தம்பிக்கு அண்ணாவின் கடிதம் : ஜான் பிரவுன் புரட்சி

தம்பி,
இரவு மணி ஒன்று அடித்துவிட்டது. இனித்தான் தூங்கச் செல்ல வேண்டும், குறிப்பை எழுதிவிட்டு; இதுவரை, மிக உருக்கமான ஒரு வரலாற்று நிகழ்ச்சியை - நாடக வடிவில் எழுதப்பட்டது - படித்துக்கொண்டிருந்தேன்.
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நாம் நடத்தும் அறப்போர் காரணமாக, நமது தோழர்களுக்கு ஏற்பட்டுவிட்ட இழப்புகள் இன்னல்கள் ஆகியவை மனதை மருட்டுவதாக இருப்பதுபற்றிக் குறிப்பிட்டேன். இன்றிரவு நான் படித்த அந்த வரலாற்று நிகழ்ச்சி, நம்மைத் தாக்கியுள்ள இழப்புகளையும் இன்னல்களையும் ஒரு பொருட்டாகக்கூட எண்ணக்கூடாது என்ற எண்ணத்தைத் தந்தது.
"கருணை காட்டுவதற்கு இல்லை. உன் கணவன் தூக்கிலிடப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. உடலை உன்னிடம் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.''
இவ்விதமான தந்தி கிடைக்கிறது, கவர்னரிடமிருந்து, ஒரு மூதாட்டிக்கு! மூன்று பிள்ளைகள் கொல்லப்பட்டுப் போயினர். கணவன் தூக்குத் தண்டனை பெறுகிறான்; மற்றோர் மகன் ராணுவப் போலீசால் வேட்டையாடப்பட்டு வருகிறான். மகளுடைய காதலன் உடல் முழுதும் குண்டுகளால் துளைக்கப் பட்டு இறந்துபோனான். மருமகள் குழந்தை பெற்றெடுத் திருக்கிறாள்; விதவை ஆக்கப்பட்டுவிட்டிருக்கிறாள்.
இது அந்த வரலாற்று நிகழ்ச்சியின் இறுதிக் கட்டம் - புகழ்மிக்க தூக்குமரம் என்பது தலைப்பு - அமெரிக்க நாட்டு நிகழ்ச்சி.
நீக்ரோக்களை அடிமைகளாகக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த நாட்களில், ஏசுவிடம் விசுவாசமும் நாட்டுப்பற்றும் கொண்ட ப்ரவுன் எனும் பெரியவர் - நாலு பிள்ளைகள் இரண்டு பெண்களுக்குத் தகப்பன் - தப்பி ஓடி வரும் நீக்ரோக்களைக் காப்பாற்றி, இரகசியமாக அவர்களை கனடா நாட்டுக்கு அனுப்பி வைக்கும் தொண்டு செய்து வருகிறார். குடும்பம் முழு ஒத்துழைப்புத் தருகிறது. இதனால், நீக்ரோக்களை அடிமை களாக்கிக்கொண்டு கொக்கரிக்கும் தென்பகுதி, ப்ரவுன்மீது வஞ்சம் தீர்த்துக்கொள்ளத் துடிக்கிறது.
பிரச்சினை, மனிதத்தன்மைக்கு மாறானது, கடவுள் நெறிக்கு முரணானது என்ற அழுத்தமான நம்பிக்கை அந்தப் பெரியவருக்கு. எப்படியும் அடிமைத்தனத்தை ஒழித்தாக வேண்டும் என்று துடிக்கிறார். அந்தத் தூய தொண்டிலே தன்னையே வதைத்துக் கொள்ளவும் தயாராகிறார்.
22-பேர்களைக் கொண்ட ஒரு படை அமைக்கிறார் - அதிலே மூவர் அவர் பிள்ளைகள் - ஒருவன் மகளுக்கு மணாளனாக விரும்பும் இளைஞன்.
இந்தப் படை, வர்ஜீனியா மாநிலத்திலுள்ள, பாசறையைக் கைப்பற்றி ஆயுதங்களை எடுத்து, அடிமைகளிடம் கொடுத்து, புரட்சி மூட்டுவது, அடிமைகளுக்கு விடுதலை கிடைக்கும் வரையில் அந்தப் புரட்சி நடத்துவது என்பது திட்டம். திட்டம் என்று கூறுவதற்குத் துளியும் பொருத்தமற்ற ஒரு ஏற்பாடு - ஒரு எழுச்சி - ஒரு துடிப்பு - தற்கொலை முயற்சி என்றே கூறலாம். இந்த முயற்சி முறியடிக்கப்பட்டாலும் நட்டமில்லை. ஏனெனில் அமெரிக்காவும் உலகும் துடித்தெழுந்து பிரச்சினையைப்பற்றித் தீவிரமாகச் சிந்திக்கும். அந்தச் சிந்தனையிலிருந்து ஒரு எழுச்சி பிறக்கும். விடுதலைக்கு வழி கிடைக்கும் என்கிறார் ப்ரவுன். பாசறையைத் தாக்குகிறார்கள் - படைகள் சூழ்ந்துகொள்கின்றன - பலர் கொல்லப்படுகிறார்கள். ப்ரவுன் தூக்குத் தண்டனை பெறுகிறார். இது வரலாற்று நிகழ்ச்சி - அடிமை விடுதலைக்கான சட்டத்தை ஆபிரகாம் லிங்கன் பிறப்பிப்பதற்கு முன்பு நடைபெற்றது - 1859ல்.
அண்ணன்
அண்ணாதுரை
20-12-1964
மூலக்கட்டுரை http://www.annavinpadaippugal.info/kadithangal/arasiyal_matrum_2.htm