இந்தியும் தமிழ் மகனும்

அண்ணாதுரை, திராவிட நாடு, 14–5–1950 & 21–5–1950

SG
20 min readJan 25, 2020

“தமிழ் மகனே! தமிழ் மகனே!” என்று அழைத்தபடி, காரியாலயத் தாழ்வாரத்தில் சென்று கொண்டிருந்தேன், எதிரே காணப்பட்ட அறையை நோக்கி, ஏன் குரலிலே தோய்ந்திருந்த அன்பும் ஆர்வமும் கண்டுதானோ என்னவோ காவலாளி, முகமலர்ச்சியுடன் “உள்ளே போய் உட்காரும் ஐயா! யாரைப் பார்க்க வந்தீர்கள்? எதற்காக? உமது பெயர் என்ன? எல்லா விவரமும் குறித்துக் கொடுங்கள்” என்று கேட்டான். தமிழ் மகனைக் காண வ்நதிருக்கிறேன் — தமிழர் நிலை குறித்துத் தெரிந்து கொள்ள — பரதன் — என்று எழுதிக் கொடுத்தனுப்பிவிட்டு அறையிலே இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். காற்றிலே மிதந்து வரும் கீதம் கேட்டது. ஏன் எதிரே இருந்த மேஜைமீது, ஏடுகள், தாள்கள் பல இருந்தன சுவரிலே, காந்தியார், ஜவஹர் ஆச்சாரியார் ஆகியோரின் படங்கள் இருந்தன. தமிழ் மகனின் வருகைக்காக, இவலோடு காத்துக் கொண்டிருந்தேன். இரண்டோர் விநாடிகளாயின! கதவு திறக்கப்பட்டது. ஆவல் மிகுதியால் “தமிழ் மகனே!” என்று கூறக்கொண்டு திரும்பிப் பார்த்தேன் ஏன் நண்பர் குமரப்பன் “நீங்களா?” என்று கேட்டுக்கொண்டே ஏன் எதிரே நின்றான். அடடே! குமரப்பா நீ, இங்கு.. என்று நான் கேட்கலானேன் — “கம்பா சிடராக இருக்கிறேன் — தெரியாதா உங்களுக்கு” என்றான் குமரப்பன். “தெரியாது குமரப்பா!” என்றேன். “இங்கே என்ன வேலையாக…” என்று அவன் கேட்கலானான். ஆர்வத்துடன் தமிழ் மகனைக் காண வந்திருக்கிறேன் என்றேன். பிறகு சில நிமிஷங்கள், குடும்ப விஷயமாகப் பேசிக்கொண்டிருந்தோம். வேலை மிகுதி — நேரம் இல்லை பேச என்று கூறிவிட்டு, குமரப்பன் சென்றுவிட்டான் — செல்லு முன், ஒரு காகிதச் சுருளை மேஜைமீது வைத்துவிட்டு அதன் மிது கண்ணாடியால் செய்யப்பட்ட ஆழகான ஆசோகச் சக்கரத்தை எடுத்து வைத்துவிட்டுச் சென்றான். அந்த ஆசோகச் சக்கரம் ஆழகாக இருந்தது — கையில் எடுத்துப் பார்த்தேன் — காற்று அடித்தது காகிதம் கீழே விழுந்தது — எடுத்தேன், பழையபடி வைக்க — குமரனின் கரத்திலே இருந்த மை அதிலே ஓட்டியிருந்ததுஎன்ன செய்கிறோம் என்ற நினைப்பின்றிக் காகிதத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.

“எனவே இந்தி பாஷையின் ஏகாதிபத்யத்தை ஸ்தாபிக்கும் முயற்சி வெறும் பூச்சாண்டி அல்ல, நமக்கு ஏற்பட்டுள்ள உண்மையான ஆபாயம் என்றே முடிவுகட்ட வேண்டியிருக்கிறது.

இந்தி ஏகாதிபத்தியத்திற்காக திட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை நாம கண்டறிவதற்கு முன்பே, கண்டறிந்து கண்டித்தனர் திராவிட இயக்கத்தார். இந்தி ஆபத்து வருகிறது தாய்மொழிக்கு, தமிழ் மொழிக்கு ஆபத்து வருகிறது — என்று எச்சரிக்கை செய்னர் — தமிழ் நாடெங்கும் கிளர்ச்சி செய்தனர். மூலை முடுக்குகளிலெல்லாம் இந்தி ஒழிக — இந்தி ஒழிக — என்ற முழக்கம் கேட்டது. இந்தி எதிர்ப்பு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கிளம்பினர் — மறியல் நடைபெற்றது. அந்தோ! அநியாயம்! இரு இளைஞர்கள் சிறையிலே மாண்டும் போயினர். ஆண்களும் பெண்களும் சிறை புகுந்தனர் — ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சிறை சென்றனர்.

இந்தி ஏகாதிபத்தியம் ஏற்பட இருக்கிறது என்பதை உணர்ந்து அவர்கள், தய்மொழீயை, தமிழகத்தைக் காக்கப் போரிட்டனர், அந்தச் சமயத்திலே… ஐயகோ! இப்போது எண்ணிக்கொண்டால், துக்கம் நெஞ்சைத் துளைக்கிறது — வெட்கம் தலையைச் சாய்க்கிறது — அந்தச் சமயத்திலே, நாம், அவர்களை, குறுகிய மனப்பான்மையினர், குதர்க்கவாதிகள் — கோமாளிப் போக்கினர் — என்றெல்லாம் ஐசினோம், எதிர்த்தோம் — ஐளனம் செய்தோம் — அடக்கு முறையால் அழித்தோம். தமிழுக்கு ஆபத்து இல்லை, என்று பேசினோம். இந்தி தமிழை அழிக்காது என்று உறுதி கூறினோம். இந்தி, என்பது சூழ்ச்சித் திட்டமல்ல, வடநாட்டு ஆதிக்கத்துக்காகப் புகுத்தப்படும திட்டமல்ல, என்று விளக்கங்கள் கூறினோம். கேலிச் சித்திரங்கள் தீட்டினோம், அந்தக் கிளர்ச்சியைக் கேவலப்படுத்தினோம்.

ஆபத்து வருகிறது என்று கூறினர் — அவர்களை அலட்சியம் செய்தோம்.

அருமைத் தமிழ்மொழி அழிகிறது என்று கூறினர் — ஆணவமாகப் பேசி அவர்தம் வாயை அடக்கினோம்.

தமிழ் காக்கக் கிளம்பினர் — தடி கொண்டு தாக்கினோம்.

“இந்திக்குத் தமிழ் நாட்டில் ஆதிக்கமாம் — நீங்கள் எல்லோரும் வாருங்கள் தோழர்களே! என்று பாடினர் — நாம் அவர்களைச் சாடினோம்.

எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி, எத்தனை பட்டாளம் கூட்டிவரும் என்று பாடிக்கேட்டனர் — நாம் போலீஸ் படையை ஏவினோம் அவர்களைத் தாக்க! இன்று உணருகிறோம், நமது தவற்றை! இன்று உணருகிறோம் உண்மையை!” இன்று உணருகிறோம், இந்தி ஏகாதிபத்தியம் தலை தூக்குவதை!

அன்று கொண்டிருந்த ஆணவம், நமது அறியாமையின் விளைவு.

சேற்றினைப் பூசிக்கொண்டோம். சந்தனம் என்று எண்ணி — நாற்றம் அடிக்கிறது இன்று, நமக்கு அன்றே, இது சந்தனமல்ல, சேறு என்று கூறியவர்களின் நினைப்பு வருகிறது.

இழமான படுகுழி, அருகே போகாதீர் என்று எச்சரித்தனர் — ஆணவநடை நடந்து சென்று வீழ்ந்து விட்டோம் படுகுழியில் வீழ்ந்தபிறகு தான் முனகூட்டியே எச்சரித்தவர்களின் நினைவு வருகிறது.
வெட்கப்படுகிறோம் — துக்கப்படுகிறோம் — மன்னிக்கக் கோருகிறோம்.

கடந்துபோனதை மறந்துவிடும் கண்ணியர்கள் அவர்கள் — தமிழ் காக்கும் கடமைக்காக, நமது முன்னாள் மடமைச் செயல்களை மறந்துவிடும் இயல்பினர், அவர்கள்.

அவர்களுக்குத்தான் இன்று மனுச் செய்து கொள்கிறோம், நீங்கள் முன்பு கூறியது போலவே, இந்தி ஏகாதிபத்யம் மிரட்டுகிறது — உணருகிறோம் — இனி இதனை ஒழிக்கும் முயற்சியைத் துவக்குங்கள் — ஒத்துழைக்கிறோம் — என்று கூறுகிறோம்.

மொழிப் போர் — மொழிப் போர்! — இனி இன்று!! ஆங்கில ஏகாதிபத்யதை ஒழித்தாகிவிட்டது.

இந்தி ஏகாதிபத்யத்தை ஒழித்தாகவேண்டும்!

அதற்கான, அணிவகுப்பைத் தயாராக வைத்துள்ள அன்பர்களே! புறப்படுங்கள்! முரசு கொட்ட வருகிறோம்! களத்திலே கூடுவோம் நண்பர்களாக! கணமும இனித் தாமதியோம்!

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிமையானது எங்கும் காணோம் — என்ற பாரதி வாக்கை மறவோம் — இந்தி ஏகாதிபத்யத்தை ஏற்போம்! இந்தி ஒழிக!

தமிழ் வாழ்க!

தமிழ் வாழ, இந்தி ஒழிக!

நான் பூரிப்பால் தாக்கப்பட்டுப் போனேன் — இதனைப் படித்து முடித்ததும், இதன்றோ வீரம்! இதன்றோ நேர்மை! பண்புடையோர் கொள்ள வேண்டிய போக்கன்றோ இது! குற்றம் உணர்ந்து உருகுகிறார்! கொட்டுவேன் முரசு என உறுதி தருகிறார்! தொடுப்போம் மொழிப்போர் என்று பரணி பாடுகிறார்! எவ்வளவு வீரம் — நேர்மை! இனித் தமிழகத்துக்கு என்ன குறை! இனி வெற்றிக்கு என்ன தடை! வீழ்ந்தேபோவர் இந்தி வெறியர்கள்! ஒழிந்தேபோகும் இந்தி ஏகாதிபத்யம்! — என்று எண்ணினேன் — மெல்லிய குரலிலே, எனக்கு நானே கூறியும் கொண்டேன், நேர்மையும் வீரமும் ததும்பும் ஆச்சொல்லோவியம் தீட்டப்பட்ட தாளைக் கண்களிலே ஒத்திக்கொண்டேன் — குமரப்பன் கரத்தால் ஏற்பட்ட மையும் ஏன் கண்ணீரும் கலந்தது.

உட்புறக் கதவு திறந்தது — அதிசயம், ஆனால் உண்மை — பாதி முகத்தைத் துணியால் மறைத்துக் கொண்டிருந்த ஒருவர் வந்தார் — வணக்கம் கூறிக்கொண்டே — கடிதத்தை, ஏன் ஜேபியில் வைத்துக்கொண்டேன்.

“பரதன்…”

“நான்தான்! தாங்களா தமிழ் மகன்?”

“ஆமாம்”

“பாதிமுகம்…?”

“ஏன் மறைக்கப்பட்டிருக்கிறது என்கிறீரா? காரணம் இருக்கிறது! இன்னும் கொஞ்ச நாட்களுக்குத் தமிழ் மகன் — என்பது யார் என்று தெரியாமலிருப்பது நல்லது அதற்காகத்தான் இந்த முகமூடி…
எனக்குப் பிடிக்கவில்லை.. தமிழ்மகன் யார் என்று அறிய இவலோடு வந்திருக்கிறேன்.

ஆவல் இருக்கும்… சகஜந்தானே… இந்தி சம்பந்தமாக நான் எழுதிய கட்டுரையைப் பார்த்தபிறகு ஆவலாகத்தான் இருக்கும்.

கட்டுரை என்று சர்வசாதாரணமாகக் கூறுகிறீரே! தமிழ்மகனே! கட்டுரை அல்ல அது — உள்ளத்தின் படப்பிடிப்பு — உணர்ச்சிச் சித்திரம் — தமிழரின் எதிர்கால வாழ்வுக்கு அடிப்படை…

ரொம்பப் புகழ்கிறீரே!

ஏன், கூடாது, தமிழ்மகனே! வீரமும் விவேகமும் நிரம்பிய மடல் விடுத்திருக்கிறீர் — சோர்ந்து கிடக்கும் தமிழகத்தைத் தட்டி எழுப்ப..

ஒரு வகையில் உண்மைதான்.

தமிழ் மகனே! இந்தி ஏகாதிபத்யம் ஏற்படுத்த உண்மையாகவே முயற்சி நடைபெறுகிறதா?

சந்தேகம அதற்கு? வடநாட்டுத் தலைவர்கள். இந்தி ஏகாதிபத்யத்தை உருவாக்கிக் கொண்டுதான் வருகிறார்கள் ஏன் கட்டுரையிலே, நான் தெளிவாக அதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

தமிழ்மகனே! கல்கி ஆசிரியர், எப்படி இதனை வெளியிடச் சம்மதித்தார்.

(முக்கியமான விஷயத்தைக் கூறாதிருந்தேன். பொறுத்திடுக — நான் தமிழ்மகனைக் காண்பதற்காகச் சென்ற இடம் கல்கி காரியாலயம்)
சூட்சமம் இருக்கிறது அதிலே
அவருடைய கருத்தும் அதுதானே

இருக்கலாம் — வேறாகவும் இருக்கக்கூடும்

உண்மை தமிழ்மகன் வேறு கருத்துக் கொள்ள முடியாது.

ஆமாம்.. நான் அதையும ஏன் கட்டுரையில் குறித்திருக்கிறேனே.

தமிழ்மகனே! இந்தி ஆதிக்கம் என்று தீட்டாமல், இந்தி ஏகாதிபத்யம் என்று, கட்டுரைக்குத் தலைப்புக் கொடுத்திருக்கிறீரே, காரணத்தோடு தானே?

காணமற்றுத் தீட்டுவேனா? ஆதிக்கம் என்பது, ஒன்று இளவும், மற்றொன்று, அடங்கி நடக்கவுமாக நிலைமை இருப்பதற்கு ஆதிக்கம் என்ற பெயர் பொருந்தும் ஏகாதிபத்யம் என்பது அதைவிடக்டேகானதல்லவா? மற்றவற்றை அழித்தொழிது ஒன்று தலைதூக்கி, உடு எதிர்ப்பு இன்றி இருக்கும் நிலைமைதானே, ஏகாதிபத்யம் இந்திமொழியை, இதற்கான கருவியாக்குகிறார்கள் மற்ற மொழிகளலெல்லாம் அழிக்கப்படவேண்டும். அல்லது ஏடுபிடியாக — கூலியாக — இக்கபட்டுவிட வேண்டும். என்பதுதான் அவர்கள் திட்டம் ஆகவேதான் ஏகாதிபத்யம் என்று தீட்டினேன்.

உண்மை, தமிழ்மகனே! மரமண்டை களுக்குக் கூடப் புரியக் கூடியவதமாகவே தீட்டியிருக்கிறீர்.

ஏகாதிபத்யம், என்ற சொல் போதுமல்லா, அந்தத் திட்டத்தின் தீமையை விளக்க!

ஆமாம், ஆமாம், நமது நாட்டு மக்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக எந்தச் சொல்லை, தீதானது, கேவலமானது, ஒழிக்கப்படவேண்டியது என்று கூறிவந்தனரோ, அந்த ஏகாதிபத்யம் என்ற சொல்லையல்லவா உபயோகித்திருக்கிறீர்.

நாற்றம் தாங்க முடியவில்லை, குடலைப்ப ÷றட்டுகிறது, பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது, எண்ணினாலே அருவருப்புண்டாகிறது என்று ஒருபொருளைப் பற்றிப் பலப்பல கூறுவதற்குப் பதிலாக, அந்தப் பொருளை, அது மலம் போன்றது என்று இரத்னச் சுருக்கமாகக் கூறிவிடலாமல்லவா!

ஆமாம் — அதுபோலத்தான், இந்தி தீதானது, பயங்கரமானது, நமது வாழ்வைப் பாழாக்குவது, நம்மை அடிமையாக்குவது, என்றெல்லாம் விவரமாகக் கூறுவதற்குப் பதிலாக, ஏகாதிபத்யம் என்ற ஒரே சொல்லை உபயோகித்தீர். தமிழ்மகனே! உமது அறிவுத் திறமையைப் பாராட்டுகிறேன்.
மேலும், ஏகாதிபத்யத்தை எதிர்த்து எதிர்த்து, நமது மக்கள் பழகிவிட்டார்கள். ஆங்கில ஏகாதிபத்யத்தை ஒழித்துவிட்டார்கள் — அவர்களிடம் இதோ ஒரு புதிய ஆபத்து வருகிறது — இந்தி ஏகாதிபத்யம் வருகிறது என்று கூறினால் போதும், உடனே அவர்கள் நிலையைப் புரிந்து கொண்டு எதிர்த்து ஒழிக்கக் கிளம்புவார்கள். அதனால் தான், இந்தி ஏகாதிபத்யம் என்ற தலைப்பு கொடுத்தேன்.

தமிழ் மகனே! நமது மக்கள் இந்தியால் ஏற்பட இருக்கும் — ஏற்பட்டுக் கொண்டு வரும் ஆபத்தைச் சரிவர உணர்ந்து கொள்வார்களா? உணர்ந்து கொண்டாலன்றோ, இந்தி ஏகாதிபத்யதை ஒழிக்கக் கிளம்புவர். எனக்குள்ள கவலை அதுதான், உண்ர்ந்து கொள்வார்களா?

உணர்ந்து கொள்வார்கள் — உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், நான் படடவர்த்தமனாக எழுதியிருக்கிறேன். கவலைப்படாதீர் உணர்ந்து கொள்வார்கள் நிச்சயமாக. இதோ கேளும், இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கினான் என்ற கதைபோல இருக்கிறது இந்த விஷயம் — என்று தீட்டியிருக்கிறேனே. பழமொழி நமது மக்களுக்கு நன்கு தெரிந்தது தானே. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குபவன் யார்? காதகன், கயவன், கன்னெஞ்சக்காரன் தானே செய்வான் அதுபோல, அந்தக் கருத்துத் தெரியும்படிதான், பழமொழியைப் பிரயோகித்திருக்கிறேன். பூடகமாகச் சொன்னால் போதாது என்று, பச்சையாகவே எழுதியிருக்கிறேன்.

இந்தியாவில் இந்தி ஐகாதபத்தியத்தையே நிலைநாட்டிவிடப் பிரியப்படுகிறார்கள். மற்றப் பாஷைகளையும் மற்றப் பாஷைக்காரர்களையும் இந்தி பாஷைக்கு அடிமையாக்கி விடவே எண்ணுகிறார்கள்.

தமிழ் மகனே! திட்டமாகத்தான் கூறியிருக்கிறாய்.

அதுமட்டுமா? இந்தி ஏகாதிபத்யப் பிரயத்தனம் தற்சமயம் பல இடங்களில் பல உருவங்களில் தலை தூக்கித் திருவிளையாடல் புரிவதைப் பார்த்து வருகிறோம் — என்றும் தீட்டியிருக்கிறேன்.

ஆமாம் — பல உருவங்களிலே கிளம்புகிறது, இந்தி ஏகாதிபத்யம் தபால் உத்தியோகத்திலே உள்ளவர்கள் அனைவருக்கும் இந்தி தெரிந்திருக்கவேண்டும், ஆகையால், தபாலாபீசுகளிலெல்லாம் இந்தி போதிக்க வகுப்புகள் ஏற்பாடு செய்யவேண்டும். என்று யாரோ, பம்பாய் அதிகாரி ஒருவர் பேசினதாகச் சின்னாட்களுக்கு முன்பு செய்தி வந்ததே! தமிழ் மகனே! நெஞ்சு பதைக்கிறதல்லவா, இப்படிப்பட்ட செய்திகளைப் படிக்கும்போது, வெள்ளைக்காரன் செய்த கொடுமையைவிட மோசமானதாக இருக்கிறதே இவர்கள் செய்வது.

ஆமாம்! அதையும் தெளிவாகத் தீட்டியிருக்கிறேன்.

ஐதோ ஆங்கிலேயர்களாவது ஆண்டியன் இங்கிலீஷ் என்று தங்களுக்குள் சிரித்துவிட்டு, ஐதோ காரியம் நடந்தால் சரி என்று இருந்தார்கள். ஆனால், இந்தி ஏகாதிபத்யவாரிகளோ ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மற்றப் பாஷைக்காரர்களையும் மட்டந் தட்டவும் அதைக் காரணமாகக் கொண்டு கீழே அமுக்கி வைக்கவும் பார்க்கிறார்கள் — என்று எழுதியிரக்கிறேன். கவனித்தீரோ?

கவனித்தேன் — களிப்படைந்தேன், தமிழ் மகனே!

இந்திய சர்க்கார் உத்யோகங்களிலும் இந்தியின் ஏகாதிபத்யம் கொடுமையுடன் ஆட்சி செலுத்தத் தொடங்கியிருக்கிறது — என்று கூடத் தீட்டினேன்.

பார்த்தேன், தமிழ் மகனே! பார்த்தேன். இந்தி, இந்தியாவின் தேசிய பாஷையாக வேண்டுமென்று தானே முதலிலே அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்?

“ஆமாம்! ஆனால், அவர்களின் உள்நோக்கம் வேறு, அதையும் நான் தெளிவுபடுத்திவிட்டேன்.”

இந்திபாஷை இந்தியாவின் தேசிய பாஷையாவதோடு அவரக்ள் திருப்தியடையத் தயாராயில்லை. இந்தியாவில் இந்தி ஏகாதிபத்யத்தையே நிலைநாட்டிவிடப் பிரியப்படுகிறார்கள். மற்றப் பாஷைகளையும் மற்றப் பாஷைக்காரர்களையும் இந்தி பாஷைக்கு அடிமையாக்கிவிடவே எண்ணுகிறார்கள்.
என்று வட்டவர்த்தனமாக எழுதியிருக்கிறேன்.

இங்கிலீஷ் இருந்த இடம் இந்திக்கு வேண்டுமாம், தமிழ் மகனே!

அப்படித்தான் சொல்லுகிறார்கள் இந்தி பாஷை வெறியர்கள். அவர்களின் ஆணவத்தை மண்டையிலடிக்கிறபடி எழுதியிருக்கிறேன். இந்தியின் யோக்யதை என்ன — இங்கிலீஷின் யோக்யதை என்ன!

தமிழ் மகனே! தைரியமாகத்தான் எழுதியிருக்கிறாய்.

ஆங்கில மொழியிலுள்ள அறிவுக் களஞ்சியங்களுக்கு அளவு சொல்ல முடியாது. ஆங்கில மொழியில் உள்ள இலக்கியச் செல்வம் ஏழு சமுத்திரங்களையும் விடப்பெரியது.
என்றல்லவா, எழுதியிருக்கிறீர்.

ஆமாம் — உண்மையைக் கூறுவதிலே, பயம் ஏன் இருக்கவேண்டும்.

தமிழ்நாட்டைப் பற்றிய விவரங்களûச் சொல்லும் புத்தகங்கள் தமிழில் உள்வற்றைக் காட்டிலும் ஆங்கிலத்தில் அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
என்று கூடத்தான் எழுதிக் கேட்டிருக்கிறேன்.

ஆமாம், ஆஸ்திரேலியா தேசத்தையடுத்த கடல்களில் எத்தனை மீன்கள் இருக்கின்றன என்பதைப் படங்களுடன் விவரமாகக் கூறும் பெரிய புத்தகங்கள் ஒன்பது இருக்கின்றன. — என்று கூட எழுதியிருக்கிறீர்.

ஆமாம் — ஏன் சிரிக்கிறீர் — மொழி ஆராய்ச்சியில் உடுபட்டு, மீன் ஆராய்ச்சிக்குச் சென்று விட்டேனே என்று எண்ணிச் சிரிக்கிறீரா?

இல்லை, இல்லை, தமிழ் மகனே! இங்கிலீஷை எவ்வளவோ கேவலமாகக் கண்டித்துப் பழக்கப்பட்டவராயிற்றே, இந்தக் கல்கி ஆசிரியர் போன்றவர்கள், அவருடைய அலுவலகத்தில் இருந்துகொண்டே, இவ்வளவு துணிவுடன் இங்கிலீஷைப் புகழ்கிறீர்ரே என்று எண்ணினேன் — சிரித்து விட்டேன்.

கொஞ்சம் காரசாரமாகக் கூட எழுதிவிட்டேன்.

ஆங்கிலத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக இந்தியை உபயோகிப்பது என்பது முழு மடமையே யாகும்.
என்று எழுதியிருக்கிறேன்.

முழு மடமை! — தமிழ் மகனே! தைரியமாகத்தான் தீட்டி விட்டீர்.

அறிவைத் தேவதற்கோ இலக்கியச் சுவையை அனுவிப்பதற்கோ பண்பாட்டை வளர்ப்பதற்கோ இந்தி பாஷையினால் பயன் ஒன்றும் இல்லை.
என்று எழுதியிருக்கிறேன்.

உண்மைதான் அது! என்ன வளம் உண்டு. இந்தியில்? நேற்றுத் தோன்றியது. நமது தமிழ் தொன்மை வாய்ந்தது. நமது தமிழை ஒழிக்க ஒரு முயற்சி நடக்கிறதென்றால், தமிழ் மகனே! இரத்தம் கொதிக்காதா.

இரத்தக் கொதிப்புடன் தான் தீட்டியிருக்கிறேன்.

இந்தி பாஷைக்காரர்கள் அந்தப் பாஷையின் ஏகாதிபத்யத்தை ஸ்தாபிக்க விரும்புகிறார்கள், என்று நாம் சொல்லுவது விளையாட்டல்ல, வெறும் பயமுறுத்தல் அல்ல. வடநாட்டு அரசியல்வாதிகள் — இந்திப் பண்டிதர்களுக்கிடையே இத்தகைய ஏகாதிபத்ய வெறி வளர்ந்து வருகின்றதென்பதற்குப் பல அறிகுறிகள் காணப்பட்டு வருகின்றன. வட நாட்டுக்குச் சென்று வரும் தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் பலரும் வட நாட்டில் வாழ்க்கை நடத்தி வரும் தமிழர்கள் பலரும் ஏற்கெனவே இதைப் பற்றிப் புகார் செய்து வந்திருக்கிறார்கள்.
என்றெல்லாம் எழுதியிருக்கிறேன்.

படித்தேன், படித்தேன், தமிழ் மகனே! உமது கட்டுரையின் சாரத்தைச் சொல்லட்டுமா
1. இந்தி ஏகாதிபத்யம், ஒரு ஆபத்து.
2. வடநாட்டு அரசியல் தலைவர்களும் பாஷைப் பண்டிதர்களும் இந்தி ஏகாதிபத்யத்தைப் புகுத்துகிறார்கள்.
3. இந்த வெறி வளர்ந்து கொண்டே வருகிறது.
4. வடநாடு சென்று வரும் தமிழர்கள் இதனை உணர்ந்து உரைத்திருக்கிறார்கள்.
5. மற்ற பாஷைகளையும பாஷைக்காரர்களையும் மட்டந் தட்டி அடிமையாக்கவே, இந்த ஏகாதிபத்ய வெறியர்கள் திட்டிமிட்டிருக்கிறார்கள்.
6. இந்தி, வளமற்ற மொழி.
7. அறிவுத் துறைக்கோ இலக்கியத்துக்கோ, பண்பாட்டுக்கோ பயன்படாதது இந்தி.
8. இங்கிலீஷ் பாஷைக்கு உள்ள இலட்சணம் இந்திக்குக் கிடையாது.
9. இந்தி ஏகாதிபத்ய வெறியை எதிர்த்து ஒழித்தாக வேண்டும்.
10. இந்தி ஏகாதிபத்யம் என்பது பாஷை ஆளவோடு உள்ளது அல்ல அரசியல் துறையிலும் நுழைகிறது.
ஏன் கட்டுரையின் சாரம் அதுதான்.

தமிழ் மகனே! இவ்வளவு விளக்கமாகவும் வீரமாகவும் கட்டுரை திட்டியதற்காக ஏன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தி என்றால், ஏதா நமது வசதிக்காகக் கற்றுக்கொள்ள வேண்டிய மொழி, அதனால், நமது மொழிக்கோ மக்களுக்குகோ ஆபத்து வராது. இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி, தேசிய மொழி இருப்பது அவசியம். அதற்காகத்தான் இந்தி — என்று நமது மக்களை நம்பும்படி செய்துவந்தனர். அங்ஙனம் செய்தவர்களில் சிலர் விவரம் அறியாதவர்கள், சிலர் நயவஞ்சகர்கள், உமது கட்டுரை இந்த இரு சாராரையும் திருத்தும் — தமிழருக்கு விழிப்புண்டாக்கும் இவ்வளவு தீட்டிய உம்மைக் காண வேண்டும் என்று ஏன் மனம் துடிக்கிறது — ஏன் முகத்தை மறைத்துக் கொண்டிருக்கிறீர் — தமிழ் மகனே! முகமூடியை எடுத்துவிடும், தமிழர் உம்மைக் காணட்டும்.

வேண்டாம், வேண்டாம், அதற்கு இது சமயமல்ல.

தமிழகத்திலே, இந்த மொழி கூடாது என்று பல ஆண்டுகளுக்கு முன்பே கூறி, கிளர்ச்சி செய்து, அடக்குமுறைக்கு ஆளான கூட்டத்தார் இருப்பது, தமிழ் மகனே! உமக்குத் தெரியுமே, அவர்கள் உமது கட்டுரையைக் கண்டால் களிநடமாடுவார்கள் — கை குலுக்க வருவார்கள்..

ஆமாம் — அதற்காகத்தான் நான், முகமூடி போட வேண்டி இருக்கிறது.

ஏன்?

ஐனா! நான் இன்று தீட்டியுள்ளவைகள் யாவும் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தீட்டி வந்தவை. இந்தி ஏகாதிபத்யம் — என்ற சொற்றொடரை உபயோகித்தவர்களே, அவர்கள்! வடநாட்டவர், ஆதிக்க வெறியுடன் இந்தக் காரியத்தைச் செய்கிறார்கள், என்று அவர்கள் எச்சரிக்கை செய்தனர் — இந்தியை எதிர்த்தனர்.

ஆமாம் — இன்று அதே கருத்து, கல்கியில் இடம் பெறக் கண்டு களிப்பர்.

இல்லை — கேலி பேசுவர் படுகுழி இவ்வளவு காலத்துக்குப் பிறகு தானே தெரிகிறது. விழி, பழுதா உனக்கு? என்று கேட்பர். இந்தி ஒழிக என்ற முதல் முழக்கத்தை நாங்கள் கிளப்பியபோதே, நீயும் ஒத்துழைத்திருந்தால் — அந்தக் கண்ணியம் வராவிட்டாலும் — எதிர்க்காமலாவது இருந்தால், இன்று இந்தி இப்படி வெறிபிடித்து அலையுமா? என்று இடித்துரைப்பர்.

தமிழ் மகனே! அச்சம் வேண்டாம், அறிவு, உதிக்கக் காலதாமதமாயிற்று, எனினும் உதித்ததே, அதுபோதும் என்று எண்ணி அகமகிழ்வர்.

இல்லை எனக்குப் பயமாகத்தான் இருக்கிறது. அவர்கள் ஒரு சமயம் பெருங்குணத்தால் என்னை மன்னித்தாலும், பொதுமக்கள் என்ன எண்ணுவர் என்னைப்பற்றி, இந்திமொழி மூலம் இவ்வளவு பெரிய ஆபத்து வந்திருக்கிறது என்று, இன் கல்கியில் கட்டுûடிர வெளிவருகிறதே, இதே விஷயத்தைப் பல ஆண்டுகளக்கு முன்பே, சொல்லடி, கல்லடி, தடியடிக்கு மத்தியிலே நின்றுகொண்டு கூறினரே திராவிட இயக்கத்தால், அப்போது கல்கியன் அறிவுக்கண் ஏன் குருடாகிக் கிடந்தது. ஆணவம் ஏன் மேலோங்கி இருந்தது. ஏன் தமிழர் பெரும்படையை கல்கிக்கூட்டம் எதிர்த்தது, என்றெல்லாம் எண்ணுவர் — ஏதேதோ பேசுவர் ஏசுவர் — இதற்காகத்தான், நான் யார் என்பதை வெளியே தெரியவிடக்கூடாது என்று மூடி போட்டுக் கொண்டிருக்கிறேன் அது மட்டுமில்லை — இரண்டொரு வாக்கியம் அவர்களையே கண்டித்தும் இருக்கிறேன்.

தமிழ்நாட்டில் ஒரு கூட்டத்தார் சில காலத்துக்கு முன்பு இந்தி ஒழிக என்ற கூச்சலைக் கிளப்பினார்கள். இந்தக் குறுகிய துவேஷ மனப்பான்மை கொண்டு கூச்சலைத் தமிழ்ப் பெருமக்கள் எதிர்த்து ஒழித்துக் காட்டினார்கள்.
என்று எழுதியிருகிறேன்.

தமிழ் மகனே! அதையும் கண்டேன் — பதைத்தேன் — இந்தி வெறியரின் போக்கையும் நோக்கத்தையும் இவ்வளவு தெளிவாகக் கண்டறிந்து இவ்வளவு பட்டவர்த்தனமாகக் கண்டிக்கும் தமிழ் மகன் யாரைப் போற்றவேண்டுமோ, அந்தக் கூட்டத்தாரைக் கண்டித்து எழுதுகிறாரே, ஏன் என்று எண்ணினேன் — திகைத்தேன் — தெளிவு பெறவே இங்கு வந்தேன் — இதைக் கண்டேன்.
இவ்விதம் கூறிக் கொண்டே கம்பாசிடர் குமரப்பன், மேஜை மீது கொண்டு வந்து வைத்த, காகிகதச் சுருளைக் கொடுத்தேன், தமிழ்மகன் கரத்தில் அதைப் பார்த்ததும் தமிழ் மகன் துடிதுடித்தான்.

தமிழ்மகனே! இதை இந்த வாரக் கல்கியில் வெளியிடப் போகிறாயா?.. என்று ஆர்வத்துடன் கேட்டேன்.

இல்லை — இல்லை இது எப்படி உமக்குக் கிடைத்தது என்று தமிழ் மகன் கேட்டார். அந்தக் காகிகதச் சுருளை எனக்குக் கிடைத்த விதத்தைக் கூறினேன். திடுக்கிட்டுப் போன தமிழ்மகன் அந்தக் காகிதச் சுருளை மேஜை அறையிலே வைத்துப் பூட்டிவிட்டார்.

இந்த வாரம் வெளி வருகிறதா? என்று மீண்டும் கேட்டேன்.

இல்லை — இது போனவாரம் நான் வெளியிட்ட இந்தி ஏகாதிபத்யம் என்ற கட்டுரையில் இருபகுதிதான் என்று சோகத்துடன் கூறினார் தமிழ் மகன்.

பத்திரிகையில் இந்தப் பகுதி காணோமே என்று நான் கேட்டேன்.

கடைசி நேரத்தில், இந்தப் பகுதியை நீக்கிவிட்டேன் என்று மீண்டும் சோகத்துடன் பதில் கூறினார் தமிழ் மகன்.

ஏன்? என்றேன், நான் — கோபம் பிறந்தது.

எப்படி, என்னை நானே கேவலப்படுத்திக் கொள்ளமுடியும் என்றார், தமிழ்மகன்.

கோழைத்தனம், என்று கூறும் என்றேன் நான் கோபமிகுதியால்.

இந்தி வெறியர்களைக் கண்டிக்கவேண்டும் என்று தோன்றிற்று. எழுதிக் கொண்டே போனேன் — கட்டுரை வளர, வளர, நானே பயந்து போனேன் — இந்தி ஒழிக என்று கூவிய கூட்டத்தார் திட்டுவது போலவே இருந்தது ஏன் கட்டுரை ஏன் நிலைமை, ஏன் சகாக்கள் — எனக்கு உள்ள சூழ்நிலை, இவைகளை எண்ணினேன் செச்சே! ஆபத்தில் சிக்கிக்கொண்டோம் என்று தோன்றிற்று — உடனே கட்டுரையைத் திருத்தினேன் — இந்தி ஒழிக என்று பேசியவர்களைக் கொஞ்சம் கண்டித்து எழுதினேன் வேறு வழியில்லை என்றான் தமிழ் மகன்.

சுயநலம்! என்றேன் நான் சூடாக.

சூழ்நிலை என்றார் தமிழ் மகன்.

சூழ்நிலையை வெல்பவனே வீரன் தமிழன் என்று நான் கூறினேன்.

என்னால் அது முடியவில்லையே என்றார் அழுகுரலில் தமிழ் மகன்.

அப்படியானால் நீ உண்மைத் தமிழ் மகனல்லன் என்று நான் உரக்கக் கூவினேன். ஏன் எதிரே உட்கார்ந்து கொண்டிருந்த தமிழ்மகன் பயத்தால் நடுங்கினான் — நான் கோபத்தால் துடித்தேன் ஏன் குரல் மேலும் மேலும் கோபத்தைக் கொட்டலாயிற்று.

உண்மைத் தமிழ் மகன் அல்ல!
உண்மைத தமிழ் மகன் அல்ல!
உண்மைத் தமிழ் மகன் அல்ல!
பெருங் கூச்சலிட்டேன்.

என்னடா, தூக்கத்திலே, இந்த அமர்க்களம் என்று கேட்டபடி, என்னைத் தட்டி, ஏழுப்பினேன், ஏன் நண்பன் வீரன் கண்களைக் கசக்கிக் கொண்டே எழுந்தேன். படுக்கையில் என்பக்கத்தில் மே 7ந் தேதிய கல்கி இருந்தது.

(திராவிட நாடு — 14.5.50)

“வீரா! விசித்திரமான கனவு கண்டேன், கல்கி காரியாலயம் சென்றது போலவும், அங்குத் தமிழ் மகன் என்பவரைக் கண்டது போலவும், பேச ஆரம்பித்து அது கடைசியில் சண்டையில் வந்து முடிந்தது போலவும் கனவு கண்டேன். எல்லாம் இந்த இதழ் படித்ததால் ஏற்பட்ட விளைவு” என்று கூறிவிட்டு, இந்தி ஏகாதிபத்யம் என்ற கட்டுரை வெளிவந்த கல்கி இதழைத் தந்தேன். வீரன், மிக அலட்சியமாக அதைப் பார்த்துவிட்டு, பரதா! வேகாத பண்டத்தைத் தின்றால் உடம்புக்குக் கேடு தருமே, அது போலவேதான் கனியாத கருத்தை உட்கொள்வதும் கேடு தரும் என்றான்.

“அப்படியானால் கல்கியில் வந்துள்ள கட்டுரை, கனியாத கருத்தா? எப்போதுமே வீரா! நீ சற்று முன் கோபி” என்றேன் நான், “என்ன வேண்டுமானாலும் பேசு, ஏசு, கவலை கொள்பவன் நானல்ல. அர்த்தமற்ற பேச்சையும், அகத்திலே மூண்டு கிடக்கும் தோல்வித் தீயினால் கிளப்பி விடப்படும் ஆகங்காரப் பேச்சையும், உள்ளது போச்சுதே என்ற மன ஏரிச்சலால் உண்டாகும் உள்றலையும், நான் வாயசைவு என்று கொண்டு, தூசு எனத் தள்ளிவிடுபவன், என்றான் வீரன். “அடடே! என்னப்பா இது, ஆரம்பமே காரமாக இருக்கிறது” என்று நான் சிரித்த முகத்துடன் கூறினேன். கோபந்த தணிந்தவனாய் வீரன், பரதா! கல்கியில், வெளிவந்த இந்தக் கட்டுரையை ஏன் நீ அவ்வளவு கருத்துடன் கவனிக்கவேண்டும். என்ன பிரமாதமான கண்டுபிடிப்பு அதிலே இருக்கிறது, அறிவுத் தெளிவால் தமிழ்மகன் எந்த அமெரிக்காவை, அந்தக் கட்டுரையிலே காட்டியிருக்கிறார். மந்த மதியினருக்கும் தெரியும் விஷயத்தைக் கொஞ்சம் சுந்தரத் தமிழிலே திட்டி விட்டிருக்கிறார். என்றான். ஒரு வகையில் சரிதான், என்றாலும், கல்கியில் இதுபோல இதுவரை வெளிவந்ததில்லையே! என்றேன் நான் இது ஒரு புது சீசன், பரதா! இந்தி மொழி மூலம் தமிழகத்துக்குக் கேடு மூண்டு வருகிறது என்பதைப் பலரும் புரிந்து கொண்டு விட்டனர். இதை அறிந்து கல்கி, சீசன் சரக்கு தயாரித்திருக்கிறது.

இந்தியால் ஆபத்து ஏற்பட இருக்கிறது என்று எண்ணும் பல்லாயிரவருக்கு இந்தச் சரக்கு விற்பனை செய்யலாம் என்ற நோக்கத்துடன். இந்த வியாபார நோக்கம் இல்லாமல், உண்மையிலேயே, மனஎழுச்சியும், நேர்மையும் இருந்திருக்குமானால், தமிழ் மகன் எந்த இந்தி ஏகாதிபத்யத்தைக் கண்டித்துக் கட்டுரை தீடடுகிறாரோ, அதே இந்தி ஏகாதிபத்யத்தை கருவிலிருக்கும்போதே கண்டித்த நம்மவர்களை, தமிழர்களைக் கண்டிப்பாரா? எவ்வளவு நெஞ்சழுத்தமும் நேர்மைப் பஞ்சமும் இருந்தால், இந்தி மொழி மூலம் வடநாட்டு வன்கணாளர்கள் ஒரு ஏகாதிபத்யத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டு வேலை செய்கிறார்கள் என்பதையும் எடுத்தெழுதிவிட்டு, இதை இந்தத் தமிழ் மகன் தெரிந்து திகைப்பதற்கு நெடுநாட்களுக்கு முன்பே தெரிந்து, நாட்டுக்குத் தெரிவித்து, நாடாள்வோரின் தாக்குதலுக்கும் உடுகொடுத்து, இரு வாலிபர்கள் பிணமாகக் கண்டு பெருந்துயருள்ள தமிழர்களைத் தாக்கி எழுத மனம் வரும் என்றான் வீரன். அந்த விஷயமாக விவாதம் முற்றியபோது தான், வீரா! நான், அந்த ஆசாமியை, உண்மைத் தமிழ் மகன் அல்ல என்று கூறினான் — கனவில் என்றேன் நான். மனிதப் பண்பு துளியாவது உள்ளவர்கள், தமிழ் மகன் நம்மைக் கண்டித்ததுபோலக் கண்டிக்கமாட்டார்கள். எவ்வளவு காலத்துக்கு முன்பு, நாம், இந்தத் தமிழ் மகன் இன்று தன் ஆதிமேதாவித்தனத்தால் கண்டுபிடித்து உண்மையை, பட்டி தொட்டிகளிலெல்லாம் எடுத்துக் கூறினோம். அப்போது இந்தத் தமிழ் மகன்களெல்லாம் இந்தி வெறியர் முன் இளித்தக் கொண்டு கிடந்தனர். நம்மை நிந்தித்தனர். தமிழ் கெடாது என்று சாதித்தனர், போலீசை நம் மீது ஏவிவிட்டனர், தாய்மார்கள் சிறையில் தள்ளப்பட்டபோது கேலி பேசினர். இதுபோலச் செய்ததற்குக் காரணம் புத்திக் குறைவாக இருந்தால், புத்தி வந்ததும், தமது பழைய தவறுகளுக்காக வருந்திக் கழுவாய் தேட முற்படுவர். ஆனால் அவர்கள் அன்றுகொண்ட போக்குக்குக் காரணம் புத்திக் குறைவாக இருந்தால், புத்தி வந்ததும், தமது பழைய தவறுகளுக்காக வருந்திக் கழுவாய் தேட முற்படுவர். ஆனால் அவர்கள் அன்றுகொண்ட போக்குக்குக் காரணம் புத்திக் குறைவு அல்ல! அப்போதே அவர்கள் அறிவார்கள், வர இருக்கும் ஆபத்தை, இப்போதுதான் போதி மரத்தடியிலே உட்கார்ந்தனர் என்று எண்ணாதே, பரதா! தெரிந்தே, தீமைக்கு உடந்தையாக இருந்தனர். இன்று, தேம்புவதும், திகைப்பதுமாகக் காட்சி காட்டுவது, நான் முன்பே கூறியபடி சீசன் சரக்கு, வேறில்லை, என்றான் வீரன்.

“இந்தி ஆதரவாளர்களாக அன்று இருந்தவர் அனைவருமே வா, தெரிந்து தீமைபுரிந்தவர்கள்?” என்று நான் கேட்டேன். “இல்லை, இல்லை பரதா! ஆதரவாளர்கள் அனைவருமேவா, அக்ரமக்காரர்கள்! அப்படிச் சொல்வேனா? முறைதானாகுமா? சிலபேர், உண்மையாகவே, இந்தி மோகினியால் தமிழகத்துக்கு ஆபத்து வரும் என்பதை அறிந்திருந்தும், தத்தமது சிறு இலாபத்துக்காக, எலும்புத் துண்டுக்காக, எச்சிலை நக்குகிறோம் இழிவாயிற்றே என்ற எண்ணமின்றி எச்சிலானாலும், ஜலமும் சீனியும் நெய்யும் பருப்பும் கலந்த பாயாசம் இருந்த ஆலையாயிற்றே என்றெண்ணி மகிழ்வதுபோல், ஆதிக்கவேட்டை யாடும் வடநாட்டுத் தலைவர்களுடன் கூடிக்கொண்டு, தாய்மொழி காத்திடப் பணியாற்றிய நம்மைத் தாக்கினர். இந்திக்கு எதிர்ப்போ எங்கும் மூண்டுவிட்டது, கிளர்ச்சி அருமையாக உருவெடுத்தது, தூங்கிக்கிடந்த தமிழகம் விழிப்புற்று வீறுகொண்டெழுந்தது கண்டு இந்தி ஆதிக்காரர்கள் தமது திட்டம் நொருங்கிப்போகும் என்று அஞ்சி, குழைவும், குளறலும் கலந்த குரலில் பேசிக் கொண்டு நாலுவார்த்தை தெரிந்துகொண்டால்போதும், உங்க்ள தாய்மொழிய்ன வளத்தை உலகு அறியுமே. அதைப் புறக்கணிக்கச் செய்வோமா, என்றெல்லாம் கொஞ்சுமொழி பேசினர் — அந்தச் சமயத்திலே, மாற்றானின் கோட்டைக் கதவு தூளாகும் நேரத்தில், உடனிருப்போன் வெற்றி வீரனை முதுகில் குத்துவதுபோல, இந்தத் தமிழ் மகன்கள், ஆதரவாளர்களாயினர் — வெட்கம், மானம், ரோஷத்தை விட்டுவிட்டு, வெந்ததைத் தின்றிட, எந்த வேலையையும் செய்திடச் சம்மதிக்கும் வெடிவெட்டிகளாயினர் — தமிழ் இட்லி, இந்தி சட்னி என்றும், தமிழ் காபி, இந்தி சர்க்கரை என்றும் கதை பேசிக் காலந் தள்ளினர். எதிர்ப்பாளர்கள் எங்கும் கிளம்பிடக் கண்டு கலக்கமுற்ற சமயத்தில், இந்த ஆதரவாளர்கள் கிடைத்திடவே, ஆதிக்க வெறியர்கள், இவர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கினர். தாசராகிறோம், தாயகத்தைச் சிதைக்கிறோம் என்ற கவலையின்றி, இடம் கிடைக்கிறது என்ற ஒரே மகிழ்ச்சியால் இந்தச் சடங்கள் தமிழரைத் தாக்கக் கிளம்பின. தமிழ் வீரர்களைக் கேலி செய்தனர். நாடாள்வோருடன் கூடிக்கொண்டு நம்மை நையாண்டி செய்தனர். அற்ப இலாபத்துக்காக வேண்டி ஆதரவாளர்களான இவர்களைக் கொண்டு, இந்தி மொழி வெறியர்கள் தங்களுக்கு வர இருந்த ஆபத்தைத் தடுத்துக் கொண்டனர். ஓட்டகத்துக்கு முகம் மட்டும் உள்ளே நுழைத்துக் கொள்ள இடம் தந்தவன் கடைசியில், கூடாரத்தை விட்டடே வெளியேற வேண்டி வந்த கதை போலாயிற்று, இன்று, எனவேதான், இந்தியின் ஆதரவாளர்களாகித் தெந்தினம் பாடிப்பிழைத்த தமிழ் மகன்கள், இன்று இடியும் பிடியும் பலமாகி விட்டதைக் கண்டு கலக்கமடைகின்றனர். அன்று செய்தது துரோகமாயிற்றே — அக்ரமத்துக்கு உடந்தையாக இருந்தோமே, ஏன் ùச்யவது என்று எண்ணி உள்ளம் உருகாமல், ஆதரவாளர் வேடம் போட்டு அடையவேண்டிய இலாபத்தை அடைந்தாகிவிட்டது. இனி தமிழ் மகனாகித் தரகுக் காசு கிடைக்க வழி தேடிக் கொள்வோம் என்று எண்ணிக்கொண்டு, ஐதோ திட்டிக் காட்டுகின்றனர். ஊரெல்லாம், உணர்ச்சி உள்ளொரெல்லாம், தமிழரெல்லாம், தன்மானத் தோழர்களெல்லாம், இந்தி திணிக்கப்படுவது கண்டு, வெகுண்டெழுந்து, இகாது இந்த அக்ரமம் என்று எதிர்த்தபோது, ஆதிக்கக்காரரின் நோக்கத்தை அறிந்து கிளர்ச்சி செய்தபோது, சந்து கிடைத்ததும புகுந்து கொள்ளும் சர்ப்பம்போல, இருட்டு வேளை வந்ததும் உள்ளே புகும் கள்ளன் போல, எதிர்ப்பாளர்களின் அணி வகுப்புப் பலமாகி இந்திமொழி வெறியர்கள் இடர்ப்பட்ட வேளையில், ஆதிக்கக்காரருக்கு, ஆதரவாளராகி, ஆடப்பந்தாங்கி, அதிலே இலாபமும், மகிழ்ச்சியும் பெற்று, இளவரசுப் பட்டம் கிடைத்துவிட்டது என்று எண்ணி, யாரே இனி எமக்கு உடு என்று தெந்தினம் பாடிக்கிடந்தனர் — சொந்த நாட்டினரை, செந்தமிழ் மொழியினரைக் காட்டிக் கொடுத்தனர். இவர்களிலே சிலர் இன்று கூசாது குழறாது, தம்மைத் தமிழ் மகனென்றும் கூறிக் கொள்கின்றனர். நள்ளிரவிலே கன்னம் வைத்து உள்ளே பதம்பார்க்கும் கள்ளனிடம், கைக்கூலி வாங்கிக் கொண்டு கதவைத் திறந்துவிடும் காதகன்போல, எங்கும் இந்திக்கு எதிர்ப்பு ஏற்பட்டு, சர்வாதிகாரத் திட்டம் சரிந்துபடும் சமயத்தில், ஆதரவாளர்களாகி, இந்தி இடம் பெற உள்வு கூறி உடந்தையாக இருந்தவர்கள் இன்று உத்தமர் போல நடித்து, தமக்கும் தமிழிடம் மெத்தப் பற்று இருப்பதாகக் கூறுவது, விந்தை மட்டுமல்ல, வேதனை தரும் நிகழ்ச்சியுமாகும். என்று வீரன் காரசாரமாகக் கூறினான். கோபம் வேண்டாம், வீரா! நீ குறிப்பிட்ட இந்தப் பேர்வழிகள் இந்திக்கு ஆதரவாளர்களாகி விட்ட காரணத்தாலா, ஆதிக்கக்காரர்களின் கரம் வலுத்துவிட்டது, இதுகள் ஆதரவாளர்களாக இருப்பதும் எதிர்ப்பாளர்களாக இருப்பதும் இரண்டும் ஒன்றுதானே! பலப்பல இலட்சங்களைக் கொட்டித் தானே, இந்திக் கள்ளியைத் தமிழ்ச் சோலையிலே வளர்த்தனர் என்றேன் நான் — வீரனின் கோத்தைத் தணியச் செய்ய அதை யார் இல்லை என்றார்கள், பரதா! சொந்தக்கால் எனமானதுகள் ஓட்டப்பந்தயக் காரனுக்கு வெற்றிக்கு வழி காட்ட முன்வந்தது போன்ற வேடிக்கைதான், இந்த ஆதரவாளர்கள் சிலரின் போக்கும் — நினைப்பும் மனுவும மாந்தாதாவும், பதஞ்சலியும் பாணினியும், காளிதாசனும் பிறரும் வளர்த்த மொழி, காவிய ரசமும் கடவுள் அருளும் சொட்டுவது, ததும்புவது, தேவமொழி, தேவனின் அருளைத் தேடித்தரும் மேலான மொழி என்று எந்தச் சமஸ்கிருதத்தை வானவளாவப் புகழ்ந்தனரோ, அந்த மொழி உலகவழக்கு அழிந்து ஒழிந்து போன போது, அதைக் காப்பாற்றும் திறன் ஆற்றுப் பிணக்குழிப் பக்கம் நின்று ஐதோ பிதற்றிக் கிடக்கும் போர் வழிகளிலே சிலதுகள், இந்திமொழியை ஆதரிக்கும் செயலிலே உடுபட்டால் என்ன வெற்றி காணமுடியும்? நான், அத்தகைய ஆதரவாளர்களின் ஆற்றலைப் பற்றிக் கவலைப்படுவதாக எண்ணாதே! ஆற்றல் சூன்யமானதால் தான், தூற்றல்பாணத்தைக் கொண்டு தமிழரின் ஏஅகு உள்ளத்தைத் துளைத்திடலாமா என்று எண்ணிடத் தோன்றிற்று அந்தக் கருத்துக் குருடர்களுக்கு நான் அவர்களின் ஆற்றலை அல்ல, பரதா! எண்ணிப் பேசுவது, மனித சுபாவம் சில சமயங்களிலே எவ்வளவு மட்டரகமாகிப் போகிறது சுயநலத்தின் காரணமாக என்பதைத்தான் எண்ணி ஐக்கமடைகிறேன். கள்ளரும் காமுகரும் கூடிடும் பாழ் மண்டபத்தில், குத்து விளக்கும் குடவிளக்கும், தூங்கா விளக்கும் ஏன் இருக்கவேண்டும் என்று கூறி, அவைகளை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பி, உள்ளே இருள்மயம், போகாதே — என்று கூறினால், வௌவாலும் பிறவும் கேட்கவா போகின்றன! இருளடைந்த பாழ் மண்டபத்திலேதான் எமக்கு இடம தாராளமாகக் கிடைக்கும், இஷ்டப்படி பறந்திடலாம் எங்கும் சென்று தொங்கிடலாம் இடம் முழுவதும் எமக்கேதான், போட்டி இராது மோதுதல்வராது, என்று எண்ணியல்லவா, வௌவால் நுழைந்து வட்டமிடும். அதுபோல, எந்த வரிசையில் இருள் அதிகமாகித் திறம் குறைந்து கிடக்கிறதோ, அங்கே இருந்தால்தான் தமக்குக் கீர்த்தியும் கித்தாப்பும் கிடைக்கும் இடமும் இலாபமும் கிடைக்கும், என்று எண்ணிக்கொண்டு, அந்த வரிசையிலே சென்று நிற்கும் பேர்வழிகள் சிலருண்டு. அது போலவே, மொழி வல்லுநர்களும் கல்வி நிபுணர்களும், வரலாறு தெரிந்தோரும் வாழ்க்கை நூலாராய்ச்சியனரும, பள்ளி ஆசிரியர்களும் மாணவத் தோழர்களும், இந்தி எதிர்ப்பு முன்னணியில் நின்றனர், மறைமலைஅடிகளும் நாவலர் பாரதியாரும், நமது புரட்சிக் கவிஞரும் முத்தமிழ் கற்றோர் பலரும், இந்தியைத் திணித்திடும் முயற்சியை எதிர்த்தனர் — அந்த எதிர்ப்பு முகாமில், தமிழையும் தமிழகத்தையும் தழைத்திடச் செய்யும் வல்லமை கொண்டோர் கூடினர், பெரும்படை ஒன்று திரண்டது, போர் பல கண்ட பெரியார் தலைமையில், தேன் தமிழின் காவலராம் கலியாண சுந்தரனார் நோயையும் மறந்து வந்து நின்றார் களத்தில் தாய்மார்கள் தத்தமது சேய்கûளுயம் மறந்து வந்து கூடினர் களத்தில், வாழ்க்கைச் சுவையைப் பருகும் பருவத்தினரான இளைஞர்கள் எண்ணற்றவர்கள் கூடினர். வீரரும் தீரரும், தியாக உள்ளம் படைத்தோரும் அஞ்சா நெஞ்சினரும் கூடி அமைத்தனர் ஓர் அணிவகுப்பை — அந்தச் சமயத்திலே அந்த வீரக்கோட்டத்துக்குள் வர, மனமின்றி, வெளியே இருந்தது கொண்டு இந்தி ஆதரவாளர் முகாமில் புகுந்து கொண்டு, தமிழரைத் தாக்கத் துணிந்த துரோகக் கூட்டம், இந்தி ஆதரவாளர்களாகிக் கண்ட பலன் என்ன, பெற்ற இலாபம் எத்தகையது! படெல் பலே! என்று ஒருமுறை புகழ்ந்திருக்கக்கூடும் — பிரசாத் புன்னகை புரிந்திருக்கக்கூடும். நேரு பாராட்டி இருக்கக்கூடும் — இவ்வளவுதானே! இந்த அற்பத்துக்காக, எவ்வளவு பெரிய துரோகச் செயலைச் செய்துவிட்டனர்! என்று எண்ணினாலும் நெஞ்சு பதைக்கிறதே! எவ்வளவு பெரிய முயற்சியை எவ்வளவு பொறுப்பற்றுக் கெடுக்க முனைந்தனர். எதிர் வீட்டுக்குக் குடிவந்தா ஐகாத்தாவுக்கு, கூந்தல் கைப்படி அளவே இருக்கிறது என்ற கவலைப்பட்டு, தன் இல்லக்கிழத்தியின் கார்நிறக் கூந்தலைக் கத்தரித்துக் கொண்டு போய்க் காணிக்கையாகத் தந்து, அதைப் பெற்றவள் ஒரு வினாடி கண்சிமிட்டி, பல்காட்டுவதைப் பரிசு எனக்கொள்ளும் பேதையும் இருப்பானோ! அதனைவிடப் பேதைமை நிரம்பிய செயலையன்றோ புரிந்தனர் இந்தி ஆதரவாளர்கள்! இன்று அவர்களிலே சிலர், ஐதோ இதுவரை கருத்துக்கு! புலனாகாதிருந்த உண்மையைக் கண்டறிந்த, நாடு ஊய்ய அதனை வெளியிடுபவர்போல நடிக்கின்றனரே! இந்த நயவஞ்சகத்தை என்னென்பது பரதா! பூரித்துப் போகிறாயே, இந்தத் தமிழ்மகன் தீட்டியதைக் கண்டு — இந்தக்கருத்து என்ன கண்டுபிடிப்பா! என்று கேட்டான் வீரன். அவன் கோபத்துடன் தான் இருந்தான் எனினும் உண்மையை மறக்கவில்லை இந்தியை ஒருபொது மொழி, வசதிக்காக நாம் கற்கவேண்டிய மொழி என்ற அளவுக்குத்தான் நாம் இந்தியை ஏற்றுக்கொண்டோம் — ஆனால் இப்பொழுது இந்தி மொழி வெறியர்கள், மற்றப் பாஷைகûயும், மற்றப் பாஷைக்காரர்களையும் அடிமையாக்கும் திட்டமிட்டு வேலை செய்கிறார்கள் — என்று இன்று தீட்டுகிறாரே தமிழ் மகன், பரதா! இதே கருத்தை நாம் முன்கூட்டிச் சொன்னபோது, என்ன செய்து கொண்டிருந்தார் இந்தத் தமிழ்மகன்? இன்று இவருடைய கட்டுரையை வெளியிடும் கல்கி இதழ், என்ன தீட்டிக் கொண்டிரந்தது. அது சமயம்! தக்க சமயத்திலே, எச்சரித்தோம் பொது மொழி, தேசிய மொழி என்ற சாக்குக் கூறிக்கொண்டு மெள்ள மெள்ள நுழைகிறது இந்தி — இடம் தராதீர் — இந்தி ஏகாதிபத்யம் ஏற்படும், ஆபத்து உண்டாகும் — என்று நாம் எச்சரித்தபோது, கருத்து தூங்கிய காரணம் என்ன? அறிவுத் தெளிவு ஏற்பட்டிருக்க வேண்டிய நேரத்தில், ஆணவப் புழுவல்லவா அவர்கள் மண்டையில் புகுந் கொண்டிருந்தது. இன்று மேதாவித்தனமாக எழுதிக் காட்டுகிறார், அன்று மேய்ச்சல் இடம் தேடிச் செல்லும் கால்நடை, ஓநாய் உலவும் இடம் எது என்பதை அறியாமல், பச்சைப்புல் கண்ணுக்குத் தெரிவதை மட்டுமே கவனித்துக் கொண்டு, செல்லுமாமே, அதுபோல! இன்று, இந்தி ஏகாதிபத்யம் என்று அலறி என்ன பலன்? இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவதா என்று கேட்கிறார் தமிழ் மகன்! இடம் கொடுத்தபோதே சொன்னோமே, இடம் தராதீர், இடர் கிளம்பும் என்று — ஏன் அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. ஐளனமே செய்தனரே! எதிர்த்தனரே! பாம்பு சீறிடக் கண்ட கீரி அதைக் கடித்துக் கொன்றுவிட்டு, குழ்நதையைக் காப்பாற்றிவிட்டு, இரத்தக் கறையுடன், வீட்டின் ஆம்மையை எதிர்நோக்கி நிற்க, இடுப்பில் குடமும் புத்தியில் குருட்டுத் தனமும் கொண்ட மாது. கீரியின் வாயில் இரத்தம் சொட்டக் கண்டு, தன் குழந்தைதயைத்தான் கீரி கொன்றுவிட்டது என்று எண்ணி, அவசரப் புத்தியால், ஆத்திரத்தால், குடத்தைக் கீரிமீது போட்டுக் கொன்றுவிட்டு, கோவெனக் கதறியபடி தொட்டிலை நோக்கி ஓட, அங்குக் குழந்தை குறுநகை புரிந்திடவும், கீழே பாம்பு கண்டதுண்டமாகிக் கிடக்கவும் கண்டு, தன் அறிவீனத்தை எண்ணி அலறித் துடித்தாள் என்று சிறுவர்கள் கதை படிப்பர் — அந்தக் கதையில் வரும் பார்ப்பன மாதைவிட அறிவீனத்துடனல்லவா, இவர்கள் நடந்து கொண்டார்கள். இந்தி ஏகாதிபத்யம் வளரும் என்று எச்சரித்துவிட்டு, நாம் அறப்போர் நடத்தியது, கட்சிக்காகவா தேர்தலுக்காகவா, அல்லவே! தமிழுக்காக, தமிழகத்துக்காக! எனினும் என்ன தந்தனர் நமக்கு? குடத்தைப் போட்டுக் கீரியைக் கொன்ற மாது போல, குண்டாந்தடிகொண்டு குடந்தையில் போலீசாரைக் கொண்டு தமிழரைத் தாக்கி, தெருவை இரத்த மயமாக்கினரே! யாரைப் பாராட்டியிருக்கவேண்டுமோ அவர்களை யன்றோ தாக்கினர்! என்று வீரன் கூறினான். அவன் பேச்சிலே உண்மையும் உணர்ச்சியும் ததும்பிற்று. ஆமாம் வீரா! துவக்கத்திலேயே நாம் எச்சரித்துப் பார்த்தோம். தமிழ் தாய் இந்தி, தாதி — என்றெல்லாம் கதை பேசிக் கருத்தைக் கெடுக்காதீர். தமிழ் தழைக்காது இந்திக்கு முதலிடமும் மடியுடை இடமும் தந்தால் என்று விளக்கமாகச் சொன்னோம்… என்றேன் நான், வினயமாகச் சொன்னோம் பரதா! இந்தி எதிர்ப்பு விஷயத்தை அரசியல் நோக்குடன் பார்க்காதீர், கட்சிக் கண் கொண்டு பார்க்காதீர், தமிழகத்தின் எதிர்காலத்தைக் கருத்திலே கொண்டு, கட்சி மாச்சரியத்தை மறந்து, இந்தப் பிரச்னையைக் கவனியுங்கள் — காலம் கடுவேகமாகச் செல்கிறது, கடுவிஷம் போல ஏறுகிறது, வேற்றுமொழி விபரீதத்தை வளரவிடாதீர், என்றெல்லாம் கூறினோம், தீட்டினோம், பாடினோம் — அவ்வளவுக்கும் ஆணவத்துடன் பதில் தந்தனர் — இந்தத் தமிழ் மகன்கள்! — என்று நான் கூறினேன். வீரனைச் சாந்தப்படுத்த எண்ணிய, நானே கோபம் கொள்வது கண்டு, சிறிதளவு ஆச்சரியப்பட்டேன். இந்த மே மாதம் எழுதுகிறார் மேதாவித்தனமாக தமிழ்மகன் — இந்தி ஏகாதிபத்யம் வருகிறது அதை எதிர்க்க வேண்டும் என்று, பரதா! இதோ படிக்கிறேன் கேள்.

இந்தி, இதமாக, முதலில் இந்தி இலாப நோக்குடன் பிறகு.

இந்தி, ஆறுமாப்புடன் ஆறுதியில், தமிழ் இந்தி — முதலில் இந்தி தமிழ் — பிறகு, இந்தி மட்டும் — ஆறுதியில் இதுதான் மேலிடத்தின் வேலைத்திட்டம்.

இவ்விதம் திராவிடநாடு இதழிலே தீட்டப்பட்டிருக்கிறது — எப்போது? (தமிழ் மகன், என்ன செய்து கொண்டிருந்தாரோ, என்ன எண்ணிக் கொண்டிருந்தாரோ, எங்கே இருந்தாரோ தெரியாது — அந்தத் தமிழ் மகன், தெரிந்து கொள்ள வேண்டும்) 19–12–48 — இதழில்! கொட்டிலைப்பூட்ட வேண்டும் என்கிறார். குதிரையை வெறிநாய் கடித்தான பிறகு! வெறிநாய், வீதிக்கோடியில் வருகிறபோதே நாம் எச்சரித்தோம்! இந்தி, ஏகாதிபத்ய உருவெடுக்கும் என்று, இந்தி இளித்த வாயுடன் வந்த அன்றே நாம் சொன்னோம் — இன்று இந்தி வெறியரகள், காதைத் திருகித் தலையில் குட்டிய பிறகுதான், தமிழ் மகனுக்கு, இந்தி ஏகாதிபத்யம் வருகிறது என்பது தெரிகிறது! இன்று தீட்டுகிறார் தமிழ் மகன், வடநாடு சென்று வரும் தமிழ்ப் பிரதிநிதிகளும், வடநாட்டிலேயே வாழ்க்கை நடத்தும் தமிழர்களும் இந்திமொழி வெறியர்களின் செயலைக்கண்டு கூறுகிறார்கள், என்று
19–12–48 இல் “காங்கிரஸ்காரர்களிலேயே பலர், வடநாடு சென்று திரும்புபவர்கள் அங்கு இந்தி மொழியை வடநாட்டு ஏகாதிபத்யக் கருவியாக்கி மற்ற மொழிகளை அழித்தொழிக்கும் திட்டம் பலருக்கு இருப்பதைத் தெரிந்து திகைக்கிறார்கள்.
என்று திராவிடநாடு எழுதிற்று. தமிழ் மகன்கள் அப்போது சொன்ன பதில், “இந்தியால் வடநாட்டு ஆதிக்கம் வளரும், தமிழ் அழியும் ஏன் பேசுவது, ஆபத்தம். வீண்பீதி என்பதுதான் இன்று…! பொது மக்களைக் கிள்ளுக் கீரையாக எண்ணிக்கொண்டு கல்கியில் கட்டுரை வெளியிடுகிறார்கள். “இந்தி ஏகாதிபத்யம் ஏ;னறு நாம் சொல்வது வீண் மிரட்டல் அல்ல” என்று பிஸ்மார்க் வருகிறார் — என்று தலைப்புத் தரப்பட்டது, திராவிட நாடு இதழில் 19–12–48இல் வெளி வந்த கட்டுரைக்கு 7–5–50இல் இந்தி ஏகாதிபத்யம் என்ற தலைப்புடன் கட்டுரை வெளி வருகிறது கல்கியில். அறிவு உதயமாக இவ்வளவு காலம் பிடித்ததே என்பதற்காகக்கூட அல்ல, பரதா! நான் கோபிப்பது, வருந்துவது, இவ்வளவு காலத்துக்குப் பிறகு உண்மையை உரைக்க முன் வந்ததுமின்றி அதே கட்டுரையில், இந்தி ஒழிக! என்று சிலர் முன்பு கூச்சலிட்டார்கள். அந்தக் கூச்சலை ஒழித்து விட்டனர் தமிழ்ப் பெருமக்கள், என்று ஆணவத்துடன் எழுதத் துணிந்தாரே தமிழ்மகன், அதை எண்ணும்போதுதான் கோபம், உண்மையில் அதிகமாகிறது என்றான் வீரன், இந்தி ஒழிக என்ற முழக்கம், குறுகிய மனப்பான்மையும் — துவேஷ புத்தியாம்! என்று நான் கூறினேன் — அப்படித்தான் கூறுகிறார்கள். அவர்களுக்கு விரிந்த பரந்த மனமாம்! மக்களை, ஏமாளிகள் என்று எண்ணிக்கொண்டு அவ்விதம் பேசுகிறார்கள், பொதுமொழி ஒன்று தேவை என்று வடநாட்டவர்கள் பேசத் தொடங்கியவோதே, நாம் கூறினோம். வியாபாரத் தொடர்புக்காகவோ, அகில இந்திய அரசியல் தொடர்புக்காகவோ இந்தி தேவை என்று உணருகிறவர்கள் இஷ்டமிருப்பின் படித்துக் கொள்ளட்டும் — சகலரக்கும், அதிலும் சிறு பிள்ளைகளுக்கு இந்தியைத் திணிப்பதும், இந்தி படித்தால் தான் மத்திய சர்க்காரில் உத்யோகம் என்று நிபந்தனை விதிப்பதும், இந்தயைத் துரைத்தன மொழியாக்குவதும் நிச்சயமாக, இந்திமொழி ஏகாதிபத்யதைத்தான் உண்டாக்கும் என்று அறிவுறுத்தினோம். பரந்த மனப்பான்மைக்காரர்களுக்கு இந்த எச்சரிக்கை புரியவில்லை, துவேஷம் கொண்டவர்கள் நாம் என்று தூற்றினார்கள், தமிழுக்குத் துரோகம் செய்பவர்கள் என்று வீரன் கூறினான். ஒரு நாட்டுக்குப் பொதுமொழி ஒன்று இருப்பது நல்லது என்ற கருததைக் கை முதலாகக் கொண்டு, இந்தி ஏகாதிபத்யத்தக்கு வழிகோலிவிட்டனர் — விளக்கமறியாதவர்கள், பாமர மக்களிடம் சென்று ஆதரவாளர்கள் பசப்பினார்கள், வடநாட்டு ஆதிக்கமோ, இந்தி ஏகாதிபத்யமோ ஏற்படாது, இந்தி, பெரும்பாலான மக்கள் பேசும் மொழி, அதைப்பொது மொழியாகக் கொண்டால் நல்லது. நல்ல நோக்கத்துடன்தான் நமது தலைவர்கள் இந்தியைப் படிக்கச் சொல்கிறார்கள் — என்று பேசினர். நமது மக்களிலே சிலர் அந்தப் பிரசாரத்தால், மயங்கினர் என்றேன் நான். பால் மதுரமானது, தேகாரோக்கயத்துக்குத் தேவையானது, அந்தப் பாலைத் தரும் பசுவுக்கு இகாரம் பச்சைப் புல், ஆகவே பால் தேடி ஆலைவதை விட, பச்சைப் புல்லை நாமே மேய்ந்துவிட்டு வருவது நல்லது என்று கூடப்பேசுவார்கள் அந்த நல்லவர்கள். இவ்வளவு பெரிய பூபாகத்தை, என்றுமே ஒரே நாடாகவோ, ஒரே ஆட்சியின் கீழோ இருந்தறியாத, இருக்கக் கூடிய இயல்புகளைப் பெற்றிராத பூபாகத்தை ஒரே நாடு என்று கூறி, இதற்கு ஒரே மத்திய ஆட்சி தேவை என்று வலியுறுத்தி, அந்த ஒரு நாட்டுக்கு ஒரு மொழி என்று வாதாடி, அந்த மொழி இந்தியாகத்தான் இருக்க முடியும் என்று கூறி, அந்த இந்தியைக் கொஞ்சம் கற்றுக் கொண்டால் சௌகரியமாக இருக்கும் என்று கொஞ்சு மொழி பேசும் பேசி, இந்தியைப் பள்ளிக்கூடப் பாடத்திட்டத்திலே புகுத்தி, எதிர்ப்புக் கிளம்பியது கண்டு இந்தி இஷ்டபாடம்தான் என்று குழைந்து கூறி, இதாரவாளர்கள் என்ற பெயரில் கிளம்பிய தமிழ்த் துரோகிகளின் துணையைப் பயன்படுத்திக்கொண்டு, இந்தியைக் கட்டாயப் பாடமுமாக்கிவிட்டனர். இப்போது வடநாட்டுத் தலைவர்கள் இந்தி படிக்கக் கூடாதா என்று கெஞ்சுவதில்லை, இந்தி படித்தால் நல்லதாயிற்றே, நீங்கள் திறமைசாலிகளல்லவா? உங்களுக்குச் சுலபத்திலே இந்தி வருமே என்று கொஞ்சுவதில்லை, இந்தி தெரியாதவர்களுக்கு இனி இங்கு இடமில்லை என்று அதிகாரம் பேசுகிறார்கள்! ஏகாதிபத்யம் பேசுகிறது — ஏடுபிடிகள் இன்று கை பிசைந்து கொள்கிறார்கள், கண்கசக்கிக் கொள்கிறார்கள். பரதா! இதோ, கேள், நான் குறிப்பிட்ட பிஸ்மார்க் வருகிறார் என்ற கட்டுரையில், தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்தி நுழைவின் நோக்கமும், அதனால் ஏற்படக்கூடிய விளைவும், மரமண்டைகளுக்குக் கூடப் புரியக் கூடிய வகையிலே விளக்கம் தரப்பட்டிருக்கிறது.

ஏன் தம்பி! பதறுகிறாய்? என்ன பயம் உனக்கு? தமிழுக்கு என்ன ஆபத்து? என்று கேட்கும் நல்லவர்கள் நாட்டிலே சிலர் உள்ளனர். எந்த மொழியும், ஏற்றம் பெற்று வாழவேண்டுமானால், மக்களின் மதிப்பைப் பெற்று வாழவேண்டுமானால், ஆம்மொழி, அரசாங்க அலுவல் மொழியாகவும் அமைதல் வேண்டும் என்பது அரிச்சுவரி! தமிழ் இவ்வளவு வளம் பெற்றதாகத் திகழ்வதற்குக் காரணம், முன்னாளில், முடியுடை மூவேந்தர்களும் தமிûயே துரைத்தன மொழியாகக் கொண்டிருந்தனர் — அதனால், புலவர் கூடிடும் மன்றங்களிலும், பூவையர் இடிடும் பூம்பொழிவிலும், போர்க்களத்திலும், உழவர் மனையிலும் தமிழே முதலிடம் பெற்றிருந்தது. யவனத்துக்கும் பிறநாட்டுக்கும் தமிழர்கள் வாணிபம் செய்யக் சென்றனராமே கலங்களில் — அந்தக் கலங்களிலே, தமிழ் பேசியன்றோ சென்றனர்! அந்தத் தமிழுக்கு, ஆட்சியாளரின் மொழி என்ற உரிமை நிலை, இருந்ததால் தான், உயர்நிலை கிடைத்தது. ஊராள்வோருக்கு உரிய மொழி வேறு, மக்களுக்குள்ள மொழி வேறு என்று நிலை இருப்பின் எம்மொழி சிறக்கும் — எம்மொழி உயரும்! இன்று, இந்தியைப் படித்தாக வேண்டும் என்று கூறுவோர், அது நாளை, துரைத்தன மொழியாகப் போகிறது, அது கற்றால்தான் ஆட்சிப் பணி மனையில் இடம் கிடைக்கும் என்று கூசாது கூறுகின்றனதே. அந்நாள் வரும்போது, மக்கள் எதனை விரும்பிக் கற்பர். எம்மொழியினை நாடுவர், தேடுவர், இனிûயும் தொன்மையும் வாய்ந்ததுதான் எம்தமிழ். எனினும், அதுபோதாதாமே அலுவலகம் புக எனவே அலுவலகம் புக நுழைவுச் சீட்டுப் பெற இந்தி படிப்போம், என்றுதானே எண்ணுவர் — எண்ணிட எண்ணிட, இயற்கையாக ஏற்றம், எந்த மொழிக்கு ஏற்படும், என்பதை எம்மையும் எமது கிளர்ச்சியையும் மறந்தேனும், நண்பர்கள் எண்ணிப் பார்த்திட வேண்டுகிறோம். சொந்த மொழி கற்றுப் பயனில்லை. வந்த மொழி படித்தால்தான் வாழ முடியும் என்று ஒரு ஏற்பாடு செய்துவிட்டால் பிறகு, வந்த மொழியைத்தானே, சொந்த மொழியாக்கிக் கொள்வர்! நிலையை விளக்கிடப் பலப் பல கூற வேண்டுவதுமில்லை — ஆங்கிலத்துக்கு அரசாங்க மொழி எனும் நிலையை ஆங்கிலர் இங்கு ஏற்படுத்தியதன் பலனை, நாம், நமது தலைமுறையில் தெரிந்து கொண்டிருக் கிறோமே! சிலப்பதிகாரம் தெரியும். சிந்தாமணி தெரியும், குறள் தெரியும், தொல்காப்பியம் தெரியும் என்று கூறினால், மடத்திலே இடமுண்டு என்றனரேயன்றி, அரசாங்க அலுவலகத்தில் இடம் கிடைக்கவில்லையே! இரண்டு கோணை எழுத்துத் தெரிந்தால்தான் பிழைக்கலாம் — என்ற எண்ணம் குக்கிராமத்திலும் பரவி விட்டதே! ஆங்கிலம் படித்திடத்தான் துடிததனரேயன்றி, தமிழ் பயில எவர் முன்வந்தனர் — பயின்ற சிலருக்கும் மதிப்பளிக்கவாவது முனைந்தனரா?

ஆங்கிலம் ஆட்சி மன்ற மொழி என்ற நிலை பிறந்ததும், தமிழ் தாழ்நிலை அடைந்ததை எவர் மறுக்க முடியும்! கல்வி நிலையங்களிலே கண்டோமே, தமிழ் ஐயாவுக்கும், இங்கிலீஷ் வாத்தியாருக்கும், எல்லா வகையிலும் வேற்றுமைகள் கிளம்பியதை! தமிழ் ஆசிரியருக்குச் சம்பளம் என்ன? ஆங்கில ஆசிரியருக்கு என்ன?

தமிழ் மொழியில் பேசினால், மதிப்பில்லை, என்று ஆங்கிலம் பேசுவதையன்றோ அறிவுடைமை என்று கொண்டனர்.

கிராமத்தில் மக்கள் வாய்பிளந்து கேட்டனரே தம் பிள்ளைகள், பட்டணம் சென்று கற்றுக் கொண்டுவந்த ஆங்கிலச் சொற்களை!

ஆங்கிலத்தின் இடத்துக்கு இந்தி, என்று தெளிவாகத் தெரிவிக்கிறார்கள். அங்ஙனமாயின், தமிழின் நிலை என்ன? இந்திக்கு ஆங்கிலப் பதவி, தமிழுக்கு, என்ன நிலை! இதைத்தான் எதிர்கால ஆபத்து என்கிறோம். இதனை எண்ணியே, இன்றே இந்தியை எதிர்த்தாக வேண்டும் என்று கூறுகிறோம்.

என்று வீரன் படித்துக் காட்டினான், “ஆமாம் வீரா! இவ்வளவு விளக்கம் தந்தும் மக்கள் திருந்திக் கொள்ளவில்லையே” என்ற நான் ஆயாசத்துடன் கூறினேன்”, மக்கள் மீது என்ன தவறு பரதா! இந்தியால் வர இருக்கும் ஆபத்தை மக்கள் உணர்ந்து கொண்டதாலேதான், இந்த எதிர்ப்புக் கிளர்ச்சியை ஆச்சாரியார் மந்திரியாக இருந்த நாளிலேயே நடத்துவதற்கு இக்கமும் எக்கமும் அளித்தனர். மந்திரிமார்கள் திண்டாடினார்கள். மக்களின் கோபம், கறுப்புக் கொடிகளாகவும், திரும்பிப்போ என்ற முழக்கங்களாகவும் கிளம்பியபோது இளவந்தார்கள் பணிந்துதானே போனார்கள் மறுபடியும், கிளர்ச்சி தேவைப்பட்ட போது மக்கள் பின்வாங்கவில்லையே, தமிழகம் தயார் என்று தானே கூறிற்று. வீரர்கள் சென்னை நோக்கி விரைந்தனரே! தொண்டர்கள் தேவை என்று பெரியார் கேட்டாரா, இரத்தத்தால் கை எழுத்திட்டுத்தந்தனரே ஆயிரமாயிரம் இளைஞர்கள்! பணபலமோ பிரசார பலமோ ஆற்ற நிலையிலேயும், இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சி ஓங்கி வளர்ந்ததே! மக்கள் எந்த வகையிலும் ஆதரவு காட்டத் தயங்கவில்லை. இந்தியைக் கண்டித்துக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றபோது பட்டி தொட்டிகளெல்லாம் நடத்தினர் மாநாடுகள் கூட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது வ்வொரு மாவட்டமும் போட்டியிட்டுக் கொண்டு முன்வந்தன! பணம் கேட்டார் இந்தி எதிர்ப்பு நடத்த 25,000–0–0 தந்தனர்!! வெள்ளித்தோட்டாக்கள் தந்தனர் மொழிப் போருக்காக!! தமிழரின் ஆதரவு தளரவுமில்லை, வளராமலுமில்லை இன்னமும் அந்தப்பணம், பெரியார்வசமே இருக்கிறது. ஆகவே இனி ஒரு முறை மொழிப்போர் தொடுப்பது என்று தீர்மானித்தால் உடனடியாகப் பணத்துக்குத் தேடி அலையவும் தேவையில்லை தமிழரின் ஆச்சாரம் இருக்கிறது! போர் தொடுப்பதற்குத் தடை இல்லை — மக்கள் மீதும் குறை கூறுவதற்கில்லை என்றான் வீரன். வீரா! இந்தியோடு நில்லப்பா, பணப் பிரச்சனைக்குள் நுழையாதே — உடனே அந்த அர்ச்சனை இருக்கிறதே சதிகாரர்கள், சண்டாளர்கள், துரோகிகள் — என்ற அர்ச்சனை அதை ஆரம்பித்து விடுவார் — ஆகவே பணம் எவ்வளவு இருக்கிறது யார் கொடுத்தது. இப்போது யாரிடம் இருக்கிறது என்ற விஷயமாகக் கிளறாதே. ஏற்கெனவே வசூலித்துக் கைவசம் வைத்துக் கொண்டிருக்கும் பணத்தைச் செலவிட்டாலும் சரி. அது அவ்வளவும் போர் நிறுத்தகாலச் செலவுக்குச் சரியாகிப்போய்விட்டது என்று கூறிவிட்டு, புதிதாகப் பணம் கேட்டுப் பெறுவதானாலும் சரி, போர்தொடுத்தால்போதும், நமககு அதுவே திருப்தி தரும் என்றேன் நான், எனக்குக் கூட பரதா! அந்த உருபத்தையாயிரம் என்னவாயிற்று என்பது பற்றிக கவலைகிடையாது. தமிழர்கள் மொழிப்போருக்குத் தக்கவிதமான ஆதரவு காட்டினார்கள் என்பதை விளக்கவே அதைச் சொன்னேன். கல்கி முதற்கொண்டு உண்மையைக் கக்கித் தீரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதைச் சாதகமாக்கிக் கொண்டு, கட்சிகளைக் கடந்ததும் இந்தி ஏகாதிபத்ய எதிர்ப்புணர்ச்சி என்ற இலட்சியத்துக்குக் கட்டுப்பட்டதுமான, ஒரு புதிய மொழிப்போர் முகாம் அமைக்கப்பட்டு, மொழிப் போர் தொடங்கினால், நாம் நம்மாலான ஆதரவைத் தரலாம் என்பதைக் கூறவே இதைக் குறிப்பிட்டேன். ஓஹோ! இம்முறை துரோகிகள், சதிகாரர்கள், சண்டாளர்கள், ஆகியவர்களைச் சேர்த்துக் கொள்ளப்போவதில்லை. பொறுக்கு மணிகளைக் கொண்டே போரை நடத்தத் தீர்மானித்துவிட்டோம் என்று கூறுவார்ககளேயானால், அதுவும் சரி, ஐயன்மீர்! நீங்கள் ஒருபுறம் இன்று போரிடுங்கள் — பரந்த களத்திலே எங்களுக்கும் களம் கிடைக்கும் என்று கூறிடவும் நாம் தயங்கப்போவதில்லை. ஆனால் சாக்குப்போக்குகள் கூறிக்கொண்டும், சதிகாரர்கள், சண்டாளர்கள், துரோகிகள் என்ற அர்ச்சனையைச் செய்து கொண்டும் காலந் தள்ளிவிடாமல், தமிழர்கள் திரட்டித் தந்த ஆதரவுக்கு நன்றி காட்டும் முறையிலாவது, போர் தொடுத்திடுக! — என்று கூறிக்கொள்கிறோம். ஏனெனில், இந்தி ஏகாதிபத்யம் உண்மையான ஆபத்து என்பதை உணரும் நிலை, தமிழ் மகன்களுக்கெல்லாம் உண்டாகியிருப்பது வீணாகிவிடக்கூடாது எனவே மொழிப்போர் தொடுத்திட வாரீர், என்று அனைவரையும் அழைத்திட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை அறிந்து இவன செய்ய முன்வர வேண்டும் — இக்கட்சி, ஆக்கட்சி என்ற முறையிலே அல்ல — ஏக்கட்சி முகாமில் இருப்பவராயினும், இந்தி ஏகாதிபத்ய ஒழிப்புக்காக ஓர் புதுமுகாம் அமைதல் வேண்டும். அதற்குத் தமிழ் மகன் தயாரா? என்று இவேசத்துடன் கேட்டான் வீரன், “தமிழ் மகன் தயாரா?” என்று நானும் கேட்கிறேன். நமது நாட்டின் பாட்டு மொழியிடம் பற்றுக் கொண்டவர்கள் எல்லாம் கேட்கிறார்கள். தமிழ் மகன் தயாரா? இந்தி ஏகாதிபத்யத்தை எதிர்த்துப் போரிட, என்ன திட்டம்? எங்கே முகாம்? எப்போது துவக்கம்? தமிழ் மகன் தயாரா?” என்றே நானும் கேட்கிறேன்.

(திராவிட நாடு — 21.5.50)

மூலக்கட்டுரை

http://www.annavinpadaippugal.info/katturaigal/hindiyum_tamilmaganum_2.htm

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

No responses yet