இந்திமொழி வரலாறு!

அண்ணாதுரை, திராவிட நாடு, 22.8.1948

SG
3 min readJan 25, 2020

விட்டால், பலர் நாம் மேற்கொண்ட போராட்டத் தைத் தவறாக எண்ணக் கூடும். ஆதலால், பேராசிரியர் மறைமலை அடிகள் அவர்களால் சரித்திர அடிப்படையின் மீது ஆராய்ந்து எழுதப்பட்ட `இந்தி பொது மொழியா’ என்ற நூலில் காணப்படும் `இந்திமொழி வரலாறு’ என்ற பகுதியை இங்கு வெளியிடுகிறோம்.

“இந்தி, உருது முதலான வடநாட்டு மொழிகளோ தமிழைப்போற் பழைமையானவைகள் அல்ல. மகமதிய மதத்தவரான மொகலாய அரசர்கள் வடநாட்டின் மேற் படை எடுத்தப் போது, `தில்லிப்’ பட்டினத்தைத் தலைநகராய்க் கைக் கொண்டு, அதன்கண், அரசு வீற்றிருக்கத் துவங்கிய பின்னரே அம்மொழிகள் தோன்றியனவாகும். `மகமது கோரி’ என்னுந் துலுக்க மன்னர் வடநாட்டின் மேற் படை எடுத்துப் போந்து இந்திய அரசர்களை வென்று அதனைக் கைக் கொண்டது. கி.பி. 1175-ஆம் ஆண்டின் கண்ணதாகும். அதாவது, இன்றைக்கு 772 ஆண்டுகட்கு முன்னதாகும். அது முதல் துலுக்க மன்னரது ஆட்சியானது நாளுக்கு நாள் வேரூன்றி வரலாயிற்று. கடைசியாக `மகமதுபின் துக்ளக்’ என்னும் மன்னனால், கி.பி. 1340ஆம் ஆண்டில் துலுக்க அரசு தில்லி நகரில் நிலைபெற்றது. அக்காலத்தில் தில்லி நகரிலும், அதனைச் சூழ்ந்த இடங்களிலும் பிராகிருதச் சிதைவான ஒரு மொழி வழங்கிக் கொண்டிருந்தது. அப்போது அது வெறும் பேச்சு வழக்கில் மட்டும் இருந்ததல்லாமல், நூல் வழக்கிற் சிறிதும் இல்லை. ஏனென்றால், அது நாகரிகமில்லா மக்களாற் பேசப்பட்டுப் பலப்பல மாறுதல்கள் அடைந்த வண்ணமாய் நடைபெற்று வந்ததனாலும், அறிவுடையோர் தோன்றி அம்மொழியைச் சீர் திருத்தி இலக்கண இலக்கிய நூல்களியற்றி எழுத்து வடிவில் அதனை நிலைப்படுத்தி வையாதலாலும் அதற்கு அந்நாளில் நூல் வழக்கு இல்லா ததாயிற்று.
தில்லியில் துலுக்கராக நிலைபெற்ற பின், அவர் கொணர்ந்து அராபி மொழி, பாரசிக மொழிச் சொற்கள் அம்மொழியின் கண் ஏராளமாய்க் கலக்கப் பெற்று, அவரால் அஃது `உருது’ எனவும் பெயர் பெறலாயிற்று. `உருது’ என்னுஞ் சொல்லுக்குப் பொருள் பாசறை, பாடி அல்லது படை வீடு என்பதேயாகும். எனவே, துலுக்க மன்னர் தாங்கள் கொண்ட நகரை யடுத்து முன்னமே பேசப்பட்டு வந்த பிராகிருதச் சிதைவான ஒரு மொழியில், தாங்கொணர்ந்த அராபிச் சொற்கள் பாரசிகச் சொற்களையும் மிகக் கலந்து தமது பாசறையிருப்பின்கட் பேசிய கலவை மொழியே அவரது காலந் தொட்டு `உருது’ என்பது துலுக்க மன்னரது படை வீட்டு மொழியாய் முதன்முதற்றோன்றி நடைபெற்ற வரலாறு நன்கு விளங்கா நிற்கும்.

அதன்பின், நூல் வழக்குடையதாய் இஞ்ஞான்று வழங்கும் இந்தி மொழியானது `லல்லுஜிலால்’ என்பவரால் உருது மொழி யினின்றும் பிரித்துச் சீர்திருத்தஞ் செய்யப்பட்ட தொன்றாகும். இதற்கு முன் உள்ளதான பிரா கிருதச் சிதைவு மொழியிற் கலந்த பாரசிக அராபிச் சொற்களை அறவேயொழித்துச் சமஸ்கிருத மொழிச் சொற்களை மிகுதியாய் எடுத்துச் சேர்த்து அவர் இந்தி மொழியைப் புதிதாய் உண்டாக்கினார். இங்ஙனம் அவரால் ஆக்கப்பட்ட இந்தி மொழிக்கும், இதற்கு முன்னே தொட்டு நாகரிகமில்லா வடநாட்டு மக்களால் ஆங்காங்கு பேசப்படும் பிராகிருதச் சிதைவான இந்திமொழிக்கும் வேறுபாடு மிகுதியாய் இருக்கின்றது. அதற்குக் காரணம் என்னவென் றால், முன்னையது, வடசொற் கலப்பு நிரம்ப உடையதாயிருந்தாலும், பின்னையது ஆஃதின்றிப் பிராகிருத மொழிகளின் சிதைவா யிருந்தலுமேயாகுமென்பதனை நன்கு நினைவிற் பதித்தல் வேண்டும். ஆகவே, வட சொற் கலப்பினால் ஆக்கப்பட்டுச் சிறிது காலமாக இப்போது நூல் வழக்கிற் கொணரப்பட்டிருக்கும் இந்தி மொழியை நம் தென்னாட்வர் கற்றுத் தெரிந்து கொள்வதனால், இவர்கள் வட நாட்டவ ரெல்லாருடனும் பேசி அளவளாவிடக் கூடும் என்று சிலர் மடிகட்டி நின்ற கூறுவது நம்ம னோரை ஏமாற்றும் பொய்யுரையேயாம்.

இனி, மேற்காட்டிய கலவைப் புது மொழியான இந்தியில் நூல்கள் உண்டான வரலாற்றுச் சிறிது விளக்குவோம். கி.பி. 1470-ஆம் ஆண்டு வரையில், அதாவது இன்றைக்கு 477 ஆண்டுகளுக்கு முன்னிருந்த `இராமானந்தர்’ எனப் பெயரிய ஒரு துறவி, இராமனையே முழு முதற் கடவுளாக வைத்து வழிபடல் வேண்டுமென வற்புறுத்திச் சொல்லி வடநாட்டின் பல இடங் களிலும் இராம வணக்கத்தைப் பரவச் செய்து வந்தார். கல்வி அறிவில்லா வடநாட்டுப் பொது மக்கட்கு இராமன் தன் தந்தையின் கட்டளையால் அரசு துறந்து கானகம் ஏகி, அங்குத் தன் மனை யாளைப் பறி கொடுத்து அடைந்த துயரக் கதை மிக்கதொரு மனவுருக்கத்தையுண்டாக்கி அவரையெல்லாம் எளிதிலே இராம வணக்கத் தின் பாற் புதுப்பித்தது. இராமானந்தர் இராமன் மேற்பாடிய பாடல்கள் தாம் முதன் முதல் இந்தி மொழியில் உண்டானவை. அதனால் அவருடைய பாடல்கள் அடங்கிய இந்தி மொழி நூல் `ஆதிக் கிரந்தம்’ என வழங்கப்படுகின்றது.

இனி, இராமானந்தர்க்கு பின், அவர் தம் மாணாக்கருள் ஒருவரான `கபீர்தாசர்’ என்பவர் இற்றைக்கு 430 ஆண்டுகளுக்கு முன் காசி நகரில் தோன்றினார். நெசவுத் தொழில் செய்யும் ஒரு மகமதிய குடும்பத்தில் இவர் பிறந்தவரென ஒரு சாராரும், ஒரு பார்ப்பனக் கைம்பெண்ணுக்கு இவர் பிள்ளையாய்ப் பிறந்து அவளாற் கைவிடப்பட்டுப் பிறகு, `நீரு’ எனப் பெயரிய ஒரு மகமதிய நெசவுக்காரரால் இவர் எடுத்து வளர்க் கப்பட்டனரென மற்றொரு சாராருங் கூறு கின்றனர். இவருங், கடவுளை இராமன், அரி, கோவிந்தன், அல்லா என்னும் பெயர்களாற் பாடி வழுத்தினார். ஆனாலுங் கடவுள் பல பிறவிகள் (அவதாரங்கள்) எடுத்தாரெனக் கூறுவது அடாதென்றும், இறைவனைக் கல் செம்பு கட்டை வடிவில் வைத்து வணங்குதல் பெருங் குற்றமாகு மென்றும் இவர் தம்முடைய பாடல்களில் மிகவுங் கடுமையாக மறுத்துப் பாடியிருக்கிறார். இந்தி மொழியின் ஒரு பிரிவான `அவதி’ மொழியில் இஇவருடைய பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன. இந்தியின் மற்றொரு பிரிவான `மைதிலி’ மொழியைக் கற்பவர்கள், `அவதி’ மொழியில் இருக்குங் கபீர்தாசரின் பாடல்களை எளிதிலே அறிந்து கொள்ளல் இயலாது. தாம் இயற்றிய `விப்ரமதீசி’ என்னுஞ் செய்யுள் நூலிற் கபீர்தாசர் பார்ப்பனருடைய கொள்கைகளை மிகு கடுமை யுடன் தாக்கி மறுத்திருக்கின்றார். கபீர்தாசர் இந்தி மொழியில் இயற்றிய செய்யுள் நூல்கள் பற்பல. இவர் இறந்தபின், இவர்தம் மாணாக்கர் இயற்றிய நூல்களும் இவரது பெயரால் வழங்கப்படுகிறது. கபீர்தாசருடைய பாடல்கள் இந்தி மொழியில் உண்டான பிறகுதான், அதாவது சென்ற நானூறு ஆண்டுகளாகத் தாம் இந்தி மொழியின் ஒரு பிரிவுக்கு ஓர் ஏற்றமுண்டாயிற்று.

இனி, கபீர்தாசருக்கு பின், அவர்தம் மாணாக்கரான நானாக்’ என்பவர் `சீக்கிய மதத்தைப் பஞ்சாப் தேசத்தில் உண்டாக்கினார். இவருடைய பாடல்கள், பஞ்சாபியும் இந்தியுங் கலந்த ஒரு கலப்பு மொழியிற் பாடப்பட்டிருத் தலால், இந்தியைப் பயிலும் நம் நாட்டவர் இவருடைய பாடல்களையும் எளிதிலே அறிந்து கொள்ள இயலாது.

இனி, இன்றைக்கு 480 ஆண்டுகளுக்கு முன், தர்பங்கா மாகாணத்தின் கண்ணதான `பிசிபி’ என்னும் ஊரில் `வித்யாபதி தாகூர்’ என்னும் பெயர் பூண்ட வைணவர் ஒருவர் தோன்றிக் கிருஷ்ண மதத்தை உண்டாக்கி, அதனை வட கீழ் நாடுகளில் மிகவும் பரவச் செய்தனர். இந்தி மொழியின் மற்றொரு பிரிவான `மைதிலி’ மொழியில் இவர், கண்ணனுக்கும் அவள் காதலி இராதைக்கும் இடையே நிகழ்ந்த காதல் நிகழ்ச்சி களை விரித்துப் பல பாடல்களைப் பாடியிருக் கிறார். இப்பாடல்களையே பின்னர்ப் `பங்காளி’ மொழியிற் `சைதன்யர்’ என்பார் மொழி பெயர்த்து, அவற்றை வங்காள தேயமெங்கும் பரவ வைத்தனர். இதுகொண்டு, இந்தி மொழியைத் தென்னாட்டிலுள்ளவர்கள் பயின்றாலும், இவர்கள் வங்காள மக்களுடன் அதிற் பேசி உறவாட முடியாதன்றோ?

ஆகவே இத்தென்னாட்டவர் இந்தியைப் பயிலுதலால் அதனுதவி கொண்டு வடநாட்டவ ரெல்லாரோடும் உரையாடி உறவாடல் இயலா தென்பதும் நன்கு விளங்கா நிற்கும்.’’

(திராவிட நாடு — 22.8.1948)

மூலக்கட்டுரை
http://www.annavinpadaippugal.info/katturaigal/hindi_mozhi_varalaru.htm

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

No responses yet

Write a response