1990 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற திமுக ஐம்பெரும் விழாவில் கலைஞர் கருணாநிதி ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

ஐம்பெரும் விழா ( பெரியார் , அண்ணா, தி.மு.கழகம் பிறந்தநாள் விழா, டாக்டர் அம்பேத்கர் , பாவேந்தர் நூற்றாண்டு விழா ) , மண்டல் குழு பரிந்துரையை மைய அரசு ஏற்றமைக்கு மகத்தான வெற்றி விழா, மனிதாபிமானி விபி சிங்கிற்கு நன்றியினைத் தெரிவிக்கும் விழா.
சங்கம் தரு தங்கத்தமிழ் வங்கக் கடல் பொங்கும் இனம் சிங்கக்குரல் எங்கும் எழ ஒன்றே குலம் என்றே சொல்லி வாழ்ந்த இனம். பண்டு தொட்டு கொண்டு கொடுத்த இனம். உண்டு கொழுக்க வந்த இனம் சிண்டு முடித்து சீர் குலையவே ஒரு சாதி தமிழ்ச்சாதி பல சாதி ஆனதே அதனால் பலவீனம் ஆனதே.சூழ்ச்சி வென்றது சூது பலித்தது. இனி வீழ்ச்சி இல்லையென வீணர்கள் பாடினர். வெறி கொண்டு ஆடினர். அறிவார் கல்வியில் அரசுப்பணிகளில் பவிசுக்கு இடமெல்லாம் தம்மதே என்று வதக்கியே பிறரது வாழ்வினைப் பறித்த ஓர் பிரிவு மக்களிடம் போர் புரியத்தயங்கியதால் செதுக்கிய சிலைகளாய் செயலற்று கிடந்தோம் அன்று.
நடக்கும் இருளை நகர்த்தும் பகல் போல் நாளும் வந்தது கோலும் தொலைந்து. ஒதுக்கியே தீருவது ஒதுக்கப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என எதிர் நீச்சல் போட்டு எழுந்து நின்றது திராவிட இயக்கம் தென்னக வழக்கம் தீர்க்க முனைந்தது. தேடக்கிடைக்காத தெள்ளமுதாய் தேமதுர கீத இசையாய் தேன்பாகும் தினைமாவும் சேர்ந்து தெவிட்டாத சுவை விருந்தாய் திக்கற்ற மக்களுக்கு வாய்ப்பித்த நற்பேரே வாராது வந்த மாமணி வகுப்புவாரி விகிதாச்சாரம். பிற்படுத்தப்பட்டோர் வாழ்வுக்கு ஒரு வரப்பிரசாதம். வந்ததைத் தொலைப்போமா ? வஞ்சக வலைகளில் வீழ்வோமா ?
வெந்ததைத்தின்று வாயில் வந்ததை உளறும் மனிதர் தகுதி திறமை என பேசி நயமாக நஞ்சைக்கலக்கின்றார்
நாட்டுமக்கள் உள்ளத்தைக் குழப்புகின்றார்.
அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவாருண்டோ என பாவேந்தன் கேட்டதைத்தான் நானும் கேட்கின்றேன்.
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் அவன் உயர் சாதிக்கு மட்டும் தங்கத்தால் மூளை செய்து தலைக்குள் வைத்தானோ? மற்ற சாதிக்கெல்லாம் மண்டைக்குள் இருப்பது களிமண்ணா சுண்ணாம்பா ?
கங்கையைப் போல் வடமொழியில் கவிதை தந்த வால்மீகி வியாசன் எல்லாம் பிரம்ம தேவன் கால்பெற்ற பிள்ளைகளே.
வள்ளுவன் யார் கம்பன் யார் இளங்கோ ஒட்டக்கூத்தர் யார் எல்லாம் யார் யார் ?பிரம்மன் தலையிலே பிறந்தது இல்லை இவர்கள் ஆனா தமிழ் மொழியின் இமயங்கள்.
43 ஆண்டுகளாய் நாம் பெற்ற சுதந்திரத்தில் தகுதிக்கும் திறமைக்கும் தரப்பட்ட வாய்ப்புகளால் கிழித்ததென்ன தைத்தது என்ன. கிழித்து தைத்தது தான் என்ன என்ன.
எதற்காக திறமை அது தேவையா இல்லையா என்று என்றுமே நாம் கேட்டதில்லை. ஆனால் ஏகலைவன் வித்தை கற்க இந்த சாத்திரம் அனுமதிக்கவில்லை. அவன் வில்லில் விஜயனையும் வெல்வார் என்று அவன் கட்டை விரலைக் காணிக்கையாகப் பெற்றதென்ன நியாயம்?
தவம் செய்தான் சம்புகச் சூத்திரன். தகுதி அவனுக்கு ஏது எனச்சீறி அவன் தலை வெட்டி சாய்த்த கதை ராமபிரான் வரலாறு அன்றோ?
கட்டை விரலோ தலையோ இந்நாளில் எவனும் கேட்டால் அவன் பட்டை உரியும். சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்.
கட்டை விரலோ தலையோ இந்நாளில் எவனும் கேட்டால் அவன் பட்டை உரியும். சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்.
என்ன இது என்றைக்கும் இல்லாத வெப்பம் இன்று தலைமைக் கவிதையிலே எனக்கேட்கத் தோன்றுகிறதா? பிறகென்ன முதலுக்கே மோசம் வந்த பின்னர் முயலாக ஆமையாகக் கிடத்தல் நன்றா ?
ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்தவனைக் கை தூக்கி கரை ஏற்றும் நேரத்தில் கனமான பாறை ஒன்றை அவன் தலையில் உருட்டிவிட எத்தனிக்கும் உலுத்தர்களைக் கண்டால் உதைக்கத்தான் வேண்டும் . ஓட ஓட விரட்டத்தான் வேண்டும். ஆறிலும் சாவுதான் நூறிலும் சாவு தான் ஆனது ஆகட்டுமே இந்த ஆட்சி தான் போகட்டுமே.
மகுடம் இன்றி வாழமுடியாத மனிதர்களா நாம். சிசுவாகப் பிறக்கும்போதே சிம்மாசனத்துடனா பிறந்தோம், சீதை வில்லுடன் பிறந்தது போல. கொற்றக்குடையா? கொள்கையா? எதுவேண்டும் எனில் கொள்கையை விற்றுப்பிழைக்க வேறு நபர் பாருங்கோ. ஆட்சி வரும் போகும் நிலையல்ல. அய்யா அண்ணா வகுத்த கொள்கை போகாது வாழும் நிலை ஆகாது. ஆட்சி இருப்பினும் இல்லாது இருப்பினும் தன்மானம் உயிரென மதிப்போம். தமிழர் இனமானம் என்றுமே காப்போம்.
கொண்ட குறிக்கோளை இழித்து கண்டபடி பேசும் பிறவிகளைப் பார்த்தால் எனக்கு மாத்திரம் கோவம் இல்ல. போடா வெங்காயம் என்பார் பெரியார் கோபத்தில். வளம் பெரிய தமிழ்நாட்டில் தமிழரிடம் எல்லாம் வால் நீட்டினால் உதைதான் கிடைத்திடும் என்பார் பாவேந்தர். நாராச பேச்சாளர் ஆபாச எழுத்தாளர் காணின் நமது அண்ணா அவர்களை நடுங்கா நாக்கழகர் நரகல் நடையழகர் என்று நையாண்டி புரிந்திடுவார். ஆத்திரம் தாளாமல் தானே அம்பேத்கர் அரசியல் சட்டத்தையே தேவைப்படின் கொளுத்த வேண்டுமெனக் கொந்தளித்தார். எந்தத் தலைமுறையும் இந்தத் தலைவர்கள் போல் இனி ஒருமுறையும் காண்பதில்லை. அந்தத்தலைவர்களின் எண்ணங்கள் வெற்றி பெற சூளுரைப்போம். சுடர் முகம் தூக்குவோம். இடர் பல வரினும் எதிர்த்து நிற்போம். வெற்றி காண்போம். வணக்கம்.
Transcript prepared from the speech of the video : https://youtu.be/PRhlTvfUz78