ஞாயிறு போற்றுதும்!

SG
21 min readJan 13, 2022

அண்ணாதுரை,திராவிடநாடு, 14–01–1963

நாட்டுக்கும் ஆபத்து -
எல்லை காப்பதில் இராணுவம் -
எதிர்க்கும் போரணியில் நாம் -
பண்டைய போர்க்கருவிகளும் களக்காட்சிகளும் -
தமிழ்மொழி காப்புப் பிரச்சினை -
அரசியல் துறையில் மக்களாட்சியே எழுஞாயிறு!
இல்லாத் தமிழகம் இயற்கை பொருள்கள் தரும் -
மனித மிருகங்கள் விளக்கங்கள்

தம்பி!

என்ன? பொங்கலோ பொங்கல் எனும் மகிழ்ச்சிக் குரலொலி எழுச்சியூட்டத்தக்க முறையிலே கேட்டிடக் காணோம். ஆண்டுக்கோர் நாள் ஈண்டு எழும் அந்த இன்னிசை யைக் காணோமே! மாறாக, பொங்கலா? பொங்கல்! என்ற ஒகேட்கிற து. என் செவி பழுதானதால் ஏற்பட்ட விளைவா, அல்லது உன் மொழியிலேயே ஏற்பட்டிருக்கிறதா இந்த மாற்றம்? உன் விழியிலும், வழக்கமான விழா நாள் களிப்பொலி காணோம்; உருவமே தூசு படிந்த மாமணிபோன்று காணப்படுகிறது. புதுப் பொலிவு காட்டிடுவாய், போக்கிடுவாய், கவலையெலாம், முன்பெலாம். இப்போது கவலையை வெகு பாடுபட்டு மறைக்கப் பார்த்திடும் முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறாய் என்று எண்ணிடத் தோன்றுகிறதே. . . . என் நினைப்புத்தான் தவறா, அல்லது உன் நிலைதான் அதுபோலிருக்கிறதா? இயற்கையாக இன்முகம் காட்டிடுவாய், இந்நாள், பொன்னாள் அண்ணா இன்று! புகழ் மணம் கமழ்ந்திடு நிலையில் முன்னோர் வாழ்ந்தனர் என்ற நினைப்பு நெஞ்சுக்குத் தேனாகி நம்மைக் களிப்பிக்கும் திருநாள்! உழைப்பின் பெருமைக்கு ஈடு வேறெதும் இல்லை என்பதனை உணரும் நன்னாள்! — என்றெல்லாம் பேசிக் கொள்வோமே, முன்பு. இன்று? கோலம் இருக்கிறது விழா நாள் என்பதற்கு அடையாளமாக. ஆனால், உள்ளபடி விழாவுக்கான மகிழ்ச்சியும் காணோம், மகிழ்ச்சி பெறவேண்டும் என்ற விழைவும் மிகக் குறைந்து காணப்படுகிறது. ஏன்? காரணம் என்ன? இதழ் விரியா மலர்போல, இசை பயிலாக் குயில்போல, வளைந்தோடா அருவிபோல, சுவை தாராக் கன்னல்போல, துள்ளிடாத மான் கன்றுபோலக் காணப்படுகிறாய் — விழாக்கோலம் காண வருகிறேன் வினாக்கள் விட வைக்கிறாய்! மனைமாட்சி காண வருகிறேன், மதுரமொழி கேட்க வருகிறேன், இல்லத்தரசி தரு செல்லக் குழவியுடன் குலவிப் பாலும் பழச்சாறும் பாகும் பருப்பும் பக்குவமாய்ச் சமைத்த சோறும் பிறவும் உண்டு சொகுசாகத் தான் இருப்பாய், செக்கச் சிவந்திருக்கும் கன்னத்தாள் என் அத்தான்! என்று அழைத்திடுவாள் ஏன் என்று கேட்டபடி இருந்த இடமதனில் இருந்திடாமல் நீ பறந்திடுவாய் விருந்து பெற! இத்தனை கேள்விகளை இவ்வளவு வேகமுடன் தொடுத் திட்டால் என் செய்வேன்! சற்று பொறுமையுடன் சாற்றிடுவீர் உம் எண்ணம்! என்றே அம் மயில்கூற, வெட்கித் தலையதனை வேறுபக்கம் நீ திருப்ப, வேல் விழியாள் விடுத்திடுமோர் கெக்கலியை நான் கேட்டு, வேண்டும்! இது வேண்டும்! இன்னும் அதிகம் வேண்டும்! என்றெல்லாம் வேடிக்கை எழுப்பிடுவேன் — இது வாடிக்கை. ஆனால், இவ்வாண்டு — அழகு நிலாக் கண்டும் அல்லி மலராமல் இருப்பதுண்டோ! — பொங்கற் புதுநாள் வந்துற்றதென்றாலும், மென் காற்றில் அசைந்தாடும் பூங்கொடி அருகிருந்தும் எங்கு உள்ளோம் என்பதுவும் எந்நாள் இந்நாள் என்பதுவும் அறவே மறந்த நிலை கொண்டதுபோல் இருக்கின்றாய், பொங்கற் புதுநாளப்பா! பொன்னாள் நமக்கெல் லாம்! போக்கு பல காட்டிவிடும் புரட்டர்க்கு வாழ்வளிக்கும் புராண நாள் அல்ல, ஞாயிறு போற்றுதும்! எனும் நன்னெறி நடப்பவர் நாம் என்பதனை உலகறியக் கொண்டாடும் உயர் தனிச் சிறப்புள்ள உவகை பெறுநாள்! இந்நாளில் இவ்விதம் இருந்திட வேண்டுமென ஒருவர் மற்றவர்க்கு உரைத்திடவும் தேவையில்லை. அவரவரும் தத்தமது அன்பகத்தில் அகமகிழ்ந்து விழா நடத்திப் புனலாடி அணிந்திட்ட புத்தாடை அழகளிக்கப் பூங்காவிலாடிடும் புள்ளினமாய்த் திகழ்ந்து, பாங்காக மற்றவர்க்கும் பரிந்தளிப்பர் விழாச் சிறப்பை; பண்பு அது. வீடெல்லாம் நாட்டியுள்ளார் விழாக்கோலம், காண்கின்றேன்; என்றாலும் நரம்பிருந்தும் நாதம் எழுப்பாத யாழாக உள்ளதுவே! ஆம், தம்பி! மறுத்திடாதே, அறுத்திடுது உன் நெஞ்சை ஆழமாக ஓர் கவலை; ஒப்புக்கொள்; தவறில்லை; உள்ளத்தில் உள்ளதனை ஒருவர்க்கொருவர் கூறிக்கொளல் நன்று; கவலைதனைப் போக்கிடும் ஓர் மாமருந்தும் அஃதாகும். ஆகவே, அன்பால் எனை வென்ற அருமைத் திருநாட! உற்ற குறை யாதுனக்கு. உரைத்திடுவாய் — அகற்றிட வல்லோன் யான் என்னும் அகந்தை கொண்டல்ல உன்னை நான் கேட்டிடுதல்; கொட்டாமல் உள்ளத்தில் கவலை பல குவித்திடல் நன்றல்ல, குமுறல் கேடன்றோ? எனவேதான், உரையாடி நாம் நமது உள்ளமதில் இடம் கொண்ட கவலை எலாம் போக்க வழி காண்போம், வா, தம்பி!

ஒன்றல்ல என் கவலை, பல உண்டு கூறுதற்கு — கூறத் தயக்கமில்லை, “கூறிடு அண்ணா! நீ! கொட்டும் குளிர் தாங்கிக் கொடியோர் பகை தாங்கி, எல்லையிலே உள்ளாரே உடன் பிறந்தார், உயிர் கொடுத்து உரிமைதனைக் காத்திடும் உயர் குணத்தார்; அவர்க்கு அங்கு இன்னல்! கன்னல் சுவைபெற, இங்கு நாமா? ஓங்கி வளர்ந்துள்ள மாமலையின் அருகிருந்து மாற்றார் நுழையாமல், மானம் அழியாமல் காத்து நிற்கின்றார்; கடும் போர் எதிர்பார்த்து; நாம் இங்கு முக்கனிச் சுவை தேடல் முறை யாமோ, நெறியாமோ! என்னென்ன இடுக்கண்கள் கண்டிடுவர் அவர் அங்கு. நமக்கிங்கு விழாவும் ஒரு கேடா, வீணாட்டம் போடுவதா? மாடுமனை மறந்து மறவர்கள் போயுள்ளார், மாற்றரை எதிர்த்தடிக்க; நாம் இங்கு மகிழ்ந்திருத்தல் சரியாமோ?’’

தம்பி! அதுதானே, உன் கவலை? அந்தக் கவலை உனை வாட்டுகிறது. நான் அறிவேன்; அறிந்ததுடன் அகமகிழ்ந்தேன்; ஆம், தம்பி! மகிழ்ச்சிதான்; பெருமையும் கொண்டிட்டேன். வீடுதனிலேயே விரும்பும் இன்பமெலாம் உண்டு எனக்கொண்டு, நாட்டு நிலை மறப்போர் நாட்டிலுள்ள காட்டினர்காண்! நாடு வாழ்ந்திடவே, வீடுகளில் நாம் உள்ளோம்; நாடு நாடாக, நாடு நமதாக இருப்பதனால்தான் தம்பி! வீடு வீடாக, வீடு விருந்தளிக்க விளங்கி வருகிறது. கேடொன்று நாட்டுக்கு வந்திட்டால், வீடெல்லாம் வீழத்தான்வேண்டி வரும், படகுதனில் ஓட்டை விழின், மூழ்கிடுவர், பிணமாவர்; வீடெல்லாம், நாடு காக்க வீறுகொள்வோர் இருந்து வரும் பாசறைதான், ஐயமென்ன! நாட்டின் நிலை மறப்போர், நாமல்ல, மறவரல்ல. வீட்டிலே இருக்கின்றோம், நாடு மறந்தல்ல! நாட்டின்மீது நாட்டம் காட்டிடும் பகைக் கூட்டத்தை ஓட்டிடச் சென்றிருக்கும் உடன் பிறந்தார் தமைமறந்து, உயிர் பிழைத்துக்கொண்டுவிட்டோம் உயிர் கொடுக்கும் படை அமைத்து என்றெண்ணும் உலுத்தர் அல நாம் யாரும்! களம் சென்றார் நம் தோழர். அவர் கால் பட்ட மண் மணக்கும்; மாண்பறிவோம்; அழைப்பு வரப் பெற்றால், அவரவர்க்கியன்றதனைச் செய்திடுவோம், அட்டியிலை! ஆனால், உருட்டி மிரட்டி வரும் ஊர் அழிப்போர் கண்களுக்கு, நாடு நடுங்கிற்று, வீடெல்லாம் பேச்சு மூச்சில்லை, சிரிப்பில்லை சீர் இல்லை, செய்தொழிலும் நடக்கவில்லை, எல்லோரும் ஏக்கத்தால் தாக்குண்டு, என்ன நேரிடுமோ என பேசிப் பீதி மிகக்கொண்டு பாதி உயிராயினர்காண்! எல்லையில் நாம் வந்து எக்காளமிட்டவுடன், அச்சம் மிகக்கொண்டு அம்மக்கள், கிடக்கின்றார். மங்கையரும் பூச்சூடார், மருட்சி மிக அதிகம். ஆடவர், நீராடார், நிலவாடார், உரையாடார், — ஒவ்வோர் கணமும் இறுதி வரும் உறுதி என எண்ணிச் சாகின்றார்! நாட்டிலே, பாட்டு இல்லை! பாதி வெற்றி இப்போதே நாம் பெற்றோம் — பயம் ஊட்டிச் சாகடித்தோம் அவர் களிப்பை!! என்று பேசிடவும் ஏளனங்கள் வீசிடவுமான ஓர் நிலை இங்கு இருந்திடுதல் ஆகாது; அது தீது. அங்ஙன மாயின், அக்கறை துளியுமற்று அகத்தில் பொறுப்பற்று, ஆவது ஆகட்டும், அனுபவிப்போம் உள்ளமட்டும், எனும் போக்கா, ஏற்புடைத்து? எனக் கேட்பர்; நீ அல்ல, தம்பி! கேட்கப் பிறந்து விட்டோம், கேட்டிடுவோம், வாட்டிடுவோம்! என்றே எண்ணிடும் எதிர்ப்பாளர் உண்டன்றோ; அவர் கேட்பர். பொறுப்பற்ற போக்கல்ல; அகத்தில் அக்கறை கொளல்வேண்டும். ஆனால், முகம் வெளுத்துப் போவானேன்! உறுதியுடன் போரிடுவோம் எதிரியுடன்; என்றாலும் போருக்கு நாமே போய்ப் பொறுப்பேற்றும் நிலைக்கு முன்பே, நடுக்கமுற்றோம் என்று பலர் நையாண்டி செயும் முறையில், நெய்யிழந்த கூந்தலினர்போலாகி, நிற்பதுவா தேவை! அந்நிலைதான், மாற்றார்க்கு இறுமாப்புப் பெற்றளிக்கும். அழிவு வருகிறது என்றஞ்சி அம்மக்கள் இப்போதே சாகின்றார் என்றுரைப்பர்; ஆதலாலே, விழா நடாத்த விருப்பமது குறைந்திருக்கும் நிலையிலேயும், மாற்றார் கண்டு மருளாமல், வெற்றி எமதே என்ற வீரம் நெஞ்சில்கொண்டு, விழாவும் மறவாமல் நடாத்துகிறார் இம்மக்கள். ஓஹோஹோ! நாம் நினைத்தபடி அல்ல! நமை விரட்டும் வலிவெல்லாம் கூட்டி வைத்துள்ளார் இம்மக்கள், அதனால்தான், குலை நடுக்கம் எமக்கில்லை. நிலை தடுமாறவில்லை முன்பு நடந்த விழா இன்றும் முறுவலுடன் இனிதே நடக்கும் எனக் கூறி நமை எச்சரித்துக் காட்டுகின்றார், என்று உணர்ந்திடுவர் எதிர்த்து வரும் மாற்றார்கள். ஆகவேதான் தம்பி! ஆண்டுக்கோர் நாளாக அமைந்த இத்திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்திடுதல், குற்றமல என்று கொண்டோம். நாட்டுக்கு ஆபத்து நேரிட்டுவிடும்போது, நடுக்கம் கூடாது; அது மட்டுமல்ல; மாற்றாரை நாம் ஒன்றும், அண்டம் அழிக்கவல்ல அசகாயச் சூரரெனக் கொள்ளவில்லை, அவர் பெற்ற சில வெற்றி, வெற்றியல! அதுகொண்டு அவர் தமது ஆற்றல் மிகப்பெரிது என்றெண்ணி அகம்பாவம் கொளல் வேண்டாம்; ஆள் துடிக்கக் கொட்டும் தேள், ஆற்றலிலே ஆளைவிடப் பெரிதல்ல, அவன் காலணியால் கூழாகும்! — என்பதறிந்துள்ளோம். எனவே, இறுதி வெற்றி நமதே எனும் நம்பிக்கைகொண்டுள்ளோம் முழு அளவு! அந்நிலையில், விசாரம் கொளப்போமோ? விழாவினைக் கொண்டாடாமல் விட்டுவிடத்தான் போமோ? — என்பதனால்தான் தம்பி! இவ்வாண்டும் வழக்கம்போல், மங்காத புகழ் படைத்த சிங்கம் நிகர் நம் முன்னோர், அளித்த பெருமைமிகு பண்பாட்டு வழி நின்று பொங்கற் புதுநாளைப் போற்றுகிறோம்; அறிவிப்பாய்!!

தம்பி! இந்நாள், வாழும் நாளெல்லாம் வீணாளே, பாழ் நாளே! வையகமே நிலைக்காது! மெய்யகமாம் மேலகம் போய், நிலையும் நினைப்புமற்று நிம்மதியாய் வாழ்ந்திவே இறந்துபட வேண்டும் இன்றே; இப்போதே. — என்று இறைஞ்சுவதற்காக அல்ல. அதற்கான நாட்கள் அநேகம் உள! நமக்கன்று!! திறந்தார் காண் திருக்கதவு, தீர்ந்ததுகாண் உம் வாழ்வு, செத்திடுவீர், வாழ்ந்திடலாம்! — என்று செப்பும் நாளுண்டு — அதற்குச் சிவனே ஏற்றவர் காண் என்றுரைத்து போட்டி நாள் காட்டுவார்போல், வேறோர் நாள் உரைப்பர், அறிவாய் நீ யாகம் செய்திடுவீர், சாலோகம் சென்றிடுவீர்! என்று கூறும் நாளல்ல. பொங்கற் புதுநாள் அஃது அல்ல. நாடு சிறந்திடவும், நம் வாழ்வு சிறந்திடவும், ஆட்சி முறைதன்னில், அரசு அமைப்பதனில், தொழில் அமைப்பில், திட்டத்தில், கல்வித்துறைதன்னில், இன்ன பிறவற்றில் என்னென்ன மாற்றங்கள் வேண்டுமெனக் கூறி, இந் நிலையை யாம் அடைய, எமக்கென்று ஓர் அரசு அமைத்தளிக்க ஒப்பிடுவீர், திராவிட நாடதனைத் திராவிடர் ஆண்டுவர ஏற்ற முறைதன்னில் ஏற்பாடு செய்தளிப்பீர் என்று கேட்டு வருகின்ற கழகத்தார், தேர்ந்தெடுத்துக் கொண்டாடும் தேனின் இனிமை தரும், தெளிவளிக்கும் நாளாகும். ஆகையினால், மாற்றாரை வீழ்த்திடத் தீட்டிடும் திட்டம்தனக்கு தட்டாமல் தயங்காமல், ஆவிதனைக்கூட அளித்து ஆதரவு தர முனைந்து நிற்கின்ற, முன்னேற்றக் கழகத்தார், மூதறிஞர் போற்றிய பொங்கற் புதுநாளை விழாவாக்கி மகிழ்கின்றார்.

நாட்டுக்கு வந்துற்ற ஆபத்தை நீக்கிடும் ஓர் திட்டத்துக்கு ஆக்கம் தரும், மேலும் உற்சாகம், ஊக்கம், உறுதிபெற, விழா, உணர்வளிக்கும், தம்பி! இது விளக்கம் தர மட்டும் தொடுத்திடும் சொல்மாலை அல்ல; உண்மை.

கார்கண்டு களிகொண்டு கழனி செழிக்குமென ஊர் வாழ உழைத்திடும் நல்உழவன் உரைக்கின்றான் — உண்மை — ஆனால், களியாட்டம் காட்டிக் காசுபெற விழையும் கூத்தர், கார் கண்டால் கலங்கிப்போய், கை பிசைந்து நிற்கின்றார். மாமழையும், சிற்சிலர்க்குக் கசப்பளிக்கக் காண்கின்றோம், அஃதேபோல், நம் கழகம் மேற்கொண்ட நற்போக்குதனைக் கண்டு, எல்லோரும் பாராட்டி, ஏற்புடைய செயலென்று வியந்துரைத்தும், சிற்சிலருக்குக் கசப்பு உளது; நாமறிவோம்; அவர்க்கெல்லாம் இது உரைப்போம், “யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றனர் தமிழர், கொற்றம் தனித்தான் அந்நாளில். உலகழிக்க ஒருபோதும் ஒப்பார்கள். உலகு மெச்ச வாழ்ந்தோர் வழிவந்தோர். இன்று முளைத்துள்ள எதிர்ப்புதனை முறியடிக்க மட்டும், புதுப்போக்கு நாம் கொண்டோம் என்று எண்ணல் சரியல்ல; என்றென்றும் எதிரிகளின் கொட்டம் அடக்கிடவும், எதிர்ப்பை முரித்திடவும், ஏற்ற விதமான போக்கும், நோக்கும் கொள்வோம், அதற்கேற்ற முறைபற்றி அறிவாளர் ஆய்வாளர் எடுத்துரைக்கும் கருத்து களைத் துச்சமெனக் கூறும் நச்சு நினைப்பினர் அல்ல நாம், அதுபோன்றே, வந்துள்ள போர் தன்னால், எழுந்துள்ள புது நிலையும், புது நினைப்பும், ஆராய்ந்து பார்த்திடவும், அன்புரை நடத்திடவும் அறநெறியில் நிற்பவர்கள் முனைவார்கள் என எண்ணுகிறோம். அறவோர் வழிகாட்டட்டும் என்று அதனை விடுக்கின்றோம்.

அண்ணா! அதுபோல, நாமிருந்தோம், அருவருக்கத் தக்கபடி சிலர் போக்குக் காட்டுகின்றார் நமக்கெதிராய், காண்கிலையோ என்கின்றாய். காண்கின்றேன்! குன்மமொடு குடல்வாதம், குட்டம் குமுட்டலெனும் பல்வேறு நோய் கொண்டோம் பாரிலுண்டு, பண்டுமுதல்! சொறி சிரங்கு கொண்ட உடல் காண்கின்றோம்; அவர்போல எமக்கும் ஆகவேண்டுமென எண்ணப்போமா! அஃதே போல, உள்ளம் சிலருக்கு, நோய்க்கூடு, என் செய்ய. மாமருந்து அறிந்துரைக்க நேரமில்லை, மாமலை ஏறுதல்போல், வேலையுளது, அதில் ஈடுபட்டிருக்கின்றோம் — நாட்டுக்கு வந்துள்ள ஆபத்தை எதிர்த்து அழித்திடத் திரண்டு நிற்கும் வீரப்போரணியில் நாம் உள்ளோம், கடமை உணர்ச்சி யுடன். இந்நிலையில், கருத்து வேற்றுமை எழத்தக்க பேச்சதனில் கலந்துகொள்வதில்லை என்ற “விரதம்’ பூண்டுள்ளோம். அதனைக் கலைத்திடவும் குலைத்திடவும் முயற்சி சிலர் மேற்கொண்டபோதினிலும், நாம் நமது உறுதி தளராமல், நெறியிற் பிறழாமல், நேர்மையுடன் கடமையினைச் செய்தபடி இருப்போம்.

மஞ்சளும் இஞ்சியும், பிஞ்சாகக் கத்தரியும் அவரையும் காண்கின்றேன் உன் மனையில், மாவும் பலாவும் வாழையுடன் இருந்திடும் ஐயமில்லை. ஈங்கு இதுபோல இருந்திடும் நிலைமை, இன்று ஏங்கித் தவிக்கும் நிலையுள்ளார்க்கெல்லாம் கிட்ட வேண்டும்; நம் ஆட்சி, நல்லாட்சி, புதுமை நிறை ஆட்சி, புரட்சி ஆட்சி என்று பல்வேறு பெயரிட்டுக் கூறுகின்றார்; நோக்கம் இஃதன்றி வேறென்ன இருந்திடும்.

இயற்கை வளம் உண்டு. செய்பொருளை நேர்த்தியுடன் ஆக்கித்தர உழைக்கும் திண்தோளர், வகை காட்டும் நுண்ணறி வினார், மிக உண்டு, எனினும், இங்கு, காய்க்காத மாவாக, கறக்காத பசுவாக, வாழ்வுகொண்டோர் தொகையே மிகுந் திருத்தல் காண்கின்றோம்.

இன்றுள்ள இந்த நிலை பண்டு இங்கு இருந்ததில்லை என்றுணர, இலக்கியமே சான்றளிக்கக் காண்கின்றோம். எழுத்தறிவே பல நாடு, பெற்றிராத காலத்தே, தமிழில் உதித் தெழுந்த மொழிகளால் வெவ்வேறான ஆந்திரமும் கேரளமும் கருநாடமும், அழகு தமிழகமாக இருந்தகாலை, இலக்கியச் சிறப்பினை ஓர் அணியாய்க்கொண்டு திகழ்ந்திருந்ததென்றால் பொருளும் என்ன? வாழ்க்கையிலே வளம் நிரம்பி, மக்கள் மன வளமும் நிரம்பப்பெற்று இருந்தார். ஆங்கு புலவர் குழாம் அரசோச்சி அரசர்க்கெல்லாம் அறவழியைக் காட்டித் துணை நின்றதெனும், உண்மையன்றோ விளங்குகிறது.

எனவே திட்டமிட்டுச் செயலாற்றி, இயற்கை வளத் தினையே தக்கபடி பயன்படுத்திடுவோமேல், செல்வம் வளரும் என்பதும், அதற்கேற்ற கருப்பொருள் உண்டு இங்கு நிரம்ப என்பதும் புலப்படுகிறதன்றோ?

வளரும் செல்வம் ஏதோ ஓரிடம் சென்று முடக்கிக் கொண்டுவிடாமல் இருக்க, துணிவும் தெளிவும், விரைவும் அறிவும்கொண்ட முறையில் பணியாற்றிடும் நல் அரசு முறை வேண்டும்.

இவ்விரண்டும் கிடைக்கப்பெற்று இருந்ததால், முன்பு இங்கு, எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் இருந்தது — அக் காலத்திருந்த அண்டை அயல் நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது.

போர்க்காலமானதால், இன்று ஓரளவு, போர்க்கருவிகள் பற்றிப் பொதுமக்கள் படித்தறிந்துகொள்ளவும், கேட்டுத் தெரிந்துகொள்ளவும் வாய்ப்புப் பெற்றுள்ளனர். ஆனால், அவர் களிலே பெரும்பாலோர்கூட, பிற நாடுகள் “வில் அம்பு’ மட்டுமே கொண்டிருந்த நாட்களிலேயே, இங்கு (அக்காலத்துக்குப்) புதுமுறைப் போர்க்கருவிகள் இருந்தன என்பதனை அறியார்கள். புலவர்பெருமக்கள் அவை குறித்து எடுத்துரைக்கும்போது நம் மக்களிலே மிகப்பலருக்கு, நம்பமுடியவில்லை. காரணம் தெரியுமே, தம்பி! பண்டையப் போர்க்கருவிகள்பற்றிப் புலவர்கள் பேசும்போது, புராணீகர்கள் அதனைவிட விந்தை மிகுந்த “ஆயுதங்கள்’பற்றி, சுவை சொட்டச் சொட்டப் பேசுகிறார்கள் — கேட்கும் மக்கள் அவை முற்றிலும் கற்பனை, புலவர் கூறுவதோ முற்றிலும் உண்மை என்பதை உணர முடிவதில்லை.

படிக்க எளிதான முறையில் புராணக் கதைகள் உள்ளன — எனவே, மக்கள் அவைகளையே அதிகமாகப் படித்துப் படித்து அந்தக் கற்பனைகளிலே மனத்தைப் பறிகொடுத்துவிடுகிறார்கள்.

தமிழர்கள், அந்த நாட்களிலே நால்வகைப் படைகளைக் கொண்டிருந்தது மட்டும் அல்ல,

கடலரண்
காட்டரண்
மலையரண்
மதிலரண்

எனும் பாதுகாப்புகளையும் பெற்றிருந்தனர். போர்முறை களிலேயும் புதுக்கருத்துகள் கொண்டதனால், அற்றை நாளில் தமிழர் பெற்ற வெற்றிகள், இன்றும் எண்ணி வியக்கத்தக்கனவாக உள்ளன. நெடுந்தொலைவு படையுடன் சென்று போரிட்டு வெற்றிபெற்ற வீரக்காதைகள் பலப்பல. போரிலே வெற்றி காண வீரம், அடிப்படை என்பது மறுக்கொணாத உண்மை என்றாலும், போர்க்கருவிகளின் தன்மையும் மிகவும் முக்கிய மானது என்பதை ஆய்ந்தறிந்து உணர்ந்திருந்ததால், பிற நாட்டாரிடம் இல்லாத பல்வேறு வகையான போர்க்கருவிகளைக் கொண்டிருந்தனர்.

வளைவிற் பொறி
தள்ளிவெட்டி
கருவிரலூகம்
களிற்றுப்பொறி
கல்லுமிழ் கவண்
விழுங்கும் பாம்பு
கல்லிடு கூடை
கழுகுப்பொறி
இடங்கணி
புலிப்பொறி
தூண்டில்
குடப்பாம்பு
ஆண்டலையடுப்பு
சகடப்பொறி
கவை
தகர்ப்பொறி
கழு
அரிநூற்பொறி
புதை
குருவித்தலை
ஐயவித்துலாம்
பிண்டிபாலம்
கைப்பெயர் ஊசி
தோமரம்
எரிசிரல்
நாராசம்
பன்றி
சுழல்படை
பனை
சிறுசவளம்
எழு
பெருஞ்சவளம்
மழு
தாமணி
சீப்பு
முசுண்டி
கணையம்
முசலம்
சதக்களி

தம்பி! இத்தனை விதமான, புதுமுறைப் போர்க்கருவிகள் இருந்தன, இத்துடன், தமிழரிடம், தனியாக வீரர் தமதாற்றலை விளக்கப் போர்வாளும் கேடயமும் ஈட்டியும் உண்டு. தமிழரை எதிர்த்த மாற்றார்களிடமும் பிற நாட்டவரிடமும் வேல், வில், அம்பு, சிறுவாள், கொடுவாள், அரிவாள், ஈர்வாள், உடைவாள், கைவாள், கோடரி, ஈட்டி, குறுந்தடி என்பனமட்டுமே இருந்த நாட்களில்.

இன்று விஞ்ஞான அறிவுப் பெருக்கத்தின் காரணமாகக் கிடைக்கப்பெற்றுள்ள போர்க்கருவிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழர் பெற்றிருந்தவை, மிக மிகச் சாதாரணம்; இப்போதைக்குப் பயன் தருவன அல்ல. அந்தப் போர்க்கருவி களை ஏந்திக்கொண்டு, களம் சென்றால், இன்று கைகொட்டிச் சிரிப்பர், மறுக்கவில்லை. ஆனால், இவை என்று இருந்தன — இவை தமிழரிடம் இருந்த நாட்களில் மற்ற நாட்டவரிடம் இருந்தன யாவை என்பதனை ஒப்பிடும்போதுதான் சிறப்பு விளங்கும்.

களமே சென்று பார்ப்போம், வா, தம்பி!

அதோ பார்த்தனையா; பகைக் கூட்டத்தார் உடைவாளை உருவிக்கொண்டு பாய்ந்து வருகின்றனர் தமிழரைத் தாக்க! தமிழர்களும் உடைவாளை உருவிக்கொண்டு போரிடப் போகிறார்கள் என்று எண்ணுகிறாய்; இரு பிரிவினிடமும் உடைவாள் இருப்பினும், வாள் வீச்சு முறையின் நேர்த்தி யாலேயும், களத்திலே காட்டிடும் துணிவாலும், போரிடும்போது எழும் துரிதத் தன்மையாலும், தமிழரே வெற்றிபெறப் போகின்றனர் என்று நினைக்கிறாய் — தவறல்ல! இயலும். ஆனால் இதோ கவனி. . . பாய்ந்துவருகிற பகைப்படைமீது, மழை பொழிவதுபோல அம்புகள் பாய்கின்றன — அலறித்துடிப்பதைப் பார்! இவ்வளவு அம்புகளை விடவேண்டுமானால் ஒரு பெரும் படை களத்திலே எதிர்ப்புறம் நிற்கவேண்டுமே, தெரிகிறதா? இல்லை அங்ஙனமெனின் எப்படி இது முடிகிறது?

தம்பி! புராண கால நாடாக இருப்பின், இவ்வளவு அம்பு களும், மகாராஜா செய்த “மகா யாக பலனாக, பிரசன்னமான பரமேஸ்வரன் தந்த வரத்தின் பயனாக, அந்தரத்திலிருந்து அஸ்திரங்கள் சரமாரியாகக் கிளம்பி சத்ருவைத் துவம்சம் செய்கின்றன’ என்று கூறுவர்; நம்புவர்.

ஆனால், இது தமிழகக் களம்; தமிழ்வீரர்கள் போரிடு கின்றனர்; அவர்கள் கடவுளர்க்கு இத்தனை தொல்லை தருவதில்லை!

உற்றுக் கவனித்தால் தெரியும், தம்பி! அவ்வளவு அம்பு களும், தமிழர்களின் கோட்டையிலிருந்து கிளம்புகின்றன. கோட்டை மதிற்சுவரின்மீது நின்றுகொண்டல்லவா, இதனைச் செய்யமுடியும்? ஆமாம், என்கிறாய்; ஆனால், கோட்டை மதிற் சுவரிலே ஒருவரும் இல்லையே!

விந்தைதான் என்கிறாய்! விந்தை விளக்கப்படுகிறது பாரேன்.

நிறைய அம்புகளைக் கோத்துவிட்டால், தானே வளைந்து மிக வேகமாக எதிரிகள்மீது பாயும் முறை கொண்டது, வளைவிற் பொறி! அந்தப் பொறிதான் இந்தப் போடு போடுகிறது!

வளைவிற்பொறி ஒன்று செய்து முடிக்கும் செயலைச் செய்திடப் பலப்பல வீரர்கள் வேண்டும்.

இந்தப் போர்க்கருவி இருப்பதனால், சிறிய அளவுள்ள படை, கோட்டைக்குள் இருந்துகொண்டே, தாக்க வரும் பகைப் படையைச் சிதைத்திட முடிகிறது.

துணிச்சல் மிக்க அப்பகைவர்களிலே சிலர், அம்புக்குத் தப்பிவிடுவதுடன், கோட்டை நோக்கிப் பாய்கிறார்கள்; மதில் மீது ஏறுகிறார்கள் — அடடா! உள்ளே குதித்துவிட்டால். . . . . .!!

பார்த்தனையா, தம்பி! எத்தனை பெரிய கருங்கற்கள் வீசப் படுகின்றன, பகைவர்மீது! மதிலிலே ஏறினவர்களின் கதியைப் பார்த்தனையா? உருண்டை வடிவமான கருங்கற்கள் மேலே விழுந்ததால் மண்டை நசுக்குண்டு, கீழே விழுகிறார்கள் — அசையக் காணோம் — எங்ஙனம் அசைய முடியும்! பிணமாயினர்!!

அது சரி, இத்தனை பெரிய உருண்டையான கருங்கற்களைத் தூக்கி எறிய முடியாதே, ஆட்களால்? என்று கேட்கின்றாய், ஆமாம், முடியாது! ஆனால், ஆட்களா தூக்கி வீசினார்கள் அந்தக் கற்களை!! இல்லை, தம்பி, இல்லை. அவ்வளவும் கல்லுமிழ் கவண் — கல்லிடுகூடை — இடங்கணி — இந்தப் பொறிகள் செய்த வேலையன்றோ!! பகைவர் பீதி அடையாம லிருக்க முடியுமா?

அகழியிலேயே குதித்துவிட்டான் — அசகாய சூரன்போல் இருக்கிறது! ஆனால், அதோ! ஏன் அலறுகிறான்? மேலே போகிறான்! மேலே தூக்கிச் செல்லப்படுகிறான். தூண்டில் போடப்பட்டிருக்கிறது! தூண்டில் தண்ணீரிலேயே இருந்திருக் கிறது, அவன் அறிவானா அதனை? அகப்பட்டுக்கொண்டான், மீன் தூண்டிலிற் சிக்குவதுபோல்!

தம்பி! களத்திலே இருக்கும் படைமீது, வேகமாகப் பறந்துவரும் வெடி விமானங்கள் தாக்கி, படையை நாசமாக்கும் என்று இன்று படிக்கிறோமல்லவா? படையுடன் படை போரிட்டால், வீரம் காட்டலாம். விண்ணேறி வரும் விமானம், மின்னல் தாக்குதல் நடத்தும்போது, திருப்பித் தாக்க முடியுமா? துரத்திக்கொண்டு போய் அடித்து நொறுக்க முடியுமா? முடியாது.

தம்பி! அதோ பார், மேலே சேவல்கள்! சேவல்களா இத்தனை உயரமாகப் பறக்கின்றன என்று கேட்கிறாய்; இந்தச் சேவல்கள் பறந்திட இயலும், உயிர்ச்சேவல்கள் அல்லவே! பகைவரின் உயிர் குடிக்கும் சேவல் பொறி! எப்படி உயிர் குடிக் கிறது என்பதனைக் கவனித்துப் பார்! மேலே பறந்து, வேகமாகக் கீழே பாய்கிறது, பகைவன் தலைமீது உட்காருகிறது, மீண்டும் கிளம்புகிறது, பகைவனுடைய தலையைக் காணோம்! ஆமாம்! தம்பி! சேவல், அவனுடைய தலையை வெட்டி வீழ்த்திவிட்டது.

இந்த வேலை செய்யவல்ல பொறி, சேவல் வடிவத்தில்; அதன் பெயர்தான் ஆண்டலையடுப்பு.

ஓஹோ! எரிசிரல் தன் வேலையைச் செய்கிறது; அதனால் தான், பகைப்படை சிதறி ஓடுகிறது, அலறியபடி. புரியவில்லையா, தம்பி! பதறி ஓடும் பகைவர்களின் கண்களைப் பறவைகள் கொத்திக்கொண்டு போய்விட்டன. தெரிகிறதா, மீன்கொத்திப் பறவை! பொறி, உயிர்ப்பறவை அல்ல! அந்தப் பொறியின் வேலை இதுதான். மேலே கிளம்பும், பகைவன் எதிரே பாய்ந்து வரும். கண்களைக் கொத்தும்; உடனே மீண்டும் மேலே போய்விடும், எவர் கரத்துக்கும் சிக்காமல் மீன்கொத்திப் பறவை வடிவத்தில் உள்ள இந்தப் பொறியின் பெயர்தான் எரிசிரல்.

அதோ மதிலின்மீது அமைக்கப்பட்டுள்ளது குரங்கு போன்ற பொறி; பெயர் கருவிரலூகம். வேலை? நெருங்கி வருபவர்களைப் பிடித்துக் கட்டிக்கொள்ளும் — உயிர்போன பிறகுதான் பிடி தளரும் — பிணம் கீழே விழும்.

இதே விதமான அழிப்பு வேலைக்காகத்தான், பன்றி நிற்கிறது! கிட்டே வருபவர்களைக் கிழித்தெறிந்துபோடும் பொறி அது.

வையகம் வாழ்ந்திட வழங்குவோம் எதனையும் என்று கூறிடுவர், நேச நோக்குக்கொண்டோர்க்கு; பகை எனிலோ, உரிமை பறித்திட எவரேனும் கிளம்பிடினோ, இழிமொழி புகன்றிட எவரேனும் துணிகுவரேல், முழக்கம் எழுப்புவர்:

ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்!
நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்!
வாளுடை முனையிலும் வயந்திகழா சூ-னும்
ஆளுடைக் கால்கள் அடியினும்
தேர்களின் உருளையி னிடையினும்
மாற்றவர் தலைகள் உருளையிற் கண்டு
நெஞ்சு உவப்புற வம்மின்!

என்று அழைப்பு விடுப்பர்; அடலேறுகள் அணி திரண்டெழுவர், போரிட, வாகை சூடிட!

போதும், தம்பி! களக்காட்சி! மேலும் காண விரும்பினால் பதிற்றுப்பத்து, தகடூர் யாத்திரை இவற்றைப் படித்திடவேண்டும் பன்மொழிப்புலவர் அப்பாதுரையார் தந்துள்ள “தென்னாட்டுப் போர்க்களங்கள்’’ எனும் ஏடு, படித்திடுவோர், அடலேறெனத் தமிழர் வாழ்ந்து பெற்ற வெற்றிகள்பற்றிய வீரக் காதையை அறிவர்.

“காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி,
வேங்கை நாடும், கங்கை பாடியும்
தடிகை பாடியும், நுளம்ப பாடியும்
குடமலை நாடும், கொல்லமும், க-ங்கமும்,
முரண்தொழில் சிங்களர் ஈழ மண்டலமும்,
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் கொண்டு’’

வெற்றிப் பெருவீரனாக, இராஜேந்திர சோழன் விளங்கினான் என்பது வரலாறு.

மன்னர்கள், மாமன்னர்கள் காலத்துக் கருத்துக்கள், குடியாட்சிக் காலத்துக்கு ஒவ்வுமோ? ஒவ்வா என்பதற்கு விளக்கமும் வேண்டுமோ! எனினும், பன்னிப்பன்னி அந்த நாட் சிறப்பினை எடுத்துக் கூறிடல், சுவைதரும் எனினும் பயனும் உண்டோ என்று கேட்போர் சிலர் உளர். அந்நாள் சிறப்பினை இந்நாள் கூறிடல், அன்றிருந்ததனைத்தும் இன்றும் இருந்திடல் வேண்டும் என்பதற்கன்று; அஃது முறையுமாகாது. எனினும், அந்தச் சிறப்புதனை எடுத்துரைப்பதனால் நாம் பெற்றிருந்த ஏற்றமிகு நல்வாழ்வும், அஃது அமையத் துணைநின்ற நல் அரசும், அந்த அரசு கொண்ட அன்புமுறை அறநெறியும் என்றும், எந்நாடும், காலத்துக்கேற்ற வடிவம்தனைப் பெற்று, ஞாலம் உள்ளளவும் இருந்திடலாம் எனும் உண்மை, ஊரறியச் செய்வதற்கே; வீண் பேச்சுக்காக அல்ல.

பொங்கற் புதுநாளில் விழா நடாத்தி விருந்துண்டு, களைத்துத் துயில் கொண்டால் போதாதோ, என்பாயோ; என் தம்பி! எவரேனும் அதுபோலக் கூறிவரின் கூறிடு நீ, பாற் பொங்கல், பாகுப் பொங்கல், பருப்புள்ள சுவைப் பொங்கல் மட்டுமல்ல நம் நோக்கம், களிப்புப் பொங்கலிது, கருத்துப் பொங்கலிது என்பதனை. இதனால்தானே, எந்த விழாவினுக்கும் நாம் காட்டாப் பெரு விழைவு இந்த விழாவினுக்கு நாம் காட்டி மகிழ்கின்றோம்.

“வண்ணமலர் தாமரைக்கு நிகராய், வேறோர்
வாசமலர் நாம்வாழும் நாட்டில் இல்லை.
கண்ணைப்போல் சிறப்பான உறுப்பே இல்லை
கடல்போலும் ஆழமுள்ள பள்ளம் இல்லை.
வண்ணங்கள்பலபாடி, வார்த்தை யாடி
வரிவண்டு மொய்ப்பதுபோல் ஒன்று கூடிக்
கொண்டாடும் விழாக்களிலே தைமா தத்தில்
குதிக்கின்ற பொங்கலைப்போல் பொன்னாளில்லை.’’

என்று இனிய கவி அளிக்கும் சுரதா தீட்டியுள்ளார்.

பொன்னாளே பொங்கற் புதுநாள், ஐயமில்லை!! எத்துணை இருளையும் ஓட்டிடவல்லோன், எழு ஞாயிறு எனும் செம்மல், வாழ்வு வழங்கிடும் பான்மைக்கு வணக்கமும், உண்டி கொடுத்து உயிர் கொடுத்துதவும் உழவர்தம் செயலுக்கு நன்றியும், கூறிட இந்நாள், திருநாளாகும், பொன்னாள் இஃது என்றதுடன், கூறிய இஃதும், கேளாய்:

“சோலைதனில் உதிர்கின்ற பூவைப் போன்று
சோர்ந்தபடி உறங்கிக்கொண் டிருந்த நம்மைக்
காலையிலே எழுப்பிவிட்ட சேவ லுக்கும்;
கனிகொடுத்த மரங்களுக்கும், பசுக்க ளுக்கும்
நீலமணிக் கடலுக்கும், கதிரோ னுக்கும்
நெல்லுக்கும், கரும்புக்கும், நிலங்க ளுக்கும்
மூலபலம் குறையாமல் இருக்கும் கொத்து
முத்தமிழால் நம்வாழ்த்தை வணங்கு வோமே!’’

இத்துணைச் சிறப்புடன் இலங்கிடும் திருநாளில், நம்முடன் பிறந்தவர். மறவர், நாம் வாழ, மனையினில் தங்கி நல் மகிழ்ச்சி பெறும் நிலையின்றி, களத்திலே நிற்கின்றார், கண்போன்ற உரிமைக்கு “இமை’யானார்! அது கண்டு, நாமும் நாடாளும் பொறுப்பேற்றோர் பொறுப்பற்றோர் போலாகி நாடு கெடும் செயலதனில் ஈடுபடாது தடுக்கும் நோக்குடனே எதிர்ப்பு, மறுப்பு இவற்றுடனே, கிளர்ச்சிகளையும் நடாத்தி வந்தோம், ஆட்சி பயனளிக்க. அவை யாவும் இதுபோது மக்களிடை கசப்புணர்ச்சி ஊட்டிவிடும், கட்டுப்பாட்டுடனே காரியமாற்றுகின்ற நிலை குலையும். அதுகண்டு, மாற்றார் மனமகிழ்வர், நாட்டுக்குக் கேடு செய்வர் என்று உள்ளூர நாம் உணர்ந்து, ஒதுக்கிவிட்டோம் அவைதம்மை. நெருக்கமானோம் ஆளும் பொறுப்பேற்றார் தம்மோடு, கூடிப் பணிபுரிந்து வருகின்றோம்.

கொற்றம் ஆள்பவர்கள் இன்னொருவர், பிறகொருவர் என்று நிலை பிறக்கும் நெறியதுதான், குடியாட்சி. கொற்றம், நடாத்துபவர், ஒவ்வோர் கொடிக்குடையோர், நாடறியும். எந்தக் கொடியுடையோர் கொற்றம் நடத்தி வர, உரிமை பெற்றனரோ, அவர் ஆணை வழி நடக்கும் அரசு — எனினும், அக் கொடி யுடையார் கொடியோரானால், மக்கள் தமக்காக வாதாட, மமதை கொண்டோர் மண் கவ்வ, கொற்றம் மக்கள் உயிர் குடிக்கும் கொடுமையாகிவிடாமல், தடுத்து நிறுத்திடவே, மற்றக் கட்சியினர் விழிப்புடனே இருந்திடுவர். ஒரு கொடிக்கு உடையார்கள் உணர்வதுண்டு, தாழ்வதுண்டு; அவரிடம் போய் “கொற்றம்’ இருந்திடினும், அதன் வலிவு மிகப் பெரிது. கொற்றம்தனை விடவே நாடு மிகப் பெரிது.

நாட்டுக்கே ஆபத்து என்ற நிலை வெடித்ததுமே, கொற்றத்தின் எதிர்காலம் என்னவெனப் பேசுதற்கோ, எவர் பெறுவர் அடுத்த முறை, கொற்றம் நடாத்திடும் ஓர் உரிமை எனப் பேசி வருவதற்கோ நேரமில்லை, நேர்மையல்ல அப்போக்கு. எனவே, நாமும், நாடு நனிபெரிது நம் கட்சிக்கான நடவடிக்கை நிறுத்தியேனும், நாடு காத்திடும் நல்ல தொண்டருக்குத் துணையாவோம் என்று துடித்தெழுந்தோம், துணை நின்றோம்.

துணையாக உள்ளவர்கள் தோழர்களே ஆவதற்கு, இணையில்லாப் பெருநோக்கம் கொளல்வேண்டும் ஆள்வோர்கள்; கொண்டாரில்லை; குறை இது என்றுரைத்து குறுக்குச் சால் ஓட்டிட நாம் முனையமாட்டோம், நமது பணி, நாடு காக்க, நாடாள்வோர் போக்கினை மாற்றிடுவதன்று; இன்று.

விழாவினைக் கொண்டாட ஏற்ற நிலைதானே என்று விழிதனிலே நீர் தேக்கி நின்ற தம்பி! விளக்கம் இது; உணர்ந் திடுவாய்; உதிர்த்திடுவாய் புன்னகையை, என்றும்போல.

சிரிப்பு என்பதன்மீது நினைப்பு சென்றதுமே, “இடுக்கண் வருங்கால் நகுக!’ என்று ஈடற்ற பெரும்புலவர், நானிலத்துள் ளார்க்கே வழிகாட்ட வல்லாராம் வள்ளுவப் பெருந்தகையார் செப்பியது சிந்தையினில் சேர்த்திடுது.

இயற்கையே சிரித்தபடி இருக்கின்ற திருநாடு, நம் நாடு; நெருப்புக் கக்கும் எரிமலைகள் இல்லை இங்கு, இன்னல் கண்டு நடுக்கமில்லை, இல்லை இங்கு நிலநடுக்கம்; எல்லாம் சீராய் அமைந்துளது; புன்னகையைப் பூண்ட தளிர்மேனியாள்போல் பூமியது இருக்கக் காண்பாய். எங்கும் சிரிப்பொலிதான்! எங்கும் மகிழ்ச்சி மயம்! பாளையே தென்னை காட்டும் பாங்கான சிரிப்புமாகும்! பற்பல சிரிப்புப் பற்றிப் படித்த ஓர் பாட்டை (மதி ஒளி என்பாருடையது) உன் பார்வைக்கு வைக்கும் எண்ணம் அடக்கிட இயலவில்லை; ஆகவே அதைக் கேளாய்:

“மொட்டுமுதல் இதழ்விரித்து
முல்லை சிரித்ததாம்! — அதில்
மொண்டுமொண்டு தேன்குடித்து
வண்டு சிரித்ததாம்!
சொட்டுச்சொட்டு மழைத்துளியைச்
சொந்தம் என்றதாம் — அந்தச்
சொந்தம்கொண்ட இந்தமண்ணும்
துவண்டு நின்றதாம்!

*

நீல வானில் வந்தநிலவு
நீந்திச் சிரித்ததாம்! — அதை
நின்றுபார்த்து விண்ணின் மீனும்
நெகிழ்ந்து சிரித்ததாம்!
பாலை அள்ளித் தெளித்ததனால்
பாரும் சிரித்ததாம்! — இதைப்
பார்த்து மகிழ்ந்து சோற்றை யுண்டு
பிள்ளை சிரித்ததாம்.

வளமிக்க நாடு, திறமிக்க உழைப்பு, பொறுப்புணர்ந்த ஆட்சி, அறமறிந்த சான்றோர், அஞ்சா நெஞ்சுடைப் புலவோர், விளைபொருளின் மிகுதி, செய்பொருளின் நேர்த்தி, வாணிபத் திறம் யாவும் மிகுந்திருந்த நாட்கள் — புன்னகை பூத்தபடிதானே இருந்திருக்கும்.

கவிஞர் முடியரசன் — அன்று இங்கு இருந்துவந்த வாணிப வளம்பற்றி அழகுபடக் கூறியுள்ளார்:

“முத்திருக்கும் தண்கடலில் முத்தெ டுத்து
முகில்முட்டும் மலையகத்துச் சந்த னத்தின்
எத்திசையும் மணக்கின்ற மரமெ டுத்து
மிளகெடுத்து மயில்தோகை இறகெ டுத்துப்
பத்திபத்தி யாய்க்கலங்கள் விற்கச் சென்ற’’

அருமையினைக் காட்டியுள்ளார். அத்தகைய எழில் உள்ள தமிழகம் தமிழ்மொழி அழிந்துபடாதிருந்தால் மட்டுமே காண இயலும்.

தமிழ்மொழி பாதுகாப்புப் பிரச்சினையில் காட்டிய அளவு அக்கறை வேறெந்தப் பிரச்சினையிலும் தொடர்ந்தும், வேகத் துடனும், உள்ளக் கொதிப்போடும் கட்சிக் கட்டுகளைக் கடந்திடும் போக்குடனும், தமிழர்கள் காட்டியதில்லை. எத்தனையோ பிரச்சினைகள் சிற்சில கட்சிகட்கே உரித்தானவை என்ற நிலை காண்கிறோம். தமிழ்மொழிபற்றிய பிரச்சினை ஒன்றே, நாட்டுப் பிரச்சினை எனும் மேலிடம் பெற முடிந்தது. ஏனோவெனில், தமிழ்மொழி காக்கப்படுவதனைப் பொறுத்தே, தமிழரில் பல்வேறு கட்சியினரும் தத்தமது கொள்கை வெற்றி பெற, இன்றில்லாவிட்டால் ஓர்நாள் வாய்ப்புக் கிடைக்கமுடியும் என்பதிலே உள்ள அழுத்தமான நம்பிக்கையேயாகும்.

ஆட்சியாளர்கட்கு அறிவு கொளுத்த அவ்வப்போது கிளர்ச்சிகள் நடாத்துகின்றன, பல்வேறு அரசியல் கட்சிகள்; ஆனால், ஒரு கட்சி துவக்கிடும் கிளர்ச்சியில் மற்றக் கட்சிகள் பெரிதம் பங்கேற்பதில்லை; பகை காட்டாமலும் இருப்பதில்லை. ஆனால், தமிழ்மொழி குறித்த பிரச்சினையிலே மட்டும் கட்சி களைக் கடந்ததோர் ஒன்றுபட்ட உணர்ச்சி மேலெழுந்திடக் காண்கிறோம். காரணம் இஃதே! தமிழர்க்குத் தமிழ்மொழி, அவர் விரும்பும் ஓர் தனிச்சிறப்புள்ள வாழ்க்கை முறைக்கு வழிகாட்டி நிற்கிறது — எண்ணத்தை வெளியிடும் வெறும் கருவியாக மட்டும் இல்லை.

கிளர்ச்சிகள் பலவும், நெஞ்சத்து அடிவாரத்தில் ஆழப் பதிந்துள்ள அடிப்படைக் கொள்கைக்கு உடனடியான வெற்றியைத் தந்திடுவதில்லை — பெரும்பாலும், ஆனால், அவை யாவும் நாட்டு மக்களை, கிளர்ச்சி நடத்துவோர் காட்டிடும் அடிப்படைக் கொள்கையிடம் ஈர்த்திடும் வெற்றியை — மறைமுக வெற்றியைப் பெற்றளிக்கிறது.

மேய்ச்சல் வரி எதிர்ப்புக் கிளர்ச்சி, உப்பு வரி ஒழிப்புக் கிளர்ச்சி, மேனாட்டுப் பொருள் ஒழிப்புக் கிளர்ச்சி, மது ஒழிப்புக் கிளர்ச்சி, வரிகொடா இயக்கம், சட்ட மறுப்புக் கிளர்ச்சி, ஒத்துழையாமைக் கிளர்ச்சி, ஆங்கிப் படிப்பு அகற்றும் கிளர்ச்சி என்பனபோன்ற கிளர்ச்சிகள், நடத்தப்பட்டவர்களால், நடத்தப் பட்ட நேரத்தில், உடனடி வெற்றி பெறும் என்று வாக்களிக்கப் பட்டதென்றாலும், கிடைத்தது உடனடி வெற்றி அல்ல; இத்தனை கிளர்ச்சிகளும், கிளர்ச்சி நடத்தியோர் கொண்டிருந்த அடிப்படை நோக்கத்துக்கு — நாட்டு விடுதலைக்கு — வழி கோலின — மக்களை அதற்குத் தக்க பக்குவ நிலை பெறச் செய்தன.

ஆனால், எந்த ஒரு கிளர்ச்சிக்கான காரணத்துக்காகவும், தொடர்ந்து, விடாமூச்சாக, இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முறையில் கிளர்ச்சிகளை நடத்தினார் இல்லை. எடுத்துக்காட்டுக்குக் கூறுவதென்றால், அந்நியத் துணி எரிப்புக் கிளர்ச்சி அந்நியத் துணி அறவே தடுக்கப்பட்டுவிடும் வரையில், தொடர்ந்து நடந்துவரவில்லை. ஒரு குறிப்பிட்ட கட்டம் சென்ற பின்னர், தாம் விரும்பும் அடிப்படைக் கொள்கை வெற்றிக்கான ஆக்கமும் ஊக்கமும் கிடைத்திருக்கின்றன என்று தெரிந்த பிறகு, கிளர்ச்சியை நிறுத்திக்கொண்டனர்.

பிரச்சினை வடிவிலேயும் கிளர்ச்சி வடிவிலேயும் தமிழ்ப் பெருங்குடி மக்களிடம் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாகவும், விறுவிறுப்புடன் கடந்த பதினைந்து ஆண்டுகளாகவும், இருந்து வருவது, தமிழ்மொழிபற்றிய பிரச்சினையேயாகும்.

இதிலே, வேறு எதிலும் கிடைத்திடாத அளவிலும் முறையிலும் நேரடியான பலன்கள் கிடைத்துள்ளன.

இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கிய கொடுமை யையும் கண்டோம்; இது மடமை என்று கூறித் தமிழர் எதிர்த்து நின்று கிளர்ச்சி நடத்தியதும் கண்டோம். இன்று? கொட்டு முழக்குடனும், கொடி கோலமுடனும், எனைத் தடுக்க எவருக்கும் ஆற்றல் இல்லை, உரிமை இல்லை! என்ற ஆர்ப்பரிப்புடன் படை எடுத்து வந்த இந்திமொழி, அடங்கி ஒடுங்கி ஒருபுறம் ஒதுங்கி நின்று, வெள்ளாட்டியாகி நான் வேலை பல செய்யவல்லேன்! என்று நயந்து பேசி, நுழைவிடம்பெறக் காண்கிறோம்.

அரசியல் சட்டத்தில் கண்டுள்ளபடி ஈராண்டு முடிந்ததும் இந்தியே எல்லாம், இந்தியே எங்கும், ஆங்கிலம் ஆட்சி மொழி யாக நீடித்து நிற்க இயலாது.

இதுகண்டு வெகுண்டு, மனம் குமுறி, கட்சிகளை, முன்பின் தொடர்புகளை, நிலைகளை, நினைப்புகளை எல்லாம் கடந்து, தமிழகத் தலைவரெல்லாம் ஒன்றுகூடி, ஒரு பெரும் முயற்சி செய்ததாலே, அரசியல் சட்டத்தில் தக்கதோர் திருத்தம் செய்து, இந்தி ஆதிக்கம் தடுத்திட, வழி கிடைத்துள்ளது.

பகைவன் உள்ளே நுழைந்ததும் கொள்கை வேறுபாடு மறந்து ஒன்று திரண்டு வாரீர், பகை முடிப்போம்! பழி துடைப்போம்! என்று பண்டித ஜவஹர்லால் நேரு, கனிவுரை யாற்றினார் — அத்துடன், ஓர் அறிக்கை மூலம்,

இந்தி திணிக்கப்பட மாட்டாது.

ஆங்கிலம் நீடித்து வரும்.

இந்தியினைத் தாய்மொழியாகக் கொண்டிராத மக்கள், எவ்வளவு காலத்துக்கு ஆங்கில மொழி இருத்தல்வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவ்வளவு காலம் ஆங்கில மொழி இருக்கும் என உறுதி அளிக்கிறேன்

என்று தெளிவளித்தார், தேன் பெய்தார்.

இதுபோல, வேறெந்தக் கிளர்ச்சிக்கும் நேரடி வெற்றி உருப்படியாகக் கிடைத்ததில்லை.

எனினும், இதுவும்கூட நிலைத்து நிற்கும் வெற்றி எனக் கொள்வதற்கில்லை, மாயமானாகிப் போகலாம். எதற்கும் விழிப்புணர்ச்சியுடன் இருத்தல்வேண்டும் என்ற நிலை தமிழரிடம் காண்கிறோம்.

இன்று இந்திமொழி ஆதிக்கம் செயக்கண்டு, திரண் டெழுந்து நின்றுள்ள தமிழர், பின்னர் ஓர் நாள் அயர்ந்துவிடக் கூடும், அணி கலையக்கூடும், அதுபோது, இது தக்க சமயம் என, ஆதிக்கம்தனைச் செலுத்த இந்தி அம்பாரி மீதமர்ந்து வரக்கூடும். இன்னும் ஓர் ஈராண்டில் இந்த நிலை வந்திடாதபடி தடுக்க, அரசியல் சட்டத்தைத் திருத்திடவும் ஒருப்படுகின்றனர், தமிழரிடை இதுபற்றி மலர்ந்து காணப்படும், பெருமை மிகு எழுச்சி காரணமாக, சில ஆண்டுகள் கழித்து, தமிழர் சிந்தை திரிந்து, செயல் மறந்துபோவரேல், அரசியல் சட்டத்திலே புகுத்தப்படும் திருத்தம் நீக்கப்பட்டுவிடக்கூடும்.

அரசியல் சட்டம், திருத்தப்படக்கூடியது.

எனவே, எதையும் நீக்கவும் எதனையும் நுழைக்கவும், குறைக்கவும் வாய்ப்பு உளது.

எனவே, என்றென்றும், எந்நிலையிலும், தமிழ்மொழிக்கு ஊறு நேரிடா வழி காணவேண்டும், எனும் எண்ணம் எழுகிறது. தமிழ் மொழிக்குக் கேடு செய்திடும் நிலையில் ஓரிடம் இருத்தல் எற்றுக்கு என்ற கேள்வி எழுகிறது! அரசியலில் மிகப் பெரிய அடிப்படைப் பிரச்சினை பிறந்துவிடுகிறது.

இந்த விந்தைமிகு உண்மையினை உணர்ந்தனையா, தம்பி! அரசியல் கட்சிகள் தமக்கு ஆளும் வாய்ப்பு கிடைத்திடக் கிளர்ச்சிகள் நடத்துகின்றன; அறிகின்றோம்; ஆனால், தமிழ் மொழி பாதுகாப்புக்கான உணர்ச்சியும், அந்த உணர்ச்சியின் காரணமாக எழும் கிளர்ச்சியும், ஒரு புதிய அரசியல் கருத்தையும், அந்தக் கருத்து வெற்றி பெறுதற்காக ஓர் அமைப்பையும் பிறப்பிக்கச் செய்திருக்கிறது!

தம்பி! சந்தன மரம், பயிரிட்டு வளர்க்கப்படுவதல்ல. காட்டிடைக் கவினுற விளங்கிடும் மணம்தரு சந்தன மரங்களி லிருந்து உதிர்ந்திடும் விதைகளைப் பறவைகள் ஏந்திச் சென்று தூவிடும் இடங்கள்தன்னில் செடிகள் முளைத்து, செழுமையாய் வளர்ந்து, புலவோர் பாடி மகிழ்ந்திடும் தென்றலெனும் பெண்ணாள் பெற்றிட மணமளிக்கும் சந்தன மரமாகிறது!

அஃதேபோன்றே, ஏற்புடையதாக மட்டுமல்ல, உயிர்ப்புச் சக்தியுள்ளதாகவும் ஓர் கருத்து இருக்குமானால், அக்கருத்துக் காக ஆயிரம் அமைப்புகள் ஏற்பட்டுவிடும், அழிக்கப்பட்டது போக மற்றது கருத்தைத் தாங்கி நிற்கும், எல்லாம் அழிந்து போயினும், எங்கோ ஓரிடத்தில், ஏதோ ஓர் பறவை, எப்போதோ தூவிய விதை முளைவிட்டுச் செடியாகி நிற்கும்.

தமிழ்மொழி, வித்து முளைத்திடும் செடி கொடியும், மலர்ந்திடும் பூக்களும், குலுங்கிடும் கனிகளும், பலப்பல.

எனவேதான் தம்பி! வித்து அழியாது பாதுகாக்கும் கடமையினைத் தமிழர் என்றென்றும் செய்திட முனைந்தபடி உள்ளனர்.

சந்தனத்தருவிலுள்ள நறுமணம் எடுத்துப் புதுமணம் பெற்றிடப் பல பொருள் உண்டு, கண்டோம்; ஆனால், எம்மணம் பூசி மற்றோர் தருவினைச் சந்தனத் தருவாக்கிக்கொள்ள இயலும்?

மணம் தரச் சந்தனமும், சுவைதர மாவும், வலிவளிக்கத் தேக்கும், வண்ணப் பூக்கள் அளிக்கச் செடி கொடியும், நெல்லளிக்கப் பயிரும், காய்கறி அளிக்கச் சிலவும் உண்டு! ஒன்றை மற்றொன்று ஆக்கல், இயலாத ஒன்று ஆகும்! ஒன்று தருவதை மற்றொன்று தர இயலாது — இயற்கை அது.

விருப்பம் எழலாம் அதுபோல! விந்தை புரிந்திட எண்ணம் கூட முளைத்திடும், சிற்சிலர்க்கு!

மரம் குலுக்கி நெல் உதிர்க்கச் செய்வோம்!

பயிர் பறித்துச் சந்தன மணம்பெற்று மகிழ்வோம்! தேக்கினில் வண்ணப்பூவும், மாவினில் வாழை பலாவும் பெற்றிட விந்தை முறை காண்போம் என்று பேசலாம்; மகிழ்ச்சிபெற! ஆனால் இயற்கையை அடியோடு மாற்றிட இயலாதன்றோ?

எனவேதான், தமிழ் தந்திடுவன, பிறமொழி தந்திடா! தமிழர் கொண்டிடும் பண்பு, பிறரிடம் புகுத்தலாம், பூத்திடாது! எனவேதான், தனித்தன்மைகொண்டோர் நாங்கள் எனக் கூறுகின்றோம்.

எரிபொருள் ஆகத்தக்க தருக்களே, யாவும்; ஆனால், நறுமணம் தரவல்லது சந்தனம் ஒன்றே ஆகும்; அஃதேபோலப் பயன்தர மொழிகள் உண்டு, மணம்பெறத் தமிழே வேண்டும் என்கின்றோம்.

பிறமொழி ஆதிக்கத்தால், பொருளாதாரத் தாழ்நிலையால், எதையும் உரிமையுடன் செய்திடும் அரசியல் உரிமை பெறாதாராய் இருக்குமட்டும், தமிழர் கண்ட மணம்கமழ் உயர் தனிப்பண்பு தன்னை உலகுக்கு ஈந்து, உலகிலே குவிந்துள்ள கருத்துச் செல்வத்தை மேலும் பெருக்கிடும் சீரிய செயலில் பெற்றி கிடைத்திடாது. எனவேதான், மொழி வளர்ச்சி என்பதுடன் அரசியல் விழிப்புணர்ச்சியும் கலந்து, தி. மு. கழகமாக வடிவமெடுத்திருக்கிறது. மக்களாட்சி முறையே, மக்களின் வாழ்வுக்கு இன்ப ஒளி அளிக்கவல்லது என்பதனால், அம் முறையைப் போற்றுகிறது.

அரசியல் கருத்து வளர்ச்சிபற்றிய வரலாற்றினைப் பார்த்தால், தம்பி! இந்த மக்களாட்சி முறை ஏற்பட எத்தனை பாடுபடவேண்டிய இருந்தது, கொடுத்த பலி எத்துணை என்பது விளங்கும். எனினும், எழு ஞாயிறு எனக் கிளம்பிற்று மக்களாட்சி, ஆந்தைகள் அலறி ஓட, வௌவால்கள் பறந்து பதுங்க!!

பாம்பெது பழுதெது, கனி எது காய் எது, தளிர் எது சருகு எது, மேடும்பள்ளமும் எவை எவை, தொழிலிடம் எது, ஆங்கு செல்லப் பாதை எது — எனும் பொருளின் பாங்கறியும் திறன் மக்கட்கு அளிப்பது ஒளியாகும் — பேரொளிப் பிழம்பே ஞாயிறு!

ஞாயிறு! இல்லையேல் ஞாலம் இல்லை!

பொருளின் பாங்கினை நாம் உணர்ந்திட ஒளி அளிக்க வல்லது ஞாயிறு, எனினும், பொருளின் அமைப்பினைத் திருத்திடவோ, பாங்கினைக் கூட்டிடவோ நாமே பணியாற்ற வேண்டும். மலைமுகடு மாறாது, மடுவு மேடாகாது, மலராது சருகுதானும். ஞாயிற்றின் ஒளியினாலே! இவை இவை இன்ன விதம் என்பதனை எடுத்துக்காட்டும்; அவற்றினின்றும் பயன் பெறப் பணியாற்றிடவேண்டும், மாந்தர் கூட்டம்!

அரசியல் துறைக்கு, மக்களாட்சி என்பது எழுஞாயிறு எனலாம்.

நாடுள்ள நிலைதன்னை நாம் அறிந்துகொள்ள வழிகாட்டி நிற்பது, மக்களாட்சி முறைதான்.

ஞாயிறு கண்டதும் தாமரை மலரும் என்பர்; மக்களாட்சி முறை வென்றதும், மக்களிடை மகிழ்ச்சி மலரும்.

கதிரவன் ஒளியில் துணைகொண்டு, அவரவர் தத்தமக் கென்றுள்ள அலுவல்களில் ஈடுபட்டுப் பயன்பெறுதல்போன்றே, மக்களாட்சி முறை அளிக்கும் வாய்ப்பினைத் தக்கபடி இயங்கச் செய்து, நாட்டுக்குப் பொதுவான செம்மை கிடைத்திட செய்தல் வேண்டும்.

ஞாயிறு எழுந்ததும், ஏர் தன்னாலே நடக்காது, சக்கரம் தானாகச் சுழலாது; இயக்குவிப்போன் சுறுசுறுப்பு அதற்குத் தேவை, அதற்கான உயிரூட்டம் தருபவன் கதிரோன்.

“பொலபொல எனஇருள் புலரும் வேளை
கலகல வெனக் கரைந்தன புட்கள்
கொண்டையை அசைத்துக் கூவின சேவல்
தண்டையை இசைத்துத் தளிருடல் குலுக்கி
மெல்லிடை துவள வெண்குடம் ஏந்தி
அல்லியங் குளத்தினை அடைந்தனர் மடந்தையர்.’’

அமரன் என்பாரின் கவிதையில் ஒரு பகுதி இது. புரட்சிக் கவிஞர் முன்பு பாடினாரல்லவா?

காலை மலர்ந்தது மாந்தரெலாம்
கண்மலர்ந் தேநட மாடுகின்றார்

என்று; அந்த நடமாடத்தின் ஒரு பகுதி காண்கின்றோம்; ஆனால், அல்லிக் குளத்தருகே ஆரணங்கைக் கண்டதனால், எல்லாம் உள்ளதுகாண் என்றிருத்தல் முறையாமோ! இல்லை; எனவே, தொழில் நடக்கிறது.

“வயல்புறம் நோக்கி மாண்புடை உழவர்
செயல்திறம் காட்டச் சென்றனர் ஏருடன்
நிலாத்திகழ் மேனி நெடுநடை ஏறுகள்
விலாப்புறம் அசைவுற விரைந்தன செருக்குடன்’’

எனவே, கதிரவன் கிளம்புவது ஒளியூட்டி உயிரும் எழிலும் ஊட்டமட்டும் அல்ல, கமலத்தைச் சிரிக்க வைத்து, கன்னியரைப் போட்டியிட வைத்திட மட்டுமல்ல, தொழில் நடத்தப் புறப்படுவீர்! என்று அறிவுறுத்த, ஆணையிடவுமாகும்.

மக்களாட்சி எனும் முறையும், இருட்டறையாக வைக்கப் பட்டுள்ள அரசியல் துறைக்கு ஒளியூட்டி, உயிரூட்டி, எழிலூட்டி, அம்மட்டோடு நின்றுவிடுவது அல்ல. பொறுப் புணர்ந்து செயல்படுமின்! என்று ஆணையும் பிறப்பிக்கின்றது.

இதனை உணர்ந்திடவும் இவ்விழா, பயன்படட்டும்.

ஒளிதரும் ஞாயிறு வெப்பம் மிகுதியாகக் கக்கிடும் போக்கும் உண்டு. அஃதேபோல மக்களாட்சியிலேயும், உரிமை மறுத்தல், உருட்டி மிரட்டுதல்போன்ற ஆகாச் செயல்களும் முளைப்பதுண்டு! அவையாவும் களைகள் — பயிர் அல்ல! காலமறிந்து களைகளை நீக்கிடல்வேண்டும்; நீக்குங்காலை களையினைப் பறித்தெடுத்திடும் வேகம் தன்னில், பயிர் அழித்திடக்கூடாது.

மக்களாட்சியிலும் சிலபல கேடுகளும் கொடுமைகளும் ஏற்பட்டுவிடுகின்றன என்றாலும், அவைகளை நீக்கிடும் உரிமையும் போக்கிடும் வாய்ப்பும் மக்கட்குக் கிடைக்கிறது.

எனவே இன்று நடைபெறும் போர், உரிமையின் மாண்பதனை நாம் உணர்ந்து போற்றுகிறோம், எந்த வலிவாலும் இதனை வீழ்த்திடுதல்கூடாது என்ற உண்மையினை, உலகறியச் செய்கின்றோம் என்பதற்கும் சேர்த்துத்தான்.

பற்பல நாட்டு வரலாறுகளிலே, மமதை மிக்க மன்னர்கள் பற்றிப் படிக்கிறோம். கொலையைக் கூசாது செய்து, கொடி வழியை அறுத்தெறிந்து விட்டுக் குறுக்கு வழி நுழைந்து கொற்றம் கைப்பற்றினோர். காமக் களியாட்டத்துக்கெனவே நாட்டிலுள்ள கன்னியர் உளர் என்ற கேடு நிறை கருத்துடன் இருந்திடும் போக்கினர், எனப் பல படித்திருக்கிறோம்.

முறையும் தெளியும் தொடர்பும் மிக்கதான வரலாறு தொகுத்தளிக்கப்படவில்லை என்றாலும், கிடைத்துள்ளனவற்றைக் கொண்டு பார்த்திடும்போது, தமிழகத்துக் கோனாட்சிக் காலத்திலே, மன்னர்கள் மக்களை மருட்டியும், மாண்புகளை மாய்த்தும் வாழ்ந்தனர் என்பதற்கான அறிகுறிகளே இல்லை.

அரபு நாட்டுப் பெருமன்னர்கள்போல், அழகிகளையே மலரணையாக்கிக்கொண்டு, உருண்டு கிடந்த பெருமன்னர்கள் இங்கு இருந்ததில்லை.

வேறு பல நாடுகளிலே இருந்ததுபோல, மக்களின் சொத்து யாவும் மன்னனின் மகிழ்ச்சிக்காக என்று கூறி மக்களைக் கசக்கிப் பிழிந்து, பெரும்பணம் திரட்டி, பளிங்காலானா நீரோடை கொண்டதும் பொன் முலாம் பூசப்பட்ட மாடங்கள் கொண்டது மான அரண்மனைகளை எழுப்பிக்கொண்டு, மதோன்மத்தர் களாக, வாழ்க்கை நடாத்திய மன்னர்கள் இங்கு இருந்ததில்லை.

ரோமானிய மன்னர்களின் கோலாகல வாழ்க்கை பற்றிய குறிப்புகளைக் காணும்போது, இப்படியும் மக்கள் கொடுமையைத் தாங்கிக்கொண்டிருந்தனரா என்று கேட்கத் தோன்றும்.

கட்டழகி கண்டு களித்திடக் கட்டிளங் காளையை முதலைக்கு இரையாக்கி, அவன் உடலை முதலை பிய்த்தெறியும் போது, பழச்சுளையைப் பெயர்த்தெடுத்து, அவள் அதரம் சேர்ப்பிப்பதும், முதலையினால் கிழித்தெளியப்படுவோனுடைய குருதி குபுகுபுவெனக் கிளம்பிச் செயற்கை ஓடை செந்நிறமாகிடும் வேளை, இரத்தச் சிவப்பான போதைப் பானத்தைத் தங்கக் குவளையில் பெய்து, தளிர்மேனியாளுக்குத் தருவதுமான இன்ப விளையாட்டில் ஈடுபட்டிருந்த சில ரோமானிய மாமன்னர்கள் போன்று இங்கு ஒருவரும் இருந்ததில்லை.

மக்களிடம் குருட்டறிவு இருக்கும்படியான ஏற்பாட்டி னைத் திறமையுடன் செய்து வைத்துக்கொண்ட, அம் மன்னர்கள், தம்மை “வழிபடத் தக்கவர்கள்’ என்ற நிலைக்கு உயர்த்திக்கொண்டு, பிறர் கேட்டாலே கூசத்தக்க தீச்செயல்களை நிரம்பச் செய்து வந்தனர்.

“தங்கள் மருமகன், பெற்ற வெற்றி மகத்தானது, மாமன்னா! மக்கள் அவரைக் காணவும் கோலாகல விழா நடத்தவும் துடித்தபடி உள்ளனர். . .’’

“அவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனரா மக்கள்! சென்ற ஆண்டு நான் பன்னீர்க் குளத்துக்குச் சென்றேனே குளித்திட, அப்போது திரண்டு வந்ததைவிடவா அதிக மக்கள் திரண்டு வந்தனர். . . அவனைக் காண!’’

“ஆமாம்! மிகப் பெரிய கூட்டம். . .’’

“தளபதி எங்கே?’’

“வரவேற்பு ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்றிருக் கிறார்.’’

“அவனும், அப்படியா! உம்! சரி! துணைத் தளபதி எங்கே?’’

“அவர் எங்கு இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. . . ஆனால் இன்று அவர், அழகு மிகப் படைத்த ஒரு தெருப்பாடகியைக் கண்டு சொக்கிப்போய் உடனே அவளைச் சீமாட்டியாக்கி, சல்லாபம் நடத்துதற்கு என்றே அவர் புதிதாகக் கட்டிமுடித்த, உல்லாசக் கூடம் அழைத்துச் சென்றார். . . அங்குதான் இப்போது அவர். . .’’

“அவன் எப்போதும், வாழத் தெரிந்தவன். ஆனால், ஆயிரம் களியாட்டம் நடத்தினாலும், “ராஜபக்தி’ மட்டும் எப்போதும் மிகுதி அவனுக்கு. அவனை உடனே கண்டு தலைநகரின் தலைவாயிலில் என் மருமகன் நுழைந்ததும், சிறைப்படுத்தி, காட்டுக் கோட்டையில் அடைக்கச் சொல்லு. தளபதி குறுக்கிட்டால், இவனே தளபதி! நீ அக்கணமே துணைத் தளபதி!! என் மருமகன் செய்த குற்றம், எதிரி நாட்டவரிடமிருந்து ஏராளமான பொன் பெற்றுக்கொண்டது. ஆதாரம், உளவர் தந்துள்ள அறிக்கை. புறப்படு! போகும் வழியிலே, உளவர் தலைவரைக் கண்டு, பெரும்பொருளை எதிரிநாட்டவரிடம் என் மருமகன் பெற்றதற்கான ஆதாரம் தயாரித்துக் கொண்டுவரச் சொல்லு. . .’’ “தங்கள் மகள். . .’’

“எனக்குத்தான் நீண்ட காலமாகவே சந்தேகம் உண்டே அவள் என் மகள்தானா என்பதில். . .’’

இப்படிப்பட்ட உரையாடல், அந்த நாட்களில், மன்ன ராட்சியிலே நடைபெறும். தமிழகத்தில் இதுபோன்ற மனித மிருகங்கள் இருந்ததில்லை. இந்த மண்ணிலே அத்தகைய நச்சுச் செடிகள் முளைப்பதில்லை.

கொடுங்கோலர்கள் மிகுந்திருந்த நாட்களிலேயே, இங்கு இருந்துவந்த கோனாட்சியையே, குடிக்கோனாட்சியாக்கி வைத்தவர் தமிழர் என்றால், குடியாட்சி முறை ஏற்புடையது, எங்கும் நிலவிடவேண்டியது என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும் இந்நாட்களிலே, மக்களாட்சி முறையினை மாண்புள்ளதாக்கும் பொறுப்பேற்கத்தக்கவர்கள் தமிழர் என்று கூறுவதிலே தவறில்லையே.

தமிழர் நெறி, கூடி வாழ்தல், கேடு செய்தல் அல்ல.

தமிழர் முறை, கருத்தறிந்து காரியமாற்றுதல், கத்தி முனையில் கட்டளை பிறப்பிப்பது அல்ல.

தூய்மை நிறைந்த மக்களாட்சிமுறை, தேவைப்படும்போது, பொது நோக்கத்துக்குத்தான் கட்டுப்படுமேயன்றி, கட்சிக் கொடி களுக்கு அன்று. அங்ஙனமாயின் கட்சிகள் பலப்பல ஏன், தனித்தனிக்கொடிகள் ஏன் என்று கேட்கப்படுகிறது. இது எரிகிற வீட்டிலிருந்து எடுத்தவரையில் இலாபம் என்ற போக்கே யன்றி, வேறில்லை. ஒரு பொது நோக்கத்துக்காகப் பாடுபடும் மாண்பு, மக்களாட்சிக்கு உண்டு என்பதாலேயே எல்லாவற்றையுமே கூட்டிக் கலக்கி ஓருருவாக்கி பேருருவாக்கிவிட எண்ணுவது பேதைமை மட்டுமல்ல, கேடு விளைவிக்கும்.

மலர்களை உதிர்த்து இதழ்கள் குவித்திடலாம் — இதழ் களைக் குவித்து, புதிய பூக்களை மலரச்செய்திட முடியாது. மலர்களைத் தொடுத்து மாலைகளாக்கலாம் — செடிகள் மாலை மாலையாகவே ஏன் தந்துவிடக்கூடாது என்று எண்ணுவது, வேடிக்கை நினைப்பன்றி வேறில்லை.

தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாகக் கூட்டச் சொன்னார் சான்றோர்; தனித்தனி கனிகளே கூடாது என்றார் இல்லை.

நமக்குச் சில வேளைகளிலே ஆவல் ஏற்படும்; விந்தையான எண்ணங்களெல்லாம் எழும்.

வாழைப்பழம்போல உரித்திட எளிதான தோல்கொண்ட தாகவும், பிசின் இல்லாத முறையில் பலாப்பழச் சுவைகொண்ட சுளைகள் கொண்டதாகவும், அதுபோட்டுக் குதப்பத்தக்கதாக இல்லாமல், மென்று தின்னத்தக்கதாகவும், அந்த அருங்கனியும் ஏறிப்பறித்திடவேண்டிய உயரமுள்ள மரங்களில் இல்லாமற் படரும் கொடியிலேயே இருந்திடவும்வேண்டும்; அக்கொடியும் விதையிட்ட மறு திங்கள் கனி தந்திடவேண்டும், கனி தந்த களைப்பினாலே மடிந்திடவும்கூடாது, நீண்ட காலம் கனி தந்தபடி இருக்கவேண்டும்; தானாகவே முளைகள் கிளம்பிட வேண்டும்; மழையும் பனிநீரும்கொண்டே பிழைத்திருக்க வேண்டும், என்றெல்லாம் எண்ணிக்கொள்ளலாம் — விந்தை நினைப்பிலே ஒரு தனிச்சுவை உண்டல்லவா!

தம்பி! இயற்கையின் முறையினை உணர்ந்திடும் நாளாகவும் பொங்கற் புதுநாளைக் கொண்டிடுதல்வேண்டும் — இஞ்சியும், மஞ்சளும், அவரையும் துவரையும், அரிசியும் பிறவும் உள்ளனவே, இவை பேசுவது கேட்கிறதா!

ஒவ்வொன்றும் தன் “கதை’யைச் சொல்லப்போனால், காவியங்கள் தலை கவிழும் வெட்கத்தாலே — அவ்விதம், புறப்படு படலம், பகை காண் படலம், காப்புப் படலம் எனப் பல உள, அவை ஒவ்வொன்றுக்கும்.

மிக அதிகமான அளவு மக்கள்பற்றி அறிந்துகொள்ளவே, நேரத்தையும் நினைப்பையும் செலவிட்டுவிட்டதால், இந்தப் “படைப்புகள்’ கொண்டுள்ள சிந்தை அள்ளும் கதையினை நாம் அறிந்துகொள்ள முயலுவதில்லை.

எல்லாம் நெல் எனினும், ஒவ்வோர் வகைக்கு ஒவ்வோர் காலம் தேவைப்படுகிறது. குறுவைக்குப் போதுமான நாட்கள் கிச்சிலிச் சம்பாவுக்குக் காணாது! ஒருவகை நெற்பயிர் நீந்தியபடி இருக்க விரும்புகிறது, வேறு சில வகைக்கு நீர் தெளித்துவிட்டால் போதும் திருப்தி அடைந்துவிடுகிறது, சிலவகை ஏற்றுக் கொள்ளும் உரத்தை வேறு சில வகையான நெற்பயிர் ஏற்றுக் கொள்வதில்லை. நாம், நெடுங்காலமாக, இவருக்கு எந்தப் பண்டம் பிடிக்கும், அவருக்கு என்ன பானம் தேவை என்பது பற்றியே பேசி வருகிறோம், நம்மை வாழ வைக்கும் “படைப்புக’ ளான இப்பயிர் வகைகளின், விருப்பு வெறுப்புப்பற்றி அறிய முனைந்தோமில்லை. ஏன்? வயலருகே சென்றவர்கள் நம்மில் அநேகர் அல்ல! செல்லும் சிலரும் “அறுவடை’ காணச் செல்லும் ஆர்வத்தை மற்றபோது காட்டுவதும் இல்லை.

ஒவ்வோர் விளைபொருளும் ஒவ்வோர் வாழ்க்கை முறை கொண்டுள்ளது. அறிந்துகொள்ளும் முயற்சி சுவையளிக்கும்.

ஆனால், நாமோ, அவைகளினால் கிடைக்கும் பயனைப் பெறவும், அதற்கான பக்குவம் காணவும் முயல்கிறோம், அதற்காகத் துணிந்து எதனையும் செய்கிறோம், நாம் பிழைக்க. எத்துணை உயரத்தில், எவ்வளவு பாதுகாப்பு அமைத்துக் கொண்டு, தென்னை இளநீர்க் காயைக்கொண்டிருக்கிறது! விடுகிறோமோ? நம்மாலே முடியாது போயினும் பிறரைக் கொண்டேனும் பறித்துவரச் செய்து, மேலே உள்ளதைச் சீவி எடுத்துவிட்டு, அதற்கு அடுத்து உள்ளதை உரித்து எடுத்து விட்டு, அதற்கும் பிறகு உள்ள ஓட்டினை உடைத்து உள்ளே இருக்கும் இளநீர் பருகி இன்புறுகிறோம்.

மதில்சுவரின் மீதேறிச் சென்று, உள்ளே நுழைந்து, பெட்டியைக் களவாடி, அதன் பூட்டினை நீக்கித் திறந்து உள்ளே உள்ள பொருளைக் கண்டு களித்து எடுத்தேகும் களவாடுவோனைப் பற்றி, நாம் என்ன எண்ணுகிறோமோ, அதுபோலத் தான் நம்மைப்பற்றி, தென்னை எண்ணுகிறதோ என்னவோ!

இந்தப் படைப்புகளிலே தம்பி! சில பிஞ்சிலே மட்டும் சுவைதரும், சில கனிந்த பிறகே பயன் அளிக்கும், சிலவற்றை உதிர்த்தெடுக்கவேண்டும், சிலவற்றைப் பறித்தெடுக்கவேண்டும், இவை நாம் அவைகளைப் பயன்படுத்தும் முறைகள். அது போன்றே, இவை வாழ, வளர.

ஒவ்வொன்றுக்கென அமைந்திருக்கும் வெவ்வேறு முறைகள் பற்றி அறிந்திடும்போதுதான், இயற்கை எனும் பல்கலைக் கழகத்திலே நாம் கற்றுணர வேண்டிய பாடங்கள் பல உள; கற்றோம் இல்லை; என்ற தெளிவு பிறக்கும்.

இத்தனை வகையான வாழ்க்கை முறை மேற்கொண்டு, இத்தனை விதமான வடிவங்களைக்கொண்டு, இப்பொருள் இருப்பானேன்; எல்லாம் உண்ணும் பொருட்களன்றோ, ஏன் இவை இத்தனை வகை வகையாய் இருப்பதனைத் தவிர்த்து, இவற்றின் சுவை யாவும் பயன் யாவும் நன்றாகக் கூட்டி, ஓருருவாகி விளைந்து நமை மகிழ்விக்கக்கூடாது! — என்ற எண்ணம் கொண்டால், என்ன பலன்?

அந்த எண்ணத்தை மிக அதிகமாக்க, வலியுறுத்தத் தொடங்கினால் “நல்ல மனிதன்! நன்றாகத்தான் இருந்தான்! எப்படியோ இப்படி ஆகிப் போனான்!’’ என்று கூறுவாரேயன்றி, “இவனோர் விற்பன்னர்! வேறு வேறாய் உள்ள பொருள் அத்தனையும் ஒரு பொருளாகிடவேண்டுமென்று விழை கின்றான்’’ என்று கொண்டாட மாட்டார்கள்.

இயற்கை விளைவிக்கும் படைப்புகள் போன்றே, எண்ண மெனும் கழனியிலும் எத்தனையோ விளைகின்றன! அவற்றின் பயன் யாவும் கண்டறிந்து எடுத்துச் சுவை பெறல், அறிவுடைமை.

கருத்துக்கள் பல மலர்வது, பல பண்டங்களை இயற்கை தருவதுபோன்றதாகும். அவை வெவ்வேறு முறைகள் கொண்டனவாய் இருப்பினும், முடிவில் ஒரு பயனே பெறுகின்றோம். அந்தப் பயன்பெறும் முறையிலே தான் செம்மை தேவை; படைப்பின் முறையில் அல்ல!

தம்பி! இயற்கையோடு அளவளாவ, நமக்கெல்லாம் நேரமுமில்லை, நினைப்புமில்லை, நகர வாழ்க்கையும் நாகரிகப் போக்கும் இயற்கையின் கோலத்தையே மாற்றிடச் செய்து விட்டன.

பழந்தமிழர் அதுபோல் இருந்திடவில்லை; புலவர்களின் கண்கள் இயற்கையைத் துருவித் துருவி ஆராய்ந்தன; சங்ககாலப் பாக்களில், எத்தனை பூக்களைப்பற்றிய செய்தி அறிகிறோம், அன்று அவர் ஆக்கிய கவிதைகளினால், காவும் கனியும், கரியும் கடுவனும், அருவியும் அளிவண்டும், இன்றும் நமக்குத் தெரிகின்றன.

மாத்தின் இளந்தளிர் வருட
வார்குருகு உறங்கும்
நீர்சூழ் வளவயல்

கண்டனர்; கவி சுரந்தது.

நீர் வளமிக்க வயலோரம் உள்ள மாமரத்தின் தளிர் தடவிக் கொடுக்க, நாரை இனிது உறங்குகிறதாம்!

கழனிக் கரும்பின்
சாய்ப்புறம் ஊர்ந்து
பழன யாமை பசுவெயில் கொள்ளும்.

பாங்கினைப் பார்க்கிறார் புலவர்.

நன்செய் நிலத்தில் விளைந்துள்ள கரும்பின் வழி ஏறிக் காலை இளவெயிலில் ஆமை காய்கிறதாம்.

இரவெல்லாம், பாவம், நீர் நிரம்பிய இடத்திலிருந்ததால், உடலுக்கு வெப்பம் தேவைப்படுகிறது; இளவெயிலில் காய்கிறது, ஆமை!

தம்பி! கவனித்தனையா, புலவர் தந்துள்ள கருத்துள்ள பதம் ஒன்றை — காலை வெயில் என்று கூறினால் இல்லை — வெயிலில் என்று சொன்னாரில்லை — பசு வெயில் என்கிறார் — செல்லமாக!

ஆமை, வெயிலிலேயே நீண்டநேரம் இருக்கப் போவ தில்லை — ஏன்? என்கிறாயா, தம்பி! புலவர் கூறுகிறாரே புரியவில்லையா? எங்கே கூறினார் அதுபோல என்கிறாயா? அப்பொருள், அவர் கூறியதிலே தொக்கி இருக்கிறது. கரும்பின் மீது ஏறி அல்லவா ஆமை பசு வெயில் கொள்கிறது! கரும்பின்மீது எப்படி ஆமை அதிக நேரம் இருந்திட இயலும். உழவன், அப்பக்கம் வந்துவிடுவானன்றோ!

மாந்தளிர் தடவிக்கொடுக்கத் துயில்கொள்ளும் நாரை! கரும்பினில் ஏறிப் பசுவெயில்கொள்ளும் ஆமை!

உறங்கும்நிலை! விழித்து நடமாடி உடலுக்கு வெப்பம் பெறும் நிலை.

நெடுங்கழி துழைஇய
குறுங்கால் அன்னம்
அடுப்பு அமர்எக்கர்
அம்சிறை உலரும்!

உப்பங்கழியிலே மீன் தேடி உண்ட அன்னம், அடும்பங் கொடி படர்ந்திருக்கும் மணல்மேட்டில் ஏறித் தன் சிறகை உலர்த்திக் கொள்கிறது.

ஏறக்குறைய நீராடிவிட்டு வந்து உடலை உலர்த்திக் கொள்வதுபோன்றது.

இதுபோல், இயற்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தால், எழில் கண்டு இன்புற மட்டுமல்ல, பயன் பெற்றிடவும், இயற்கையின் பொருள் விளக்கிக்கொள்ளவும் முடிந்தது, பழந்தமிழர்களால்.

கருணானந்தம் தந்துள்ள கவிதை காட்டுதல்போல்,

“உலகம் வியக்க நிலவிய புகழும்,
கழகம் வளர்த்த பழந்தமிழ் மொழியும்
அறநெறி பரப்பும் குறள்முறை தழுவிப்
பிறரைப் பணியாத் திறலும் படைத்த
தன்னேர் இல்லாத் தமிழக உழவர்
பொன்னேர் பூட்டிச் செந்நெல் விளைத்தே
ஆண்டின் பயனை அடைந்திடும் பெருநாள்;
தூண்டிடும் உவகையில் துள்ளிடுந் திருநாள்!’’

பொங்கற் புதுநாள் என்பதால், இந்நாளில் மகிழ்வுபெற்று, என்றென்றும் இம்மகிழ்வு, அனைவர்க்கும் கிடைத்திடத்தக்க நிலைபெற வழிகண்டு, அதற்காகப் பாடுபட உறுதிகொண்டிட வேண்டுகிறேன்.

களத்திலுள்ளார் காட்டும் வீரமும் ஆற்றல், அருந்திறனும், சாக்காடுபோவதேனும் கலங்கோம் என்று “சங்கநாதம்’ செய்குவதும், புறநானூற்றுக் காட்சிகளை, நினைவிற்குக் கொண்டுவந்து சேர்க்கும் வீரக் காப்பியமாய் விளங்கிவரும் அச்செயலில், இங்கிருந்து களம் சென்ற தமிழ் மறவர் ஈடுபட்டு, என் தமிழர், அவர் தீரர்! எதிர்ப்புகட்கு அஞ்சாத வீரர்! என்று நாம் கூறி மகிழ்ந்திடவே நடந்து வருகின்றார். எந்தக் குறையுமின்றி, எதிர்ப்பை முறியடித்து, சிங்கத் தமிழரெலாம் பொங்கல் திருநாளை, இவ்வாண்டு இல்லையெனினும், அடுத்த ஆண்டேனும், இல்லம்தனில் இருந்து இன்மொழியாளுடன் குலவி, செல்வக் குழைந்தைகட்கு முத்தமீந்து மகிழ்ந்திருக்கும் நிலை எழவேண்டும்.

தம்பி! உன்னோடு உரையாடி நீண்ட பல நாட்களாகி விட்டன — நிகழ்ச்சிகள் ஆயிரத்தெட்டு உருண்டோடிவிட்டன — எனவே, ஏதேதோ கூறவேண்டுமென்று ஆவல் எழுகிறது, எனினும், எல்லாவற்றினையும் ஓர் மடலில் அடைத்திடுவது கூடாது என்ற உணர்வு மேலும் பல கூறிடவிடவில்லை.

விழா நாள் மகிழ்ச்சிபெறும் நாள்; இன்று பிரச்சினைகள் பலவற்றிலே உன்னை ஈடுபடுத்துவதும் முறையாகாது.

எனவே, வாழ்க நீ. இல்லத்துள்ளோர், இன்பம் துய்த்து வாழ்க என வாழ்த்துகிறேன்.

கருப்பஞ்சாறும் அதனினும் இனிய சொற் கற்கண்டும் கிடைத்திடும் இந்நாளில், நான் தந்திடும் வாழ்த்தினையும் ஏற்றுக் கொள்வாய் — இது உன் மகிழ்ச்சிக்கு மணம் கூட்ட! என் இதயத்தை உனக்குக் காட்ட!!

அண்ணன்,

14.1.1963

மூலக்கட்டுரை

http://www.annavinpadaippugal.info/kadithangal/gyayiru_potruthum_1.htm

--

--

SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite