எண்ணிப்பார்...கோபியாமல்

அண்ணாதுரை, திராவிட நாடு, 26–10- 1947

SG
3 min readOct 25, 2020

எலக்ட்ரிக்
ரயில்வே
மோட்டார்
கப்பல்
நீர்மூழ்கிக் கப்பல்
அதைக் கண்டுபிடிக்கும் கருவி
டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி
விஷப்புகை
அதைத் தடுக்கும் முகமூடி
இன்ஜக்ஷன் ஊசி
இனாகுலேஷன் ஊசி
இவைகளுக்கான மருந்து
ஆப்ரேஷன் ஆயுதங்கள்
தூரதிருஷ்டிக் கண்ணாடி
ரேடியோ
கிராமபோன்
டெலிபோன்
தந்தி
கம்பியில்லாத் தந்தி
போட்டோ மெஷின்
சினிமாப்படம் எடுக்கும் மெஷின்
விமானம்
ஆளில்லா விமானம்
டைப் மெஷின்
அச்சு யந்திரம்
ரசாயன சாமான்
புதிய உரம்
புதிய விவசாயக் கருவி
சுரங்கத்துக்கள் போகக் கருவி
மலை உச்சி ஏற மெஷின்
சந்திர மண்டலம் வரைபோக விமானம்
அணுவைப் பிளக்கும் மெஷின்

இன்னும், எண்ணற்ற, புதிய, பயன்தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும் கண்டுபிடிக்கும் வேலையிலே உடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம்,
சரஸ்வதி பூஜை
ஆயுத பூஜை
கொண்டாடாதவர்கள்!!

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் இந்தியாவுக்கு வழிகண்டுபிடித்த வாஸ்கோடிகாமா இந்தியாவை இதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம்,
ஆயுத பூசை
செய்தவர்களல்ல! நவராத்திரி கொண்டாடினவர்களல்ல!

நூற்றுக்கு நூறு பேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே
சரஸ்வதி பூசை
இல்லை!

ஓலைக்குடிசையும் கலப்பையும் ஏரும் மண்வெட்டியும் அரிவாளும் இரட்டை வண்டியும் மண் குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள்.

தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை.

கற்பூரம் கூட, நீ செய்ததில்லை.

கடவுட் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடி கூட, சரஸ்வதி பூஜை அறியாதவன் கொடுத்ததுதான். நீ, கொண்டாடுகிறாய்.

சரஸ்வதி பூசை
ஆயுத பூசை!!
ஏனப்பா? கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

மேனாட்டான், கண்டுபிடித்துத் தந்த அச்சு யந்திரத்தின் உதவி கொண்டு, உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து, அகமகிழ்கிறாயே!!

ஒரு கணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்து வந்த, நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய அதிசயப் பொருளைப் பயனுள்ள பொருளைக் கண்டுபிடித்தோம், உலகுக்குத் தந்தோம் என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை, அப்படித்தான், கொஞ்சம் நெஞ்சை உறுத்தும். மிரளாமல், யோசி - உன்னையுமறியாமல் நீயே சிரிப்பாய்.
உன், பழைய நாட்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ய நூற்களை எல்லாம்கூட, ஓலைச்சுவடியிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்சுயந்திரமாவது கண்டுபிடித்திருக்கக் கூடாதா? இல்லையே!

எல்லாம் மேனாட்டான், கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு, அவைகளை, உபயோகப்படுத்திக் கொண்டு, பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப் பார்!

சரஸ்வதி பூசை - விமரிசையாக நடைபெற்றது - என்று பத்திரிகையிலே ‘சேதி’ வருகிறதே. அது, நாரதர் சர்விஸ் அல்லவே! அசோசியேட் அல்லது ராய்ட்டர் சர்விஸ் - தந்தி முறை - அவன் தந்தது!

தசரதன் வீட்டிலே டெலிபோன் இருந்ததில்லையே!
ராகவன், ரேடியோ கேட்டதில்லை.
சிபி, சினிமா பார்த்ததில்லை!
தருமராஜன், தந்திக்கம்பம் பார்த்ததில்லை!
இவைகளெல்லாம், மிகமிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது - அனுபவிக்கிறோம்.

அனுபவிக்கும்போதுகூட, அந்த அரிய பொருளைத் தந்த அறிவாளர்களை மறந்துவிடுகிறோம். அவர்கள்
சரஸ்வதி பூசை
ஆயுத பூசை
செய்தறியாவதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவிலே ராகவனைப்பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்ரவர்த்தி கதையும், கேட்டும், பார்த்தும், ரசிக்கிறோம். இது முறைதானா?

பரம்பரை பரம்பரையாக நாம் செய்துவந்த
சரஸ்வதி பூசை
ஆயுத பூசை

நமக்குப் பலன் தரவில்லையே, அந்தப் பூசைகள் செய்தறியாதவன், நாம், ஆச்சரியப்படும்படியான, அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதார புருஷர்கள் காலத்திலே கூட இல்லாத அற்புதங்களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே, என்று யோசித்தால் முதலில் கோபம் வரும், பிறகு வெட்கமாக இருக்கும், அதையும் தாண்டினால், விவேகம் பிறக்கும்.

யோசித்துப்பார் - அடுத்த ஆண்டுக்குள்ளாவது!

சினிமாவிலே, முன்பு ஓர் வேடிக்கை பார்த்தேன், கவனத்திற்கு வருகிறது, சொல்கிறேன்.

ஒரு இரும்புப் பெட்டி! அதிலே, என்ன வைத்திருக்கிறான் என்று எண்ணுகிறாய்? வைரம், வைடூரியமா, தங்கம், வெள்ளியா? இல்லை! கத்தரி, வாழை, கீரைத் தண்டு, இப்படிப்பட்ட சாமான்களை!

ஒரு லோபி! அவன் இரும்புப் பெட்டியிலே, வைத்திருக்கிறான், இந்தச் சரக்குகளை மனைவி, சமயலுக்காக வந்து கேட்கும்போது, இரும்புப் பெட்டியை ஜாக்ரதையாகத் திறந்து, கத்தரி ஒன்றும் வாழையில் கால்பாகமும், தருகிறான்! பிறகு, பெட்டியைப் பூட்டி விடுகிறான்.

காய்கறியின் விலை என்ன, அதை வைத்துப் பூட்டி வைத்திருக்கிறானே இரும்புப் பெட்டி, அதன் விலை எவ்வளவு!

அவன் யோசிக்கிறானா அதை.

அதுபோலத்தான், மேனாட்டு, அறிஞர்கள் கொடுத்த இரும்புப்பெட்டி போன்ற விஞ்ஞான சாதனத்துக்குள்ளே, நாம், நமது பழைய கருத்துக்கள், முறைகள், பூசைகள், ஆகிய சில்லறைகளை வைத்துக் கொண்டு காலந் தள்ளுகிறோம்.
எனக்கு நன்றாகக் கவனமிருக்கிறது, சினிமாவிலே, இநதக் காட்சியைக் கண்ட உடனே கொட்டகையிலே இருந்தவர்கள், ஆட! பைத்தியக்காரா! என்று கேலி செய்தனர்.
நமது போக்கைக் கண்டு, உலகக் கொட்டகையிலே எவ்வளவுபேர், கேலி செய்கிறார்களோ? யார் கண்டார்கள்? செய்யாமலா இருப்பார்கள்?

நாம் கட்டிக் கழித்த துணியை, ஓட்டுப்போட்டு, ஓரம் வைத்துப் போட்டுக் கொண்டு ஒரு ஆள், நம்மிடமே வந்து நின்று, ‘புதுசா ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன் - அருமையான துணிகள் இருக்கு நம்ம கடைக்கே வாங்க’ - என்று நம்மையே, அழைத்தால் நமக்கு எப்படி இருக்கும்..?

(திராவிட நாடு - 26.10.47)

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

No responses yet

Write a response