பேசுகின்றார்களா? மறுத்து, வாலியைக் கொன்ற ஆரிய இராமனின் வீரியத்தையும், ஆகல்யையின் சாப நீக்கத்தையும் பேசுகின்றார்களே! போற்றிப் புகழ்கின்ற ஒரு நூலை ஏன் மறைக்கின்றார்கள்? அதன் மாண்பை மக்களுக்கு ஏன் எடுத்துக் காட்டவில்லை? இதனைக் கேட்டால், மக்கள் பக்குவம் அடையவில்லை, அவர்கள் நீதியை எப்பொழுதும் விருமபுவதில்லை, அது அவர்கள் செவிகளுக்கு இன்பமூட்டுவதில்லை என்று கூறி விடுகின்றார்கள். இந்த நிலையினைக் காணத்தான் வருத்தம் ஏற்படுகின்றது, நெஞ்சம் புண்படுகின்றது” என்று குமுறுகிறார்.

புண்பட்ட நெஞ்சுடன் உள்ளனர் அறிந்தோர் அறியாதார்களோ, குறள் ஓர் புதிர்!

பண்புடைத் தமிழரின் மனப்புண்ணும், பயனில் நூற்களை மட்டுமே அறிந்தால், மக்கள் மனதிலே மூண்டுக்கிடக்கும் மருளும் போக்கப்பட வேண்டும் - நாம் மேற்கொள்ம் பணிமூலம். வாழ்க வள்ளுவர்! வளர்க குறள் நெறி!

(திராவிட நாடு - 14.1.49)

மூலக்கட்டுரை http://www.annavinpadaippugal.info/katturaigal/thirukkural_or_thiruppani.htm

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

No responses yet

Write a response