அண்ணாதுரை, திராவிடநாடு, 1–7–1956

உலகில் எங்கெல்லாம் தேசிய இனங்கள் விடுதலை, உரிமைப் போராட்டங்கள் நடத்துகின்றனவனோ, அங்கெல்லாம் போராடும் மக்களுக்கு, அவர்களின் உரிமைகளுக்கு ஆதரவாகவும், அவர்கள் விடுதலை பெற வேண்டும் என்று விரும்பியவராகவும், அந்த உணர்வை உணர்ந்தவராகவும் இருந்தது தான் பேரறிஞர் அண்ணாவின் தனிச்சிறப்பு.
மானிட விடுதலை உணர்வாளர் அண்ணா ❤️.
நேரு தலைமையிலான இந்திய பேரரசு, அதன் ஆதிக்கத்தை, சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் நடைபெற்ற சந்திப்பில் உலக நாடுகளின் முன் அவரின் இரட்டை வேடத்தைச் சுட்டிக்காட்டி, தமிழ்த்தேசிய இனத்தின் மீதான ஆதிக்கத்தை எதிர்த்தும், பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து விடுபட போராடும் சைப்ரஸ் தீவு விடுதலைப் போராட்டம் பற்றியும், குறிப்பாக அதில் இந்தியாவின் நிலைப்பாடுகளின் கயமையைப் பற்றியும், ஈழம்(இலங்கை), காஷ்மீர், நாகநாடு என்று எல்லா தேசிய இன உரிமைகளை ஆதரித்தும் ஜூலை 7, 1956 இல் திராவிடநாடு இதழில் தம்பிக்கு அண்ணா எழுதிய கடிதம்
நேரு பண்டிதரின் சுற்றுலா மராட்டிய மாது கைது - டமாஸ்கஸ்ஸில் விருந்து - நாகநாடு பிரச்சினை.
தம்பி,
மலாய் நாட்டு நண்பரொருவர் என்னைக் கண்டு பேசிக் கொண்டிருந்தார். இங்கு நாகைப் பகுதியில் நமது கழகத்தில் ஆர்வத்துடன் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ஆறேழு ஆண்டுகளாக அங்கு சென்று வாழ்ந்து வருகிறார். அவர் "மலாய் நாட்டிலே, அண்ணா! நமக்கு மகத்தான செல்வாக்கு மலர்ந்திருக்கிறது; அங்கு, இங்கு மாநாடுகளிலே காணப்படும் கொடி அலங்காரக் காட்சி சாதாரணமாகவே ஊர்களில் தெரியும்' என்று மிக்க ஆர்வத்தோடு கூறிக்கொண்டிருந்தார். உடனிருந்து பேசிக்கொண்டிருந்த நமது நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி மலாய் நாட்டிலே, எந்தக் கழகம் செல்வாக்குடையது? திராவிட முன்னேற்றக் கழகமா, திராவிடர் கழகமா? என்று கேட்டார். வந்த நண்பர் அங்கு அந்த வித்தியாசமே கிடையாது என்றார்!
கடல் கடந்தால் கடுவிஷம் குறையும் போலும் என்றெண்ணிக் கொண்டேன். நண்பர், மலாய் நாட்டிலே இருப்பதால், இங்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழித்துக் கட்டத் திராவிடர் கழகம் போதாதா என்று காமராஜர் இறுமாந்து கூறும் நிலைமை இருப்பது தெரியாது. எனவே, தூய உள்ளத்துடன், "எங்கள் பகுதியில் வித்தியாசம் கிடையாது' என்றார்.
அவ்விதமான தூய உள்ளம், இங்கும் சிலருக்கு இருக்கிறது. தம்பி, உன் பொறுமையும் பொறுப்புணர்ச்சியும் தொண்டும் தோழமைப் பண்பும்தான், அந்தச் சிலர் பலராவதற்கு வழி செய்ய வேண்டும்.
மலாய் நண்பர், அரியலூரிலும் அம்பாசமுத்திரத்திலும், திருநெல்வேலியிலும் தில்லையிலுமே பேசிக்கொண்டிருந்தால், என்ன பலன் என்று எண்ணிக் கொண்டார் போலும்-எனவே அவர் "அண்ணா! மலாய் நாட்டுக்கு வாருங்களேன். சிங்கப்பூர், பினாங்கு, ஈப்போ, கோலாலம்பூர் ஆகிய இடங்களிலெல்லாம் வந்திருந்து நமது தோழர்களிடம் விஷய விளக்கமளிக்க வேண்டாமா? அவர்களெல்லாம் எத்துணை ஆர்வத்தோடு இருக்கிறார்கள் என்பதை அறிவீரா?'' என்று கூறி என்னை மகிழ்வித்தார். நானோ அவர் பேசிக் கொண்டிருக்கையில் டமாஸ்கசில் இருந்தேன்!!
இவர் என்னை இதோ அருகே இருக்கும் சிங்கப்பூர் அழைக்கிறார் - நானோ அங்கும் இன்னமும் சென்றிட முடியாத நிலையில்தான் இருக்கிறேன் - ஆனால் தம்பி, உன் துணைகொண்டு எந்தத் திராவிடத்தை விடுதலை பெற்ற நாடாக்க முடியும் என்று நான் மனதார நம்பிக்கொண்டு, சக்திக்கேற்ற வகையிலும், வாய்ப்புக் கிடைக்கும் அளவிலும் பணி செய்து கொண்டிருக்கிறேனோ, அந்தத் திராவிடத்தை இன்று வடநாட்டுடன் பிணைத்து ஏகாதிபத்தியம் நடத்தும் நேரு பண்டிதர், எங்கே சென்றிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்த்தேன், ஒரு கணம், திகைத்தே போனேன்.
எங்கள் பண்டிதர் எங்கே இருக்கிறார்? இலண்டனில்.
எமது பண்டிதர் எங்கெங்கு சென்றார்? பாரிஸ், மாஸ்கோ, பீகிங், பெல்கிரேட், ஏதன்ஸ்!! - என்றெல்லாம் எக்காளமிடும் காங்கிரஸ் நண்பர், மனக்கண்முன் தோன்றினார்; பண்டிதர் சென்றுள்ள பயணத்தை நினைவூட்டினார், நானும் டமாஸ்கஸ் சென்றேன்.
டமாஸ்கஸ்! பன்னெடுங் காலமாகக் கவர்ச்சியூட்டும் காதைகளுக்குப் பிறப்பிடமான வசீகர மிக்க நகரம்! மதிலேறிக் குதித்து மான்விழியாளிடம் மதுரமொழி கேட்டு இன்புற்று, காட்சி கண்டு கடுங்கோபம் கொண்ட கொற்றவனின் கூர்வாளுக்கு இரையான குமரர்கள் உலவியதோர் இன்பபுரி என்கின்றனர், அந்த அழகு நகரை!
அந்த நகரில் - டமாஸ்கஸ் நகரில் - நேரு பண்டிதர் விருந்துண்டார் - ஊர் சிறப்புப் பற்றி உபசரிப்பு நடத்தியோரிடம் உவகையுடன் எடுத்துரைத்தார். அவர்களுக்கு வந்துற்ற இன்னல் அனைத்தையும் துடைத்திடுவதாக வாக்களித்தார். அம்மட்டோ! விடுதலை பெற்ற நாடுகளின் முன்னேற்றம் குறித்தும், சிக்கிக் கிடக்கும் நாடுகளின் விடுதலைக் கிளர்ச்சி வெற்றி பெறுவதற்கான வழிவகை பற்றியும் எடுத்துரைத்தார்! என்னே பண்டிதரின் பரிவு! எத்துணை ஆர்வம் காட்டுகிறார், விடுதலைப் பிரச்சினையில்! எங்கோ கிடக்கும் டமாஸ்கஸ்தானே - நமக்கென்ன இங்கு பந்தமா, பாசமா, ஒட்டா உறவா என்று அலட்சியம் காட்டினாரில்லை; எவ்வளவு பரந்த நோக்குடன், பாரில் எங்கு எழும் பிரச்சினையாயினும், மக்களின் உரிமை அதிலே தொக்கி இருக்கிறதென்றால், நான் ஆர்வம் காட்டுவேன், அப்பிரச்சினையை எனதாக்கிக் கொள்வேன் என்ற கருத்துடனல்லவா அவர் பேசியிருக்கிறார் என்றெல்லாம் எண்ணிப் பிரமுகர்கள் களிப்படைந்திருப்பர்; "பழச்சாறு பருகுக! சிற்றுண்டியை எடுத்துக்கொள்க’' என்று உள்ளன்புடன் உபசரித்திருப்பர்!
டமாஸ்கஸ்! டமாஸ்கஸ்!! கவர்ச்சிகரமான நகரம்!- என்று அவரும், நேரு! நேரு! புகழ்மிக்க தலைவர்! - என்று அவர்களும் பூரிப்புடன் பேசியபடி, விருந்து வைபவத்தில் கலந்து களிப்படைந்திருப்பர்!
"வயது என்ன?''
"நூறு.''
"நூறு வயதா! பாட்டி! இந்தத் தள்ளாத வயதில், உனக்கேன் இந்தத் தொல்லை? பேரனும் பேத்தியும் பார்த்துக் கொள்ள மாட்டார்களா? உனக்கென்ன வந்தது?
"அட அறிவற்றவனே! பேரனும் பேத்தியும் மட்டுமரியாதையுடனும், உரிமையுடனும் வாழத்தானே நான் இந்தப் பாடுபடுகிறேன்; என் மக்களுக்காக நான்தானே பாடுபட்டாக வேண்டும்; பெற்று வளர்த்துப் பெரியவர்களாக்கியான பிறகு, எந்தப் பேயாட்சியிலே வேண்டுமானாலும் இருந்து போகட்டும் என்றா விட்டுவிடுவார்கள்! ஏறக்குறைய என் பேரன் வயதுதான் இருக்கும் உனக்கு. நீ, போய்க் கேட்கிறாயே, உனக்கேன் வம்பு என்று! இதுவா நியாயம்...?’'
"உம்! சரி, சரி, உன் வாயைக் கிளறினால், நீ மேலும் மேலும் பேசுவாய்.... சரி... உன் வயதை உத்தேசித்து எனக்கு வருத்தம். வேறென்ன. இந்த வயதிலே, "ஜெயில்' வாசமா என்று எண்ணும் போது எனக்குத் துக்கம்... வேறென்ன...?''
"பைத்தியக்காரனாக இருக்கிறாயே! ஜெயிலுக்குப் போகப் போவது, நான். உனக்கேன் துக்கம்?''
"மகராஜீ! உன்னோடு பேசி என்னால் வெல்ல முடியாது. இருக்கட்டும், நீ சிறை செல்வதாலே, என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது, சொல்லேன் கேட்போம்...''
"நீ கேலிக்காகக் கேட்டாலும் சரி, உண்மையாக விஷயம் தெரிந்துகொள்ளும் எண்ணத்தாலே கேட்டாலும் சரி, எனக்கென்ன. நான் சொல்லவேண்டியதைச் சொல்லி விடுகிறேன். படுகிழமாயிற்றே - நடக்கக்கூட முடியாத வயதாயிற்றே - நீ ஜெயிலுக்கு போய் என்ன சாதிக்க முடியும் என்றல்லவா கேட்கிறாய் - சொல்கிறேன் கேள். எனக்கோ வயது நூறு. காண வேண்டிய காட்சிகளைக் கண்டாயிற்று - இனி நான் தேடிப் பெறவேண்டியது எதுவும் இல்லை - கீழே உதிர்ந்து விழ வேண்டிய சருகு நான் - வீழ்ந்ததும் மண்ணோடு மண்ணாகிவிட வேண்டிய சரீரம் இது - இப்படிப்பட்ட நானே நாட்டுக்காக, உரிமைக்காக, அநீதியை எதிர்த்து, அடக்குமுறையை துச்சமாகக் கருதி, அறப்போரில் ஈடுபட்டு, சிறை செல்கிறேன் என்றால், இந்த நாட்டிலே உள்ள வீரர்கள், வாலிபர்கள், இளம் பெண்கள் எல்லாம், கிழவி அல்லவா வீரமாகக் கிளம்பி, தீரமாகப் போராடிச் சிறை சென்றாள், நாம் கல்லுபோல் உடலும், பாம்பைக் காலால் மிதித்துக் கொல்லும் வயதும் கொண்டிருக்கிறோம், நாமுண்டு நம் குடும்ப சுகம் உண்டு என்று இருக்கிறோமே, எவ்வளவு கோழைத்தனமும் சுயநலமும் நம்மிடம் குடிகொண்டிருக்கிறது என்று எண்ணி வெட்கித் தலைகுனிவார்கள் ஒரு விநாடி, பிறகு வீறு கொண்டெழுவர். விடுதலைப் போரிலே ஈடுபடுவார்கள். விடுதலை கிடைக்கும்; உரிமை நிலைக்கும்! அறம் தழைக்கும்! மகனே! அதற்காகத் தானடா, நான் இந்த வயதிலே சிறை செல்கிறேன்.’'
மராட்டிய மண்டலத்திலே, இப்படி ஒரு உரையாடல் நடைபெறவில்லை - ஆனால் 100வயது சென்ற ஓர் மூதாட்டி பம்பாய் நகர் மராட்டியருக்கு என்பதற்காக நடத்தப்படும் கிளர்ச்சியில் ஈடுபட்டுச் சிறை சென்றார். அதிகாரியும், அந்த மூதாட்டியும் சந்தித்தபோது, பார்வையிலேயே, இந்த உரையாடல் நடைபெற்றிருக்கத்தானே வேண்டும்.
டமாஸ்கஸ், இந்த மூதாட்டியை அறியாது!
நூறாண்டு வயதுள்ள மூதாட்டியும் துணிந்து சிறை செல்லும் அளவில் பம்பாய் அறப்போர், நேரு பண்டிதரின் ஆட்சியிலே நடைபெற்றுக் கொண்டிருப்பதை டமாஸ்கஸ் அறிந்திராது.
துப்பாக்கியின் துணையுடன் துரைத்தனம் நடத்திவரும் தூயவர்தான் நேரு என்பதை டமாஸ்கஸ் அறியாது!
டமாஸ்கஸ் நகரப் பிரமுகர்கள் நேருவின் புகழொளியில் மயங்கி, அவர் ஏறிவரும் விமானம் சோவியத் தந்ததாம், அவர் செல்ல இருக்கும் இடம் சீமையாம், அங்கு அவருக்கு உள்ள அலுவல்களிலே ஒன்று மகாராணியாருடன் விருந்து சாப்பிடுவதாம், குபேரபுரி என்று கொண்டாடப்படும் அமெரிக்காவில் அவருக்குக் கோடிகோடியாக டாலர்கள் கொட்டுகிறார்கள் என்ற இந்தச் செய்திகள் கேட்டுச் சொக்கிப் போயுள்ளவர்கள்! எனவே, அவர்கட்கு நேருவின் ஆட்சியிலே உரிமை முழக்கமிடுவோர் பிணமாவதும், ஊராள் முறையிலே உள்ள ஊழலையும் ஊதாரித்தனத்தையும் கண்டிக்க முற்படுவோர் கொடுமைப்படுத்தப்படுவதும், நூறு ஆண்டு வயதான மூதாட்டிகள் சத்யாக்கிரகத்தில் ஈடுபட்டுச் சிறை செல்வதும். தெரியாது - தெரிந்து கொள்ளச் செய்வதற்கு, வழியே கூடக் கிடையாது என்று கூறலாம். காரணம், அவர்கட்குத் தரப்படும் செய்திகள் அத்தனையும், நேருவின் புகழ்பற்றியனவே தவிர, அந்தப் புகழ்த்திரைக்குப் பின்னால் உள்ள "பம்பாய்ச் சம்பவங்கள்'' அல்ல! எனவே கவலையற்று, யாரேனும் ஏதேனும் துணிச்சலாகக் கேட்டுவிடுவார்களோ என்ற பயமற்று, நேரு பண்டிதரால், டமாஸ்கஸ் நகர் விருந்தின்போது, உரிமை, விடுதலை, சமாதானம், நல்லாட்சி, மக்கள் நல்வாழ்வு என்பன போன்ற சுவைமிகு சொற்செல்வத்தை வாரி வாரி வழங்க முடிகிறது! டமாஸ்கஸ் விருந்து நடத்துகிறது; விருந்தும் பெறுகிறது!
ஏதன்ஸ் நகரம், உலக வரலாற்று ஏடு படித்திடுவோர்க்க்கு எல்லாம், இனிப்பூட்டும் பெயர் - எழிலோவியமாகப் பன்னெடுங் காலத்துக்கு முன்பே திகழ்ந்ததோர் நகரம் - அதன் நெடுஞ்சாலைகளிலே, உலகை வென்ற வீரர்கள் உலவி இருக்கிறார்கள் - அதன் அங்காடியிலே, அவனி எங்கணுமிருந்து பண்டங்களைக் கொண்டுவந்து குவித்து வாணிபம் நடாத்தியோர் வாழ்ந்திருக்கின்றனர் - அதன் குன்றுகளிலே நின்று காவியம் புனைந்தனர், மலைச் சரிவுகளிலே குருதி கொட்டிச் சுதந்திரத்தை வளர்த்தனர் - ஏதன்ஸ் - ஏற்புடைய எண்ணங்கட்கெல்லாம் பிறப்பிடமாக இருந்திருக்கிறது, பல்வேறு துறைகளிலே வித்தகரானோர் வாழ்ந்திருந்த சிறப்பிடம் ஏதன்ஸ்! அங்கும் சென்றார் நேரு பண்டிதர்! எத்தகைய எழுச்சி ஏற்பட்டிருக்கும் அவர் உள்ளத்தில் என்பதை தெளிவாக யூகித்துக் கொள்ளலாம். அந்த எழிலூரில், நேருவுக்கு விருந்தும் உபசாரமும் கிடைத்தது; பிரமுகர்கள் பரிவுடன் பேசினர்; பண்டிதர், அந்நகர் வளர்த்து நானிலமெங்கணும் பரப்பிய பண்பாடு பற்றிப் பேசியிருப்பார்! ஏதன்ஸ் நகரில் இற்றை நாளில், ஏக்கம் குடிபுகுந்திருக்கிறது. தாயகத்துடன் சேரத்துடிக்கிறது, சைப்ரஸ் தீவு! அதனைத் தமது ஆதிக்கத்திலே வைத்துக்கொண்டு அடக்குமுறை மூலம் அந்த ஆதிக்கத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது பிரிட்டன். அங்கல்லவா செல்கிறார் நேரு பண்டிதர்! அழைக்கப்பட்டுச் செல்கிறார் - மதிப்பளிக்கப்பட்டுள்ள மாபெருந் தலைவர். அவரிடம் நமது குறையினைக் கூறுவோம்; உரிமை வேட்கை மிகுதியால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு வெற்றியும் பெற்றவரல்லவா பண்டிதர், அவர் அறிவார் உரிமைப் பிரச்சினை உயிரினும் மேலானது என்பதனை, அவரிடம் நாம் நமது உள்ளத்தில் கொழுந்து விட்டெரியும் விடுதலை ஆர்வத்தைக் கட்டினால் போதும். இலண்டனில் சிறிதளவு அமைச்சர்களிடம் எடுத்து இயம்புவார், வாதாடுவார் - என்றெல்லாம் எண்ணிக் கொண்ட ஏதன்ஸ் நகரத்தார், நேரு பண்டிதரை எதிர் கொண்டழைத்து உபசரித்து, விருந்து வைபவம் நடாத்தி, வீரரே! தீரரே! என்று அர்ச்சித்து உபசரித்திருக்கின்றனர். நேரு பண்டிதர், அகங்குழைந்துதான் போயிருந்திருப்பார்! அகில முழுதும் புகழ்க் கொடியைப் பறக்கவிட்ட ஏதன்ஸ் நகரம், சாம்ராஜ்யங்கள் பலவற்றினைத் தன் சுட்டு விரல் காட்டி நடாத்திச் சென்ற ஏதன்ஸ் நகரமல்லவா "உதவி’' கேட்கிறது - உள்ளம்- பூரித்துத்தானே போகும்!
சைப்ரஸ், சின்னஞ் சிறு தீவுதானே - சுண்டைக்காய் அளவுள்ளது - எங்கள் பாரத தேசத்திலே ஒரு தாலுக்கா அளவு இருக்கும், இதற்காக ஏன் இத்தனை கொதிப்பு, கொந்தளிப்பு? என்று கேட்டாரா? கேட்பாரா?
சைப்ரஸ், கிரேக்கத்துடன் சேர விழைகிறது; தாயைச் சேய் அழைக்கிறது; அந்த பந்தமும் பாசமும், உரிமை உணர்ச்சியும் படைகொண்டு அழித்திடப் போமா? பாவிகள் ஏனோ இதனை அறிய மறுக்கின்றனர்? என்று பேசுகிறார்; ஏகாதிபத்திய முறையினைச் சாடுகிறார்; இது கேட்டு, ஏதன்ஸ் நகரப் பிரமுகர்கள், இவரன்றோ! உரிமையின் அருமைதனை அறிந்தவர்! விடுதலைக் கிளர்ச்சியின் மேம்பாட்டினை உணர்ந்த உத்தமர் இவரன்றோ! மனுச் செய்தோம், அசட்டை காட்டினர், மன்றாடினோம், மமதை பொழிந்தனர்; கண்ணீர் பொழிந்தோம்; கைகொட்டிச் சிரித்தனர்; கிளர்ச்சியில் ஈடுபட்டோம், சுட்டுத்தள்ளுகின்றனர்; இந்த வெறிச் செயலைக் கண்டிக்க, எங்கோ ஓர் கோடியில் உள்ள நாடு, ஏற்றம் பெறாதார் உள்ள நாடு, வெள்ளையருக்கு வேட்டைக்காடு என்றெல்லாம் இகழ்ந்துரைக்கப்பட்டு வந்த இந்தியாவிலிருந்து வந்துள்ள நேரு பண்டிதருக்கு நெஞ்சு உரமும் நேர்மைத் திறனும் இருந்திடக் காண்கிறோம்; இத்தகைய கருத்து வளமும் கருணை உள்ளமும் இவருக்கு இருப்பதனாலன்றோ, இவரை மனிதருள் மாணிக்கம் என்று புகழ்கின்றனர் என்று பாராட்டியிருப்பர். ஏதன்ஸ் நகரமே நேரு, நேரு! என்று புகழுரையைச் சொரிந்திருக்கும்.
சரண் அடைந்தால் உயிர் தப்பலாம்!
இல்லையேல் சுட்டுத் தள்ளப்படுவீர்கள்!!
தாக்கீது, பறக்கிறது, பட்டிதொட்டிகளிலெல்லாம்! பிடிபட்டனர், சுடப்பட்டனர்; தாக்கப்பட்டது தகர்க்கப்பட்டது; என்று மக்களில் ஒரு பிரிவினர் பீதியுடன் பேசுகின்றனர். நீங்களும், உங்கள் அடக்குமுறையும்! - என்று கேலி பேசியபடி சிலர், குன்றேறிக் கூவுகின்றனர், அதோ, அதோ! என்று காட்டியபடி படை வீரர்கள் அவர்களைத் துரத்துகின்றனர்; அந்த வீரர்களோ எந்தப் பிலத்திலே நுழைந்தனரோ, எந்தக் கணவாயில் பதுங்கினரோ தெரியவில்லை, படைவீரர்கள் கால் கடுக்கக் கடுக்க நடந்து சென்றதுதான் மிச்சம் என்று ஆயாசப் பட்டபடி, வெறுங்கையுடன் திரும்புகின்றனர்.
முற்றுகையிட்டு முறியடிப்போம்!
படைகளைக் குவிப்போம் பகையினை முடிப்போம்.
என்று சீறி எழுகிறது உத்தரவு! படைத்தலைவர்கள் தூக்கிச் செல்லப்படுகின்றனர்; அதிகாரிகள் திக்குத் தெரியாத இடத்திலே கொண்டுபோய் விடப்படுகின்றனர்; காட்டிக் கொடுப்போர் வெட்டித் தள்ளப்படுகின்றனர்; பேதமும் பிளவும் மூட்டுவோர் எச்சரிக்கப்படுகின்றனர்; இது என்ன களம்? இவர்கள் நடத்தும் போர் இவ்வளவு "மாயசக்தி' வாய்ந்ததாக இருக்கிறதே; பீரங்கிக்கும் பெரும் படைக்கும், டாங்கிக்கும் விமானத்துக்கும் இவர்கள் அஞ்சுவதாகக் காணோமே, திடீரென்று கிளம்புகிறார்கள், திணற அடிக்கிறார்கள்; திருப்பித் தாக்கத் தயாராகித் தேடிப் பார்த்தாலோ, ஒரு ஆளும் தென்படக் காணோம், இவர்களை எங்ஙனம் அடக்க முடியும்; துரைத் தனமோ இவர்களை அழித்தேயாக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துவிட்டது, நாம் என்ன செய்வது? காஷ்மீர் களம் இதனைவிட ஆயிரம் மடங்குமேல்! நிச்சயமாக! - என்று பெருமூச்சுடன் பேசுகின்றனர் பட்டாளத்துப் பெரிய ஆசாமிகள்.
தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கலகக்காரரின் கோட்டைகள் தாக்கப்படுகின்றன.
புரட்சி படைகள் சின்னாபின்னமாகின்றன.
கலகத் தலைவர்களை மக்கள் கண்டிக்கின்றனர்.
நிலைமை வேகமாகச் சீர்திருந்தி வருகிறது.
கலகக்காரரின் ஆவேசம் குலைந்துவிட்டது.
இவ்விதமாகவெல்லாம் துரைத்தனம் அறிக்கைமேல் அறிக்கைவிட்டு, தன் பிரதாபம் கெட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளும் வேலையை வேறு கவனித்துக்கொள்ள வேண்டி நேரிட்டுவிட்டது.
எப்படி இருக்கிறது நிலைமை?
இன்னமும் கலகம் ஒழியவில்லையா?
என்று வெளி நாடுகளிருந்தெல்லாம் கேட்கிறார்கள்.
சிறு சுயநலக் கும்பல் - கொள்ளைக் கூட்டம்?
என்று எந்த எதிர்ப்பாளர்களைப்பற்றி ஏசிப் பேசினரோ, அந்த எதிர்ப்பாளர்களை அடக்க, ஒடுக்க, படைகள் சென்றும் வெற்றிகிட்டாமலிருக்கும் நிலைமை இருப்பது தெரிந்தால், துரைத்தனத்துக்கு மதிப்பு எப்படிக் கிடைக்கும்! எனவே கலகக்காரர்களிலேயே பிளவு ஏற்பட்டுவிட்டது; தலைவனின் வலது கரம்போலிருந்தவனே விலகி தலைவனின் தகாத போக்கைக் கண்டிருக்கிறான் : ஊர் மக்களெல்லாம் கூடி, இனி எமக்கு இந்தத் தலைவனே வேண்டாம் என்று உறுதியுடன் கூறி விட்டனர்; ஆதரிப்பாரற்று, அடவியில் பதுங்கியும் அருவியில் மூழ்கியும் அலைந்து திரியும் கலகத் தலைவன், நாளையோ மறுநாளோ சரண் அடையப்போகிறான்' - என்று "பிரசாரம்' செய்து பார்த்தனர். மக்கள் நம்ப மறுத்தனர்; வெளி நாடுகள், கண் சிமிட்டின.
எல்லாம் நாகநாடு நிலைமை!
சைப்ரஸ் தீவு, கிரீசுக்குத்தான் சொந்தம்; தாயகத்துடன் தீவு சேர்ந்திட விழைவதைத் தடுப்பது தகாது; தேசியக் கிளர்ச்சியை ஒடுக்க, அடக்குமுறை வீசுவது மன்னிக்க முடியாத குற்றம்; உரிமைக்காகப் போரிடும் உத்தமர்களைத் தூக்கிலிடு கிறார்கள், சுட்டுத் தள்ளுகிறார்கள், சிறையில் தள்ளிச் சித்திரவதை செய்கிறார்கள், பாதிரியாயினும் பள்ளி மாணவனாயினும், விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபடுவது தெரிந்தால், பிடித்திழுத்துச் சென்று பேயாட்டம் நடத்துகிறது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்று அறியும்போது என் உள்ளம் அனலிடு மெழுகாகிறது, கண்களில் கனலும் புனலும் சுரக்கிறது என்று கனிவுடன் பேசிடும் நேரு பண்டிதருடைய ஆட்சியிலேதான், பன்னெடுங்காலமாக, சாம்ராஜ்யாதிபதிகளும் சாம்ராட்டுகளும் டில்லியில் அரசோச்சிய காலத்திலும், தனி அரசு செலுத்திக் கொண்டு வந்த நாக நாடு, இன்று டில்லியிடம் அடிமைப்பட மறுக்கிறது, விடுதலைப் போர் நடத்துகிறது. ஏதன்ஸ் நகர், இதனை அறியாது.
சைப்ரஸ் தீவுக்கு உரிமை வழங்குவதுதான் நியாயம் என்று பேசும் நேரு, சுதந்திரம் கேட்கிற நாக நாட்டின்மீது படைகளை ஏவி இருக்கிறார் என்பதை அறியாது! நேரு பேசுவதைத்தான், ஏதன்ஸ் கேட்க முடிகிறது, நேருவின் பீரங்கிகள், நாக நாட்டுக் குன்றுகளைப் பிளந்திடும் சத்தத்தையும் துப்பாக்கிகள் நாகர்களின் நெஞ்சத்தைத் துளைத்திடும் சத்தத்தையும் கேட்டிட முடியவில்லை; வாய்ப்பு இல்லை! இது தெரியும் நேருவுக்கு - எனவே நாக நாட்டை நசுக்கிக் கொண்டிருக்கும் கோலத்தை மறைத்துக்கொண்டு, "அந்தோ! என்ன அநியாயம்! விடுதலை கோரும் சைப்ரஸ்மீது குண்டு பொழிகின்றனரே கொடியவர்கள்' என்று கூறிக்கொண்டே கண்களைக் கசக்கிக் காட்டுகிறார்; ஏதன்ஸ், "மனிதருள் மாணிக்கமே! மகாத்மாவின் வாரிசே!'' என்று வாழ்த்துகிறது, ஏதன்ஸில் என் வேலை முடிந்தது; இனிச் செல்ல வேண்டிய இடம் நோக்கி, விமானத்தைக் கிளப்பு என்று களிப்புடன் கூறுகிறார் நேரு பண்டிதர்.
நாமும் சென்று பார்ப்போமே, தம்பி! ஆனால், நேருவின் ஆட்சியிலே உரிமைகள் அழிக்கப்படுகின்றன, மொழியும் கலையும் நசுக்கப்படுகின்றன என்று மட்டும் கூறிவிடாதே - புருவத்தை நெரிப்பார், போக்கிரிகளே! பாருங்கள் உங்கள் கொட்டத்தை அடக்குகிறேன்! - என்று மிரட்டுவார் - இரத்தக் கரை படிந்த கரமடா, தம்பி, ஈவு இரக்கமற்ற மனம்!
அதோ, பண்டாரநாயகா அதைத் தெரிந்தவர் போலல்லவா சிரிக்கிறார். பாரத தேசம் இமயம் முதல் குமரிவரையில்! இலங்கைக்கு ஒப்பிட்டால் - ஏ! அப்பா! பெரிய நாடுகளைக் கண்டு சிறிய நாடுகள் கிலிகொள்ளுவது என்றால், இலங்கை இதற்குள் நடுநடுங்கிப் போயிருக்கும், ஆனால் இலங்கைப் பிரதமர் பண்டாரநாயகாவைப் பார், கெம்பீரமாக, இலண்டனில் உலவுகிறார்.
"இலங்கை இனிக் குடியரசு நாடு!
இலங்கையில் பிரிட்டிஷ் தளம் இருக்கக் கூடாது!!
என்று முழக்கமிடுகிறார் - அங்கேயே.
பிரிட்டிஷ் சிங்கத்தை, அதன் குகையில் நுழைந்தே, பிடரி பிடித்துக் குலுக்குவேன் - என்று காலஞ்சென்ற சத்தியமூர்த்தி கூறுவார்! பண்டாரநாயகா இலண்டனிலேயே, பிரிட்டிஷ் பிடியை உடைத்தெறியப் போகிறேன் என்று முழக்கமிடுவது, அபாரமான வீரமென்று நான் கூறவில்லை - அதிலும் அந்தச் சிங்கம் பல்போன நிலையில் இருக்கிறது! ஆனால் நேரு பண்டிதரை, நேருக்கு நேராகச் சந்தித்த துணிவு இருக்கிறதே, அது உண்மையாகவே ஆச்சரியப்படத்தக்கதுதான்!
என்ன காரியம் செய்துவிட்டு, சீமை வந்திருக்கிறார்.
தமிழர்களைப் படுகொலை செய்துவிட்டு, இலண்டன் வந்திருக்கிறார்.
சித்திரவதைக்கு ஆளான தமிழ் மக்களுடைய கண்ணீர் உலரக்கூட இல்லை, நேரு பண்டிதரைச் சந்திக்கிறார்.
நேரு பண்டிதர் எனக்கு நண்பர் என்றல்லவா கூறிக் கொள்கிறார் - எனவே கண்டதும் இரு தலைவர்களும் கனிவு ஒழுகத்தான் பேசிக்கொள்வர்.
"மெத்தச் சிரமம் தங்களுக்கு... நீண்ட பயணம்.''
"ஆமாம்! என்ன செய்வது? ஈடன் ரொம்பத் தொல்லை தருகிறார்!''
"தங்களைக் கண்டால், என்ன பேசுவது, தங்கள் பஞ்சசீலம் பாரெல்லாம் பரவி வருகிறதே! நாட்டோவும் சீட்டோவும் கேட்பாரற்றுப் போய்விட்டனவே! இனி நமது கதி என்ன? இனியும் எதற்காக அணுகுண்டு என்று பண்டிதர் கேட்டு விட்டால் என்ன பதில் அளிப்பது என்று எண்ணி எண்ணி, அந்தத் திகிலாலேயே, ஐசளோவர், பாபம், படுத்த படுக்கையாகிவிட்டார்!''
"நாசர் வேறு, கெய்ரோவில் வந்து தங்கியாக வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறார்.''
"ஆமாம்! இதற்கெல்லாம் எப்படி உடம்பு இடங்கொடுக் கிறது?''
"மனம்தான் காரணம்!'' "மனமென்றால் அது என்ன சாமான்யமானதா! மார்க்ஸ் செய்த தவறுகளையே கண்டறியும் வளம் நிரம்பியதல்லவா!''
"நான், மனவளம்தான் உலகின் உண்மையான செல்வம் என்று கூறுவேன்.''
"சந்தேகமென்ன! பண்டிதரே! பம்பாய் விஷயமாக, என்ன "ரகளை'' தீர்ந்தபாடில்லையே!''
"ஆமாம், நான் பரிதாபப்படடு, பயல்களை ஏதோ பேசட்டும் என்று விட்டுவைத்திருந்தேன். அதுகள் இப்போது தலையை விரித்துக்கொண்டு ஆடுகின்றன. செச்சே! இனி இதனைத் துளியும் அனுமதிக்கக் கூடாது என்று, பலாத்காரத்தை ஒடுக்கியே தீரவேண்டும், இதிலே ஈவு, இரக்கம், பரிவு, பாசம், தத்துவம் இவைகளைப்பற்றி எண்ணிக் குழப்ப மடையக் கூடாது, உறுதி வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து விட்டேன்.''
"அதுதான் முறை! ஈவு இரக்கம் என்று இதோபதேசம் பேசுவது நல்லதுதான். ஆனால் பலாத்காரத்தை எப்படி அனுமதிக்க முடியும்? ஒழித்துக்கட்ட வேண்டியதுதான். எத்தனைபேர் பிணமானாலும் கலங்கவோ, கவலைப்படவோ கூடாது - பலாத்காரத்தை அழித்துத் தீரவேண்டும் - ஜனநாயகக் கடமைகளிலே முக்கியமானதாயிற்றே, தங்களுக்கா தெரியாது. ஆனால், சுயராஜ்யக் கிளர்ச்சிக் காலத்திலே, உரிமைபற்றிப் பேசியதை எல்லாம் இப்போதும் எண்ணிக் கொண்டு, தங்கள் தேசத்தவர் சிலர், தலைகால் தெரியாமல் ஆடுகிறார்கள்.''
"மட்டந் தட்டிக்கொண்டு வருகிறேன். புறப்படுவதற்கு முன்பு சொல்லிவிட்டுத்தான் வந்தேன், எலெக்ஷன் முறையையே மாற்றிவிட வேண்டும் என்று. "ஓட்டு' ஒன்று இருக்கிறது என்பதாலே தலைகால் தெரியாமல் குதிக்கின்றன.''
"ஆமாமாம்! மொழிச் சண்டையைப் பாருங்களேன்...'' "வெறி அளவுக்குச் செல்கிறது....''
"அந்த வெறியைச் சமாளிக்க, பண்டிதரே! மெத்தச் சிரமப்பட வேண்டி இருக்கிறது.''
"வெளிநாட்டுக்காரர் தூண்டிவிடுகிறார்கள்...''
"அதேதான் இலங்கையிலும், வெளிநாட்டுக்காரர்தான் தமிழர்களை தூண்டிவிடுகிறார்கள்''
"நிலைமை இப்போது எப்படி இருக்கிறது?''
"ஏன், சென்னை சர்க்கார் ஏதாவது கேட்டதா?'' "அதெல்லாம் இல்லை. பொதுவாக உலகப் பிரச்சினை களிலே அது ஒன்று என்பதால் கேட்கிறேன்.''
"நிலைமை கட்டுக்கு எப்போதோ அடங்கிவிட்டது. வெட்டி வீழ்த்தி விட்டோம் - குழி தோண்டிப் புதைத்து விட்டோம் - தவறான வழி சென்ற ஜனங்களை''
"தமிழர்களிடம் மெத்த மனக் கொதிப்பு ஏற்பட்டுவிடும்...''
"அப்படித்தான் பலபேர் என்னிடம் சொன்னார்கள். நான் சொன்னேன், போங்களடா புரியாத பேர்வழிகளே! நேரு பண்டிதருக்கு நிலைமை தெரியாதா என்ன? பஞ்சாபிலும் மராட்டியத்திலும், நாக நாட்டிலும், பிற இடத்திலும், பலாத்காரம் கண்டதும், பண்டிதர், படையையே அனுப்பி அடக்கினவராயிற்றே - அவருக்கு ஆட்சிப் பொறுப்பும், அதிலுள்ள சிக்கலும் தெரியாதா? அவர் இதனைத் தமிழர்களுக்கு எடுத்து விளக்குவார் என்று கூறினேன்.''
தம்பி, பண்டாரநாயகா இதுபோல் வாதாட வாய்ப்பு இருக்கிறது - நேரு பண்டிதரின் நடவடிக்கையே அந்த வாய்ப்பை அளிக்கிறது என்ற துணிவு இருக்கவேதான், தமிழ் இரத்தம் படிந்த கரத்தைக் கழுவிடவும் முயற்சிக்காமல், இலண்டன் மாநாடு சென்றிருக்கிறார்.
தட்டிக் கேட்கும் துணிவும் பண்டிதருக்குக் கிடையாது - பண்பும் பட்டுப்போய் விட்டது.
எதைக் கேட்டால், எதைச் சுட்டிக் காட்டுவார்களோ என்ற பயம், பிய்த்துத் தின்கிறது அவரை, பாபம்!
உரிமையை மறுக்கலாமா, சத்யாக்கிரகத்தை அடக்குமுறை கொண்டு அடக்க முற்படுவது அறமாமா? மக்களின் இதயநாதமெனத் தகும் மொழி, கலை, ஆகியவற்றினை அழித்தொழிக்கும் செயல் ஆகுமா, அடுக்குமா? - என்று எதைப் பண்டிதர் எவரிடம் கேட்டாலும், எவருக்கும், என்ன பதிலளிப்பது என்ற கலக்கம் ஏற்படக் காரணம் இல்லையே.
பம்பாய், பஞ்சாப், கல்கத்தா, சென்னை, நாக நாடு.
என்று நீண்டதோர் பட்டியலைக் காட்டியல்லவா அவர்களால் பேச முடிகிறது! எனவேதான் பண்டிதரின் சுற்றுப் பயணம் பெரும்பாலும் விருந்துமயமாகக் காணப்படுகின்றதே யன்றி, விவாதம், நியாயம் காணப் பேசுதல், தன் நாட்டு மக்களைப் பிற நாட்டார் இழிவாகவும் இம்சையுடனும் நடத்துவதுபற்றிக் கொதித்தெழுந்து கேட்பது போன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபட இயலவில்லை. டமாஸ்கஸிலிருந்து இலண்டன் வரையில், தலைநகர்களிலே விருந்து வைபவங்கள், சுவையான உபசாரப் பேச்சுக்கள், ஆங்காங்கு உள்ள உரிமைப் பிரச்சினைகளுக்குப் பேராதரவு காட்டும் போக்கு, இவ்வளவுடன் முடிந்து விடுகிறது.
இலண்டன் செல்கிறார்-செல்லுமிடத்தில், தமிழரைக் கொடுமை செய்யும் பண்டாரநாயகாவைக் காண்பார், கொடுமையைக் கைவிடு, இல்லையேல் என் கொற்றம் சீறி எழும் என்று எச்சரிக்கை விடுப்பார், ஆப்பிரிக்க மனு ஸ்ட்ரிடம் வருவார், அவருக்கு நிறவேறி தலைக்கேறியிருப்பது தெரியும் பண்டிதருக்கு. எனவே அதனைக் கண்டிப்பார், பாகிஸ்தான் பிரதமரைக் காண்பார். காஷ்மீர் பிரச்சினைக்குப் பரிகாரம் தேடுவார் - என்றெல்லாம் பாழும் மனம் எண்ணுகிறது, ஆனால் அவரோ, பாருக்கெல்லாம் நல்லவராகப் பார்க்கிறார். படுகொலை செய்பவனையும். தோலிருக்கச் சுளை விழுங்குபவனையும் தோழனாகக் கொண்டு, தொல்லை நிரம்பிய உலகுக்கு நான் சொல்லிவருவது ஒன்றுதான். அதுதான் பஞ்ச சீலம் - அதை நான் இரங்கூனில் சொன்னேன், பீகிங்கில் சொன்னேன், பாரிசில் பேசினேன், நியூயார்க்கில் எடுத்துரைத்தேன், மாஸ்கோவில் சொன்னேன், பெல்கிரேடில் பேசினேன், இங்கும் சொல்கிறேன், என் தேசத்திலும் சொல்லுவேன் என்று பேசிவிட்டு, பாராட்டுரையைப் பெற்றுக் கொண்டு தாயகம் திரும்புகிறார் - மீண்டும் மடகாஸ்கர் செல்லப் போகும் "சேதி'யை மன்னார்குடிக்கு வந்து கூறுவார்.
மக்கள் பட்டினிகிடப்பர், வறுமை கொட்டும், வேலையில்லாத் திண்டாட்டம் வாட்டும்.
அகவிலை தாக்கும், உரிமை பறிபோகும், அடக்குமுறை அவிழ்த்து விடப்படும்.
வடநாடு கொழுக்கும், திராவிடம் தேயும்.
ஐயோ! - என்று சொன்னால் ஆஹா! தேசத் துரோகி!- என்று கொக்கரிப்பர். இதற்காகவா எமக்கு ஒரு நேரு? என்று கேட்டாலோ. பிடி சாபம் என்று மிரட்டுவர்! பொல்லாத காலமடா தம்பி. மிகப் பொல்லாத காலம்! ஆனால் பொழுது புலரத்தான் போகிறது! அதுவும் உன் ஆற்றலால்தான். அதுவரையில், அவர் டமாஸ்கஸ் செல்லட்டும், ஏதன்ஸ் காணட்டும், இலண்டனில் விருந்து பெறட்டும் - நீ மட்டும் தம்பி, நாட்டு மக்களிடம் பண்டிதரின் பரிபாலனத்திலே நெளிந்து கிடக்கும் அவலட்சணத்தை எடுத்துச் சொல்லிக் கொண்டு இரு - ஓயாமல் கூறு - நம்ம காமராஜர் கோபித்தாலும் கவலைப்படாமல் கூறு-தேர்தல் வருகிறது, இப்போ தேனும் தெளிவும் துணிவும் பெறுக! உரிமையும் வாழ்வும் கேட்டிடுக! என்று அனைவருக்கும் எடுத்துச் சொல்லிக் கொண்டிரு. பொழுது நிச்சயம் புலரும்.
அன்பன்,
அண்ணாதுரை
1-7-1956
Source : http://www.annavinpadaippugal.info/kadithangal/damaskas_muthal_2.htm