இந்தியா ஒரு நாடல்ல!

அறிஞர் அண்ணா, இலட்சிய வரலாறு 29-06-1947

SG
3 min readFeb 2, 2020

1. இந்தியா என்பது ஒரு கண்டம். எனவே அது பல நாடுகளாகத்தான் பிரிக்கப்பட வேண்டும். ஐரோப்பா கண்டத்தில் 32 தனித்தனி நாடுகள் உள்ளன. ஐரோப்பா முழுவதும் ஒரு குடைக்குக்கீழ் இருக்க வேண்டுமென யாரும் கூறவில்லை. இந்தியாவும் ஒரே குடையின் கீழ் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை.

2. இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு தனித்தனி ஆட்சிகொண்ட 56 தேசங்கள் உள்ள கண்டமாகத்தான் இருந்து வந்தது. பிரிட்டிஷார் தமது ஆட்சி சரியாக நடக்கச் சௌகரியம் தேடிக்கொள்ளவே இந்தியாவை ஒரே நாடு என்ற கருதினர்; மற்றவரையும் கருதும்படி செய்தனர்.

3. மதம், மொழி கலை, மனோநிலை, ஒரு .குடிமக்கள் என்ற உணர்ச்சி, வரலாற்று பந்தத்துவம் - இவைகள்தான் இன இயல்புகள். இந்த முறையில் பார்த்தால் இந்தியாவில் தனித்தனி இனங்கள் பல உள்ளன. அவைகளை மூன்று பெரும் பிரிவுகளாகக் கொள்ளலாம்; திராவிடர், முஸ்லிம், ஆரியர் என்ற இந்த மூன்று இனங்களில் திராவிடரும் முஸ்லிமும் இன இயல்புகளில் அதிகமான வித்தியாசம் இல்லாதவர்கள். ஆரிய இன இயல்புகளுக்கும் மற்ற இரு இன இயல்புகளுக்கும் துளியும் பொருத்தம் கிடையாது; பகைமை பெரிதும் உண்டு. இந்தத் தனித்தனி இன இயல்புகள் இருப்பதால், இனவாரியாக இந்தியா பிரிக்கப்பட்டால்தான் அந்தந்த இனத்துக்கென இடம் கட்சியும் கிடைக்கும். இல்லையேல் எந்த இனம் தந்திரத்தாலும் சூது சூழ்ச்சியாலும், தன்னலத்துக்காகப் பிறரை நசுக்கும் சுபாவத்தாலும் கைதேர்ந்து இருக்கிறதோ, அந்த இனத்திற்கு மற்ற இனங்கள் அடிமைப்பட்டு வாழவேண்டி நேரிடும்.

4. இந்தியா ஒரே நாடு என்று கூறி வருவதால், ஆரிய ஆதிக்கம் வருகிறது. ஆரிய ஆட்சியின் காரணமாக மற்ற இன நலன்கள் தவிடு பொடியாயின.

5. முரண்பாடுள்ள இயல்புகளைக் கொண்ட இனங்களை ஒன்றாகச் சூழ்ச்சியால் பிணைத்துக் கட்டுவதால், கலவரமும், மனக்கிலேசமும், தொல்லையுமே வளர்ந்தன. எனவே எதிர்காலத்தில் தொல்லைகள் வளர்ந்து இந்தியா இரத்தக் காடாகாதிருக்க வேண்டுமானால், இப்போதே சமரசமாக இனவாரியாக இந்தியாவைப் பிரிக்கவேண்டும்.

6. இனவாரியாக நாடு பிரிக்கப்படுவது என்பது புதிதுமல்ல. கேட்டறியாததுமல்ல. ஏற்கனவே இந்தியாவில், பிரிட்டிஷ் இந்தியா, சுதேச இந்தியா, பிரஞ்சு இந்தியா, டச்சு இந்தியா எனப் பல இந்தியாக்கள் உள்ளன. இதுபோல் முஸ்லிம் இந்தியா, ஆரிய இந்தியா, திராவிட இந்தியா என மூன்று தனித்தனி வட்டாரங்கள் தேவை எனக் கேட்பது தவறல்ல.

7. சுதேச சமஸ்தானங்கள் மட்டும் 574 உள்ளன. அவைபோல் தனித்தனி ஆட்சி, தனித்தனி முறை அதுபோல், மூன்று பெரும் பகுதிகள் தனித்தனி ஆட்சி முறையுடன் தத்தமது இன இயல்புகளை வளர்த்துக்கொள்ள வழி தேடிக்கொள்வது தடுக்கமுடியாத உரிமை.

8. ஒட்டமான் சாம்ராஜ்யத்தின் பிணைப்பிலிருந்து விடுபட்ட துருக்கி, வல்லரசுகளில் தலைசிறந்ததாக ஆனதுபோல, இனவாரியாக இந்தியா பிரிக்கப்பட்டால், ஒவ்வொரு வட்டாரமும் தனிக் கீர்த்தியுடன் விளங்கும்.

9. தனித்தனி வட்டாரமானால், இராணுவ பலத்தை அவரவர் இல்புகளுக்கு ஏற்றபடி வளர்க்க ஏது உண்டாகும்.

10. அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர், சமுத்திரகுப்தர், அக்பர் முதலிய மன்னாதி மன்னர்கள் காலத்திலும், இந்தியா ஒரே நாடாக இருந்ததில்லை. அப்போது திராவிட நாடு எனத் தனிநாடு இருந்தது.

11. தனித்தனி வட்டாரம் பிரிந்தால், அங்கங்ககள்ள வசதிகளுக்கேற்றபடி பொருளாதார விருத்தி செய்து கொள்ளவும், ஒரு வட்டாரம் மற்ற இடங்களைச் சுரண்டும் கொடுமையை ஒழிக்கவும் முடியும்.

12. அந்தந்த இனத்துக்கென தனித்தனி இடமும் ஆட்சியும் இருந்தால்தான், அந்த இனமும், மற்றவைகளிடம் சம உரிமை, சம அந்தஸ்து பெறமுடியும்.

13. இந்தியா ஒரே நாடாக இருக்கிறது என்று கூறித்தான் ஆரியர் இமயம் முதல் குமரி வரை உள்ள இடத்தைத் தமது நாட்டைக் காடாக்கிக் கொண்டு, அரசியலில் அதிகாரிகளாய், கல்வியில் ஆசான்களாய் மதத்தில் குருமார்களாய், சமுதாயத்தில் பூதேவர்களாய், பொருளாதாரத்தில் பாடுபடாது உல்லாச வாழ்வு வாழக் கூடியவர்களாய் இருக்கவும், மற்ற இனத்தவர் தாசர்களாய், பாட்டாளிகளாய் உழைத்து உருவின்றிச் சிதைப்பவர்களால் வாடவும் நிலைமை ஏற்பட்டது. இந்தக் கொடுமை நீங்க வர்க்கத்துக்கொரு வட்டாரத்தைப் பிரிப்பதுதான் சிறந்த வழி.

15. ஒரு இனத்திடம் மற்றொரு இனத்துக்கு நம்பிக்கை இல்லை. ஒரு இனத்து ஆட்சியின் கீழ் மற்றொரு இனம் இருப்பது என்ற சொன்னாலே அச்சம் உண்டாகி விட்டது. அச்சமும் அவநம்பிக்கையும் பெற்றெடுக்கும் குழந்தையே புரட்சி, பயங்கரப்புரட்சியைத் தடுக்கவே இப்போது பிரியவேண்டும் என்கிறோம்.

16. இந்தியா பிரியாது இருந்ததால் இதுவரை இராணுவப் பொருளாதார அறிவுப் பலம் வளர்ந்ததாகவோ, இந்திய இனம் என்ற புது சமுதாயம் அமைந்ததாகவோ கூற எந்த ஆதாரமும் இல்லை. ஒரு இனத்தின் குரல்வளையை மற்றொரு இனம் அழித்து நெரித்துக் கொல்லாது போனதற்குக் காரணம் எல்லா இனத்தையும் பிரிட்டிஷ் துப்பாக்கி ஏக காலத்தில் அடக்கி வைத்திருந்தால்தான். எனவே, பிரிட்டிஷ் பிடி போய்விட்டால், இந்தியா இரணகளமாகும். இதற்கு ஐரோப்பாவில் அடிக்கடி நடக்கும் போல் ஒரு உதாரணம். எனவே, இத்தகைய இன்னல்கள் உண்டாகாதிருக்க, இனவாரியாக இடம் பிரித்துவிவதே, ஆபத்தைத் தடுக்கும் வழி.

எனவே, இனவாரியாக இந்தியா பிரிந்தால், இன இயல்புகள் தனித்து, சிறப்புடன் விளங்கவும், ஆரிய ஆதிக்கம் அடங்கவும் பொருளாதாரச் சுரண்டல் போகவும், அறிவை அடக்கும் அவதி நீங்கவும், எதிர்காலத்தில் பூசல் எழாதிருக்கவும், சாந்தம், சமாதானம் நிலவவும் மார்க்கமுண்டு. எனவேதான் இந்தியா இனவாரியாகப் பிரியவேண்டும் என்று, இந்தியாவை இனப் போர்க்களமாகக் காணக்கூடாது என்ற நல்ல நோக்கம் கொண்டவர்கள் கூறுகின்றனர். இதை மறுப்பவர்கள், சரித்திரத்தை மக்கள் தெரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணம் கொண்டவர்கள் இருக்கவேண்டும். ஒரே இன இயல்பு அதாவது ஆரிய ஆதிக்கம் மற்றவர்களை மிதித்துத் துவைத்து அழிக்கவேண்டுமென்ற கெட்ட எண்ணங்கொண்டவர்களும், வலுத்தவனுக்கு வாழ்க்கைப்படும் வனிதை போல, இந்தியாவைச் செய்துவிட்டுத் தாங்கள் வாழ எப்படியேனும் வழி செய்து கொள்ளவேண்டும் என்ற கேடுகால யோசனையும் கொண்டவர்களே, இந்தப் பிரிவினைத் திட்டத்தை எதிர்ப்பர்.
(இலட்சிய வரலாறு, 29.06.1947)

மூலக்கட்டுரை http://www.arignaranna.net/naadalla.htm

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

No responses yet

Write a response