இல்லம் இன்பப் பூங்கா

SG
16 min readJan 13, 2022

அண்ணாதுரை, திராவிடநாடு, 14–01-61

யோகி பாரதியாரின் காதல் கவிதை
பொங்கல் நாளிலே பல்துறையினர்க்கும் பரிசளித்திடுக!
இளங்கோ காட்டும் மதுரை மாநகர மகளிரின் இன்ப வாழ்க்கை
உதுமானிய சாம்ராச்சியத்தின் உடைபாடு
இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம்

தம்பி!

என் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன் குறும்புப் புன்னகையின் பொருள் எனக்கு விளங்காமலில்லை. இந்த விழா நாளன்று, எவரெவரோ தத்தமது உடன்பிறந்தார்கட்கு விரும்பித் தருவர் விதவிதமாகப் பொருள் பட்டும் பொன் இழையும் பாங்காகச் சேர்த்தமைத்த வண்ணம் சிறந்திடும் நல்ஆடை வகைதானுண்டு மெல்லியதாய்த், துல்லியதாய், மேனி அழகினைச் சுட்டிக் காட்டுவதாய்; எழிலூட்டி வளம் காட்டும் எத்தனையோ, வகையான அணிபணிகள் பெற்றளிக்க அங்காடியா இல்லை சுவையூட்டும் பண்டங்கள் தொகை தொகையாய் உள்ளனவே எனக்கென்று நீ இன்று எடுத்து வந்தளிப்பதுதான் என்ன என்றறிய ஆவல் கொண்டுள்ளேன், ஏன் இனியும் ஓட்டுகிறாய் என் காலம் வீணாக, கொண்டுவந்த பொருள்தனைக் கொடுத்திடு, கோலம் காண்போம், இன்று என் வருவேன், கடுகி என்றுரைத்து, நேற்று அந்திப்போதினிலே செப்பிவிட்டேன் நண்பரிடம்; அவரெல்லாம் எனைக் கண்டு, ஐயையே! இதுதானா? என இழித்துப் பேசிடவா, அண்ணா நீ எனைவிடுவாய், இல்லை! இல்லை! நானறிவேன்! எனக்கென்றே நல்ல பொருள் எடுத்துத்தான் வந்திருப்பாய். எனக்கன்றி வேறு எவர்க்குமில்லை! நீயன்றிப் பொருள் எனக்களிப்பாரும் வேறு இல்லை! இருவருமே இதனை மிக நன்றாக அறிந்துளோமே! எனினும், காலமதை வீணாக்கி அலைக்கழித்து, எனை வாட்டி நிற்கின்றீர், எடுத்திடும் என் பொருளை! கொடுத்திடும் இப்போதே!! — என்றெல்லாம் கேட்டிடுது, உன் பார்வை, நானறிவேன். ஆனாலும், அன்புத் தம்பி! எப்பொருளைப் பெற்றாலும், அது என்ன வகை என்றாலும், பொன்னுடன் நேர்செய்து, பார்த்திடும் போதினிலே, என்னவோ அவ்வளவு ஏற்றமிலையோவென்று அங்காடி மனத்தினர் அறிவித்துவிட்டாலும், ஒன்றை மறவாதே, இன்றல்ல நேற்றல்ல, நம் நெஞ்சம் நேசத்தால் நெகிழ்ந்திட்ட நாள் தொட்டு, என்னால் இயன்றதனை இம்மியும் வஞ்சமின்றி எடுத்து வந்து தருகின்றேன், ஏற்கின்றாய்; மகிழ்கின்றாய்! முத்து இது அல்ல, மூலையில் போட்டுவிடு என்றுரைக்கும் தாய் உண்டோ, தன் சிறுமதலை தரும் கடலலையால் ஒதுங்கிவந்து உடைபட்டு கிளிஞ்சல் துண்டு! அஃதேபோல அளித்திடும் பொருளுக் கெல்லாம், அங்காடிக் கணக்கைவிட்டு, அகத்திலே ஊறுகின்ற அன்பு பெய்திட்டதென்று, ஆங்கதனைத்தான் கொண்டு அக மகிழ்ந்து இருப்பதுதான், உடன்பிறந்தார் காட்டும் உவகைமிகு பாசமாம். இன்றும் அதுவே முறை! என்றென்றும் அம்முறையால், வாராது எக்குறையும்! குன்றின்மேல் வீழும் கொன்றை, கண்ட நம் புலவோர் பேழையுள் கிடந்திட்ட பொன்னுக்கு நிகர் என்றார்; அது பண்பு. அவர் வழியில் நாம் வந்தோம், நாம் தாழ்ந்தால், அவர் தம்மைப் பிறர் இகழவைக்கின்றோம் என்றாகும். ஆகையினால், என்றென்றும் நம் நெஞ்சில், தமிழ்ப்பண்பு ஏற்றம் பெற்றாளட்டும்.

அண்ணன் தருகின்ற பொருளைப் பெறுங்காலைத் தந்த பொருள், தர எண்ணும் பொருளைச் சுட்டிக்காட்டிடும் வகைதான் என்று எண்ணவேண்டும். மலர் தொட்ட கரம் காட்டும் மணத்தைக் கண்டால், மலர்த் தோட்டம் பெற வேண்டும் என்ற எண்ணம் எழுதல்வேண்டும்; அஃதேபோல, அண்ணனால் இயன்றதனை அளிக்கின்றான், அதனைப் பெற்று, அவனால் ஆகாதனவற்றை நாம் முடித்து வெற்றி காண்போம், என்றெண்ணி இகல் வென்று, வாழ்க நீயும். இனிதாக நீ வாழுங்காலை, நானும் இடுக்கணிலா உழன்றிடுவேன்? இல்லை! வாழ்வேன்!!

இன்றுனக்கு விழா! இல்லம் புதுக்கோலம் கொள்ளும் நாள்! அந்தக் கோலம், அழகளிக்கும், ஏனென்றால், காணும் போது, உள்ளம் களிப்புப் பொங்கும் காரணத்தால். பொங்கற் புதுநாள் போந்தது என்றால், மங்கிக் கிடந்ததெல்லாம் தங்கமென் றாகும் காண்! வெளியெல்லாம் பொன்பரப்பி, வேலியெல்லாம் மணி இழைத்து, வைத்திருக்கும் இந்த எழில், தந்ததெவர்? உழைப்பாளி! அவர், சதிராடிக் காட்டிடும் கதிராளைக் கண்டதாலே, மயங்கிடாமல், நின்றவளை, அழைத்து வந்தார். மனைதனுக்கு! அவள் ஏறிவரும் வண்டிக்கு எருதுகள்தான் பூட்டியது, என்றாலும், எழிலரசி ஏழெட்டுக் குதிரைகளைப் பூட்டியதோர் நல்இரதத்தில் புறப்பட்டு உலா வந்தால்; ஊர் என்ன கவின்பெறுமோ — அதற்கு நேர் இஃது, இல்லை, அதனையும் மிஞ்சிடும் எழில்மிக்க காட்சி இது என்பதனை, இன்றல்ல, என்றோ அறிந்தார், நம் தமிழர், அதனால்தான், மன்னவனைக் கண்டிட்ட மாப்புலவர் கூறி நின்றார், நின்கரத்துச் செங்கோற்குக் காப்பு எது கூறுவன், கேள்! ஏரடிக்கும் சிறுகோல்!! என்றியம்பினர்; வியந்தார்.

இன்றும், ஏதேதோ தொழில், ஏற்றம், மாற்றமிகு வினை பலவும், காண்கின்றோம், களிக்கின்றோம், என்றாலும், அச்சாணி யாக இன்றும், அமைந்து இருப்பது முன் ஆன்றோர்கள் மெச்சிப் புகழ்ந்திட்ட உழவுதான்; மறுப்பு இலை. அந்த உழவு, கனிவு பெற்றளிக்க, அந்தச் சுவை உண்டு மகிழ்ந்திடத்தான், மனை தோறும் கூடுகின்றார், மாடுகன்றும் போற்றுகின்றார், பொங்கலோ பொங்கலென்று! பாடி மகிழ்கின்றார், திருநாள் கொண்டாடும் திரு இடத்து மாந்தரெலாம். அந்த நன்னாளிலே, அருகே கரும்பிருக்க, அதைக் காண மனமின்றி, ஆரணங்கின் மொழிகேட்டு, பலவின் கனிமொய்க்கும் பான்மையிலே, நீ இருக்க, எனை என்ன, உனக்கேற்ற பொருள் அளிக்கும் திறன் பெற்றோன், என்றா எண்ணப்போகின்றாய்? உம்! நானறிவேன், இன்றுனக்கு, பொன்னும் பொருளும் மின்னலிடையாள் வீசும் கன்னல் மொழியில் உண்டு! குழலுண்டு! யாழுண்டு! கூத்துண்டு! பாட்டுண்டு!! இவை எல்லாம் இருக்கையிலே, உனக்கின்று, நானென்ன உயர்ந்த பொருள் அளித்திடுவேன்! முயற்சியும் வீணே! பூத்தமலரின் புதுத்தேனைத் தானுண்டு, பாடி வட்டமிடும் வண்டினுக்கு, நான் இன்று, “பருகப் பால் உண்டு!’ என்றழைக்க வருவது, நன்றல்ல, நானறிவேன்.

மகிழ்ந்திருக்கும் இவ்வேளை, மகிழ்ச்சியே வினையென்று, மயங்கிடுதல் கூடாது என்று மூதறிஞர் இயம்பியதை மட்டும், மறவாதிருப்பதுதான், மாண்பு; தமிழர் நெறி.

மகிழ்ச்சியே மயக்கம்; மன்னுயிரைத்தான் மாய்க்கும்! என்று கூறினோர் அல்லர் நம் தமிழர், எனினும், மகிழ்ச்சியே வினை; வேறு செயல் வேண்டாம், என்றிருத்தல் நன்றன்று; வினை வித்து; மகிழ்ச்சி, விளைவு; அந்த விளைவு அவ்வளவும், தின்று தீர்த்திட்டால், பின்வினைக்கு வித்து ஏது? எனவே, விளைவு அளிக்கும் சுவையினை உண்டு மகிழ்ந்திருப்பதுடன், இருந்திடாது “வித்து’ எடுத்து வைத்து, மீண்டும் வினைமேற்கொளல்வேண்டும்; அங்ஙனம், முறை வகுத்துக்கொண்டால்தான், வாழ்வில் வளம் காண வகை கிடைக்கும், தொடர்ந்து.

மகிழ்ச்சி, மயக்கமாகுதல் கூடாது; மது மாந்திடும் மந்தி போன்றதன்று மனிதகுலம்! மகிழ்ச்சி, புது முயற்சிகட்கு ஊக்குவிக்கும் மாமருந்து; மருவன்று.

கரும்பளித்த கழனி, மீண்டும் கரும்பளிக்கக் காண்கிறோம்; மண்தான்; எனினும் மதிமிக்க செயலன்றோ! மனிதன், அதனினும் மேம்பட்டன்றோ இருத்தல்வேண்டும்? எனவே, ஒரு விளைவு, மறுவினைக்குத் துவக்கம்; மகிழ்ச்சி வினையின் இறுதி முடிவு அல்ல; வினைப்பயன்; புதிய வினைக்கு அழைப்பு. புதிர் அல்ல, புண்யம் பேசிடுவோர் கூறிடும் தத்துவமும் இஃதல்ல; பொருள் பொதிந்த உண்மை; தமிழர்க்கு இது புதிதுமன்று.

தாயின் அழகைப் பெற்றிடும் மகவு, பிறகு தாயுமாகித், தன் அழகளித்துச் சேயை அளித்திடும்; காண்கிறோம் அன்றோ!

அதுபோலவேதான், மகிழ்ச்சி பெறுகிறோம் விழாக் காரணமாக, எனில், அந்த மகிழ்ச்சியில் திளைத்துப் பிறகு, தொடர்ந்து, தொகை தொகையாக, வகை வகையாக, மகிழ்ச்சி பெற்றிடச் செயலில் ஈடுபடவேண்டும்.

குழலில் உள்ள துளைகளின்மீது விரல் சேர்க்கும் இசை வல்லான், என் செய்யக் காண்கிறோம்? எல்லாத் துளைகளையும் இறுக மூடிவிட்டால், இசை தானும், எங்கிருந்து எழும், கூறு? இசையின் வகைக்கேற்ப, அளவுக்கேற்ப, இன்னின்ன நேரத்தில், இன்னின்ன முறையோடு, விரலுக்கும் குழலிலுள்ள துளை கட்கும் தொடர்புண்டு என்பது இசைவல்லோன், கண்டறிந்த இலக்கணம், அதற்கேற்ப, மூடுகிறான் ஓர் துளையை, முற்றும் ஒலி பிறக்கும் நிலையிலே வேறோர் துளையை விட்டுவைத்துக் காட்டுகிறான், தொட்டும் தொடாததுமாய் விரல் இருக்கும் சில துளையில், பாதி, கால், அரைக்கால் என்று பாங்கறிந்த அளவு முறை தானறிந்து, விரல்களையே வினை செய்ய விடுகின்றான்; அதனால்தான் ஏழிசையின் இனிமைதனை, மானிடர் கேட்டு இன்புற்று மகிழ்ந்து இருக்கின்றார்; நாகமும் தீண்டாதாம், நஞ்சு கொண்டதெனினும்!

வாழ்க்கையே, அதுபோல்தான்.

அளவு, தொடர்பு, அறிந்து வினை செய்து, எதற்கும் முறை வகுத்து, இன்பம் காண்பது, வாழ்வு! அதுவும், மூழ்கிச் செயலற்றுப்போக அல்ல; அது மடமை! துய்த்திடலாம் வாழ்வின் சுவை; துஞ்சிட அல்ல; வினை மேற்கொள்ள; தொடர்ந்து செயலாற்ற; ஏனெனில், இயங்குதல் வாழ்க்கையின் இலக்கணம்; இனியன புரிதல் அறநெறியாகும்; அறநெறியதனை அடவி ஏகாமல், மாடும் மனையும் சூழ இருந்திடும் மாண்புமிகு இல்லறம் அதனிலேயே, பெற்றிட இயலும் என்று கூறினர், தமிழர்; துறவோரும், இவரில்லை எனில் இல்லை யாங்கண் என்றார் உணர்ந்து.

இல்லறத்தாருக்கு நல்ல விழாவாக அமைந்திருப்பதுதான், பொங்கற் புதுநாள், எனவேதான், இன்று, ஈசன் திருவடி நிழலைச் சேர்ந்திடும் காதைபற்றிப் பேசிடும் கவலை இல்லை; பொங்கிற்றா பால்! என்று ஒருவருக்கொருவர் கேட்கும், பூரிக்கும் காட்சி காண்கிறோம்.

“எப்படியும் வந்திடுவார் என்றாள். அவள் ஆரூடம் இப்படிப் பலிக்குமென்று, எண்ணவே இல்லை’’ என்று இருபதாண்டு தாங்கும் எழிற்கொடியைத்தான் பார்த்து, இதுபோல மும்மடங்கு ஆண்டு கண்ட முதியவன் கூறி நிற்க, “நானென்ன அவருக்காக, ஏக்கமா கொண்டிருந்தேன்? அவர் வந்த காரணமும், எனைக் காணத்தானா? இப்பக்கம் ஏதேனும் அலுவல் இருந்திருக்கும்; அக்காரணம்பற்றி வந்திருப்பார், மனைவரையில்’’ என்றந்த மலரணையாள், இடிக்கின்றாள் சொல்லாலே. வெடுக் கென்று இதழ் கடிக்கும் தன் மகவுக் கன்னத்தை. இதுகேட்டு, இலேசாகத் தட்டுகிறான் பெற்றெடுத்தோன்; “ஏதேது! மெத்தவும் நீ; போக்கிரியாகிவிட்டாய்! உன்னைக் கட்டித் தழுவி நான், கசக்கிவிடப்போகிறேன், பார்!’’ என்று கூறுகிறான், குழவிக்காம் அப்பேச்சு! ஆனால், பார்வை? அவள்மீது!!

இதைப் பாரண்ணா! இதைப் பார்! பால் பொங்குகிறது பார்! பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!! என்று கூவுகிறாள், அவன் உடன்பிறந்தாள்; அவள் செங்காய்!

***

“ஏடா உன் அண்ணன், ஏதுகூற முனைந்திடினும், இழுத்து வந்து பேசுவானாம் காதல் கதை எல்லாம்; கடிந்துரைத்தார். ஓர் “கனம்’ கால்வாய் திறப்பு விழாவன்று; அவர் உரைத்தது போலவா உன் அண்ணன் பேசுகிறான்?’’ என்று கேட்டிடுவார், காதற் காவியத்தின் கடைசி ஏடு வரை, படித்து முடித்திட்ட முதியோர், இல்லத்துப் பெரியோர். அவரல்ல பேசுவது; அமைச்சர்! அவர்க்கும் கோபம், காதல் மீதல்ல; என்மீது! அதற்கும் காரணம், காதல் அவர்க்கெல்லாம் காஞ்சிரமுமல்ல!! எனினும், ஏன் இதுபோல் அவர் பேசித்திரிகின்றார் என்பாயேல், மாசு எனக்குச் சேருமாம்; மனப்பால் குடிக்கின்றார். அறம் பொருளை உரைத்ததுடன், வீடு காண அழைத்துச் சென்றாரில்லை, அருங்குறளை ஆக்கியோனும், “இன்பம்’ தந்தார்; அஃது இயற்கை எனும் காரணத்தால். அஃது அற்றுப்போமேல், உயிரில்லை, ஊரில்லை, ஊராளும் முறையுமில்லை; ஊராள் வோர்க்கோ இது புரியவில்லை.

நானுங்கூடத் தீதோதான் காதற்றிறமுரைத்தல், ஆன்றோரெல்லாம், அதனை வெறுத்துத்தானா கூறியுளார் என்பதனைக் கண்டறிய, ஏடு பலவும் பார்த்தேன், அதனுள் இருப்பதனை எடுத்தியம்பிய வல்லோர் தம்மை அடுத்துக் கேட்டுப் பார்த்தேன்; அமைச்சர் பேசும் பேச்சு, பேச்சாக இருத்தல்கூட, அமைச்சராய் அவர் இருக்கும் காரணத்தாலேதான்; வாழ்வுக்கு நல்லோர்கள் வகுத்த நல்லறமே காதல் என்கின்றார்; அறிகின்றேன்.

காதலே யுலகம்! காதலே வாழ்க்கை!
காதற் களிப்பே கடவுட் களிப்பாம்;
காதலின் மறுப்பே கவலையுந் துயரும்!
காதலின் அளிப்பே கட்டறு மின்பம்!
காதலால் உயிரைக் கடவுள் படைத்தான்.
காதலித் தின்னுங் கண்ணிலம் பெருகவே!
விண்மீன் கணங்களு மிளிர்வன காதலில்!
தண்ணுங் காற்றுந் தவழ்வன காதலில்
உண்கனி விளைவதும் உள்ளக் காதலால்!
புன்னகை யொன்றாற் பூத்திடுங் காதல்;
கண்கள் கதுவிக் கனவுகள் காணும்;
இன்னிய காதலால் எண்ணம் உயரும்;
பொன்னொளிர் வனப்பும், புதுப்புது மகிழ்வும்,
நாளொரு மேனியும், நாண்மல ரழகும்,
வாழ்விழி நோக்கின் வரப்பிர சாதம்.
புள்ளின் பாட்டும், பூவின் மணமும்
கள்ளுண் வண்டும், காற்றின் உயிர்ப்பும்
அன்னமும், மானும், அழகிய கிளியும்,
வன்ன வியற்கையும், வசந்தப் பசுமையும்,
காதலர் தூதே! காசினி யெல்லாம்
காதலர் கடிதம், காதலர் பேச்சு!
காலமும் இடமும் காதலை வெல்லா;
கால மிடத்தைக் காதலே வெல்லும்;
காதலே காய கற்பமு மாகும்;
காதலே தேவர் சோதிக் கனவாம்;
கண்களாற் பேசிக் கருத்திரண் டணைத்துப்
புண்களை யாற்றிப் புலன்களைப் பற்றி,
இமையவ ரின்பமும் இணையிலா இன்பம்
இமையி னளித்திடும் இன்பமே காதல்.
காதல் வாழ்க! காதலர் வாழ்க!
காதலால் வாழ்வுக் கற்பக மோங்குக!
ஓங்குயர் காதலே உயிர்க்கடை யாளம்
நீங்காக் காதலே நித்திய வாழ்வு;
காத லற்றவர் கட்டையைப் போல்வர்;
உயிரின் இன்பமே, உயிரெனும் பசிய
பயிரினை வளர்க்கும் பைம்முகி லேயுனைப்
பிரிந்து வாழேன்; பிதற்றியுன் பெயரை
விரிந்த வுலகெலாம் வெளிகொண் டலைந்தேன்;
நீவே றில்லை; நான்வே றில்லை;
பூவே றில்லை; நிறம்வே றில்லை;
நானுன் யாக்கை; நீயென் னாவி;
நானுன் வாழ்க்கை; நீயென் வையம்;
உள்ளந் தாராய்; உயிரைத் தாராய்;
உள்ளம் வணங்கும் ஒன்றிய காதலே!

எப்படித் தம்பி, கவிதை!! ஏதேது, அமைச்சர்கள் சொல்லச் சொல்ல, அண்ணன் அகவலாகக் கொட்டுகிறான்போலும், காதல்பற்றி; என்றுதானே எண்ணிக்கொள்கிறாய்; தம்பி! இது நான் தொடுத்த கவிதையே அல்ல!! வாழ்வு எனும் மாயப் பைசாசத்தின் பிடியில் அகப்பட்டு உழன்று, பேரின்பம் பெறவே முடியாத வகையில் சிற்றின்பச்சேற்றில் அழுந்திக் கிடந்திடும், அறம் மறந்த ஒருவரின், வேட்கை குழம்பி வெளிப்பட்டதுமல்ல. இளைஞர் மனத்தினை ஈர்த்துக் கட்சிக்கு வலிவு தேடும் “கதை கூறி’யின் பேச்சுமல்ல. கண் கவரும் காட்சி காட்டிக் காசுதனைப் பறிக்கக் கலையை விலையாக்கும் காதகரும் அல்ல இவர்! தூயவர்! ஆம்! அங்ஙனம் நான் கூறுவதை அமைச்சரும் ஒப்புவர்! மேலவர்! அவர் அறிவு கண்டோர் கூறுவர் அதுபோல்! அதுமட்டுமன்று தம்பி! புலன் அடக்கி வாழ்கின்றார், புதுயோகி இவர்; என்று, அமைச்சர் போன்றார் போற்றினர், நாடறியும். அரவிந்தர் அமைத்த நல் ஆசிரமம்தனில் இருந்து; அறம் வளர்த்தார், இவர் துறவி என்று அநேகர் கூறினர். அந்தத் துறவி தந்த அருங்கவிதைதான், இங்கு நான் இணைத்துத் தந்தது. காதலின்பம், மாண்பு கூறிடுதல் தீதென்றால், இக்கவிதைக்கு என்ன பெயர்? இதனைத் தந்த துறவியை அறிவர் நாட்டார்; சுத்தானந்த பாரதியார்.

அவர் பாடி அளித்திட்ட இந்த அரும் கவிதை கண்ட அமைச்சர்கள், நாவெல்லாம் அசையாது இருந்தது ஏன்? பசைபோட்டு அவர் நாவை ஒட்டிவைத்தனரோ, எவரேனும்? கதைக்கின்றார் இதுபோது, “கழகம் உள்ளோர், காதற்கதை பேசி வளர்க்கின்றார், கேடு’ என்று; அன்று துறவி தொடுத்த கவிதை கண்டு, வாய் அடைத்துக் கிடந்திடக் காரணம் என்ன? அவர் கவி பாடினார்; கட்சி நடத்தவில்லை, நாம் கவி பாடவுமில்லை, கட்சி ஒன்றில் ஈடுபட்டோம்; அந்தக் கட்சியின் வளர்ச்சி கண்டதால் அவர்க்குக் கசப்பு! உள்ளே வெந்தால், வாயும் கசக்கும், என்றுரைப்பர் மருத்துவம் அறிந்தோர், இவர்தம் கசப்புக்கு இஃதே காரணம். வாய்க்கசப்புடையோர் வட்டில் தன்னில் பழச்சாறு பெய்து தந்திட்டாலும், ஐயோ! எரியுது! ஆகாது, இது தீது! என்றே அலறுவர்! குறை, அவர் நாவில்!! நமது பேச்சில் இல்லை. அகம் என்றும், புறம் என்றும் அன்று புலவோர் வகுத்த காலை இவ்விதம் சில பேர் குமுட்டல் கொண்டோர் வருவர் என்று துளியேனும் எண்ணவில்லை. போகட்டும்! அவர் நோய். விரைவில் தீரட்டும்! விழாநாளன்று, அவர்க்கும் நல்வாழ்த்தளிப்போம், அவரும், தமிழர் ஆதலாலே.

***

இல்லற இன்பம், மாண்புடையது என்பதைச் சுவை பட எடுத்துக்காட்டும் விழாவாக, பொங்கற் புதுநாள் இருப்பதனால்தான், தம்பி! தமிழகத்திலே புதியதோர் எழில் அந்நாளில் பூத்திருக்கிறது.

வேட்டுச்சத்தம் கொட்டு முழக்கு இல்லை!

தாளமும் மேளமும் தோற்றிடும் அளவில், “கைலையும் வைகுந்தமும்’ கிலிகொண்டு கிடுகிடுத்து, ஆங்குள்ள கடவுளர் அவரவர் வாகனம் கிடைத்திடினும் மேய்ந்திட எங்கேனும் போயிருப்பினும், இனியும் தாமதித்தால், இக்கூச்சல் நம் உலகினைத் துளைக்கும் என்று அஞ்சி ஓடிவந்து, என்ன வேண்டும்? என்று கேட்டு, வரம் தந்து போகவேண்டும் என்று கூறும் வகையில், கோவிந்தன் பெயரையோ பரமசிவன் நாமந் தனையோ, பல்வேறு வகையான ஒலியாலே எழுப்பிடும், பஜனைக் கோஷ்டிகள் பாற்பொங்கல் நாளன்று இருப்பதில்லை.

வளைஒலி எழும்பிடும்; வண்ணக் கலவையால் கோலம் போடுவர்! வீடு அழகு பெறும்; வீட்டுளார் புத்தாடை புனைவர்; மாடு கன்று நீராட்டல் பெறும்; அவற்றினுக்கும் புதுக்கோலம் புனைவர்; மஞ்சளும் இஞ்சியும், அவரையும் துவரையும், பூசுணையும் பிறவும் கொட்டி இருக்கும்! வாழையுடன் கரும்பிருக்கும்; வடித்தெடுத்த சோற்றினிலே சுவையும் குழம்பி யிருக்கும்; உண்டு மகிழ்ந்திருப்பர்; உரையாடிக் களித்திருப்பர்; இது தமிழர் திருநாள்.

தம்பி! எனக்கொரு ஆசை: சிற்சில ஊர்களிலே ஓரளவு செய்கின்றனர், நமது தோழர்கள்.

தமிழர்கள் திருநாள், அந்த ஊருக்கே, மகிழ்ச்சி தரும் நாள்! எனவே, ஊர் மக்கள் அனைவரும், விழாக்கோலம் பூண்டிருக்கும் அந்நாள், உழைப்புக்கும், அறிவுக்கும், எழிலுக்கும், ஏற்றத்துக்கும், ஊர் மன்றம் புகழ்மாலை சூட்டிப் பெருமைப்படுத்தவேண்டும்.

உழவுத்திறன் காட்டச் சொல்லி, உழவர்க்குப் பரிசு அளித்தல்,

வலிவுத்திறம் விளக்கிடும் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தி வெற்றிகொள்வோருக்குப் பரிசளித்தல்.

நேர்த்திமிக்க ஆடை நெய்தவர்க்குப் பரிசு,
ஊர் மக்கள் நோய்தீர்த்த உத்தமருக்குப் பரிசு,
கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியருக்குப் பரிசு,
முதல்தரமான பசு,
நல்ல காளை,
அழகான கன்று,
எடுப்பான தோற்றமுள்ள சேவல், கோழி,
அழகான குழந்தை,
ஆடல் பாடலில் வல்லோர்,
புதிய கவிதைகள் புனைந்தோர்,
நல்ல ஏடு தருவோர்,

இப்படிப்பட்ட, சிறப்பு இயல்புகளுடையோரைத் தேர்ந் தெடுக்க ஊர் மன்றம் கூடிப் பரிசளித்து, மகிழ்ந்து கொண்டாட வேண்டும்.

அன்றலர்ந்த பூத்தொடுத்த அழகான மாலையோ,
புத்தாடையோ,
பொற்பதக்கமோ,

பரிசுப்பொருள், எதுவாக இருப்பினும், அன்று பெறுவதிலே ஓர் தனி மகிழ்ச்சியுண்டு; அத்தகைய ஓர் ஏற்பாடு விழாவினுக்குச் சிறப்பளிக்கும்.

களம் சென்று மட்டுமே உள்ளவுரம் காட்டவேண்டும் என்று தமிழர் இருந்தார் இல்லை.

ஊரார் கண்டு மகிழ, தம்மையொத்தவர் வியந்திட, வீர விளையாட்டுகளில் ஈடுபட்டு, வெற்றிபெற்று, விருது பெற்றனர்; விழாக்களிலே இவை தனிச்சிறப்பான இடம் பெற்றிருந்தன.

மல்லர்கள், தமது திறம் காட்டினர்.

மாடு அடக்குதல், வீர விளையாட்டாகத் திகழ்ந்தது.

கூடிப்பாடுதல், கைகோத்து ஆடுதல் — இவை மகிழ்ச்சிப் பெருக்கைக் காட்டின.

விழாக்களில், ஈடுபடும்போது புது எழிலைப் பெற்றனர் — அணிபணியாலும் ஆடை வகையாலும் ஆடவரம் ஆரணங்குகளும்.

செல்வம் சீரளித்தது என்பதனை எடுத்துக் காட்டுவனவாக, விழாக்கள் இருந்து வந்தன என்பது மட்டுமல்ல, விழாக்கோலம், கலை அழகு வளர்ந்திட, வாய்ப்பு அளித்தது என்பதும் தெரிகிறது; இலக்கியம் பயிலும்போது,

கசங்கிய கண்ணினராக, கூப்பிய கரத்தினராக, வாழ்வைச் சுமையாகக் கருதிக் காதலை வெறுத்து மாதரை மாயப்பிசாசு என்று இழித்துக்கூறி, தமிழர் வாழ்ந்தாரில்லை.

வாழ்க்கையும் ஒரு கலை என்று அறிந்திருந்தனர்.

வாழ்க்கைக் கலையினை விளக்கத் தனியாக நூலொன்று தந்தாரோவெனில், இல்லை. ஆனால், அறநெறி உரைத்திடத் தமிழ்ப்புலவோர் ஆக்கி அளித்த காப்பியங்களிலேயே, மக்கள் வாழ்ந்த வகையினை அழகுற எடுத்துக் கூறும்போது, கலை அறிவுடன் அவர்தம் வாழ்க்கை அமைந்து இருந்ததை எடுத்துக் காட்டினர்.

பூம்புகார், மதுரை மாநகர் இரண்டிலேயும், மாந்தர் வாழ்க்கை, சிறப்பாக மகளிர் வாழ்க்கை இருந்த விதத்தைப் படம் பிடித்துக் காட்டும் பான்மையிலே தந்தவர் துறவி, இளங்கோ அடிகள். மலரணி கொண்டை மாதர்க்கு அழகு!

இளங்கோ அடிகள், மதுரை மகளிர், மலரணிந்து மகிழ்ந் திருந்தனர் என்று மட்டுமல்ல, மலர்கள் பல வண்ணங்களாக உள்ளன அல்லவா? அவற்றினை ஒன்றாகத் தொடுத்து, அணிந்தனர் என்பதையும் கூறுகிறார்.

மலர், மணம் தருகிறது! எனவே, மாதர்தம் கூந்தலுக்குச் சேருகிறது.

ஆனால், இது, கலை அழகும் பெறுகிறது, கலை அழகு உணர்வு மிகுந்தவர் மதுரை மகளிர் என்பதைக் காட்டுகிறது. அவர்கள் முல்லை, குவளை, நெய்தல், மல்லிகை, செங்கழுநீர்ப்பூ முதலியவற்றினைத் தொடுத்து அணிந்துகொண்டனர் என்று அடிகளார் கூறும்போது.

அந்த மலர்களையும், மதுரை மகளிர், முத்தாரங்களுடன் தொடுத்து அணிந்திருந்தனராம். பாண்டிநாடு முத்துடைத்து அல்லவா!

செல்வம், சீர், கலை உணர்வு, வாழ்க்கையை வெறுத்திடாத தன்மை, இவ்வளவும் விளங்கும் வகையில், மதுரை மகளிர் முல்லை, குவளை, நெய்தல், மல்லிகை, செங்கழுநீர்ப்பு முதலிய வற்றை முத்தாரங்களுடன் தொடுத்து அணிந்தார்கள் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

வாழ்க்கை இவ்விதம் இருத்தல்தான் முறை; மதுரை மகளிர் இப்படி இன்பமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதனை, அடிகள், எப்போது காட்டுகிறார்? கண்ணகி, கணவன் அன்பைத் திரும்பவும் பெற்றுப் புதுவாழ்வு தொடங்கப் பொருள் தேட முயலும் நோக்குடன் கோவலனுடன் வருகிறபோது!

மதுரை மகளிர், முத்தாரமும் மலரும் தொடுத்து அணிந்துள்ளனர்; வணிகக் கோமான் மகள், கண்ணகி இதனினும் மேலாக, அணிபணி பூண்டு வாழ்ந்திடலாம்.

ஆனால், காற்சிலம்பு விற்றால்தான், கைப்பொருள் கிடைக்கும் என்ற நிலை!

என்றாலும், மகிழ்ந்து இருக்கும் மதுரைமகளிரைக் கண்ட போது, புதுவாழ்வு கிடைக்கும்; அப்போது, இதுபோல. . .! என்ற எண்ணம் கண்ணகிக்கும் தோன்றியிருக்குமோ, என்னவோ!

காலத்துக்கு ஏற்றபடி, தம்மை அழகுபடுத்திக்கொள்வது, நுண்ணிய கலை உணர்வைக் காட்டுவதாகும்.

இப்போதும், ஜப்பான் நாட்டுப் பெண்கள் தமது இல்லத்தையும், தம்மையும், வண்ணங்களின் வகை அறிந்து அழகு படுத்தும் நுண்கலை மிகுதியாகப் பெற்றவர்கள் என்று கண்டறிந்தோர் கூறுகின்றனர்.

காலத்துக்கு ஏற்ப, ஊர் கோலம் கொள்கிறது — இயற்கை அப்படிக் கோலத்தை மாற்றிக் காட்டுகிறது.

அந்தக் கோலத்துக்கு ஒத்ததுபோல ஆடை அணி புனைவது, கலை அழகினை நன்கு உணர்ந்தால் மட்டுமே முடியும்.

அத்தகைய கலை உணர்வு மதுரை மகளிருக்கு இருந் திருக்கிறது என்பது வாடைக்காலத்துக்கு ஏற்ப அரத்தப் பூம்பட்டையை, மகளிர் அணிந்திருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து தெரிகிறது.

பூம்புகார் நகரத்துப் பெண்கள் பகலில் பட்டு ஆடையும், இரவில் பருத்தி ஆடையும் உடுத்தினராம்.

ஆரணங்குகள் மட்டுமல்ல; ஆடவரும், அணிபணி பூண்டு, தம்மை அழகுபடுத்திக்கொண்டனர். வெள்ளி நாரால் தொடுக்கப்பட்ட பொற்குவளை மலர்களை, ஆடிடும் விறலியர் அணிவராம்.

வெள்ளியால், நார்! பொற்குவளை! — வண்ணங்களை அடுக்கி அழகுபெறும் கலைத்திறனை, கலையால் கவர்ச்சி யூட்டும் விறலியர் பெற்றிருப்பது மிகப்பொருத்தமல்லவா?

ஆடவரோ, கடகம் கழல் எனும் அணிகள் பூண்டிருந்தனர்.

அவை, செல்வத்தைக் காட்டுவன மட்டுமல்ல; வீர வெற்றிகள் பெற்றவர் என்பதையும் காட்டுவன.

கொள்ளழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.
- புறநா: 11
எரியகைந் தன்ன வேடி தாமரை
சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி
நூ-ன் வலவா நுணங்கரின் மாலை
வாலொளி முத்தமொடு பாடினி யணிய
- பொருந: 159–62

(வேடி — சிவந்த (பொன், அழகிய); பித்தை — கூந்தல்; பாடினி — பாடுபவள்.)

அணிவன, சூடுவன என்பதில் மட்டுமல்ல, பூசுவனவற்றிலே, பல பொருள், பல முறைகள் இருந்திருக்கின்றன.

மாதவி, தன் கூந்தலைப் பத்து வகைப்பட்ட துவர், ஐந்து வகைப்பட்ட விரை, முப்பத்து இரண்டு வகை ஓமாலிகைகள் முதலியன ஊறின நல்ல நீராலே கழுவி, வாசனைப் புகையூட்டி கஸ்தூரி, சவ்வாது கலந்த தைலத்தைத் தடவி அழகுபடுத்திக் கொண்டாள் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது.

இப்படியெல்லாம் செய்து, கோவலனை மயக்கினாள் — என்று கூறுவர், நுனிப்புல் மேய்வோர்.

எண்ணிப்பார்த்து வியப்படைய வேண்டியது அஃது அல்ல. இவ்வளவு இன்பமாகச் செல்வமாகக் கலை அழகு உணர்வுடன், காட்சிப் பொருளாக வளர்ந்த அந்த ஆடழலகி, கோவலன் தன்னைத் துறந்தான், பின்னர் வெட்டுண்டு இறந்தான் என்றவுடன், என்ன ஆனாள்? எல்லாம் துறந்தாள்!!

அவ்வளவு அழகூட்டும் முறைகளும், அவனுக்காக; அவனை மகிழ்விக்க! அவன் இல்லை! அவை இனி ஏன்? என்று துறந்தாள்.

ஆடலழகியரும் விறலியரும் அழகளிக்கப் பலமுறை தேடிக் கொள்வதிலே வியப்பென்ன? அது பொதுமுறையாமோ? என்று சிலர் ஐயப்படுவர்.

அலத்தகம் எனும் செம்பஞ்சுக் குழம்பை, கால், உள்ளங்கை, இதழ், நெற்றி, நகம் — இங்கெல்லாம் பூசி இலக்கணையார் மண அறைக்கு அழைத்துக்கொண்டு வரப்பட்டார் என்று சிந்தாமணியில் காண்கிறோம்.

கால வேறுபாட்டினைக் கவனித்துப் பெண்கள், மலர் சூடுவர் என்பதும், கூறப்பட்டிருக்கிறது.

மாதவியின் ஒப்பனை

பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத் திருவகை யோமா லிகையானும்
ஊறின நன்னீர் வுரைத்த நெய்வாசம்
நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப்
புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை
வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றூட்டி
- சிலப்: கடலாடு காதை: 76–81

(துவர் — பூசுவன, விரை -கலவைச் சாந்து; ஓமா-கை — மணம் உள்ள நீரில் இடும்பொருள்; மான்மதம் — கஸ்தூரிக் குழம்பு.)

அம்மலர் அடியுங் கையும் அணிகிளர் பவழவாயும்
செம்மலர் நுதலும் நாவும் திருந்தொளி
உகிரோ(டு) அங்கேழ்
விம்மிதப் பட்டு வீழ அலத்தகம் எழுதி இட்டாள்
அம்மலர்க் கண்ட முள்ளிட் டரிவையைத்
தெரிவை தானே.
- இலக்கணையாரிலம்பகம்: 69

(நுதல் — நெற்றி; உகிர் — நகம்; அலத்தகம் — செம்பஞ்சுக் குழம்பு.)

முன்பனிக் காலத்தில், மகளிர், தம் கூந்தலில் மல்லிகை யையும், அதன் அருகே வாகையையும் சூடிக்கொள்வாராம்.

இளவேனிற் காலத்திலோவெனில், கழுநீர் மாலையாம், குவளை மலராம்!!

தம்பி! இவ்விதமாகவெல்லாம், இல்லறத்திலே, வாழ்க்கைக் கலையழகுடன், வாழ்ந்துவந்தவர் தமிழர், முன்பு!!

தமிழரின் தனிச்சிறப்புடைத் திருநாளாம், பொங்கற் புது நாளன்று — ஓர் நாளாகிலும் — எழில் குலுங்க, இன்பம் துலங்க, மகிழ்ச்சி பொங்க இருக்கவேண்டாவா? அதை அறிந்தே, தமிழகம் விழா நடத்தி மகிழ்கிறது.

***

எதனையும் அளித்திட இயலாதவராக. உள்ள இன்றைய ஆட்சியாளர், தமிழர் வாழ்ந்த வகை அறிந்து அகமகிழ்ந்திடும் வாய்ப்பினைப் பெறுகிறார்களே, இன்று மக்கள் — ஓரளவுக்கு — நமது கழகம், தரணி மெச்சத் தமிழர் ஓர் காலத்தில் வாழ்ந்த சீரினை எடுத்துக்காட்டுவது கேட்டு; அந்த மகிழ்ச்சியையாவது அனுபவித்துத் தொலைக்கட்டும், என்று வாளா இருக்கிறார் களா? இல்லை, வேலாய்க் குத்துகிறார்கள்! அதென்ன, தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ்ப்பண்பு! இதெல்லாம் சின்னப் புத்தி! பேதப்புத்தி! ஆகா வழி! என்று பேசுகின்றனர். பேசுவதுடன், இவ்விதமெல்லாம் தமிழ் இனம், தமிழ்நாடு, திராவிடம், தனி அரசு என்றெல்லாம் பேசுகிறார்களே, இந்தக் கழகத்தார்கள், ஏன் தெரியுமா? என்று கேட்டு விடையும் தருகிறார்கள்; எல்லாம், அமைச்சர் ஆகும் ஆசையினால்தான் என்று.

பாரேன், தம்பி! ஒவ்வொரு நாட்டு அறிவாளர், வித்தகர், வேலையற்றுப்போய், சந்திரமண்டலம் போகும் வழி, செவ்வாய் மண்டலத்தின் தன்மை, எனும் ஏதேதோ ஆராய்ச்சி நடத்து கிறார்கள் நமது — அமைச்சர்களைப் பார்! யாரும் நடத்தாத, எவராலும் நடத்த இயலாத, எவரும் வியந்து பாராட்டத்தக்க ஆராய்ச்சி நடத்திப் பேருண்மை ஒன்றைக் கண்டுபிடித்துக் கூறி விட்டனர் — தனிநாடு என்று நாம் பேசுவது மந்திரி வேலைக்காகத் தான்! என்று!!

இப்படி அமைச்சர்கள் பேசியது கேட்ட, நண்பரொருவர், சொன்னார், நூலை அறுத்திடுமோ என்று அஞ்சி, அங்குக் குதித்துக் கூத்தாடிய குரங்குகளை ஒருவன் விரட்டினானாம்! குரங்கு, ஓஹோ! என்போன்ற “வால்’ இவனுக்கு இல்லாத பொறாமையால், இவ்விதம் செய்கின்றான்! எனக்குள்ள பெருமையே இந்த “வாலால்’ வருவதன்றோ, இது அந்த மானிடனுக்குக் கிடைத்திடலாமா — கூடாது — என்று கூறிற்றாம், ஏதோ அப்படி ஒரு கதையாம்.

நான்தான், மெத்தவும் கேட்டுக்கொண்டேன், அந்த நண்பனை, இப்படி நாலு பேர் நடுவே பேசாதேயப்பா — சரியல்ல — நமக்கும் அவர்களுக்கும் பிறகு வித்தியாசம்தான் என்ன — அமைச்சர்கள் பேசட்டும் — தாங்கிக்கொள்வதிலே என்ன தலை இறக்கம் — அவர்களையே நாடு தாங்கிக் கொள்கிறபோது, அவர்களின் நாக்குத் தீண்டுவது கண்டு நாம் கோபப்படலாமா? என்றெல்லாம் சொல்லி வைத்தேன்.

தம்பி, தமிழகத்தின் பழங்காலச் சிறப்பினை மறந்து விட்டால், இன்று அமைந்துள்ள, வட அரசுக்கு இம்மியும் எதிர்ப்பு எழாது என்றெண்ணி, வரலாற்றையும் இலக்கியத்தையும் கூட, அழித்தொழிக்க முனைகின்றனர்.

தமிழ் உணர்வு, பொங்கற் புதுநாள் போன்ற பொன்னான விழாக்களின்போது, ஏற்றம் பெற்றுத் திகழ்கிறது.

இதை அறிந்து, பாழாக்க இனி, என்னென்ன செய்வாரோ, யாரறிவார்?

***

முன்பு நான், வாழு! வாழவிடு!! என்றெழுதியபோது, நமது இயற்கையும், உரிமையும் கொண்ட தமிழர், திராவிடர் என்ற உணர்ச்சியியையும் அழித்தொழித்து, பாரதம், ஏக இந்தியா எனும் உணர்ச்சி போலி என்ற காரணத்தால் அதைப் புகுத்தி வெற்றி காணவும் முடியாமல் ஒரு “சூன்ய’ நிலைமையை, எங்கே இவர்கள் ஏற்படுத்திவிடுவார்களோ என்ற அச்சத்தை வெளி யிட்டேன். பலர், அவ்விதம் அஞ்சத் தேவையில்லை. நாம், நமது இன உணர்ச்சியை என்றும் இழந்துவிடப்போவதில்லை என்றெல்லாம் எழுதி எழுச்சியூட்டினார்கள். அவர்கட்கு என் நன்றி. பொங்கற் புதுநாள்போன்ற விழாக்காலம், தமிழ் இன உணர்வை, மங்கிடாதிருக்கச் செய்யும் மகத்தான நல்வாய்ப்பு. எனவே, மனைதோறும் பெற்றிடும் மகிழ்ச்சியுடன், மன்ற மெங்கும், தமிழர் மாண்புபற்றி எடுத்துரைத்திட இந்த நாட்களைப் பயன்படுத்துதல் ஏற்றம் அளிக்கும்; அறிந்து செயல்பட வேண்டுகிறேன்.

***

உருட்டி மிரட்டினாலும், உறுமிக் கிடந்தாலும், உண்மை யினை அடியோடு ஒழித்துவிடுதல் இயலாது.

வரலாறு தெளிவாக உணர்த்துவது, ஓர் பேருண்மை. நமது இடம், திரு இடம்; வடக்கே வேறு இடம்; இரண்டையும் பிணைக்கிறார்கள்; அது ஒவ்வாது என்பதை எடுத்துக் கூறாத, வரலாற்றுப் பேராசான்களும், உளநூல் வல்லோரும் — விலைக்கு வாங்கப்பட்டவர்கள் தவிர — இல்லை என்று கூறலாம்.

தம்பி! இந்தியா என்பது இயற்கையானது அல்லதான் — பல்வேறு இனங்களின் இருப்பிடங்கள் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ளன என்பதும் உண்மைதான் — என்றாலும், இந்தியாவை ஒரு நாடு ஆக்கிவிட்டோம் — ஒரு பேரரசு அமைத்துவிட்டோம் — இனி இதை மாற்றப்போவதில்லை என்று பேசுகின்றனர் அரசினர்.

இது வேதனை நிரம்பிய பேச்சு — இன உணர்ச்சி உள்ள எவரையும், செய் அல்லது செத்துமடி என்று தூண்டிவிடக் கூடிய அறைகூவல்; அதுமட்டுமல்லாமல், ஒரு போலி அமைப்புத்தான் இந்தியா என்பதை வெட்கமின்றி ஒப்புக் கொள்வதுமாகும்.

கிடைத்ததை விடமாட்டோம் என்று பேசுவது அறம் அறிந்தோர் பேச்சு அல்ல — ஆதிக்கக்காரரின் ஆணவப் பேச்சு. ஆனால், வரலாறும், இலக்கியமும் அழிக்கமுடியாத விதத்தில் ஏற்படுத்தி வைத்துள்ள உணர்ச்சி, வழிவழி வளர்ந்து பண்பாடு ஆகி, இருக்கிறது; அந்த “உணர்ச்சி’யை அழித்து விடுவது, இயலாத காரியம் என்பதை, இன்று ஆதிக்கத்தை நம்பிக்கொண்டிருக்கும் அரசினர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.

ஆனால், உரிமைக்காக எதனையும் இழந்திடும் வீர உணர்ச்சி, தியாக உள்ளம், கொழுந்துவிட்டு எரியும்போது ஆணவம் வெந்து கருகிச் சாம்பலாகும்.

இவ்வளவு பலமாக அமைத்துவிட்டிருக்கிறோம், ஆதிக்கத் துக்கு அரண்கள் உள்ளன; அரண் காக்கப் படைகள் உள்ளன; படைகள் அமைத்திடப் பணபலமும் உண்டு என்று இறுமாந்து கிடப்போர், இந்தியப் பேரரசு என்றென்றும் நிலைத்து இருக்கப் போகிறது என்று எண்ணுகிறார்கள்.

எனினும், அவர்களுக்கே சிற்சிலபோது, ஐயப்பாடும், அச்சமும், கவலையும் கலக்கமும் ஏற்பட்டுவிடுகின்றன; கை பிசைந்துகொள்கின்றனர்; இந்தியர் என்ற உணர்ச்சி இல்லையே, என் மொழி! என் பிரதேசம்! என்று பேசுகிறார்களே. அதற்கு ஏதேனும் கெடுதல் நேரிடும் என்று தெரிந்தால், பேயாட்டமாடு கிறார்களே! என்று பேசுகிறார்கள், மனம் மருண்டு.

பேரரசு அமைத்துவிடலாம் — பலர் அமைத்தனர் — அதனை உடைபடாமல் பாதுகாக்கவும் செய்யலாம் வெகு பாடுபட்டு — ஆனால், பிணைக்கப்பட்ட நாடுகளிலே, ஏற்பட்டுவிடும் மனக்கசப்பு, மாறாது. அது, சமயம் பார்த்துக்கொண்டு இருக்கும் நச்சரவம் போன்றது.

புயலில் வீழும் பெருமரங்கள், நாலைந்து நாட்களுக்கு முன்பே, நான் விழப்போகிறேன் — என் வேர்கள் நைந்து போயுள்ளன — பெரும் காற்றடித்தால் தாங்கி நிற்கும் வலிவு எனக்கு இல்லை — என்று அபாய அறிவிப்பா தருகிறது?

காரணமற்று, அடிப்படைக் கோளாறுடன், அமைக்கப்படும் எந்தப் பேரரசும், விடுதலை ஆர்வம் முற்றிப் புரட்சிப் புயலாக மாறும்போது, பொடிப்பொடியாகித்தான் போகும்.

உதுமானிய சாம்ராஜ்யத்தைவிடப் பேரரசு இருந்த தில்லை என்று கூறலாம், வீரமும் திருவும் விளங்கிடும் சாம்ராஜ்ய மாகத்தான் திகழ்ந்தது. உதுமானிய சாம்ராஜ்யத்தின் புகழ்பாடக் கவிவாணர்களும், வெற்றி தேடிக் கொடுக்க வீரர் குழாமும், அணி அணியாக இருந்தனர்.

படைபலம் மட்டுமல்ல, உதுமானிய சாம்ராஜ்யத்துக்குத் தேவபலமும் இருக்கிறது என்றுதான் செப்பிப் பெருமைப் பட்டனர்.

எவ்வளவு விரிந்து பரந்து இருந்தது! எத்துணை எத்துணை எழிலூர்கள், அந்தச் சாம்ராஜ்யத்தில்!

உதுமானிய சாம்ராஜ்யத்திலே, இருந்து, இதுபோது தனி நாடுகளாகிவிட்டவைகளின் பட்டியலைப் படித்தால் வியப்பாக இருக்கும்; அவ்வளவு “நாடுகளை’ சாம்ராஜ்யம் தன் இரும்புக் கரங்களில் வைத்துக்கொண்டிருந்திருக்கிறது.

இன்றைய துருக்கி
கிரீஸ்
பல்கேரியா
ருமேனியா
செர்பினியா
போஸ்னியா
கிரீமியா
ஈஜிப்ட்
சிரீயா
துனீசியா
திரிபோலி
அல்ஜியர்ஸ்

இவை உதுமானிய சாம்ராஜ்யத்தின் பகுதிகள்!

இந்தியப் பேரரசு, எப்படித் திராவிடம் போன்ற நாடுகளைப் “பிரதேசங்கள்’ என்று பேசிவருகிறதோ, அதுபோல, இவைகளை உதுமானிய சாம்ராஜ்யமும், பகுதிகள் என்றுதான் குறிப்பிட்டது.

1907ஆம் ஆண்டுவரை உதுமானிய சாம்ராஜ்யம், பல இனம், பல நாடுகளைத் தன்னுடைய பிடியில் வைத்துக்கொண்டு, ஆண்டவனின் அருளும், படைபலமும், பாதுகாப்பு அளித்து வருவதாகவும், எதிர்த்து எவரும் ஏதும் செய்துவிட முடியாது என்றும் எக்காளமிட்டது.

இன்று, தம்பி! இத்தனை பெரிய உதுமானிய சாம்ராஜ்யம், என்ன ஆயிற்று? உடைபட்டுப் போயிற்று!

துருக்கியை மையமாக வைத்துத்தான், உதுமானிய சாம்ராஜ்யம் கட்டப்பட்டது; இன்று மிச்சமாக இருப்பது துருக்கி ஒன்றுதான்.

வரலாறு அறியாதார், ஈஜிப்ட் ஒரு காலத்திலே, துருக்கி யால் அமைக்கப்பட்ட, உதுமானிய ராஜ்யத்திலே ஒரு பகுதி என்று நாம் கூறினால், ஆச்சரியப்படுவர்.

கிருஸ்தவ மார்க்கத்தைக் கொண்ட பல்கேரியா, கிரீஸ் போன்ற நாடுகளாகிலும், இஸ்லாமிய மார்க்கத்தைக்கொண்ட துருக்கியர் அமைத்த சாம்ராஜ்யத்தில் இருப்பது இழுக்கு, கடவுளுக்கே பொறுக்காது என்று கருதிக் கொதித்தெழுந்து, விடுபட, தனியரசாகத் துடித்திருக்கலாம் — ஈஜிப்டுக்கு என்ன கெடுதல்?

ஈஜிப்டில் உள்ளவர்கள் அராபியர்.

துருக்கியரும் அராபியரும் இருவருமே, இஸ்லாமியர். மதம் ஒன்று! என்றாலும், அராபியருக்கு அராபியர் என்ற இன உணர்ச்சி, துருக்கியரின் சாம்ராஜ்யத்தில் எவ்வளவு அழுத்த மாகப் பிணைக்கப்பட்டிருந்தும் மங்கிப் போய்விடவில்லை.

இஸ்லாம்போல், மார்க்கத்திலே சேர்ந்துள்ளவர்களை ஒன்றுபடுத்தும் மகத்தான சக்தி வேறு இல்லை. இருந்தும், அராபியர் தம் இன உணர்ச்சியை இழக்கவில்லை!

இப்போதும், நாசர், அராபியப் பேரரசு என்றுதான் கூறிப் பூரிப்படைகிறார்.

இமய முதல் குமரி வரை, எங்கு இருந்தாலும், இந்தியப் பேரரசில், பேதம் காட்டப்படுவதில்லை; எல்லோரும் சமம் — எவரும் தாழ்வில்லை — எவரும் உயர்ந்தோர் என்றும் உரிமை கொண்டாடுவதற்கில்லை — என்று இந்தியப் பேரரசுக்காக வாதிடுவோர் பேசுகின்றனர்.

உதுமானிய சாம்ராஜ்யத்தில், துருக்கியர், அராபியரை எந்த ஒரு துறையிலும், எந்த வகையிலும், தாழ்வாக நடத்த வில்லை. படையிலாகட்டும், ஆட்சி அலுவலகங்களிலாகட்டும், அராபியர், துருக்கியருக்குச் சமமாகவே இடம் பெற்றனர், பெருமை பெற்றனர். என்றாலும், நாம் அராபியர்! நமது நாடு, ஈஜிப்ட்! இன்று அதனைத் துருக்கியர், தமது சாம்ராஜ்யத்தில் அடிமைப்படுத்தியுள்ளனர் என்ற எண்ணம், அவர்கள் மனதை விட்டு அகலவே இல்லை.

அராபியம் துருக்கியரும் கலப்பு மணம் செய்துகொண்டும் வாழ்ந்தனர். என்றாலும், அராபியர் என்ற தேசிய உணர்ச்சி, பீறிட்டுக்கொண்டு வந்தது, சாம்ராஜ்யப் பிடிப்பு பொடிப் பொடியாயிற்று; விடுபட்ட ஈஜிப்ட் தனி அரசு, தன்னரசு நடத்துகிறது.

***

அது அந்தக் காலம் — புரட்சி செய்து — படைகொண்டு தாக்குவது — அதனால்தான் பேரரசிலிருந்த நாடுகள் பிரிந்து, தனி அரசு என்றாகிவிட்டன. இது வேறு காலம்!! என்று மிரட்டும் குரலிலும், கேலி செய்யும் விதத்திலும், ஆதிக்கக்காரர் பேசுகின்றனர்.

காலம், முறைகளை மாற்றுமே தவிர, மனப்போக்கையும், உணர்ச்சியையும், நிச்சயம் மாற்றிவிடாது — அழித்துவிடாது.

முன்புபோல அல்ல, இப்போது. எந்த இடத்திலிருந்து, குமுறல் கேட்டாலும், எந்தப் பகுதியில் வீரத் தியாகிகளின் இரத்தம் கொட்டப்பட்டாலும், ஏன்? என்று கேட்கவும், நியாயம் பேசவும், துணை நிற்கவும், உலகில் பல்வேறு நாடுகள் முனைந்து நிற்கின்றன.

அந்தக் காரணத்தால்தான், கெனியா நாட்டு விடுதலைக் கான நல்லெண்ண ஆதரவு பெற, அந்நாட்டு விடுதலைத் தளபதி டாம் இம்போயா, இந்தியப் பேரரசுத் தலைவரை நாடி வருகிறார்.

அவர்களுக்கெல்லாம், தமது நாட்டு விடுதலை குறித்து எடுத்துரைக்க, இங்கெல்லாம் வரும் அளவுக்கு “ஏகாதிபத்தியம்’ உரிமை தருகிறது. ஆனால், இங்கு நடைபெறும் “அன்பாட்சி’, “அகிம்சையாட்சி’ வெளி நாடுகள் செல்ல, நமது கழகத்தவருக்கு, அனுமதி வழங்க இப்போதே மறுக்கிறது.

இஃதொன்றே, இந்தியப் பேரரசுக்கு உள்ள வலிவைக் காட்டவில்லையா என்று கேட்கத் தோன்றும். தம்பி இது அந்த அரசுக்கு உள்ள வலிவை அல்ல, நம்பிக்கைக் குறைவை, பயத்தைத் தான் காட்டுகிறது. எந்த நாடு சென்று இவர்கள், வரலாற்று, இலக்கிய ஆதாரங்களைக் காட்டித் தங்கள் இன இயல்புகள் பற்றி எடுத்துச் சொன்னாலும், ஏற்றுக்கொண்டு ஆம்! ஆம் என்று பேசுவார்களே, நாம் பிறகு, பலருடைய கேள்விகளுக்கு அல்லவா பதிலளிக்கவேண்டி வந்துவிடும், என்ன பதில் அளிப்பது? நாம் அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்த அமைக்கப்பட்ட பேரரசுக்கு என்ன நியாயம் காட்டுவது? என்ற பயமும், நம்பிக்கைக் குறைவுமே, கழகத் தோழர்களை, வெளிநாடுகள் போகவிடாமல் தடுத்து வைத்திடச் செய்கிறது.

ஆனால், தம்பி! இலண்டனிலோ, பெர்லினிலோ, டோக்கியோவிலோ, பாரிசிலோ, வாμங்டனிலோ இதுபற்றி இப்போது ஒன்றுமே தெரியாது என்றும் கூறிவிட முடியாது.

நமது பூம்புகார் பற்றியும், கொற்கை குறித்தும், உறையூரில் நமது அரசு இருந்த ஏற்றம்பற்றியும், நமது மன்னர், காழகம், கடாரம், வங்கம், கலிங்கம் சென்று வெற்றி கண்டது குறித்தும், நமது தமிழகப் பட்டி தொட்டிகளிலெல்லாம், எடுத்துக்கூறும் கட்டத்திலே நாம் மும்முரமாக ஈடுபடவேண்டி இருக்கிறது.

தமிழகமெங்கணும், தமிழ் இன உணர்வு வீரமணம் எழுப்பினால், பிற நாட்டார் நம்மை அறிந்துகொள்ளச் செய்வதிலே கஷ்டம் அதிகம் இருக்காது.

எந்த நாடும், ஒரு நாட்டின் ஆட்சி மன்றத்திலே எவர் இடம் பெறுகின்றனர். அவர்தம் திட்டமென்ன, கொள்கை என்ன, மக்கள் ஆதரிப்பது எந்தக் காரணம் கொண்டு என்பதனை இன்று அறிய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

எனவேதான், இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம், சுரண்டல் யந்திரம், இன உணர்வு அழிக்கும் பலிபீடம் என்ற கொள்கையைக் காட்டி, திராவிடம் அமைக்கவேண்டும் என்ற திட்டத்துக்காகப் பணியாற்றும், நமது கழகம், பொதுத் தேர்தலில், மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெறவேண்டும் என்று விரும்புகிறோம்.

அது கிடைத்திடுமேல், தட்டாமலே, அறமன்றக் கதவுகள், திறக்கப்படும்; கேளாக் காதினருக்கும், நமது விடுதலைப் போர்ப் பணி கேட்கும், வெற்றித் தென்றல் வீசிடும்.

தம்பி! இன்று விழாநாள். தென்றல் காண்கிறாய் இல்லத்தில்! இது, உன் மனைமாட்சிக்கு எடுத்துக்காட்டு. ஆனால் நாட்டிலே வீசி, நலிவுகளைப் போக்கிடும், வெற்றித் தென்றல் விடுதலை எனும் சந்தனமணம் கமழ்ந்து வீசிட வேண்டும் அன்றோ?

அதற்கான அரும்பணி அடுக்கடுக்காய் உள்ளது, அறிவாய். அறிந்ததை உரைத்திடின், ஆரணங்கும் தடுத்திடப்போவதில்லை.

பொருள்தேடப் புறப்படுகிறார் என்றால், இருப்பார்க்கு வந்து உரை என்று இயம்பிடுவாள், சங்க காலத்துப் பெருமாட்டி! அந்த ஆரணங்கே கூட, களம் செல்கிறான் என்றாலோ, வேல் எடுத்துக் கரம் கொடுத்து, புன்னகை விருந்திட்டுப் போய்வருவீர், என் அரசே! வெற்றித் திருவுடனே, நீர் வருவீர், நானறிவேன்! நாடு உமை அழைக்கிறது. நாட்டுக்கே நாம் உள்ளோம். மாடு மனை இருப்பதும், மலர்த்தோட்டம் இருப்பதும் ஆங்கு நாம் ஆடி மகிழ்வதுவும் நாடு நமது என்ற நன்னிலை இருப்பதனால் தான், அந்த நிலைக்கு ஒரு துளியும் குந்தகம் விளையுமென்றால், ஆவி தரிக்காது; மானமொன்றே நமக்கு வழி வழி வந்த செல்வம், அது காக்கப் புறப்படுவீர்! ஆற்றல் உண்டு நாட்டைக் காக்க! அந்தக் கடமையினை ஆற்ற நீர் செல்கையிலே, பிரிவு தாங்கும் மனம் உண்டு, தமிழ் மகள் நான்! என்றுரைத்துக் களம் அனுப்பி வைப்பர்.

இன்றும், அந்தப் பண்பு பட்டுப்போய்விடவில்லை. எத்தனையோ தாய்மார்கள் நாட்டுக்கு இடிவந்துற்ற காலையிலே, ஆரணங்கு பலரும், தம் நெஞ்சில் நிறைந்தவரை, கொஞ்சு மொழி பேசிடும் தம் கொழுநரை, கோல்கொண்டோர் அது சாய்க்கும் வேலையிலே ஈடுபட்டு, தமிழ் வீரத்தைப் பழித்தபோது, அறப் போருக்கு அனுப்பி வைத்தார் — அறிவோம் நாம். அது நம் கழக வரலாறு.

“நாகநாடு’ கேட்டிடும் தலைவனை வேட்டையாடிப் பிடிக்கப்பார்த்தனர்; இன்றோ அவன் கேட்டிடும் “தனிநாடு’ போன்ற ஒரு ஏற்பாடு தந்து, சமரசம் கேட்கிறார்; நாகர் இணங்க மறுக்கின்றனர்.

“பஞ்சாபி சுபா’ கேட்கும் பழம்பெரும் வீரராம் தாராசிங் பாடிடும் பரணி கேட்டுப் பல்லாயிரவர் சிறை சென்று, இன்று விடுதலை பெற்று வந்தனர் வெளியே, அறப்போர் தொடுத்திட — புதிய முறையினில்.

“ரகுவம்ச’ காலமுதல் எமது வங்கம் எவருக்கும் அடி பணிந்து கிடந்ததில்லை, இன்றும் எவர் எம்மை அடிமை கொள்ளச் சூழ்ச்சிகள் செய்திடினும், முறியடிப்போம் என்று முழக்கமெழுப்புகின்றனர் வங்க மக்கள்.

அவரெலாம் அடவி தன்னைப் புகலிடம் என்று பெற்று உழன்ற காலத்திலேயே, அணிநகர் பலவும் கண்டு, அறநூற்கள் பலவும் பெற்று, அரசு அமைத்து, தமிழர் வீர முரசு கொட்டி வாழ்ந்தார்.

ஆப்பிரிக்கக் கண்டத்துள்ளார், அடவியில் உள்ள பொல்லா மிருகத்துக்கொப்பார் என்று, அவர்களைப் பிடித்துச் சென்று அடிமைகளாக விற்றார், ஆணவ வெறியர் முன்பு. இன்று ஆப்பிரிக்க பூபாகமெங்கும் விடுதலை முரசு!

எவரையும் அடிமைகொள்ள எவருக்கும் உரிமை இல்லை; அவரவர் தாயகத்தில் தனி அரசமைத்து வாழ்வதே, அவனிக்கு அடுக்கடுக்காய், அழகுறு அணி அளிக்கும். இதனை இனிக் காணாவிட்டால், இருண்டிடும் எதிர்காலமென்று, அறிவுளார் அனைவருமே அறைகின்றார் நாளும்.

இத்தகு நாட்கள் தன்னில் இருந்திடும் நமக்குத் தம்பி! மெத்தவும் பொறுப்பு உண்டு. விடுதலைக்கு நல்வாய்ப்பு உண்டு; வேண்டுவதெல்லாம் உறுதி; அதுபோல் உறுபகை அழிக்கவல்ல கருவியும் வேறு உண்டோ?

அந்த உறுதிபூண்ட வீரனாம் உனக்கு ஓர்நாள், திருநாளாய் உள்ளது; உறுதி வளர்த்திடும் வகையான உற்சாகம் பெற்றிட.

ஆகையினால், அருமைத் தம்பி! ஆகட்டும், ஆகட்டும் இன்றுனக்கு அரிய விழா; அதிலே கிடைக்கும் இன்பம், பெற்று மகிழ்ந்திடுக! பேசிட ஆயிரம் உண்டு! பூசிடச் சந்தனம் உண்டு! வாசமலரெடுத்துச் சூட்டிடவும், வாய்ப்புண்டு!! இத்தனையும் உன் செல்வம், இடம் கொடுத்தால் மட்டுந்தான்!

இன்பம் பொங்கி, நின் இல்லம் எழில் பூத்து விளங்கட்டும். அந்த இன்பத்தூடே, திருநாடு தெரியட்டும் என்ற என் நல்வாழ்த்தே, நான் இன்று உனக்களிப்பேன்; வேறென்ன வேண்டும் உனக்கு?

மழை
நெஞ்சில் நெருப்பு
கன்னி விதவையானாள்
நீதிபதி, வக்கீலானார்
செந்தாமரையாள்
பூச்சு வேலை

என்பன

*** இக்குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன; அவை நானளிக்கும், இஞ்சி, மஞ்சள் இன்ன பிற என்று கொள்ளேன்!

பொன் எனினோ, என் மின்னிடையாள், மேனிக்கென்ன!

மணி எனினோ, மகவின் கண் ஒளியே, காண்பாய்! உன்னிடம் உள்ள செல்வம் ஏ! அப்பா! மிக அருமை!!

நான் அளிக்க ஒன்று உண்டு; என் நல்லெண்ணம்; வாழ்த்துக்கள்; இல்லம், இன்பப் பூங்காவாகத் திகழ்க! உனக்கென்று அளிக்கும்போது, அதனைப் பெற்று, மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து மகிழ்வாய் என்று, சொல்லவா வேண்டும்? நீ, தமிழன்; என் உடன்பிறப்பு! வாழ்க! வாழ்க!!

அண்ணன்,

14–1–1961

மூலக்கட்டுரை

http://www.annavinpadaippugal.info/kadithangal/illam_inba_poonga_2.htm

--

--

SG

Engineer | Rationalist | ARRian | SGian | யாதும் ஊரே யாவரும் கேளிர் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Author/Translator - http://amzn.to/3ERsXGg | Hypocrite