அகலிகையும் ஆச்சாரியாரும் -தம்பிக்கு அண்ணாவின் கடிதம்.

SG
7 min readJan 8, 2020

ஆச்சாரியாரின் தட்சிணப் பிரதேசம் -
பாகிஸ்தான் பிரிவினை.

தம்பி, பாவி, பொல்லாதவன், படுக்கையைத் தட்டிப் போடு என்று பயத்தால் ஒரு பாவையை, பாதகனொருவனின் காமப் பசிக்குப் பலியாக்கிடும் பாட்டியின் சேட்டைக்கு ஒப்பிட்டேன் ஆச்சாரியாரின் ‘தட்சிண ராஜ்ய’ திட்டத்தை; மானத்தையும் மாண்பையும் மதித்திடும் இனத்தினரும் வகையினரும், இந்தப் ‘பாட்டி’ போல நடந்துகொள்ளவும் மாட்டார்கள், நாட்டுப் பற்றே எல்லாவற்றிலும் மேலானது என்று எண்ணிடும் எவரும் ஆச்சாரியார் தருவது போன்ற திட்டத்தைத் தரமாட்டார்கள். எது எப்படியாயினும், என் சபதம் நிறைவேற வேண்டும், என் நோக்கம் ஈடேற வேண்டும் என்று எண்ணிடும் போக்கினர் தமக்கென ஒரு உயர்ந்த இலட்சியத்தினைக் கொண்டிராதவர்கள் போக்கிலே, ஆச்சாரியார் செல்வதுகண்டு நான் உள்ளபடியே வருந்துகிறேன். பெரியார் பலமுறை இவரைப் பாராட்டிப் பேசுவதை - பொதுக் கூட்டங்களில் மட்டுமல்ல, தனியாக உரையாடும்போதும் - கேட்டுக்கேட்டு எனக்கு ஆச்சாரியாரிடமிருந்து, நாடு அதிகம் எதிர்பார்க்கலாம், முயற்சித்தால் அந்த முதியவராலே பல பெரிய காரியங்களைச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்ட துண்டு. கூர்ந்து பார்ப்பதனால் ஒரு உண்மை எனக்குப் புலப் படுகிறது. தம்பி! கருடன், மிக மிக உயரமாகப் பறப்பதைப் பார்க்கிறாயல்லவா? அழகாகக்கூட இருக்கும் பார்ப்பதற்கு. கழத்து மட்டும் தூய வெள்ளை நிறம் கொண்ட கோலத்தில் உள்ள கருடன் மேலே எழும்பி வட்டமிடுகிறது - எதற்கு என்று எண்ணுகிறாய்? உலகம் எப்படி இருக்கிறது என்று அழகு காணவா? ஊரார் எப்படி இருக்கிறார்கள், அவர்களுக்கு ஏதேனும் குறை வந்துளதோ என்று கண்டறியவா? இல்லை, இல்லை! இரை தேடுகிறது. அதற்காக அவ்வளவு உயரத்தில் பறக்கிறது. அதற்குத் தேவையான ‘இரை’ அங்கே கிடையாது. கீழேதான் இருக்கிறது - ஆனால் அதைப் பெற, கருடன் மேலே வட்டமிட்டுப் பார்க்கிறது. கருடனுடைய கூரிய கண்ணுக்கு, அவ்வளவு உயரத்தில் இருந்து பார்க்கும்போதும், கீழே உள்ள பொருள் பளிச் சென்று தெரியுமாம், அவ்வளவு கூரிய பார்வை - கண்டறியும் திறன். ஆனால் இவ்வளவு உயரம் மேலே பறந்து, இவ்வளவு திறமையாக, கூரிய பார்வைகொண்டு, கருடன் கண்டெடுக்கும் இரை என்ன தெரியுமா, தம்பி, செத்துப் போன எலி, சாக இருக்கும் தவளை, இப்படி! இதற்கா இவ்வளவு உயரம் பறந்து இலாவகமாக வட்டமிட்டு கூரிய கண்களால் கண்டறிய வேண்டும்? செத்த எலிக்கும் தவளைக்கும், இத்தனை உயரம் பறந்திடும் கருடன் போல, ஆச்சாரியார் உயர உயரச் செல்கிறார். மந்திரியிலிருந்து கவர்னர், அதிலிருந்து வைசிராய் என்று இப்படி உயரப் பறக்கிறார். கடைசியில் ஏதாவதொரு செத்த எலி, சாக இருக்கும் தவளை கிடைக்கிறது! பரிதாபமாகத்தானே இருக்கிறது!

ஆச்சாரியார் தமது உயர்ந்த நிலையையும், திறமையையும் தக்க முறையில் பயன்படுத்தினால், நிச்சயமாக, தாயகத்தைத் தருக்கரிடமிருந்து மீட்டிடும் காரியத்தை, காந்தியார் காலத்திலேயே துவக்கி இருந்திருப்பார். அங்ஙனம் அவர் செய்யாததற்குக் காரணம், எனக்குத் தெரிந்த அளவில் இரண்டு; ஒன்று, அவருக்கு எதைச் செய்தால் வேறு எது கெட்டுவிடுமோ என்ற அச்சம், சுருட்டுக்காக நெருப்பைத் தேடினால், நெருப்புப் பட்டு மீசை போய்விடுமோ என்ற பயந்தான் என்று ஏமாளி பற்றிய கதை கூறுவார்களல்லவா, அதுபோல! அவருக்கு, தாயகத்தை வடநாட்டாரிடமிருந்து மீட்டிடும் காரியத்தில் ஈடு பட்டால், இங்கே ஆரியத்துக்கு ஆபத்து எளிதாக உண்டாக்கி விடுவார்களோ என்று அச்சம் கிளம்பி விடுகிறது. ஆரியத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், நாட்டு விடுதலை எனும் நல்ல இலட்சியத்தைத் தலைமுழுகிவிடத்தான் வேண்டும் என்று துணிந்து விடுகிறார் மற்றொன்று, அவருக்குக் கூரிய மதி இருக்கிறது. மறுப்பார் இல்லை. ஆனால், மிகமிகக் காலங் கடந்தே அது பயன்படுத்தப்படுகிறது. வேடிக்கைக் கதை ஒன்று சொல்லுவார்கள்: தீராத தலைவலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான் ஒரு மன்னன்; இதை தீர்த்து வைப்பவர்களுக்குப் பதினாயிரம் வராகன் பரிசு என்று முரசறைவித்தான். ஆண்டு ஒன்று ஆயிற்று - மருத்துவனோ, மகானோ யாரும் வரவில்லை - தலை வலி அதிகமாகிவிட்டது. இந்தப் பொல்லாத தலைவலியைப் போக்கிடும் மூலிகையோ, தைலமோ தருபவனுக்கு என் இராஜ்யத்தில் பாதி பகிர்ந் தளிக்கிறேன். என்று பறைசாற்றச் சொன்னான் - பலன் ஏற்படவில்லை. இராஜ்யத்தில் பாதி மட்டுமல்ல, என் மூத்த பெண்ணையும் கலியாணம் செய்து தருகிறேன். மூலிகை தரும் மருத்துவனுக்கு என்று மூன்றாமாண்டு தெரிவித்தான்; ஒருவரும் முன்வரவில்லை. கோபம் மூண்டுவிட்டது; நாலாம் ஆண்டு பரிசு தருவதாகப் பறைசாற்றவில்லை, மனதுக்குள்ளாகவே ‘சபதம்’ எடுத்துக் கொண்டானாம், என் தலைவலியை எவன் போக்குகிறானோ, அவன் தலையை வெட்டிவிடுகிறேன் என்று - ஏனெனில் நாலு ஆண்டுக் காலமாக இவ்வளவு வேதனையை அனுபவிக்கக் காரணம் இவன் தானே, முதல் தடவை முரசு அறைந்தபோதே மூலிகை தந்திருந்தால், கஷ்டப்பட்டிருக்க வேண்டியதில்லையல்லவா! ஆகவே, தலை வலி போக்கும் வழி தெரிந்திருதும், மன்னனுடைய மண்டைக் குடைச்சலைப் போக்க முன்வராதவன், கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவனே என்று தீர்மானித்தான். அதுபோலவே, ஒரு மருத்துவன் மன்னனுடைய தலை வலியை நீக்கினான், தன் தலையைப் போக்கிக் கொண்டான் - என்றோர் கதை உண்டு. அது போலவே, ஆச்சாரியார், எந்தத் திட்டம் பற்றித் தமது கருத்து, பரிகாரம் கூறுவதாக இருந்தாலும், தேவைப்படும் நேரத்தில், பயன்படக்கூடிய வேளையில், வகையுள்ள விதத்தில் கூறுகிற வாடிக்கையே கிடையாது. மாறாக, எவ்வளவு கடுமையாக எதிர்க்கலாமோ அவ்வளவும் செய்வார்; கடைசிக் கட்டத்தி லேயோ, குப்புற விழுவது போலாகிவிடுவார். இதற்குள் பிரச்சினை, ஒன்று தீர்ந்துபோயிருக்கும் அல்லது வேறு உருவம் கொண்டுவிட்டிருக்கும் அல்லது இவருடைய பரிகாரமோ பரிவோ தேவையில்லை என்று கூறத்தக்க கட்டம் பிறந்து விட்டிருக்கும்.

பொங்கும் போது சிறிதளவு நீர் தெளித்து, பால்பக்குவம் கெடாதபடி காய்ச்சிக் கீழே இறக்கத் தவறிடும் தாய்மார்கள் பால் பொங்கி, வழியக் கண்டு பதைபதைத்து ஓடிச்சென்று, அவசரத்தினால், இன்னது செய்வதென்று தெரியாமல், பாத்திரம் நெருப்பாகி இருக்குமே என்பதையும் மறந்து, பதட்டத்துடன் அதைப் பற்றிட, பாதிப்பால் அடுப்பிலும் பாதி அவர்கள் ஆடையிலுமாகி அவதிப்படுவார்களே - அதுபோலத்தான் ஆச்சாரியார்.

நாடே கொதித்தது, பாகிஸ்தான் கிளர்ச்சியின் போது - உலகமே உற்றுக் கவனித்தது. உயர்ந்த அறிவாளி என்ற உன்னதமான பட்டத்தைச் சுமந்து கொண்டிருந்த உத்தமர் செய்தது என்ன? இது அடக்க முடியாத ஆர்வம்? கொழுந்து விட்டெரியும் இனக் கிளர்ச்சி? எனவே, இந்தக் கோரிக்கை வளர்ந்து வளர்ந்து, எதிர்ப்பின் காரணமாகக் கோர உருவம் பெற்று, எதிர் காலத்தில் கொலையிலும் குழப்பத்திலும் கொண்டு போய் விடும்; ஆகவே இதனை உடனடியாகக் கவனித்துத் தக்க பரிகாரம் தேடியாக வேண்டும் என்று புறப்பட்டாரோ? இல்லை! இவரும் கோடையிடிகளுடனும் பீடிப்பெருமான்களுடனும் கூடிக்கொண்டு, பாகிஸ்தானாவது மண்ணாவது, அதையாவது நாங்கள் தருவதாவது, நாடாவது பிரிப்பதாவது, பாரத மாதாவை வெட்டுவதா, பசுவை அறுப்பதா, பாலகனைத் துண்டுபோடுவதா என்றெல்லாம் தான் பேசினார்.

பக்குவம் எப்போது ஏற்பட்டது என்கிறாய், தம்பி! பரிகாரம் தேடித் தீரவேண்டும் என்ற பக்குவம் இவருக்கு எப்போது ஏற்பட்டது? பாஞ்சாலம் படுகளமாகி, சிந்து சீறி எழுந்து, எல்லைக் காந்தியே தொல்லைக்கு ஆளாகி, வங்காளம் கச்சையை வரிந்து கட்டி எழுந்து, வெளியே உள்ள வல்லரசுகள், வஞ்சகம் கக்கும் கண்களுடன், இங்கே உருவாகிக் கொண்டிருந்த களக்காட்சியைக் கவனிக்க ஆரம்பித்த பிறகுதான், இவருடைய அறிவில் ஓர் விறுவிறுப்பு ஏற்பட்டது, பேச்சிலே ஒரு பரபரப்பு காணப்பட்டது, போக்கிலே ஒரு பக்குவம் தெரியத் தலைப்பட்டது. ஆச்சாரியார் இந்தப் பக்குவம் பெறுவதற்குள், ஜின்னா, எந்த நிலைக்குச் சென்று விட்டார்! நீங்களாகப் பாகிஸ்தான் தருகிறீர்களா? நானாக எடுத்துக்கொள்ளட்டுமா? என்று கேட்டே விட்டார், தம்பி! பிறகுதான், ஆச்சாரியார், காரணங்களைக் காண்பிக்கவும், கதை மூலம் விளக்கவும், தத்துவம் தரவும், தூதுபோகவுமாகி, பாகிஸ்தான் தரப்படத்தான் வேண்டும் என்று கூறினார். இதற்குள், நான் குறிப்பிட்ட கதையில் உள்ளது போல, மூன்று முறை முரசு அறைந்தாகி விட்டது - நாலாவது ஆண்டு பிறந்தது, இனிப் பரிசு இல்லை, பரிகாரம் தருபவனுடைய தலை வெட்டி வீழ்த்தப்படும் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது.

துவக்கத்திலே, பாகிஸ்தான் திட்டம் வெற்றி பெற்றே தீரும் என்பதை அறிந்து உரைத்திருந்தால், ஆச்சாரியாருடைய ‘தீர்க்க தரிசனம்’ , துணிவு இரண்டுமே விளங்கி இருக்கும். கடைசி நேரத்தில், கட்டைக்குப் போகிற சமயத்தில் காஷாயம் தரிப்பது போல, இஸ்லாமியர்களின் இதயதாபத்தைக் கவனிக்காவிட்டால் இந்தியா ரணகளமாகும், எனவே பாகிஸ்தான் தரப்பட வேண்டியதுதான் என்று பேசினார். காலதாமதம்! இரயில் எப்போதும், குறித்த நேரத்தில் புறப்படுவதில்லை, போய்சேர வேண்டிய நேரத்துக்குப் போவதுமில்லை!

இதில் மட்டுமல்ல, அவருடைய அரசியல் வாழ்வில் இது போல அடுக்கடுக்காக.

சின்னாட்களுக்கு முன்புதானே சொன்னார், ‘‘இந்தி நமது மொழிகளில் எதற்கும் ஈடாகாது” என்று. சொன்னதுடன், ‘‘இந்தி வெறியர்கள் இங்கு, மக்களுடைய விருப்பத்துக்கு மாறாக, இந்தியைத் திணிப்பதை யாரும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்; எனக்கே கோபம் கோபமாக வருகிறது” என்று கூடச் சொன்னாரே! ஆனால், எப்போது ஏற்பட்டது இந்த ‘இதோபதேசம்’ - புத்தறிவு!! விருத்தநாரி பதிவிரதா!! அப்போதுதானே - ஆற்றுவார் இல்லை, தேற்றுவார் இல்லை, என்று ஆனபிறகு ஆலயப் படிக்கட்டில் அமர்ந்து, ‘‘கோவிந்தா! கோபாலா!” போடும் போக்குத்தானே இது. இந்தி வெறியர்களை இன்று கண்டிக்கும் இந்த சக்கரவர்த்தியாரின் இந்தி வெறிக்குப் பலியாகி உயிரிழந்தவர்கள் தானே தாலமுத்துவும் நடராசனும்.

‘‘எது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்ய, நான் யாரைக் கேட்க வேண்டும்?” என்று இறுமாந்து பேசிய அதே ஏந்தலுக்குப் பார்த்தாயா, தம்பி! வந்திருக்கும் ஞானோதயத்தை - ஆனால் எவ்வளவு பரிதாபம் என்பதைக் கவனித்துப் பார், காலங்கடந்துதான் வருகிறது.

அது போலவே, தமிழும் தெலுங்கும், கன்னடமும் மலையாளமும் ஒரே மூலம் கொண்ட மொழிகள் - ஒரு இனத்துக்குப் பொதுவானவை, என்று திராவிட ஒருமைப் பாட்டினை நாம் வலியுறுத்திக் கொண்ட நேரத்திலே, இவர் வாய் பொத்திக் கொண்டும் இருந்தாரில்லை. வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பி, தமிழும் தெலுங்கும், மலையாளமும் கன்னடமும் மட்டும் தான் ஒன்றுக்கொன்று சொந்தமும் பந்தமும் உள்ள மொழிகளோ? வங்கம், மராடம், குஜராத் எனும் ஏனைய மொழிகளுள் மட்டும் என்ன? அவை அன்னிய மொழிகளோ? ஏன், என் மொழி! என் மொழி! என்று வெறிகொண்டு அலைகிறீர்கள்? எல்லா மொழியும் பாரத மொழிதான்! இதிலே தனித் தமிழ் என்று ஒரு கிறுக்கு! திராவிட மொழிகள் என்று ஒரு பித்தம்! செச்சே! ஏன் இப்படிப் பேதம் காட்டி நாசமாக்குகிறீர்கள்? என்று கேட்டார் இந்தப் பெரியவர்; இப்போது பேசுகிறார், ‘‘இவை நான்கும் ஒரே மூலத்தில் தோன்றிய மொழிகள்” என்று; அத்துடன் அமையவில்லை, "எனவே’' போடுகிறார்! எனவே இவை ஒன்று கூடி, ‘‘தட்சிணராஜ்யம்” அமைத்துக் கொள்ள வேண்டும் என்று உபதேசம் அருளுகிறார். எதன் பொருட்டு என்று கேட்கும் போது தான், பாவி, பொல்லாதவன் படுக்கையைத் தட்டிப் போடு என்கிறார்; உத்தரப்பிரதேசம் ஓங்கி உருவெடுத்திருக்கிறது, டில்லி எல்லாவற்றையும் தின்று ஏப்பம் விடுகிறது, இந்த ஆபத்தைச் சமாளிக்க வேண்டுமானால், நாம் ஒன்றாக இருந்து, உருவத்தைப் பெரிதாக்கிக் கொள்ள வேண்டும் - அதுதான் தட்சிண ராஜ்யம் என்கிறார்.

இதே யோசனையை இவர் ஐந்தாண்டுக் காலத்துக்கு முன்பு சொல்லியிருந்தால் கூடச் சிறிதளவு செல்வாக்குக் கிடைத்திருக்கக் கூடும். நாம் திராவிடநாடு கேட்டு, மொழி வழியில் தனித்தனி அரசுகளாக, தமிழகமும், ஆந்திரமும், கேரளமும், கருநாடகமும் பிரிந்திடினும், இனவழி ஒன்றுபட்டு ஓர் கூட்டாட்சி அமைத்து, அந்தக் கூட்டாட்சி, மூலம், வடநாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுபடலாம் என்று நாடெங்கணும் பேசிவந்தோம். அதேபோது இவரும், ‘நான்கு மொழிகளும் ஒரே மூலத்தவைதான் - நான்கு பகுதிகளும் ஒரு கூட்டாட்சிக்குள் இருக்கத் தக்கவையே’ என்று பேசியிருந்திருப்பாரானால், பலருடைய செவிக்கு விருந்தாகவும், சிலருடைய சிந்தனைக்கு வேலை தருவதாகவும் அமைந்திருக்கும்.

இப்போதுள்ள நிலைமையோ வேறு மட்டுமல்ல, விசித்திரமானது.

மொழிவழி அரசு என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய திட்டமாகிவிட்டது. இந்தத் திட்டத்தைத் ‘திராவிடம்’ கேட்கும் நாமும் கேட்கிறோம், அதன் உட்பொருளை உணர மறுத்திடும் தமிழரசுக் கழகத்தாரும் கேட்கின்றனர்.

பாரத ஆட்சியிலே இன்னமும் பாசம் கொண்டிருப்பவர்களிலே சிலரும் கூடக் கேட்கிறார்கள். பாரதம் ஒன்றுதான் - அதைப் பிளக்கவோ, பிரிக்கவோ கூடாது என்று பேசுவோரும் பாரதத்திலே எந்தப் பகுதி எந்த மொழிக்காரரிடம் இருந்தால் என்ன என்று பேசிடக் கூசுகின்றனர்; எல்லோரும் பாரத மக்கள் என்பது இருக்கட்டும் ஒரு புறம், அதைச் சாக்காக்கி என் நாட்டிலே சில பகுதிகளைச் செதுக்கி எடுத்து உன் நாட்டுக்குச் சுவை தேடிக்கொள்ள நான் அனுமதிக்க மாட்டேன் என்று முழக்கமிடுகிறார்கள்.

திராவிட நாடு திராவிடருக்குத்தான் - ஆனால் அதைச் சாக்காக்கிக்கொண்டு தேவிகுளம் பீர்மேடும் எனக்கு என்று அபகரிக்க மலையாளத் தோழர்களை அனுமதிக்க மாட்டோம்; அதேபோலத்தான் தமிழர்க்குரிய இடங்களை ஆந்திரர் கொள்ள விட மாட்டோம் என்று நாம் கூறுகிறோம்.

இந்தச் சமயமாகப் பார்த்து, வீடு தீப்பற்றி எரியும்போது சுருட்டுக்கு நெருப்புக்கேட்கும் போக்கிலே, சித்தூர் யாருக்கு? தேவிகுளம் எவருக்கு? என்று நமக்குள் சண்டை போட்டுக் கொண்டால் நல்லதா? அதோ பார். உத்தரப்பிரதேசத்தை, டில்லியைப் பார், எல்லோரையும் ஆட்டிப்படைப்பதை. ‘இந்த உற்பாதத்தை’ ஒழித்துக் கட்ட ‘தட்சிணப் பிரதேசம்’தேவையே தவிர, தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பேசுவது சரியல்ல என்று சாந்தோபதேசம் செய்கிறார் - சாணக்கியர் - தூங்கி எழுந்து விட்டு, மாலையைக் காலை என்றெண்ணி மயங்கிடும் சாணக்கியர்.

இப்போது மூன்று திட்டங்கள், எல்லோருக்கும் புரிகிறது - ஒவ்வொரு சாராருக்கு ஒவ்வொன்று பிடிக்கிறது.

பாரதம் ஒன்றேதான் - இதிலே மொழிவழி அரசுகள் கேட்பதே தவறு - தேவையற்றது - என்றோர் கருத்து இருக்கிறது. எதேச்சாதிகாரப் போக்கினருக்கு இது இனிக்கிறது; முதலாளிகளுக்கு இது சுவை தருகிறது; பெரிய அதிகாரிகளுக்கு இது, ‘பிரேம கீதம்”ஆகியிருக்கிறது!

பாரதத்துக்கு டில்லியில் ஒரு பெரிய ஆட்சி இருக்கட்டும் - ஆனால் மொழிவழி அரசுகள் நிச்சயமாக இருக்கவேண்டும் - இதிலே ஒரு மொழிக்காரரை மற்றோர் மொழிக்காரர் வஞ்சிக்க அனுமதிப்பதோ, உடந்தையாக இருப்பதோ கூடாது, என்று மற்றோர் பிரிவினர் கொள்கை கொண்டுள்ளனர். இதை உரிமையற்ற முறையில், பிறமொழியாளரின் செல்வக் கோட்டங்களைச் சுரண்டிச் சுகபோகிகளாக உள்ள சூது மதியினர் எதிர்க்கின்றனர் - ஏளனம்கூடச் செய்கின்றனர்.

நாம் மொழிவழி அரசும் வேண்டும் - அதிலே ஓரவஞ்சனையும் இருத்தலாகாது - இதை மட்டும் பெற்றால் போதாது; எல்லாவற்றையும் அடக்கி ஆதிக்கம் செலுத்தும், டில்லி ஆட்சிப் பிடியும் ஒழிந்தே ஆகவேண்டும் என்கிறோம். இதை ஆகுமா? என்றெண்ணும் பெருமூச்சுக்காரர்கள், ஐயையோ! என்று கூறும் அலறல்காரர்கள் ஆகியோர் எதிர்க்கின்றனர்.

ஆச்சாரியார், இந்த எதிலும் சேரவில்லை அவருக்கு சர்வம் டில்லிமயம் என்பதும் கசக்கிறது.

மொழிவழி அரசு என்றால் குமட்டுகிறது.

எனினும், ஒரு குடும்ப மொழிகள் என்று சொந்தம் கொண்டாடிடவும், அதன் காரணமாகவே ‘தட்சிணராஜ்யம், என்ற அமைப்பிலே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கருநாடகம் எனும் தனி அரசுகளை விட்டுவிட்டு ஒன்றாகிவிட வேண்டும் என்று எண்ணவும் முடிகிறது; சொல்லவும் துணிகிறது. அப்போதுதான் டில்லி ஆதிபத்யத்தின் போக்கைச் சமாளிக்க முடியும் என்று காரணம் காட்டவும் முன் வருகிறார்! அதே போது வடநாட்டு ஆதிக்கத்துக்கு உட்பட்டு, உருக்குலைந்து போவானேன், தனித் திராவிடம் அமைக்கலாமே என்று அழைத்தாலோ, குமட்டுகிறது, குடலைப் புரட்டுகிறது, ஏதேதோ அச்சம் புகுந்து குடைகிறது.

பரிதாபமல்லவா, தம்பி, இந்த நிலைமை?

தெரிந்ததாம், இது வேறு ஆசாமி போலத்தான் இருக்கிறது! இதுநாள் வரை கண்டதற்கும் இவரிடம் காணும் சுகத்திற்கும் நிச்சயமாக மாறுபாடு இருக்கிறது - எனினும் மதுரமாகவும் இருக்கிறது. இவர், அவரல்லபோல் தோன்றுகிறதே, என்ன செய்வது? இனிச் செய்வது என்ன, நடப்பது நடக்கட்டும் நமக்கென்ன, நாம் கண்ணை மூடிக்கொள்வோம் என்று அகலிகை அம்மையார் கருதினார்களாமே, அதுபோல, இவர் வட நாடு ஆதிக்கம் செலுத்தத்தான் செய்கிறது, ஒரு நேருதான் எல்லா வற்றையும் நடத்திச் செல்கிறார், இருந்தாலும் என்ன செய்வது? கண்ணை மூடிக்கொள்ள வேண்டியதுதான் என்று கூறுகிறார். கண்ணை மூடிக்கொண்டால் போதும் என்று கருத முடிந்தது அகலிகைக்கு. ஆச்சாரியாருக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் நிலையில் வீட்டைக் கொஞ்சம் விரிவுபடுத்தி, அழகுபடுத்தி, ஆளுக்குக் கொஞ்சம் என்று சேர்த்துத் தொல்லையை அனுபவித்தால் நல்லது என்று தோன்றுகிறது. அகலிகை போக்கும் ஆச்சாரியார் போக்கும் இந்த அளவிலே மட்டும்தான் தம்பி! ஒப்பு உவமை. வீணாக நீ, கயிறு திரிக்காதே. ஆமாம், நான் அகலிகையைப்பற்றி நன்றாகப் படித்திருக்கிறேன், ஆச்சாரியாரைப் பார்த்திருக்கிறேன். இருவருக்கும் வேறோர் வகையிலேகூட உவமை இருக்கிறது. அம்மையும் ஒரு படுகிழத்துக்கு வாழ்க்கைப்பட்டுக் கிடந்தார்கள். ஆச்சாரியாரும் படுகிழமாகிப் போன கோட் பாடுகளைத்தான் கட்டிக்கொண்டு அழுகிறார்.

அன்புள்ள,

அண்ணாதுரை

8-1-1956

மூலம் : http://www.annavinpadaippugal.info/kadithangal/agalikayum_achariyarum.htm

Sign up to discover human stories that deepen your understanding of the world.

Free

Distraction-free reading. No ads.

Organize your knowledge with lists and highlights.

Tell your story. Find your audience.

Membership

Read member-only stories

Support writers you read most

Earn money for your writing

Listen to audio narrations

Read offline with the Medium app

SG
SG

Written by SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite

No responses yet

Write a response