(திராவிட நாடு பொங்கல் மலர் — 1949) பொங்கல், உழவர் விழா! தமிழர் திருநாள்! நம்பொணாப் புராணக் கருத்தினை நாட்டினர் மனத்திலே மூட்டிவிடும் மற்றைய விழாக்கள் போலன்றி, உழைப்பின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் உன்னதமான விழா. களத்திலே காணப்பட்ட பயன், வீட்டிலே, புதுப்பானையிலே, பொங்கிவழியும் நாள், பொங்கல் விழா. செந்நெலும், செங்கரும்பும், பச்சைக் காய்கறியும் பசும்பொன்நிறப் பண்டங்களும், வண்ணக் கோலமும், வாடாமலர்களும், மனைதோறும் குவிந்திடும் மக்கள் நன்னாள்! கூந்தலிலே மலர்கள்…