இசைபட வாழ்வோம்

SG
12 min readJan 13, 2022

அண்ணாதுரை, திராவிட நாடு,14–1–1960

பொங்கல் விழா நாட்டுக்கோர் பொது விழா
தமிழரின் வரலாற்றுத் தொன்மை
இயற்கைக் காட்சிகள்
அடிமைநிலை போக்கி அரியாசனம் காண்போம்

தம்பி!

பொங்கல் நன்னாள் இன்று; எனவே, எத்துணைதான் என்மீது கோபம் இருப்பினும் — காரணம் உண்டு; அதனை மறுப்பவனும் அல்ல நான் — அதனை மறந்து உவகையுடன் என்னை நோக்குவாய் என்பதனை நான் நன்கு அறிவேன். இந்த நன்னாளில், நமது எண்ணங்கள் கலந்து குழைந்து, எவர் இட்டார், எவர் குழைத்தார், அளவும் வகையும் எவரெவ ருடையது, எங்ஙனம் இருந்தது என்று கண்டறியக்கூடாதவாறு தேனென இனித்து, மலர்மணம் அளித்து, மாண்புடன் இருந்திடும். உண்மை. இயற்கை. இன்றன்றோ தமிழகமெங்கணும், இல்ல மெங்கணும், எங்கிருந்தோ வந்து பூரிப்பைப் பொங்கவைக்கிறது ஓர் விழா உணர்வு. பட்ட பாடுதனைக்கூட ஓரளவு மறந்திடச் செய்கிறது — கவலைப்படலம் கணப்பொழுது மறைகிறது, விழாக் கொண்டாடுகிறோம், வீரமும் தீரமும் வெற்றி நடைபோட்ட, எந்தையர் நாடு இன்று ஏற்றம் குறைந்து, மாற்றார் யார், உற்றார் எவர் என்று அறிந்து செயல்படும் திறமும் தேய்ந்து, கலைந்துள்ள ஓவியமாய், காதிலே முன்னமோர் நாள் கேட்ட இசையாய் இருந்திடுகிறது; எனினும், இருக்கும் இன்னலை மறந்து, கன்னல் நிகர் சுவை தரும் எண்ணங்களைத் தழுவி நிற்கிறது.

செய்த வினை யாதோ, அதற்கு அளிக்கப்பட இருக்கும் அல்லல் எத்தகையதோ, அதனைக் குறைத்திட, இயன்றால் போக்கிட, எவர் அடி வீழ்வது, என்ன பொருள் தந்து ஏத்தி நிற்பது என்ற எண்ணத்தைக் கொண்டதோர் பண்டிகை நாளல்ல; பாடுபட்டால் பலன் உண்டு, பாழ்வெளியும் செழுமை பெறும் என்ற பொது உண்மையை உணரவும், உழைப்பு எனும் அச்சாணியே உலகு இயங்குதற்கு அமைந்துள்ளது, அதன் வலிவு கெடாமலிருக்குமட்டுமே இயங்கும், எக்காரணம் கொண்டு, அந்த அச்சாணிக்குக் கேடு செயினும், உலகுக்கு ஊறு நேரிடும் என்பதை அறியவும், ஊறு நேரிடாமல் காத்திட உழைப்பின் மேம்பாட்டினை ஏற்று நடக்கவும், உழைப்பை அளித்திடும் உத்தமர்களை உருக்குலைய வைத்திடும் உலகொப்பா முறைகளை மாற்றிடவும், தோழமை மலர்ந்திடல்வேண்டும், அஃதொன்றே இல்லாமை எனும் நோயையும் நீக்கிடும் மாமருந்து என்று தெளிவு பெறவும், அந்தத் தெளிவு பெற்றதன் காரணமாகத் தோழமையைக் கெடுத்திட மூட்டிவிடப்படுகிற, கெடுமதி, கீழ்ச் செயல், பேதபுத்தி, தன்னலம் அடிமைகொளல், அடுத்துக் கெடுத்தல், இல்லது கூறி நல்லதுமாய்த்தல், உள்ளது மறைத்து உண்மையைச் சாய்த்திடல் போன்ற, கயமையை எதிர்த்துப் போராடியேனும் வீழ்த்திடல் வேண்டும் என்ற உறுதி பெறவுமான உயர்ந்த மனநிலை ஏற்பட, இவ்விழாப் பயன்படல் வேண்டும்.

வீட்டிலே, கலாபம் விரித்தாடும் காரிகை கண்டும், யாழ் வேண்டாமென்று எண்ணிடவைத்திடும் மழலை மொழிக் குலவி கண்டும், புத்தாடை ஒளிதர, புன்னகை இதயத்தைத் தொட, இளமைக்கோலத்தை அந்தப் பருவம் மாறி இருப்பினும், எளிதில் பெற்றும் இன்புறுவர்.

மிடுக்கு ஏன் போதுமான அளவு இல்லை! இதற்குள் எப்படி வந்தது நரை! ஏன் இவனுக்கு உடலில் தளர்ச்சி! அந்த நாட்களில், நான். . . . என்று இரு நாற்பது ஆண்டுகளை இனிதே கடந்த முதியவர் கேட்டுத் தம்மை ஒத்தவரிடம், அருவிக்கரை ஓரத்திலும், ஆலும் வேலும் சூழ்ந்த காவிலும், குன்றின் முகட்டிலும் கடலோர மணற்பரப்பிலும், அங்காடியிலும், ஆடல் அரங்கிலும், மற்போர்க் கூடத்திலும், சொற்போர்ப் பள்ளியிலும் இருந்ததையும், இனிமை பெற்றதையும், கூறிக்கூறிக் களிப்படையும் காட்சியைக் கண்டு தந்தையாகித் தத்தை மொழியாளின் முத்தத்தில் ஒரு பகுதி இழந்து, வந்தானே வம்புக்கு! என்று மகிழ்ச்சியுடன் கேட்டபடி மகனைக் கொஞ்சிடும் வயதினர், அக்காலம் இக்காலம் என்றெல்லாம் பேசுவதில் பொருள் என்னை? எக்காலமும், இந்தத் துறையைப் பொறுத்த மட்டில் ஒன்றேதான்! புறநானூறு மாறி இருக்கலாம் — மாறி இருக்கிறது — மாற்றப்பட்டிருக்கிறது! மறுத்தல் இயலாது, ஆயின் அகநானூறு மட்டும், அப்பழுக்கின்றி அன்றுபோல இன்றும் உளது. காலம் அதனைக் கெடுத்திடல் இயலாது; அது தமிழரின் தனிச் சிறப்பு; வழி வழி வந்தது; மரபு ஆகி நிற்பது; என்று எண்ணி மகிழ்கின்றனர்.

குன்று இழந்தும், கொற்றம் இழந்தும், கொடுத்திடும் இயல்பினை இழந்தாரில்லை பாரி மகளிர். பாரி கட்டித் தங்கம் தந்தான்; கரியும் பரியும் தந்தான். அவை தரத்தான் இயலவில்லை, அவன் ஈன்ற அருமைமிகு மகளிரால்! ஆயின், இருந்ததை, இயன்றதைக் கொடுத்தனர்;

பெறுவோர், பெற்றோம் பெருஞ் செல்வம் என்று உளமார உணர்ந்து மகிழத்தக்க வகையில் கொடுத்தனர். பொருள் குறைந்ததேயன்றி இயல்பு கெடவில்லை! பாரி இருந்தால் எவ்வளவு அன்பு காட்டி பண்பினை நிலை நாட்டக் கொடை நல்கி இருப்பானோ, அதே பான்மையில், மகளிர் ஈந்தனர். அவன் கொடைத் திறனைக் காட்டிலும், அவன் மகளிருடையது, பெருமைக்குரியதாகும். என்னெனில், அரசு இழந்து அல்லற்பட்ட நேரம்! முரசு இல்லை! குன்றம் கொடி காட்டி நிற்கவில்லை! எத்துணையோ இடுக்கண்! பிறரிடம் பிடிபட்டோம் என்ற வேதனை! இத்தகைய நிலையில், அம் மகளிரின் மனம், வெதும்பிடுவதும், பிறரைக் காணவும், உரையாடவும், கவி இன்பம் கேட்டுக் களித்திடவும், மனம் இடம் தராத நிலை ஏற்பட்டிருக்கக்கூடும். எனினும், உரிய இயல்பு, உடைமை போயினும், இறந்துபடவில்லை; இருந்தது; ஒளி தந்தது; கொடை அளித்தனர் அக்குமரிகள், இருந்ததை, இயன்றதை!!

அஃதொப்பவே, இதுபோது தமிழகம், பல்வேறு காரணங் களால் தாழ்வுற்றுக்கிடப்பினும், தேய்வுற்றுக் கிடப்பினும், உழவு செழுமையற்றுத் தொழில் வளர்ச்சியற்றுக் கிடப்பினுங்கூட, இட்டடி நோக, எடுத்த அடி கொப்புளிக்கத் தக்கதான வெம்மை எனினும், சேயைக் காண விரைந்தோடும் தாயின் பரிவுபோல; “பண்பை’ப் பட்டுப்போக விடாமல், உயிரூட்டி வளர்த்து வருகிறது.

கலாம் செய்திடத் தூண்டிடும் காரணம் ஆயிரம் இருப்பினும், அமைதி கெடல் ஆகாது என்ற அருங்குணத்தைக் காட்டி நிற்கிறது.

கோல்கொண்டோர், வேலெறிதல் எவர்மீது, பால் பெய்தல் எவரெவர்க்கு, வெஞ்சினம் கூறல் எதுபோது, இன்முகம் காட்டிடல் எந்த இடத்தில், எவர் சுமப்பர், எவர்மீது சுமை ஏறின் சாய்வர்; என்ற அடிப்படையையும் மறந்து அட்டகாசப் புரவிமீது அமர்ந்து பாழ் வெளிப் பயணத்தில் ஈடுபடும் காலையும், எதிர்த்திட உரிமை இருந்தும், ஆற்றல் அடியோடு அற்றுப்போய்விடவில்லை எனினும், அவரும் திருந்துவர் தமிழராதலால்; நல்வழி வந்து சேருவர்; அறம் அவர்தமை அழைத்து வந்து சேர்க்கும் என்று எண்ணி, நம்பி, நல்ல குடிமக்களாகவே நடந்து வருகின்றனர்.

வயல் காய்ந்துவிடுதற்கும், வந்த நீரை வாய்க்கால் குடித்து விடுவதற்கும், தொழில் பட்டுப்போவதற்கும், தொல்லைகள் ஆயிரம் தோன்றிக் கொட்டுவதற்கும், பொறுப்பேற்றுக் கொண்டு, பணியாற்றிப் பயம் நீக்கிப் பயன்காட்ட வேண்டியது, அரசுக்கு உள்ள நீங்காக் கடமை என்பதை அறிவர். வசதிப் பெருக்கும் விஞ்ஞான வளர்ச்சியும் அற்ற நாட்களிலேயே, குடி அரசு எனும் புதுமுûற் காணாமல், கோனாட்சியே குடிகட்கு நல்லாட்சியாக இருத்தல் இயலும் என்ற அளவு மட்டுமே கொள்கை இருந்து வந்த காலத்திலேயே, வந்துள்ள இடர்களைக் களைந்திட முற்படுவது அரசர் கடமை என்பதை, மன்னனும் மக்களும் ஒருசேர உணர்ந்து, ஒப்பி, அதன்படி நடந்து வந்தனர் என்பதை எடுத்துக் காட்டிடும் இன் கவிகள் பல, ஏடாகி உள்ளன! ஏட்டளவில் உள்ளன! அவைதமை எடுத்துக்காட்டி, எமை ஆளும் தகுதி உமக்குண்டு எனில், நமதரசு முன்னாளில் இருந்ததனைக் கண்டறிவீர், அதன்படி அரசு நடாத்துவீர் என்று கேட்டிட, உரிமை இருக்கிறது, தமிழ்ப்பெருங்குடி மக்கட்கு. எனினும், நமக்கே இது தெரியும்போது நமை ஆளவந்தார்க்குத் தெரியாமலா போகும்; தெரியும்; ஏனோ தயக்கம், எதன் பொருட்டோ காலந்தாழ்த்தி நிற்கின்றனர்; பொறுப்போம் சிறிது காலம்; என்றெண்ணித் தூற்றாது போற்றியும் நின்று வருகின்றனர்.

அம்மட்டோ! பாரிமகளிர் பரிவுடன், அன்பு கலந்த உண்டியை அருங்கலத்திட்டு அளித்த பான்மைபோல், ஏற்ற மற்றுக் கிடக்கும் இந்நாளிலும், தமிழ்பெருங்குடி மக்கள், தேவைப்படும்போதெல்லாம், வாய்ப்புக் கிடைக்கும்போதெல் லாம், தமது அருந்திறனைக் காட்டுகின்றனர்; அளிக்கின்றனர்; பயன் பிறருக்கே போய்ச்சேரினும்கூடப் பொறுத்துக் கொள்கின்றனர்.

தம்பி! அந்த நாட்களில் அருந்தமிழ் வளர்த்து ஆற்றலுடன் நாடாண்ட, மன்னர்களின் ஓவியத்தைக் காணத்தானே, இங்கு மங்கும் பார்க்கிறாய்! அது தெரியாமல், உன் செங்கரும்பு, பார், நானிருக்க இவர் நயனம் நானாபக்கம் பாய்வதேன் என்று கேட்கிறார் — கேட்கவில்லையா உன் செவிக்கு? அதோ பழத்தைத் தோலோடு தின்ன முற்படும் உன் அருமை மகனிடம் பேசுகிறாள் பார், அந்த அணி மயில்! ஒரு இடமாக உட்காரக் கூடாதா? இங்கும் அங்கும். . . என்று பேசுவது தெரிகிறதா! உனக்காகத் தான்! நீ தேடுவது வேறோர் தேன்மொழியையோ என்று தோன்றுகிறது; நீ தேடுவதோ, அருந்தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்களின் ஓவியத்தை. தேடிப் பயனில்லை, தம்பி, துளியும் பயனில்லை. தமிழர் இல்லங்களில் தமிழ் அரசர் ஓவியங்கள் இரா! இல்லங்களில் மட்டுந்தானா இல்லை! பலர் உள்ளங் களிலேயே இல்லையே அந்த நினைப்பு.

அரசு இழந்ததுமட்டுமல்ல, என்னருந் தம்பி! அந்த நினைப்பையே இழந்துவிட்டோம்! அதிலேதான் இருக்கிறது, நமது வீழ்ச்சிக்கான காரணம். அந்தக் காரணம் விளங்கினால், அடுத்த கனம் விழிப்புணர்வு? ஆம்! உறுதி!

அந்த உணர்வு, நமக்குக் கிடைத்திட, நமக்கென்று உள்ள வாய்ப்புகள் மிகமிகச் சில! அதிலே தலை சிறந்தது, இந்தத் திருநாள்! எனவேதான், திருநாள் கொண்டாடத்தக்க “நிலை’ இல்லை எனினும்கூட, நமது கழகம், எப்பாடு பட்டேனும், இந்த விழாவினை, நாட்டுக்கோர் பொதுவிழாவாக்கி நடாத்த வேண்டும் என்று விரும்புகிறது; அம்முறையில் பணியும் புரிந்து வருகிறது; இயன்ற மட்டும்!

தமிழகத்தின் தனிச் சிறப்பை, தரணி மெச்ச நம்மவர் தனி அரசு நடாத்திய வரலாற்றினை, நாம் எடுத்துக் கூறி வருகிறோம், மக்களிடையே. அதன் பயனாக ஏற்பட்டு வரும் மகத்தான எழுச்சி கண்டு, மனமகிழ்கிறோம். ஏனோவெனில், நாட்டுப்பற்று ஊற்றெடுத்தோட வேண்டுமாயின், நாடு நன்னிலையில் இருந்த வரலாறு மக்கட்குத் தெரிந்திருக்கவேண்டும். இல்லையேல், விழிப்பும் இல்லை, எழுச்சியும் ஏற்படாது, விடுதலை உணர்ச்சி இல்லை, வீறிட்டெழுவார் இரார்.

தமிழக வரலாறு, நீவீர்தாம் புதுமையைக் கூறப் போந்தீரோ? அறிந்தோர் பிறர் இலையோ! அறிவித்தோரும் உண்டு, மறுப்பீரோ? என்று கடாவுவர் சிலர். அவர்தம் கோபத்தைக் குறிக்கவே, கடாவுவர் என்ற வலிமை மிக்க சொல்லைத் தந்துள்ளேன்.

அவர் கேட்பதுபோல, பலர் உண்டு; உளர். ஆயின், அவர்களின் நோக்கம், ஏடொன்று புதிதாக எழுதி அளிப்ப தாகவோ, ஆராய்ச்சித்துறையின் மற்றோர் அணிகலன் என்று இயம்பிடத் தக்கதாகவோ மட்டும் இருந்தது. பகை பாயாதிருக்கப் பலரின் நேசம் கிட்ட, ஆள்வோரின் ஆதரவு தேட, அம்முறையே சிறந்ததெனக் கண்டனர்; கொண்டனர். தமிழக வரலாற்றினை, எழுச்சிக்கு வழியாகக் கொண்டாரில்லை; கொள்வோரை மறுக்காமலுமிருந்ததில்லை.

ஒருமுறை சென்னை உயர் நீதிமன்றத்துக்குத் தலையாய பேரறிவாளர், “திராவிடப் பண்பாடு’ குறித்து விளக்கமுறைத்தார், மன்றமொன்றில். கூறிக்கொண்டே வரும்போது, அவர்க்கோர் ஐயப்பாடு குடைந்ததுபோலும்! ஏதேது, இவர் போன்றாரும் “திராவிடம்’’ பேசத் தலைப்பட்டுவிட்டனரே! கருத்து ஏன் காட்டு வழி செல்கிறது? கழகவாடை வீசிடக் காரணமென்ன — என்று எவரெவர் எதிரில் பேசுவரோ; மறைவில் ஏசுவரோ, என்ற ஐயப்பாடு! அது, அச்சத்தை அழைத்து வந்தது. எனவே, அப் பெருந்தகை, “யான் திராவிடப் பண்பாடு குறித்துப் பேசக் கூசுகிறேன்; ஏனெனில், அந்தச் சொல், இனம், அரசியல் ஆகிய வற்றுடன் இப்போது பிணைக்கப்பட்டு இருக்கிறது’’ என்று சாற்றினார். சாற்றியதால், அவரைப் போற்றி நின்றார் தூற்றத் தலைப்படாதிருந்தனர்.

கழகத்தார் மட்டுமே, தமிழக வரலாறு, தமிழர்க்கு விழிப்பூட்ட என்ற நோக்கம் கொண்டனர்; புது வழி கண்டனர்; வெற்றியும் கிட்டாமற் போகவில்லை. வெற்றி எங்ஙனம் கிட்டிற்றோ, அஃதேபோன்று வேற்றுக் கருத்துடையாருக்கு, வெகுண்டெழும் எண்ணமும் உடன் எழுந்தது. வரலாற்றினை, வண்கணாளர்கள், வம்பு வல்லடிக்குப் பயன்படுத்துகிறார்கள்; இது அடாத செயல்; அறிவீனமான போக்கு என்று கூறப் போந்தனர். அவர்தம் நாப்பறைக்கு மக்களிடையே இல்லை யெனினும், கொலு மண்டபங்களிலே, மேட்டுக் குடியினரின் கோட்டங்களிலே, பொருளுடையாரின் கூடங்களிலே செல்வாக்கு உண்டன்றோ! அந்த முறையிலும், அளவிலும், நமது கழகத்துக் ஓரளவு ஊறு ஏற்படத்தான் செய்தது. எனினும், பிறருக்குக் கூறிக்கூறி, நமக்கே, அந்த வரலாறு, ஒரு அஞ்சா நெஞ்சத்தைத் தந்துவிட்ட காரணத்தால், எதிர்ப்பு கண்டு நாம் அயரவில்லை; ஏளனம் கேட்டு ஒதுங்கிவிடவில்லை; “தன் நெஞ்சு அறிவது பொய்யற்க, பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்’ என்றாரே வள்ளுவர்; தீயோரின் நாவினால் புண் ஏற்படுமே என்று அஞ்சினால், அதனைவிடச் சகித்திட முடியாத புண், நமது நெஞ்சுக்கு நெஞ்சத்தாலேயே ஏற்பட்டுவிடுமே, என்று எண்ணினோம், ஏது வரினும் அஞ்சற்க! உண்மையை இயம்புதற்கு அஞ்சற்க! என்ற போக்குடன் பணியாற்றி நிற்கிறோம்.

இதுகண்ட ஒரு சிலர், இளித்தவாயர் கிடைக்காமலா போவார்கள் என்ற துணிவில், “இதென்ன தமிழரரசர்கள்பற்றிய பெருமைப் பேச்சு! செச்சே! அது பழைய கதை! கர்நாடகக் கதை! அணுபிளந்து ஆயிரத்தெட்டு அற்புதங்காணும் இந்நாளில், அனிச்சமலர், அன்றிற் பறவை, அல்லிப்பூ, முல்லைக்கொடி, ஆத்திமாலை, நெடுநல்வாடை, பரணி, அந்தாதி, வாள்வேல், மந்தி, மகரந்தம் என்றெல்லாம் பேசித் திரிகின்றனரே!’’ என்று ஏளனம் பேசுகின்றனர். பேசுவோர் எவ்வளவு முற்போக் குடையார் எனில், வீசித்தான் போடுவார் திறநீற்றை! அமைச்ச ரானால் என்ன, அதனினும் உச்சம் சென்றவரானால் என்ன, ஐதீகத்தைப் பாழ்படுத்துவதா! ஆலய பூஜா முறைக்கு இழுக்குத் தேடுவதா! புனிதத்தைப் பாழ்படுத்துவதா!! என்று, ஆத்திரம் பொங்கிடும் நிலையில் கேட்கின்றனர். மறுநாள் மாலை அணு உலைக்கூடம்பற்றிப் பேசுவர்!!

இத்தகைய இயல்பினர்தாம் தமிழரின் தொன்மை குறித்து நாம் பேசிடுவது கேட்டு, அச்சத்தை மறைத்துக்கொள்ள அவதூறு பேசித் திரிகின்றனர்.

இவர் தொகை குறைவு என்பது மட்டுமல்ல, இவர்தம் கருத்துக்குக் கிடைத்துவரும் “மதிப்பும்’ மிகமிகச் சொற்பம், அந்தச் சொற்பமும் அவர்கள் பெற்றுள்ள “இடத்தின்’ காரணமாகச் சாகாது இருந்து வருகிறது. அவ்வளவே!

தமிழரின் தொன்மையை எடுத்துரைப்பது, தொன்மையே சிறந்தது, புதுமை அன்று என்று எண்ணிடும் மருளால் அல்ல.

அன்று, எங்ஙனம், தமிழர்தம் அறிவாற்றலால் பல்வேறு நாட்டவர்களைக்காட்டிலும், எல்லாத் துறைகளிலும் ஏற்றம் பெற்று விளங்கினரோ, அதுபோன்றே, இன்றும், முயற்சி செய்தால், தளைகளை நொறுக்கினால், தன்னரசு அமைத்தால், தரணி கண்டு மெச்சத்தக்க வகையில், தமிழர் வாழ்வர்; பண்பு காண்பர்; பாருக்கு அளிப்பர்; என்பதே நோக்கம். சந்தன மரத்துத் துண்டு, அடுப்பெரிக்க அல்ல, அரைத்தெடுத்து மணம் காண! அதோ, உன் எதிரே உள்ள கரும்பு மாடோட்டும் கோலாக அல்ல, உன் மனத்துக்கிசைந்தாளின் மதுரமொழியும் அதரச் சுவையும் கிடைக்காதிருக்கும் வேளையில், இனிப்புச் சாறுதர.

இங்ஙனம் கூறுங்காலை, குறிப்பாக என்மீதும், பொதுவாக நமது கழகத்தவர்மீதும் பழியொன்று கூறிடப் பதைத்தோடி வருகின்றனர் — வழி பல கண்டு அலுக்கும் வகையற்றோர்.

சுவைபடப் பேசுகின்றனர். மக்களை மயக்க! அதுவும் ஆரணங்குகள்பற்றி அழகுறப் பேசுகின்றனர், இளைஞர் சொக்கிடும்படி — என்று கூறுகின்றனர். இது எற்றுக்கோ எனில், பிறர் கேட்டுக் காய்வராம், கசக்கிறது என்பராம்! என்ன பேதைமை! எத்துணை தமிழறியாத்தன்மை இருப்பின் இவர்கட்கு இந்த எண்ணம் தோன்றும்!

வள்ளுவர், “காமத்துப்பால்’ இயற்றியதே தவறு, தேவையற்றது, தீதும் பயப்பதாகும் என்று கூறி வருவதையும், பேரறிவின் சான்று என்று கருதிக் கதைக்கின்றனர்.

மறைந்த தமிழ்ப்பெரியார், திரு. வி. க. அத்தகையோருக்கு அறிவு கொளுத்திப்பார்த்தார். அழுக்கு மட்டுமல்ல, அழுக்காறு நிரம்ப உள்ளத்தில் அவர்கட்கு இருப்பதால், அந்த முயற்சி முழு வெற்றி அளிக்கவில்லை.

இன்று, அதே போக்கிலே பேசுகின்றனர் — பேசுவது கேட்டு, இல்லறத்தில் யாரோ இவர்களை இழுத்துப் பிடித்து வைத்துள்ளார்! இல்லையேல் ஐம்புலனை அடக்கி ஒடுக்கி, மும்மலம் நீக்கிக்கொண்டு, முகதிக்கு வழி தேட, மலைமுகடோ, காடோ, சென்று கடுந்தவம் செய்வர் — என்று கூறி இறைஞ்சுவர் என எண்ணிக்கொள்கின்றனர். மக்கள் அறிவர், மாண்புபற்றிப் பேசிடும் இவர்கள், எத்துணை மாண்பு வளர்த்தனர் என்பதை!!

தம்பி! தமிழ் கற்றால், தமிழ் வரலாறு பேசினால், தமிழர் வாழ்ந்த வகை குறித்துப் பெருமைப்பட்டுக்கொண்டால், வருகிறது கோபம் இவர்கட்கு. காரணம், இதற்கு இரண்டுண்டு, ஒன்று, விடுதலை வேட்கை வளருகிறதே என்ற அச்சம்; பிறிதொன்று, இவர்கள் அறிய மாட்டார்கள், தமிழக வரலாற்றினை, அறிந்தோர் பெறக்கூடிய எழுச்சி எத்தகையது என்பதை.

ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு, தம்பி, புலவர் பெருமக்கள், இயற்றியது அகம் — புறம் — எனும் இரண்டினை! அறிந்து இயற்றினர், அஃது மக்கட்குத் தேவை என்பதால். கட்டற்ற களியாட்டத்துக்கு அல்ல, இல்லற இன்பம் குறைவற்றதாக இருத்தல்வேண்டும், வாழ்க்கை ஒருகலை, அதனை மக்கள் உய்த்து உணரவேண்டும் என்ற பெருநோக்குடன் இயற்றினர். நுண்ணறிவும், நோக்கிடும் திறனும், பொருள் கொண்டிடும் நேர்த்தியும் செறிந்த முறையில் இயற்றினர். காணும் பொருளுக்குக் காணாப் பொருளை உவமை காட்டி. குருடனைக் கொண்டு குருடனை அழைத்துச்செல்லச் சொன்னாரில்லை.

அழகிலே அவள் அரம்பை என்றல்ல, ஆடும் மயில் அந்த ஆரணங்கு என்றனர்! வீரத்திலே அவன் வில்விஜயன் என்றல்ல, மலையைப் பிளந்திடும் மதகரி என்றனர்! “அவனும் அவளும்’ பொழிலில் உலவியதை, தேவேந்திரனும் இந்திராணியும் கற்பகத் தருவடியில் சல்லாபித்தது போன்றது என்று அல்ல, பெடையுடன் ஆடிடும் புள்ளினம், மடப்பிடியுடன் களிறு களித்தாடுவது, இவைகளைக் கூறினர். “காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்’’ என்கிறார், கடவுள் திருப்பாதத்தைக் காணப் பாடியவரும்கூட!

தம்பி! ஒரு யானை! அது ஒரு நாள், தன் பிடி முன்வர வெட்கப்பட்டுக்கொண்டு புறக்கடைப்பக்கம் போய் நின்றதாம்! ஈதென்ன வேடிக்கை, யானை வெட்கப்படுவதா, ஏன்? என்பீர்!

காதலி எதிரில், அலங்கோலமான நிலையில், வந்து நிற்க வெட்கமாக இராதோ உங்கட்கு. ஆள்வோரைத் தள்ளி விடுங்கள், அவர்கள் விரைவில் “ஜடாமுடி’ தாரிகளாகி, காவி கட்டிக் கமண்டலமேந்தி, கடுந்தவம் செய்யப் புறப்படுவார்கள்! அப்படிப் புறப்பட்டால்தானே, பேரழகி மேனகை வருகிறாள்!! போகட்டும்! தவத்தை நடத்தட்டும். நான் கேட்பது இல்லறம் நடத்துவோரை! யாம் கூறுவதன்றிப் பிறிதேதும் அறமாகாது என்று அறைந்திடுவோரை அல்ல!

பல்லிரண்டு ஒடிந்துபோய், உதடு கிழிந்து, ஆடை கலைந்து இருக்கும் நிலையில் காதலி எதிரே வந்து நிற்கத் துணிவீர்களோ? முடியாது, என்கிறீர்கள். அதேதான் அந்தக் களிறு இருந்த நிலை. தந்தம் உடைந்துவிட்டது! நகங்கள் தேய்த்து போய்விட்டன! அந்தத் தந்தத்தைக் கண்டு கண்டு எத்தனை முறை பெண்யானை களிப்புற்றிருக்கும்; உரிமையுடன் உவகையுடன், தன் துதிக்கை யால் எத்தனை முறை தந்தத்தை வருடிற்றோ, நீ கண்டாயோ! என்ன ஒரு விதமான புன்னகை!! அன்றொருநாள், தோளின்மீது சாய்ந்து. . . ஓஹோ! அதை எண்ணிக்கொண்டாயா! யானை மட்டும் என்னவாம்! களிறு, கவலைப்படுகிறது! செ! இந்த நிலையில், மடப்பிடி என்ன எண்ணுவாளோ! எப்படி எதிரே போவது! வெட்கமாக இருக்கிறதே என்று. எனவே, புறக்கடைப் பக்கம் சென்று நிற்கிறது.

தந்தம் ஒடிந்தது ஏன் தெரிகிறதா?

கொடி மதில் பாய்ந்தது — போரில்! கோட்டைச் சுவரினைக் கோடுகொண்டு — தந்தந்தைக்கொண்டு, தாக்கிற்று! கோட்டைச் சுவரும் இடிந்தது, தந்தமும் உடைந்தது. போரின் காரணமாகத் தான் நகமும் தேய்ந்தது! இதைப் பெண் யானை பிறகு, தானே தெரிந்துகொள்ளும் பார்த்ததும்! என்ன அலங்கோலம் இது! கோடு உடைந்து கிடக்கிறதே! என்று கேட்டுக் கேலி செய்யுமே! அந்த எண்ணம், ஆண் யானைக்கு!

வெறும் காதல் மட்டுமா, தம்பி. இதிலே காணக் கிடக்கிறது! தமிழர் போர் முறை விளக்கப்படுகிறது! மனப்போக்குத் தெரிவிக்கப்படுகிறது. அரிய நகைச்சுவை ததும்புகிறது! இத்தனையும் தமிழ்! அந்தத் தமிழ், நமது மொழி! அந்தக் களிறு, பிடி, நம்முடையவை! “அந்த நாட்கள்’ நம்மவர், “நமது அரசு’ அமைத்து ஆண்ட நாட்கள்!

இவ்வளவும், இதற்கு மேலும், ஊற்றெடுக்குமே, இத்தகைய தமிழ்ப்பாக்களைப் பயிலுங்காலை.

தம்பி! நாடாள்வோரைக் கண்டு கண்டு சலித்துப் போயிருக்கிறதல்லவா, உன் கண்கள். அதிலும், கோயிலுக்குச் சென்று கும்பிட்டு நின்று, ஆண்டவன் அருளைக்கூடப் பெற்று விடலாம் எளிதாக. ஆனால், ஆலயத்துப் பூசாரியிடமிருந்து மட்டும், மட்டு மரியாதை, மனிதத்தன்மையை மதிப்பதுபோன்ற மிகச் சாதாரண “பிரசாதம்’கூடக் கிடைக்கவில்லையே என்று, கை பிசைந்து கண் கலங்கி நிற்கும் “கனம்’களைக் காண்கிறோமே! கஷ்டந்தான்! எனக்குந்தான்! சரி, தம்பி! ஒரு நாரையைக் காண்போமா!

துயில்கின்றது! எவ்வளவு இன்பமாக; கவனித்தாயா! உன் மார்பின்மீது, மதலையின் சிறுகால்! உன் முகத்திலே, ஓர் மலர்ச்சி! பக்கமுள்ள பாவைக்கு உன்னை அம்மகவு படுத்தும் பாடு கண்டு, பெருமை, பூரிப்பு! உனக்கு அடங்க மறுக்கிறது, உன் ஆற்றலின் விளைவு!

“நானே, அடங்க! உங்கள் “வீரம்’ என் கண்ணிடம் பலிக்காது!’’ என்று கூறிக் கெக்கலி செய்கிறார்கள், முக்கனிச் சாற்றைப் பேச்சிலே பெய்தளிக்கும் பாவை.

உனக்கும் உன்போன்றோர்க்கும் அது.

இதோ நாரையைப் பார், நிம்மதியாகத் தூங்குகிறது! இளம் காற்று வருடினால், தூக்கம் ஏன் வாராது?

அதுவும், மாமரத்தின் இளந்தளிர், தடவிக் கொடுக்கிறது. இனிமையான தூக்கம் நாரைக்கு.

மாத்தின் இளந்தளிர் வருட
வார்குருகு உறங்கும்.

ஆமாம், தம்பி! புலவர், ஏன் நாரையைக் காட்டினார்? நாரையை அல்லது அதன் தூக்கத்தைக் காண்பதிலே, என்ன இன்பம்! துரைத்தனம் நடத்துபவர்களிலேகூட, அவையில் அமர்ந்து, கண்மூடிக் கிடப்பவர்கள் உண்டே! இது சாதாரண நாரைதானே. இதை ஏன், புலவர் காட்டினார் என்பார். காரணத் தோடு தம்பி, தகுந்த காரணத்தோடு நாட்டிலே இருந்த இயற்கை வளத்தைக் காட்டுகிறார், வெறும் நாரையை மட்டும் அல்ல.

கழனிக் கரும்பின் சாய்ப்புறம் ஊர்ந்து
பழன யாமை பசுவெயில் கொள்ளும்.

நன்செய் நிலத்தில் வளர்ந்துள்ளது கரும்பு. ஆமைக்கு இளவெயிலில் காய்ந்து இன்புறும் எண்ணம். கரும்பின் வழியாக ஏறிக் காலை இளம் வெயிலில் காய்கிறது.

சேச்சே! இதென்ன ஆமைக்கு ஒரு பாடலா என்று கேட்பர், ஆள வாய்ப்பு கிடைத்ததாலேயே; அறிவின் முதிர்ச்சி தமது சொத்து என்று அதிகாரத்தைக் காட்டி மக்களை நம்பச் சொல்வோர். நாட்டு வளம் மட்டுமா? புலவர்கள், இயற்கைக் காட்சிகளை எவ்வளவு அழகுறப் படமெடுத்திருக்கிறார்கள் என்பதல்லவா முக்கியம்.

ஆமையைக் கண்டு கூர்மாவாதாரக் கதை கட்டினாரிலை; வளம் எப்படி இருந்தது என்று உணர்த்தினர்.

இயற்கை வளம் காட்டுவதுடன் நின்றாரில்லை, அரசர்கள் முறை தவறி நடந்தகாலை இடித்துரைத்தனர், கோல் கோணாதிருத்தல்வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

சுவைபடக் கூறுவது ஆகாது என்று பேசுவோர், குறிப்பாக “அகத்துறை’யை ஒதுக்கித் தள்ளிவிடுகின்றனர். உனக்கென்ன, என்று கேட்பாயானால் தம்பி, எனக்கொன்றும் இல்லை; ஆனால், அங்ஙனம் கூறுவோர், “புறம்’ பற்றிய, புலவருரையையேனும், போற்றினரா, பாடம் பெற்றனரா? இல்லையே! ஏன்? ஆரணங்குபற்றிய பேச்சு அவர்கட்கு எட்டி. சரி! அப்படியே இருக்கட்டும். மற்ற அறநெறிபற்றி, என்ன கருதுகின்றனர்? எவ்வாறு நடந்துகொள்கின்றனர்?

மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ
காற்றும் சிலரை நீக்கி வீசுமோ
மானிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ
கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ
குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே.

என்று பாடியுள்ளனரே. இதிலே கடை இல்லை; இடை இல்லை, பிறகேன், இதனைக் கூர்ந்து பார்த்து, அவ்வழி நல்வழி என்று கண்டு, கேடு களைய முற்படக்கூடாது!

நீண்ட காலமாக இருந்து வரும் “பூஜா’ முறையை எவரும் குறைகூறக் கூடாது என்றல்லவா, பேசுகின்றனர், அமைச்சரானோர்.

சிறப்பும் சீலமும் அல்லாது
பிறப்பு நலந்தருமோ பேதையீரே!

என்று கேட்கிறாரே, புலவர்! எங்ஙனம் விடை இறுக்க இயலும்?

இந்தத் தேவாலயத்திலே, இன்னார்தான், இன்ன முறைப் படிதான், பூஜை செய்வர்; அதற்கு உட்பட்டுத்தான் பக்தர் செல்ல வேண்டும் — என்று பேசும் போக்குக்கும், பழந்தமிழர் கொள்கைக்கும் ஏதாகிலும் பொருத்தம் இருக்கிறதா? இல்லையே! ஆலயத்துக்குப் “பூஜாரிகள்’’ ஆக, இன்னின்ன தகுதி வேண்டும், ஜாதி அடிப்படையில் அல்ல என்று சட்டம் இயற்றச் சொல் பார்ப்போம்! அந்த முயற்சியில் ஈடுபட்டால், எமது செல்வாக்குச் “சடசடெனச் சரியும்’’ என்பார்கள்.

எனவேதான், தம்பி, தமிழரின் வரலாறு குறித்து நாடு அறிந்தால் மட்டுமே, நெஞ்சுரம் ஏற்படும் என்று கூறுகிறது, நம் கழகம்.

சிறைப்பட்ட மன்னனுக்குத் தாங்கமுடியாத தாகம் ஏற்பட்டது. காவலாளியோ பருக நீ கொடுக்கும்போது மரியாதைக் குறைவாகக் கொடுத்தானாம். மானம் பெரிது, உயிரல்ல என்று எண்ணிய அந்த மறத்தமிழன், நீர் பருகாதிருந்து உயிர் நீத்தான் என்று பாடல் இருக்கிறது.

அந்தப் பாடலும் பழம் கதையும் எற்றுக்கு என்று ஏசுவோரின் ஆளுகையில், “எட்டிநில்! கிட்டே வராதே! வீசுவேன் பிரசாதம், வாங்கிக்கொள்!’’ என்று ஆலயத்தில் உள்ளவன் ஆரியம் பேசுகிறான், அது நியாயந்தான் என்று “ஐதீகம்’ பேசுகிறார் ஒரு அமைச்சர்! ஊரே கிளம்பி, இந்தச் சுழியில் சிக்கிய துணை அமைச்சரைத் துளைத்தெடுக்கிறது. தமிழ் அறம் அரசோச்சுமானால் நிலைமை இதுவாகவா இருக்கும்?

அந்த அறம், அமைச்சர்களின் துணையால் வாராது; தம்பி! உன்போன்ற தூய உள்ளமும் துயர் கண்டு துவளாப் போக்கும் கொண்டோர், தொடர்ந்து பணியாற்றினால் மட்டுமே முடியும். தொடர்ந்து பணியாற்றவேண்டும், தம்பி, தொடர்ந்து! இன்று கூடவா, அண்ணா! என்று, ஏக்கத்துடன், கேட்கத் தோன்றும். நான் அவ்வளவு கடின மனம் கொண்டவன் அல்ல.

இன்று இல்லத்தில் இன்புற்று இரு! உன்னைப் பெற்றோர் உளமகிழ்ந்து “எமது குடிசிறக்க வந்துற்றான் இவன்’ என்று கூறிடத்தக்க விதமாகச் செயலாற்று.

மஞ்சளும் இஞ்சியும், அவைதமை நறுக்கிடும் மாம்பழக் கன்னத்தாளும், பால் பெய்த பொங்கலும், பருப்பும் பாகும், எதிரிருக்க உன்னை ஏடு எடு! நாடாள வந்தவர்கட்கு அறிவுச் சுடர் வரத்தக்க விதத்தில் எடுத்துக் கூறு! எதிர்ப்புக்கு அஞ்சாதே! என்று கூறி, அழைப்பேனா! அண்ணன் கூறுவதை எப்படித் தட்டி நடக்க முடியும் என்று கூறிப்பார், வேல் இரண்டு பாயும் உன் நெஞ்சில்! எடுத்தெறியத் தேவை இல்லை வேலை! ஏறெடுத்துப் பார்த்து, என்ன? என்று கேட்டாலே போதும், நானறிவேன்.

பொங்கலெனும் நன்னாளைப் பூரிப்போடு போற்றுதற்கு, ஊரெல்லாம் திரண்டிடும்போது, உனக்கு மட்டும் வேறு பணியா? இல்லை, தம்பி, இல்லை, செங்கரும்பும் சீனியும் செவ்வாழைச் சீப்பும், சுவைக்க! முல்லையும் மல்லியும் சூட!

பூ இரண்டு போதாதோ, புதுப்பூக்கள் தேடுவதோ, என்று மலர்க்கண்ணாள் கேட்டிடுவாள் இதழ் விரித்து.

அந்த இன்பக் காட்சியிலே, உன்னை மறந்து, ஒரு நாள் இருப்பது, பிறகு தன்னை மறந்து, தமிழுக்குப் பணிபுரியும் உற்சாகம் பெறுவதற்கே என்பதை மட்டும் மறவாதே!

காடதிர, நாடதிர, கயவர் கூட்டம் சிதற, வீரம் விளைவித்து வெற்றி கண்ட இனத்தில் உதித்தோம்.

வேழம் உராயும் சந்தனமும், வெற்பில் விளையும் பல பொருளும், பழமுதிர் சோலைகளும், பாங்குநிறை கழனிகளும், பலவும் பெற்றோம்.

தீயன நினைக்கா நெஞ்சும், தேனென இனிக்கும் மொழியும், வையகம் போற்றும் நெறியும், நமக்கு.

முப்புறம் கடலுண்டு; எப்புறமும் அந்நாளே கண்டு வியந்ததுண்டு. பலப்பல இலக்கியம் உண்டு, கலை பல உண்டு, காண்பாய்!

அலைகடல் அடக்கும் ஆற்றல், ஆணவம் முறிக்கும் அடுபோர்த்திறன், வாணிபம் நடாத்தும் நேர்த்தி, செய்பொருள் ஆக்கும் செம்மை, யாவும் உண்டு இங்கே.

முத்து அளிக்கும் கடல்! அகில்போல் பல தருக்கள் அளிக்கும் நம் காடு, வாழ்வுக்கு வகை அளிக்கும் நம் கழனி! வல்லமை அளிக்கும், மரபின் இயல்பு! வாய்மையும் தூய்மையும் அளித்துச் சென்றார், நம் ஆன்றோர்.

அத்தனையும் உடனிருக்க, நத்திப்பிழைக்கலாமா? இத்தனையும் இங்கிருக்க, இல்லாமை இருக்கலாமா? நாடு வளம் தந்திடினும், நாம் வாழ வழி காணோம், கடல்கடந்து வந்துள்ளோம், அடிமைகளாய் வதைவதற்கே என்று கூறிக் கசிந்து நிற்கின்றனர், நம் உடன்பிறந்தார், வேற்றுச்சீமைகளில்.

இவைகளை எண்ணாமல், எம்முடன் இணைந்திருங்கள், இறுக்கிப் பிணைத்துவிட்டோம், எங்கு இனிச் சென்றிடுவீர் என்று கேட்டு மிரட்டுகிறது பேரரசு.

இது இன்றுள்ள நிலைமை. இந்த நிலைமையை மாற்றினால்தான் தம்பி, வீடெல்லாம் விழாக்கோலம், நாடே விழாக்கோலம், நாளெல்லாம் நல்ல விழா!

சின்னஞ்சிறுநாடு செம்மையுடன் வாழ்ந்திருக்க, பண்டைப் பெருமைதனைப் பாங்காகப் பேசிவரும், நந்தம் திருநாடு, நாதி யற்றுக் கிடப்பதுவோ? திண்தோள் உண்டென்றும், தீவிரம் பல பேசி, ஆவது ஒன்றுமில்லை. தெளிவுகண்டோம் என்றால், மற்றவர்க்கும் தெளிவளித்து நம்மைப்போல் அவராகும் நாளை எதிர்நோக்கி நிற்போம்; கன்னல் வளரக்கண்டு கருத்தோடு உழைத்திட்ட காராளன் தருவான் பாடம்.

இங்கிதனைச் செய்வதற்கு, ஏற்றதோர் இளவல் நினையன்றி வேறெங்கு காணக்கிடைத்திடுவான்? நின் முன்னோன் ஒரு சேரன், நீள்புகழ் நாட்டிச் சென்றான். மற்றோர் மாமன்னன் கடலைக் கடந்து சென்று காட்டினான் பெருவீரம்! அவர் தந்த “நாடு’ அழகழிந்து இருப்பதுவோ? நமை நோக்கி உள்ளார்கள் நாளைத் தலைமுறையார், அவர் வாழ வழிவேண்டின் அடிமை நிலை போக்கி, மடைமைதனை நீக்கி, வறுமைப் பிணிக்கு இது வாழிடம் அன்றென்று கூறி, கிளர்ந்தெழுந்து கொடுமைகளை ஒழித்திடுவாய்.

நான் மட்டுமல்ல, தம்பி, நாடே அழைக்கிறது.

நம் நாடு மட்டுமல்ல, எங்கும் இது குறித்து இன்று பலர் பேசுகிறார்.

விந்தை மனிதரென்றும், வெட்டிப் பேச்சாளரென்றும் வீறாப்புப் பேசுவோரும், உள்ளூர உணர்ந்துகொண்டார்; நமக்கின்று உள்ள நிலைமையோ பாய்மரமில்லாக் கப்பல் என்ற பெரும் உண்மையினை.

கோதிக்குழல் முடித்து, கோலவளை குலுங்க அழகு நடை போட்டு அருகில்வரும் ஆரணங்கும் “ஆமாம் அத்தான்; அரிமாவாம் உம்முடைய ஆற்றலுக்கு ஏற்றதோர் அரும்பணி ஈதேயாகும்’’ என்பார்.

வீடாளும் வேல்விழியாள், நாடாளும் நற்பேறு நமதாதல் வேண்டுமென்று நாளும் நினைப்பவள்தான். ஆகவே, “அண்ணன் அழைக்கின்றான் அயராது போய் வருவீர்’ என்றே கூறிடுவாள் அகம்குழைந்துமட அன்னம். கேட்டு, “அன்புத் தாயகமே அடிமை நிலைபோகும்; அரியாசனம் காண்போம்’ என்று நாட்டுக்கு எடுத்துரைக்கத் துடிக்கின்றேன். எனினும், இன்று அன்று! இன்று மனை; மகிழ்ச்சி; விழாக்கோலம்! இன்புற்றிரு, என் அன்பினைப் பெற்று உன் அன்பினை எனக்களிக்கத் தவறாதே — அளித்தால் குறையாது. அஃதொன்றே, கொடுக்கக் குறையாதது.

செந்நெல்மணி குவித்துச் செங்கரும்பு விளைவித்துச் சேயிழையார் ஈன்றெடுத்த செல்வங்களோடு இல்லறம் உவந்தளிக்கும் இனியன பலவும் பெற்று இன்புற்று இரு! இந்நிலையும், எல்லார்க்கும் ஏற்படவேண்டும் என்பதனை மறவாதிரு! எண்ணம் பாரியானால் எத்துணையோ கோடி காதம், “இம்’மென்று கூறி முன் சென்றிடலாம் என்பர். அம் முறையில், எண்ண நின்றால், அரசு அமையும் என்றிருத்தல் அழகல்ல, அறமல்ல, ஆகும் நெறியாகாது, நெஞ்சம் புகுந்து விட்ட அந்த எண்ணமதை, எல்லோரும் உணர்ந்திட ஓர் வழி காணல் நின் கடமை. கடமை அத்தோடு நின்றிடவுமில்லை. எழுச்சி எங்கணுமே ஏற்றமுடன் தோன்றியபின், காட்சி இதுபோலக் காணக்கிடைக்காது என்று இறும்பூதெய்தி இருந்திட்டால் போதாது. எங்கே எம் பகைவர். எப்பக்கம் களம் உளது? ஏன் இன்னும் முரசு இல்லை? எனக் கேட்டுத் துடிதுடித்துக் கேடகற்ற நீ முனைவாய்!

ஆடகச் செம்பொன்னும் ஈடாமோ உன் மேனி அழகதற்கு என்று பேசிடின், ஏற்றிடுமோ ஏந்திழையும், காணக் காத்திருத்தல், கண்பொத்தி விளையாடல், கா சென்று பூப்பறித்தல், வேழம் தனை விரட்டல், வெஞ்சமரில் முந்திநிற்றல் என்றன்றோ முறைகள் பல இயம்புகின்றார் அகம் அறிந்தோர். அவரே அழகுபடப் “புறம்’’ இருந்திடும் முறைதனையும் அன்றே கூறியுள்ளார்!

களிறோ, கடுங்காற்றோ காணீர் இவ்வீரனையே! என்று மாற்றாரும் வியந்திடும் போக்கினிலே அஞ்சாது போரிட்டு அரசு காத்திருந்தார், இந்நாளில் இடர்ப்பட்டு ஏங்கித் தவித்திடும் இத்தமிழ் மக்களின் எந்தையர்கள் முந்தையர்கள்.

இன்றுள்ள நிலைமையினால் ஏற்பட்டுவிட்டுள்ள இழுக்கைத் துடைத்திடவோர் ஏற்றமிகு செயல்புரிய எல்லோரும் துடிக்கின்றனர். அவர்தம்மை வாழ்த்துகிறேன். ஆர்த்தெழும் முரசாவர் அருந்தமிழர் விடுதலைக்கே!

அன்னாரும் அன்பர்தாமும், இனிதே மகிழ்ந்திருக்க விழைகின்றேன். என் வாழ்த்துதனைச் சேர்க்க ஏற்ற முறை கிடைத்திடுமேல், பொன்னான தம்பி! அதைச் செய்தும் சுவை பெறுவாய்.

இந்நாளில் பொங்குவது இன்பம் மகிழ்ச்சி எலாம்.

எந்நாளும் இதுபோன்ற அமைந்திட ஓர் வழி உண்டு. அந்த நல்வழி நடக்க, உனக்கு ஆற்றலும் நிரம்ப உண்டு. அறிந்தே உரைக்கின்றேன், ஆகும் என்று உரைக்கின்றேன்.

உழவர்கள் உள்ளம் பொங்க
ஒளிதரும் கதிர்கள் ஈன்று
கழனிகள் தோறும் செந்நெல்
களிநடம் புரியும் தையே
எழிலோடு வாராய். . . .!

என்று இங்குளார் அழைக்கின்றார்கள்.

செங்கதிர் சிரித்த சிறப்பினிலே
சிதறிய ஒளியின் சிதற-லே
பைங்கதிர் கொண்ட உவகையிலே
பைம்பொன் கதிராய் மாறுகையிலே
மங்களத் தோற்றம் காண்கையிலே
பொங்கிய உள்ள மகிழ்ச்சியிலே
தங்க நிறக்கதிர் கொய்தனரே
பொங்க லெனவிழா வைத்தனரே!

என்று பாடுகின்றனர்.

இசையுடன் வாழ்ந்த இனத்தில் வந்துதித்தோம், இனியொரு முயற்சி செய்வோம், இழந்ததைப் பெறுவோம், இசைபட வாழ்வோம், வாராய்.

இன்றல்ல என்று தனது இருவிழியால் கூறிடும் என் உடன்பிறந்தாள் தனக்குமே, உரைத்திடு, முறை அறிந்து உரைத்திடுவாய், தம்பி, நீ

அண்ணன்,

14–1–1960

மூலக்கட்டுரை http://www.annavinpadaippugal.info/kadithangal/isaipada_vaazhvoam_2.htm

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

No responses yet

Write a response