தி.மு.கழக ஆட்சி தொடர வேண்டும் - முற்போக்காளர்கள் எதிர்பார்க்கும் முன்னெடுப்புகள்.

SG
7 min readJul 6, 2021
படம் : தி.மு.க எனும் திராவிடப் பேரியக்கத்தின் தொடர்ச்சியாக , தலைவராக மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டு மக்கள் போதும் இந்த அடிமை அதிமுக ஆட்சி என்று முடிவு எடுத்து ஆட்சி மாற்றத்துக்கு வாக்களித்ததன் விளைவாக , கடந்த மே 2 தேர்தல் முடிவுகள், பத்தாண்டுகளுக்கு பிறகு தி.மு.கழக ஆட்சிக்கு வழிவகுத்தன.

கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் உச்சத்தில் இருந்த நிலையில், மே 7 ஆம் தேதி அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது தலைவரான, மாண்புமிகு திரு. மு.க.ஸ்டாலின் தலைமையில் (திமுகவில் இருந்து நான்காவது முதல்வராக , நாவலர் நெடுஞ்செழிய ன்உட்பட) திராவிட முன்னேற்றக் கழகம் 6 ஆவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு , பதவி ஏற்ற உடனே நிறைய சவால்களை எதிர் நோக்கி இருந்தது. அதைத் திறம்பட எதிர்கொண்டு, இரண்டாம் அலையின் தீவிரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தி.மு.கவின் செயல்பாடுகள் மக்கள் மனத்தில் நன்மதிப்பைப் பெற்றிருக்கின்றன. அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த பணிகளிலும் நன்கு கவனம் செலுத்தத்தொடங்கி இருக்கிறார்கள். மூன்றாம் அலை எதிர்பார்க்கப்படுகிறது. அரசு இயந்திரம் சிறப்பாக செயல்பட்டு மக்களைக் காக்கும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் , இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு போன்றோரின் செயல்பாடுகள் நம்பிக்கை தருபவையாக இருக்கின்றன.

மேலும் திமுக கொள்கை சார்ந்த முடிவுகளில் இன்னும் சிறப்போடும் செயல்படும் என்பதிலும் ஐயமில்லை. இந்த ஆட்சியிடம் என்னென்ன எதிர்பார்ப்புகள் இருக்கின்றன அதற்குண்டான நம்பிக்கையின் அடிப்படையில் சிலவற்றை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

கலைஞர் கருணாநிதி குறிப்பிட்ட திமுகவின் ஐம்பெரும் முழக்கங்களை இந்த நேரத்தில் மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

  1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்
  2. ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்
  3. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்
  4. இந்தித்திணிப்பை என்றும் எதிர்ப்போம்
  5. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி

1.கல்வி

NEET எதிர்ப்பு தொடர்கிறது. முழுமையாக விலக்கு பெற, அல்லது ரத்து செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல முடிவை எதிர் நோக்கி காத்திருக்கிறோம். முயற்சிக்கு நன்றி.

புதிய கல்விக்கொள்கை 2020 (NEP 2020) அமல்படுத்தப்பட மாட்டாது என்ற முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. நன்றி.

பள்ளிக்கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு, அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். கற்றல் திறன் மேம்படுத்தல், அறிவு சார் முயற்சிகளிலும் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த தலைமுறையில் தொழில் முனைவோரை உருவாக்க மாணவர்களின் எண்ண ஓட்டத்தைக் கற்பித்தல் மூலம் மேம்படுத்த வேண்டும்.

2.மாநில கொள்கை வளர்ச்சிக்குழுமம்

பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் தலைமையில் குழு மீள் நிறுவப்பட்டு இருக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய சமூக நீதி , பொருளாதார வளர்ச்சியில், பரந்து பட்ட வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டிருக்கும் பேராசியருக்கு வழங்கப்பட்டு இருக்கும் இந்த வாய்ப்பு தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு வழி கோலும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. காத்திருக்கிறோம்.

3.முதலமைச்சரின் பொருளாதரப் பரிந்துரைக் குழு

பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் எஸ்தர் டப்ஃலோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராகவும், அகில உலக அளவில் பல்வேறு பொறுப்புகள் வகித்தவருமான பேராசிரியர் ரகுராம்ராஜன், இந்திய அரசின் பொருளாதார ஆலோசகராக 2014–2018-ஆம்ஆண்டுகளில் பணியாற்றியவரும், பல்வேறு உலகம் தழுவிய அமைப்புகளில் பணியாற்றியவருமான அரவிந்த் சுப்ரமணியம், பொருளாதாரத்தில் நிறைந்த பயிற்சி பெற்றவரும், அம்ரித்தா ஜென்னுடன் இணைந்து பல பிரசித்திபெற்ற பொருளாதாரம் தொடர்பான பல்வேறு நூல்களைப் படைத்தவருமான ஜீன் டிரஸ்சி, இந்திய ஒன்றியப் பிரதமருக்கு 2003–2004-ஆம் ஆண்டுகளில் பொருளாதார ஆலோசகராக இருந்தவருமான எஸ்.நாராயணன் ஆகியோர் அந்தப் பொருளாதார நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டில் எல்லா வசதிகளையும், வாய்ப்புகளையும் பெற்ற நிறைவான மகிழ்ச்சிகரமான சமூக அமைப்பை தமிழ்நாட்டின் முதல்வர் அவர்கள் கட்டமைக்க விரும்புகிறார் என்பது தெளிவாகும். (கலைஞர் செய்திகள் குறிப்பு )

தோட்டக்கலை கட்டமைப்பு உருவாக்கம் , மீனவர் நலனுக்கு தேசிய ஆணையம், துணைக்கோள் நகரங்கள், என்று பல திட்டங்களை முனைப்புடன் செய்லபடுத்த அரசு செயல்படுகிறது. நன்றி

4.மாநில சுயாட்சி

நீதித்துறை சுயாட்சி முதல் , நிர்வாக , சட்ட சுயாட்சி வரை , முழு தன்னாட்சி நோக்கி நகர்வோம் என்ற கொள்கை முடிவுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் நிதி அமைச்சர் டாக்டர். PTR செயல்பட்டு வருகிறார்கள். GST ஆணைய சந்திப்பு, அதன் பிறகான பேட்டிகள் , செயல்பாடுகள் இதனை வெளிக்காட்டுகின்றன. முழுமையான சுயாட்சியை நோக்கி மற்ற தோழமை மாநிலங்களையும் நகர்த்துவது தான் நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். நன்றி

5.பெண்கள் முன்னேற்றம்.

அனைத்து பெண்களும் அரசுப்பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பு உள்ளபடியே எத்தனையோ பெண்களுக்கு மிக உதவியாக அமைந்திருக்கிறது. கொரோனா ஊரடங்குகளுக்கு பிறகு இது இன்னும் பேருதவியாக மாறும். நன்றி.

கல்வியில் கல்லூரி வரை GER இல் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருந்தாலும் , வேலைவாய்ப்புகளில் இன்றும் பின் தங்கி இருக்கிறார்கள். இதை மாற்ற வளர்ச்சிக் குழும அறிவுரை பெறப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

6.சமூக நீதி

இலவசப்பயணம் பெண்களுக்கு மட்டுமல்லாமல் திருநங்கையருக்கும் உண்டு என்ற சமூக நீதிப்பார்வை கலந்த அறிவிப்பு இன்னும் சிறப்பு. நன்றி

மண்டல் கமிஷன் அறிக்கை செயல்பாட்டுக்கு வந்து விட்டாலும், 2006 உயர் கல்வி நிலைய ஒதுக்கீடு அமலில் இருந்தாலும், ஒன்றிய நிறுவனங்களில் OBC இட இதுக்கீடு இன்றும் முழுமையாக நடைமுறையில் இல்லை. அதைச் செயல்படுத்த எல்லா நடவடிக்கை களையும் எடுக்க வேண்டும்.

7. ஈழம்

தற்போதைய நிலைப்பாடு தொடர வேண்டும். விரைவில் எழுவர் விடுதலை அல்லது அனைவர்க்கும் பரோல். தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்தோர் மறுவாழ்வு மையங்களில் குடியிருப்பவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவ வேண்டும். கல்வி, வேலை வாய்ப்புகளில் கலைஞர் கொண்டு வந்த திட்டங்கள் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும். இந்தியக்குடியுரிமைக்கு முன்னெடுக்க வேண்டும்.

மேற்கூறிய எல்லாமே தி.மு.கழக அரசின் அடிப்படை செயல்பாடுகளாக நாம் பார்க்கிறோம் அந்தளவிற்கு நிர்வாகம், தமிழ்நாடு வளர்ச்சி என்பதில் குறிப்பாக இருக்கிறார்கள் என்பது தெளிவு.

மேலும் இதே அளவிலான வீரிய செயல்பாடுகள் தொடர்ந்தால் இந்த தி.மு.கழக ஆட்சி இன்னும் சில ஐந்தாண்டுகளுக்கு தொடர வாய்ப்புகள் மிக அதிகம்.

மேலே குறிப்பிட்ட படி திமுகவின் அடிப்படையான ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம் என்பதை மீளாய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடந்த காலங்களில் கழகத்தின் மீது வைக்கப் படும் குற்றச்சாட்டுகளில் பொய்களாகவும், எதிர்க்கட்சி அவதூறுகளாகவும் , பார்ப்பனீய மற்றும் பாஜகவின் வெறுப்புப் பரப்புரைகளாகவும் நிறைய உண்டு. ஆனாலும் உள்ளபடியே விமர்சனம் வைப்பவர்கள் , பெரியாரிய இயக்கங்கள், தலித்திய இயக்கங்கள் மற்றும் தோழமைக் கட்சிகள் சொல்லும் குறைகள் களையப்பட வேண்டும் என்பதே நம் நிலைப்பாடு. அது திமுகழக ஆட்சிக்கும் இன்னும் வலுவும், விமர்சனங்களுக்கு பதிலடியாகவும் , “ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்” என்ற அடிப்படை கொள்கையை நிலைநிறுத்தும் வண்ணமாகவும் இருக்கும்.

அடுத்த சில ஆண்டுகளில் அரசியலில் முக்கியமாகப் பேசப்படும் சில பிரச்சினைகள் என நான் பார்க்கும் சிலவற்றையும் அதற்கு என்ன வகையிலான செயல்பாடுகளில் கவனம் செலுத்தலாம் என்று அரசு, நிர்வாகம், சட்டம் பற்றிய என்னுடைய புரிதலுக்குட்பட்டு பட்டியலிட்டு உள்ளேன்.

8.அதிகாரப்பங்கீடு

கட்சியில் எல்லா நிலைகளிலும் (குறிப்பாக ஒன்றிய , வட்ட, நகர , மாவட்ட செயலாளர்கள் , பொதுக்குழு , செயற்குழு ) 69% ஒதுக்கீடை செயல்படுத்த வேண்டும். இது ஆட்சியில் இருக்கும்போதே செயல்படுத்தப்பட்டால் கட்சியில் எதேனும் எதிர்ப்பு குறைவாக அல்லது இருப்பின் மட்டுப்படுத்த எளிதாக இருக்கும். இதனால் ஒட்டுமொத்த கட்சி அதிகாரம், நிலைப்பாடுகள் பெரிதாக மாறிவிடாது. தற்போதைய SC , ST இட ஒதுக்கீடுகளை ஒட்டியே இது இருக்கும் என்பதால் கடினமாகவும் இருக்கப்போவது இல்லை, அந்தந்த வேட்பாளர் தொகுதி சார்ந்து 69% உறுதிப்படுத்துவது இன்னும் எளிதாகலாம். கட்சியின் நிர்வாகிகள் இதை ஏற்கனவே ஆய்வு செய்து , இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. காலம் கருதி இதை நடைமுறைப்படுத்த முயல வேண்டும்.

9.பஞ்சமி நில மீட்பு

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைத்து , பஞ்சமி நிலப் பட்டியல் , தற்போதைய ஆக்கிரமிப்பாளர் , அதை எந்தளவு மீட்க முடியும். இல்லை என்றால் அதே அளவு வேறு இடங்களில் எங்கெல்லாம் இட இதுக்கீடு செய்ய முடியும் , எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை வெள்ளையறிக்கை வெளியிட்டால் , இதில் நம்முடைய ஆர்வமும், மாற்றத்திற்கான எண்ணமும் வெளிப்படும். பலரது நம்பிக்கையையும் பெறலாம், சிலரது அரசியல்களும் உடைக்கப்படலாம்.

10.சென்னை பூர்வகுடி குடியிருப்பு

குடிசை மாற்று வாரியம் மூலம் நகரத்துக்குள்ளயே மீள் குடியிருப்பு. மாநகர எல்லைக்குள் அரசு நிலங்கள் உண்டு. அதனை ஆய்வு செய்து செயல்படுத்தலாம். ஏற்கனவே பல அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் கூவ ஆக்கிரமிப்பில் முதன்மையில் இருப்பதால் இதைச் செயல்படுத்துவதில் தடங்கல் இருக்காது.

11. சாதிப் பாகுபாடுகள் , வன்கொடுமைகள்

இம்மாதிரியான நிகழ்வுகள் தமிழ் நாடு மாதிரியின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதற்கே எதிராக அவமானமான நிகழ்வு. சாதிய சமூகத்தில் சாதி ஒழிப்பு மந்தமானாலும், வன்கொடுமைகள், பாகுபாடுகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். திமுக அரசு கடுமையான முன் மாதிரி முடிவுகளையும் , தீர்வுகளையும் செயல்படுத்த முனைய வேண்டும்.

12. சாதி வன்முறைகள், ஆணவப்படுகொலைகள்

சாதிய வன்முறைகள் சம்பவங்கள் நிகழாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை. ஒரு வேலை நிகழ்ந்தால் உடனடி கைது, வழக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். சாதி வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டை பெற்றுத்தர வேண்டும்.

தமிழகத்தில் ஆணவக் கொலைகளுக்கு தனிச்சட்டம் இயற்றி , வழக்குகளை விரைவாக நடத்தி , கடுமையான தண்டனைகளைப் பெற்றுத்தர வேண்டும்.

13. மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலம்!

இந்தியாவில் இதுவரை நிகழ்ந்துள்ள மலக்குழி மரணங்களில் தமிழகம் 45% — உடன் முதலிடம் வகிக்கிறது.

தொடர்ந்து நிகழும் மலக்குழி மரணங்கள் இனி நிகழாதவாறு தடுக்கும் வகையில் புதிய கண்காணிப்பு முறைகள் , அரசு செயல்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

14. இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக மாற்றம்

ஊரக பிற்படுத்தப்பட்ட, மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் வேலை வாய்ப்பு குறைபாடுகளைக் களைவதின் மூலம் சமூக அடுக்குகளில் பிணக்குகளை

ஒழிக்கலாம். கல்வி, வேலைவாய்ப்பில் அவர்களின் உரிமை குறித்த விழிப்புணர்வு தேவை. சாதிச்சங்க உருவாக்கங்கள், சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் சங்கங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

15. மாணவர்கள் தற்கொலை

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட 10,335 மாணவர்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து மட்டும் 44% மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2019ல் 3ஆம் இடத்தில் தமிழ்நாடு இருந்திருக்கிறது. இதனைத் தடுக்கும் வகையில் பள்ளி , உயர்கல்வி சார்பில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு புது முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

16. பெரியார் , அண்ணா , திராவிட வரலாறு

மஹாராஷ்டிர அரசு அண்ணல் அம்பேத்கர் எழுத்துக்களை தனி நிறுவனம் அமைத்து தொகுத்தது போல பெரியார் , அண்ணா எழுத்துக்கள் , பேச்சுக்களை பல தொகுதிகளாக ஆங்கிலத்தில் தொகுத்து உலகின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கொண்டு சேர்க்க வேண்டும்.

அடுத்த தலைமுறையினருக்கு அயோத்திதாசர், இரட்டை மலை சீனிவாசன், டாக்டர் TM நாயர், தியாகராயர், நடேசனார் தொடங்கி நூற்றாண்டு தாண்டிய திராவிட இயக்க , தமிழ்நாட்டு வரலாறு எளிமையாக போய் சேரும் வகையில் அனைத்து தளங்களிலும் (பாடப்புத்தகங்கள் , சிறு குறு படங்கள், YouTube காணொளிகள் வழியாக) எடுத்துச் செல்ல வேண்டும்.

திராவிடம், மாநில சுயாட்சி வழியாக திராவிடம் சாதித்தது என்ன? வட மாநிலங்களின் நிலைமை, இந்தியாவிற்கான வழிகாட்டியாக திராவிட மாடல் எப்படி உதவ முடியும் என்பதை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டியதின் அவசியம், பள்ளி கல்லூரிக் கூட்டங்கள், இளம் தலைமுறை அரசியல் படுத்தப்படுத்துதல் போன்ற முன்னெடுப்புகளும் அவசியம்.

17. தமிழ்நாட்டு தொல்லியல் ஆய்வுகள்

கீழடி நாகரிகத்தை பாதுகாத்து வெளிக்கொண்டு வரவே பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. தமிழ்நாடு தொல்லியல் துறை பணிகள் முடுக்கிவிடப்பட்டு தொல்லியல் ஆய்வாளர் திரு.அமர்நாத் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டது போல அனைத்து இடங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி உலகத்தரத்தில் கீழடி நாகரிக ஆய்வுக்கூடம் ,காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். உலகப் பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி ஆய்வுகளை, தமிழர்களின் தொன்மையை உலகறியச் செய்யவேண்டும். இது தொடர்பாக திரு.அமர்நாத் ராமகிருஷ்ணன், திரு. ஆர்.பாலகிருஷ்ணன் போன்ற துறை வல்லுநர்கள் கொண்ட குழு உருவாக்கலாம். சிந்து சமவெளி நாகரிகத் தொடர்பு முதலானவையும் ஆய்வுகளில் பங்கு வகிக்க வேண்டும்.

தொன்மையான தமிழ்ப்பண்பாடு, திராவிடப்பண்பாடு,நாகரிகம் போன்றவை குறித்தான விழிப்புணர்வை வளர்க்க முன்னெடுப்புகள் வேண்டும்.

18. பாஜக, RSS, ஒற்றை இந்தியா சித்தாந்த எதிர்ப்பு

கடந்த 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்மீருக்குச் சிறப்பு உரிமை வழங்கும் அரசியலமைப்பு பகுதி 370 நீக்கப்பட்டதாக இருக்கட்டும், கருத்துச் சுதந்திரத்தை மட்டுப்படுத்தி பயமுறுத்துவதாகட்டும், இந்தியா முழுக்க உரிமைப் போராளிகள் பலரைக் கைது செய்து சிறையில் வைத்திருப்பது, சாதி ஆதிக்கம் உச்சத்தை அடைந்து இருப்பது, தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் அதிகரித்திருப்பது, அதற்கு ஆட்சியாளர்களின் ஆதரவுப் போக்கு, ஒரே இந்தியா, ஒரே மொழி (இந்தி சமஸ்கிருதத் திணிப்பு), ஒரே தேர்வு(NEET), ஒரே வரி(GST), நிதித்துறை ஆதிக்கம் (FFC - Fifteenth Finance Commission, NITI Aayog), ஒரே ரேஷன் கார்டு, ஒரே கல்விக் கொள்கை(NEP), சமூகநீதிச் சிதைப்பு (10% EWS என்ற உயர்சாதி இட ஒதுக்கீடு, 27 % OBC இட ஒதுக்கீடு சிதைப்பு), மாநில சுயாட்சி உரிமைகள் சூறையாடப்படுவது என ஒற்றை இந்தியாவை, இந்து இந்தியாவை மத அடிப்படையில் கட்டமைக்க முயலும் RSS, பாஜக கருத்தியல் ஆதிக்கம் உச்சத்தை அடைந்திருக்கும் இன்றைய நிலையில் இவையெல்லாம் எதிர்க்கப்பட வேண்டியவை. மற்றும், இந்தியப் பேரரசில் உண்மையான தன்னாட்சி கோரவேண்டிய நிலையில் பாஜக , RSS ஒற்றை இந்தியா சித்தாந்த எதிர்ப்பின் ஈட்டி முனையாக, அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்ற கலைஞர் முழக்கத்தின் படி திமுகவை செலுத்தவேண்டும் . சுயாட்சி கோரும் மற்ற தோழமை மாநிலக்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வரலாற்றுக்கடமையும் திமுவிற்கும் , திராவிட பேரியக்கத்தின் தலைவராக, திரு மு.க.ஸ்டாலினுக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது. இந்திய ஒன்றிய அரசியல் வரலாற்றை 1989 போல மற்றுமொரு முறை தெற்கில் இருந்து எழுத வேண்டிய கட்டாயமும் பிறந்திருக்கிறது. 2024இல் பாஜக ஆட்சியை அகற்றி , உண்மையாக மாநில நலனில் அக்கறை கொண்ட கூட்டணி ஆட்சிக்கு வழி அமைக்க வேண்டும். இந்திய நாடாளுமன்ற தொகுதிகளின் மறு சீரமைவை 2026 ஆம் ஆண்டில் எதிர்நோக்கும் நிலையில் தென்னிந்திய மாநிலக்கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டமைப்பு உருவாக்கி , அரசியல் செய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது.

குறிப்பாக 8 முதல் 14 வரையிலான குறைகள் தீர்ப்பதில் தி.மு.க எந்தளவிற்கு ஆர்வம் காட்டி முன்னெடுப்புக்களை எடுக்கிறதோ , அந்தளவிற்கு திராவிட இயக்கத்தின் மீதான மந்தமான அதிகாரப்பகிர்வு, தலித்துகளுக்கு அதிகாரம் பகிரப்படவில்லை, நீர்த்துப்போன சமூக நீதி போன்ற விமர்சனங்களை எதிர்கொள்ள முடியும்.

இயக்கம் அடுத்தகட்ட நகர்வை நோக்கி , உலகளாவிய வெளியில் தனது முத்திரையைப் பதிக்க வேண்டிய நேரத்தில் இருக்கிறோம், அதற்கு சரியான முன்னெடுப்புகளும், காய் நகர்த்தல்களும் அரசியல் வெற்றிகளும் மிகவும் தேவையும் கூட.

அல்லது அரசுகளின், ஆட்சியாளர்களின் Status quo (தற்போதைய நிலை) தொடரும் பட்சத்தில் பொது எதிரியை எதிர்க்க , அரசியல் நெருக்கடியை ஒருங்கிணைவோம் என்ற குரல் முற்போக்குத்தன்மை இழந்து வெற்றுக் கூச்சல் ஆகிவிடும். அந்த நிலைக்கு தள்ளப்படுவோமேயானால் , பாஜக, சனாதன , சங்கப் பரிவாரங்களின் அரசியல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும் என்ற அச்சமும் எழாமல் இல்லை.

முனைவர் தொல். திருமாளவன் சொல்வது போல பொது எதிரியை எதிர்க்க ஒருங்கிணைந்து செயல்படுவது தேவைப்படுகிறது. ஆனால் பொது எதிரி இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். “ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்” என்பதை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம்முடைய குறைகளைச் சரி செய்து , பொது எதிரியை எதிர்த்துக்கொண்டே புது நூற்றாண்டுக்கான அரசியலை செய்யப்போகிறோமா இல்லை அல்லது தற்போதைய நிலையையே (Status quo) தொடரப்போகிறோமா என்பதில் இருக்கிறது அடுத்த சில பத்தாண்டுகளுக்கான அரசியல். Status quo ஐ அசைத்துப் பார்க்கும் முடிவுகளில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து முற்போக்கு சக்திகளும், இயக்கங்களும் துணை நிற்கும் என்பது என் எண்ணம்.

இவையெல்லாம் கருத்தில் கொண்டு, புது முன்னெடுப்புகளின் மூலம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி தி.மு.கழக ஆட்சி தொடர வேண்டும்.

வாழ்க தமிழ் ! வாழ்க தமிழர் !.

தமிழர் இனமானம் என்றும் காப்போம்.

-

SG / தமிழ் சுதாகர்

--

--

SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite